காற்றைக் கலைக்கும் ரேகைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 15, 2013
பார்வையிட்டோர்: 10,745 
 

‘’இந்தச் சண்டாளப் பாவிய கொல்லதுக்கு ஆருமேயில்லியா’’ புட்டுக்காரிப் போட்டக் கூப்பாட்டத்தில் தன் மௌனத்தைத் தவற விட்டபடி அதிர்ந்து நின்று கொண்டிருந்தது இரவு. கிணற்றுக் கரையோரம் கிடந்த நாய் சுவடி தன் ஊளையைப் பெருக்க, மேலவிளையின் சாக்குட்டன் வீட்டில் முதல் வெளிச்சம் பற்றிக் கொண்டது. சாக்குட்டன் உடனே தனது வீட்டின் தெற்குப் புரையை நோக்கி வேகமாக ஓடினான். சாணி மூலையையொட்டி உணங்கப் போட்டிருந்த தென்னம்பாளைகளுக்கிடையில் படுத்துக் கிடந்தத் துப்பிதுப்பியை அடித்தெழுப்பினான். இருவரும் கீறிக் கொண்டு புட்டுக்காரியின் வீட்டுத் தாழ்வாரத்தின்மீது குதித்தார்கள்

அடைத்துக் கிடந்த இருளின் மத்தியில் புட்டுக்காரிவீட்டு மண்பரப்புகள் குலுங்கத்துவங்கின. காளைக்குக்கொம்புகொண்டான் தனது வேட்டியின் கீழ்முனையை ஒருகையால் உயர்த்திப் பிடித்துக் கொண்டு அங்கு குதித்தப் போது பருமண்பரல்கள் மீது கால் உப்புக்குத்திகள் உறைத்து நின்றன. அவனது மற்றொரு கை உலக்கையை தூக்கிப் பிடித்திருந்தது.. தாமதித்து வந்த பெண்களின் அவகாசத்திற்குள் ஆண்கள் அவ்வீட்டினைச் சுற்றி வட்டம் கட்டியிருந்தார்கள்.

‘’ அர்த்த ராத்திரிதோறும் அடிச்சேக் கொல்லுதானே…..இவன எப்போப் பாயில சுருட்டி கொண்டுப் போப்போறாவளோ…..இவனுக்கக் கையி தா…..ந்து போவாதா …ஒருக் கொள்ளையுமே கொண்டுட்டுப் போவாதா? ‘’

புட்டுக்காரி தொண்டையறுக்கக் கதறியதில் ஊரின் உறக்கச்சிக்கு மொத்தமும் கலைந்து போனது. சாக்குட்டன் துப்பித்துப்பியின் குறுக்கில் இடித்தான். இருவரும் வீட்டின் முற்றம் தாண்டி உள்ளே போனார்கள் . அதற்குள்ளாகவே நொங்குக்கள்ளனும் காளைக்குக்கொம்புகொண்டானும் இடப்புற வளைவினைத் தாண்டி அடுக்களையின் நிலைக் கதவை தகர்த்துக் கொண்டு வந்திருந்தார்கள்.

நடு அறையின் ஒருக்கல் பகுதியில் சாணித்தடுப்பின்மீது சரிந்தபடி பலகீனமாகக் கிடந்தாள் அவள். தலைமீது வாகில்லாமல் அபயமாக மடங்கிக்கிடந்தன கைகள். அவிப்பதற்கு தயாரான புட்டுமாவு தரை மீது சிதறியிருக்க பப்படத் துணுக்குகள் மண்ணோடு அழுந்திக் கிடந்தன. அற்ப ஆயுளில் அழுக்குத்துணிச் சுமையினைத் தாங்கிக்கொண்டிருந்த கொடிக்கயிற்றின் சுருக்குமுனை ஆடிக்கொண்டிருந்தது. கைவிலகிய சாக்கில் புட்டுக்காரியின் பிளந்தநாசி ரத்தம் ஒழுக்கியது. புரிதலற்ற திகிலோடு அவளது மகன் செல்லமூக்கன் அவளை ஒட்டிப்பிடித்தபடியிருந்தான். பீதியை தவிர்த்துக் கொள்ள வழியறியாத அவன் கண்களை இடுக்கிக் கொண்டான். ஒற்றை உருவமாய் வீட்டையே ஊளையிட்டபடி சுற்றி வந்துகொண்டிருந்தது சுவடி.

‘’ நெஞ்செல்லாம் நோவெடுக்குதே …நாம்போயி சேந்துட்டா எம்புள்ளக்கி ஒருமடக்குக் கஞ்சித்தண்ணிய யாரு ஊத்துவா?’’ புட்டுக்காரி புலம்பலுக்குத் திரும்பியிருந்தாள். இதனிடையிலே விருத்திக் கெட்டத்தனமாக நாலைந்து முறை வீட்டினுள்ளேயே துப்பியிருந்தான் துப்பித்துப்பி.

‘’எங்கப் புள்ளெ அவனெ?’’ சாக்குட்டன் அவளது மறித்துக் கேட்டான்..’’ வேகம் சொல்லுப் புள்ளெ ‘’ நொங்குக் கள்ளன் அவசரப்படுத்தினான். ‘’எங்கெ போயித் தொலஞ்சானோ சண்டாளன்?’’ என்றவள் வார்த்தையை அழுகையில் தொலைத்தபடி மடங்கினாள் .

துப்பித்துப்பி செல்லமூக்கனின் இடுப்பைத் தூக்கியபடி ‘’ ங்கொப்பன் எங்கலெ போனான்?’’ என்று உதறினான். பயல் கிடுகிடுங்கிப் போனதுடன் பயத்தில் தாயின் கொண்டையின் கோடாலிப் பரப்பினை பற்றிக் கொண்டு பதறினான். உடன்தானே புட்டுக்காரியின் கணவன் கொட்டுக்காரனைத் தேடும் தேட்டம் துவங்கியது. உத்திரம் முதற்கொண்டு தேடப்பட்டது . பிடியை நழுவ விட்டுவிடக்கூடாது என்ற தீவிரத்தில் காளைக்குக்கொம்புகொண்டான் விளைகளுக்குள் இறங்கித்தேடினான் . இருளுக்குத் தடுமாறிய அவனது உலக்கை பனையிலிடித்தது.

கல்படிவீட்டு ஆண்மக்கள் நால்வரும் சில்லறைச் சுள்ளான்கள் சிலரோடுக் கூட்டுப் போட்டுக்கொண்டு விளைச்சுவர்களைக் கடந்து சாலைப்புறமாக ஓடினார்கள். கண்வெளிச்சத்தை வைத்துக்கொண்டு மட்டுமே ஓடியதில் அவசரத்திற்கு பார்வை போதாமல் அலைக்கழிந்தார்கள். இருள் சறுக்கி விட்டதில் ஒருவன் பெத்தா வீட்டுப் பாண்டைக் கிணற்றுக்குள் புகுந்தான். வேறொரு ஆசாமி ஓட்டப்பிழையின் காரணமாக சலம்பைக்காரியின் முற்றத்தில் புதிதாக குளிக்கக் கட்டியிருந்த ஓலைப்பாயினைப் பிய்த்துக் கொண்டுப் போய்விட்டான். அந்நேரத்திலும் அவள் வாரியிறைத்த நாற்றவார்த்தைகள் அட்சரசுத்தமாய் ஒலித்தன. ஆண்வாடை மோதல்களால் தாக்குப்பட்ட சுவடி மிரண்டுபோய் ஓடியதில் எங்கோ மோதித்தெறித்துத் தூரப்போய் விழுந்தது. அதன் பார்வைப்படலத்தில் மாடத்தில் எரிந்துகொண்டிருந்த ஈஸ்வரவிளக்கின் சுடரொளி நெளிய சட்டென்று அது அடங்கிப்போனது.

சாலைச் சுழிந்தத் தென்னைமரம் போல கவிழ்ந்துக் கிடந்தது. அதன்தலை இருபுறங்களிலும் உயர்ந்த மரங்களோடு இணைவதுபோல உயர்ந்துப் போய்க் கொண்டிருந்தது. நொங்குக்கள்ளனும் காளைக்குக்கொம்புகொண்டான் மற்றும் கூட்டத்தார் ஒரு புறமாகவும் சாக்குட்டன், துப்பித்துப்பி, கல்படிவீட்டு மக்கள், சுள்ளான்கள் மற்றொரு புறத்தேயுமாக சாலையைப் பிடித்து வந்துகொண்டிருந்தார்கள் . துப்பித்துப்பியின் எச்சிலுக்குக் கலவரப்பட்ட சுள்ளான்கள் சற்று பிந்தங்கினார்கள்.

சாமம் முடிந்துபோகும் சமயம் அவர்கள் காலுவாரியின் கிழங்குவிளையைத் தொட்டுக் கிடந்த அண்டி ஆஃபீஸ் வரையிலும் போய் சலித்துப் பார்த்தும் ஒருத்த துப்பும் கிட்டவில்லை ஏமாற்றத்தின் மிதமிஞ்சிய வெறுப்பில் காளைக்குக்கொம்புகொண்டான் தன் கையிலிருந்த உலக்கையை வீசியெறிந்தான். சுவடி விலகியோடி உலக்கைக்குத் தப்பிப் பிழைத்தது. விளக்கின்சுடர் காற்றுக்கு அசருவதுபோல போக்குக்காட்டிவிட்டு பிறகு நிதானமாக நின்று எரிந்தது. அலைச்சலுக்குப் பிறகு அவர்கள் புட்டுக்காரியின் முற்றத்தில் கூடினார்கள்.

‘’ ச்சே…ஆளு சறுவிட்டானே! ‘’ சாக்குட்டன் வாழை மரத்தினை கைமுறுக்கிக் குத்தினான். அவனது கண்கள் பிரேத சாயலாக கூர்பார்த்தன புட்டுக்காரியை. ஆள்வளையத்தினரிடையே மூத்தோர்களும் சேரத்துவங்கியிருந்தனர் .

‘’ நா கொட்டுக்காரனுக்கெக் கணக்கெ முடிச்சிரலாம்னுட்டு இருக்கேன் ஆரெல்லாம் கூட உண்டும்? ‘’ நொங்குக்கள்ளன் பேச்சைத் தொடுத்தான்.

‘’ என்னத்தேயாக்குண்டே கேக்கே? நாமோ ஆம்பளமாராக்கும்னு காட்டித்தராண்டாமா? நானே ஒத்தைய்க்கு அவன கொத்தித் தள்ளிரலாம்னுட்டு இருக்கேன்….’’ . காளைக்குக்கொம்புகொண்டவனிடம் பேச்சைக் கடத்தி விட்டான்.

‘’பொறவு? நா என்னத்துக்கு ராய்க்கு ராமயணமா இப்படி ஒலக்கையத் தூக்கிக்கிட்டு அலையிதேன்….’’ பட்டென்று சொன்னான் காளை.

பெண்களுக்கு இது புறப்பாடு ஆகிவிட்ட சங்கதி என்பது புலப்படத் துவங்கியது. வெத்தலக்காரர் அவர்களை கையெடுத்து அமர்த்தினார். சற்று அமைதிவந்தது.வெற்றிலை சரக்கிருந்த வாயினை வடித்துவிட்டு, ‘’நீங்கொல்லாம் பெரிய்ய ஆளாயிட்டியோடே …ஒத்துக்கிடவேண்டியதுதான் …ஆனா அதுக்கூன்னு ஆரையும் தள்ளதும் கொல்லதும் நல்லதாட்டில்ல மக்களே..’’

கேட்டதும் சாக்குட்டனுக்கு பிரி கழன்றது. ‘’ நெறுத்தும் ஓய் ! ஒருத்தன் காலநேரம் பாக்காம இப்படி அடிச்சிக் கெடத்திட்டுப் போயிட்டிருப்பான்….பயித்தியாரங்கணக்கா நாமோ ஒறக்கம் ஒழிஞ்சி ஓடணுமா? என்னக் கணக்கவோய் பேசுதீரு? ‘’

‘’ ஆமா நமக்கு வேற வேலையுஞ் ஜோலியும் இல்லேல்லா அதாங்……..திரியுதாரு திரிச்சீலையுங் கொளுத்திக்கிட்டு ….’’ காளை அவரை சற்றுக் கீறிவிட்டான்.

‘’ நாஞ்சொல்லத கேளுங்கோ …இதுல நட்டப்படப் போறது புட்டுக்காரிக்க ஆயுசாங்கும் …அவளக் குழீலத் தலள்ளிரப் படாது…. அதாக்கும் காரியம்…’’வெத்தெலக்காரர் கூற்றுக்கு ‘’ செரிதானடே ‘’ என்று கிழங்குத்தின்னிக் கிழவரும் ஒரு கை உதவிக்கு இறங்கினார். பெரியதுகளின் சில தலைகளும் அந்தக் கூட்டத்தில் ஆடின..

சாக்குட்டனுக்கு சூடு தலைக்கு ஏறிவிட்டது. ‘’ என்னத்தையாக்கும் மண்டைய மண்டைய ஆட்டுதியோ ? அவளுக்க ஒப்பாரி ஆருக்குங் கேக்கலியோ? காதுக்குள்ள ஓந்தானையா குத்தி அடைச்சி வச்சிருக்கு? குரல்உயர்த்திக் கொண்டான்.

‘’ கோவப்படாத மக்கா …கொட்டுக்காரன் எதோ புத்திக் கெட்டு…..’’ மண்ணெண்ணெயக் குடிச்சவ சமாதானம் செய்யும் பாங்கில் வரவும் சாக்குட்டன் உடனே கையை விரித்து ‘’ ஆருக்கப் புத்தியும் எங்களுக்கு வேண்டாம் ‘’ என்று அவளை நிறுத்திவிட்டு’’ ஓமக்குந்தான் ஓய் ‘’ என்று வெத்தலக்காரரையும் அடக்கினான்.

இளையவர்கள் மிகவும் கொதிப்படைந்து காணப்பட்டார்கள். பெரியவர்களின் பேச்சு அங்கு மதியேறவில்லை .எப்பாடுப் பட்டாவது கொட்டுக்காரனைப் பிடித்து அவன் பொறியை கலக்கி விடவேண்டுமென்ற தீர்மானத்திற்கு அவர்கள் வந்திருந்தார்கள். அவனைக் கொத்தியெறியும் குரூரப்பசி அவர்கள் புத்திகளில் புழுவேறிக் கொண்டிருந்தது.

மறுநாள் புட்டுக்காரி தாமதமாக முற்றம் பெருக்க வந்தாள். முந்தையநாள் ஊர்மக்களின் புண்ணியத்தில் முற்றம் லட்சணம் கெட்டுக் கிடந்தது. ஓரங்களில் குடலைப் பிடுங்கும் நாற்றம் வீசியது. பகலைப் புலம்பலில் கழித்துவிட்டு மாலையில் அந்திக்கடைக்குச்சென்று வட்டி நிறைய அரிசியினை வாங்கிக்கொண்டு வந்து ஊறப்போட்டுவிட்டு இரவில் புலம்பலின் ஊடே இடித்தும் சலித்தும் வறுத்தும் வைத்தாள். விடிவதற்கு முன்பே எழுந்து கல்அடுப்பில் புட்டினையும் பயரினையும் அவித்து ஓலை அடுப்பில் பப்படத்தையும் பொரித்து எடுத்துக்கொண்டு மருத்துவக்கல்லூரி வாசலில் போய் உட்கார்ந்தாள். வியாபாரம் அவளை சகஜப்படுத்தியது. விடுமுறை நாட்களில் செல்லமூக்கனும் அவளோடு சென்றான்.சுவடி பஸ் நிறுத்தம் வரை போய் வழியனுப்பி வைப்பதும் சமயாசமயத்திற்கு திரும்ப அழைத்துக்கொண்டு வருவதுமென பொழுதைக் கழிப்பதில் ஆனந்தமடைந்தது.

நிலவரம் தோதாகிப்போன சந்தர்ப்பம் பார்த்து ஒருநாள் சாக்குட்டன் புட்டுக்காரியின் விளைக்கருகில் முன்னமே வந்துக் காத்துக் கிடந்தான். மாலைச்சடவோடு வீட்டுக்கு வந்தவள் மீதமிருந்த அடித்துண்டு புட்டினை மூக்கனுக்கும் சில்லறைகளை உதிர்த்து சுவடிக்கும் கொடுத்துவிட்டு பாத்திரங்களை அலசும்பொருட்டு கிணற்றின் கரைக்குச் சென்றாள். அறிகுறி தெரியாமல் நெருக்கத்திற்கு வந்திருந்தது இரவு. கழுவியநீரை தென்னையோரம் ஒழித்துவிட்டு அடுக்களை நடையில் கால்வைக்கும் சமயம் ‘’ யே புள்ளே ‘’ என்று இரவின் கள்ளத்தனமான குரல் கேட்டது. பீதியுடன் திரும்பிய அவள் பார்வைக்கு நடையை ஒட்டிய சுவற்றின் மீது சாக்குட்டன் நிழலாக சாய்ந்து நிற்பது தெரிந்தது. பயத்திற்கு நெஞ்சின் மீது லேசாகத் துப்பிக்கொண்டாள்.

‘’ யேம்புள்ள இப்படி வம்படி வானாலுன்னுக் கெடந்து கஷ்டப்படுதே? ‘’ அவன் நெருங்கி வரவும் அவள் அரிசிப் பாத்திரத்தினை உள்ளே நகர்த்தினாள். ‘’ என்னச் செய்ய? எழுதினவங்கிட்டதான் கேக்கணும் …..’’

‘அப்படிச் சொல்லாத புள்ளே… ’ நா இருக்கும்போ நீ இப்படிக் கெடந்து அலையாண்டாம் …..ஒனக்கும் ஒம்புள்ளைக்கும் ஒருவாய்க் கஞ்சியூத்த எனக்குக் கழியாதுன்னா நெனக்கே? ‘’

‘’ எனக்கு நீங்கக் கஞ்சியூத்தப் போறேளா? பொறவு ஒங்கப் பொண்டாட்டியும் புள்ளைகளும் கஞ்சிக்குப் பதிலா வயித்துல ஈரத்துணியக் கட்டிக்கிட்டு அலையுமாக்கும்? ‘’ சிரித்துக்கொண்டேக் கேட்டாள்.

‘’ அதுகளுக்கு என்ன கொறவு? ஒனக்கும் ஒரு கொறவும் வராம பாத்துக் கிடுதேன்….’’

‘’அஹா….ங்! எனக்கு ஒரு மாப்பிள்ள இருக்கானே? அவன் பாத்துக்கிடமட்டானா? …’’ சட்டென்று எதற்காகவோ வானத்தைப் பார்த்தாள். ‘’இல்லேன்னா எம்மவன் இருக்கான்…’’

‘’ஓம்மாப்பிள்ளைக் கதைய விடு…ஓம்பய வளரணுமுல்லா..அதுவரைக்கும்….?’’

‘’இருக்கவே இருக்கு சர்க்காராசுபத்திரி ….புட்டு வித்து பொழச்சிட்டுப் போறேன்..’’

‘’ அது எதுக்கு? நா இருக்கும்போது….’’ வசக்கேடாக அவள் கக்கத்தின்மீது கை வைத்தான்.

சுவடி உள்ளிருந்துக் குறைத்தது . செல்லமூக்கன் தின்றபடி எட்டிப் பார்த்தான். தூரமாக இருளை ஒட்டிக்கொண்டு துப்பித்துப்பி எச்சில் துப்புவது தெரிந்தது. தட்டத்தினை போட்டுவிட்டு தாயாரிடம் ஓடினான்.

புட்டுக்காறித் தள்ளி விட்டிருந்ததில் கால்சறுக்கித் தடுமாறிய சாக்குட்டனின் மண்டை சுவரோடு உராய்ந்தது. பிடிமானம் தவறிப் போக அவன் பெரிய வட்டைப் பாத்திரத்தின் மீது கவிழ்ந்தான் .

‘’எம்புள்ள இருக்கானேன்னு விடுதேன்….. பொழச்சிப்போ. மேக்கொண்டு ஏதாங் ஒபகாரஞ் செய்யேன்னு சொல்லிக்கிட்டு எந்நடைய சவுட்டாதே நல்லாருக்காது. ன்னா?………..’’ பெயர்ந்த அடுக்களைக் கதவினைத் தள்ளி வைத்து விட்டு உள்ளறைக்குச் சென்று இழுத்துச் சாத்தினாள். காரைப் பெயர்ந்ததில் விழுந்த பல்லி தனது வாலினைத் துடிக்க விட்டுவிட்டுச்சென்றது.

சுரணை போய் அவமானத்தின் நொம்பரத்தோடு நின்றான் சாக்குட்டன். துப்பித்துப்பியும் நொங்குக்கள்ளனும் ஆறுதலுக்கு வந்தார்கள். நிராசையால் மூடப்பட்ட அம்மூவரும் இருள் உறங்கிக்கிடந்த பலாவின் மூட்டில் சலம்பிக் கொண்டுக் கிடந்தார்கள் . சுவடி கண்களை கொள்ளி போல துருத்திக்கொண்டு பார்த்தபடியிருந்தது.

கார்த்திகை மாதத்தின் மத்தியில் மாதாக் கோயிலின் சப்பரக்கட்டு கொடியேற்ற விழாவிற்கு ஊர் ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரம். நிறைமாதக் கர்ப்பிணியைப் போல வெளிச்சப் புறப்பாட்டிற்குக் கிளம்பிய பௌர்ணமி நிலவின் தாழ்ப்புறத்திலிருந்து ஒரு நைந்த உருவம்போல கொட்டுக்காரன் ஊருக்கு வந்து கொண்டிருந்தான். தேகம் மிகவும் வற்றியிருந்ததோடு நாடி சூம்பிப்போய் காணப்பட்டது. குழறிய நடையில் தனது ஒருகையினை குறுக்கில் வைத்திருந்தான். வீட்டின் முன்புற பள்ளத்திற்கருகே வந்தபோது விழுந்துவிடாதிருக்க மிகவும் சிரமப்பட்டான்.

நிலைக்கம்பத்தின் அருகே வந்தபோது இடைநடையில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்த மூக்கனைப் பார்த்ததும் தன் கைகளை அகல விரித்து அழைத்தான். மூக்கனுக்கு அது ஒரு பயத்தின் வரவாகத் தோன்றியது .அவன் ஓடிப்போய் புட்டுக்காரியிடம் சொன்னான். அவள் தன் முகத்தில் ஒரு விபத்தின் அதிர்ச்சியைத் தாங்கினாள் . பிறகு விலக்கப்படவேண்டிய ஒரு கனவினை அகற்றுவது போன்று உடனே இயல்பாக்கிக்கொள்ள முயற்சி செய்தாள்.

வழியைத் தொலைத்துவிட்டு அலையும் நடைவாசியைப் போன்று வெகுநேரமாக தன் வீட்டையேச் சுற்றிக்கொண்டு வந்தான் கொட்டுக்காரன். நேரம் இருட்டுவதிலேயே குறியாக இருந்தது . மிகுந்த குழப்பத்திற்குப் பிறகு அழுக்கு உறைந்த தன் சட்டையினைக் கழற்றி சுவற்றின் மீதுத் துருத்திக் கொண்டிருந்த ஆணியின் மீதுத் தொங்கவிட்டான். சுவடி அவனை வளைத்துக்கொண்டது. முகரவிரும்பி கழுத்தை நீட்டி நீட்டி அவனைத் துளாவியது . முதிர்ந்ததொரு புன்னகையுடன் அதன் முதுகினைத் தடவிக் கொடுத்தான். அது அவனைக் கிணற்றடிக்கு அழைத்துச் சென்றது.வாளியை இறக்கி உச்சிக் குளிர நெடுநேரமாய்க் குளித்தான். தண்ணீர் தலைவிட்டிறங்கிய ஒவ்வொரு சமயமும் சத்தமாக எதுவோ பேசினான்.

எண்ணெய்ப் பிசுப்பிசுத்த துண்டினை கொடியிலிருந்து எடுத்துச்சுற்றிக்கொண்டு வேட்டியினைப் பிழிந்தான்.காற்று தேகத்திற்கு சௌகரியமாக வீசியது. வேட்டியை உதறியதில் காற்றுக்கு சிலிர்ப்பு தட்டியது. வேட்டியினைத் தலைக்குமேலேத் தூக்கிப் பிடித்துக்கொண்டு விளையில் இறங்கி நடந்தான்.காற்றின் இழுத்த இழுப்புக்கெல்லாம் அலைந்தவேட்டி முடிவில் தன் ஈரத்தை இழக்கத் துவங்கியது.

மூக்கன் முன்னறையில் சோற்றுத் தட்டத்தின் முன் உட்கார்ந்திருந்தான். வாய் கன்னங்களில் அடைத்து வைத்திருந்த சோற்றுக் கவளத்தினை கொஞ்சம் கொஞ்சமாக அசை போட்டுக் கொண்டிருந்தது. கொட்டுக்காரன் கையினை நீட்டி சோறுத் தருமாறுக் கேட்டான். மூக்கன் தட்டத்தினைக் காட்டினான் .அது காலியாகிவிட்டிருந்தது. கொட்டு வீட்டின் உட்புறமாகக் கை காட்டினான். மூக்கன் எழுந்து உள்ளேப் போனான்.அதன்பிறகு வெகுநேரமாகியும் அவன் வரவில்லை.

கொட்டுவிற்கு அகோரப்பசி. வயிறு பரபரவெனப் பிராண்டியது. சரீரம் பலகீனமாயிருந்தது. பசி பொறுக்காமல்வயிறு காந்தல் கொண்டு எரிய தொண்டையின் ஈரம் வற்றத் துவங்கியது.

மூக்கனுக்கு ஒரு பொட்டளவு கூட உறக்கம் சேரவில்லை.மண்டிப்போன நிழலினைப் போல அம்மா சுவரோரமாகக் கிடப்பதைக் கவனித்தான். முசுமுசுவென்று எதையோ அவள் புலம்பிக்கொண்டிருந்தாள். அவளறியாதபடி எழுந்து முற்றப்பகுதிக்கு வந்தான்.. அப்பாவைக் காணவில்லை. இருள் மட்டும் நின்று கொண்டிருந்தது . ஆணி முனையில் அப்பாவின் சட்டை காற்றில் ஆடியது கண்ணில் பட்டது. காற்றாடியின் அரைவட்டம் போல் சுற்றிக்கொண்டிருந்த சட்டையினை நோக்கி அவன் நடக்கத்துவங்க, காற்றோடு வந்து மோதியது சட்டை. மெல்லத் தொட்டபடியே ‘’அப்பா’’ என்று அழைத்தான். சட்டை நின்றுவிட்டது. அவன் சட்டையைப் பிடிக்கப் போக அது ஆணியின் பிடியை விட்டு கையில் வந்தது. என்ன செய்வதென்று யோசித்த அவன் சிறு தயக்கத்திற்குப் பிறகு தானேப் போட்டுக்கொண்டான்.

கால்வாளிக்கு குறைச்சலில்லாது கிணற்றுநீரை குடித்துமுடித்திருந்தான் கொட்டு.வயிறுப் புடைத்துவிட்ட போதிலும் தளர்ச்சி நீங்கவில்லை. பீடியைப் பற்றவைக்க விரும்பி தீப்பெட்டியைத் தேடினான். விளக்குமாடம் பார்வைக்குப் பட்டது. ஒளி ஏற்றப்படாமல் மூளியாக கிடந்தது மாடம். நிலவொளியின் உபகாரத்தில் மாடத்தினுள்ளே தடவினான். விரலை எண்ணெய் நனைத்தது. தட்டுப்பட்ட பெட்டியினை எடுத்து விளக்கைப் பொருத்தினான். பஞ்சட்டை விலகிப் பிரகாசம் வந்தது. புகையை பற்றவைத்து உயரப் பார்த்தான் வானம் மலர்ந்துக் கிடந்தது. அதன் கீழே ஒரு குடைக்கம்பியாய் தான் நிற்பதுபோல் உணர்ந்தான். இடதுபுறம் மனைவியும் வலதுபுறம் பிள்ளையும் நிற்பதாக பாவித்தபோது சுகமாக இருந்தது.

கொட்டுக்காரன் மூக்கனைத் தன் தோள் மீது அமர்த்தியிருந்தான். மூக்கன் அவன் தலை முடியைப் பிடித்து குதிரை ஓட்டிக்கொண்டிருந்தான்.அருகில் நடந்தபோது உரசிய புட்டுக்காரியின் அண்மை இன்னும் இரண்டு பஸ்நிறுத்தம் தாண்டியும் அவனை நடக்கச் செய்தது.

‘’ இப்படி விட்டுட்டு விட்டுட்டு போயிருதியளே….’’ நெருக்கமாக வந்த குரலில் அவளது நொம்பரத்தின் மீதம் இருந்தது.

‘’ யாருபுள்ளே போனா? …..ஒவ்வொரு தடவையும் நா வந்துக்கிட்டுல்லா இருக்கேன்?’’ அவள் பிடரியை வளைத்துக் கொள்ள விரும்பி கையை சுற்றிப் போட்டான்.

‘’……இல்லப் போயிருவே …..’’ அவள் தவிர்த்துவிட்டு நடந்தாள்.

‘’ எங்கெப் புள்ளேப் போவேன்…….எனக்கு வேற ஏது போக்கிடம்…. ஒங்காலடியில கெடந்துல்லா உசுர விடலாம்னு நெனெக்கென்…’’ அவள் அவன் வாயைப் பொத்தினாள். அவர்கள் சாய்ந்து கொண்டார்கள். பின் ஒன்றாகவே அந்திக்கடை சென்றார்கள். வேண்டியமட்டும் பொருட்களை வாங்கினார்கள். அவன் ஒருசமயம் சர்க்கார் ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்து அவளுக்காகவே நெடுநேரம் காத்திருந்தான். வரும்போதுக் கேட்டான்.

‘’ ஒனக்கேதாவது வேனும்னாக் கேளு? ‘’

அவள் அதிசயமாகப் பார்த்தாள்.

‘’ பாக்காத, சும்மக் கேளுபுள்ளே..’’

‘’ ம்…ரொம்பநாளாச்சி ஒங்கிட்ட சவுட்டு வாங்கி ….ஒரு சவுட்டு தாரியா?’’

‘’ போபுள்ளே சும்மக் கொமக்காம ‘’ கால்வலிக்கும் தூரத்தையும் கடந்து நடந்தார்கள் வெகுதூரமாக…வெகுநேரமாக….

தன் ஒத்திகைப் பாதையில் பயணித்தபடியே காய்வதற்காகப் போட்டிருந்த தென்னையோலைகளின் மீது உடம்பை சாய்த்தான் கொட்டு. அவனுக்கு முன்பாகவே வந்து படுத்துக் கிடந்தது சுவடி. பசியின் வலியும் கூடுதலான அசதியும் சேர்ந்து உடம்பைத் தளர்த்திக் கொண்டிருக்க, தன்னை வழிமறித்து நிற்கும் தனது வீட்டை கைப்புடன் உற்றுப் பார்த்தான். அழைப்பாருக்காக வேண்டிக் காத்துக்கிடந்த அவனை தூக்கிச்செல்லத் தூக்கம் தயாராகி வந்தது.

மனது விடாமல் பேசியபடி பிணைந்துக் கிடக்கிறது அவளோடு. அவன் விருப்பத்திற்கிணங்க அவளும் பேசியவாறே இருக்கிறாள். முடிந்தமட்டிலும் அசதியிடமிருந்தும் உறக்கத்திடமிருந்தும் விடுபடப் போராடுகிறான். ஒருகணம் அவன் அயர்ந்து விட, விழிப்பதற்குள் இழுத்துக் கொண்டது தூக்கம்.

தான் போட்டிருந்த அப்பாவின் சட்டை கொதும்பின் மணத்தைக் கிளப்புவதாக எண்ணிக்கொண்ட மூக்கன் கக்கத்தினை முகர்ந்துப் பார்த்தான். அடிக்கடி முகர்ந்ததில் வியர்ப்பின் அடர்த்தியான நெடி பழகிவிட்டது. அந்த சட்டைக்குள் தான் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாக கருதிக்கொண்டான்.

நாலுமுக்குரோடு, பன்னிமாடன்கோயில், ஏசு பள்ளிக்கூடம், மஞ்சாடிமுக்கு என சப்பரக்கட்டு நிகழவிருந்த பிரதேசம் எங்கிலும் மூக்கன் சட்டையோடவே திரிந்தான். சுவடியும் அசராமல் அவனோடு ஊர் சுற்றியது. ஆற்றங்கரைப் பக்கம் சென்றபோது மற்றொரு துணையாக மூக்கனின் நிழலும் சட்டையுடன் தண்ணீரில் நடந்து வந்தது. அவர்களின் முன்புறத்தில் சிப்பாய்கள் போல சுவடியும் அதன் நிழலும்…

சுவடிப் பின்தங்க நேர்ந்த சமயத்தில் நிழல்களிரண்டும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இதனால் முந்தி செல்வதில் அவைகளுக்குள் போட்டி உருவானது. தோல்வியடைந்த நிழல் தவறி ஆற்றின் சுழலில் போய் சிக்கியது. அதன் தவிப்பைக் கண்ட மற்ற நிழல் பழிப்புக் காட்டி ஆடியது. நீர் சுழற்றியடித்ததில் மூக்கனின் நிழல் நீரிடம் மோதி தன் நிறத்தை தொலைத்தது. நிறமாற்றத்தைக் கண்டு சந்தேகம் கொண்ட மூக்கன் நிழலை தன்னிடமிருந்துத் துரத்தினான். அது அவனையேச் சுற்றிச் சுற்றி வந்தது.

கோபம் கொண்ட அவன் தன் கால்மாட்டில் கிடந்த கொச்சங்காயைத் தூக்கி நிழல் மீது எறிந்தான்.அதுவும் அதுபோல் திருப்பி எறிந்தது. மூக்கனுக்குக் கோபம் மண்டைக்குப் பிடிக்க துரத்தியபடி ஓடினான்.அதுவும் ஓடியபடி துரத்தியது.

மூக்கனின் ஓட்டத்தைக் கண்ட சுவடி என்னவோ ஏதோவென்று பதறித் தானும் பின்தொடர்ந்து ஓடியது. தாக்குப்பிடிக்க இயலாத நிழல்கள் இரண்டும் திண்டாடின. முக்கனும் விடாதுத் துரத்தினான். அவனைத்தவற விட்ட சந்தர்ப்பங்களில் இலக்கினை தொலைத்த சுவடி முன்னும் பின்னுமாக அலைந்தது.

வெளிச்சம் பலகீனமான சமயம் மறுகரை வரை விரட்டிச்சென்ற மூக்கன் தளர்ந்து போய் விட நிழலும் கூடவே சோர்ந்துவிட்டது. ஓய்வு வேண்டிய நிழல் சற்று தன்னை நீட்டிக்கொண்டது. இந்த வாய்ப்புக்காக காத்திருந்த மூக்கன் அதனை வசமாக மடக்கி உள்ளே ஊடுருவிச்சென்றான்.

மூக்கனைக் காணாத சுவடி முன்னங்கால்களை மடக்கி விநோதமாக குறைத்தது. பீதியேற்படுத்திய அவ்வூளையைக் கேட்டு அரண்டு போன நாயின் நிழல் அதனிடமிருந்துத் தன்னை உருவிக்கொண்டுப் போக, அடித்துக் கொண்டு வந்த நீரோட்டம் அதனைத் தன்னுள் இழுத்துக் கொண்டது. அபாயத்தில் மாட்டிக்கொண்ட நிழலினைக் கண்ட சுவடி மூக்கனைப் போல் அதனையும் இழந்து விடாதிருக்க ஆற்றில் குதித்தது. வெள்ளத்தின் போக்கில் நிழல் தன்னைவிட்டு வெகுதூரம் செல்வதையும் தனதுக் கைகளால் வெள்ளம் அதனை வீசி எரிந்து சுழிகளுக்கு விளையாட்டுக் காட்டிப் பரவசப் படுத்துவதையும் கண்ட சுவடி போக்கில்லாமல் நின்றது.

கருக்கல் இறங்கிய பிறகு நிழல் மூக்கனை விட்டு விலகி இருளோடு கலந்தது. தான் வெளிச்சத்தை நோக்கி நகர்ந்தால் நிழல் தன்னைத்தேடி வருமென நம்பி நகந்தான் அவன். வெளிச்சம் வெகுதூரத்தில் இருந்தது. சில எட்டுகள் எடுத்து வைத்தான். காற்று குளிர்ந்து வீசியபோதுதான் உணரமுடிந்தது அப்பாவின் சட்டை நிழலோடுப் போய் விட்டதென்று.

மூக்கன் இருளினிடமிருந்த தன் நிழலினைத் தேடினான். அங்கு தனித்துத் தெரியாதபடி ஏராளமான நிழல்கள் ஒன்றுக்கொன்று விளயாடியவாறு இருளின்மீது குவிந்துக் கிடந்தன. மூக்கன் தன் பெயரினைச் சொல்லி நிழலினை அழைத்தான். எல்லா நிழல்களும் ஒன்றாய் குரல் கொடுத்தன. அவன் தன் அப்பாவின் சட்டையைத் தனக்கு முக்கியமானதென்றும் அதனைத் தரும்படியும் வேண்டினான். அவை ஒவ்வொன்றும் தனது ஆடைகளை இருளில் மறைத்துக் கொண்டன. தான் அப்பாவின்மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பவன் என்பதை உணர்த்தவிரும்பி ஏதேதோ சொல்ல விரும்பினான். நிழல்கள் ஒன்றாய் குரல் எழுப்பி அவன் குரலை அவனுக்கே கேட்க விடாது செய்தன. மிகுந்த துயரத்தோடு அவன் திரும்பியபோதுதான் இக்கரையில் சுவடி தண்ணீரோடுப் போய்க்கொண்டிருப்பதையும் அச்சமூட்டக்கூடிய ஏதோ ஒன்று சுவடியினை அழைத்து செல்வதையும் கடைசி சத்தமாக அவன் பார்வையில் சுவடி மரண ஒலியை எழுப்பிவிட்டு நீருக்குள் மூழ்குவதையும் கண்டு அலறினான்.

திடுக்கிட்டு விழித்த புட்டுக்காரி அவனை எழுப்பினாள். கண் திறந்து பார்த்த மூக்கன் ஆற்றங்கரையைக் காணாது திகைத்தான். நடைப்பக்கமாக அவனை அனுப்பிவைத்து விட்டு அவள் காவல் இருந்தாள். வெகுநேரமாகப் பிரயாசைப்பட்டு முட்டிப் பார்த்தும் அவனுக்கு வரவில்லை. தளர்ந்துபோய் திரும்பினான். பெருவெளிச்சமாக நிலவின் கருணைக் கிடந்ததை அவன் அறியவில்லை.

அப்பாவைத்தேடி பார்த்தான் .தென்னோலையைத்தாண்டி பார்வை போகவில்லை.கொதும்பின் வாசனை மட்டும் ஊடுருவி வந்தது. சுவற்றுப் பக்கமாகத் திரும்பினான். ஆணியில் சட்டைத்தொங்கியது. சுவற்றினை நோக்கி நடந்தான். அவன் சட்டையினை நெருங்கிய சமயம் காற்று உரத்து வீசத் துவங்கியிருந்தது. அவனது கைகளை மீறி அதுக் காற்றைப் பிடிக்க தாவியது. புட்டுக்காரி சட்டையிடமிருந்து அவனை விடுவித்துக் கொண்டு சென்றாள். அவனது பார்வையில் சட்டை விழுந்துவிடுமென்பதுபோல் தெரிந்தது.

பாதிவாய் திறந்த நிலையில் நிலவைப் பார்த்தவாக்கில் கொட்டுவைக் கிடத்திப் போட்டிருந்தது உறக்கம். அல்லஞ்சில்லறையாய் சிலப் பிதற்றல்கள் உறக்கத்தையும் மீறி வந்து கொண்டிருந்தன. நாய் சுவடியைக் காணவில்லை . சற்று தூரத்தில் காய்ந்த சருகுகள் சில அனாவசியமாய் அந்நேரத்தில் சத்தத்தை எழுப்பின. சருகுகள், சருகுகளாக உரசிய அதன் சத்தம் செவியினருகே ஒரு அரவம்போல் கடந்துப் போய்க்கொண்டிருக்க அசம்பாவிதத்தின் ஒருகணம் அவன் உணர்வைத் தட்டியெழுப்பியது. சட்டென அவன் தன் தலையைத் தூக்கப்போனான். அது வராமல் எங்கோ மாட்டிக்கொண்டு பாரமாக இழுத்தது. கண்களைத் திறந்தான்.பார்வை துலங்குவதற்குள் தன் தலைமாட்டில் யாரோ நின்றுகொண்டிருப்பதையும் அவனது கால்களுக்கிடையில் தனது தலை இடுங்கி இருப்பதையும் கண்டான்.

நின்றுகொண்டிருந்தவனின் கால்களுக்கு இடையே தன் கைகளை விரைவாக நுழைத்தக் கொட்டுக்காரன் வேகமாக விரித்தான். கால்கள் மடங்கி வளையவந்த சமயம் தன்னை உருவிக்கொண்டு வெளியே வந்தான். அதே நொடியில் கொட்டுக்காரனின் தலை கிடந்த இடத்தை மோதி நசுக்கியது காளைக்குக்கொம்புகொண்டவனின் உலக்கை. கொட்டுவின் நெஞ்சு பிசகித் துடித்தது. அவன் பதறிக் கொண்டு எழுந்தான்.

இதற்குள் கொல்லாமரத்தின் பின்னேயிருந்து தான் பெர்ஷியாவிலிருந்து கொண்டுவந்த நீண்ட இருமுனைக் கத்தியை கொட்டுக்காரனின் வயிற்றை நோக்கி செலுத்தினான் மண்டைவீங்கி. ’’ மாதாவே ‘’ என்று திரும்பியவனின் பாரம் தாங்காத செம்பருத்தி நொடிந்து கீழேத் தள்ளியது. கத்தி பிசகியது.

‘’ என்னைய எதுக்குக் கொல்லப் பாக்கியோ? ‘’ பயமும் பலவீனமும் கொள்ள நடுநடுங்கியபடியே கேட்டான். மண்டைவீங்கி அவனை விகாரமாக நெருங்கினான்.

‘’ ச்சொல்லனுமால்ல….ஏறப்பாளிக்க……’’

கொட்டுக்காரன் பின்வாங்கி நகரமுயல கால்கள் மறுத்தன.

‘’ என்னத்தெய எடுக்கதுக்கு இங்கெ வந்தே ?‘’

‘’ நா என் வீட்டுக்குல்லா வந்தேன்….’’

‘’……வீடு…….’’ என்ற கனைத்தலுடன் ஓங்கி ஒரு எத்து விட்டான்..இந்தமுறை தவறாமல் குறி வயிற்றின் கீழ் இறங்கியது.ஏற்கனவே பதுங்கியிருந்தது போன்று வலி நீசங்கெட்டு எழுந்து வந்தது.

‘’ யாரு வீட்டுக்குலெ ? ‘’

‘’ எம்பெண்டாட்டிக்கெ வீட்டுக்கு ….’’

‘’ அவள கொல்லெதுக்கு ……..ம்…? ‘’

‘’ கொல்லெதுக்கா?……அவ எம்பெண்டாட்டில்லா?’’

காளைக்குக்கொம்புகொண்டவன் மீண்டும் உலக்கையைத் தூக்க நடுக்கத்தில் நெஞ்சில் தீ புகுந்தது.

‘’ இங்கெப் பாருங்கோ ….இது எனக்கெக் குடும்பக் காரியம் …இதுல நீங்கோ எடப்படுது செரியில்ல….நா உங்களுக்கு என்னெ பெழையாக்குஞ்செய்தேன்?…..போயிருங்கோ….’’

‘’ நாஞ்சொல்லுதம்லே…..பெழ என்னென்னு …’’என்றபடி கொட்டுக்காரனின் கழுத்தில் துண்டைப் போட்டான் துப்பித்துப்பிக் காறியபடி.

கொட்டுக்காரனுக்கு திட்டத்தை ஒருவாறு அனுமானிக்க முடிந்தது. ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள்.சரீரத்தில் பலம் இல்லை.

‘’ தெய்வத்தான சத்தியம் …நா அவள கொல்லெ வரலே…..கடேய்சியா அவக் காலடியிலேயே ஜீவிச்சுக் கெடக்கலாம்னுட்டுதான் வந்தேன்….என்னைய நம்புங்கோ……’’ குரல் சறுக்க தன் பலவீனத்தை நொந்து அழுதபடியே கைதொழுது வேண்டினான்.

துப்பிதுப்பி விடவில்லை. துண்டை இறுக்கினான். மூச்சு முறுங்கியது. செவி அடைத்து நின்றுவிட, அந்தரத்தில் பறிபோயின காட்சிகள். கண்களுக்குள் மழைநீர் போல ஊதாநிறம் வழிந்தது. உயிர் முட்டுவது போல நெருக்க சுவாசத்திற்காக கடுமையாகத் திமிறினான்.

அந்தநேரம் எதிர்ப் புறத்திலிருந்து பாறைபோல் ஒன்று வந்து வேகமாக முகத்தில் மோதிநின்றது . அந்தக்கணம் சாதரணமாக இருந்தாலும் தொடர்ந்த கணங்களில் புலன்கள் விபரீதமாக உணர்த்த அவன் பம்பரம்போல் சுழன்று வீழ்ந்தான் . துப்பிதுப்பி தனது துண்டினை விலக்கிவிட சற்று சுவாசம் கிடைத்தமாதிரி தோன்றியது. நாசியிலிருந்து ஒழுகி வந்த நீர்மத்தின் சூட்டில் இரும்பின் வாடை இருந்தது. மலம் கசிந்தது. யாரோ மிக அண்மையில் வந்து முகத்திலிருந்து பாறையை தனியே எடுத்தார்கள் .

கொட்டுக்காரனின் முகத்தின் ஒருபாதி பளிங்குபோல வெண்மையாகிவிட்டது. மேலாங்கோட்டு நீலியின் பார்வை போல இடதுகண் அகோரமாக வெளியே வந்து நின்று வெறிக்க, கழுத்தின் வழியே திரவம் வழிந்து போனது. சாக்குட்டன் தன் கையிலிருந்த பாறைக்கல்லை விளைக்குள் தூக்கி எறிந்தான்.

கொட்டுக்காரன் இறைஞ்சுதலோடு வீட்டைப் பார்த்தான். ஒற்றைக்கண்ணில் தொங்கியபடி வீடு ஊசலாடியது. அபயமாக ‘’ மக்களே …’’ என்று குரல் எழும்ப முயன்று தோற்றது. ஆட்கள் இன்னமும் நெருங்கினார்கள். அவன் முகத்தின் ஒருபகுதியை கையால் மூடிக் கொண்டான். நீர்மம் கைவழியே ஒழுகியது. மறுகையால் செம்பருத்தியின் வேரைப் பற்றிக் கொண்டு சறுக்கினான். சிராய்த்துகொண்டு போன உடல் தென்னையின் மீது போய் இடிக்க அதனைப் பிடித்துக் கொண்டு எழுந்தவன் தெறித்தவாறே ஓடினான். அவர்கள் பாய்ந்து துரத்தினார்கள். அவன் உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டு ஓடினான். அப்போது அவனைப் பின் தொடர நிலவினால் மட்டுமே முடிந்தது.

பசியின் எரிவில் அதிகாலையிலேயே எழுந்தாள் புட்டுக்காரி. தலையணை போல உப்பியிருந்தது முகம். அவளது இரவு உணவு திறந்தபடியே இருக்க அருகில் மூக்கன் கைசூப்பியபடி தூங்கிக்கிடந்தான். வெளியில் வந்து கொட்டுக்காரனை நோட்டமிட்டாள். எங்கும் அவனைக் காணவில்லை.ஆணியைப் பார்த்தாள். ஒரு சவம்போல் சட்டை தொங்கிக் கிடந்தது. அதன் மீது தெரித்திருந்த சிவப்பின் நிறம் சற்று கலவரப் படுத்தியது. முற்றத்தை நோக்கி ஓடினாள். கால்களின் முன்னே தரையெங்கும் புட்டுமாவினைப்போல உறைந்த ரத்தம் மண்ணில் தீற்றலாய்க் கிடந்தது.

‘’ யே……சண்டாளா …..! ‘’ என்றபடி வீட்டைச் சுற்றி ஓடிப்போய்ப் பார்த்தாள். விளக்கில் வெளிச்சம் தெரிந்தது. அவனைத்தேடி விளையெங்கும் நாலாபுறமாக ஓடினாள். கதவுகளைத் தட்டியெழுப்பினாள். ஊர் முழித்தது. கொட்டுக்காரனைக் கண்டுபிடிக்கமுடியவில்லை . சாலைவரைத் தேடிச் சென்றாள் . வழக்கம்போல இல்லாமல் சாலையின் உயரம் இப்போது அச்சமூட்டியது பருத்தப் பாம்பொன்று அவளைக் கண்டதும் தலையைத் திருப்பிக் கொண்டதுபோல . சமநிலை தொலைந்த அவள் தன் இடைவெளியற்ற புலம்பலினூடே திரும்பினாள் . தான் போட்டிருந்த அப்பாவின் சட்டையில் சிவப்புக் கரையினைக் கண்டு அது பிடிக்காமல் துடைத்துக் கொண்டிருந்தான் மூக்கன்.

புட்டுக்காரி நிலத்தின்மீது வந்து விழுந்தாள். ‘’ …..எந்தாலிய அறுத்துப் போட்டானுவளே….’’ கைகளைக் கொண்டு தலைமீது அடித்து அழுதாள். தரையில் புரண்டாள்.

‘’ ஒருவாக் கஞ்சி கூடத் தராமையா அனுப்பிவிட்டேன்……போக்கத்தமவ……’’ என மார்பில் அறைந்தாள். விளைகள்தோரும் சத்தம் எதிரொலித்தது.

விளக்குமாடத்தில் எண்ணெய் தீர்ந்துவிட்டபடியால் திரி கூடுப் பற்றிக் கொண்டு நெளிந்தது. அதன் பிறகு நாய் சுவடியை யாருமே பார்க்கவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *