கையூட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 9,450 
 

அன்று ஜனவரி 26, காலை ஏழரை மணி அதாவது நம் இந்திய திருநாட்டின் குடியரசு தினம். அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் குடியரசு விழாவை சிறப்பாகக் கொண்டாட கல்லூரி முதல்வரும், மாணவத் தலைவனும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து, அதற்கு இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்த்தனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.

விழா தொடங்க சிறிது நேரமே இருந்தாலும், ஆசிரியர்களும், மாணவர்களும் காத்திருந்தனர் (வகுப்புக்கு ஒழுங்காக வராதவர்கள்கூட வந்திருந்தனர்). அடுத்த சில நிமிடங்களில் புல்லட் சத்தம் காதை அடைக்க, இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்த்தன் வந்திறங்கினார்.

அழைப்பிதழில் குறிப்பிட்டப்படி சரியாக எட்டு மணிக்கு (அதிசயங்களில் இதுவும் ஒன்று) தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தாயின் மணிக்கொடி பட்டொளி வீசி அனைவருக்கும் வாழ்த்து கூறுவது போல பறந்தது.

சிறப்பு விருந்தினர் இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்த்தன் தொண்டையை சரிசெய்துக் கொண்டு பேச ஆரம்பித்தார், “உங்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த குடியரசு தின வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் பேச வேண்டுமென்பதற்காக கண்டதையும் பேசாமல், நம்முடைய வாழ்க்கைக்கு பயன்படுகிறமாதிரி பேச வேண்டும் என்பதே என் ஆசை! ஆகவே இங்கு நான் லஞ்சத்தைப் பற்றி ஒருசில வார்த்தைகள் பேசப் போகிறேன். மாணவ நண்பர்கள் கொஞ்சம் கவனமாக கேட்க வேண்டும்” என்று சொல்லி தொடர்ந்து பேசினார்.

மாணவர்கள் காந்தத்துக்கு கட்டுப்பட்ட இரும்பு துண்டுகள் போல, அமைதியாக அவருடைய பேச்சை ரசித்தனர். (இந்த காலத்தில் இப்படியும் கல்லூரி மாணவர்களா?!)

“ஒரு தனி மனிதன் தான் பிறக்க ஆரம்பிக்கும்போதே லஞ்சத்தை கொடுக்கத் தொடங்குகிறான். அவன் பிறக்க.. அன்று மருத்துவமனையில் ஆரம்பித்த லஞ்சம்… கடைசியில் அவன் இறக்க.. சுடுகாடு செல்லவும் லஞ்சம் கொடுக்கப்படுகிறது”

“ஆகவே, லஞ்சம் ஒவ்வொரு மனிதனிடமும் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது. இந்த லஞ்சத்தை களை எடுக்க.. உங்களைப் போன்ற இளைய சமுதாயம் தான் நம் நாட்டுக்குத் தேவை! (என்றதும் கரவொலி காதைப் பிளந்தது)”

“என்னை எடுத்துக் கொண்டால், சில சமயங்களில் நான் பேருந்தில் செல்ல நேரிட்டால், தவறாமல் டிக்கட் எடுப்பேன். காரணம் இந்த ஓசிதான் முற்றிப் போய் கடைசியில் லஞ்சமாகிறது, மாணவர்களே சிந்தியுங்கள்.. யாராவது இனாமாக ஏதாவது கொடுத்தால் தயவுசெய்து வாங்காதீர்கள், இனாம் என்பதும் லஞ்சம் என்ற நோயின் ஆரம்பகட்ட நிலைதான். வெள்ளித்திரையில் வாழ்ந்த “இந்தியன் தாத்தா” நிஜவாழ்க்கையிலும் வரவேண்டும் (மீண்டும் கரவொலி) அப்போதுதான் நம்நாடு செழிப்புறும்.. லஞ்சம் கொடுக்கவும் மாட்டேன்.. லஞ்சம் வாங்கவும் மாட்டேன் என்று இந்த நன்னாளில் நீங்கள் உறுதிமொழி எடுக்கவேண்டும்” என்று கூறி தன்னுரையை முடித்தார். மாணவர்கள் உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்டனர் (இதுவே திருச்சியாக இருந்திருந்தால் அவருக்கு ரசிகர் மன்றம் திறந்திருப்பார்கள்!).

மறுநாள் பத்திரிக்கைகளில் கட்டம் கட்டி செய்தி வந்தது. விஷ்ணுவர்த்தனுக்கு மேலிடத்திலிருந்து வாழ்த்துக்கள் வந்தமயமாக இருந்தது. மிகவும் பெருமையாக தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு கொலைக்காரன் பேட்டைக்கு கிளம்பினார்.

புல்லட்டை ரவுடி ஆறுமுகம் வீட்டின்முன் நிறுத்தினார். புல்லட் சத்தம் கேட்டவுடன், ஆறுமுகம் பவ்யமாக கையக் கட்டிக்கொண்டு இன்ஸ்பெக்டர் முன் நின்றான்.

“என்னடா, நெனச்சிகிட்டிருக்கே மனசுல, இந்த மாசம் ஒன்னோட மாமூல் எங்கே? கரெக்டா கொண்டுவந்து தரவேண்டாமா? ஒவ்வொரு தடவையும் நாந்தான் வரணுமா?”

“ஐயா, கோவிச்சிக்க கூடாது, தொழில் முன்னமாதிரி இல்லீங்க, ஆட்சிவேற மாறிப் போச்சுங்களா? அதாங் கொஞ்சங் கஷ்டமாயிருக்கு”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது, நாளக்கி வந்து மாமூலை கொடுக்கலன்னா, மாசக் கடைசியாயிருக்கு எப்ஐயார் புக்பண்ணி உள்ளே தள்ளிடுவேன்”

“இல்லீங்கையா, நாளக்கி கட்டாயம் நானே வந்து கொடுத்திடுறேன்..”

“ம்.. சரி, பிக்பாக்கெட் பக்கிரி இப்ப, கண்ணம்மா பேட்டையிலதான இருக்கான்”

“ஆமாங்கைய்யா.. ”

“நாளக்கி மறந்துடாதே..” என்று எச்சரித்துவிட்டு பிக்பாக்கெட் பக்கிரியிடம் மாமூலை வசூல் செய்யப் போய்க்கொண்டிருந்தார், லஞ்சத்தைப் பற்றி வாய்கிழிய பேசிய இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்த்தன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *