கொட்டாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 8,682 
 

”யாரு மச்சி போட்ருப்பா?”

”எவனுக்குடா இவ்ளோ தில்லு ஊர்ல?”

”எவனோ இந்த எடத்த உஷார் பண்றான் மச்சான்.”

”கிரவுண்ட வுட்ட மாதிரி இத வுட்ரக் கூடாது.”

”யாருனு ஆளப் பாத்துகினு நைட் கொளுத்திரலாம் மச்சி”- பொது இடத்தில் இருந்த கொட்டாயைச் சுற்றி இளைஞர்களின் கோபக் குரல்கள்.

அரசாங்கத்தால்ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதா னத்தை, ‘ஏழைகளுக்கு இலவசக் கல்வி’ என்றுசொல்லி ஒருவன்ஆட்டையைப் போட்டான். விளையாட்டு மைதானம் இன்று மெட்ரிகுலேஷன் பள்ளி, லேடீஸ் ஹாஸ்டல் என இயங்கிக்கொண்டு இருக்கிறது.

ஏழு நெடுக்கு, இரண்டு குறுக்குச் சந்துகள்கொண்டது பழைய சி.ஐ.டி. காலனி.

”8.5 வருது மச்சி…”

”ஊளமூக்கி போறா மச்சி…”

”கொட காலிஸ் கிளம்பிடுச்சி மச்சி”…. என சந்துக்குச் சந்து சிந்து பாடும் இளைஞர் கூட்டம், சேச்சி டீக் கடை, ‘தலைவா’ வீட்டுத் திண்ணை, உடைந்துபோன வாட்டர் டேங்க், அம்பேத்கர் ஜிம் என ஏரியா பிரித்துக்கொண்டு தனித் தனியேஇயங்கினாலும், பிரச்னையில் ஒன்று கூடும். கோபக்கார முரட்டுஇளை ஞர்களைப்போல் தெரிந்தாலும், நான்காவது தெருவில் குடியிருக்கும் போலீஸ் டிரைவர், சாப்பாட்டுக்குத் தன் வீட்டுக்கு வந்தால்கூட, ஜீப்பைப் பார்த்ததும் மாயமாக மறையும் வீரர்கள் என்பதனை மறைப்பதற்கு இல்லை.

கொட்டாய் மத்தியில் குமார் தன் கட்சித் தலைவியின் டிஜிட்டல் பேனரைப் பதித்தான். குமார் ஆளும்கட்சி உறுப்பினர். சின்னச் சின்ன பிரச்னை களில் தலையிட்டு, அமவுன்ட் வாங்கிக்கொண்டு, வெளியில் பெரிய மேட்டர், பெரிய அமவுன்ட் என்று பீலா விடும் ஊசிப் பட்டாசு. போலீஸ் ஸ்டேஷனில் சில கான்ஸ்டபிள்களைத் தெரிந்துவைத்துக்கொண்டு, ‘டி.சி. நமக்கு ரொம்ப க்ளோஸ்’னு உதார்விடுவான். யாராவது எதிர்த்துப் பேசினால், கான்ஸ்டபிளிடம் கண்ணைக் காட்டினால் போதும்… அடுத்து 1,500 ரூபாய் இல்லாமல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வர முடியாது.

”இவன் பீசலு மச்சி… அவனைப் பாத்த ஒடனே ஏன் கொட்டா போட்டேனு கேக்காம?”

”நல்ல மூஞ்சி, நீ கேட்க வேண்டியதுதான?”

”கேக்கலாம்னுதான் பார்த்தேன். அவன்கிட்ட இருக்கிற ஒரு கெட்ட கொணம்… கும்பலாப் போய்க் கேட்டாக்கூட, மொத யாரு கேக்குறமோ, அவனப் புட்சுக் குத்திருவான்டா… அதான் பயமாக்கீது!”

நாட்கள் நகர நகர… கொட்டாய் உறுதியாய் உட்கார்ந்துகொண்டது. 10 அடி கொட்டாய்க்கு நான்கு சேர்கள், ஒரு டேபிள், பலகையிலான கதவு போடப்பட்டு, அதனைப் பாதுகாக்க 70 வயது முதியவர் ஒருவரும் வேலைக்கு வைக்கப்பட்டு இருந்தார்.

கொட்டாய் சில மாதங்களுக்கும் மேலாக நிலைகொண்டுவிட்டதில், பசங்களுக்கு வருத்தமோ வருத்தம். சேச்சி கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்த இளைஞர்களைத் தூரத்திலேயே பார்த்துவிட்ட ‘தலைவா’ மெள்ள ஒதுங்க ஆரம்பித்தார். தலைவாவைப்பற்றிச் சொல்லியாக வேண்டும். மூன்று அடி உயரம். 35 வயது. உயரத்துக்கு அதிகமான தொப்பை. எப்போதும் வெள்ளைச் சட்டை. கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு பேசும் ஸ்டைல். அவரது அப்பா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர். அதனால் தலை வாவும் காங்கிரஸ். ‘ஆறுமுகம்’ என்ற தன் பெயரைத் தானாகவே ‘தலைவா’ என அழைத்துக்கொண்டவர். யாரும் இல்லா நேரத் தில், தெருவில் விளையாடிக்கொண்டு இருக்கும் சின்னக் குழந்தைகளிடம் போய், ”டேய்… மாமா உங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாருங்க. கைய நீட்டுங்க!” எனச் சொல்லி… குழந்தைகளின் கையில் ரூபாய்க்கு ஐந்து என விற்கும் அப்பளங்களை மாட்டிவிடுவார். 10 விரல் களில் அப்பளம் மாட்டிக்கொண்ட குழந்தைகள் சந்தோஷத்தில் சிரிக்கும். பின் ஒவ்வொரு விரல் களாக வாயில்வைத்துக் கடித்துச் சாப்பிடும். அதன் பின் தலைவா அந்தக் குழந்தைகளிடம் ”நான் தெனமும் இதே மாதிரி இன்னும் நெறைய வாங்கித் தருவேன். நீங்க நான் ரோட்ல நடந்து வரும்போதும் போகும்போதும் கும்பலா ‘தலைவா… தலைவா… தலைவா’ன்னு சத்தமாக் கத்தணும்… சரியா?”

குள்ளமாக இருப்பதினால், இவரும் நம்ம செட்டுதான்னு,குழந் தைகள் நினைத்தனவோ என்னவோ, அவரைப் பார்க்கும்போது எல்லாம் ‘பாட்ஷா’ பட ரேஞ்சுக்கு ‘தலைவா… தலைவா’ என்று கத்த ஆரம்பித்தன.

யாராவது, ”என்ன தலைவா, உங்களைப் பார்க்கவே முடியல” எனக் கேட்டால், ”மத்தியில நம்ம ஆட்சிதானே. சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்குன்னு அம்மா நேர்ல வரச் சொன்னாங்க. அதான் டெல்லிக்கும் சென்னைக்கும் பறந்துக்கிட்டிருக்கேன்”னு சொல்வார், கிண்டியைத் தாண்டி இருக்காத தலைவர்.

இவர்களைப் பார்த்ததும், ”இந்த எலெக்ஷன்ல என்கூடச் சேர்ந்து வொர்க் பண்ணுங்கடா, கன்ஃபார்மா நம்ம ஆட்சி வந்துடும். அப்புறம் கொட்டா இன்னாவுதுன்னுபாரு!” என்பார்.

”சரிண்ணா… சரிண்ணா!”

பாலா கொஞ்சம் வசதியானவன். குமாரின் வயதுதான் இவனுக்கும். முதலில் கட்சியில் வட்டத்தில் துணை பொறுப்பு கொடுத்தபோது, ‘அடையார் பாலா’ என்றிருந்தவன், பகுதிப் பிரதிநிதியாகப் பதவி பெற்ற பின், ‘மயிலை பாலா’வாக மாறி னான். பல ரவுடிகளைத் தெரியும். நம்ம ஏரியாவில் பசங்க அதிகம் என்பது ஊரறிந்த ரகசியம். ரவுடிகள் மேட்டருக்கு வெளியில் செல்ல ஆள் பற்றாக்குறை இருக்கும்போது, பாலாவுக்கு போன் வரும். அன்றைக்கு நம்ம பசங்களுக்கு சரக்கோடு காசும் வரும். நம்ம பசங்க சண்டையெல்லாம் போட மாட்டாங்க. சும்மா ஒரு ஆள் கணக்குதான்னுபாலாவுக்குத் தெரியும். பிராப்பர் ரவுடிகளுக்குத் தெரியாது. பாலா பசங்கன்னா ரொம்ப ஷார்ப்புன்னு நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. அந்த நினைப்பைப் பொய்யாக்கி, பாலாவுக்குப் பால் ஊத்தினவன் ‘கஞ்சித் தல’ முருகன்.

‘அர்ஜென்ட்டா பசங்க வேணும்’ என பாலாவுக்கு போன் வர, கேரம் விளையாடிக்கொண்டு இருந்த எலி, கிருபா, முரளி, வேலா, கஞ்சித் தலமுருகனுடன் தானும்கிளம்பினான். 15-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று சிந்தாதிரிப்பேட்டை சேட்டை, துப்பாக்கி முனையில் கடத்தியது.அதுவரை கத்தியையே ரொம்ப ரேராகப் பார்த்த பசங்க, துப்பாக்கியை நேராகப் பார்த்ததும் கதிகலங்கினார்கள். சேட்டைக் கடத்திய ஐந்து கி.மீ-க்குள் மூன்று வண்டிகள் மாத்தியாயிற்று. பசங்களுக்கு இது புது அனுபவம். ‘தப்பா வந்து மாட்டிக்கிட்டோமோ?’, ‘வழியில் வண்டிய மடக்கி போலீஸ் சுடுமோ?’, ‘சேட்ட நம்ம ஆளுங்க சுட்டுருவாங்களோ?’, ‘நம்மகிட்ட துப்பாக்கியக் கொடுத்து சுடச் சொல்லுவாங்களோ?’ என முருகன் மனத்தில் எண்ண அலைகள் வெடித்துச் சிதறின. எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், வண்டி ஈ.சி.ஆர். தொட்டுட்டா சேட்டை மிரட்டியே சொன்ன அமவுன்ட்டை வாங்கிடலாம் என வந்தவர்கள் நினைப்பைச் சிரிப்பாக் கினான் கஞ்சித் தல.

”பாலாண்ணா, நான் இங்கியே எறங்கிட்டா?”

ரவுடிகள் மத்தியில் இப்படி அசிங்கப்படுவோம் என சற்றும் எதிர்பாராத பாலா, கோபத்தின் உச்சிக்கே போய், ”…தா…. இன்னா அப்டிப் போய் புடுங்கப்போற?”

”இல்லணா… வீட்ல துணி ஊற வெச்சிட்டேன். அதைத் தொவைக்கத் தாவலை!”

உயிரைப் பணயம்வைத்து நடந்து கொண்டு இருக்கிற கடத்தலில், துணியை ஊறவைத்துவிட்டு வந்தவனைவிட, அவனைக் கூட்டிக்கொண்டு வந்த பாலாவைச் சிரித்தே சாகடித்துவிட்டார்கள் ரவுடிகள். கொடுமை என்னவென்றால், கடத்தப்பட்ட சேட்டும் சேர்ந்து சிரித்ததுதான்.

அன்றைய இரவு ஏரியாவில்…

”இந்த கஞ்சித் தல என்னை அசிங்கம் பண்ணிச்சிரா. சுண்ணாம்புக் கால்வா செல்வம் போனப் போட்டு, ‘துணி ஊறவெக்கணும், உங்க ஏரியா பசங்க இருந்தா கொஞ்சம் அனுப்பு மச்சான்’னு கலாய்க்கிறான்டா!” எனப் பசங்களிடத்தில் புலம்பிக்கொண்டு இருந்தான்.

கொட்டாய்க்கு உள்ளேயும் வெளியேயும் குமாரால், கண்ணன் மூலம் மண் கொட்டப்பட்டு அழகாகி இருந்தது.

கண்ணன், கிராமத்தில் இருந்து சி.ஐ.டி. காலனிக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன். வந்த இடத்தில் சித்தாள், பெரியாள் எனக் கிடைத்த வேலையைச் செய்து, இன்று செங்கல், மண், ஜல்லியை வேறு ஒருவரிடம் வாங்கி விற்கும் அளவுக்கு உயர்ந்துள்ளான். சைக்கிளில் போனவன் இன்று பைக்கில். சித்தாள் ஒருத்தியை லவ் பண்ணிக் கல்யாணம் செய்து, ஒரு பெண் குழந்தை பெற்ற பின்பும், பேச்சில் கிராமத்து மணமும், செயலில் பயமும் இன்னும் போகவில்லை. அந்த ஊரைப் பொறுத்தவரை ‘கண்ணன்’ என்றால் பேச ஆரம்பித்த குழந்தைகள் முதல் வாய் போன கிழவன்- கிழவிகள் வரை அனைவருக்கும் எளக்காரமானவன்.

”எணா, கொட்டாவுக்கு மண்ணுவெச்ச துட்டு குடுண்ணா” என குமாரிடம் கண்ணன் கேட்க, ”தந்துடலாம் போடா… இனிமே இதான் நம்ம எலெக்ஷன் பூத் ஆபீஸ்!” – கொட்டாயில் கட்சிக் கொடி பறக்க, அதன் கதவு மூன்று வர்ணங்களைப் பூசிக்கொண்டது. இரவு நேரத்தில் மட்டுமே இயங்கிக்கொண்டு இருந்த கொட்டாய், தேர்தல் நெருங்க நெருங்க, பகலிலும் களைகட்டியது.

தேர்தல்! கொட்டாயை மயிலை பாலு எப்படியும் காலி செய்து தந்திடுவார்னு பசங்க அல்லும் பகலும் அசராம ஒழைச்சாங்க. சொல்லிவெச்ச மாதிரியே பாலு கட்சி ஆட்சிக்கு வந்துடுச்சு. ”காலைல கொட்டா இன்னா கதி ஆவுதுன்னு பாரு மச்சி!”

”பாலு அண்ணா சொல்லிருச்சு… கொட்டாவத் தூக்கிரலாம்னு.”

ஆனால், தூக்கவில்லை!

”நேத்துதான் ஆட்சிப் பொறுப்பே ஏத்துக்கிறாங்கோ. ஒடனே போயி… இத பண்ணிக் கொடு… அத பண்ணிக் கொடுன்னு சொன்னா, அசிங்கமா நினைக்க மாட்டாங்க. தோ, மூணு மாசத்துல மேயர் எலெக்ஷன் வருது. நம்மாளுதான் கேண்டிடேட். மூணு மாசத்துக்கு அப்புறம் நம்ம மேயர்கிட்ட சொல்லி கொட்டாயத் தூக்குவோம்.”

”அவர் தோத்துட்டா..?”

”யார்றா… தா… இன்னா கொழுப்பா? தோல உரிச்சுருவேன்.”

”ஏய் கிருபா! கம்னு இர்றா!”

”நாங்க வர்றோம்ணா!”

”நான் அப்பியே சொல்லல… இவரு வேலைக்கி ஆவ மாட்டாருன்னு? யாரு கேக்கிறீங்க? இப்ப திருப்பியும் மேயர் எலெக்ஷனுக்கு வொர்க் பண்ணுங்க… கொட்டாயத் தூக்கித் தந்திட்டு மறு வேல பார்ப்பாரு” – கிருபா கோவத்தில் கொதிக்க…

”வுடு மச்சி… இனி யார்க்கும் வேல செய்யத் தேவல. கொட்டா கெடந்தா கெடக்கட்டும். தில்லு கீது போட்டான், நாமெல்லாம் பொடவயக் கட்டிக் கினு போக வேண்டியதுதான்.”

ஆறு மாதங்களுக்குப் பிறகு பஸ்ஸில் என்னைப் பார்த்தார் தலைவா… ”கொட்டா இன்னா ஆச்சி பார்த்தியா. அடிச்சுக் கடாசிட்டோம்ல!”

”நிஜமாவா… எப்டித் தலைவா?”

”நம்ம எம்.பி-கிட்ட சொல்லி மேயருக்கு பிரஷர் கொடுக்க வெச்சேன். எல்லாம் அலறி அடிச்சிக்கிட்டு நம்மத் தேடி வந்துட்டான். புல்டோசர வெச்சி அலேக்கா கொட்டாவத் தூக்கிப் போட்டுட்டு, எம்.பி-கிட்ட நன்றி சொல்லிட்டு, தோ இப்பதான் வீட்டுக்கு வர்றேன். இன்னா, நம்ம பணம் ஒரு அஞ்சாயிரம் செலவாச்சு. சோஷியல் வொர்க்குனு வந்துட்டா இதெல்லாம் சகஜம்தானே!”

”ஐயோ… என்னால நம்ப முடியல தலைவா! அந்தக் கொட்டாவ எடுக்க நம்ம ஏரியா பசங்க எவ்வளவோ கஷ்டப்பட்டாங்க. யார் யார்கிட்டயோ போய் நின்னாங்க.”

”ஏரியாவுல நாம இருக்கும்போது என்ன பிரச்னைன்னாலும், நம்மகிட்ட சொன்னா செய்யப்போறோம். இந்தப் பசங்க இன்னாத்துக்கு மத்தவங்க பின்னாடி ஓடணும். இப்ப அவனுங்களுக்குப் புரிஞ்சு இருக்கும் தலைவான்னா சும்மா இல்லன்னு.”

இரண்டு நாட்களுக்குப் பிறகு மயிலை பாலாவைக் கோயிலில் பார்த்தேன்.

”என்ன இவ்னே நல்லா கீறியா?”

”இருக்கேண்ணே!”

”ஆமா, இந்தக் கொட்டா காலி பண்ணதப்பத்தி சொன்னாங்களா, அது நாமதான் பண்ணது!”

எனக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

”நம்ம மேயர்கிட்ட நேரிடியா போய், ‘கொட்டவாத் தூக்கியே ஆவணும்… இல்லன்னா, நான் கட்சியவுட்டே போறேன்’னு சொல்ல… உடனே அவரு, என் எதிர்லயே நம்ம ஏரியா கிணிய ஏறு ஏறுன்னு ஏறிட்டாரு. அடுத்த ஆஃபன் அவர்ல கிணி எனக்குப் போனப் போட்டு, ‘சார் கொட்டாவ குளோஸ் பண்ணியாச்சி’ன்னு சொல்றான். என்ன… நம்ம பணம் ஒரு 10 ஆயிரம் செலவாகியிருக்கும். பொதுவாழ்க்கன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்தானே… நம்ம ஏரியாவுக்கு இதக்கூடச் செய்யலன்னா, எப்டி?”

தலைவாவா… பாலா அண்ணனான்னு நான் கொழம்பி… யாரோ, கொட்டா இப்ப இல்ல. அவ்ளவுதான்! என முடிவுக்கு வந்த ஒரு வாரத்துக்குப் பிறகு நண்பனைப் பார்க்க பட்டினப்பாக்கம் சென்றிருந்தேன்.

”வாடா, பக்கத்துல போய்ட்டு வந்துருவோம்!”

”இங்க எதுக்குடா வந்த?”

”ஒயின்ஷாப்புக்கு எதுக்கு வருவாங்க?”

”இப்ப ஒயின்ஷாப் வர்ற அளவுக்கு உனக்கென்ன கஷ்டம்?”

”அந்த பத்மா இல்ல மச்சி…” என நான்கு டேபிள் தள்ளி வந்த போதைக் குரல்… கொட்டாய் குமாரின் குரல்.

”ஏரியாவுல நீ போட்டிருந்த கொட்டாவத் தூக்கிட்டாங்க ளாமே தல?”

”யார்றா சொன்னா?” – குமாரின் போதைக் குரல்.

”பாலாகிட்ட இருக்குற பசங்கதான் சொன்னாங்க, பாலா மேயர்கிட்ட சொல்லி…”

”டேய் நிறுத்துடா… பாலாவும் இல்ல… ஒரு ……. இல்ல.”

”அப்ப யாரு, அந்த காங்கிரஸ் குள்ளனா?”

”தலைவான்னு அவனே பேரு வெச்சிக்கிட்டா, அவன் தலைவனா? தொப்பக் கூத்தாடி! எல்லாம் ஊருவுட்டு ஊரு பொழைக்க வந்த அந்த மண்ணு விக்குற நாதாரி நாயால வந்தது!”

”நீ யாரச் சொல்ற தல, நம்ம கொட்டாவுக்கு மண்ணு வெச்சானே கண்ணன்… அந்த நாட்டுப் புறத்தானா?”

”அவன நாட்டுப்புறத்தான்னு அசால்ட்டா சொல்லாதடா, கொட்டாவுக்கு மண்வெச்ச பைசாவக் கேட்டு, பாக்குற எட்த்துலல்லாம் டார்ச்சர் குடுத்தான். போன வாரம் டீக் கடைல நம்ம பகுதி, கட்சிக்காரங்ககூட கும்பலா நின்னிருந்தப்போ, ‘என் பைசாவத் தர முடியுமா, முடியாதான்னு’ அசிங்கப்படுத்திட்டான். வந்துது பாரு கோவம், பகுதி இருந்ததால, நைட் 10 மணிக்கு கொட்டாவுக்கு வா தர்றேன்னு சொன்னேன். வந்தான். நான் ஏற்கெனவே ஃபுல் மப்புல இருந்தேன். வந்தவொடனே, என் துட்டு எங்கேன்னு கேட்டான். எட்டி ஒரே ஒத, ஊருவுட்டு ஊரு பொழைக்க வந்த எச்சக்கல நாய்க்குத் திமிரான்னு சொல்லி, கயித்தால கட்டிப்போட்டு, உருட்டுக் கட்டையாலயே பொளந்தேன், ஐயோ… அம்மான்னு ஒரே கத்து!”

”ஏரியா பசங்க வந்து பிரச்ன பெர்சா போயிருக்குமே.”

”ஒரு பொம்பளையும் வர்ல… கொஞ்ச நேரத்துல கதவு தட்ற சத்தம்…

”இன்னாச்சி தல?”

”மறுநா காலைல போலீஸ் டேசன், என் கால கீழவெச்சு நடக்க முடியல. தலையத் தவிர ஒடம்பு ஃபுல்லா வீங்கிப்போயிருந்தது. அந்த நாய் எதிர்ல எனக்கு தெரிஞ்ச பிசிகிட்டயே சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிட்டுஇருந்துச்சு!”

”அந்த நாயா தல, இன்னா நடந்துச்சின்னு முழுசா எங்கணா சொல்றியா நீயி!”

”அன்னிக்கு அவன் கத்தின அலறலைக் கேட்டு, அந்த வழியா வீட்டுக்குப் போய்க்கிட்டிருந்த டிசி. என்ன சத்தம் வர்துன்னு கதவத் தட்டியிருக்காரு. போதைல இருந்த நான்… அவரை யார்னு தெரியாம அசிங்கமாத் திட்டியிருக்கேன். அப்ப புட்சுது எனக்குச் சனியன். இந்த நாதாரி நாயி அவர் வீடு கட்றப்ப காசே வாங்காம, லோடு லோடா மண் வெச்சிருக்கு. அப்ப கொடுக்காத காச, எனக்குக் கொடுத்துக் கழிச்சிட்டார் டிசி. ‘என்னை போதைல திட்னதுகூடப் பரவாஇல்ல. ஆனா, எங்க கண்ணனையே கட்டிப்போட்டு அடிக்கிறியான்னு?’ பொளபொளன்னு பொளந்துட்டாரு. அவனுக்கு இன்ஸ்பெக்டர் தெரியும்னா ஏதோ சொல்லிச் சமாளிக்கலாம். டிசியே தெரியும்போது நான் இன்னாப் பண்றது? டிசி, அந்த இன்ஸ்பெக்டரக் கூப்ட்டு, ‘காலைல நான் வரும்போது அந்தக் கொட்டா அங்க இருக்கக் கூடாது. இவன ஒரு வருசம் குண்டாஸ்ல தள்ளுன்னு சொல்லிட்டாரு.”

”ஐயையோ…”

”கட்சிக்காரன் கால்ல உழுறதவுட, கண்ணன் கால்ல உழுறதே மேல்னு, அந்த நாய்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி வெளில வந்தேன். டிசி அவன் கால்ல உய்ந்து மன்னிப்புக் கேட்கவெச்சாரு. அந்த நாயி, நான் உய்ர வரைக்கும் ஒண்ணியும் சொல்லாம, உய்ந்த பேரு ‘எணா எந்திரிண்ணா’னு சும்மா ஸீன் போட்டுச்சு. சும்மா சொல்லக் கூடாது அவன் சொல்றத அப்டியே செய்றாரு டிசி.

வெளியில வந்து அந்த நாய்கிட்ட, ”நான் உன் கால்ல உய்ந்தது உன்ன அட்சி துக்காக இல்ல. இங்க நடந்தத நீ யார்கிட்டயும் சொல்லிடக் கூடாது அதான்… சொன்னா இந்த குமார உயிரோடு பாக்க முடியாதுன்னு சொல்லிட்டு வந்தேன்!”

ஏரியாவில்…

குழந்தைகளிடத்தில் தலைவா…

”தலைவாதான் கொட்டவ எட்தார்னு… உங்க வூட்ல சொல்லச் சொன்னேனே… யார்லாம் சொன்னீங்கோ கை தூக்குங்கோ…”

பசங்களிடத்தில் மயிலை பாலா…

”வேற இன்னாடா செய்ணும் உங்களுக்கு… புடிங்கி கிருபா வர்லையா? தா… இப்ப மூஞ்சத் தூக்கி எங்க வெச்சிப்பான்!”

எல்.கே.ஜி. படிக்கும் வாண்டு ராகுலிடம் கண்ணன்…

”ஏன்டா, என் வண்டி பின்னாடியே சைக்கிள ஓட்டிக்கிட்டு சுத்துற… சைக்கிளை எடுத்துக்குனு முன்னாடி போடா.”

”போ மாட்டேனே. தில்லிருந்தா நீ போய்யா.”

”இன்னாடா மரியாத இல்லாமப் பேசுற… உங்க அப்பாவக் கூப்டட்டா?”

”கூப்புடு.”

”சின்ன பயன்னு பாக்குறேன் இல்ல… அட்சி செவிட்டி தூரக் கடாசிருவேன்.”

”மேல கை வெச்சுப் பாரு…”

”கொலகாரப் பயபுள்ள… என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குதே. ஆம்… உன்ன டிசிகிட்ட புட்ச்சுக் குடுத்துருவேன்.”

”நான் பயப்பட மாட்டேனே!”

– மார்ச் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *