சரக்கடித்தவர்களிடம் சிக்கிக் கொண்டவனின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 6,259 
 

பெண்கள் வரிசையாக போதை தலைக்கேறி சாலையில் விழுந்து கிடப்பதை பார்த்ததுண்டா? ப்பூ இது ஒரு மேட்டரா என்பவர்கள் ஆண் விபச்சாரன்களை(இலக்கணப்படி இது சரியான வார்த்தைதானே?) விலை பேசி அழைத்துச் செல்லும் பெண்களை பார்த்ததுண்டா? இதுவும் ப்பூ மேட்டர் என்பவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டியதில்லை. இது ஆச்சரியமாகத் தெரிபவர்கள் ஒரு நாள் பஸ்ஸோ, டிரெயினோ ஏறி ஹைதராபாத் வந்து இறங்கி எனக்குச் சொல்லிவிடுங்கள். நான் இல்லையென்றாலும் ஒன்றும் பெரிய விஷயமில்லை. செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து மெகதிப்பட்டணம் வந்துவிடுங்கள். 49எம் பஸ் பிடித்தால் கடைசி நிறுத்தம் அதுதான்.

மெகதிப்பட்டணத்திலிருந்து நான்கு ரூபாய் கொடுத்தால் ஷேர் ஆட்டோக்காரன் பத்து பதினைந்து பேரில் உங்களையும் ஒருவராக வைத்து அமுக்கித் திணித்து தர்காவில் கொண்டு வந்து இறக்கிவிடுவான். தர்க்கா என்பது அந்த இடத்தின் பெயர். ஒரு பழைய காலத்து தர்க்கா அது. அவ்வப்போது சினிமா படப்பிடிப்பைத் தவிர்த்து பெரிதாக அந்த இடத்தில் ஒன்றுமில்லை.

கடந்த சனிக்கிழமை அலுவலகத்திற்குச் சென்று திரும்பி வரும் போது ‘மப்பு’ ஏற்றிக் கொண்ட பெண்களைப் பார்த்ததும் ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டேன். இறங்கிய உடன் ஒரு சந்து இருக்கிறது. ‘ப’ வடிவம். இந்த ‘ப’வை நீங்கள் மிகப் பெரிதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். ‘ப’வின் இரண்டு பக்கக் கோடும் சாலைகள். ‘ப’வின் அடிப்பக்கக் கோடுதான் சாராயக் கடை. கடையா அது எவன் சொன்னான்? அது கடல். வெள்ளை வெளேரென்று அண்டாவிலும் பாட்டிலிலும் ஆண்களும் பெண்களுமாய் காசு வாங்கிக் கொண்டு ஊற்றி ஊற்றி கொடுக்க, ஆண்களும் பெண்களுமாய் வாங்கிக் கொண்டு அமர்ந்து கொள்கிறார்கள்.

எண்ணெயில் பொரியும் கொழுப்பு, முட்டையை உடைத்து அதன் மீது குடல் குண்டாமணி எல்லாம் போட்டு ஒரு ஐட்டம், மூக்கில் ஏறும் வாடையில் மண்டையோட்டில் ஒரு ஓட்டை விழுமளவுக்கான மீன் வறுவல், சில்லி சிக்கன்(அ)காக்கா, சில்லி பீப்…அட போங்கய்யா…எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. இந்த ‘சைட் டிஷ்’ கடைகளும் ‘ப’வின் அடிக்கோட்டு சாலையில்தான்.

ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே ‘ஸ்தீலு’ என்று எழுதப்பட்ட இரண்டு வரிசைகளில் பெண்கள் மட்டுமே சரக்கடிக்க முடியும். இங்கு ஒரு குட்டி ‘லாங்குவேஜ் டியுஷனை’ முடித்துக் கொள்ளலாம். தெலுங்கில் ‘லு’வில் முடிந்தால் பன்மை. அது தெலுங்கு ஆனாலும் சரி, ஆங்கிலம் ஆனாலும் சரி. டிக்கெட் என்றால் ஒருமை, டிக்கெட்லு என்றால் பன்மை. ஸ்திரீ என்றால் பெண். ஸ்திரீலு என்றால் பெண்கள். சில சொற்கள் இப்படி ‘லு’ சேர்ந்து தமிழின் மோசமான கெட்டவார்த்தையாக இருக்கின்றன. அதெல்லாம் இங்கு சொல்ல முடியாது.

நான் சென்றிருந்த போது சண்டை எதுவும் இருக்கவில்லை. போதையேறிய பெண்களை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தேன். கடும் உழைப்பாளிகளாக இருக்கும் பெண்கள் என்பது அவர்களின் உடலமைப்பிலேயே தெரிந்தது. ஆண் பெண் என்ற வேறுபாடு எதுவும் பெரிதாக இல்லை. சில ஆண்கள் அருகிலிருக்கும் பெண்களின் மார்பையோ அல்லது தொடையை தடவிக் கொண்டிருந்தார்கள். பற்களில் கரையேறிக் கிடந்த அந்தப் பெண்கள் அதை ரசித்த மாதிரியும் தெரியவில்லை. தடுத்த மாதிரியும் தெரியவில்லை. இங்கு எந்தத் தடைகளும் யாருக்குமே இருக்கவில்லை. யார் விரும்புவதும் கிடைப்பதாக இருந்தது. போதை, உடல் எதுவாக இருப்பினும். எனக்கு கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது.

ஒரு ஆண் நூற்றைம்பது ரூபாய் கேட்டுக் கொண்டிருந்தான் இரண்டு பெண்களிடம். இரண்டு பேரை சமாளிப்பது கஷ்டம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். கொஞ்சம் தள்ளி ஒரு பெண்ணிடம் இரண்டு ஆண்கள். இரண்டு பேரும் என் வயதையொத்தவர்களாக இருப்பார்கள். அவளுக்கு ஐந்து வயது கூடுதலாக இருக்கும். எப்படியிருப்பினும் முப்பதிரண்டை தாண்டாது. அதிக நேரம் பேரம் நடக்கவில்லை. ஏதோ முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

அவள் முன்னதாக நடக்க இரண்டு ஆண்களும் அவளைத் தொடர்ந்தார்கள். ஒருவன் அவளின் பின்புறத்தை தட்டி தட்டி நடந்தான். முந்தின நாள் பெய்த மழையின் ஈரம் சாலைகளில் இருந்தது. இருள் திட்டுக்களாக விரவியிருந்தது. மிக இலாவகமாக நடந்து கொண்டிருந்தார்கள். அனேகமாக பழக்கப்பட்ட பாதையாக இருக்கும். எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. இருளும், அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்ற பயமும் எனக்குள் ஒருவிதமான பதட்டத்தை உண்டாக்கியிருந்தது.

அரைக் கிலோ மீட்டருக்கும் மேலாக நடந்தவர்கள் சட்டென்று ஒரு ஒற்றையடிப்பாதையில் நடக்கத் துவங்கினார்கள். அது சுடுகாடு. சில சமாதிகள் சிதிலமடைந்து கிடந்தன. இந்த இடத்தில் எப்படி பயமில்லாமல் அவர்கள் செயல்பட முடியும் என்று தோன்றியது. அவர்களுக்குத் தேவை மறைவிடமாக மட்டுமே இருந்தது. கொஞ்சம் தயங்கித் தயங்கித்தான் அவர்களை நோக்கி நகர்ந்தேன்.

இரண்டு ஆண்களும் தங்கள் ஆடையைக் கழட்டிவிட்டு அவளை அவசரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவள் மெதுவாக இயங்கிக் கொண்டிருந்தாள் தன் புடவையை உயர்த்தும் போது நான் அவள் கண்களில் பட்டுவிட்டேன். என்னவோ அவள் அவர்களிடம் மெதுவாக சொன்னாள். அடுத்த கணம் மிக உக்கிரமாக என்னைத் துரத்த ஆரம்பித்தார்கள். எதற்காக அவர்கள் என்னைத் துரத்த வேண்டும்? நான் தவறு செய்ததாக நிரூபிக்கலாம். பணம் பறிப்பதற்காக இருக்கலாம் அல்லது அவர்களின் நிர்வாணத்தை பார்த்துவிட்டதற்காக இருக்கலாம். இந்த ஆராய்ச்சி இப்பொழுது தேவையா?

என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களிடம் சிக்கினால் போதையில் என்னைக் கொன்றுவிடக் கூட முடியும். ஊரை விட்டு வெகு ஒதுக்குப் புறமாக இருக்கும் இந்த சுடுகாட்டில் என்ன உதவி எனக்கு கிடைத்துவிட முடியும்? கண்ணாடியை ஒரு கையிலும், சட்டையில் இருந்து பணம், செல்போன் விழுந்துவிடக் கூடாது என்று அவற்றை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு ஓடத் துவங்கினேன். ஈரத்தில் கால் பதிந்து ஒரு செருப்பு கழண்டு விட்டது. ஓடும் போது முட்களின் கீறலும், நெருஞ்சி முட்கள் பாதத்தில் பதிவதுமாக பெரும் வாதையை உண்டாக்கின. ஆனாலும் எனக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களின் சப்தம் தெளிவான போது அவர்கள் என்னை நெருங்கிவிட்டதை உணர முடிந்தது. எப்படி வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளட்டும் ஆனால் உயிரோடு விட்டுவிட்டால் போதும்.

இப்பொழுது கருவேல முள் ஒன்று வலது காலைக் கிழித்துவிட்டது. வெறியெடுத்து ஓடத் துவங்கினேன். வெகு தூரம் ஓடியிருக்கக் கூடும். கொஞ்ச நேரத்தில் சப்தம் குறைந்திருந்தது. திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது. பின்புறமாக ஒருவருமில்லை. கால் கடுகடுத்தது. வியர்வை கசக்கயிருந்தது. செல்போன், பர்ஸ் என்னிடமே இருந்தது. நேற்றுதான் மெகதிப்பட்டணம் பஸ்ஸ்டாப்பில் ஒரு பெல்ட் வாங்கியிருந்தேன். நாற்பது ரூபாய். லாரி டயரைக் கிழித்து பாலிஷ் போட்டு விற்றான். இதை அப்பொழுதே கழட்டியிருந்தால் அவர்களை அடித்திருக்கலாம் என்ற குருட்டு தைரியம் வந்ததிருக்கிறது.

இப்பொழுது மூன்று பேரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? பெல்ட்டைக் கழட்டிக் கொண்டு அடிக்கச் செல்லட்டுமா? கால் வலிக்கிறது. நீங்கள் சொல்லுங்கள்? வீட்டிற்கு போகட்டுமா? அவர்களோடு சண்டைக்கு போகட்டுமா?

– ஏப்ரல் 27, 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *