சந்யாஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 16,813 
 

அவர் ஒரு துறவியாக இருந்தார். இலக்கின்றித் திரிபவராக, அங்கிங்கெனாதபடி பரவிக்கிடக்கும் இறைமையை இரு கைகளாலும் அள்ளிப் பருகுபவராக. பெயரின்றி, இடமின்றி, அதனால் முகவரியின்றி. எங்கும் அதிக நாட்கள் இருந்ததில்லை. கண் மூடி அமர்ந்து மலைகளில், அருவிகளின் அருகில், அடர்ந்த பசுந்தோட்டத்தில் தியானிப்பதும் அவராகக் கேட்காமல் யாரேனும் நன்றி உணர்வுடன் தந்தால் உண்பதுமாக அவரது தேடல் தொடர்ந்தது.

கைகளை நீட்டி உணவுக்காக உடல் குனியும்போது, முழுமை யாகத் தன்முனைப்பு விடுபடும் அதிசயம் நடக்கும். ‘தான்’ எனும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்போது, பிரபஞ்சம் நம்மைத் தன்னில் முழுமையாகக் கிரகித்துக்கொள்ளும். ‘பிக்கு’ என்பதற்கும் ‘பிச்சை’ என்பதற்கும் பெறுகிற மனப்பான்மையில்தான் வேறுபாடு. ஒரு நாள்கூட அவர் பட்டினியோடு இருந்தது இல்லை. ‘எல்லோருக்கும் தேவையானவற்றைத் தருவதற்குத்தான் இயற்கை தயாராக இருக்கிறதே… அப்புறம் எதற்காக இவர்கள் அடித்துக்கொள்கிறார்கள்?’ என நினைத்துக்கொள்வார்.

ஓரிடத்தில் தங்கினால் ‘யாருமற்ற’ நிலையிலிருந்து வழுவ நேரிடும் என்பதன் அபாயங்கள் அவருக்குப் புரிந்தன. பிறகு, காலில் விழுவதற்கு முற்படுவார்கள். பாதாரவிந்தங்கள் என்பார்கள். தீர்த்தம் கொடுங்கள், திருநீறு தாருங்கள் என்பார்கள். மலரை வரவழையுங்கள் என்பது வரை கோரிக்கையாக முன்வைக்கப்படும். தங்கள் கஷ்டங்களைக் கொட்ட ஆரம்பிப்பார்கள். அருள்வாக்கு வருமா என்று காத்திருப்பார்கள். ஒவ்வொருவருமே தங்கள் எதிர்காலம் குறித்த தீர்வுக்காக வந்து சேருவார்கள். அவருக்கு இவற்றில் எல்லாம் விருப்பம் இல்லை.

சில நேரங்களில் அவரைத் தாண்டிச் செல்பவர்கள், அவர் காதுபடவே பைத்தியம் என்பார்கள்; அவர் அவர்களைக் கடிந்தது இல்லை. சிலர் அவர் விழிகளில் உள்ள தீட்சண்யத்தைப் பார்த்துவிட்டு, ஞானி என்பார்கள். அவர் அதற்காக மகிழ்ந்ததும் இல்லை.

அவரிடம் நியமங்கள் எதுவும் இல்லை. அடுத்த நொடியே அழுக்காவது உடம்பு. மனம் தூசி தட்டிக்கொண்டே இருக்கத் துலங்குவது. யார் கொடுத்தாலும் உண்பார். காய், பழம் என உயிர் வதையற்ற எதைக் கொடுத்தாலும் உண்பார். எல்லாத் திருக்கோயில்களின் அருகிலும் தென்படுவார். வெளியே மட்டும் அமர்வார்.

அப்படி அமர்ந்திருக்கும் ஒரு காலை வேளையில், அந்தப் பெண்மணிக்கு அவர் தட்டுப்பட்டார். அவள் தினமும் அந்தக் கோயிலுக்குத் தவறாமல் சென்றுவரும் பக்தை. எல்லாத் திருஉருவங்களின் முன்பும் ஒரே பட்டியலைத் தினம் தினம் வைக்கும் நச்சரிப்பு மிகுந்த ஆன்மிகவாதி. அவை தொடர்ந்து அவற்றைக் கேட்டும் அங்கிருந்து ஓடிவிடாமல் ஒரே இடத்தில் இருப்பது பெரிய உலக அதிசயம்தான். பக்தி என்பது சுயநலமாகவும், பிரார்த்தனை என்பது பேராசையாகவும் மாறிவிட்ட அவலங்கள்.

அவளுக்கு அவருடைய முகத்தில் இருந்த தேஜஸ் பிடித்திருந்தது. அவரிடம் ஒரு சக்தி இருப்பதை உணர்ந்தாள். அவள் கைகளில் பழத்தட்டு இருந்தது. அர்ச்சனை செய்துவிட்டுக் கொண்டுவந்த பழங்கள். அவளுக்கு அவரிடம் அதைக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றியது. எடுத்துக் கொடுத்தாள். பெற்றவர் ஏதோ அவை மரத்திலிருந்து தம் கைகளில் விழுந்தது போல அவற்றைப் பாவித்து, உடனடியாகத் தோலுரித்து உண்ண ஆரம்பித்தார். கண்களை மூடி சிறிது யோசித்தவர், வயிற்றைத் தடவினார். பிறகு அவளைப் பார்த்துச் சிரித்தார். அவளுக்குள் திடீரென மின்சாரம் ஒன்று ஊடுருவியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

அன்று முழுவதும் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காதுக்குள் திவ்யமான இசையும், மூக்கில் இனிய சுகந்தமும், வாயில் தேனூறிய பலாவும், விழியில் அழகிய மலரும், மேனி முழுவதும் மயிலிறகால் தடவிய சுகமும் ஏற்பட்டால், எப்படி மனம் ஆனந்தத்தால் திளைக்குமோ, அப்படியரு உணர்வு ஏற்பட்டது. அவர் தன் கஷ்டத்தையெல்லாம் தீர்த்துவிடுவார் என்று அவளுக்குப்பட்டது.

அடுத்த நாள் அவரிடம் விரிவாகப் பேச வேண்டும் என நினைத்தாள். விடியற்காலையே எழுந்து தயாரானாள். மணக்க மணக்க வரிசையாக ஸ்லோகங்கள் சொல்லி, கைகளில், கழுத்தில் சந்தனம் பூசி, பூக் கூடையுடன் கிளம்பினாள். இன்று அவரிடம் ஆசி வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். பாவம், அவர் அப்படிப்பட்ட சந்நியாசி அல்லர் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அழுக்கானால் அதிகம் வெளியே தெரியாது என்பதற்காகவும், பழுத்ததை உணர்வதற்காகவும் மட்டுமே காவி அணிந்திருப்பவர் அவர் என்பது யாருக்கு எளிதில் புரியும்?

அவள் ஏமாந்து போனாள். அவர் அமர்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. அவள் அன்று எந்த விக்ரகம் முன்பும் முறையாகத் தொழவில்லை. எங்கேயாவது அமர்ந்திருப்பார் என்று பிராகாரங்களில் தேடினாள். ஒவ்வொரு தூணுக்குப் பின்பும் துழாவினாள். அந்தப் பிரமாண்டமான கோயிலில், அப்படி ஒருவர் இருந்தால்கூடத் தேடிக் கண்டுபிடிப்பது அரிது. அதனால்தான், கோயில்களில் காணாமல் போவது எளிது. ‘அவர் வடிவத்தில் கடவுள்தான் காட்சியளித்தாரோ’ என்றுகூட எண்ணிக்கொண்டாள். அழுதாள். மனமெல்லாம் துக்கமே வடிவாக ஆனாள். அவள் தன்னைத் தேடுவாள் என்பதற்காகவே, அவர் அகப்படாமல் போய்விட்டாரோ என்னவோ!

அவள் அன்றாட வழிபாடுகளில், சடங்குகளில் அவரை மறந்துபோனாள். அவரைச் சந்தித்த சம்பவம்கூட கனவு போல் அகன்றுவிட்டது. தன் கஷ்டங்களுக்கு இன்னும் தீவிரமாகப் பிரார்த்திக்க ஆரம்பித்தாள். அப்படியரு அதிகாலையில், பிரார்த்தனைக்காகவே பிரார்த்திக்கச் சென்றுகொண்டு இருந்த அவளுக்கு, வழியில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் அந்த உருவம் தட்டுப்பட்டு, அவளுடைய ஞாபகப் புதையலைக் கிளறியது. சட்டென நின்றவள், அவரை அடையாளம் கண்டு கொண் டாள்.

ஆம்… அவர்தான். அவரேதான்! அன்று அழுது அழுது தேடிக் கிடைக்காதவர், இங்கு அமர்ந்திருக்கிறார். அவள் விழிகள் விரிந்தன. அவரை நோக்கி ஓடினாள். மெதுவாகச் சிரித்தார். அவர் கையில் இன்று ஒரு புஷ்பம் இருந்தது. அதை அவளிடம் தந்தார். அவள் கண்களில் ஒற்றிக்கொண்டாள். ‘இதை எதற்குக் கண்களில் ஒற்றிக்கொள்கிறாள்? இதுதான் அந்த மலை உச்சியில் நிறையப் பூத்திருக்கிறதே!’ என்று நினைத்துக்கொண்டார்.

”சுவாமி! உங்களிடம் நான் பேச வேண்டும்!” பொலபொலவென அழுதாள்.

”எனக்கு ஒன்றும் பேசத் தெரியாதம்மா! நான் ஒரு பரதேசி.”

”இல்லை சுவாமி! நீங்கள் அனுமதி அளிக்காதவரை, இந்த இடத்தை விட்டு அகல மாட்டேன்!”

அவர் சிரிப்பு சாந்தமாகக் காற்றில் கரைந்தது.

”அன்று உங்களைப் பார்க்கணும்னு ஓடி வந்தேன். உங்களைக் காணாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?”

”நீ கோயிலுக்குப் போயிட்டு வாம்மா. நான் இங்கேயே இருப்பேன். ஏன்னா, இன்னிக்குப் பூரா எனக்கு இங்கேதான் ஜாகை.”

”நம்பலாமா ஸ்வாமிஜி!”

”நம்பாதவங்களோடு பேசி என்னா ஆகப்போகுதும்மா!”

அவள் அங்கிருந்து சென்றாலும், அவளுடைய முழுக் கவனமும் அவர் மீதே இருந்தது. ‘கடவுள் மனிதர்கள் மூலமாகத்தான் உதவி பண்ண முடியும்’ என்பதில் அவள் திடமாக இருந்தாள். ‘கடவுளே! நான் திரும்பற வரைக்கும் அவர் அதே இடத்தில் இருக்கணும்’ என்று ஒவ்வொரு மாடத்திலும் வேண்டிக்கொண்டாள்.

அவர் அங்கேயேதான் அமர்ந்திருந்தார். அவளுக்குப் பரவசம். ”என்னம்மா! நான் எங்கேயும் போயிடக் கூடாதுன்னுதான் இன்னிக்குப் பிரார்த்தனையா?”

”ஆமாம் ஸ்வாமி!”

”ஒரு பிரார்த்தனையை வீண் பண்ணிட்டியேம்மா!”

”ஸ்வாமி! நீங்க எங்க வீட்டுக்கு வரணும்.”

”ஓ… வர்றேனே! நிரந்தரமாத் தங்கணுமா? தங்கிட்டாப்போச்சு!” அவர் அப்படிச் சொன்னவுடன், பயந்துவிட்டாள். ‘என்னடா இது பெரிய வம்பாப்போச்சு! இவர் உண்மையான ஸ்வாமிஜியா, ஆண்டிப் பண்டாரமா?’ என்று உள்ளுக்குள் உறுத்தல் ஏற்பட்டது.

”பயப்படாதம்மா! நான் ஒரு நாளுக்கு மேல எங்கேயும் தங்குறதில்லே!” அப்பாடா! அவளுக்குப் பெரிய நிம்மதி ஏற்பட்டது.

”வாங்க ஸ்வாமி, போகலாம்!”

அவளும் அவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். பத்து நிமிடத்தில் அவளுடைய வீடு வந்தது. நடுத்தரக் குடும்பத்து வீடு. முற்றத்தில் அமர்ந்தார். அவள் உள்ளே ஓடினாள். ஒரு குவளையில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். இரு கைகளாலும் அதை ஏந்தினார். கண்களை மூடித் தியானித்துவிட்டுப் பருகினார். அவர் அந்த நீரைப் பருகுவதே அமிர்தத்தைப் பருகுவது போன்ற சிரத்தையுடன், மென்மையாக, கவனத்துடன் செய்வதைப் போல இருந்தது.

அவராக வாய் திறந்து அவள் பற்றியோ, கணவன் பற்றியோ, குடும்ப உறுப்பினர்கள் பற்றியோ விசாரிக்கவில்லை.

”ஸ்வாமி! நீங்கள் எங்கள் வீட்டில் சாப்பிட வேண்டும்!”

”நன்றாகச் சாப்பிடலாமே!”

அதற்குப் பிறகு, ஒரு மணி நேரம் அவர் தனிமையில் அமர்ந்திருந்தார்… தன்னில் தானே கரைந்த தனிமையில்.

”ஸ்வாமி! மன்னிக்கணும். வாருங்கள், சாப்பிடலாம்!”

பெரிய தலைவாழை இலை. முழுக்க விதவிதமான உணவு வகைகள். அவர் அமர்ந்ததும், ஆசையாகப் பரிமாறினாள். அவர் அதைச் சாப்பிட்டார். ஒவ்வொரு உணவையும் மெதுவாக ரசித்து அவர் உண்டவிதம் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. சாப்பிடும்போது அவர் கவனம் முழுவதும் இலை மீதே இருந்தது. அவர் ஒவ்வொரு பருக்கையையும் பிரசாதம் என எண்ணிச் சாப்பிடுவது போல் இருந்தது.

அவர் முற்றத்துக்குச் சென்றுவிட்டார். அவள் இலையை அகற்றி, இடத்தைத் தூய்மை செய்துவிட்டு அவர் முன் வந்தாள்.

”போய் நீ சாப்பிட்டுட்டு வாம்மா! என்னைவிட உனக்குத்தான் அதிகமாகப் பசிக்கணும். ஏன்னா, நீதானே இவ்வளவு பதார்த்தங்களைப் பண்ணியிருக்கே!”

”…………….”

”நான் காத்திருக்கேன்! எனக்கு என்னம்மா வேலை… சும்மா இருக்கிறதே சுகம்!”

அவருக்குப் பரிமாறியதிலேயே அவளுக்கு வயிறு நிறைந்துவிட்டது என்று சொன்னால், அவர் ஒப்புக்கொள்ள மாட்டார். எனவே, உள்ளே சென்று பேருக்கு எதையோ சாப்பிட்டுவிட்டு, உடனே வந்தாள்.

”என்னம்மா, அதுக்குள்ள வந்துட்டே? சாப்பிடும்போது நல்லாச் சாப்பிடலேன்னா, பிரார்த்தனை பண்ணும்போது ஒழுங்கா பிரார்த்தனை பண்ண முடியாதும்மா!”

”ஸ்வாமி! ரொம்ப நாளா எனக்கு ஒரு குறை! உங்ககிட்ட சொல்லணும்.”

”ஏம்மா, இத்தனை வருஷமா நாள் தவறாம கோயிலுக்குப் போறே! கடவுளாலேயே தீர்க்க முடியாத குறையை நான் தீர்க்க முடியுமா? என்கிட்டே அப்படி சக்தியெல்லாம் கிடையாதும்மா!”

அப்போது, பதினைந்து வயதுள்ள சிறுவன், வீட்டுக்குள் வந்தான். ஸ்வாமிஜியைக் கண்டுகொள்ளாமல், நேரே உள்ளே போனான். அவள் எழுந்து பின்னாலேயே போனாள். உள்ளே ஏதோ சத்தம் கேட்டது.

சிறுவன் வெளியே வந்தான். ஸ்வாமிஜியைப் பார்த்து வணக்கம் சொன்னான். காலில் விழ முற்பட்டவனை அவர் தடுத்தார்.

”ஸ்வாமிஜி! என் பிரச்னையே இவன்தான். ஒரே மகன்னு ஆசையைக் கொட்டி வளர்த்தேன். ஆனா, இவனுக்கு என் மேல கொஞ்சம்கூடப் பாசம் இல்லை. படிக்க மாட்டேங்கிறான். சொன்ன சொல்லைக் கேட்க மாட்டேங்கிறான். எதுக்கும் உபயோகமா இருப்பான்னு தோணலை. லாயக்கில்லாதவன். எதுக்கும் பிரயோஜனமில்லாதவன்!” அவள் தன் மகனைப் பற்றிச் சொல்லச் சொல்ல, அந்தப் பையனின் முகம் பாம்பு படமெடுப்பதைப் போல் மாறுவதைப் பார்த்தார் ஸ்வாமி.

அவனை வெறுப்பேற்றச் சொன்னாளா, பயமுறுத்தச் சொன்னாளா… தெரியவில்லை. ”பேசாம இவனைக் கூட்டிக்கிட்டுப் போய் சந்நியாசம் வாங்கிக் குடுத்துடுங்க.”

”ஏம்மா, எதுக்கும் பிரயோஜனம் இல்லாதவங்கதான் சந்நியாசி ஆகணுமாம்மா?” சிரித்துக்கொண்டே அந்தச் சிறுவனை அழைத்தவர், ”தம்பி! நானும் உன்னை மாதிரி ஒரு காலத்துல இருந்தவன்தான்” என்று வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தார்.

”சரி, அப்ப நான் வரட்டுமா?” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

‘இவரைப் போய் அழைத்து வந்தோமே. சுத்தப் பரதேசியா இருப்பார் போல இருக்கே’ என்று அவள் நினைத்துக்கொண்டாள்.

அவர் போகும் வழியில் நினைத்துச் சிரித்துக்கொண்டார். ‘பாவம் அந்தப் பெண்! சந்நியாசம் என்பது தப்பிக்கிறதுன்னு நெனைச்சிருக்கா. அவளுக்கு அது விடுதலைன்னு தெரியலை. விஞ்ஞானம் புரியாதவன் சந்நியாசியில்லே. விஞ்ஞானம் எங்கே முடியும்னு அவனுக்குத் தெரியும். கணக்கு வராததாலே, காவி உடுத்தறவன் இல்லே. கணக்கு எல்லா நேரத்திலேயும் ஒரே விடையைத் தராதுன்னு அவனுக்குத் தெரியும். அவனுக்குக் கலைகள் பற்றிய புரிதல் அதீதம். அவனால் சிலந்தி வலையிலும் இருத்தலின் இனிமையை உணர முடியும். முடியாததால் விலகுவது அல்ல துறவு. கைக்கு அருகில் வந்ததை வேண்டாம் என்று விலக்கும் மனநிலை அது. உலகத்திலிருந்து ஓடி ஒதுங்குதல் அல்ல சந்நியாசம். அது, உலகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் இன்னும் ஆழமாக, ஒவ்வொரு துளியாக உள்ளே வாங்கி, நாமே உலகமாக மாறிப்போவது. இப்படி எதுவும் வராதவர்கள் மீது துறவு திணிக்கப்படுவதால்தான், காவியுடை கேவலப்பட்டுப் போனது. அது அவலங்களை மறைக்கும் கேடயமாகவும் கவசமாகவும் மாறிப்போனது.

பாவம்! என்னென்னவோ எதிர்பார்த்திருப்பாள். மடங்கள் முட்டாள்களின் கூடாரமாகவும், வணங்காதவர்களுடைய இருப்பிடமாகவும் மாறினால், துறவு தூஷிக்கப்படுமே அல்லாமல் தொழப்படுமா? வாழ்க்கையின் மீது உள்ள வெறுப்பாலும் விரக்தியாலும் வந்தால், அது எப்படி சந்நியாசமாகும்? அது ஆனந்தத்தால் அல்லவா முகிழ்க்க வேண்டும். விஞ்ஞானிகளைக் காட்டிலும் திறந்த உள்ளத்துடனும், கலைஞர்களைக் காட்டிலும் கலாரசனையுடனும், இலக்கியவாதிகளைக் காட்டிலும் மொழியின் மேன்மையுடனும், லோகாயதவாதிகளைக் காட்டிலும் பொருள்முதல் வாதத்தைப் புரிந்துகொண்டவர்கள்தாம் முழுமையான துறவிகளாக இருக்க முடியும். மகனை பயமுறுத்தக்கூட அவள் அப்படிக் கூறியிருக்கக் கூடாது. இப்போது ஒரு வேளை உணவை வீணடித்துவிட்டோம் என நினைத்திருப்பாள். அவள் குடும்பம் உண்டாலும், அது வீண்தான். அந்தத் தானியங்களின் மீது யாரும் அவள் பெயரை எழுதவில்லையே!”

அவர் நடந்துகொண்டு இருந்தார். அந்த ஊரைத் தாண்டி அவருடைய கால்கள் போய்க்கொண்டு இருந்தன. எந்த மரம் அவருக்கு அடுத்த அமர்வுக்கு நிழல் தரப்போகிறதோ!

– 02nd ஜனவரி 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *