கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,469 
 

கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை… சிவசு வாத்தியாரை திண்டுக்கல் பஸ்சில் பார்ப்போம் என்று…

தொண்ணூறு களின் ஆரம்பம். பள்ளி படிப்பை முடிக்கும் போது… சிவசு வாத்தியார் இன்றைக்கும் அன்று போலவே இருக்கிறார்.

“நீ… நீங்க… தண்டபாணி தானே!”

“ஆமாம் சார்… நீங்க சிவசு சார் தானே… நான் அப்பயே நினைச்சேன். ஆனா, சட்டுன்னு கேட்கறதுக்கு எப்படியோ இருந்தது.”

சிவசு சார், எதிர் வரிசையில் இருந்து எழுந்து வந்து, தண்டபாணிக்கு அருகிலிருந்த நபரை கொஞ்சம் நகரச் சொல்லிவிட்டு, பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

“காதல் ரோஜாவே எங்கே நீயேங்கே கண்ணில் வழியுதடி கண்ணீர்…’ பஸ்சுக்குள் எப்.எம்.,ல் பாடல் ஒலித்தது. சிவசு வாத்தியார், இவன் புறமாய் திரும்பி பார்த்து புன்முறுவல் பூத்தார்.

“ஞாபகமிருக்கா தண்டபாணி… இந்த பாட்டு?”

“இருக்கு சார்… ப்ளஸ் 2வில் பேர்வெல் படம். எங்க கூட நீங்களும் வந்தீங்களே… எனக்கு ஞாபகமிருக்கறதுல ஆச்சரியம் இல்லை… ஆனா, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது தான் சார் ஆச்சரியமா இருக்கு,” என்றான் வியப்பு மேவ.

“ஏன் இல்லாம… என்னோட சர்வீஸ்ல பஸ்ட் செட் நீங்க தான். நான் மாணவ பருவத்தின் கடைசி படியிலயும், ஆசிரியர் பருவத்தின் முதல் படியிலயும் நின்ன நாட்கள் அது… எப்படி மறக்க முடியும்?”
தண்டபாணிக்கு நெகிழ்வாய் இருந்தது.

பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பன் அப்புவை, சாருக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

குரு-சிஷ்யன்!காற்றை கிழித்து கொண்டு, பஸ் வேகமெடுத்தது. சிவசு வாத்தியாரின் காதோரம், நரைத்த முடியை பார்க்கையில், மனசுக்குள் இனம் புரியாத உணர்வு படர, அது பெருமூச்சாய் பிரவாகமானது.

அவனைப் போலவே சிவசு வாத்தியாரும், மிகத் துல்லியமாய் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

“ஏன் தண்டபாணி… உன்னை கடைசியா, டி.சி., வாங்க வந்தப்ப பார்த்தது. மீசை கூட முளைக்காம, வெட வெடன்னு அப்பிராணியா இருப்பே… இப்ப உன்னை இவ்வளவு பெரிய ஆளா பார்க்கும் போது, ஒரு பக்கம் ஆச்சரியமாகவும், இன்னொரு பக்கம் Œந்@தாஷமாகவும் இருக்கு…” அந்த நாளில் சிவசு வாத்தியார் தான், எல்லாருக்கும் ரோல் மாடல்!

அவருடைய நடை, உடை, நாகரிகம், கண்ணியமான அணுகுமுறை, கற்பிக்கும் அழகு, எல்லாமுமே ஒரு அழகான உலகத்திற்கான ஆதர்ச விருட்சமாய் இருக்கும் மாணவர்கள் மனதில்.

“இன்னமும் நீங்க பழனி ஸ்கூல்ல தான் வேலை பாக்குறீங்களா?” என்றான்.

காற்றின் இரைச்சலில், அவன் கேட்டது சரியாய் காதில் விழவில்லையோ என்னவோ, ஐந்து நிமிடம் கழித்துதான் பதில் சொன்னார்.

“இல்லப்பா… நான் அஞ்சாறு வருஷம் பழனி ஸ்கூல்ல வேலை பாத்தேன்… அப்புறம் ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சின்னு நிறைய இடம் மாறிவிட்டு, இப்போ மதுரையில, ஒரு ஹைஸ்கூல்ல ஹெட்மாஸ்டரா இருக்கேன்… இந்த வருடம், பி.ஹெச்.டி., முடிச்சிடுவேன். அப்பறம் காலேஜ்ல ஒர்க் பண்ண ட்ரை பண்ணலாம்.”

தன்னையறியாமல், தண்டபாணி கை தட்டினான். முன் சீட்டில் இருந்தவர்கள், வினோதமாய் திரும்பி பார்த்தனர்.

“பெருமையா இருக்கு சார்… நீங்க அந்த நாள்லே சொல்வீங்களே, “வாழ்க்கையின் இறுதி நிமிஷம் வரைக்கும், போராட களம் இருக்கும்…’ன்னு, அதை உங்களோட வாழ்க்கையில நிரூபிச்சு காட்றீங்க; இதை விட எங்களுக்கு வழிகாட்டி என்னவாக இருக்க முடியும்?”

அவன் பெருமிதமாய் சொன்னபோது, ஒரு புன்சிரிப்புடன், அவன் பெருமிதத்தில் கலந்து கொண்டார்.

“நீ , பி.இ.,யில சேரதுக்கு, கோயம்புத்தூர் போகப் போறதா சொன்ன… என்ன செய்த, இப்ப என்ன செய்யற?”

ஏதோ, பேசப்போன, அப்புவை, தொடையில் தட்டி அமர்த்திவிட்டு சொன்னான்…

“எல்லாம் உங்க ஆசிர்வாதம் சார்… பி.இ., கோயம்புத்தூர்ல, எம்.இ., சென்னையில… இப்போ மல்டி நேஷனல் கம்பெனியில, நல்ல சம்பளத்துல சென்னையில இருக்கேன். தங்கச்சி பொண்ணு மேஜராயிட்டா, நேத்து பங்சன் வச்சிருந்தாங்க, அதான் பழனி வந்துட்டுப் போறேன். திண்டுக்கல் போயி, தங்கிருந்து, சென்னைக்கு டிரெயின்ல பயணம். இவனுக்கு மலையில ஒரு வேண்டுதல் இருந்ததாம்… அதான் கூட்டி வந்தேன்.”

அவன் சுருங்க கூறி முடித்தான்.

சிவசு சார் அவனுடைய முதுகில் தட்டிக் கொடுத்தார்.

“வெல்டன் மை பாய்… இன்னைக்கு, நைட் எனக்கு தூக்கமே வராது. எங்கக்கிட்ட படிச்ச மாணவன், எங்களை விட, உயர்ந்த இடத்துல இருக்கறதை விட, ஒரு ஆசிரியனுக்கு சிறந்த விருது எது… இதான், நல்லாசிரியர் விருதுக்கெல்லாம் உயர்ந்த விருது.”

அவருடைய கண்கள் அனிச்சையாய் பனித்தன. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும், அவன் எத்தனை முறை வற்புறுத்தியும், அவர் சாப்பிட வர மறுத்து விட்டார். அவரை ஐந்து நிமிடம் காத்திருக்க சொல்லிவிட்டு, அங்குமிங்கும் அலைந்து நூற்றெம்பது ரூபாய்க்கு, கருப்பில் தங்க நிற மூடியிட்ட, ஒரு பென் செட்டை வாங்கி வந்து பரிசளித்தான்.

நெகிழ்ந்து போனார் சிவசு சார்.

“தோல்வியுடைய எண்ணிக்கை அதிகமாகும் போது, வெற்றிக்கான நெருக்கம் சமீபித்து விட்டதுங்கற, உங்களுடைய வார்த்தையை நான் மறக்க மாட்டேன் சார்.”

“இந்த உலகம் ரொம்ப சிறுசு… சீக்கிரமே சந்திப்போம், உன்னை இன்னும் நல்ல நிலையில்… வரட்டுமா?”

அவர் விடை பெற்று கொண்டு நடந்தார். நினைவில் இருந்தும் கூட இருவருமே, தொலைபேசி எண்களை பரிமாறிக் கொள்ளவில்லை.

அவர், ஜனசந்தடியில், புள்ளியாய் கரைந்து போகும் வரை, அவரையே பார்த்துக் கொண்டிருந்தவன், பிறகு, அப்புவிடம் திரும்பி, “போகலாமா?” என்றான்.

“போகலாம்… ஆனால், நீயேன்டா சரமாரியா, இத்தனை பொய்ய சொன்னே… அதுக்கு என்கிட்ட காரணத்தை சொல்லு.”

“என்னடா செய்ய சொல்ற… அவர் என்னோட குரு; ஆதர்ச மனிதர். பெத்தவங்களுக்கு அடுத்து, நம்முடைய உயர்வை பார்த்து பொறாமைப்படாத உயிர் உலகத்துல இருக்குதுன்னா, அது ஆசிரியர் மட்டும் தான்டா…அவர் முன்னாடி, அவர் எனக்கு கற்றுத்தந்த போதனையை எல்லாம் மறந்துட்டு, “எங்கப்பா எனக்கு அரும்பாடுபட்டு வாங்கி தந்த, பி.இ., சீட்டை, ஒரு பொண்ணு மேல இருந்த காதலுக்காக, பாதியிலேயே படிப்பை விட்டதினால வீணாக்கிட்டு, ஒரு சேல்ஸ் ரெப்பா, தோள்ல பையை போட்டுட்டு, ஆறாயிரம் ரூபா# சம்பளத்துக்கு கடை கடையா ஏறி இறங்கறேன்…னு, சொல்ல சொல்றியா?”

“அது சரிடா… தங்கச்சி மகளுக்கு, தாய்மாமனா நின்னு, நூறு ரூபா கூட மொய் செய்யலைன்னு, உன் தங்கச்சி ஜாடையா கேவலமா பேசுச்சு; நீ கண்டுக்கல… இப்போ இருக்கிற கஷ்டத்துக்கு, டக்குன்னு அவருக்கு நூத்தம்பது ரூபாய்க்கு வாங்கி தந்திருக்க… தேவையாடா இது?”

அப்புவின் முகத்தை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான்.

“அது மொய்டா, திருப்பி என்ன செய்வாங்கன்னு எதிர்பார்த்து செய்றது… அது செய்யாட்டியும், எந்த தப்புமில்லை. இது காணிக்கை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது. இதுக்கு எல்லையுமில்லை; சூழலுமில்லை.”

பிரமிப்பாய் பார்த்தான் அப்பு. இனி அவனிடம் வாதாட, பொய்யான வார்த்தைகளை தேடுவது வீண் என்று உணர்ந்து, அவனுடைய உயரிய பண்பை வியந்தபடி, அவனுடன் ரயிலடி நோக்கி நடந்தான்.

– மார்ச் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *