குலசாமியைக் கொன்றவன்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 13,577 
 

திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை ‘கு’ கொஞ்சம் இடைவெளிவிட்டு ‘க்’ இன்னும் கொஞ்சம் இடைவெளி ‘கி’ இடைவெளி ‘ரா’ இடைவெளி ‘ம’ இடைவெளி ‘ம்’… அவ்வளவுதான் கிராமம் முடிந்துவிட்டது. அந்த ஊரில்தான் மலை காத்த அய்யனார் இருக்கிறார். அவர் எந்த மலையைக் காத்தாரோ, அவர் காத்த மலைக்கு என்ன கேடு வந்ததோ, அது நமக்கு முக்கியம் அல்ல. திருப்பாளையம் காவல் நிலையத்தில் உள்ள அத்தனை போலீஸ்காரர்களும் அய்யனார் கோயில் வாசலில் குழுமியிருப்பதன் காரணம் நமக்கு முக்கியம். பூட்டப்பட்ட கோயில் வாசலில் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டு இறந்துபோயிருக்கும் இசக்கிமுத்து முக்கியம். மிகவும் தளர்ந்திருந்த தோல். கஷ்டப்பட்டுத்தான் செத்துப்போயிருக்க வேண்டும். வலது கையில் பிடித்திருந்த கத்தியில் ரத்தம் காய்ந்து ஈ மொய்க்கத் தொடங்கியிருந்தது. கழுத்தில் இருந்து வழிந்த ரத்தம், இசக்கிமுத்துவின் சட்டையை நனைத்து நிலத்தில் தேங்கியிருந்தது. திறந்திருந்த விழிகளில் பிரேதத்தின் நிம்மதி உறைந்திருந்தது.

நேற்று இரவுதான் திருப்பாளையம் வந்தார் இசக்கிமுத்து. கடைசி பஸ் போய்விட்டது. இசக்கிக்கு அதைப் பற்றி கவலை இல்லை. வந்து இறங்கிய வண்டியிலேயே டிக்கெட் எடுக்காத பயணியாக தான் பயணம் செய்தது. யார் கேட்பது? அவரின் கண்களில் உறைந்திருக்கும் பல வருடத் துக்கத்தைச் சந்திப்பவர்கள் எவருமே, அவரைத் தவிர்க்கத்தான் நினைப்பார்கள். ஆனால், இசக்கிக்கு வழி தெரியும். மறந்துபோய்விடக்கூடிய பாதையா அது? அவரின் கருப்பசாமி இருக்கும் இடம் அல்லவா! பௌர்ணமி நிலா, பேருந்து நிலையத்தைக் கழுவிக்கொண்டிருக்க அவர் கண்களில் நீண்ட பாதையின் முடிவில், கருப்பசாமியின் கழுத்து அறுபட்டு இரண்டு முறை உடல் துடித்து அடங்கியது. உதடுகள் அசைந்தன. ‘என் குலசாமிய நானே கொன்னுட்டேன்’. மெதுவாக நடக்கத் தொடங்கினார்.

‘புகழ்மேனிராஜன்குடி 20 கி.மீ’ என எழுதப்பட்டு அம்புக்குறி பாய்ந்திருந்த பாதையில், அங்கங்கே கொஞ்சம் வெளிச்சம். இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டில் உறங்கிய கத்தியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். அந்த முனகல் மட்டும் உதடுகளைவிட்டு விலகவில்லை. ‘என் குலசாமிய நானே கொன்னுட்டேன்’. தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த நாய்களின் கண்களில் வண்ணம் மாறின. குரைக்க மறந்து நிலவு ஒளியின் துணையில் நடக்கும் இசக்கியையே பார்த்துக்கொண்டிருந்த நாய் ஒன்று முகம் உயர்த்தி, நிலா பார்த்து பெரும் ஊளையிட்டது. ‘ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ…’

குலசாமியைக் கொன்றவன்இசக்கிமுத்துவுக்கும் செல்விக்கும் திருமணம் முடிந்து 10 வருடங்களாகக் குழந்தை இல்லை. இருவரின் உடலிலும் எந்தவிதப் பிரச்னையும் இல்லை என ஏகப்பட்ட மருத்துவர்கள் சொல்லியும் கரு தங்கவில்லை. போகாத கோயில் இல்லை; கும்பிடாத சாமி இல்லை. அங்கம் புரண்ட கோயில் கருங்கற்களின் வெப்பமும் எதுவும் செய்யவில்லை இருவருக்கும். பரமசிவம் தோப்பில்தான் இசக்கி வேலை பார்த்தான். விடியும் முன் தோப்புக்குச் சென்றால் வெளிச்சம் விரிவதற்குள் தோப்பில் உள்ள எல்லா தென்னைமரத்தில் இருந்தும் கள் இறங்கியிருக்கும். அதோடு அவன் வேலை முடிந்தது. மாலையில் ஒரு மணி நேரம் மட்டும் மறுபடியும் சென்று கள் வடிவதற்கான தென்னம்பாளையைச் சீவிவிட்டு வருவான். மூன்று தலைமுறையாக பரமசிவத்திடம்தான் இசக்கி குடும்பம் வேலை செய்துவருகிறது. எல்லாம் சரியாக இருந்தும், வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லாத குறைதான் அவர்களை வாட்டிவதைத்தது. உறவுக்காரர்களின் வீட்டு விசேஷங்களுக்கு இருவரும் செல்வது நிறுத்தப்பட்டது. நண்பர்களுடன் அரட்டையில் இசக்கி தனியானான். கடவுள் என்ற ஒன்றின் மீது இசக்கி காறித் துப்பிய நேரம்தான் இழவு விழுந்தது. செல்வி வகையறாவில் தூரத்துச் சொந்தக்காரக் கிழவி. பிணத்தைக் கழுவிய தண்ணீரைச் சேமித்து, தன் வீட்டுக் கொல்லையில் தென்னம்பிள்ளை நட்டுவைத்து நீர் ஊற்றி வளர்த்தாள் செல்வி. தென்னங்கன்றும் துளிர்விட்டது. ஆனாலும் பயன் இல்லை. செல்வி தன் அடிவயிற்றைத் தடவிக்கொடுத்து அழுதுகொண்டிருந்தபோதுதான், இசக்கிக்கு குலதெய்வம் ஞாபகம் வந்தது. யார் யாரோ சொல்லிய சாமிகளிடம் எல்லாம் தன் குறையைச் சொல்லி அழுத இசக்கி, குலதெய்வத்தை மறந்தது குறித்த குற்றவுணர்வுக்கு ஆளானான். சித்திரைத் திருவிழாவுக்குச் செல்ல ஏற்பாடானது.

திருப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் உள்ளது புகழ்மேனிராஜன்குடி. மெயின் ரோட்டில் சில கிலோ மீட்டர்களிலேயே இடதுபுறம் திரும்பினால் உயரமான கோபுரத்தில் அம்மன். மலைகாத்த அய்யனாரின் தங்கை. பல வருடங்களுக்குப் பிறகு வருகிறான் இசக்கி. மண் தரை மொசைக்காக மாறியிருந்தது. அய்யனாரின் கையில் புது அரிவாள். வாசலில் கருப்பசாமி காவலுக்கு. குலதெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட ஆடுகள் வெட்டப்படக் காத்திருந்தன. திருவிழா வாசனையை அந்தச் சிறு கிராமம் இன்னும் சில நாட்களுக்கு அலறும் லவுட் ஸ்பீக்கர் வழியே சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் பரப்பிக்கொண்டிருக்கும். தன் குலசாமியின் முன் தலைக்கு மேல் கை உயர்த்தினான் இசக்கி.

”கருப்பா… ஒன் வாசலை மிதிக்காத குத்தம்தான் எங்களுக்குக் கொள்ளிபோட ஒரு வாரிசைக் குடுக்காம இருக்கபோல. என்ன மன்னிச்சுடு. ஒன் கொழந்தைங்க நாங்க. எங்களுக்கு ஒரு கொழந்தையைக் குடு. நீ கேக்கிற பலியை நான் தர்றேன். ஒன் கோயில் வந்து அத நெறவேத்துறேன்.”

பூசாரி, இசக்கியின் நெற்றியிலும் செல்வியின் நெற்றியிலும் திருநீறை அள்ளிப் பூசினார். அர்ச்சனை செய்த தேங்காய்முடியை தரையில் தட்டி உடைத்து, சிறு சிறு சில்லுகளாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் இசக்கியும் செல்வியும்.

”உயிர் பலி தர்றதா வேண்டியிருக்கேன். குட்டி ஆடு ஒண்ணு வாங்கணும். அய்யனார் வரம் தர்றாரோ இல்லியோ, அடுத்த வருஷம் திருவிழாவுக்கு வந்து காவு குடுக்கணும். குலசாமி மனசு அப்பவாவது குளிருதானு பாப்போம்” – கோயிலில் இருந்து பைக்கில் திரும்பும் வழியில் குறுக்கிட்டது ஓர் ஆட்டுக்குட்டி.

”ம்…மேஏஏ”

சடன் பிரேக் அடித்து நிறுத்தினான் இசக்கி. ஆனாலும் ஆட்டின் காலில் அடி. நகர முடியாமல் தன் வலியை ‘ம்ம்ம்ம்ம்மேஏஏஏ’ என அதிகப்படுத்தியது. சுற்றிலும் யாரும் இல்லை. செல்வி மனசுக்குள் குமைந்தாள். கோயிலுக்குப் போய் வரும் வழியில் இப்படி நடந்திருக்கக் கூடாதே என முகம் சுருக்கினாள். இசக்கி ஆட்டுக்குட்டியைத் தூக்கி செல்வி மடியில் வைத்தபடி, பைக்கைக் கிளப்பினான். இசக்கியின் கண்களுக்குள் அய்யனாரின் உத்தரவு மீசை முறுக்கிப் புன்னகைத்தது.

காலில் புண் ஆறி, இசக்கி வீட்டில் வளரத் தொடங்கியது ஆட்டுக்குட்டி. ‘கருப்பசாமி’ எனப் பெயர் வைத்தான் இசக்கி. மூன்றாம் மாதம் வாந்தி எடுத்துச் சோர்ந்து படுத்தாள் செல்வி. நாள் தள்ளிப்போயிருப்பதை இசக்கியிடம் சொன்னபோது ஓடிப்போய் கருப்பசாமியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான் இசக்கி.

10 மாதங்கள் பல்லை கடித்து, செல்வி தன் வயிற்றுப் பாரத்தை இறக்கிவைப்பதற்குள் திமுதிமுவென வளர்ந்துவிட்டது கருப்பசாமி. ஆண் குழந்தை. ஆயுதம் போட்டுத்தான் எடுத்தார்கள். செல்வியின் கர்ப்பப்பை களைத்துப்போனது. மீண்டது மறுபிறப்பு. குழந்தை, இசக்கி போல் கறுப்பாகவும் திடமாகவும் இருந்தான். இசக்கி யோசிக்கவே இல்லை. தன் மகனுக்கும் ‘கருப்பசாமி’ என்றே பெயர் வைத்தான். குழந்தை பிறந்த சந்தோஷத்தில், செல்வியின் உடல் படுத்திய பாட்டில் அந்த வருடம் நேர்த்திக்கடனை மறந்துபோனான் இசக்கி.

வருடங்கள் கடந்தன. நிசப்தமாக இருந்த வீட்டில், பிள்ளைச் சத்தமும் ஆட்டின் சத்தமும் நிறையத் தொடங்கின. கஞ்சி வைத்தும் கருவேலங்காய்கள் பறித்துப்போட்டும் ‘கருப்பு… கருப்பு…’ எனக் கொஞ்சித் தீர்த்தான் தன் நிராசையைத் தகர்த்த குலசாமியை. இசக்கியின் மகனோ வளரும் காலத்திலேயே ஏகப்பட்ட சேட்டைகளுடன் வளர்ந்தான். ஊர்ப் பிள்ளைகளைக் கிள்ளிவைப்பதில் தொடங்கிய விளையாட்டு, 10 வயதில் கில்லி விளையாட்டில் வம்பு இழுத்து வளர்ந்தது.

இசக்கி நடந்துகொண்டிருந்தார். மதனபுரம் வந்திருந்தது. இன்னும் 10 கிலோ மீட்டரில் அவரின் கருப்பசாமி. அந்த இரவில் திறந்திருந்த ஏ.டி.எம் வாசலில் ஸ்டூல் போட்டு அமர்ந்திருந்த காவல்காரர், சாலையில் நடந்துசென்ற இசக்கியை அழைத்தார்.

”யாருப்பா அது இந்த நேரத்துல..?”

இசக்கி, செக்யூரிட்டி அருகில் வந்தார். ஏ.டி.எம்-காரரே தொடர்ந்தார்.

”கடைசி பஸ்ஸும் போயாச்சு. ஷேர் ஆட்டோ, வேன் எதுவுமே கெடையாது. எங்க போறீங்க..?”

இசக்கியின் உதடுகள் ஒருமுறை முணுமுணுத்தன. ”என் குலசாமிய நானே கொன்னுட்டேன்.” அதைச் சரிவர காதில் வாங்காத காவல்காரர், ” ‘எந்த ஊர்?’னு கேட்டேன்” என்றார்.

”கோட்டைவாசல்” என்ற இசக்கியின் கண்களில் தவிப்பு.

”திருப்பாளையத்துல எறங்கி வர்றீங்களா நேரம் கெட்ட நேரத்துல. எங்க போகணும்?”

”கருப்பசாமியைப் பாக்க… அய்யனார் கோவத்துல இருக்கார். ராஜங்குடிக்குப் போகணும். விடியிறதுக்குள்ள… நிலா வெளிச்சத்துல போயிடுவேன்.”

”இன்னும் கொள்ள தூரம்ல போகணும். நமக்குத் தெரிஞ்ச பசங்க யாராவது வண்டியில வந்தா ஏத்திவிடுறேன்… செத்த இருங்க. யாராவது தென்படுறாங்களானு பாக்குறேன்.”

இறங்கி சாலைக்கு வந்து கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பார்க்க, இருள் அப்பிய சாலை முடிவில் இன்னும் இருள்.

குலசாமியைக் கொன்றவன்2”ஒருத்தரையும் காணுமே பெருசு. காத்திருந்து பாக்குறீங்களா?” என்றபடி திரும்பிப் பார்க்க, அதிர்ந்தார். இசக்கி ஏ.டி.எம் வாசலைவிட்டு அகன்றிருந்தார். மஞ்சள் வெளிச்சம் படிந்திருந்த சாலை முடிவைக் கடந்தார். மேகத்துக்குள் இருந்து நிலா வெளியே வந்தது.

”ஏன்டா கருப்பு… இப்பிடி இருக்க?” என்றார் இசக்கி, கஞ்சி குடிக்க மறுத்த கருப்பசாமியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு. வீட்டு வாசலில் அமர்ந்தபடி பனங்கிழங்கு உரித்துக்கொண்டிருந்த கருப்பசாமி, ”எப்பா… ஒண்ணு என் பேரை மாத்து. இல்ல ஒன் ஆட்டு பேரை மாத்து. ‘கருப்பு’, ‘கருப்பு’னா யாரைச் சொல்றேன்னே தெரியல. என்னத் திட்டுறியா, அத திட்டுறியானும் புரியல” என்றான் கோவமாக.

”டேய் கிறுக்கா… அது அய்யனார் பேரு.

நீ பொறக்கிறதுக்கு முன்னாடியே நம்ம வீட்டுக்கு குலசாமி வந்தாச்சுடா.”

”அப்போ ஒன் குலசாமி பேரை மாத்து. சும்மா… ஆட்டுக்கும் மனுஷனுக்கும் வித்தியாசம் தெரியாம பேரை வெச்சுக்கிட்டு” – பனங்கிழங்கைப் பிட்டு, நார் உரித்து வீசிவிட்டு, தின்னத் தொடங்கினான்.

செல்விதான் அடிக்கடி இசக்கிக்கு ஞாபகப்படுத்துவாள்.

”நேர்த்திக்கடனுங்க… நாம மறந்தாலும் சாமி மறக்காது. போய் நெறவேத்திட்டு வாங்க.”

”எப்பிடி செல்வி முடியும்? நமக்குப் புள்ளையா கருப்பசாமி வர்றதுக்கு முன்னாடியே தானா நம்ம வீட்டுக்கு வந்த புள்ளை அது. அதைப் பலிகுடுக்க மனசு வருமா..? வருஷாவருஷம் திருவிழாவுக்குப் போய் பொங்கல் வெச்சு கும்பிட்டுத்தான வர்றோம். அய்யனாருக்கு ரத்த தாகம் எடுத்தா, நம்ம புள்ளைய பலி கேக்க மாட்டாரு. என் ரெண்டு புள்ளைங்களும் எனக்கு வேணும் செல்வி.”

பரிதாபம் வழிய அவன் பேசும் பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது செல்வியிடம். ஆனாலும் அய்யனாருக்குக் கோவம் வந்தது ஒருநாள். ஜுரம் எனச் சோர்ந்து படுத்த கருப்பசாமியை திருப்பாளையம் ஆஸ்பத்திரியில் சேர்த்துதான் காப்பாற்ற முடிந்தது. ஒரு மாதம் பள்ளி சென்றவன், மறுபடியும் சோர்ந்து விழுந்தான். இந்த முறை அம்மையும் சேர்ந்து வந்தது. செல்வி, உள்ளூர் அம்மனிடம் சென்று காசு முடிந்து வந்தாள். வாசல் திண்ணை மீது செருகி வைத்திருந்த வேப்பிலையை கருப்பசாமி தின்றது.

அம்மை நாட்கள் முடிந்து தலைக்குத் தண்ணீர் ஊற்றியும் கருப்பசாமி முன்புபோல் இல்லை. சட்டென உடல்வற்றி சவலைப்பிள்ளைபோல் ஆனான். சத்தான சாப்பாடு, மருத்துவர்களின் டானிக் மருந்துகள் எதுவும் கருப்பசாமியின் கால்களில் சக்கரம் மாட்டவில்லை. சதா ஊரையே வலம்வந்து வம்பும் வழக்குமாக இருந்த பிள்ளை, இப்படி கை ஊன்றி எழக் கஷ்டப்படுவதைக் காண முடியாமல் கண்ணீருடன் கிடந்தாள் செல்வி. தோட்டத்தில் இலை, தழைகளைத் தின்றுகொண்டும் புழுக்கை போட்டுக்கொண்டும் கொழுகொழுவெனத் திரிந்த கருப்பசாமியைப் பார்க்கையில், மனம் ஊமையாகப் புழுங்கியது செல்விக்கு. இசக்கியோ, மகனின் உடல் நலமாக ஊர் ஊராகத் திரிந்துகொண்டிருந்தான் மருத்துவர்களைத் தேடி. அலுத்துக் களைத்துவரும் இசக்கியைக் கண்டதுமே தலையாட்டி கழுத்து மணி ஒலிக்கவிடும் கருப்பசாமியின் கொம்புத் தடவல் மட்டுமே அவனுக்கு ஆறுதல். ஒருநாள் இரவு புருஷனிடம் தயங்கித் தயங்கிச் சொன்னாள் செல்வி.

”எனக்கு என்னமோ வேண்டுதல் நெறவேத்தாததுதான் இப்பிடி புள்ளைக்கு வியாதியா வந்து கெடக்கோனு தோணுது. வருஷம் பத்து ஆச்சு… இப்போகூட ஒண்ணும் கெட்டுப்போகல. போய் குலசாமி கடமையை முடிங்க.”

பகீரென்றது இசக்கிக்கு.

”ஏன் செல்வி. ஒனக்கு கருப்பும் ஒரு புள்ளதான..! ஒரு புள்ளையைப் பொழைக்கவைக்க, இன்னொண்ணைப் பலி தரச் சொல்றியா?”

கண்கள் கலங்கின. மனசுக்குள் ஏதோ நடக்கக் கூடாதது நடக்கப்போவதுபோல் பிசைந்தது.

”நான் இன்னும்

10 வருஷமோ…

15 வருஷமோ… எனக்குக் கொள்ளிவைக்க புள்ள வேணுங்க!” – இசக்கியின் மார்பில் சாய்ந்து அழுத செல்வியின் அழுகைக்கு முன், கருப்பசாமியின் ‘ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஏஏஏஏஏஏ’ அழைப்பு, இசக்கியின் காதில் விழவில்லை.

பௌர்ணமி உச்சத்தில் இருந்தது. இசக்கியின் நடையில் வேகம் கூடியது. கை இடைக் கத்தியைத் தொட்டுத் தடவியது. உதடுகள் வறண்டு இருந்தன. ‘என் குலசாமிய நானே கொன்னுட்டேன்’. கோயில் கோபுர உச்சி கண்ணுக்குத் தெரிந்ததும் நின்றார். உடம்பில் நடுக்கம் கூடியது. ஒருமுறை… ஒரே ஒருமுறை தான் வந்த வழியைத் திரும்பிப் பார்த்தார். ‘ம்ம்ம்ம்ம்ம்ம்மே ஏஏஏஏஏ.’

கண்களில் மடை உடைக்க அழுதுகொண்டே கோயில் நோக்கி விரைந்தார்.

அந்த வருடத் திருவிழாவுக்கு செல்வி வரவில்லை. படுக்கையிலே கிடக்கும் கருப்பசாமியின் ஜுரம் அதிகமாகியிருந்தது. இசக்கிமுத்து மட்டும் கருப்புடன் கிளம்பிவிட்டான். அதுவும் தலையை ஆட்டியபடி இசக்கியுடன் உற்சாகமாகக் கிளம்பியது. கோயில் திருவிழா களைகட்டியிருந்தது. சாலையின் இருமருங்கிலும் டியூப்லைட்டுகள் வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன.

காலை பூஜை முடிந்து நகர்வலம் கிளம்பினார் அய்யனார். கருப்பின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை, இறுகப் பிடித்தவாறு அய்யனாரை நோக்கி கை உயர்த்திக் கும்பிட்டார் இசக்கி. கண்களை மூட, கண்ணீர் தடையின்றி பிதுங்கி வழிந்தது.

”உனக்கான சொத்து இதோ. என் சந்தோஷத்தை மட்டுமே யோசிச்ச நான், உன்கிட்ட குடுத்த வாக்கை மறந்தது தப்புதான். அதுக்காக 10 வருஷமா வேண்டிப் பொறந்த உசிர எடுத்துடாத சாமி. உனக்கான காணிக்கையை நான் உன்கிட்டவே சேத்துடுறேன்.”

ஒருமுறை இசக்கியின் உடல் குலுங்கி அடங்கியது. ‘ஆடு காணிக்கை தரும் நபர்கள், கோயில் அலுவலகத்துக்கு வந்து டோக்கன் வாங்கிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ – மைக்கில் அறிவிப்பு வந்ததும் கருப்பை இழுத்துக்கொண்டு டோக்கன் வாங்க நடந்தார் இசக்கி.

”ஏம் பெருசு… ஆட்டை எங்கயாவது தூண்ல கட்டிட்டு டோக்கன் வாங்க வரலாம்ல. கூடவே கோயில் பூரா கூட்டிட்டு அலைவியா?”- டோக்கன் கியூவில் யாரோ கேட்டார்.

இசக்கிக்கு, கருப்பைப் பிரிய மனம் இல்லை. இன்னும் சில மணி நேரங்களில் அய்யனாரின் முகத்தில் தன் ரத்தம் பூசி, இன்னோர் உயிரைக் காக்கும் கருப்பின் கழுத்துக் கயிறு இசக்கியின் கைகளில் இறுகியது. நகர்வலம் முடித்து கோயில் திரும்பிய அய்யனாருக்கு முன் ஆட்டமாக ஆடி வந்தான் காத்தவராயன். சாமியாடி. கழுத்தில் மாலை. கையில் கத்தி. கூட்டம் திமிறியது. ஆடு வெட்டும் சாமியாடி பல வருடங்களாக ஒரே சாதியைச் சேர்ந்தவராகத்தான் இருந்தார். தலைமுறை தலைமுறையாக வளரும் காத்தவராயன்கள். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அய்யனார் முன் சீட்டு குலுக்கிப்போட்டு ஊரில் இருந்து திடகாத்திரமான ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம், திடீரென கோயில் மிகப் பிரபலமாகி, கூட்டம் வர ஆரம்பித்ததும், வசூல் வேட்டையில் இறங்கிய உள்ளூர் பெரிய மனிதர்கள் சிலர், குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே காத்தவராயனாக இருப்பதை எதிர்த்தார்கள். சாமியாடி பதவியை விட்டுக்கொடுக்க விரும்பாத சாதியினரோ, நிஜமான ரத்தவேட்டை நடத்தினர். ஆனாலும் அரசியலும் பணபலமும் உள்நுழைந்து ஆதிக்கம் செலுத்த, வேறு வழியின்றி அடங்கிப்போயினர், முப்பாட்டன்களின் காலத்தில் இருந்து தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்காமல் சாமியாடிய சாதியினர்.

நெற்றியில் பொட்டுவைத்து, மாலை போட்டு, தண்ணீர் தெளித்து அய்யனார் முன் நின்று சம்மதம் வாங்கிய முதல் ஆடு தயாராக இருந்தது. தீபாராதனை காட்டப்பட்டு மணி அடித்து பூசாரியிடம் இருந்து உத்தரவு வந்ததும், சாமியாடி தயாரானான். 30 வயது. இது மூன்றாவது வருடம் சாமியாடிக்கு. குலுக்கல் சீட்டில் இவன் பெயர் வந்ததுமே தன்னைத் தயார்செய்யத் தொடங்கினான். கவுச்சியற்ற விரதம் என்றாலும் தினமும் செய்த உடற்பயிற்சி புஜங்களின் விம்மலில் தெரிந்தது. அகன்ற மார்பு. காப்பு காய்ச்சி கெட்டித்தட்டிப்போன உள்ளங்கை பரப்பு. மனதளவில் தயாராக இருந்தான் சாமியாடி.

சட்டென ஆட்டைப் படுக்கப்போட்டு அதன் கால்களை இருவர் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, தலையை தரையோடு அழுத்தி இன்னொருவர் பிடிக்க, கழுத்தின் எலும்புப் பகுதியில் கத்திவைத்து அறுத்தான் சாமியாடி. இரண்டாவது கீறலில் ரத்தம் பீறிட்டு சாமியாடி முகத்தில் அடித்தது. கையில் அள்ளிய சூடான ரத்தத்தை அய்யனார் முன் காட்டி, பூமியில் சிந்தவிட்ட சாமியாடி கண்களின் நிறம் சிவப்பு. அடுத்த ஆட்டின் முறை. அதேபோல் கழுத்து அறுபட்டு நிலத்தில் துடித்துக்கொண்டிருந்த ஆட்டின் அருகில் படுக்கவைக்கப்பட்டு, முதல் ஆட்டின் கால்களுக்கு இடையில், இந்த ஆட்டின் கால்கள் செருகப்பட்டன. முதல் பலி ஆடு தன் துடிப்பை நிறுத்தியிருந்தது.

இந்த வருடம் ஆடுகளின் எண்ணிக்கை அதிகம். டோக்கன் என்பது அடையாளத்துக்குத்தானே தவிர எண்கள் இல்லை. தொடர்ச்சியாக ஆடுகள் வரவர கழுத்து அறுபட்டு நிலத்தில் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டன. ஆடுகளின் கால்களையும் தலையையும் பிடித்துக்கொள்ளும் இருவரும், அறுபட்ட பின் ஆட்டைத் தூக்கித் தர, அதை வேறு இருவர் வாங்கி நிலத்தில் படுக்கவைத்தனர். 10 ஆடுகளுக்குப் பின் வரிசை தள்ளிப்போக அறுபட்ட ஆடு கழுத்தில் பீறிடும் ரத்தத்துடனே, காற்றில் பயணப்பட்டு இவர்களின் கையில் விழுந்தது. சற்றே கொழுத்த ஆடுகளைப் பிடிக்க முடியாமல் நழுவவிட, அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆடுகளின் உடல் மீது விழுந்து துடித்த ஆட்டை, இருவரும் சரியாகப் படுக்கவைத்துத் துடிப்பை நிறுத்தினர். ஆடுகளைப் படுக்கவைக்கும் இடத்தின் அருகில் கட்டியிருந்த கயிறுக்கு அப்பால் நின்று, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கூட்டம் காற்றில் விசிறிவரும் ரத்தம், தங்கள் ஆடைகளில் பட்டதும் மெய்சிலிர்த்தனர். அது அவர்களின் நம்பிக்கை. பலி கொடுக்க வசதி இல்லாதவர்கள் இப்படி நின்று, அந்த ரத்தம் தங்கள் மீது படிந்ததும் அய்யனாரின் அருள் தங்களுக்குக் கிடைத்ததாக நம்பினர். இதுநாள் வரை பார்வையாளனாக இருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த இசக்கி, முதன்முறையாக தான் பலியாக இருப்பதை நினைத்துப் பதற்றம்கொண்டான். அவரவர் ஆடுகளின் அடையாளத்துக்கு என ஒவ்வொருவரும் கறுப்பு, மஞ்சள், பச்சை… என பல நிறங்களில் ஆட்டின் கால்களில் கயிறு கட்டியிருந்தனர். இசக்கி, தன் கருப்பசாமியின் காலில் கட்டியிருந்தது சலங்கை.

வேண்டிக்கொண்டு சாமியாடியின் கையால் அறுபட்ட தங்கள் ஆட்டை, பலர் உடனே எடுத்துச்சென்று கோயிலின் பின்னே மறைவான ஓர் இடத்தில் வைத்து, தோல் உரித்து, கறி பங்கு பிரித்து, திருவிழாவுக்கு வந்திருந்த தங்கள் உறவினர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தனர். சம்பிரதாயத்துக்குக் கொஞ்சம் குழம்பும் வைத்து அய்யனாருக்குப் படைத்து அங்கேயே கறிச்சோறும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இசக்கி… முன்பே முடிவுசெய்திருந்தார், கருப்பசாமி அறுபட்டதும் உடனே உடலை எடுத்து ஒரு ஆட்டோவில் போட்டுக்கொண்டு நேராகத் தன் வீட்டுக்குச் சென்று கொல்லையில் புதைத்துவிட வேண்டும் என்று.

100 ஆடுகள் அறுபட்டு முடிந்ததும், சாமியாடி சற்றே ஓய்வெடுத்தான். அந்தப் பலிச் சம்பவத்தில் பங்குபெற்ற அனைவரும் சாராயம் அருந்தினர். மதியம் 2 மணிக்கு மேல் மறுமுறை தொடங்கியது. இசக்கி, கருப்பின் உடலைத் தடவிக்கொண்டே இருந்தார். மனம் இல்லை. கருப்பின் கண்களை நேருக்கு நேராக எதிர்கொள்ளத் தயங்கினார். தான் அணிந்திருந்த வெள்ளைச் சட்டையிலும் வேட்டியிலும் ஏகப்பட்ட ரத்தக் கறைகள். இதில்தான் தன் கருப்பின் ரத்தமும் படியப்போகிறதா… நினைக்கையிலே உயிர்போனது இசக்கிக்கு. தீர்மானித்தார். அய்யனாரைப் பார்த்த இசக்கியின் முகத்தில் அத்தனை வெறுப்பு. கருப்பை, சாமியாடியின் வரிசையில் நிற்கவைத்த இசக்கி, அங்கேதான் தவறு செய்தார். தன் கருப்பின் கழுத்து அறுபடுவதைக் காண விரும்பாத இசக்கி, அங்கேயே நிற்காமல் கூட்டத்தோடு கூட்டமாக வந்து நின்றுகொண்டார். இப்போது இசக்கியிடம் இருந்து 50 அடி தொலைவில் சாமியாடி. அங்கிருந்து தூக்கி வீசப்படும் ஆடுகள் பொத்தென வந்து விழுந்துகொண்டிருந்தன. எதையும் கையில் வாங்கிப் படுக்கவைக்க முடியவில்லை. இசக்கி, கண்களை மூடியிருந்தார். கருப்பு, தன் சொரசொரப்பான நாக்கால் அவர் கையை நக்கியது. அவர் கையில் இருந்த கருவேலங்காய்களைக் கவ்வித் தின்றது. செல்லமாக அவர் வயிற்றில் முட்டியது. இசக்கிக்கு கண்களில் கண்ணீர் திரள, காற்றில் சலங்கை சத்தம். சட்டென கண்களைத் திறந்தார். அவர் கண் முன்னே வந்து விழுந்து துடித்தது கருப்பசாமி. ‘அய்யோ என் புள்ள…’ திடீரென கூட்டத்தில் ஓர் ஆர்ப்பாட்டம் நிகழ, தான் நின்றிருந்த இடத்தில் இருந்து பின்னே வந்தார் இசக்கி. கண்கள் இருட்டி மயக்கம் வந்தது. காலையில் இருந்து சாப்பிடவில்லை. அங்கு இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து அழத் தொடங்கினார். அப்படியே நிலத்தில் சாய்ந்தார்.

இசக்கி விழித்தபோது மேளச் சத்தம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. உடன் கருப்பின் ஞாபகம் வர சடாரென எழுந்தார். கூட்டம் குறைந்து இருந்தது அந்த இடத்தில். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இசக்கி தன் கருப்பைத் தேடினார். 10 ஆடுகள் இருக்கும். கழுத்து அறுபட்டு, திறந்த கண்கள் வெறித்து அய்யனாரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக்கொண்டிருந்தன.

‘கருப்பு…’ இசக்கி அழைத்தார். கருப்பு இறந்ததை மூளையில் அவர் பதியவிடவில்லை. ‘கருப்பு…’ மறுபடியும் அழைத்தார். அங்கு இருந்த ஆடுகளைப் புரட்டி, தன் ஆட்டைத் தூக்கிய ஒருவர் இசக்கி பக்கம் திரும்பி, ”என்ன பெருசு… செத்துப்போன ஆட்டைக் கூப்புட்டுக்கிட்டு…” என்றார். இசக்கியின் கண்கள், ஜோடி ஜோடியாகப் பின்னிப் பிணைந்திருந்த ஆட்டின் கால்களில் சலங்கையைத் தேடியது. இல்லை. அவரின் கருப்பு காணவில்லை. இசக்கியின் உலகம் இருண்டது.

”என் கருப்பசாமியைக் காணும்யா…”

அழுகைத் திமிற அவசர அவசரமாக அங்கு இருந்த உடல்களைப் புரட்டினார்.

”அதுசரி… கடைசி நேரத்துல வந்து நின்னுக்கிட்டு என் கருப்பசாமியயைக் காணும்னா எங்க போக..? கொழுத்த ஆடா இருந்தா கறிக்குத் தேறிடுச்சுடானு யாராவது எடுத்துட்டுப் போயிருப்பாங்க. இங்க கிடக்கிறதுல அந்தா… அந்த எளந்தாரிக் கெடாவைத் தூக்கிட்டுப் போ. வந்த வரைக்கும் லாபம்தானே…” அவர் தன் தோளில் தொங்கிக்கிடக்கும் ஆட்டுடன் விலகினார்.

”அய்யய்யோ… தப்பு பண்ணிட்டேனே. என் குலசாமியை நானே கொன்னுட்டேனே…” -மடேர் மடேரெனத் தலையில் அடித்துக்கொண்டார். ‘கருப்பா… கருப்பா…’ தேடி ஓடினார். கோயில் முழுவதும் அவரை வேடிக்கை பார்த்தது. கூட்டமாக இருந்த இடத்தில் சென்று பார்த்தார். பெரிய குடும்பம் போலும். ஆடு ஒன்று தோல் உரித்து தொங்கிக்கொண்டிருக்க, கறி சப்ளை நடந்துகொண்டிருந்தது. சாணமும் ரத்தமும் சிதறிய அந்த இடத்தில் தொங்கிய ஆட்டின் காலில் சலங்கை இல்லை.

”அய்யா… என் கருப்பு குலசாமிய்யா… அதை நான் பலி குடுத்தது என் புள்ளையைக் காப்பாத்தத்தான்யா. என் கருப்பு என் தோட்டத்துலதான்யா வளந்தான். அவனை அங்கதான்யா பொதைக்கணும். கருப்பு… அய்யா கருப்பசாமி…” – கோயில் எங்கும் இசக்கியின் கதறல்.

அப்புறம் இசக்கி தன் வாழ்க்கையில் பேசியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ‘என் குலசாமிய நானே கொன்னுட்டேன்.’

15 வருடங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லிய வார்த்தைகள். கருப்பசாமி சொந்தத்திலேயே ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்துகொண்டான். பைத்தியமாகத் திரிந்த புருஷனைப் பார்த்தபடியே செத்துப்போனாள் செல்வி. கருப்பசாமி மனைவியோ, பைத்தியக்கார மாமனாருக்கு சாப்பாடு போட மறுத்தாள். வெள்ளையாக காலில் சலங்கை கட்டிய ஆட்டை வீட்டுக்குத் தூக்கிவந்து ‘என் கருப்பு கெடச்சுட்டான்…’ எனக் கொஞ்சிய இசக்கியை, ஆட்டுக்குச் சொந்தக்காரர்கள் அடித்து, ஆட்டைப் பிடுங்கிக்கொண்டு போனார்கள்.

கருப்பசாமி, தன் அப்பனைக் கழுத்தைப் பிடித்து வீட்டைவிட்டுத் தள்ளினான். இசக்கி தளர்ந்திருந்தார். கழுத்து அறுபட்டுத் துடித்த தன் கருப்பசாமியின் கடைசிக் கதறல் அவரின் காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது. தெருவில் மேயும் ஆடுகள் எல்லாம் ஒருநாள் கழுத்து அறுபட்டு துடிக்க, திடுக்கிட்டு விழித்த இசக்கி தீர்மானித்தார்.

கோயில் உச்சியில் வெள்ளை லைட் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. காற்றில் மெல்லிய ரீங்காரம். இசக்கி படியில் அமர்ந்தார். கோயில் கதவு மூடப்பட்டிருக்க, உள்ளே அய்யனார் குற்றவுணர்வுடன் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்ததை, அவரின் காவல் குதிரைகளும் இசக்கிமுத்துவும் கவனித்தனர். கருப்பசாமியின் உடல் இசக்கிக்குத் தெரிந்தது. அய்யனாரைப் பார்த்து காறித் துப்பினார் இசக்கிமுத்து. ‘என் குலசாமி…’ மேற்கொண்டு வார்த்தை வராமல் விம்மினார். படியில் தன் தலையைச் சாய்த்தார். இடை பெல்ட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து, கழுத்து நரம்பில் வைத்து சரசரவென அறுக்கத் தொடங்கினார். ரத்தம் சூடாகப் பெருகி வழிய, கண்களில் உறைந்திருந்த கருப்பின் உருவம் மறையும் வரை அறுப்பதை நிறுத்தவில்லை. கை அப்படியே கழுத்தில் படிந்து ஓய்ந்தது. நிலா, மேகத்தில் இருந்து வெளியே வந்தது!

– மே 2015

Print Friendly, PDF & Email

1 thought on “குலசாமியைக் கொன்றவன்

  1. என்னோட கறுப்ப நானே கொண்ணுட்டேன்…… பாசத்தை அருமையாக வெளிபடுத்தி உள்ளது. அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *