கேளிக்கைகளில் குருநாதர் கலந்து கொள்ளலாமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,159 
 

சீடனுக்கு வந்த சந்தேகம்

பேரரசர் புஷ்யமித்திரரது திக்விஜயம் பெரும் வெற்றியில் முடிவடைந்ததையட்டி, தலைநகர் விழாக் கோலம் கொண்டது. நகரெங்கும் மாவிலைத் தோரணங்கள்… வாழைப் பந்தல்கள்… வண்ண அலங்காரங்கள் என கோலாகலமாகக் காட்சியளித்தது. குறுநில மன்னர்கள், மாமுனிவர்கள், கலைஞர்கள் மற்றும் சாஸ்திர மேதைகள் பலரும் தலைநகரில் குழுமி இருந்தனர்.

கேளிக்கைகளில்வெற்றி விழாவுக்கு மகரிஷி பதஞ்சலியையும் அழைத்திருந்தார் புஷ்யமித்திரர். பதஞ்சலியின் தலைமையில் வெகு சிறப்பாக யாகம் நடைபெற்றது.

விழாவின் முத்தாய்ப்பாகக் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அழகிகளும் நடன மங்கையரும் பங்கு கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் மனக் கிளர்ச்சியை தூண்டுவன. புலனடக்கத் துடன் வாழும் முனிவர்களும் மகரிஷிகளும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள். எனினும் பேரரசரது வேண்டுகோளை நிராகரிக்க முடியாததால், தன் சீடர்களுடன் கலை நிகழ்ச்சிகளை காணச் சென்றார் பதஞ்சலி. நடன மங்கையரது சிருங்கார நடனங்களைக் கடைசிவரை இருந்து ரசித்தார்.

வேத சாஸ்திரங்களில் கரை கண்டவரும் தவநெறி களுக்கு உதாரணமானவருமான மகரிஷி பதஞ்சலியின் இந்தச் செயல், அவரின் பிரதான சீடனான சைத்திரனுக்கு வெறுப்பை உண்டு பண்ணியது.

விழா முடிந்து அனைவரும் ஆசிரமத்துக்குத் திரும் பினர். சைத்திரன் மட்டும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந் தான். குருவுக்குப் பணிவிடை செய்வது, உபதேசம் கேட்பது என்று எதிலும் பிடிப்பில்லாமல் போனது. அவனின் எண்ணமெல்லாம், கேளிக்கை நிகழ்ச்சியில் குருநாதர் கலந்து கொண்டது பற்றியே இருந்தது.

ஒரு நாள், புலனடக்கம் குறித்து உபதேசித்துக் கொண்டிருந்தார் பதஞ்சலி மகரிஷி.

சீடர்களுள் ஒருவனாக அமர்ந்து உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்த சைத்திரனின் மனம் குமுறியது. குருநாதரது உபதேசம், ஏற்கெனவே கொழுந்துவிட்டு எரிந்த ‘கோபாக்னி’யில் நெய் ஊற்றுவது போலிருந்தது.

சட்டென்று எழுந்த அவன், ‘‘குருதேவா… ஒரு சந்தேகம்!’’ என்றான்.

அவனைப் புன்னகையுடன் ஏறிட்ட பதஞ்சலி, ‘‘கேள் சைத்திரா!’’ என்றார்.

‘‘குருதேவா… மனதில் கிளர்ச்சியைத் தூண்டும் நடன கேளிக்கைகளில் பங்கு கொள்வது, புலனடக்கத்துக்கு உறுதுணையாகுமா அல்லது ஊறு செய்யுமா?’’

சைத்திரனின் இந்தக் கேள்வியை பதஞ்சலி சற்றும் எதிர்பார்க்கவில்லை. பண்பட்ட அவரது துறவு உள்ளம், நடன நிகழ்ச்சி முடிந்த மறுகணமே அதை மறந்து விட்டது!

வியப்புடன் அவனை ஏறிட்டார் பதஞ்சலி. ‘‘சைத்திரா… என்ன ஆயிற்று உனக்கு. ஏன் இந்த சந்தேகம்?’’

‘‘மன்னியுங்கள் குருதேவா. அரசவையில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சிக்குச் சென்று வந்த பிறகு எனக்கு ஏற்பட்ட சந்தேகம் இது!’’

பதஞ்சலிக்கு இப்போது அனைத்தும் புரிந்தது. எனினும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், ‘‘கேளிக்கை நிகழ்ச்சிக்கும் உனது சந்தேகத்துக்கும் என்ன தொடர்பு?’’ என்று கேட்டார்.

‘‘சொல்கிறேன்… பெரும் தவசீலரும், புலனடக்கத்துக்கு உதாரணமானவருமான தாங்கள், பேரரசர் நடத்திய கலை நிகழ்ச்சியில் உற்சாகமாகப் பங்கு கொண்டது, ஏன்? இது புலனடக்கத்தைக் குலைக்கும் செயல் அல்லவா?’’ என்று படபடப்புடன் பேசி முடித்தான் சைத்திரன்.

புன்னகையுடன் அவனை ஏறிட்ட மகரிஷி பதஞ்சலி தொடர்ந்தார்: ‘‘நல்ல கேள்வி. இதன் மூலம், புலனடக்கத்தின் உட்கருத்து மற்றும் நியதிகள் குறித்து அனைத்து சீடர்களுக்கும் தெளிவுபடுத்த நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறாய்… நன்று!

நமக்குள் இருக்கும் ஆத்மா, அழிவில்லாதது. அது, புற உலகில் நடப்பவற்றை அனுபவிக்கவும், ஆராயவும் உரிமை பெற்றது. அந்த ஆத்ம உணர்வு தூய்மையானது. தீய சிந்தனைக்கு அடிமையாகாமல், அதைத் தன்வயப் படுத்துவதே, ஆத்மானுபவம் ஆகும்.

மோகனக் கலை நிகழ்ச்சிகளைக் காண்பதால், மனம் கிளர்ச்சியுறும், புலனடக்கத்துக்குக் குந்தகம் விளையும் என்றெல்லாம் அஞ்சி, அவற்றை வெறுத்து ஒதுக்குவதோ, ரசிக்காமல் இருப்பதோ கூடாது. அது கோழைத்தனம்.

மாறாக, மனக் கட்டுப்பாட்டுக்கு சோதனை ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் போன்ற அனுபவங்களை எதிர் கொண்டாலும், அவற்றில் உழன்று மனக் கிளர்ச்சிகளுக்கு அடிமை ஆகாமல், சமநோக்குடன் செயல்படுபவனே புலனடக்கத்துக்கு உதாரணமானவன். இப்போது புரிந்ததா சைத்திரா?’’

சைத்திரனின் கண்களில் நீர் பெருகியது. நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தன் குருநாதரின் பாதங்களைப் பற்றி வணங்கினான். இப்போது அவன் உள்ளத்தில் தெளிவு பிறந்திருந்தது.

– டிசம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *