கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,053 
 

‘என்னதான் செய்றது?’

சமுத்திரம் திசை தொலைத்தவனாக திக்குமுக்காடிப் போய்க்கிடக்கிறான். எந்த வேலையும் பார்க்காமல் உடம்பே துருப்பிடித்த மாதிரி இறுகிக் கிடக்கிறது. ஏதாச்சும் செய்தாகணுமே என்று உந்துகிற லௌகீக வாழ்க்கை.

பஸ் வந்து திரும்புகிற ஊர் மைதானம். வரிசையாக வேப்ப மரங்கள். இடையிடையே கட்சிக் கொடிக் கம்பங்களின் சிமென்ட்டுத் திண்ணைகள். நிழல் முழுக்க ஆட்கள். பஸ் ஏற வந்தவர்கள்… பஸ் பார்க்க வந்தவர்கள்… எந்த வேலையும், ஜோலியும் இல்லா மல் ஆடு புலி ஆட்டம் ஆடி, பொழுதைக் கழிப்பவர்கள்…

சமுத்திரமும் திண்ணையில் உட் கார்ந்திருக்கிறான். மடித்துக் கட்டிய கைலி. மூன்று பட்டன் திறந்து கிடக்கிற கட்டம் போட்ட சட்டை. தலையில் வட்டக் கட்டாகத் துண்டு.

பையிலிருந்து புகையிலையை எடுக்கிறான். உள்ளங் கையில் தட்டி, விரல்களால் தேய்த்து, உருட்டித் திரட்டி, அடி உதட்டை இழுத்து, அதற்குள் அமுக்கி வைத்துவிட்டு, எச்சிலைத் துப்புகிறான்.

‘அடுத்த பாக்கெட் வாங்கத் துட்டு இல்லே’ என்ற துயரார்ந்த பெருமூச்சுடன் சட்டைப் பையைத் துழாவுகிறான். வெறுமையைத் தொடுகிற விரல்கள். மனசுக்குள் சுடுகிறது.

‘‘ஏவாரத்துக்குப் போகாம எம்புட்டு நாளைக்குதான் சும்மாவே இருக்குறது? சும்மாவே இருந்தா சோத்துக்கு என்ன செய்ய? செலவுக்கு என்ன செய்ய? வடிவு தீப்பெட்டி ஆபீஸ் போறா. ஒரு மனுசி சம்பளத்துல உருளுமா குடும்ப வண்டி? உள்ளூர் வேலைக்குப் போறதில்லேங்குற வைராக்கியத்தைக் காப்பாத்திர முடியுமா? கைகழுவி… மானத் தையும் தொலைக் கணுமா?

சமுத்திரத்துக்குள் நினைவுளைச்சல். மனசை நச்சரிக்கிற எண்ணங்கள். ‘என்ன செய்ய… என்ன செய்ய?’

ராமசுப்பு நாயக்கர் புகை நிறத்துக் கதர்த்துண்டுடன் கிட்ட வருகிறார். ‘‘என்னப்பா சமுத்திரம், ஏவாரத்துக்குப் போகலியா?’’

‘‘போகலை. கொய்யா கெடைக்கலே!’’

‘போகலை சாமி’ என்று சொல்லாத தைக் கவனிக்கிற நாயக்கர். ‘எளிய சாதிப் பயலுகளுக்கெல்லாம் இப்பப் பணிவே கெடையாது நெஞ்சுல. வுட்டா, பொண்ணே கேட்பாங்க போல!’

உள்ளோடுகிற நஞ்செண்ணங்களுடன் ‘உர்ர்ர்’ரென்று உறுத்துப் பார்க்கிற நாயக்கர். லேசாக மட்டியைக் கடித்துக் கொண்டு, மர்மமான நினைவுகளுடன் தலையாட்டுகிற தினுசு.

‘‘இறவைப் புஞ்சை உழுது கெடக்கு. பாத்தி கட்ட வாரீயா?’’

திடுக்கிடலாக உணர்கிற சமுத்திரம். ஆச்சர்யப் பார்வை யுடன் நிமிர்ந்தான். நாலு வருஷமாகக் கேட்காத கேள்வி. சமுத்திரம் உள்ளூர் மம்பட்டி வேலைக்கு வரமாட்டான் என்பது ஊரறிந்த செய்தி. ஏன் வரமாட்டான் என்பது வும் ஊரறிந்த செய்தி தான். சின்னப் பிள்ளைக்குக்கூடத் தெரியும்.

அப்படியிருந்தும் கூப்பிடுகிறார். எகத்தாளம்! ‘எளைச்சு எலும்பான மாடு, கசாப்புக் கடைக்கு வருமா?’ என்று நினைக்கிற மமதை. வந்தால், ‘சாதி, சாதி’ என்று அறுத்துக் கூறு கட்டி வித்துவிட நினைப்பு.

‘’என்னப்பா சமுத்திரம், வாரீயா? சம்பளம் எம்பது ரூவா!’’

‘’நா வரல்லே!’’

‘’ஏவாரத்துக்குப் போகலேல்ல?’’

சமுத்திரத்துக்குள் வருகிற ஆங்காரம். ஊற்றெடுக்கிற ஆத்திரம். ‘திண்டுக்கு முண்டா வார்த்தையை எறிஞ்சுருவமா?’ என்று வருகிற வெறி. பல்லைக் கடித்துக்கொண்டு, பேசப் பிடிக்காத வனைப் போல, வேறு பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டான். வெறுப்பின் சுழிப்பில் முகம்.

‘இந்தச் சாதிப் பயகளுக்கு இப்ப இப்ப ரொம்பத் திமிர்தான். பணிஞ்சு பேசுற பழைய ஆளுககிட்டே இருந்த குணத்தை இப்ப எவன்கிட்டயும் பார்க்கமுடியலே!’ & சத்தமாகவே முணுமுணுத்துக்கொண்டு நகர்கிற அவர். அத்துமீறலான முணுமுணுப்பு. வாய்ச் சண்டைக்கு வழிபார்க்கிற அதார்ட்டியம்.

‘’ஒரு ஆட்டை வெட்டுதேன்!’’ & ஆடுபுலி ஆட்டத்திலிருந்து ஒரு வெற்றிக் கூவல். வெட்டுப்பட்டுக் கிடக்கிற சமுத்திரத்தின் சுயமரியாதை. வலியில் துடிக்கிற உள்மனசு.

பரம்பரை பரம்பரையா இந்த ஊர்தான். இவன் பாட்டன், முப்பாட்டன் எலும்புகளெல் லாம் இந்த மண்ணுக்குள் தான். நிலமில்லாத கூலி அடிமைகளின் எலும்புகள்.

‘’ஏலேய் சமுத்திரம்‘’ என்று கூப்பிட்டால், ‘’என்ன சாமி?’’ என்று கேட்பதற்கு அப்பன் ஆத்தாள் அவனை வசக்கியிருந் தார்கள். ஊர்க்காரர்கள்… சின்னப் பையனாக இருந்தாலும், தெற்குத் தெருக் காரனை ‘’ஏலேய்’’ எனச் சொல்லலாம் என்று இவனது உள் மனசின் ஒப்புதல் தழும்பாக இறுகியிருந்தது.

பதினைந்து வயதில் களை வெட்ட கரிசல்க-£டுகளுக்குப் போனான். பதினெட்டு வயதில் முழுத்த இளவட்ட மாகி விட்டான். பாத்தி கட்ட, மண்ண டிக்க, குப்பை நிரத்த, வாய்க்கால் வரப்பு செதுக்க… என்று முழுத்த ஆம்பிளைகள் செய்கிற வேலை களுக்குப் போவான்.

பாட்டன் போலவே அப்பன். அப்பன் போலவே இவன்.

‘‘எலேய் சமுத்திரம்!’’

‘‘என்ன சாமி?’’

‘‘அந்தச் சிரட்டையை எடுத்து நீட்டுடா. காப்பியை வாங்கிக் குடி!’’

‘‘ஆட்டுஞ் சாமி..!’’

ஒப்புதலோடு பணிவோடு நடந்துகொள்வதில் அவனுக்கு எந்தச் சிரமமும் இல்லை. ‘இதுதானே வழமுறை’ என்று அடிமனசில் படிந்துபோன சிந்தனை. ‘இது இயல்புதானே’ என்று பழகிப்போன சுபாவம்.

ஒரு பஞ்சம். நாலைந்து வருஷமாக மழையில்லாமல் காய்ந்து போய், விவசாயம் உலர்ந்து போய், சமுத்திரம் மாதிரியான அன்னாடங்காய்ச்சிகள் பாடு, ‘ஆத்தாடி, அம்மாடி’ என்று காத்தாடிப் போய்… வேரறுந்த கொடி போலாகி…

வேறு வழியில்லாமல் கேரளா பக்கம் பஞ்சம் பிழைக்கப் போய், அந்த மனுச மக்களோடு பழகப் பழக… ‘சகா, சகா’ என்று தோழமையோடு பழகுகிற அந்த மனுசத்துவப் பண்பாடு…

வேலைத் தளத்தில் சாயா சாப்பிட உட்கார்ந்தபோது, தன்னியல்பாக சிரட்டையை எடுத்த சமுத்திரம். அதை அதிசயமாக, ஆச்சர்யமாகப் பார்த்த அவர்கள்…

‘‘நீயானு ஆளு, நானானும் ஆளு… எதுக்கு பட்சம்? நீயானு பத்து மாசம். நானானு பத்து மாசம். நாமள்ளாம் சகாக்கள்னு’’ என்று புன்சிரிப்போடு உள்மனசுக்குள் வருடிய அந்த வார்த்தைகள். மானுட மன மடிக்குள் கிடந்த மனிதனை உசுப்பிவிட்ட அந்தப் புன்சிரிப்பு. ‘நானும் மனிதன்தான்’ என்ற சுயமரியாதை உள்ளுக்குள் முளைத்த கணத்தில் விருட்சமான பிரமாண்ட அனுபவம். தன்மானப் பேருணர்வின் உள் தரிசனம்.

நாலைந்து மாதங்களான பிறகு…

மனசே இல்லாமல் ஊர் வந்தான். ஆத்தா, அய்யாவைப் பார்க்கணுமே என்ற பந்தம். கூரை வீடானாலும் சொந்த வீடு என்கிற ஈர்ப்பு.

சமுத்திரம் புது மனிதனாக வந்தான். ஆள் நிறமே மாறியிருந்தான்.

முனியசாமி மகன் சுரேஷ், அஞ்சாப்பு படிக்கிற பொடிசு. இவனை ‘‘ஏலேய் சமுத்திரம்’’ என்று கூப்பிட்டான்.

இயல்புதானே என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. ‘நீயும் பத்து மாசம், நானும் பத்து மாசம். நாமள்ளாம் தோழர்கள்தான்’ என்ற மனப் பண்பாடு.

வெகுண்டுவிட்ட சமுத்திரத்தின் கொந்தளிப்பு…

‘‘என்னடா சுரேஷ்?’’

சுரேஷ§க்கு முகம் கறுத்துவிட்டது. அழுதுகொண்டே போனான்.

கொஞ்ச நேரத்தில் ஆத்திரமும் ஆங்காரமுமாக வந்த முனியசாமி. சாமி வந்தவரைப் போல ஆட்டம்.

‘‘ஏம்புள்ளைய ‘டா’ போட்டுப் பேசுனியாமே? எம் புட்டுத் திமிர் இருக்கணும்டா ஒனக்கு?’’

சமுத்திரம் சர்வ சாதாரணமாகச் சிரித்துக்கொண்டே, ‘ஆமண்ணாச்சி!’ என்கவும், வெல வெலத்துப்போன முனியசாமி…

அதன்பின், ஊரே திரண்டு வந்து வாசலில் வந்து முட்டியது. மோதியது. மூர்க்கமான கூப்பாடுகள். காட்டுக் கூச்சல். ‘‘அடிடா… பிடிடா… கட்டி வைடா!’’ என்று ஒரே சத்தக்காடு!

இந்தக் கூட்டு மூர்க்கமே, புழுவாகக் கிடந்த தெற்குத் தெருவை சற்று நிமிர வைத்தது. சற்றே எகிற வைத்தது. தள்ளுமுள்ளு. வாய்ப் பேச்சு. சூடான வார்த்தையாடல். ‘ஆய்… பூய்’ என்று ஒரே கூவல்காடு. சண்டைக்காடு.

ஊர்ப் பஞ்சாயத்து கூடியது. ஊர் முழுக்க அனல் பறந்தது. மனசுகளின் வெக்கை, சீற்றமான சொற்களாகச் சுட்டது.

பணிந்தே புழுவெனக் கிடந்த தெற்குத் தெருவின் எகிறல், எல்லோருக் குள்ளும் புளியைக் கரைத்தது. உள் பயத்தைக் காட்டாமல் கொக்கரித்த ஊர்.

‘‘வவுத்துப் பாட்டுக்குக் கூலி வேலைக்கு எங்க காடுகரைகளுக்குத்தான் வரணும். ஆடு குட்டிகளுக்கு புல்லு புளுச்சி வேணும்னா, எங்க நிலத்துக்குத்தான் வரணும். அதையெல் லாம் நெனைச்சுப் பாத்து வார்த்தையைப் பேசு!’’

முன்னப் பின்னப் பார்த்தறியாத ஆவே சத்தில் சமுத்திரம். கைகளை நீட்டி ரௌத்ரமாக முழங்கிய கால மாற்றம்.

‘‘சோத்தைத் திங்குற வாயால, இப்ப சத்தியம் பண்ணுதேன். ஒடம் புலே உசுர் ஒட்டி இருக்குற வரைக்கும் உள்ளூர் வேலைக்கு நா வரமாட்டேன். உங்க புஞ்சைகளை நம்பி நா இருக்கமாட்டேன். போதுமா? ஒங்க மண்ணுல வேர்வை சிந்தி மானங்கெட்டு சீரழியுறதை விட, அதே வேர்வையை வேற எங்கயாச்சும் சிந்தி, சூடு சுரணை யுள்ள மனுசனா இருந்துக்கிடுவேன்..!’’

வீர முழக்கம் செய்தானா, சாட்டை யால் சுழற்றி விளாசினானா? எல்லாம்தான்! ஊர் பார்த்தறியாத யுகப் பிரளயமாக தகதகத்து நின்றான், சமுத்திரம்.

மறுநாளே, ஒரு சைக்கிள் வாங்கினான். அகலக் கேரியர் மாட்டினான். கேரியரின் குறுக்காக ஒரு பலகையை போல்ட் போட்டுப் பொருத்தினான். பச்சை நிறப் பெயின்ட் அடித்த மரப்பெட்டி, தராசு, படிகள் வாங்கினான்.

கலிங்கப்பட்டியில் ஒரு சிவப்புத் துண்டு சம்சாரி, கொய்யாத் தோப்பு வைத்திருந்தார். இவனுக்குக் கொய்யாப் பழம் தொடர்ந்து தருவதாகச் சொன்னார். தரவும் செய்தார்.

பெட்டி நிறைய கொய் யாப் பழம் இருக்கும். பச்சை நிறத்துக் கொய்யா இலைகள் போட்டு மூடியிருக்கும். அப்பவும் பழத்தின் வாசம் ஏழு ஊருக்குப் பரவி, நாசி யைத் துளைக்கும்.

சைக்கிளை ஊருக் குள் உருட்டுவதற்கே தனித்திறமை வேண்டும். பாரமுள்ள மரப்பெட்டி யைச் சுற்றி வலது கை. ஹாண்டில்பாரில் இடது கை. சைக்கிள் பாரத்தை நெஞ்சில் சாய்த்துக்கொண்டே உருட்டணும். உள்ளங்கை எல்லாம் ரத்தம் கன்றிப் போகும். குறுக்கு எலும்பெல்லாம் வலிக்கும். புஜங்களும், தொடைச் சதையும் ரணமெடுக்கும். தாங்க முடியாத வலி! பத்துப் பதினைந்து மைல் சைக்கிள் மிதித்துச் சாகணும்.

‘‘கொய்யா… கொய்யா… சீனிக் கொய்யா!’’ என்று அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் கத்துவான். பாண்டியன் மில் சங்கு மாதிரி குரல். ஊரே திரும்பிப் பார்க்கும்.

‘‘அண்ணாச்சி… கொய்யா என்ன வெல?’’ என்று வெளியூர் உயர் சாதிப் பையன்கள் கேட்பார்கள். மனசுக்குள் கொய்யாக் கனி மணக்கும். இனிக்கும். பழவாசப் பரவசம். ‘இதுக்குத்தானே இம்புட்டுப் பாடு’ என்று மனசு கிடந்து கும்மாளம் போடும். மனுச மரியாதையைப் பெற்றுவிட்ட உள்மனப் பூரிப்பு.

‘‘ஏலேய் சமுத் திரம்’’ என்ற சொல் இல்லை. இவனை சாதியாக மட்டும் பார்க்கிற உள்ளூர் கொடூரம் இங்கில்லை. இவனை மனிதனாக மட்டுமே பார்க்கிற பெருந்தன்மை. வயது பார்த்து அழைக்கிற பாங்கு.

மூணு நாலு வருஷம் இப்படியே ஓடி விட்டது. இப்பத்தான் சிக்கலில் மாட்டிக் கொண்டான்.

‘வரவை விட செலவு ஜாஸ்தியா கிறது; கட்டுப்படியா கலை’ என்று கொய் யாத் தோப்பை வெட்டி விறகாக்கி, மக்காச் சோளம் போட்டு விட்டார் கலிங்கப்பட்டிக்காரர்.

கொய்யா வேறு எங்கும் கிடைக்க வில்லை. ராஜபாளையம் போய் பச்சை நிலக்கடலை வாங்கிக்கொண்டு வந்து விற்றுப் பார்த்தான். கட்டுப்படி யாகவில்லை. சப்போட்டா பழம் வாங்கி லயனுக்குப் போனான். லயனில் இழுப்பு இல்லை.

ஒரு வாரமாயிற்று, லயனுக்குப் போய். கையில் காசு இல்லை. தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப் போய் பெஞ்சாதி வடிவு கொண்டு வருகிற சம்பளத்தில் வயிற்றுப்பாடு கழிவதே பெரும்பாடாக இருக்கிறது. வேறு வழியே இல்லையா?

உள்ளூர் வேலைக்குப் போய்த்தான் ஆகணுமா? மறுபடியும் மம்பட்டியைத் தூக்கணுமா? ‘‘ஏலேய் சமுத்திரம்’’ என்று அழைப்பதைச் சகிப்பதா? ‘‘என்ன சாமி?’’ என்று மேல் துண்டை குடங்கையில் போட்டு வளைவதா?

சமுத்திரம் இந்த ஊர்க்காரன். பரம்பரை பரம்பரையாக இந்த மண்ணுக்குச் சொந்தக்காரன். ஒரு குறுக்கம் (ஏக்கர்) நிலம் மட்டும் சொந்தமாக இருந்தால்… சரி, இப்ப என்ன செய்ய?

‘தலை உசரத்துக்குத் தங்கத்தைக் குமிச்சாலும் உள்ளூர் வேலைக்குப் போகவே மாட்டேன்’ என்றும், ‘சோத்தைத் திங்குற வாயால சொல்லுதேன்’ என்றும் அன்றைக்கு முழங்கியது, வெறுங்கூச்சலா? மம்பட்டியோடு உள்ளூர் வேலைக்குப் போய் விட்டு… வாயில் எதைத் தின்பது?

சமுத்திரத்துக்குள் அலைபாய்ச்சல்கள். வலி நிறைந்த மன உளைச்சல். மைதானத்தில் ஏகப்பட்ட ஆட்கள். எட்டே முக்கால் பஸ்ஸ§க்குக் காய்கறி மூட்டைகள் ஏற்று வதற்கான ஏற்பாடுகள். பஸ் எப்ப வரும் என்று ஆள் ஆளுக்கு அலை பாய்ந்து வந்தார்கள்.

பஸ் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வந்து, வட்டமடித்து நின்றது. பஸ்ஸிலிருந்து ஒரே ஒரு மனிதர் மட்டும் இறங்கினார். அவர் கையில் சிறிய சாக்குச் சுருட்டு. ஆனால், பேய்க்கனம்.

அவர் முக்கித் தூக்கி, இறங்குவதற்குப் படுகிற சிரமம். இரும்பா?

சமுத்திரம் உட்கார்ந்திருக்கிற சிமென்ட்டுத் திண்ணையில் அந்தச் சுமையை இறக்குகிறார். சாக்குக்குள் ஏகப்பட்ட அரிவாள்கள். இரும்புக் குழல் கைப்பிடியுள்ள புத்தம் புது அரிவாள்கள்.

‘‘விற்பனைக்கா..?’’ என்று விசாரிக்கிற சமுத்திரம்.

‘‘ம்’’ என்கிற அவர், பெருமூச்சுடன் தலைப்பாகையை அவிழ்க்கிறார். அப்போது, அந்தக் கணத்தில் &

இவனுக்குள் ஓர் ஒளி மின்னல். பளிச்சென்று வருகிற வெளிச்சம்.

ஆறு, ஓடை, புறம்போக்குகளில் கிடக்கிற ஏகப்பட்ட சீமைக் கருவேலி மரங் கள். வெட்ட வெட்ட வற்றாத சமுத்திரம்.

விறகு வெட்டி, சைக்கிளில் லோடு பண்ணி, ஆலங்குளத் தில் கொண்டு போய் விற்கலாமே! மான மரியாதையோடு வேர்வை சிந்தலாமே! சமுத்திரம் முகத்தில் ஒரு பூவின் மலர்ச்சி.

‘‘அருவா வெலயைச் சொல்லுங்க..!’’

ஒரு முடிவோடு பேரத்தைத் துவக்குகிற சமுத்திரம்.

– மார்ச் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *