காவல் நிலையம்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 5,809 
 

“ஐயா ! ஒரு ஐநூறு வேணும் ! ” பண்ணையார் நாச்சியப்பனுக்குப் பக்கத்தில் வந்து பணிவாய் நின்று தலையைச் சொரிந்தான் பரமசிவம். வயசு நாற்பது.

சாய்மான நாற்காலியில் சவகாசமாக கால்மேல் கால் போட்டுக்கொண்டிருந்தவர் “ஏன்டா ?” – ரொம்ப உரிமையாய்க் கேட்டார்.

தன் தகுதிக்குக் கீழ் உள்ளவர்களையெல்லாம் நாச்சியப்பன் இப்படித்தான் “டா” போட்டு பேசுவது வழக்கம். இது கிராமத்துப் பழக்கம்.

“போலீஸ் ஸ்டேசனுக்கு ஐயா !”

“எதுக்கு?”

“நேத்திக்கு என் பசுமாடு பக்கத்து வீட்டுக்காரன் வயல்ல மேய்ஞ்சிடுச்சு. அவன் மாட்டை வாடியில கட்டாமல் வீட்டுல கட்டிக்கிட்டு விடமுடியாதுன்றான்.”

“மேஞ்ச ஆடுமாடுகளை வாடியில கட்டுறதுதான் சரி. அவன் ஏன் இப்படி தகராறு பண்றான்.?” பரமசிவத்தை பண்ணையார் ஏறிட்டார்.

“வெள்ளாமை ரொம்ப சேதமாகிடுச்சாம். நஷ்ட ஈடு வேணுமாம். மாடு நேத்தியிலேர்ந்து ரெண்டு நாளாய் அவன் வீட்டு கட்டுத் தறியில கொலைப் பட்டினியாய் இருந்து கத்த… மனசு பொறுக்காம என் வீட்டுக்காரி போய், விடு ஏன் இப்படி அநியாயம் பண்றே ? கேட்டதுக்கு அவளை கைநீட்டி அடிச்சிருக்கான்.”

“பொம்பளைய ஆம்பளை அடிக்கிறது தப்பாச்சேடா. அப்படியா செய்ஞ்சான் ?” நாச்சியப்பன் ஆச்சரியப்பட்டு, ஆயாசப்பட்டார்.

“ஆமாம்ய்யா. பக்கத்துப் பக்கத்து வீடு என்கிறதுனால அவனுக்கும் எனக்கும் சின்னச்சின்னதா சண்டை. அதை மனசுல வைச்சு இப்படி அடாவடி பண்றான்.” சொன்னான்.

“ம்ம்…” என்று தரையைப் பார்த்து யோசனையை ஓட்டிய நாச்சியப்பன். “ஸ்டேசன் போனா நியாயம் கிடைக்காது பரமு. அங்கே….புகார் கொடுக்கிறவங்கிட்டேயும் குற்றவாளிகிட்டேயும் காசு வாங்குறதோட நிறுத்தாம… கேஸ் போடப் போறேன் அது இதுன்னு மெரட்டி வேற பணத்தைக் கறந்து…இங்கே ஏன் வந்தோம்ன்னு நினைக்கிறாப்போல ஆட்களை நோகடிப்பாளர்களேடா.” நடப்பைச் சொன்னார்.

“ஆமாங்கைய்யா! ஆனாலும் போலீசுகிட்டே போனாத்தான் பக்கத்து வீட்டுக்காரன் பயப்படுவான் போல. நம்ம நியாயமே சொன்னாலும் எவனும் கேட்க மாட்டான். மனுசன்கள் அதிகாரம் அடாவடிக்குத்தானே பயப்படுறானுங்க….! மேலும் போலீசுன்னாதானே அடிப்பான் உதைப்பான்., கேஸ் போடுவான் சிறையில தள்ளுவான்னு மக்கள் நெஞ்சுல பயம் வருது.??” இவனும் உண்மையைச் சொன்னான்.

“சரியாய்ச் சொன்னே. இரு. உள்ளே போய் பணத்தை எடுத்து வர்றேன்.” – என்று எழுந்த நாச்சியப்பன் வீட்டிற்குள் சென்று திரும்பி வந்து ஒரு ஐநூறு ரூபாய்த்தாளை பரமசிவத்திடம் நீட்டி “பரமு! கையில காசு இருக்கிறதைக் காட்டிக்காதே. ஆள் நடப்பு தெரிஞ்சு சரியாய் வந்திருக்கான்னு இன்னும் கொடுன்னு அதிகம் புடுங்குவாங்க. ஆளானப்பட்ட என்கிட்டேயே…. அப்படி நிறைய புடுங்கி இருக்காங்க. அது இல்லாம இங்கே பொங்கல் தீபாவளி., ஆயுத பூசைக்கெல்லாம் வந்து இனாம் வாங்கிப் போவாங்க. ஆனாலும் புகார்ன்னு போனா சலுகை கெடையாது.” கொடுத்தார்.

“சரிகைய்யா!” என்று வாங்கிக் கொண்ட பரமசிவம், “பணத்தை ஒருவாரத்துல திருப்பிடுறேன் !” சொல்லி தன் குடிசை வீட்டிற்குச் சென்றான். கொடியில் கிடக்கும் வேட்டி சட்டையில் கொஞ்சம் சுமாராக இருப்பதை எடுத்துப் உடுத்திக் கொண்டு, “வள்ளி ! வர்றேன்” சொல்லி வெளியே வந்தான். வாசலில் இருந்த பழைய சைக்கிளை எடுத்து மிதித்தான்.

வழியில்…செட்டியார் கடையில் பணத்தை நீட்டி ஐம்பது, இருபது, பத்துமாகக் கேட்டு சில்லரை மாற்றி மடியில் வைத்துக்கொண்டு சைக்கிளை மிதித்தான்.

இடையில் இருந்த அம்மன் கோயிலில் சைக்கிளை விட்டு இறங்கி…”மாயி ! மகமாயி ! கையில இருக்கிற பணத்துல எனக்குக் காரியம் நடக்கனும், நியாயம் பொறக்கனும். அதுக்கு
நீதான் அருள் புரியனும் !” வேண்டி… மானசீகமாக நெற்றியில் வெறுங்கையால் விபூதி இட்டுக் கொண்டு சைக்கிளைப் போலீஸ் ஸ்டேசன் நோக்கி விட்டான்.

சின்ன கடை, கடைதெரு உள்ள குட்டி நகரத்தின் நடுவில் ரத்தக் கலர் நிறக் கட்டிடம் கண்ணில் பட்டதுமே பரமசிவனுக்குள் பதட்டம் எடுத்தது. கைகால்கள் வேர்த்தது. இருந்தாலும் என்ன செய்ய ? சைக்கிளை…. எதிரே உள்ள சுற்றுச் சுவர் மறைப்பில் பயத்துடன் நிறுத்தி பவ்வியமாய் கட்டிட படியேறினான்.

வாசலில் துப்பாக்கியைப் பிடித்தப்படி காவலுக்கு நின்ற போலீசிடம், “ஐயா உள்ளாற இருக்காங்களா ?” என்று மெல்ல கேட்டு எஸ்.ஐ இருப்பை விசாரித்தான்.

“இருக்காரு.. போங்க.”

பரமசிவம் உள்ளே சென்றான். ஐந்தாறு போலீஸ்காரர்கள் அங்கங்கு உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிறையில் இருவர் இருட்டில் ஜட்டியோடு நின்றார்கள். எஸ்.ஐ அறைவாசலில் திரை தொங்கி ஆள் இருப்பதை மறைத்தது.

நாற்காலியில் அமர்ந்து மேசையில் எதையோ எழுத்திக் கொண்டிருந்த ஏட்டு ஏகாம்பரம்….கலவரமாய் நிற்கும் பரமசிவத்தைப் பார்த்து, “சார் ! என்ன சேதி ?” கேட்டார்.

“அஅஅ அய்யாவைப் பார்க்கனும்.”

“ஏன்????”

“ஒரு புகார் கொடுக்கனும்.”

“ஒரு நிமிசம் !” எழுந்து எஸ்.ஐ அறைக்குள் நுழைந்து நிமிசத்தில் வெளியே வந்த அவர், “உள்ளே போங்க.” சொல்லி அமர்ந்து வேலையைத் தொடர்ந்தார்.

தன் நாற்பது வயது வாழ்நாளில் இதுவரை ஓரிரு முறையே ஸ்டேசன் பக்கம் அதுவும் கிராம மக்கள் கூட்டத்தோடு கூட்டமாய் வந்து தலை காட்டிய பரமசிவத்திற்கு தற்போது தனித்து எஸ்.ஐ அறைக்குள் நுழைவதற்குப் பயம் தடுமாற்றமாக இருந்தது.

மனதைத் திடப்படுத்திக்கொண்டு திரையை விலக்கி உள்ளே நுழைய…..ஐம்பது வயது எஸ்.ஐ கணேஷ் ஒரு இளைஞனைப் போல் கம்பீரமாக இருக்கையில் அமர்ந்திருந்தார். எதிரே வரிசையாய் நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகள்.

ஆள் தலையைக் கண்டதுமே, “உட்காருங்க…” நாற்காலியைக் காட்டினார்.

கிராமத்து வேட்டி சட்டையில் சென்ற பரமசிவத்திற்கு ஆச்சரியம். இதுவரை இரண்டு மூன்று தடவைகள் விசாரணைக்காக வந்த வகையில் எதிர் நாற்காலியில் பண்ணையார் மாதிரி பெரிய ஆட்களுக்குத்தான் உட்கார அனுமதி. மற்றப்படி பேண்ட் போட்டவர்கள். அதிலும் எஸ்.ஐக்கு நெருக்கம் வேண்டியப்பட்டவர்கள் தான் உட்காருவார்கள். மற்றவர்களெல்லாம் எவ்வளவு நேரமானாலும் நிறுத்திதான் விசாரிப்பு, விசாரணை.

மரியாதை புதிதாய் இருப்பதைப் பார்த்து ஒருகணம் உட்காரலாமா கூடாதா என்று தடுமாறி… அமர்ந்தான்.

“இப்போ சொல்லுங்க ?”கணேஷ் அவனை ஏறிட்டார்.

“சார் ! எனக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் பிரச்சனை…” என்று ஆரம்பித்து அவன் தன் மனைவியைக் கை நீட்டியதுவரை எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்தான் பரமசிவம்.
எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட கணேஷ், “உங்களுக்குப் படிக்கத் தெரியுமா ?” கேட்டார்.

“தெரியும் சார். பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன்.”

“நீங்க ஏட்டுக்கிட்ட போய் ஒரு தாள் வாங்கி நீங்க சொன்னதையெல்லாம் அப்படியே ஒன்னுவிடாம எழுதிக் கொடுங்க. நான் உடனே ஆக்ஷன் எடுக்கிறேன்.” என்றார்.

இது எல்லா ஸ்டேசன்களிலும் நடக்கும் வழக்கமான நடைமுறை. அங்கே சென்றால் அவர் தாள் தரமாட்டார். உடன் ஒரு குயர் வெள்ளைத் தாளும் ஐந்து பேனாக்களும் வாங்கி வரச் சொல்வார். புகார் கொடுக்க வருகிறவர்களிடமெல்லாம் இப்படி வாங்கி அவர்கள் எழுதி அரசாங்கத்திற்கு மிச்சம் பிடிக்கிறார்களோ…இல்லை வீட்டிற்கு எடுத்துச் செல்வார்களோ தெரியாது. விதியை நினைத்து வேதனைப் பட்ட பரமசிவம் வெளியே வந்து ஏட்டு மேசைக்கு அருகில் நின்றார்.

“உட்காருங்க.” எழுதிக் கொண்டிருந்த ஏகாம்பரம் அவருக்கு தன் முன்னாலுள்ள பெஞ்சைக் காட்டினார்

பரமசிவம் இங்கேயும் புரியாமல் அமர்ந்தார்.

ஏட்டு அதிசயமாய் ஒரு வெள்ளைத் தாளையும் பேனாவையும் எடுத்து நீட்டி, “புகாரை எழுதுங்க.” சொன்னார்.

எப்படி எழுவதென்று தெரியாமல் பரமசிவம் திருதிருவென்று விழித்தான்.

“உங்களுக்குப் பயம், யோசனை வேணாம். வணக்கம் ஐயான்னு ஆரம்பிச்சு… நடந்தை அப்படியே எழுதி… கையெழுத்துப் போட்டுக் கொடுங்க.” என்றார் ஏகாம்பரம்.

பரமசிவத்திற்கு முதலில் எழுத்து வரவில்லை. அடுத்து…அதிகாரி மேசை முன் சரிசமமாய் அமர்ந்து எழுத கூச்சம் தயக்கம். அப்புறம் ஒருவாறு சமாளித்து கடகடவென்று எழுதி நீட்டினான்.
வாங்கிப் படித்த ஏட்டு மேலதிகரியிடம் கொடுத்து அவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்த பரமசிவத்திற்கு ஏமாற்றம். ஏகாம்பரமே களத்தில் இறங்கி, “சார். நீங்க கொஞ்சம் உட்காருங்க. நான் போலீசை அனுப்பி இந்த ஆளை அழைச்சி வரச் செய்யறேன். விசாரிக்கலாம்.” என்றார்.

பரமசிவம் எழுந்து நகர்ந்தான்.

“108 !” ஏகாம்பரம் அழைத்தார்.

ஒரு போலீஸ் வந்து அவருக்கு சலியூட் அடித்து, “சொல்லுங்க சார்” நின்றான்.

“சார் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு கோவிந்தனை எங்கே இருந்தாலும் உடன் அழைச்சு வா.” உத்தரவிட்டார்.

அவன் வாசலுக்கு வந்து புல்;லட் எடுத்து பரமசிவத்தைக் கவனிக்காமல் கிளம்பினான். பரமசிவத்திற்கு இங்கேயும் ஆச்சரியம்.

புகார் கொடுக்க வந்து இது போல எதிரியை அழைத்துவர போலீஸ் கிளம்பினால் ஆள் தயாராய்க் கிளம்பி புகார் கொடுத்தவர் முகத்தைப் பார்ப்பார். ஆள் நோக்கம் தெரிந்து புகார் கொடுத்தவர் நூறு இருநூறு அவர் கையில் வைத்தால்தான் கிளம்புவார். சொன்ன ஆளையும் சரியாக அழைத்து வருவார். கவனிக்காமல் விட்டால்…..அவர் அங்கே சென்று எதிரியிடம் காசு வாங்கிக் கொண்டு வந்து ஆள் இல்லே சொல்வார்.

‘ஏன் இப்படி கவனிக்காமல் ஆள் போகிறார்;……?’ பரமசிவத்திற்கு மூளை குழம்பியது.

‘ஒருவேளை மொத்தமா வாங்குவாங்களோ ?!’ சமாதானமானான்.

அரைமணி நேரத்தில்…..அந்த போலீஸ் கோவிந்தனைப் புல்லட்டின் பின்னால் கையோடு அழைத்து வந்து ஏட்டுவிடம் ஒப்படைத்து ஆச்சரியப்படுத்தினான்.

வெளியே நின்ற பரமசிவம் உள்ளுக்குள் வந்தான்.

ஏட்டு கோவிந்தனை உட்காரச் சொல்லவில்லை.

“போய் ஐயாவைப் பாரு !” கறாராய்ச் சொல்லி உள்ளே அனுப்பினார்.

அவன் அறைக்குள் நரியடிபுலியடியாக நுழைந்தான். அடுத்த விநாடி…

“பக்கத்து வீட்டுக்கும் உனக்கும் என்னய்யா தகராறு. ?” – எதிரியை எடுத்ததும் வீழ்த்தும் உக்தியாய் கணேஷ் அதிகார அதட்டலுடன் சத்தமாக விசாரணையை ஆரம்பித்தார்.
அதிலேயே பாதி மிரண்டு போன.. கோவிந்தன்…..

தன் வயலில் மேய்ந்த மாட்டை வீட்டில் கட்டிப் போட்டு நஷ்டஈடு கேட்டதைத் தட்டுத் தடுமாறி உதறலுடன் சொன்னான்.

“மாடு மேய்ஞ்சா வாடியில கட்டாம என்ன அராஜகம்.? அவர் பொண்டாட்டி வள்ளியை நீ அடிச்சியா ?” – இது அடுத்த அதட்டல்.

“இஇஇ…..இல்லைங்கைய்யா…”

“உதை வேணாம்ன்னா ஒழுங்கா சொல்லு ?” மிரட்டல்.

“அ….ஆமாங்கைய்யா….அந்த பொம்பளை கன்னாபின்னான்னு பேசின ஆத்திரத்துல….”. கோவிந்தன் சொல்லி வாய் மூடவில்லை…..

“ஆத்திரம் வந்தா பொம்பளையை… அதுவும் அடுத்தவன் பொண்டாட்டியைக் கை நீட்டி அடிக்கிறதா? 108 ! இவனைத் தூக்கிஉள்ளாற உட்கார வை.” அங்கிருந்தே கத்தினார்.

“ஐயா…ஆஆஆ…” கோவிந்தன் வேர்த்து வெடவெடத்தான்.

அடுத்த விநாடி 108 உள்ளே சென்றான். ஆளை அழைத்து வந்து சிறைக்கதவைத் திறந்து உள்ளே விட்டு அடைத்தான்.

கோவிந்தன் உள்ளிருந்தபடியே பரமசிவத்தைப் பாவமாகப் பார்த்தான். அடுத்து எஸ்.ஐ பரமசிவத்தை அழைத்தார்.

‘ஆள் கோபமாய் இருக்கிறார் !’ என்கிற நினைப்பே இவனுக்குள் பயத்தை ஏற்படுத்தியது. மெல்ல உள்ளே சென்றான்.

இந்த முறை எஸ்.ஐ இவனை உட்காரச் சொல்லவில்லை.

“உங்க மனைவி கோவிந்தனைத் திட்டினாங்களா ?” காட்டடமாகக் கேட்டார்.

“தெ…தெரியலை சார்.”

“பொய்!. திட்டியதாலதான் அவன் கை நீட்டியிருக்கான். விசாரிக்கனும். 109!” . கூவினார்.

“எஸ் சார்.” அவன் உடன் வந்து நின்றான்.

“ஜீப்பை எடுத்துப்போய் இவர் மனைவியை அழைச்சு வாங்க.” உத்தரவிட்டார். அவன் வெளியேற…. “நீயும் கொஞ்சம் வெளியே இரு. நான் வெளியே போய் வந்து அவுங்களை விசாரிக்கிறேன்!” தலையில் தொப்பியை மாட்டிக்கொண்டு வெளியேறினார்.

வழி இல்லாமல் அவருடன் அறையை விட்டு வெளியே வந்த பரமசிவம்…. எஸ்.ஐ புல்லட் எடுத்துக் கொண்டு புறப்பட்டதும்….

“சார் எங்கே போறார் ?” ஏட்டுவிடம் கேட்டான்.

“ரவுண்ட்ஸ்.”

“எப்போ திரும்புவார் ?”

“தெரியாது. ஏன் ?”

“இல்லே….சார் வர லேட்டானா…என் மனைவி வந்து காத்திருப்பாங்க…..”கிலேசத்துடன் இழுத்தான்.

“அப்படியெல்லாம் பார்த்தா இங்கே வந்திருக்கக்கூடாது. போய் உட்காருங்க. இராத்திரி பத்து மணியானாலும் ஐயாதான் வந்து விசாரிப்பார். போங்க.” ஏட்டு முகத்தில் கடுப்கை வரவழைத்து கை காட்டினார்.

‘ஸ்டேசனுக்குப் பொம்பளையை வரவழைத்துவிட்டு ஆள் வெளியேறுகிறார்…. ராத்திரியானலும் வந்து விசாரிப்பார் என்றால்……..இது திட்டமிட்ட சதி. உள்ளே வில்லங்கத்திற்கு வழி. நாட்டுநடப்பு அப்படி ! வேலியே பயிரை மேயும் சங்கதி !’ பரமசிவத்திற்கு நினைவு வர வயிற்றில் அமிலம் சுரந்தது.

‘இங்கே வந்தது தப்பு !’ நொந்துக் கொண்டு மூலையில் வந்து உட்கார்ந்தான்.

அரைமணி நேரத்தில் ஜீப் திரும்பியது. வள்ளி தைரியமாய் இறங்கினாள்.

அவள் தலைசீவி, கொஞ்சமாய்ப் பவுடர் பூசி…. சிறிது திருத்தமாக வந்ததைப் பார்த்ததும் பரசிவத்திற்குள் வயிறு பிசைந்தது. இவள் ஏற்கனவே கொஞ்சம் அழகு. விசயம் தெரியாமல் வேறு இப்படி பளிச்சென்று வருகிறாள். என்று நினைக்க பகீரென்றது.

உள்ளே வந்த அவளை ஏட்டு, “ஐயா வருவாரு. உட்காருங்க” பரமசிவம் இருந்த இடத்தில் கை காட்டினார். அவளும் வந்து கணவன் அருகில் அமர்ந்தாள்.

உள்ளே இருவரும் பேசவில்லை.

வள்ளி வந்து இரண்டு மணி நேரம் ஆகியும் எஸ்.ஐ திரும்பவில்லை. பொழுது போகப் போக… பரமசிவத்திற்கு வயிற்றைக் கலக்கியது. வள்ளிக்கும் தர்மசங்கடமாய் இருந்தது.

“என்னய்யா….? “என்று கணவன் முகத்தைக் கலவரமாகப் பார்த்தாள்.

தனக்குள் இருக்கும் பயத்தை வெளிக்காட்டினால்……வள்ளி அரண்டுவிடுவாள் நினைத்த பரமசிவம், “பயப்படாதே! ஐயா வந்துடுவாரு !” சொன்னான்.

எஸ்.ஐ ஐந்து நிமிடத்தில் வந்தார். அறையில் போய் உட்கார்ந்ததுமே….”அந்தம்மாவை உள்ளே அனுப்பு.” உத்தரவிட்டார்.

வள்ளி பீதியுடன் அறைக்குள் நுழைந்தாள்.

“நீ கோவிந்தனைப் பேசினீயாம்மா…? ” கணேஷ் அவள் முகத்தை விரைப்பாய் ஏறிட்டார்.

“ஆமாம்சார். மாடு கத்தின வயிற்றெரிச்சல் தாங்காம கத்தினேன். அந்த ஆளு ஓடிவந்து அடிச்சார்.” சொன்னாள்.

அடுத்து கணேஷ் மேசை மேல் இருந்த அழைப்பு மணி அழுத்தினார்.

ஏகாம்பரம் உள்ளே ஓடினார்.

“ஆம்பளைங்க ரெண்டு பேரையும் இங்க அனுப்புங்க.”

அவர் வெளியே வந்தார். 109 சிறைக்கதவைத் திறந்து கோவிந்தனை வெளியே விட்டு பூட்டினான்.

ஏட்டு இருவரையும் உள்ளே அனுப்பினார்.

மூவரையும் ஒரு கணம் உற்றுப் பார்த்த எஸ்.ஐ, “.நான் கிராமத்துக்குப் போய் உங்க சண்டையை விசாரிச்சேன். அப்படியே வயலைப் பார்த்து சேதாரம் கணக்குப் பண்ணி வந்தேன். பரமசிவம் ! வயல் வெள்ளாமை சேதாரத்துக்காக நீங்க கோவிந்தனுக்கு ஆயிரம் நஷ்டஈடு கொடுங்க. கோவிந்தன் ! என்னதான் ஆத்திரமாய் இருந்தாலும் புருசனே பொண்டாட்டியை அடிக்கிறது தப்பு, சட்டப்படி குற்றம். நீங்க மூணாவது மனுசன் அந்த தவறை செய்திருக்கீங்க. தண்டிக்கனும். வேணாம். அதுக்குப் பதிலாய் பரசிவம் கொடுக்க வேண்டிய பணத்தை தள்ளுபடி செய்துட்டு ஊருக்குப் போய் மாட்டை உடனே அவருக்கு ஓட்டிவிடுங்க. இது சரியா, சம்மதா ?” கேட்டு மூவர் முகத்தையும் பார்த்தார்.

அவர்கள் முகத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்த திருப்தி. தலையசைத்தார்கள்.

“சரி. இனி இதுமாதிரி தப்பு சுடாது. ஏட்டுக்கிட்ட சொல்லிட்டுப் போங்க.” விடைகொடுத்தார்.

‘ஏட்டுக்கிட்ட சொல்லிட்டுப் போங்க என்று சொன்னாலே கவனித்து விட்டுச் செல்லுங்கள் என்று அர்த்தம். காவல் நிலைய பாலபாடம்.!’ – பரமசிவம் கோவிந்தன் இருவருக்குமே இது புரிந்தது.

அறையை விட்டு வெளியே வந்து அவர்கள் ஏகாம்பரத்திடம், “வர்றோம் சார்.” சொன்னார்கள்.

அவரும் தலையாட்ட…. பரமசிவமும் கோவிந்தனும் மடியிலிருந்த பணத்தை எடுத்தார்கள்.

“அதெல்லாம் வேணாம். பழசு, அசிங்கம். இப்போ நாங்க புதுசு. சுத்தம்! நீங்க சந்தோசமாய் போய் வாங்க.” அனுப்பினார்.

வெளியே வந்த அவர்களுக்கு…. நம்பவே முடியவில்லை. பிரமிப்பு,மலைப்பாய் நடந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *