கார்மேகம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 10,616 
 

கறைபடிந்த அந்தக் கழிவறைச் சுவற்றில் பளீச்செனத் தெரியும் படியாக நிஷாவின் செல்பேசி எண்ணைக் கிறுக்கினான் ரகு.

அதன் அருகே, “Call girl… Indian model… Just RM150 only” என்றெழுதிவிட்டு அறுவெறுப்பான படம் ஒன்றையும் வரைந்தான்.

நிஷாவின் மீது அவனுக்கு இருந்த அத்தனை வன்மமும் அந்தப் பேனா முனையின் வழியாக இறங்கியிருந்தது.

“ஹ்ம்ம்.. என்னையாடி வேணாங்கிற…. இன்னிமே ஒரு இராத்திரி கூட நீ நிம்மதியா தூங்க முடியாதுடி… அனுபவி” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.

அந்த அழுக்குச் சுவற்றில் தான் எத்தனை வகையான கிறுக்கல்கள்.. அந்தச் சிறிய அறைக்குள் நடந்த மனித வக்கிரங்களுக்கெல்லாம் தான் மட்டுமே சாட்சி என்பது போல் நின்றிருந்தது அந்தச் சுவர்.

சற்று தள்ளி நின்று ஒருமுறை தான் கிறுக்கியதைப் பார்த்து மகிழ்ந்தான் ரகு. சிவப்பு மையினால் எழுதப்பட்ட அந்த எழுத்துக்கள் மட்டும் தனியாகத் தெரிந்தது.
அதைப் பார்த்த அவனுக்குள் அத்தனைக் குதூகலம்.

வந்த வேலை கன கச்சிதமாய் முடிந்துவிட்ட திருப்தியுடன் கைகழுவிவிட்டு கதைவைத் திறந்தான்.

அவன் கதவைத் திறப்பதற்கும் வெளியில் இருந்து கார்மேகம் கதவைத் தள்ளுவதற்கும் சரியாக இருந்தது.
ரகு மீது நேராக மோதப் போனவன் சுதாரித்துக் கொண்டு, “ஊப்ஸ்.. சாரி ப்ரோ” என்றான் உளறலாக..

“இட்ஸ் ஓகே” என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக நடையைக் கட்டினான் ரகு.

கழிவறையின் உள்ளே சென்ற கார்மேகம் டாய்லெட் பவுலை அடைவதற்குத் தடுமாறினான். இரத்தத்தில் கலந்திருந்த அளவுக்கதிகமான ஆல்ஹகால் அவனை ஆட்டி வைத்தது.

அங்கும் இங்கும் சுவற்றைத் தாங்கிப் பிடித்த படி ஒருவழியாக டாய்லெட் பவுலை அடைந்து வயிற்றை நிரப்பியிருந்த பீரைக் கொஞ்சம் வெளியேற்றினான். இப்போது ஓரளவு தெளிவு வந்தது போல் இருந்தது.

கை கழுவுவதற்காக டேப்பைத் திறந்த போது உள்ளங்கையில் சிவப்பு நிறத்தில் ஏதோ தெரிந்தது.

கண்களை நன்றாக சுருக்கி விரித்து, தலையை ஒரு சிலுப்பு சிலிப்பி மங்கிய பார்வையைத் தெளிவு படுத்திக்கொண்டு, மீண்டும் ஒரு முறை உள்ளங்கையைப் பார்த்தான்.

“ச்சே…செவப்பு மையி.. இரத்தம் கித்தம் வந்திருச்சோன்னு பயந்துட்டேன்.. ஹிஹிஹி” என்று சிரித்தபடி நாலா பக்கமும் சுவற்றை நோட்டம் விட்டான்.

அந்த செல்பேசி எண் அவன் கண்ணில் பட்டது. போதை மூளையில் இன்னொரு வகை இரசாயன மாற்றம்.

தனது செல்பேசியில் அந்த எண்ணைக் குறித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் கார்மேகம்.

ஒரு மாதம் ஆகியிருந்தது. கழிவறைச் சம்பவத்தை மறந்தே போனான் ரகு. வெளியூருக்கு மாற்றலாகி வந்துவிட்டதால், புதிய சூழல் தந்த உற்சாகத்தில் குதூகலமாக இருந்தான்.

அன்று வழக்கமான அலுவலில் ஈடுபட்டிருந்த ரகுவிற்கு, அவன் அம்மாவிடமிருந்து போன் வந்தது. எடுத்த எடுப்பிலேயே அம்மாவின் கதறல்.

“அம்மா.. என்னாச்சு? ஏன் அழறீங்க? என்றான் பதட்டமாக.

“ஐயா.. அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சு வலி வந்திருச்சு. ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன்யா”

“அம்மா.. அழாதீங்க.. அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது.. இதோ இப்பவே கெளம்பி நைட்டுக்குள்ள ஹாஸ்பிடல் வந்துருவேன்?” என்றான் ரகு ஆறுதலாக.

ரகு மருத்துவமனையை அடிந்து அந்த வார்டில் நுழைந்த போது அப்பா கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.

சரசு அவருக்கு அருகில் சோகத்துடன் உட்கார்ந்திருந்தாள்.

“அப்பா” என்றழைத்தபடி ஓடி வந்து சுந்தரத்தை அணைத்துக் கொண்டான்.

“வாய்யா..” என்றார் சோர்வாக.

“என்னாச்சுமா அப்பாவுக்கு .. இப்படி திடீர்னு” என்றான் ரகு.

“ரகு… உங்கிட்ட ஒன்னு சொல்லாம மறச்சிட்டேன்யா.

அப்பா தான் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு.. நீ வெளியூர்போன ஒரு வாரத்துல அக்கா, உங்க மாமாவோட சண்டை போட்டுட்டு வீட்டுக்கு வந்திட்டா. ஒன்னு ரெண்டு நாள்ல மனசு மாறி திரும்பப் போயிருவான்னு தான் நெனச்சோம். ஆனா அவ என்னடான்னா.. டைவர்ஸ் பண்ணனும்னு சொல்றா.. கல்யாணம் ஆகி இன்னும் ரெண்டு வருஷம் கூட முழுசா முடியல. அதுக்குள்ள டைவர்ஸ் அது இதுன்னு சொலிட்டு இருக்கா. புருஷன் பொண்டாட்டி ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க கொஞ்ச நாள் எடுக்கத்தாயா செய்யும். ஆனா அவ முடிவு ரொம்ப அவசரமா இருக்கு. அதை நெனச்சு நெனச்சு தான் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்திருச்சு” என்று கண்ணீர் விட்டாள் சரசு.

“என்னம்மா நீங்க.. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் அக்கா – மாமாகிட்ட பேசியிருப்பேன்ல? அப்பாவுக்கு இவ்வளவு மன அழுத்தம் ஏற்பட்டிருக்காதுல? சரி.. இப்பவே நான் அக்காகிட்ட பேசுறேன். நீங்க அப்பாவப் பார்த்துக்கங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் ரகு.

ஜெயா விடாப்பிடியாக இருந்தாள். ரகு எவ்வளவு எடுத்துக் கூறியும் அவள் மனம் மாறுவதாய் இல்லை.

“எவ்வளவு நாள் தான் பொறுமையா இருக்குறது ரகு?எதுக்கெடுத்தாலும் சந்தேகம். இப்படி உடுத்தாத, அப்படி நடக்காத… ச்சே.. ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். ஆனா அதையும் பொறுத்துக்கிட்டு அவர் கூட சேர்ந்து வாழ்ந்திட்டு இருந்தேன். இப்ப என்னடான்னா யாருன்னே தெரியாதவனோட என்னை சம்பந்தப்படுத்தி பேச ஆரம்பிச்சுட்டாரு” என்றாள் ஜெயா ஆத்திரத்திரத்தோடு.

“என்னக்கா சொல்ற? மாமாவா அப்படி நடந்துக்கிட்டாரு?” என்றான் ரகு ஆச்சர்யமாக.

“ஆமா ரகு.. இதோ இந்த நம்பர்ல இருந்து ஒருத்தன் போன் பண்ணி ரொம்ப அசிங்க அசிங்கமா பேசிட்டு இருந்தான். அவருக்குத் தெரிஞ்சா இன்னும் பிரச்சனை ஆயிடும்னு நானே சமாளிச்சிட்டு இருந்தேன்…ஒரு கட்டத்துக்கு மேல முடியல. ஏன் என்கிட்ட மொத நாளே சொல்லல? அப்ப உனக்கு அவன் பேசினது பிடிச்சிருந்ததான்னு கேட்குறாரு.” என்றாள் அழுகையை அடக்கிக் கொண்டு.

“அக்கா அந்த போன் நம்பரக் குடு.. அவனைக் கண்டுபிடிச்சு என்ன செய்றேன் பாரு” என்று கோபத்தில் பல்லைக் கடித்தான் ரகு.

“அந்த ஆளைக் கண்டுபிடிச்சாச்சு . ஏதோ ஒரு பப்ளிக் டாய்லெட் சுவத்துல என் நம்பரு எழுதியிருந்திச்சாம். போலீசும் அவனைப் பிடிச்சு, விசாரிச்சு, வார்ன் பண்ணி அனுப்பிட்டாங்க. ஆனா இது தெரிஞ்சும் அவரு என்னை சந்தேகப்பட்டு குத்திக்காட்டிப் பேசிக்கிட்டே இருக்காரு.” இம்முறை அழுகையை அடக்கமுடியாமல் அழுதேவிட்டாள்.

“பப்ளிக் டாய்லெட்ல உன் நம்பரா? எந்த நம்பரு?” என்றான் அதிர்ச்சியாக.

நம்பரைச் சொல்கிறாள் ஜெயா.

“போன மாசம் தான் இந்த பிரீபெய்ட் நம்பரை வாங்கினேன் ரகு. அதுல இருந்து எல்லாம் தப்புத் தப்பா நடக்குது.”

நம்பரைக் கேட்டதும் ரகுவுக்கு எல்லாமே புரிந்துவிட்டது. அவசர அவசரமாக அந்த பொதுக்கழிவறை நோக்கி ஓடினான்.

கழிவறையின் உள்ளே தான் எழுதிய நிஷாவின் நம்பரைத் தேடிப் பார்த்தான்.

அதன் கடைசி இலக்க எண்ணான 7, கைப்பட்டு அழிந்து பார்ப்பதற்கு 1-ஐப் போல் காட்சியளித்தது.

நிஷாவை வன்மம் தீர்க்க தான் வைத்த வினை, தனது அக்கா வாங்கிய புதிய நம்பர் மூலமாக அவர் வாழ்க்கையே பாதிக்கும் என்று அவன் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

தனது தவறை உணர்ந்து கண்ணீர் சிந்தினான். அந்த அழுக்குச் சுவற்றில் இருந்த அத்தனை எண்களையும் அழித்தான். மனம் சற்று லேசாகியிருந்தது. அந்த நாத்தம் பிடித்த கழிவறைக்குள் இருந்து சுத்தமான மனிதனாக வெளியே வந்தான்.

மாமாவிடம் பேசிப் புரிய வைத்து, அக்காவிற்கும், மாமாவிற்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்று அவன் மனம் துடித்தது.

யோசித்த படி நடந்து வந்து கொண்டிருந்த ரகுவிடம், “சார்.. ஒரு நிமிஷம்” என்று ஓடி வந்தான் கார்மேகம்.

“சார்.. நாங்க பூமராங் பிரைவேட் லிமிட்டட்ல இருந்து வர்றோம்.. உங்களுக்கோ,உங்க நிறுவனத்திற்கோ வெளியே கொடுத்த கடன் திரும்ப வராம இருந்தா, அதை நாங்க லீகலா டீல் பண்ணி உங்களுக்கே அது திரும்ப வர மாதிரி செய்வோம். பணம் உங்களுக்கு முழுசா திரும்பக் கெடச்சதுக்கு அப்புறம் தான் எங்களோட சர்வீஸ் சார்ஜையே நீங்க கட்ட வேண்டி வரும். அப்படி எதாச்சும் இருக்கா சார்?”என்றான் கார்மேகம்.

“சாரி.. அப்படி எதுவும் இப்ப எனக்கு இல்லை” என்று அங்கிருந்து நகர எத்தனித்த போது,

“சார்.. சார்.. சார்.. ஒரு நிமிஷம்.. இது என்னோட நேம் கார்டு. இதுல என் பேரு, நம்பரு,காண்டாக் இன்ஃபோ எல்லாம் இருக்கு. உங்க பிரண்ட்சுக்கு யாராச்சும் கடன் இருந்தா என்னைக் கான்டாக் பண்ணுங்க”

“ஓகே ஷ்யூர்” என்று அதைக் கையில் வாங்கிப் பார்த்தான் ரகு.

“Karmagam, Marketing Assistant, Boomerang Pvt Ltd” என்று எழுதியிருந்தது.

“கர்மா கம்” என்று வாசித்தபடி, குழப்பத்தோடு அவனைப் பார்த்தான் ரகு.

“கார்மேகம் சார்…” என்றான் கார்மேகம் சிரித்தபடி.

Print Friendly, PDF & Email

1 thought on “கார்மேகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *