தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 8,500 
 

“”சகுந்தலா… காபி கொண்டா… லஷ்மணன் வந்திருக்கான் பார்…” சமையலறையை நோக்கி, குரல் கொடுத்த வைத்தியநாதன், தன் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தார்.
“”அப்புறம்… சொல்லுடா லஷ்மணா… உன்னோட கேஷியர் வேலை எப்படி போகுது?”
காணி நிலம்“”அடப்போடா நீ வேற… காலைலேர்ந்து ராத்திரி வரைக்கும் திரும்பத் திரும்ப பணத்தை எண்ணி, எண்ணி ஒரே போர்… வெறுப்பா இருக்குடா… ” சலித்துக் கொண்டார் லஷ்மணன்.
“”பணி ஓய்வுக்கு அப்புறம் வீட்டிலேயே சும்மா இருக்க போரடிக்குதுன்னு நீ தானடா ஜவுளிக்கடையில் போய் வேலைக்குச் சேர்ந்தே?”
“”ஆமா… அதிக சிரமமில்லாத வேலை. வருமானமும் வரும்; நமக்கும் போரடிக்காம இருக்குமேன்னு சேர்ந்தேன். ஆனால், கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் போச்சு…” சொல்லும் போதே, “”வாங்கண்ணா” என வரவேற்றப்படி, காபியுடன் வந்தாள் சகுந்தலா.
பொதுவாக நலம் விசாரித்து விட்டு, இருவருக்கும் காபி கொடுத்த பின், அவள் உள்ளே போனதும், மவுனமாக இருவரும் காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தனர்.
லஷ்மணன் சலித்துக் கொள்வதிலும் நியாயம் இருப்பதாக தோன்றியது. வைத்தியநாதனுக்கு, சில சமயங்களில் போரடித்தாலும், எந்த வேலைக்கும் போகவில்லை; அதற்கான நிர்பந்தமும் இல்லை. வங்கியில் உயரதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வு பெற்று இரண்டு வருடங்களாகியது. பென்ஷனைத் தவிரவும், கணிசமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். பூர்வீக சொத்தை விற்றுக் கிடைத்த பணத்தில், இந்த பங்களாவைக் கட்டி, சுற்றிலும் தோட்டம் துரவுமாக வசதியாக வாழ்கிறார்.
ஒரு மகனும், மகளும் திருமணமாகி வாழ்க்கையில் நல்லபடி செட்டிலாகி விட, ஒரு சில சமூகப்பணிகள் தவிர, மனைவியுடன் கோவில், குளம் என்று ஓய்வுக்குப் பின் நிம்மதியாகப் போகிறது வாழ்க்கை.
“”அது கிடக்கட்டும் வைத்தா… பரமன் ஒழுங்கா வேலை செய்கிறானா… உனக்குப் பிடிச்சிருக்கா?”
“”நானே சொல்லணும்ன்னு நினைச்சேன்… நீ கேட்டுட்டே. பரமனை வாட்ச்மேன் வேலைக்குன்னு நீ சேர்த்து விட்டே. ஆனா, அவன் முழுநேரமும் தோட்டதுலதான் இருக்கான். அப்பப்போ கூப்பிட்டுத்தான் மற்ற வேலைகளை வாங்க வேண்டியதாயிருக்கு,” சொல்லிக் கொண்டே நண்பனை அழைத்துப் போய், பின், பக்கம் தோட்டத்தைக் காட்டினார் வைத்தியநாதன்.
பார்த்ததுமே அசந்து போனார் லஷ்மணன். பராமரிப்பின்றி காட்டுச் செடிகள் மண்டிக் கிடந்த அந்தத் தோட்டம் இப்போது நந்தவனமாகியிருந்தது.
மூன்று மாதங்களுக்கு முன் தான் அவனை இங்கே சேர்த்து விட்டார். ஆனால், அதற்குள் ஒரு பக்கம் செடிகளில் செம்பருத்தியும், நந்தியாவட்டையும் சிரித்தன.
மறுபக்கம் பாத்தி கட்டி வளர்க்கப்பட்ட வெண்டையும், கத்தரியும், செடி கொள்ளாமல் காய்த்திருந்தது. சிறு புல் போல் கொத்தமல்லியும், கீரையும் படர்ந்திருந்தது.
வேப்பமரத்தின் மீதும், மாமரத்தின் மீதும் அவரையோ, பூசணியோ தன் கொடியை ஏற்றிக் கொண்டிருந்தது. பூச்சியரித்த தென்னை மரங்களின் கீழ் மருந்து வைக்கப்பட்டிருந்தது.
“”தோட்டம் எப்படி ஜொலிக்குது பார்… கைதேர்ந்த வேலைக்காரன்டா அவன்,” பெருமையாகச் சொன்னார் வைத்தியநாதன்.
“”இதுல ஆச்சரியப்பட என்னடா இருக்கு? சேத்துலயும், நாத்துலயும் வாழ்ந்து பழக்கப்பட்ட அவனுக்கு, உன் தோட்டம் எம்மாத்திரம்… ஊர் பக்கம் காணி நிலத்துக்கு சொந்தக்காரன் அவன். பாவம்… நிலத்தை அடமானம் வச்சு, ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி, பொண்டாட்டிக்கு வைத்தியம் பார்த்து… இப்பக் கூட வயித்துப்பாட்டுக்காகப் பட்டணம் வரலை அவன். சீக்கிரம் நாலு காசு சம்பாதிச்சு, நிலத்தை மீட்கணுமாம். சொல்லிக்கிட்டு அலையறான் பைத்தியக்காரன்… ஏன்னா, அடமானம் வாங்கினவன், நிலத்துல சாகுபடி எதுவும் செய்யாம, அப்படியே போட்டு வச்சிட்டானாம். அது, இவனுக்குத் தாங்கல…”
மேலும் கொஞ்ச நேரம் அரசியல் பேசிவிட்டு, கிளம்பி விட்டார் லஷ்மணன்.
“டிவி’யை ஆன் செய்தார் வைத்தியநாதன். தலைப்புச் செய்திகளில், புவி வெப்பமயமாதலைத் தடுக்க ஆலோசிக்கும் உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள நம் பிரதமர் வெளிநாடு சென்றிருப்பதாக தெரிவித்தனர்.
வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தென் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவிலுக்கு, தங்கக்கூரை அமைப்பதற்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்திருப்பதைப் பெருமையுடன் கூறினர்.
அடுத்து, உள்ளூரில் போதிய மழையின்மையால், விவசாயம் பாதித்து, அதனால், ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க முடியாமலும், கடன் தொல்லையாலும், விவசாயிகள் தற்கொலை… என்று சாதாரணமாகச் சொல்லினர்.
அடிக்கடி வரும் இது போன்ற செய்திகள் அவருக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
கடன் தள்ளூபடி, இலவச மின்சாரம் என்று, அரசு எவ்வளவோ சலுகைகள் தந்தும், ஏன் சோகம் தொடர்கதையாகவே இருக்கிறது. ஏற்கெனவே விளைநிலங்கள் எல்லாம் கட்டடங்களாக மாறிவரும் நிலையில், இந்த அவலமும் தொடருமானால், நாளைய சாப்பாட்டுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று, உலகையே அச்சுறுத்தும் இந்தக் கேள்வி, அவருக்குள்ளும் அடிக்கடி எழத்தான் செய்தது.
ஆனால், “தனி மனிதன் என்னால் என்ன செய்ய முடியும்…’ என்று, தானே பதில் சொல்லிக் கொண்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார்.
ஏனோ இன்று, கோடி ரூபாய் பணம், பயன்பாட்டுக்கு வராமல், கோவில் கூரையில் முடக்கப்படுவதில் யாருக்கு என்ன லாபம்? அரசு இதைக் கண்காணித்து, பணம் விவசாயப் பயன்பாட்டுக்கும் வர வரிச்சலுகை தந்து ஊக்குவிக்கலாமே… என்று மனம் அதிகமாக சஞ்சலப்பட்டது.
தூரத்தில், தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த பரமன் கண்ணில் பட்டான். நல்லவேளை… இவன் அந்த மாதிரி முடிவுக்குப் போகாமல் நம்பிக்கையோடு பிரச்னையை எதிர்கொண்டிருக்கிறான்… என்று தோன்றியது.
இவனைப் போல, நிறைய விவசாயக் குடும்பங்கள், நகரங்களுக்கு இடம் பெயர்ந்து, கட்டட வேலையிலும், மற்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருவது ஆரோக்கியமான விஷயமில்லை என்றாலும், வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் இதைச் செய்தாக வேண்டியுள்ளது.
அதிலும் பரமன் வித்தியாசமானவன். அடமானத்தில் மூழ்கிய நிலத்தை மீட்க இங்கே வந்து போராடுகிறான்.
ஆனால் நான்… விவசாயம் பார்க்க ஆளில்லாமல் கிடந்த என் பூர்வீக நிலத்தை ஏதோ வெளிநாட்டுக் கார் கம்பெனிக்கு நல்ல விலைக்கு விற்று, வந்த பணத்தில் இந்த பங்களாவைக் கட்டி, வாழ்ந்து கொண்டிருக்கிறேன்… என்று, தப்பு செய்து விட்டதாக குற்ற உணர்வு ஏற்பட்டது; அவமானமாகவும் இருந்தது!
நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவரை, தட்டி, சாப்பிட அழைத்தாள் சகுந்தலா. மவுனமாக, ஆழ்ந்த சிந்தனையுடனேயே சாப்பிட்டு முடித்தார்.
“”என்ன… யோசனையெல்லாம் பலமா இருக்கு ரெண்டு நாளா?” கேட்டுக் கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
“”சொல்றேன்… மகனும், மருமகளும் ஆபிஸ் போயாச்சா?” என்றவர், நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
“”நாம கிராமப் பக்கம் போய் விவசாயம் பண்ணலாமா?” அவர் முடிப்பதற்குள் பெரிதாகச் சிரித்தாள் சகுந்தலா.
“”விவசாயத்தைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” என்றாள் சிரிப்பினிடையில்.
“”ஏன் தெரியாமல்… எங்க தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்துல விவசாயம் தானே தொழில். என் அப்பா வாத்தியாரா வேலை பார்த்தாலும், இருந்த கொஞ்ச நிலத்துல நெல்லு, பயறுன்னு ஏதோ முடிஞ்சவரைக்கும் பாத்துக்கிட்டு தானே இருந்தார்…
“”அது மட்டுமில்ல சக்கும்மா… நான் என்னை நம்பியோ, என் பணத்தை நம்பியோ, ஏன்… மண்ணை நம்பியோ கூட விவசாயத்துல இறங்கறதுக்கு முடிவு பண்ணல. ஒரு நல்ல, உண்மையான விவசாயியை நம்பி, களமிறங்கப் போறேன். என்ன புரியலையா…
“”நம்ப பரமனைத் தான் சொல்றேன். அவனோட நிலத்தை மீட்டுக் கொடுத்து, அதில் சாகுபடி செய்யலாம். கிடைப்பதை அவன் பாதி, நாம பாதி பிரிச்சுக்கலாம். என்ன சொல்றே?”
“”திடீர்ன்னு ஏன் இந்த யோசனை? பரமன் மேல அப்படி என்ன அக்கறை?”
“”இருண்டு கிடக்கிற ஒரு விவசாயி வாழ்க்கையிலாவது விளக்கேத்தலாம்ன்னு தான். அதுவுமில்லாம நிலத்தை உழுது, தொழுது வாழ்ந்த எங்க பரம்பரையில, நான் அதை வித்து வாழ்ந்துக்கிட்டிருக்கேன். அதனால, பூமித் தாய்க்கு என்னாலான ஒரு சின்ன நன்றிக் கடனா, பரிகாரமா இருக்கட்டுமே!”
சகுந்தலா முடிவு சொல்லத் தெரியாமல், குழம்பிப் போய் தன் மகன், மகள், லஷ்மணனுக்கு போன் செய்தாள்.
விக்னேஷ் ஆபிசிலிருந்து வீட்டுக்குள் நுழைந்ததுமே, “”என்னப்பா… என்னாச்சுப்பா உங்களுக்கு? பணத்தை ஏதாவது ஷேர்ல போடுங்கன்னா கேட்காம, இப்போ தேவையில்லாததெல்லாம் யோசிக்கிறீங்க…” என்றான்.
“”விவசாயத்துல முதலீடு செய்தா என்னடா தப்பு?”
“”எதுக்குப்பா அனாவசியமா ரிஸ்க் எடுக்கணும்?”
“”ஷேர் பிசினஸ்ல மட்டும் ரிஸ்க் இல்லையா? அது போல… இதுல நஷ்டம் வந்தாலும் என்ன… பென்ஷன் எனக்குப் போதும். மன நிறைவுக்காகத்தான் இதைச் செய்யறேன்…”
அதற்குள் லஷ்மணனும் வந்து விட்டார்.
“”என்னடா கூத்து இது… ரத்தம் செத்துப் போற வயசுல ஏண்டா இப்படி ஒரு ஆசை… வாழ்க்கை நிம்மதியா போறது பிடிக்கலையா உனக்கு?”
“”அப்படி இல்லடா லச்சு… இளம் ரத்தம் ஓடினப்போ, ரிஸ்க் எடுக்க பயமாயிருந்தது. ஏன்னா… அப்ப காலைச் சுத்தி ஏகப்பட்ட பொறுப்பு, கட்டுப்பாடு. மருத்துவம் படிச்சு, சமூக சேவையா, அர்பணிப்பு உணர்வோட செயல்படணும்ன்னு ஆசைப்பட்டேன்; முடியாமப் போச்சு. சரி… வசதி வாய்ப்புகள் இருக்கும் போது, நம்ம பையனையாவது டாக்டருக்குப் படிக்க வைக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்; ஆனா, அவன் கம்ப்யூட்டர் பின்னாடி போயிட்டான்.”
“”என்னப்பா நீங்க… உங்க காலத்துல வெறும் எம்.பி.பி.எஸ்., படிச்சாலே போதும். ஆனா, இப்ப அப்படியா? முழுசா பத்து, பனிரெண்டு வருஷம் படிச்சுட்டு, சில வருஷம் முறையான பயிற்சிக்கப்புறம் தான் டாக்டர்னே ஒத்துப்பாங்க. உங்களோட ஆசைக்காக நான் அவ்வளவு பொறுமையா படிக்கணுமா?” இடை மறித்தான் விக்னேஷ்.
“”அதனால் தான், உன் விருப்பப்படியே விட்டுட்டேன். ஏன்னா, படிப்பைத் திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. குடும்பத்தையும், வேலையையும் சரியாக கவனிக்க முடிகிற டீச்சர் வேலைதான் பார்ப்பேன்னு சொல்லி, ரம்யாவும் மறுத்துட்டா. உங்கள் எதிர்காலத்தைத் திட்டமிட்டு நீங்கள் அணுகியது சந்தோஷம் என்றாலும், எல்லாருமே சுயநலமாக யோசிப்பது வருத்தமாகவும் இருந்தது. சரி… அதெல்லாம் முடிந்து போன கதை. இப்ப எனக்கு எந்த பொறுப்புமில்லை. இப்பவாவது என் விருப்பத்துக்கு வாழ்ந்து பார்க்கப் போறேன்…” முடிவாகச் சொன்னவர், பரமனையும் கூப்பிட்டு விஷயத்தை விளக்கினார்.
அவன் உணர்ச்சிப் பெருக்கில், அப்படியே அவர் கால்களில் விழுந்தான்.
எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்தது. பரமனை அழைத்துக் கொண்டு, திருவண்ணாமலை பக்கத்திலுள்ள அவன் கிராமத்துக்குச் சென்று, அடமானம் பெற்றவரிடம் பணத்தைக் கொடுத்து, நிலத்தை மீட்டார். பரமனின் பெயரிலேயே பத்திரம் இருக்கட்டும் என்று சொல்லி, அவனிடம் கொடுத்தபோது, அதை வாங்கி கண்களில் பயபக்தியுடன் ஒற்றிக்கொண்டு, அவரிடமே பத்திரமாக இருக்கட்டும் என்று திருப்பிக் கொடுத்து விட்டான். சரியென்று சொல்லி, அங்கேயே வாடகைக்கு ஒரு வீடும் பார்த்து, முன் பணம் கொடுத்து விட்டு ஊர் திரும்பினார்.
“”எல்லாம் சரிங்க… ஆனால், பரமனை அங்கே பார்த்துக்கச் சொல்லிட்டு, நாம அப்பப்ப போய்ப் பார்த்தா போறாதா? நமக்கு அங்கே பொழுது எப்படிப் போகும்?” என்றாள் கவலையாய்.
“”சகுந்தலா… எல்லாக் கடமைகளும் முடித்து, வசதியும், ஆரோக்கியமும் வாய்ச்ச நம்மைப் போன்றவர்கள், வெட்டியா இங்கே பொழுதைக் கழிக்கறதுக்குப் பதிலா, கிராமங்களுக்கு இடம் பெயர்ந்தா கிராமமும் செழிக்கும். வயதானவர்கள் இளைய சமுதாயத்துக்கு வழிவிட்டு, இடம் விட்டு ஒதுங்கணும்… அப்பதான் பிழைப்பு தேடி வரும் மக்களுக்கு, நகரத்துல இடம் கிடைக்கும்.
“”உனக்குப் பொழுது போகலைன்னா… சாயந்திரம் நேரத்துல அங்கிருக்கிற குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடு… நான் யோகா கத்துக் கொடுக்கிறேன். அதுபோக, அரைமணி நேரப் பயணத்துல அருணாச்சலேஸ்வரர் தரிசனம். எல்லாத்தையும் விட சகுந்தலா… கோவில் கும்பாபிஷேகத்துக்கும், வெளிநாட்டு டூருக்கும் செலவு செய்தப்போ கிடைக்காத திருப்தி, இப்போ எனக்குக் கிடைச்சிருக்கு… இதைவிட வேறென்ன வேணும்?
“காணி நிலம் வேண்டும் -பராசக்தி
காணி நிலம் வேண்டும் -அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் -அங்கே
பத்துப் பனிரெண்டு தென்னைமரங்கள் வேணும்
கத்துங் குயிலோசை சற்றே காதில் பட வேணும்…’
என்ற பாரதியாரின் விருப்பம், கனவு நமக்கு வசப்படப் போகிறது சக்கும்மா.”
மறுவாரம்… சாமான்களை ஏற்றிக்கொண்டு அந்த மினி வேன் திருவண்ணாமலை நோக்கிக் கிளம்ப, பின்னாலேயே காரில் புறப்பட தாயாராயினர் அந்தத் தம்பதியர்.
“”நினைச்சதைப் பிடிவாதமா சாதிச்சிட்டீங்கப்பா…” என்றான் விக்னேஷ்; மருமகளும் அதை ஆமோதித்தாள்.
“”எப்போடா…” சிரித்தார் வைத்தியநாதன்.
“”என் இருபது வயசுல, நாப்பது வயசுல ஆசைப்பட்டது நடக்கல… இப்ப அறுபதுக்கு மேலயாவது நடக்கட்டுமே. அதுவும் சின்ன ஆசைதான்டா… என் சார்பா… வரும் சந்ததிக்கு நாலு மரம் வளர்க்கப் போறேன்… அவ்வளவுதான்… வரட்டுமாம்மா…” என்றவரின் கன்னத்தில், “”வெரி கிரேட்” என்று சொல்லி, முத்தமிட்டான் விக்னேஷ்.
“”பேப்பரை படிச்சுட்டு, அரைமணி நேரம் அதைப்பற்றி அனல் பறக்க விவாதம் பண்ணிட்டு, பேப்பரை மடித்து வைக்கும்போதே பிரச்னைகளையும் மறந்து விடும் மக்கள் மத்தியில், பொதுப் பிரச்னைக்குத் தீர்வு காண உன்னாலான முயற்சி எடுத்திருக்கேடா நீ…
“”வாழ்க்கையில் தன்னிறைவு பெற்றுவிட்ட ஒவ்வொருத்தரும் உன்னைப் போல பொதுப் பிரச்னைகளை, தேவைகளைத் தீர்ப்பதற்கு கை கொடுக்க ஆரம்பிச்சிட்டா இந்த பூமி நிச்சயம் வெப்பமயமாகாது… மாறா, சந்திரனைப் போல குளிர்ச்சியாகும்…” என்றார் வழியனுப்ப வந்த லஷ்மணன். தொடர்ந்து, “”பக்கத்துலேயே அரைக்காணி கிடைச்சா சொல்லுடா… நானும் வந்துடறேன்…” என்றார். நீங்களும் வருகிறீர்களா? ***

– லதா சந்திரன் (டிசம்பர் 2010)

டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை – 5

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *