கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 9,773 
 

“ம்ம்மா…, குப்பேய்…!” அடித்தொண்டையிலிருந்து கிளம்பிய குரல், இரண்டு பக்கமும் அப்பார்ட்மென்ட் கட்டடங்களும், மாடி வீடுகளும் நெருக்கியடித்து நின்றிருந்த அந்த வீதியின் தொடக்கத்திலிருந்து கேட்டது.

குரலின் தொடர்ச்சியாக வீதிக்குள் திரும்பி கொண்டே, நுழைந்தது இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்ட, அடர்த்தியான பச்சை நிற குப்பை வண்டி. வண்டியின் உள்ளே இரண்டு பெரிய பிளாஸ்டிக் ட்ரம்கள். பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களில், வெயிலில் வெளுத்துப் போய் கிட்டத்தட்ட பச்சையாகவும், சிவப்பாகவும் இருந்தன.

வண்டியின் ஒரப்பகுதிகள், ட்ரம்களில் மாநகராட்சியின் பெயர், வெள்ளை பெயிண்ட்டால் ஸ்பிரே செய்யப்பட்டிருந்தது. வண்டியின் நீளமான இரும்பு கைப்பிடியின் வெள்ளி வண்ணங்கள் உதிர்ந்து போய் இருந்தது. கைப்பிடியின் இரு முனைகளிலும் கெட்டியான சாக்குப்பைகள் கட்டி தொங்கவிடப்பட்டு உப்பியிருந்தது. அதில் இரும்புக்கம்பிகள், உடைந்த மரச்சட்டங்கள், பிளாஸ்டிக் பட்டைகள் வெளியே ஆர்வமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன.

ட்ரம்களில் அதுவரை சேகரித்த குப்பைகளின் கலவை கிடக்க, அவற்றின் மேல் ஈக்களின் ரீங்காரம். வண்டியை தாண்டி நடந்த இரண்டு பெண்கள் மூக்கில் விரல்களை வைத்துக் கொண்டு, வேகமாக விலகி சென்றனர்.

வண்டியை தள்ளுபவள் கைகளில் நீல நிறத்தில், வெள்ளை புள்ளிகள் வைத்த ரப்பர் வளையல்கள். சிவப்பு நிறத்தின் மேலே, மஞ்சள் பூ தெளித்திருந்த, நைலான் சேலையின் மேலே அரைக்கை சட்டை அணிந்திருந்தாள். சட்டை பெரியதாக இருந்தது. சட்டைக்கு மேலே இடுப்பைச் சுற்றி, சிவப்பு நிற நூல் துண்டு ஒன்றை கட்டியிருந்தாள். காதுகளில் கவரிங் தோடுகள், அவற்றில் நரை முடிகள் ஒன்றிரண்டு சிக்கி, காற்றில் மெதுவாக அசைந்தது.

“ம்மா.. குப்ப..மா..!” மீண்டும் குரல் எழும்பி எதிரொலிக்க, மாடிகளிலிருந்து நைலான் கயிறுகள் வழியாக வாளிகள், கீழே மெதுவாக இறங்க ஆரம்பித்தன. ஒவ்வொரு மாடியிலிருந்தும் இறங்கிய நைலான் கயிற்றின் முனைகளில் சிறிய இரும்பு கொக்கிகள் கட்டப்பட்டு, கொக்கியின் மறுமுனையில் குப்பை வாளிகள் மாட்டப்பட்டிருந்தன.

கயிறுகளின் மறுமுனையில் கைகள், லாவகமாக இயங்கி வாளிகளை கீழே இறங்க வைத்துக் கொண்டிருந்தன. மூன்றாவது, நான்காவது மாடிகளிலிருந்து சரியாக தரைக்கு மேலே, நிலை நிறுத்தியவர்கள் தங்களுக்குள் சந்தோஷமடைய, புதிதாக பழகுபவர்களின் பதற்றம் வாளிகளின் ஆட்டத்தில் தெரிந்தது.

தரைத்தள வீடுகளிலிருந்தவர்கள், குப்பை கூடைகளுடன் வந்து ட்ரம்மில் கவிழ்த்து விட்டு போனார்கள். வண்டியை தள்ளிக் கொண்டு வந்தவள், வண்டியிலிருந்த அலுமினிய பேசினை எடுத்துக் கொண்டு, மேல் வீடுகளிலிருந்து இறங்கிய, இறங்கிக் கொண்டிருந்த வாளிகளை நோக்கி சென்றாள்.

தொங்கிய வாளிகளிலிருந்த குப்பைகளை வேகமாக பேசினில் கவிழ்த்து, நிரம்பியவுடன் வண்டிக்கு வந்து ட்ரம்களில் கொட்டினாள். காலை வெயில் வேகமாக சூடேற, நெற்றியில் வியர்வையை வழித்து விட்டு, வண்டியை முன்னே தள்ளி, தள்ளி நிறுத்தி குப்பைகளை சேகரிக்க தொடங்கினாள். அறுவடை செய்யும் நளினம் அவள் கைகளில் திகழ, கைகள் சீராக இயங்கின.

அந்த வீதியின் கடைசி வீடு வரை சென்று குப்பைகளை சேகரித்து முடித்து விட்டாள். அங்கே ஒரே ஒரு வாதாம் மரம், அகலமான இலைகளால், நிழல் பரப்பி நின்றிருக்க, மரத்தினடியில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். வண்டியை நிறுத்தி விட்டு, நிழலில் நின்று இடுப்பிலிருந்த துண்டினால் முகம், புறங்கழுத்து பகுதிகளில் வியர்வையை துடைத்தாள். நெற்றியில் நகர்ந்திருந்த ஸ்டிக்கர் பொட்டை சரி செய்து ஒட்டினாள்.

சின்ன, சின்ன பொம்மைகள், பொருட்களை வைத்து குழந்தைகள் மிகுந்த சுவராசியத்துடன் விளையாடி கொண்டிருந்தன. அவர்களை பார்த்து கொண்டு நின்றாள். பின் வண்டிக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்திருந்த பாட்டிலை எடுத்தாள். காலியாக இருந்தது. பாட்டிலை அங்கேயே வைத்து விட்டு, அருகிலிருந்த வீட்டை அடைந்து இரும்பு கேட்டின், தாழ்ப்பாளை தட்டினாள்.

கதவு திறந்து வீட்டினுள்ளிருந்து எட்டி பார்த்தவள், “என்ன வேணும்? என்றாள்.

“குடிக்க கொஞ்சம் தண்ணீ வேணும்மா!” எனக்கூற, மையமாக தலையை ஆட்டி விட்டு, உள்ளே மறைந்தாள்.

கதவு சாத்திக் கொண்டது. இரண்டு நிமிடங்கள் கழித்து கதவு திறக்க, கையில் தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் பாட்டிலுடன் வெளியே வந்து, பாட்டிலை இரும்பு கேட்டின் மேல் வழியாக கொடுத்தாள்.

வாங்கி தண்ணீரை வேகமாக குடித்து விட்டு, பாட்டிலை திருப்பி தர எத்தனிக்க, “வேணாம்! வேணாம்! ஆன்ட்டி உங்களையே வச்சுக்க சொன்னாங்க!” என்றபடியே, திரும்பி உள்ளே சென்றாள்.

“சரிம்மா!” என்றபடி, கையிலிருந்த துண்டை இடுப்பைச் சுற்றி கட்டிக்கொண்டே, தன் வண்டிக்கு சென்று அங்கிருந்த காலி தண்ணீர் பாட்டிலை கோணி சாக்கினுள் போட்டாள், அதனிடத்தில் இந்த பாட்டிலை வைத்தாள். வண்டியை பின்னால் இழுத்து, அரை வட்டம் போட்டு திருப்பி தள்ளிச் சென்றாள். அந்த கோணி சாக்கினுள் நிறைய காலி பாட்டில்கள் இருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *