காதலை மீறி நிலைத்திருக்கும் மரணம்

0
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 7,623 
 

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்
க்ரிகோரி ரபாஸாவின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில்: முரளிதரன்

செனட்டர் ஓனெசிமோ சான்செஸ் இறப்பதற்குச் சரியாக ஆறு மாதம் பதினோரு நாட்கள் மிச்சமிருந்தபோது வாழ்க் கையிலேயே தான் மிகவும் விரும்பிய பெண்ணைச் சந்தித்தார். ரோஸல் டெல் வெர்ரி கிராமத்தில் அவளைச் சந்தித்தார். அந்தத் தீவைப் பகல் நேரத்தில் பார்த்தால், பாலைவனத்தில் கடல் நீர் புகுந்திருக்கும் பகுதியைப் போலக் காட்சியளிக்கும். இரவு நேரத்தில் கடத்தல்காரர்களின் கப்பல்களுக்கான இறங்குதளமாக இருக்கும். யாருடைய வாழ்வையாவது மாற்றியமைக்கக்கூடிய யாராவது அங்கே வசிக்கக்கூடும் என யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத இடம் அது. அத்தீவின் பெயரே நகைப்பிற்குரியதுதான். அந்தக் கிராமத்தில் இருந்த ஒரே ஒரு ரோஜாவை செனட்டர் ஓனெசிமோ அணிந்திருந்தார். லாரா ஃபரினாவை அவர் சந்தித்தது அந்த மதியப் பொழுதில்தான்.

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு முறையும் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் தவிர்க்க முடியாமல் அங்கே நின்று செல்வார். விழாவுக்கான சரக்குப் பெட்டிகள் காலையிலேயே அங்கு வந்துவிட்டன. டவுன்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கும்போது கூட்டம் அதிகமாக இருப்பதாகக் காட்டுவதற்காகக் கூலிக்கு அழைத்துவரப்படும் இந்தியர்கள் இருந்த டிரக்குகள் வந்தன. பதினோரு மணி ஆவதற்குச் சற்று நேரத்திற்கு முன், இசைக் குழுவினர், வாண வேடிக்கைக் குழுவினர், வாகனங்கள் ஆகியவற்றோடு ஸ்ட்ரா பெர்ரி சோடா நிறத்தில் இருந்த அமைச்சரின் வண்டியும் வந்தது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அந்தக் காரில் இருந்த செனட்டர் அமைதியாக இருந்தார். காரின் கதவைத் திறந்தவுடன் தாக்கிய அனல் காற்றில் சற்று ஆடிப் போனார். அவருடைய தூய பட்டுச் சட்டை வெளிர் வண்ணச் சாயத்தில் நனைந்திருந்தது. அப்போதுதான் 42 வயதைத் தொட்டிருந்தார் என்றாலும் பல வருடங்கள் வயதான வராகவும் முன்னெப்போதையும் விடத் தனிமையானவராகவும் உணர்ந்தார். கோட்டிஜெனிலிருந்து கனிமவியல் துறையில் பட்டம் பெற்றிருந்த செனட்டர் மிக மோசமாக மொழிபெயர்க்கப்பட்ட லத்தீன் செவ்வியல் இலக்கியங்களை நிறையப் படிப்பார். ஒளிரும் ஜெர்மானியப் பெண் ஒருத்தியை மணந்து, ஐந்து குழந்தைகள் இருக்கின்றன. எல்லோரும் அவர்களது வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும்விட இவர்தான் சந்தோஷமானவராக இருந்தார், மூன்று மாதங்களுக்கு முன்புவரை. அடுத்த கிறிஸ்துமஸிற்குள் அவர் செத்துப்போய்விடுவார் என அப்போதுதான் சொன்னார்கள்.

ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் முடியும்வரை அவருக்காக ஏற்பாடு செய்திருந்த வீட்டில் ஒரு மணிநேரம் செனட்டருக்குத் தனிமை கிடைத்தது. படுப்பதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீரில் அந்தப் பாலைவனம் முழுவதும் தான் பாதுகாப்பாகக் கொண்டுவந்த ரோஜாவைப் போட்டுவைத்தார். தன்னுடன் கொண்டுவந்திருந்த தானியங்களால் ஆன உணவைச் சாப்பிட்டார். இனி நாள் முழுவதும் வறுத்த ஆட்டுக்கறி மட்டுமே கிடைக்கும். முன்னதாகவே செனட்டர் நிறைய வலி நிவாரண மாத்திரைகளைப் போட்டுக்கொண்டார். வலி வருவதற்கு முன்பாகவே நிவாரணம் கிடைக்கும். கயிற்றாலான ஊஞ்சலுக்கு அருகில் இருந்த மின்விசிறியைப் போட்டார். அந்த ரோஜாவின் நிழலில் சிறிது நேரம் ஆடையின்றிப் படுத்திருந்தார். சற்றுக் கண்ணயரும்போது மரணத்தின் ஞாபகமே வரக் கூடாது என்பதற்காக மனத்தை மாற்றுவதற்கு என்னென்னவோ செய்துபார்த்தார். இவருக்கு மரணத் தேதி நிச்சயிக்கப்பட்ட விஷயம் மருத்துவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த ரகசியத்தைத் தான் மட்டுமே பொறுத்துக்கொள்ள விரும்பினார் அவர். பழக்கவழக்கத்தைத் துளியும் மாற்றிக்கொள்ளவில்லை. கர்வமல்ல வெட்கம்தான் காரணம்.

மதியம் மூன்று மணிவாக்கில் பொதுமக்கள் முன்னால் நின்றபோது, தான் முழுக் கட்டுப்பாட்டுடன் இருப்பதாக அவருக்குத் தோன்றியது. ஓய்வெடுத்து, சுத்தமான, கரடுமுரடான லினென் காற்சட்டையும் பூப்போட்ட சட்டையும் அணிந்திருந்தார். வலி நிவாரணி அவரது ஆன்மாவைக் காப்பாற்றிக்கொண்டிருந்தது. ஆனாலும் மரணம் அவரை அரித்துக்கொண்டிருந்தது அவர் நினைத்ததைவிடப் பயங்கரமாக இருந்தது. மேடைமீது ஏறியபோது, அவரது கையைக் குலுக்கும் அதிர்ஷ்டத்திற்காக முண்டியடித்தவர்களைப் பார்த்தபோது விசித்திரமான இழிவுணர்ச்சி தோன்றியது. அந்தத் தரிசு நிலத்தின் பொட்டாசியம் நைட்ரேட் நிறைந்த சூடான நிலக்கரியில் வெறும் கால்களுடன் நடந்துவரும் இந்தியர்களைப் பார்த்தால் முன்பெல்லாம் பரிதாபம் வரும். இப்போது பரிதாபம் வரவில்லை. ஓங்கியெழுந்த கரவொலியை ஆவேசத்துடன் கைகளை ஆட்டி நிறுத்தினார். பிறகு எந்தவிதச் சைகையுமின்றிப் பேசத் தொடங்கினார். அவரது கண்கள் வெப்பப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த கடலைப் பார்த்தபடி நிலைத்திருந்தன. நிதானமான, ஆழமான குரலில் இருந்த அவரது பேச்சு அமைதியான நீரோட்டத்தைப் போல இருந்தது. ஆனால் மனப்பாடம் செய்யப்பட்டுப் பலமுறை ஒரே மாதிரியாக அவர் பேசிவந்த பேச்சு உண்மையைச் சொல்வதுபோல அமையவில்லை. பதிலாக, மார்க்கஸ் அரிலியஸின் நான்காம் புத்தகமான மெடிடேஷன்ஸில் வரும் மாற்ற முடியாத, வலிய விதியின் அறிவிப்புக்கு நேரெதிராக இருந்தது.

தன் எல்லா விருப்பங்களையும் மீறி, ‘இயற்கையைத் தோற்கடிக்கும் நோக்கத்துடன் இங்கே கூடியிருக்கிறோம்’ என்று ஆரம்பித்தார் அவர். ‘நாம் நம் நாட்டிலேயே அனாதைகளாக இருக்கமாட்டோம். நம்முடைய நாட்டிலேயே நாடுகடத்தப்பட்டவர்களாக, வறட்சியிலும் மோசமான பருவநிலைக்கு மத்தியிலும் கடவுளால் கைவிடப்பட்டவர்களாக இருக்கமாட்டோம். நாம் வேறு மாதிரியான மக்களாக இருப்போம். கனவான்களே, நாம் அற்புதமான, சந்தோஷமான மக்களாக இருப்போம்.’

ஒரே பாணியில் அவருடைய வித்தை இருக்கும். அவர் பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய உதவியாளர்கள் காகிதப் பறவைகளைப் பறக்கவிடுவார்கள். அந்தச் செயற்கை உருவங்கள் உயிர்பெறும். அந்தப் பறவைகள் பலகைகளாலான மேடைகளின் மீது பறந்து, கடலுக்குச் செல்லும். அதே நேரத்தில் வேறு சிலர், இலைகளுடன் கூடிய மரங்களை வேகன்களிலிருந்து இறக்கிக் கூட்டத்திற்குப் பின்னால் அந்த நிலக்கரி நிறைந்த மண்ணில் நட்டுவைப்பார்கள். இறுதியாக, அட்டைகளாலான வீடுகளை உருவாக்குவார்கள். சிவப்புச் செங்கல்கள், கண்ணாடி ஜன்னல்களுடன் பார்ப்பதற்கு நிஜ வீடுகளைப் போலவே அவை இருக்கும். இந்தப் போலிகளின் மூலம் நிஜ இடிபாடுகள் மறைக்கப்படும்.

லத்தீனில் இரண்டு மேற்கோள்களுடன் தனது பேச்சை நீட்டிப்பார் செனட்டர். அந்தப் போலி செட்களை அமைப்பதற்கான நேரத்தைப் பெறுவதற்கு இந்தக் கால அவகாசம் உதவும். மழை உருவாக்கும் எந்திரங்கள், அந்த நிலக்கரி மிகுந்த மண்ணில் காய்கறிகளை விளைய வைக்கும், ஜன்னல் தொட்டிகளில் பெரிய மலர்களைப் பூக்கும் செடிகளை வளரவைக்கக்கூடிய, சந்தோஷம் தரும் எண்ணெய்யைக் கொண்டுவருவதாக வாக்களித்தார். போலி உலகம் உருவாகி முடிந்தவுடன், அதைச் சுட்டிக்காட்டுவார். ‘சீமான்களே, சீமாட்டிகளே, நம் உலகம் இப்படித்தான் இருக்கும்’ என்று கத்துவார். ‘கனவான்களே, நம் உலகம் அப்படித்தான் இருக்கும்.’

கூட்டம் அப்படியே திரும்பிப் பார்க்கும். வீடுகளுக்குப் பின்னால் காகிதத்தாலான கடல் அலைகளைப் போல வண்ணம் தீட்டப்பட்ட காகிதம் படபடக்கும். அந்தப் போலி நகரத்தின் உயரமான வீட்டைவிடச் சற்று உயரத்தில் அலை இருக்கும். இந்தப் போலி நகர அமைப்பை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டுசெல்வதால், வெயிலிலும் மழையிலும் அடிபட்டு அந்த செட், அந்த ரோஸல் டெல் விர்ரே நகரத்தைப் போலவே புழுதிபடிந்தும் பாடாவதியாகவும் இருந்தது. ஆனால் செனட்டரைத் தவிர வேறு யாரும் அதைக் கவனிக்கவில்லை.

கடந்த 12 ஆண்டுகளில், நெல்சன் ஃபரீனா செனட்டரை வரவேற்கச் செல்லாதது இதுதான் முதல்முறை. மதியத் தூக்கத்துக்கு இடையில், ஊஞ்சலில் படுத்தபடி செனட்டரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான். தாறுமாறான பலகைகளை வைத்துக் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டில் கொடிகள் பற்றிப் படர்ந்திருந்தன. அவனது முதல் மனைவியைக் கைகால்களைப் பிணைத்துக்கட்டி குதிரைகளைக் கொண்டு நான்கு புறமும் இழுத்துக் கொன்ற அதே மருந்தாளுநன்தான் இந்த வீட்டைக் கட்டிக்கொடுத்தான். மகாவ் பறவைகளை ஏற்றிவந்த கப்பலில் ஏறி டெவில்ஸ் தீவிலிருந்து தப்பி, ரோஸல் டெல் விர்ரேவுக்கு வந்து சேர்ந்தான் நெல்சன். பரமரிபோவில் அழகான கறுப்பினப் பெண் ஒருத்தியைப் பார்த்து அவளுடன் சேர்ந்து வாழ்ந்தான். அவள் மூலம் இவனுக்கு ஒரு மகள் உண்டு. முதல் மனைவி வளர்த்த காலிஃப்ளவர் செடிக்கு அவளது சில உறுப்புகள் உரமாயின. பிறகு முழு உடலும் உள்ளூர்க் கல்லறையில் அவளது டச்சுப் பெயருடன் புதைக்கப்பட்டது. அம்மாதிரி கதியைச் சந்திக்காமல் குழந்தை பிறந்த சிறிது காலத்திலேயே அவள் இறந்துவிட்டாள். மகளுக்குத் தாயின் நிறமும் வடிவமும் வாய்த்திருந்தன. தந்தையின் மஞ்சள்நிறப் பிரமிப்பூட்டும் கண்களும் இருந்தன. உலகிலேயே மிக அழகான பெண்ணைத் தான் வளர்த்துவருவதாகக் கற்பனை செய்துகொள்ள எல்லா நியாயங்களும் அவனுக்கு இருந்தன.

செனட்டர் ஓனெசிமோ சான்செஸை அவரது முதல் தேர்தல் பிரச்சாரத்தில் சந்தித்த காலத்திலிருந்தே, நெல்சன் ஃபரீனா அவரது உதவியைக் கேட்டுவந்தான். சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக போலி அடையாள அட்டை வேண்டும். செனட்டர் சினேக பாவத்துடன் ஆனால் உறுதியாக அதற்கு மறுத்துவிட்டார். நெல்சன் ஃபரீனா விடவில்லை. பல ஆண்டுகளாக, வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம், வெவ்வேறு விதமாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்திவந்தான். ஆனால் இந்தமுறை கடற்கொள்ளையர்கள் கூடாரத்தில் உயிரோடு வேகுமாறு விதிக்கப்பட்டதைப் போல அவன் தன் ஊஞ்சலிலேயே படுத்திருந்தான். கடைசியாகக் கைத்தட்டல் கேட்டபோது, தலையைத் தூக்கி வேலியாக அமைக்கப்பட்டிருந்த பலகைகளுக்கு மேலாகப் பார்த்தான். அந்தப் போலி நகர செட்டின் பின் பகுதி தெரிந்தது. அட்டைக் கட்டடத்தின் அடிப்பகுதி, மரங்களின் வடிவம், கடலைப் போல் காகிதத்தைப் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் தெரிந்தனர். மிகுந்த கசப்புடன் காறித் துப்பினான்.

“Merde, ‘C’est le Blacamen de la politique” என்றான்.

(“சீ, கறுப்பர்களுக்கென்றே வாய்த்திருக்கும் அரசியல்” என்றான்.)

உரையாற்றி முடிந்த பிறகு, இசை முழக்கம், வாண வேடிக்கைகளுக்கு நடுவில் வழக்கம்போல நகரத் தெருக்களில் நடந்துசெல்ல ஆரம்பித்தார் செனட்டர். மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, தங்கள் பிரச்சினைகளை அவரிடம் சொல்லத் தொடங்கினர். மிகுந்த தன்மையோடு அவற்றை அவர் காதுகொடுத்துக் கேட்டார். பெரிதாக ஏதும் செய்யாமலேயே, எல்லோரையும் ஏதோ ஒருவகையில் ஆறுதல் படுத்தும் வழி அவருக்குத் தெரிந்திருந்தது. ஒரு வீட்டின் கூரையின் மேல் ஆறு சிறு குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணும் இந்தக் கூச்சலுக்கும் வாண வேடிக்கைகளுக்கும் நடுவில் தன் குறைகளை அவர் கேட்கும்படி செய்தாள்.

‘நான் உங்களிடம் அதிகம் கேட்கவில்லை செனட்டர். தூக்கிலிடப்பட்டவன் கிணற்றிலிருந்து தண்ணீர் சுமந்து வருவதற்குக் கழுதை மட்டும் வேண்டும்’ என்றாள் அந்தப் பெண்.

ஒல்லியாக இருந்த அந்த ஆறு குழந்தைகளையும் பார்த்தார் செனட்டர். ‘உன் புருஷன் என்ன ஆனான்?’ என்றார்.

‘பணம் சம்பாதிப்பதற்காக அருபா தீவுக்குப் போனான்’ என்று சொல்லிவிட்டுச் சற்று நகைப்புடன், ‘ஆனால் பல்லில் வைரம் பதித்துக்கொள்ளும் வெளிநாட்டுப் பெண்ணைத்தான் சம்பாதித்தான்’ என்றாள்.

அந்தப் பதிலைக் கேட்டு எல்லோரும் சத்தமாகச் சிரித்தார்கள்.

‘சரி, உனக்குக் கழுதை கிடைக்கும்’ என்றார் செனட்டர்.

சற்று நேரம் கழித்து, செனட்டரின் உதவியாளன் ஒரு நல்ல கழுதையை அந்தப் பெண்ணின் வீட்டிற்குக் கொண்டுவந்தான். ஆனால் அந்தக் கழுதையின் முதுகில் அழிக்க முடியாத மையில், பிரச்சார வாசகம் எழுதப்பட்டிருந்தது. செனட்டர் வழங்கிய பரிசு என்பதை இனி யாரும் மறக்க முடியாது.

அந்தத் தெருவில் மீதமிருந்தவர்களுக்கும் இம்மாதிரி சின்னச் சின்னக் காரியங்களைச் செய்து கொடுத்தார் செனட்டர். நோய் வாய்ப்பட்டுப் படுக்கையாகக் கிடந்த ஆளுக்கு ஸ்பூனில் மருந்துகூடக் கொடுத்தார். செனட்டர் அந்தத் தெருவழியாகச் செல்வதைப் பார்ப்பதற்காக, அந்த மனிதனை அந்த வீட்டின் கதவுவரை கொண்டுவந்திருந்தார்கள்.

தெருவின் முனையில், வேலியாகக் கட்டப்பட்டிருந்த பலகைகளுக்கு நடுவில் நெல்சன் ஃபரீனா தன் ஊஞ்சலில் இருந்ததை செனட்டர் பார்த்தார். வடிந்துபோய், இருண்டு கிடந்தான் அவன். இருந்தபோதும், செனட்டர் அவனை விசாரித்தார். எந்தப் பிரியத்தையும் வெளிப்படுத்தாத குரல் அது.

‘ஹலோ, எப்படி இருக்கிறாய்?’

ஊஞ்சலில் இருந்தபடியே நெல்சன் திரும்பிப் பார்த்தான். துயரம் ததும்பிய அவன் பார்வை அவரைத் தாக்கியது.

‘Moi, vous saves’ என்றான் நெல்சன்.

(‘உங்களுக்கே தெரியும்.’)

இந்தப் பேச்சைக் கேட்டவுடன் நெல்சனின் மகள் வெளியில் வந்து பார்த்தாள். அவள் மலிவான, சாயம் போன குவாஜிரோ இந்திய ஆடை ஒன்றை அணிந்திருந்தாள். தலையில் பல வண்ணங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில், முகத்தில் எதையோ பூசியிருந்தாள். இவ்வளவு கந்தரகோலத்திற்கு மத்தியிலும் அவளைக் காட்டிலும் உலகில் அழகான பெண் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. செனட்டர் மூச்சடைத்துப் போனார். ‘நாசமாகப் போக’ என்றார் ஆச்சரியத்தில். ‘இந்தக் கடவுள் எவ்வளவு பைத்தியக்காரத்தனமான காரியங்களைச் செய்கிறான்.’

அன்றிரவு தன் மகளுக்கு மிகச் சிறந்த ஆடைகளை அணிவித்து, அவளைச் செனட்டரிடம் அனுப்பி வைத்தான் நெல்சன். செனட்டர் தங்கியிருந்த இரவல் வீட்டின் வாசலில் ரைஃபிளுடன், வெப்பத்தால் முகம் தொங்கிப் போயிருந்த காவலர்கள், வாசலில் இருந்த ஒரே ஒரு சேரில் உட்காரச் சொன்னார்கள்.

செனட்டர் அடுத்த அறையில் ரோஸல் டெல் விர்ரேயின் முக்கிய ஸ்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். தனது உரையில் விட்டுப்போன உண்மைகளை அவர்களுக்குச் சொல்வதற்காகவே இந்தக் கூட்டம். பாலைவனத்தில் இருக்கும் நகரங்களில் அவர் எப்போதும் சந்திக்கும் ஆட்களைப் போலத்தான் அவர்கள் இருந்தார்கள். முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இம்மாதிரி இரவுச் சந்திப்புகளால் செனட்டர் அலுப்படைந்திருந்தார். அவரது சட்டை வியர்வையில் நனைந்திருந்தது. அந்த அறையிலிருந்த மின்விசிறியிலிருந்து வந்த சூடான காற்றில் காயவைப்பதற்காக அதைத் தன்மீது போட்டுக்கொண்டிருந்தார். மிகச் சூடாக இருந்த அந்த அறையில், அந்த மின்விசிறி வண்டைப் போல் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது.

‘காகிதப் பறவைகளை நாம் சாப்பிட முடியாது என்பது உண்மை தான். ஆட்டுச் சாணம் குவிந்திருக்கும் இந்த இடத்தில் ஒரு நாள் மரங்களும் மலர்களும் இருக்கும். நீர் நிலைகளில் புழுக்களுக்குப் பதிலாக மீன்கள் இருக்கும். அந்த நாளில் நீங்களோ நானோ எதுவும் செய்ய வேண்டியிருக்காது. நான் சொல்வது புரிகிறதா?’ என்றார் செனட்டர்.

யாரும் பதில் சொல்லவில்லை. பேசிக்கொண்டிருந்தபோதே, செனட்டர் காலண்டரிலிருந்து ஒரு காகிதத்தைக் கிழித்தார். அதை வைத்து காகிதப் பட்டாம்பூச்சியைச் செய்தார். மின்விசிறியிலிருந்து காற்று வந்த திசையில் அந்தப் பட்டாம் பூச்சியைப் பறக்கவிட்டார். அது அறையைத் தாண்டிப் பாதித் திறந்திருந்த கதவின் வழியாக வெளியில் போய் விழுந்தது. மரணத்தின் பிடியிலிருக்கும் உணர்வுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார் செனட்டர்.

‘அதனால், உங்களுக்கு ஏற்கனவே நன்றாகத் தெரிந்ததை நான் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது, என்னைவிட உங்களுக்கு நல்லது. தேங்கிக்கிடக்கும் தண்ணீர், இந்த வெப்பம் எல்லாம் எனக்கு அலுத்துவிட்டன. ஆனால் இதில் தான் உங்கள் வாழ்க்கையே இருக்கிறது’ என்றார் அவர்.

அந்தக் காகிதப் பட்டாம்பூச்சி வருவதை லாரா ஃபரீனா பார்த்தாள். முன்னறையில் இருந்த பாது காவலர்கள் தங்கள் ரைஃபிள்களைக் கட்டிப்பிடித்தபடி தூங்கிக்கொண்டிருந்தார்கள் என்பதால், அந்தப் பட்டாம்பூச்சியை அவள் மட்டும்தான் பார்த்தாள். சிறிது தூரம் சென்ற அந்தப் பட்டாம்பூச்சி, முழுமையாக விரிந்து, சுவரில் முட்டியது. அதிலேயே ஒட்டிக்கொண்டது. அதைச் சுவரிலிருந்து தன் நகத்தின் மூலம் பிரிப்பதற்கு முயன்றாள் லாரா. இதற்குள், அடுத்த அறையில் எழுந்த கைத்தட்டல் சத்தத்தில் விழித்துக்கொண்ட பாதுகாவலன் ஒருவன் அவளது செய்கையைப் பார்த்தான்.

‘சுவரில் பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். அது வராது’ என்றான் தூக்கக் கலக்கத்துடன்.

கூட்டம் முடிந்து ஆட்கள் வெளியில் வர ஆரம்பிக்கவும், லாரா ஃபரீனா மீண்டும் உட்கார்ந்து கொண்டாள். தாழ்ப்பாளைப் பிடித்தபடி செனட்டர் அந்த அறையின் வாசலில் நின்றுகொண்டிருந்தார். அந்த அறை காலியான பிறகுதான், அங்கே லாரா இருந்ததை அவர் பார்த்தார்.

‘இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’

‘C’est de la part de mon pere’ என்றாள்.

(‘என் தந்தை அனுப்பிவைத்தார்.’)

செனட்டர் புரிந்துகொண்டார். தூங்கிக்கொண்டிருந்த பாதுகாவலர்களை நோட்டமிட்டார். பிறகு லாராவை நோட்டமிட்டார். அவரது வலியைவிட, அவளது அழகு சக்திமிக்கதாகத் தோன்றியது. மரணம் தனக்காக அந்த முடிவை எடுத்ததாக அவர் நம்பினார்.

‘உள்ளே வா’ என்றார்.

லாரா ஃபரீனா அறைக்குள் செல்லும் வாசலிலேயே திகைத்துப்போய் நின்றுவிட்டாள். ஆயிரக்கணக்கான ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து, பட்டாம்பூச்சியைப் போல் பட படத்துக்கொண்டிருந்தன. செனட்டர் மின்விசிறியை நிறுத்தினார். காற்றில்லாததால், அந்தத் தாள்கள், அங்கிருந்த பொருள்களின் மீது படிந்தன.

பள்ளிக்கூடத்துப் பையன்கள் உட்கார்வது போன்ற ஸ்டூலில் அமர்ந்தாள் லாரா. அவளது சருமம் மென்மையாகவும் உறுதியாகவும் இருந்தது. கச்சா எண்ணெய்யின் வண்ணத்திலும் அடர்த்தியிலும் இருந்தது. அவளுடைய தலைமுடி குதிரையின் முதுகில் இருக்கும் முடியைப் போல இருந்தது. கண்கள் பெரியனவாகவும் விளக்கைவிடப் பிரகாசமானதாகவும் இருந்தன. அவளை அங்கம் அங்கமாகப் பார்த்துக்கொண்டேவந்த செனட்டர், கடைசியில் ரோஜாவைப் பார்த்தார். அந்தப் பொட்டாசியம் நைட்ரேட் மிகுந்த காற்றில் ரோஜா நாசமாகியிருந்தது.

‘இது ரோஜா’ என்றார் செனட்டர்.

சிறிய குழப்பத்துடன், ‘ஆமாம், ரியோஹசாவில் அவை இருப்பது பற்றி அறிந்திருக்கிறேன்’ என்று சொன்னாள்.

சட்டையைக் கழற்றியபடியே, ரோஜாக்களைப் பற்றிப் பேசிக்கொண்டே அங்கிருந்த ராணுவக் கட்டிலில் அமர்ந்தார் செனட்டர். தன் மார்புக்குள் இதயம் இருப்பதாகத் தான் நினைத்துக்கொண்டிருந்த பக்கத்தில், இதயத்தை அம்பு துளைத்துச்செல்வது போன்ற பச்சை குத்தியிருந்தார். நனைந்துபோயிருந்த சட்டையைத் தரையில் தூக்கியெறிந்தவர், தன் பூட்ஸ்களைக் கழற்ற உதவும்படி லாராவிடம் சொன்னார்.

கட்டிலைப் பார்த்தபடி அவள் மண்டியிட்டு உட்கார்ந்தாள். மிகுந்த கவனத்துடன் அவளைத் தொடர்ந்து ஆராய்ந்தார் செனட்டர். அவள் பூட்ஸின் நாடாக்களைக் கழற்றிக்கொண்டிருந்தபோது, அவருக்குள் சிந்தனை ஓடியது. இந்தச் சந்திப்பின் முடிவில் அதிர்ஷ்டம்கெட்டவர்களாக இருக்கப்போவது யார்?

‘நீ குழந்தை’ என்றார் செனட்டர்.

‘இந்த ஏப்ரல் வந்தால் எனக்குப் பத்தொன்பது வயது முடிகிறது. நம்பமாட்டீர்களா?’ என்றாள் லாரா ஃபரீனா.

செனட்டர் ஆர்வமானார்.

‘எந்தத் தேதி?’

‘பதினொன்றாம் தேதி.’

செனட்டருக்கு ஆசுவாசமாக இருந்தது. ‘நாம் இருவருமே ஏரிஸ் ராசி’ என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தார்.

‘அது தனிமையின் சின்னம்’ என்றார் தொடர்ந்து.

லாரா ஃபரீனா அவர் பேசியதைக் கவனிக்கவில்லை. அந்தப் பூட்ஸ்களை என்ன செய்வதென்று தெரியாத குழப்பத்தில் இருந்தாள். லாரா ஃபரீனாவை வைத்து என்ன செய்வது என்ற குழப்பம் செனட்டருக்கு. திடீர்க் காதல் அவருக்குப் பழக்கமானதல்ல. தவிர தற்போது கைவசம் இருக்கும் பெண்ணின் பூர்வீகம் அவ்வளவு கண்ணியமானதல்ல. யோசிக்க அவருக்கு நேரம் தேவைப்பட்டது. தன் கால்களுக்கு இடையில் லாராவை இறுக்கிப் பிடித்துக்கொண்டார். இடுப்பருகில் பிடித்துக் கட்டிப்பிடித்தார். அப்படியே கட்டிலில் படுத்தார். அவள் மேலாடைக்குள் எதுவும் அணிய வில்லை என்பதைப் பிறகுதான் செனட்டர் உணர்ந்தார். காட்டிற்குள் வசிக்கும் மிருகத்தின் அழுத்தமான வாசனையை அவள் உடல் வெளியிட்டுக்கொண்டிருந்தது. அவள் இதயம் வேகவேகமாக அடித்துக்கொண்டிருந்தது. உடல் முழுவதும் வியர்த்திருந்தது.

‘யாரும் நம்மீது அன்பு செலுத்துவதில்லை’ என்று சலித்தார்.

லாரா ஃபரீனா எதையோ சொல்ல முயன்றாள். ஆனால் அவள் மூச்சுவிடுவதற்குப் போதுமான காற்று மட்டுமே இருந்தது. அவளுக்குச் சௌகர்யமாக இருக்கும்வகையில், செனட்டர் அவளைப் பக்கத்தில் படுக்கவைத்தார். விளக்கையும் அணைத்தார். அந்த அறை இப்போது ரோஜாவின் வெளிச்சத்தில் இருந்தது. அவள் தன் விதியின் கருணையில் தன்னை ஒப்படைத்தாள். செனட்டர் அவளை மெதுவாகப் பிணைந்துகொண்டிருந்தார். தன் கரங்களால் அவளைத் தேடும் வேட்டையை நடத்திக்கொண்டிருந்தார். அவளைக் கண்டுபிடிக்கும் இடத்தில், இரும்பினால் ஆன ஏதோ ஒன்று அவரைத் தடுத்தது.

‘அங்கே என்ன இருக்கிறது?’

‘பூட்டு’ என்றாள் அவள்.

‘நாசமாப் போச்சு’ என்று செனட்டர் ஆத்திரத்துடன் சொன்னார். ‘சாவி எங்கே?’

லாரா ஃபரீனா நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள்

‘என் அப்பாவிடம் இருக்கிறது’ என்று பதிலளித்தாள். ‘உங்கள் ஆள் ஒருவரை அனுப்பி அதைப் பெற்றுக்கொள்ளும்படி சொன்னார். அவருடைய நிலையைச் சரிசெய்வீர்கள் என்ற வாக்குறுதியை எழுத்து மூலமாக அந்த ஆளிடம் கொடுத்து அனுப்பும்படியும் சொன்னார்.’

செனட்டரின் படபடப்பு அதிகரித்தது. ‘தவளைக்குப் பிறந்தவன்’ என ஆத்திரத்துடன் முணுமுணுத்தார். ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வகையில் கண்களை மூடிக்கொண்டு, அந்த இருளில் தன்னைப் பற்றி யோசித்தார். ‘யோசித்துப் பார். நீயோ வேறு யாரோ விரைவிலேயே இறந்துவிடுவீர்கள். விரைவிலேயே உன் பெயர்கூட எஞ்சியிருக்காது’ என்று நினைத்தார்.

அந்த நடுக்கம் மறைவதற்காகக் காத்திருந்தார்.

‘ஒரு விஷயத்தைச் சொல், என்னைப் பற்றி என்ன கேள்விப்பட்டிருக்கிறாய்?’ என்று கேட்டார்.

‘கடவுள்மீது சத்தியமாக உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?’

‘கடவுள்மீது சத்தியமாக உண்மையை . . .’

‘மற்றவர்களைவிட நீங்கள் மோசமானவர். காரணம் நீங்கள் வித்தியாசமானவர் என்கிறார்கள் அவர்கள்’ என்று லாரா ஃபரீனா துணிந்து சொன்னாள்.

செனட்டர் இதைக் கேட்டுச் சோர்ந்துபோகவில்லை. கண்களை மூடிக்கொண்டு சற்று நேரம் பேசாமல் இருந்தார். கண்களைத் திறந்தபோது, தனது ரகசிய உணர்வுகளிலிருந்து அவர் மீண்டிருந்தார்.

‘அவன் நிலையைச் சரிசெய்வதாக, தேவடியாள் மகனான உன் தந்தையிடம் சொல்’ என்று சொன்னார் செனட்டர்.

‘நீங்கள் விரும்பினால், நானே போய்ச் சாவியை வாங்கிவருகிறேன்’ என்றாள் லாரா ஃபரீனா.

செனட்டர் அவளை இழுத்துப் பிடித்தார்.

‘சாவியை மறந்துவிடு. கொஞ்ச நேரம் என்னோடு தூங்கு. மிகத் தனிமையாக இருக்கும்போது, யாரோடாவது இருப்பது நல்லது’ என்றார் செனட்டர்.

பிறகு அவள் கண்கள் ரோஜாவில் நிலைத்திருக்க செனட்டர் அவள் தோளில் தலைசாய்த்தார். இடுப்பருகில் அவளைப் பிடித்து, மிருக வாடை அடித்த அவளது கக்கத்தில் முகத்தைப் புதைத்தார். லாரா ஃபரீனாவுடனான உறவால், மக்களால் கைவிடப்பட்டு, தூற்றப்பட்டு அவள் இல்லாமல் இறந்து போவது குறித்து விம்மிவிம்மி அழுதபடி ஆறு மாதம் பதினொரு நாட்களுக்குப் பிறகு இதே நிலையில் மரணம் அவரைத் தழுவப்போகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *