சட்லெஜ் நதி அமைதியாக ஓடியது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 11,136 
 

”பைத்தியக்காரக் கிழட்டு முண்டமே, இரண்டு நாட்களாக உன் தொல்லை தாங்க முடியவில்லை!” என்று கடுங் கோபத்துடன் சீறி விழுந்தான் இன்ஸ்பெக்டர். தனது மேஜை யின் மீது இருந்த நீளமான பிரம்பை எடுத்து, அந்த வயதான பெண்ணை அடிப்பதுபோலக் கை ஓங்கினான். அடுத்த நொடியே, தனது செயலால் வெட்கித் தலை கவிழ்ந்து, அந்தப் பிரம்பைத் தூக்கித் தூர எறிந்தான். காவல் நிலையத்தில் இருந்த பிற போலீஸார் தங்க ளின் பணிகளை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

இன்ஸ்பெக்டர் தனது எதிரில் நின்ற மூதாட்டியின் கண்களைக் காணச் சக்தியற்று, முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். இந்த இயலாமையை மறைக்க அவன் கோபத்தின் உச்சிக்குச் சென்றான். மூதாட்டி தனது நடுங்கும் விரல்களில் ஒரு புகைப்படத் தைப் பிடித்து இருந்தாள். அதனை இன்ஸ் பெக்டரிடம் காட்டி, ”தனது மகன் அமர்…” எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளின் கக்கத்தில் ஒரு துணிப் பை மூட்டை இருந்தது. அவள் கையில் இருந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது எல்லாம், ஒரு விதமான அதிர்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் உள்ளானான். அந்தப் புகைப்படத்தைப் பார்க்க அவன் அஞ்சினான்.

அந்தச் சமயம் ஒரு போலீஸ்காரன், மூதாட்டியின் கையைப் பிடித்து காவல் நிலையத்தின் வெளியே கொண்டுசெல்ல இழுத்தான். மூதாட்டியின் துணிப் பை மூட்டை அங்கே விழுந்தது. அவள் காவல் நிலையத்துக்கு வெளியே இழுத்துவந்து விடப்பட்டாள். இன்ஸ்பெக்டர் அவளின் துணிப் பை மூட்டையைத் தூக்கி வெளியே வீசினான்.

அந்த மூதாட்டியைக் காவல் நிலையத்துக்குள் விட்டதற்காக வாசலில் மணல் மூட்டைகளுக்கு மையத்தில் இயந்திரத் துப்பாக்கியைப் பிடித்து உட்கார்ந்து இருந்த போலீஸ்காரனைத் திட்டிவிட்டுச் சென்றான். போலீஸ்காரன், கிழவியை மேலும் சாலைக்கு அப்பால் விரட்டச் சத்தமிட்டான்.

மூதாட்டி அவளின் துணிப் பை மூட்டை யைத் தூக்கிக்கொண்டு போலீஸ்காரனின் சத்தத்தை அலட்சியப்படுத்தியபடி, ”அமர் என் மகன்…” என்று திரும்பத் திரும்பச் சொல்லியபடியே, மீண்டும் அந்தப் புகைப்படத்தைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரனிடம் நீட்டி, ”இவனை நீயாவது பார்த்தாயா?” எனக் கேட்டாள். அவன் ஒரு கணம் அமைதி அடைந்து, பின்னர் ‘இல்லை’ எனத் தலை யாட்டினான். மூதாட்டியை வெளியே போக சைகை செய்தான். அவள் காவல் நிலையத்துக்கு எதிரே சாலைக்கு அப்பால் ஒரு மரத்தின் கீழே உட்கார்ந்துகொண்டாள்.

பஞ்சாப்பின் காவல் நிலையங்களில் அன்றைய காலகட்டத்தில் இயல்பாக அதன் படிக்கட்டுக்களை மிதிக்க மக்கள் தயங்கினர். காவல் துறையினருக்கும்… ராணுவத்தில் இருந்து ஓடிவிட்டவர்கள், போலீஸ் வேலையில் இருந்து ஓடிப் போனவர்கள் எனப் பலரையும் தேட வேண்டிய சிரமம் இருந்தது. பலர் காணாமல் போயிருந்தனர். இரவுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. குண்டுவெடிப்புகளும் கொலைகளுமாகப் பிரிவினைபற்றிய அரசியல் ஆழ்ந்திருந்தது. பொற்கோவிலின் நீல நட்சத்திரத் தாக்குதலை ராணுவம் நிகழ்த்தி, 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் இயல்பான வாழ்க்கை அங்கு திரும்ப வில்லை என்பதை எவ்வளவு தூரம் அந்த மூதாட்டி உணர்ந்து இருப்பாள்? போலீஸ்காரன் தனது நறுக்கப்பட்ட தாடியைத் தடவிக்கொண்டு மீண்டும் துப்பாக்கியைச் சுடக் குறி பார்ப்பதுபோல, மணல் மூட்டை மீது வைத்துப் பிடித்து நின்றான். அவன் கண்களில் வழியில் போகும் எல்லோரையும் சந்தேகத்துடன் பார்க்கும் அச்ச உணர்வு இருந்தது.

மூதாட்டி மரத்தின் நிழலில் அமர்ந்து காவல் நிலையத்தைப் பார்த்த படி தொடர்ந்து அவளுக்குள் பேசிக்கொண்டே இருந்தாள். அவளுக்கு 70 வயது இருக்கும். தடித்து இருந்தாள். அவளின் கன்னங்களில் தசைகள் தொங்கி இருந்தன. முகத்தில் அவ்வளவாகச் சுருக்கம் இல்லை. பைஜாமா உடுத்தி இருந்தாள்.

துப்பட்டாவைத் தலையில் முக்காடிட்டு இருந்தாள். அவள் மன நல மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து சில நாட்கள்தான் ஆகி இருந்தன. அவளின் அழுக்கடைந்த துணிப் பையில் மன நல மருத்துவமனையின் மருந்துக் குறிப்புகளும் மாத்திரைகளும் இருக் கின்றன. அவள் மகன் அமருடன் எப்போதும் உரையாடி வருகிறாள்.

ஆனாலும், அவன் காணாமல் போய்விட்டான் என்பது சில கணங்களில் அவள் உணர்கிறாள். தொலைத்த இடத்தில்தானே பொருளைத் தேட வேண்டும். அல்லது, எடுத்தவனிடம்தானே அதனைக் கேட்க வேண்டும் என்பதை அவள் உணர்ந்து இருந்தாள்.

நெடுஞ்சாலை வழி நடந்து அவள் இங்கே வந்து சேர்ந்தாள். வழியில் தென்பட்ட எல்லா காவல் நிலையங்களிலும் அவள் அமரைப்பற்றி விசாரித்தபடியே வந்து இருந்தாள். நடக்கும் போது அவளுக்கு மூச்சு இரைத்தது. ஆனாலும், அவள் திரும்பவும் காவல் நிலையம் முன்பு வந்து, ”மருமகள் கைக் குழந்தையுடன் காத்தி ருக்கிறாள். குழந்தைக்குக் காய்ச்சல் கண்டு கிடக்கிறது. அமரைச் சீக்கிரம் குழந்தையைப் போய்ப் பார்க்கச் சொல்ல வேண்டும்” என்றாள். துப்பாக்கியைப் பிடித்திருப்பவன் அவளை நோக்கி வரவே, அவள் திரும்பவும் போய் பழையபடி மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டாள்.

நேற்றில் இருந்து பல முறை அவளைக் காவல் நிலையத்தில் இருந்து விரட்டியதைப் பாதசாரிகள் பலர் பார்த்திருந்தனர். ஆனால், யாரும் அவளை நெருங்கிப் பேசத் துணிய வில்லை. நேற்று இதே துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரன் அவளின் கையைப் பிடித்து சிறிது தூரம் நடத்திச் சென்று, காவல் நிலையத்துக்கு அப்பால் விட்டு வந்தான். ஆனாலும், இன்று திரும்பவும் அவள் காவல் நிலையம் அருகில் வந்திருந்தாள். பைத்தியம் என போலீஸ்காரன் இரக்கம்கொண்டு இருந்தான். ஆனாலும், அதனை வெளிப்படுத்த அவன் வெட்கப்பட்டான். அந்த மூதாட்டி யிடம் எதையோ சொல்ல அவனிடம் செய்தி இருந்தது. ஆனால், அவன் தனக்குள் தயங்கிக் கொண்டு இருந்தான். அவன் மூதாட்டியைப் பார்த்தான். தூரத்தில் அவள் பேசிக்கொண்டு, பின் கண்ணீரைத் தனது துப்பட்டாவால் துடைப்பதை அவன் கண்டான். ஒரு சோர்வு அவனை ஆட்கொண்டது.

இருளத் துவங்கியதும் சாலையில் போக்கு வரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருந்தது. சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன. சாலையில் செல்லும் வாகனங்கள் பெரும்பாலானவை பஞ்சாப் காவல் துறைக்கும் அல்லது துணை ராணுவப் படைகளுக்கும் சொந்தமானவை. அவசியம் கருதி, செல்லும் வாகனங்கள் விசாரிப்புகள், சோதனைகளுக்குப் பின்பே செல்ல முடிந்தது.

சந்தேகப்படுபவர்கள் தனியே ரகசிய விசார ணைக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர். ரோந்து செல்லும் எல்லாக் காவல் துறை வாகனங்களிலும் துணை ராணுவப் படையினைச் சார்ந்த ஒருவன் கட்டாயம் இடம்பெற்று இருந்தான்.

குளிர்க் காற்று அடித்துக்கொண்டு இருந்த சமயம், மூதாட்டி அதே மரத்தடியில் அமர்ந்து இருந்தாள். இப்போது அவள் சால்வையைப் போர்த்திக்கொண்டு இருந்தாள். அவள் பேசுவதை மட்டும் நிறுத்தவில்லை என்பது தெரு விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் ஜீப் வெளியே வந்தது. அது அவள் உட்கார்ந்து இருந்த மரத்தின் அருகில் வந்து நின்றது. ஜீப்பில், மூதாட்டியை மாலையில் திட்டிய இன்ஸ் பெக்டர் முன் இருக்கையில் உட்கார்ந்து இருந்தான். பின் இருக்கையில் துப்பாக்கியைப் பிடித்தபடி அந்த காவல் நிலையத்தில் காவல் காக்கும் போலீஸ்காரன் இருந்தான். அவனின் அருகில் துப்பாக்கி ஏந்திய ஒரு துணை ராணுவப் படை வீரன். அவன் வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதை அவனின் முக ஜாடை காட்டியது.

போலீஸ்காரன் ஜீப்பில் இருந்து இறங்கி மூதாட்டியிடம் சென்றான்.

”அம்மா, உங்க மகனைத் தேடித் தர்றதா இன்ஸ்பெக்டர் அய்யா சொல்லி இருக்காரு, வாங்க தேடப் போகலாம்” என்றான்.

”அமரை நான் பார்க்க முடியுமா?”

”ஆமாம். அமரை நீங்கள் பார்க்கலாம்” என்று அவளுக்கு நம்பிக்கை கொடுத்தான்.

அந்தச் சமயம் இன்ஸ்பெக்டர் சிடுசிடுப்புடன் மூதாட்டியைப் பார்த்தான். இளம் போலீஸ் காரன், எல்லாம் சுமுகமாக நடக்கிறது என்பது போல இன்ஸ்பெக்டரிடம் தலை அசைத் தான்.

கிழவி ஆர்வமாக வந்து ஜீப்பின் பின் இருக்கையில் ஏற முயன்றாள். இளைஞன் அவளைக் கைப் பிடித்து ஜீப்பில் ஏற்றினான். அவள் மறக்காமல் தனது துணிப் பையையும் எடுத்துத் தனது மடியில் வைத்துக்கொண் டாள்.

ஜீப் வேகம் பிடித்து வெறிச்சோடிய சாலைகளில் ஓடியது. கிழவி தன் பக்கத்தில் உள்ள அந்த இளைஞனிடம் கேட்டாள், ”உன் பெயர் என்ன மகனே?”

”குர்சித் சிங்.”

”உன்னைப்போன்ற முக ஜாடைதான் அமருக்கும். ஆனால், சற்று ஒல்லி அவன்.” இளைஞன் தலையசைத்துக்கொண்டான்.

”மகனே, எவ்வளவு தூரம் போக வேண்டும். நான் சீக்கிரம் அமரைப் பார்க்க வேண்டும்.”

”இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் அம்மா.”

”நான் அவனைப் பார்க்கவே முடியாது என்று சிலர் நினைத்தார்கள். என் கணவரும் அப்படித்தான் என்னிடம் கூறினார். அமிர் தசரஸ் தர்பாரா சாஜிப் போன அவர், திரும்ப வரவே இல்லை. அவரும் அவனைத் தேடிக் கொண்டு இருக்கிறாரோ என்னவோ? உனக்குத் தெரியுமா… பேரக் குழந்தைக்கு நல்ல காய்ச்சல். அமர் வந்து தூக்கினால் எல்லாம் சரியாகிவிடும். அவன் ஏன் வீட்டை மறந்து, ஊர் வேலையில் ஈடுபடுகிறானோ? எப்போதும் மற்றவர்கள் துயரங்களையே அவன் பெரிதாக நினைப்பான். பார்… நான் அவனுக்காகத் துயரப்படுவதை அவன் நினைக்கவே இல்லை.”

இன்ஸ்பெக்டர் தனது முகத்தைச் சிடுசிடுப்புடன் வைத்திருந்தான். அவனின் வயர்லெஸ் கருவி ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தது.

கோதுமை வயல்கள் இருபுறமும் விரிந்து இருந்த நெடுஞ்சாலையில் ஜீப் சென்றபோது, சாலையின் ஓரத்தில் விளக்கு வெளிச்சம் தென்பட்டது.

அது ஒரு தாபா, உணவு விடுதி. ஓலை வேயப்பட்ட அந்த உணவகத்தின் முன் 10-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதற்கு முன் தரையில் நெருப்பு எரிந்துகொண்டு இருந்தது. வாகன ஓட்டிகள் குளிர் காய்ந்துகொண்டு இருந்தனர். இரவில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்த தால், விடியும் வரை இவ்வாறாக வாகனங்கள் உணவகங்களில் நிறுத்தப்படுவது வாடிக்கை தான்.

காவல் துறையினரின் ஜீப் உணவகத்துக்கு வருவதைப் பார்த்து, குளிர் காய்ந்துகொண்டு இருந்த வாகன ஓட்டிகள், ஓடிச் சென்று லாரி களுக்குப் பின் பக்கத்தில் மறைந்து கொண்டார் கள். உணவக உரிமையாளர் உடனடியாக உணவகத்தை மூடிவிடுவதாகவும், உணவகத்தை இவ்வளவு நேரம் திறந்துவைத்ததற்காக மன்னித்துக்கொள்ளுமாறும் கெஞ்சினான்.

”ஐந்து டீ போட்டுக்கொண்டா!” என்று உத்தரவிட்டான் இன்ஸ்பெக்டர். பணிவுடன் தாபா உரிமையாளர் டீ போட ஓடினார்.

ஜீப்பில் இருந்து எல்லோரும் இறங்கினார்கள். மூதாட்டி இறங்கி, தீயின் அருகில் போடப்பட்டு இருந்த கட்டிலில் போய் அமர்ந்தாள். பின் இளைஞனைப் பார்த்துக் கேட்டாள்.

”மகனே, எங்கே அமர்?”

அவன் அவளின் அருகில் வந்து அமர்ந்தான். அவனின் துப்பாக்கியைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டுக் கூறினான்.

”டீ சாப்பிட்டுவிட்டுப் போகலாம். இன்னும் போகணும்மா.”

”எங்கள் கிராமத்து கோதுமை வயல்களை அப்படியே விட்டுவிட்டு வந்திருக்கிறேன். இன்னும் அறுவடை செய்யவில்லை. அமருடன் போய்தான் அறுவடை செய்ய வேண்டும்.”

டீ வந்தது. ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு மற்றொன்றை மூதாட்டியிடம் அவன் நீட்டினான். அவள் அதனை வாங்கிப் பருகிக்கொண்டு இருக்கும்போது, அவன் விலகிப் போய் இன்ஸ்பெக்டரிடம் பேசத் துவங்கினான்.

”சார்… இவங்க கிராமத்துல போய் நாம விட்டுவிடலாம்” என்றான் குர்சித் சிங்.

”முட்டாளே, வம்பை விலை கொடுத்து வாங்க முயற்சிக்காதே. இவள் மகனைப்பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் கிழவியை நாம் அழைத்து வந்தது தெரிந்தால், வேறு வினையே வேண்டாம். இவள் மகன் யார் தெரியுமா? காணாமல் போனவர்களைப்பற்றிய விவரங்களைச் சேகரித் தவன். நமது உயர் அதிகாரிகளைக் குற்றவாளி யாக நிறுத்த முயன்றவன். மனித உரிமைக் காரன். மேலிட விவகாரங்களில் நாம் தலையை விட்டுக்கொண்டு விழிக்கக் கூடாது. கொஞ்ச தூரம் போய், ஏதாவது ஓர் இடத்தில் இறக்கி விட்டுவிடலாம்.”

குர்சித் சிங் எதையோ சொல்ல முயன்றான். இன்ஸ்பெக்டர் வண்டியில் ஏற உத்தரவிட்டான். துணை ராணுவப் படையைச் சார்ந்தவனுக்கு இவர்களின் உரையாடல் புரியவில்லை. மொழி தெரியாதவனை சைகை மூலம் வண்டியில் ஏறச் சொன்னார்கள். அந்தச் சமயம் மூதாட்டி யும் ஜீப்பில் ஏறிக்கொண்டாள். ஜீப் சில மைல்கள் தூரம் சென்றது.

யூகலிப்டஸ் மரங்கள் சாலையின் இரு புறமும் உயர்ந்து வளர்ந்து இருந்தன. ஒரு சிறிய குருத்வாரா பூட்டிய நிலையில் இருந்தது. அது மங்கத்கல்லர் என்ற கிராமம். ஆங்காங்கே சில வீடுகள் இருந்தன. ஜீப்பை நிறுத்த இன்ஸ் பெக்டர் உத்தரவிட்டான். பின் கிழவியைப் பார்த்து, ”உன் மகன் இங்கே வருவான். நாங்க போய் அனுப்பிவைக்கிறோம். இங்கேயே இரு” என்றான். அவள் குர்சித் சிங்கைப் பார்த்தாள். அவன் மென்மையாக அவளிடம், ”ஆமாம் அம்மா. இறங்குங்க. அமர் வருவார். குளிர் அடிக்குது. குருத்வாரா வாசலில் போய்ப் படுத்துக்கொள்ளுங்கள். விடிவதற்குள் உங்கள் மகன் வந்துவிடுவான்” என்றான். அவள் தடுமாறியபடி ஜீப்பில் இருந்து கீழே இறங்கினாள். இறங்கும் சமயம் அவளின் துணிப் பை முழுவதுமாகத் தலைகீழாகக் கவிழ்ந்து ஜீப்புக் குள் கொட்டியது. சில மாத்திரைகள், துணிகள் சிதறின. குர்சித் சிங் அதனை எடுத் துத் திரும்பவும் துணிப் பைக்குள் போட்டு அவளிடம் நீட்டினான். அவள் அவசரமாக அதனை வாங்கி, தனது நெஞ்சோடு வைத்துக் கொண்டாள்.

”என் மகனுக்காக நான் சில காசுகளை முடிந்துவைத்துள்ளேன். என் மகனைப் பார்த்ததும், அவனிடம் அதனைக் கொடுப் பேன்!”

”சரி அம்மா. குளிரில் நிற்காதீர்கள்” குர்சித் சிங் கை அசைத்து அவளிடம் இருந்து விடை பெற்றான். ஜீப் வேகம் எடுத்து நெடுஞ்சாலையில் ஓட ஆரம்பித்தது. குர்சித் சிங்கின் மனதுக்குள் ஏதோ பாரம் அழுத்திக் கொண்டே இருந்தது. ஏதோ சிந்தனையில் அவன் தனது இயந்திரத் துப்பாக்கியால் ஜீப்பினுள் கீழே தட்டிக்கொண்டே இருந் தான். துப்பாக்கியில் ஏதோ தட்டியது. அவன் குனிந்து எடுத்தான். குருத்வாராக்களில் வழிபாடு சமயம் தலையில் கட்ட வழங்கும் சரிகை வேலை செய்யப்பட்ட கைக்குட்டை முடிச்சு அது. அவன் அதனை அவிழ்த்துப் பார்த்தான். கொஞ்சம் காசுகளும் கசங்கிய சில ரூபாய் நோட்டுக்களும் இருந்தன. அவன் அதனையே உற்றுப் பார்த்தபடியே இருந்தான். மற்றவர்கள் அச்சத்துடன் துப்பாக்கிகளின் குதிரைகளில் கை வைத்தபடி சாலைகளை நோட்டமிட்டுக்கொண்டே வந்தனர்.

”அவன் முகம் கன்றிப்போய் இருந்தது. அவன் உடைகள் கிழிந்து அழுக்கடைந்து இருந்தன. அடிபட்டுப் படுத்துக்கிடந்த அவனுக்கு நான் தண்ணீர் கொடுத்தேன். ‘சகோதரனே… உனக்கு நன்றி. உன் பெயர் என்ன?’ என்று கேட்டான் அவன். நான் பயந்து பெயர் சொல்ல மறுத்தேன். நன்றியோடு என்னைப் பார்த்தவனின் கண்களில் இருந்து சில நீர்த் துளிகள் வெளிப்பட்டன. அந்த இரவு முழுவதும் அவனைக் காவல் காக்கும் பணி எனக்குத் தரப் பட்டது!”

குர்சித் சிங் எதையோ உளறினான்.

”என்ன… என்ன சொல்ல வந்தே?” இன்ஸ் பெக்டர் குர்சித் சிங்கைப் பார்த்துக் கேட்டான்.

”ஒண்ணுமில்ல சார்.”

”தம்பி, சென்டிமென்ட்டுக்கு இடம் கொடுக் காதே… புரிந்ததா?”

வாகனம் நீண்ட சட்லெஜ் ஆற்றுப் பாலத் தைக் கடந்துகொண்டு இருந்தது. குளிர்க் காற்று வேகமாக அடித்தது. குர்சித் சிங் இன்ஸ்பெக் டரிடம் ஜீப்பை நிறுத்துமாறு கூறினான். ஜீப் நின்றது. ஜீப்பை ஓட்டி வந்த போலீஸ்காரன் முகத்தைக் கழுவி, தூக்கத்தை விரட்ட முயன் றான். குர்சித் சிங் நடந்து சென்று, பாலத்தின் கைப் பிடிச் சுவரைப் பிடித்துக் குனிந்து கீழே பார்த்தான்.

சட்லெஜ் நதியில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டது. நிலவு, நதியில் பிரதிபலித்தது. அவன் கையில் மூதாட்டியின் காசுகள் முடிந்த சரிகைக் கைக்குட்டை இருந்தது. அதனை உற்றுப் பார்த்தான். அதை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான். அவன் கண்களில் நீர் கோடிட்டது. தலையை ஒரு நிமிடம் மௌன மாகக் கவிழ்ந்துகொண்டான். பின் ஓடிக் கொண்டு இருக்கும் நதியில், அதனை வீசி எறிந்தான். அது, நதியில் விழுந்து இருளில் மூழ்கிப்போனது. ஒரு நொடி நதியில் ஓசை மறைந்து அமைதியானதாக உணர்ந்தான். அவனுக்குள் அச்சம் கவ்வியது. அவன் வேகமாக ஜீப்பில் வந்து ஏறிக்கொண்டான்.

”என்ன செய்தாய்?” என்றான் இன்ஸ்பெக்டர் அவனிடம். ”அவன் காசை அவனிடம் சேர்த்து விட்டேன்.”

ஜீப் வேகம் எடுத்தது. ஒரு நீண்ட மௌனம் அங்கு நிலவியது. குர்சித் சிங்கின் கண்கள் கலங்கி இருந்ததை, மொழி புரியாவிட்டாலும்கூட அவன் அருகில் அமர்ந்திருந்த வட கிழக்கு மாநிலத்தைச் சார்ந்த துணை ராணுவப் படை வீரன், அவனின் தோள்களில் தனது கையை வைத்து ஆறுதல் தருவதுபோல் கண் சிமிட்டினான்.

அதற்கு மூன்று நாட்களுக்குப் பின் பஞ்சாப் செய்தித்தாள்களுக்கு வந்திருந்த மூன்று வெவ் வேறு சிறிய செய்திகள் குர்சித் சிங் உள்ளிட்ட யாருடைய கவனத்தையும் ஈர்க்காமலேயே போயிருந்தது.

முதல் செய்தி: ‘ராஜஸ்தான் அரசின் தலைமைச் செயலாளர், பஞ்சாப் அரசுச் செயல ருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில் பஞ்சாப்பில் இருந்து ராஜஸ்தான் வரும் பாசனக் கால்வாய்களில் அடிக்கடி மதகுகள் அடைத்துக் கொள்கின்றன. அதனால், ராஜஸ்தான் விவசாயி கள் பெரும் சிரமப்படுகின்றனர்.

பஞ்சாப்பில் இருந்து வரும் வாய்க்காலில் ஏராளமான பிணங்கள் மிதந்து வந்து பாசன மதகுகளில் சிக்கிக்கொள்கின்றன. இப் பிணங் களில் பெரும்பாலும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. அரசுச் செயலர் ராஜஸ்தான் விவசாயிகள் சிரமம் இன்றி விவசாயம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது செய்தி: ‘நகராட்சி எல்லைப் பகுதிகளில் வெறி நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. சாலையில் செல்லும் பொதுமக்கள் நாய்க் கடிக்கு உள்ளாகின்றனர். எனவே, நகர சபை நிர்வாகம் தெரு நாய்களைக் கொல்ல முடிவு செய்துள்ளது.

சுடுகாடுகளில் இறந்த ஓர் உடலை எரிக்க நகராட்சி இலவசமாகத் தரும் விறகுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்படு வதால், அரைகுறையாக எரிக்கப்பட்ட உடலின் எஞ்சிய பாகங்களைத் தெரு நாய்கள் சுடு காடுகளில் இருந்து இழுத்து கடித்துத் திரிகின்றன. எனவே, எளிதில் அவற்றுக்கு வெறி பிடித்து விடுகிறது என நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.’

மூன்றாவது செய்தி: ‘மங்கத்கல்லர் கிராமத் தில் குருத்வாரா எதிரில் உட்கார்ந்த நிலையில் ஒரு 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தாள். தடித்த பெண். நோயாலோ அல்லது வயோதிகத்தினாலோ குளிரில் இருந்து தன்னைப் பாதுகாத்துகொள்ளாத நிலையில் அவர் இறந்திருக்கக்கூடும். மங்கத்கல்லர் கிராமவாசிகள் காவல் துறைக்குத் தகவல் கொடுத்த பின்பு, இறந்த பெண்ணை நல்லடக்கம் செய்து முடித்தனர்!’

– ஜூன் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *