கவலைப்படேல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 6,768 
 

சென்னை, அம்பத்தூர் தொழிற் பேட்டை. நான் எனது சின்ன தொழிற்சாலைக்குள் நுழைந்தேன். நான்கு லேத்துகள், இரண்டு பிரஸ்ஸிங் மிஷின், மூன்று ட்ரில்லிங் மிஷின் இவ்வளவு தான் என் பட்டறை..

முன்னுக்கு வர முயன்று கொண்டிருக்கும் சிறிய தொழில் அதிபர் நான். என் பாக்டரியில் மொத்தமே 15 பேர்தான், என்னையும் சேர்த்து.

“துரை! கொஞ்சம் என் ரூமுக்கு வா!”. துரை, எனது கம்பெனி சுபெர்வைசெர், உள்ளே நுழைந்தான்.

“என்ன சார்! போன காரியம் என்னாச்சு? டைம் கேட்டீங்களா?”

“இல்லே துரை, ரொம்ப நெருக்கறான். இன்னும் பதினைந்து நாளில் 1000 யூனிட் டெலிவரி வேணுமாம்!”

“அதுக்கு சான்சே இல்லே சார். குறைந்தது ஒரு மாசமாவது ஆகும். இன்னும் பிரசிஷனே வரல்லே”

“என்ன துரை, நாலு நாளா அதேதான் சொல்லிக்கிட்டு இருக்கே!”

“நான் என்ன சார் பண்ணட்டும்! ஒரு வாரமா மூணு லேபர் வரல்லே, மத்த வேலையெல்லாம் அப்படி அப்படியே நிக்குது. அதை பாக்கிறதா, இல்லே இந்த வேலையை பாக்கறதா?”

“இதை ஏன் என் கிட்டே முன்னாடியே சொல்லலே?”
“சொன்னேன் சார், நீங்க தான் காதிலேயே போட்டுக்கலே”
“ஏன் லேபர் வரலியாம்?”
“கூலி கட்டுப்படி ஆகலியாம். அதிகம் கேக்கிறாங்க”

“சரியா போச்சு! இது வேறையா? நான் எங்கே போறது? சரி நீ போ! அந்த ஷூ பிரேக் டிசைனை என்கிட்டே அனுப்பு. நானே பாக்கிறேன்”

எப்படி 15 நாளைக்குள்ளே 1000 யூனிட் டெலிவரி பண்றது? போற போக்கிலே ஒரு மாசம் ஆகிடும் போலிருக்கே! பெரிய கம்பனி அக்கௌன்ட் கை விட்டு போயிடுமே! என்ன பண்றது? யோசனை பண்ணி, நெற்றி பொட்டு வலித்ததுதான் மிச்சம்.

****

மதியம் ஒரு மணி இருக்கும்! இன்னும் சாப்பிட போகவில்லை. பசி வயிற்றை கிள்ளியது. அப்போது, துரை வேகமாக உள்ளே வந்தான்.

“சார்! சார்! இன்கம் டாக்ஸ் ஆபீசர் வந்திருக்கார்! உங்களை பாக்கணுமாம்”

“என்னையா! என்னை எதுக்கு பாக்கணும்? நாந்தான் ரிடர்ன் பைல் பண்ணிட்டேனே. ம்ம். சரி, உள்ளே அனுப்பு”

இது என்னடா கஷ்ட காலம்! இருக்கிற தொந்திரவிலே இது என்ன புது குழப்பம்?

“நீங்க தானே சுந்தர்? லஷ்மி எகுப்மென்ட் முதலாளி?” – உள்ளே நுழைந்து அமர்ந்த அதிகாரி, தனது பைலை புரட்டிக் கொண்டே கேட்டார்.
“ஆமா சார். நீங்க?”

“நான் ஐ.டி இன்ஸ்பெக்டர், கோவிந்தன். உங்க பான் , டான் நம்பர் கொஞ்சம் சொல்ல முடியுமா?” சொன்னேன். கோவிந்தன் தனது பைலில் சரி பார்த்தார்.

“சுந்தர், உங்க பேரிலே ஒரு புகார் வந்திருக்கு. நீங்க வரி ஏய்ப்பு செய்யறீங்கன்னு. அது விஷயமா உங்களை பாக்க வந்திருக்கேன்”

“இல்லியே! எனது ஆடிடர் எல்லாமே பைல் பண்ணியிருக்கிறாரே?” எனக்கு நெற்றி பொட்டில் வியர்வை துளி. கொஞ்சம் படபடப்பு. கைகுட்டை தேடினேன்.

“டென்ஷன் ஆகாதிங்க. இது ஒண்ணும் பெரிய பிரச்னையே இல்லை. உண்மையை ஒளிக்காமல் சொன்னால் மட்டும் போதும்.”

“சார் நீங்க என்ன சொல்றீங்க?”

“எனக்கு தெரியும் சுந்தர், புகார்லே இருக்கு. உங்களுக்கு சென்னையிலே ரெண்டு வீடு இருக்கு. ரெண்டு கார் வெச்சு இருக்கீங்க. இப்போ புதுசா இந்த பக்கத்து பாக்டரி வாங்க முயற்சி பண்ணிட்டிருக்கீங்க. சரியா?”

“சரிதான் சார். ”

“ஆனால், உங்களுக்கு நஷ்டம்னு டாக்ஸ் பைல் பண்ணியிருக்கீங்க. இது வரி ஏய்ப்பு இல்லாமல் வேறே என்ன?”

“சார், நான் எல்லாம் சரியாதானே கொடுத்திருக்கேன்? அக்கௌன்ட் எல்லாம் சரின்னு எங்க ஆடிட்டர் கூட சொன்னாரே”

“அது இருக்கட்டும், சுந்தர், உங்க பைலை ஓபன் பண்ணினால், குறைந்தது ஒரு இருபது லக்ஷம் டாக்ஸ் கட்டவேண்டி வரும். இன்னும் அதிகம் கூட ஆகலாம். உள்ளே கூட தள்ளலாம்.”

“சார்! எதுக்கும் நான் என் ஆடிட்டர் கிட்டே பேசிட்டு உங்களை பாக்கவா?”

“தாராளமா, அது உங்க விருப்பம். ஆனால், நீங்க ஆடிட்டர் கிட்டே போறதினாலே, உங்களுக்கு இன்னும் நஷ்டம் தான் அதிகம் ஆகும். கோர்ட், ஐ.டி ஆபீஸ்ன்னு அலைய வேண்டியிருக்கும்.”

“சார், அப்போ இதுக்கு என்ன பண்ணலாம்? நீங்க தான் உதவி செய்யணும்!”

“மிஸ்டர் சுந்தர், கவலையே படாதீங்க. அதுக்குத்தானே நான் பெர்சனலா வந்திருக்கேன். காதும் காதும் வெச்சா மாதிரி கேஸ் க்ளோஸ் பண்ணிடறேன். போதுமா? இன்னிக்கு நம்பர் டூ அக்கவுண்ட் வெச்சுக்காதவன் யாரு?”

“ரொம்ப தேங்க்ஸ் சார்”

‘ஆனா இதிலே பாருங்க சுந்தர், இதுக்கு நான் மேலிடத்தையும் கவனிக்கணும். கொஞ்சம் செலவாகுமே!”

எனக்கு புரிந்தது. ‘சொல்லுங்க சார், செஞ்சிடலாம்”

“எல்லாம் சேர்த்து ஒரு ஐந்து லட்சம் ஆகும். இப்போ பாதி, கேஸ் க்ளோஸ் பண்ண பிறகு மீதி கொடுத்தா போதும். ”

“சார், எனக்கு கொஞ்சம் டைம் வேணும். ஒரு வாரத்தில் பதில் சொல்றேன்”

“ஒரு வாரம் வேணுமா? சீக்கிரம் முடிச்சிடறது நல்லது. எனக்கு ஒண்ணுமில்லே, கேஸ் என்னை தாண்டி வேறே யாரு கிட்டயாவது போயிட்டா, உங்க பாடு திண்டாட்டம் தான். ஞாபகம் வெச்சுக்கோங்க”

“இல்லே சார், பணம் புரட்டனும். கொஞ்சம் டைட்”- புளுகினேன்

“ஓகே. ஒரு வாரம் கழித்து கால் பண்றேன்.”

புயல் ஓய்ந்தது போல இருந்தது. தலையில் கை வைத்து கொண்டு உட்கார்ந்தவன் தான், நான் மதிய உணவிற்கு கூட செல்ல வில்லை.

எனக்கு மட்டும் ஏன் இப்படி பிரச்சனை வருது? எப்படி சமாளிக்க போறேன்? ஒரே சஞ்சலம்.

*****

இரண்டு நாள் கழிந்தது.

பாக்டரியில் ஷூ பிரேக் டிசைன் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பண்ணியும் சரியாகவே வரவில்லை. மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது

நேரங்கெட்ட நேரத்தில், அலைபேசி. “சார், நாங்க ஐசிசி பாங்க்லேருந்து பேசறோம். உங்களுக்கு பர்சனல் லோன் வேணுமா சார்!” கடுப்பாகிவிட்டேன். “வைம்மா போனை. வேறே வேலையில்லை உங்களுக்கு!”

திரும்பவும் அலைபேசி. இப்போது அன்புத்தொல்லை, என் மனைவி.

“என்னங்க! ஊரிலிருந்து அண்ணா போன் பண்ணினான்”

“என்ன விஷயம்?”

“உங்க மாமனாருக்கு அறுபது பூர்த்தியில்லே! அதுக்கு நம்ம கோயில்லே படையல். நம்மளை விருந்துக்கு கூப்பிட்டிருக்கான்.”

“என்னிக்கு?”

“ஜூன் 28ங்க. நாம ரெண்டு நாள் முன்னாடியே போகணும்”

“ஐயோ! என்னால் முடியாதம்மா! இங்கே ஏகப்பட்ட வேலை இருக்கு”

“ஆமா! எங்க வீட்டு விசேஷம் எதுக்கு கூப்பிட்டாலும் எதாவது சாக்கு சொல்லி தட்டி கழிக்கிறீங்க!”

“சொன்னா புரிஞ்சுக்கோ. என்னாலே அவ்வளவு தூரம் வர முடியாது. நான் என்ன இங்கே வேலை வெட்டி இல்லாமையா இருக்கேன்?எனக்கே இங்கே ஏகப்பட்ட பிடுங்கல்”

“ஏன் சொல்ல மாட்டீங்க? நான்தானே உங்க பிடுங்கல்?”

“மீனா! கோபி..” முடிப்பதற்குள் துண்டிக்கப்பட்டது. எனக்கு இது வேறே பிரச்சனை. கோபக்கார மனைவி. சமாதானப் படுத்த எனக்கு நேரம் இல்லை. மனமும் இல்லை.

****

இன்னும் நான்கு நாட்கள் கழிந்தது.

என் நிலைமையில் ஒரு முன்னேற்றமும் இல்லை. தூக்கம் சுத்தமா போச்சு. கண்ணயரும்போது, ஒரு பக்கம் ப்ரொடக்ஷன் மேனேஜர், இன்னொரு பக்கம் இன்ஸ்பெக்டர். என்ன செய்யப் போறேன்? எதைன்னு பாக்கிறது? தலை வலி. வயிறு வேறு பிசைந்து கொண்டேயிருந்தது. எப்படி சமாளிக்கபோறேன்? யோசனை, படபடப்பு, மன உளைச்சல், நெஞ்சு வலிக்கற மாதிரி இருந்தது. டாக்டர்கிட்டே போகணும்!

அலைபேசி அழைத்தது. அழைத்தவன் எனது நண்பன் விஷ்வா.

“டேய் சுந்தர், நான்தாண்டா விஷ்வா பேசறேன்! எப்படியிருக்கே?”- நான்

“டேய் விஷ்வா ! நீ எங்கே இங்கே ?”

“நேத்திதான் நான் சிங்கப்பூர்லேருந்து வந்தேன். ஒன்னு செய். நீ அண்ணா நகர்லே தானே இருக்கே! நேரே ஐந்து மணிக்கு சரவண பவன் ஹோட்டலுக்கு வந்துடு. நிறைய பேசணும்”- விஷ்வா
“இல்லேடா ! நான் வரல்லே ! கொஞ்சம் பிரச்சனை! சாரிடா”
“அடி படுவே! நீ வரே! அவ்வளவுதான்.”

பள்ளி நண்பன். ரொம்ப நெருக்கம். தட்டமுடியவில்லை. எனக்கும் கொஞ்சம் மாற்றம் தேவையாயிருந்தது.

ஹோட்டல் :

வாசலில் விஷ்வா காத்துக் கொண்டிருந்தான்.

“வா சுந்தர், என்ன இது கோலம்! இப்படி சோகமா! நாலு நாள் தாடி! என்ன விஷயம்?”

“அதை ஏன் கேக்கிறே விஷ்வா? நெறைய பிரச்னைகள்.”

“சரி வா! உள்ளே போய் பேசலாம்!”. விஷ்வாவின் கரிசனம் என்னை உலுக்கியது. என்னுடைய பிரச்னைகள் எல்லாவற்றையும் அவனிடம் கொட்டிவிட்டேன்.

“சரி! சும்மா கவலைப் பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. சுந்தர், இங்கே பாரு, உன் பிரச்சனை என்ன தெரியுமா? அனாவசியமா, எதுக்கெடுத்தாலும் பயப்படறது? நாளைக்கு என்ன ஆகுமோன்னு நெனைச்சு கவலைப் படறது”

“வேறே வழியே தெரியலே விஷ்வா! என்ன பண்றதுன்னே தெரியலே?”

“எனக்கு ஆச்சரியமாக இருக்கு! நீ எல்லாம் எப்படித்தான் தொழிலதிபரா சமாளிக்கறியோ?”

“வெறுப்பேத்தாதே விஷ்வா! என்னதான் பண்ணனுங்கிரே?”

“அப்படிக் கேள் சொல்றேன்! முதல்லே உன் பிரச்சனைகளை ஒரு லிஸ்ட் போடு. அதிலே தீர்க்க கூடிய பிரச்சனை, தீர்க்க முடியாத பிரச்சனை என்னங்கிறதை முடிவு பண்ணிக்கோ”
“எதுக்கு?”

“தீர்க்க கூடிய பிரச்சனைகளை தீர்த்துடலாம். அதனாலே அதைப் பத்தி கவலைபடறதை நிறுத்து. எப்படி தீர்க்கலாம்னு மட்டும் யோசனை பண்ணு”

“அப்போ தீர்க்க முடியாத பிரச்னைகளை என்ன பண்ணறது?”

“அவைகளை நீ ஒண்ணும் பண்ண முடியாது. அதனாலே கவலை பட்டு எந்த பிரயோசனமும் இல்லை”

எனக்கு சிரிப்பு வந்தது. “மொத்தத்திலே, எதுக்கும் கவலை படாதே சகோதராங்கறே”

“அதே!அதே! இதே நான் சொல்லலே, புத்தர் தான் சொன்னதே”- விஷ்வா சிரித்துக் கொண்டே.

“நீ சொல்றது சரிதான் விஷ்வா என் பிரச்சனை எல்லாம் தீர்க்க கூடியது தான். ஆனால், எப்படின்னு தான் தெரியலே?”

“அப்பாடா! ஆளை விடு. கவலையை விடு. அடுத்த ஸ்டெப்க்கு வா”
“அது என்ன?” எனக்கு கொஞ்சமாக நம்பிக்கை வந்து விட்டது.

“லிஸ்ட் போட்டியே !உன்னோட பிரச்னைகளிலே ரொம்ப முக்கியமானது, ரொம்ப அவசரமானது என்ன சொல்லு.”

நான் யோசித்தேன்.

“என்னோட முதல் பிரச்சனை ஐ.டி இன்ஸ்பெக்டர்”
“ரொம்ப சரி, இது அவசரம், அவசியம் கூட. அடுத்தது”
“ஷூ பிரேக் உதிரி பாகம்” நான் யோசனையுடன்.
“இதுவும் கூட அவசரம், அவசியம். மூணாவது?”
“மனைவி கூட ஊருக்கு போகணும்”

“சுந்தர், இது அவசரம். ஆனால், உன்னோட இந்த நிலைமைலே அவசியம் இல்லே. ஆமா! கேக்கனும்னு நினைச்சேன்! இது விஷயமா உன் வீட்டிலே சண்டை போட்டியா? திட்டினியா?”

“ஆமா! கடுப்பாகுதில்லே!வர முடியலேன்னா, அவங்க சண்டை போட்டா எப்படி? நம்ப கஷ்டத்தை புரிஞ்சிக்காம பேசறாங்க, விஷ்வா” நான் என் பக்க நியாத்தை சொன்னேன்.

“ முதல்லே அவங்களை நீ புரிஞ்சிகிட்டியா?அதை சொல்லு !அவங்களுக்கும் பிரச்னை இருக்குமில்லே”

“ஆமா! என்னையே குறை சொல்லு!”

“அவங்க பாவம் சுந்தர். உன்னை விட்டா அவங்களுக்கு வேறே யாரு இருக்கா? சரி, முதல்லே மனைவிய சமாதானபடுத்து. அவங்களை ஊருக்கு அனுப்பி வை. உன் பிரச்னைகள் தீர்ந்துட்டா, நீயும் வரேன்னு சொல்லிவை. நிச்சயம் நீயும் ஊருக்கு போவே பாரு. அண்ணியை நான் ரொம்ப கேட்டேன்னு சொல்லு. சரி, வேறே ஏதாவது இருக்கா?”

“அடிக்கடி வயித்து வலி வருது. தூக்கம் இல்லை. லேசா படபடப்பு.”

“சுந்தர் இதுவும் அவசியம். அவசரமும் கூட. உடனே டாக்டரை பார். சுவரிருந்தால் தானே சித்திரம்? அப்புறம் வேறே ஏதாவது இருக்கா?”

“கோயம்பத்தூர் கம்பனி புது ஆர்டர் கொடுப்பாங்க போலிருக்கு ! அதுக்கு வொர்க் பண்ண ஆரம்பிக்கணும் ”

“அது இப்போ அவசரமுமில்லே, அவசியமுமில்லே. இப்பத்திக்கு அதை கிடப்பில் போடு. நேரம் கிடைக்கச்சே எடுத்துக்கோ”

“சூப்பர்டா விஷ்வா! எனக்கு பெரிய பாரமே இறங்கினா போலே இருக்கு”

“இந்த பலூடா சாப்பிடு. இன்னும் நல்லா இறங்கும்”

எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் கவலை குறைந்து தான் இருந்தது. இப்போது இரண்டு பிரச்னைகள் தான். மற்ற பிரச்னைகள் மாயமாக போய்விட்டன.

கொஞ்ச நேரம் இரண்டு பெரும் பேசாமல் சாப்பிட்டோம். இனிப்பு உள்ளே போனவுடன் மூளை எனக்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

“சரி சுந்தர்! இப்போ உனது முதல் தலைவலிக்கு வருவோம்”.

“இன்கம் டாக்ஸ் தானே விஷ்வா ! என்னடா பண்றது?”

“இதோ பாரு, எந்த கவலையும் அணுகறதுக்கு முன்னாடி முதல்லே மூணு படி ஏறணும்”

“இது வேறேயா?”

“முதல்லே பிரச்னையை நல்லா அலசு. இந்த பிரச்னையினால் உனக்கு என்ன மாதிரி நஷ்டம் ஏற்படும் என யோசி. இரண்டாவது, இவ்வளவு தான் நஷ்டம் அல்லது கஷ்டம் வரும்னு தெரிந்தவுடன், ‘இவ்வளவுதானா, பரவாயில்லே’ என்கிற மன நிலையோட அதை ஏத்துக்கோ. மூணாவது, நிதானமா, அந்த சிக்கலிலிருந்து எப்படி கொஞ்சம் கொஞ்சமா அடி படாம வெளியே வரதுன்னு யோசி. அதை இம்ப்ரூவ் பண்ணு.”

“கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு விஷ்வா”

“சரி! இப்போ இந்த ஐ.டி இன்ஸ்பெக்டர் விஷயத்துக்கே வருவோம். இந்த பிரச்சனையினால், உனக்கு எவ்வளவு நஷ்டம்?”

“20 லட்சம் இருக்கலாம்”
“அதெப்படி உனக்கு நிச்சயமா தெரியும்? யாரையாவது கேட்டியா?”

“இல்லேடா! கொஞ்சம் பயமா இருந்தது”

“பாத்தியா, உன் பிரச்சனைய நீ அலசவேயில்லை. பயந்து போய் உக்காந்துட்டே!”

“நீ சொல்றது சரிதான் விஷ்வா! பயத்திலே கையும் ஓடலை, காலும் ஓடலை”

“லஞ்சம் கொடுக்க நீ தயாரா?”

“கொஞ்சம் அதிகம்! அதான் பாக்கிறேன்!”

“ஒன்னு செய். முதல்லே, நேரே உன்னோட ஆடிட்டரை பார். அவர் என்ன சொல்றாருன்னு கேள். தேவைப்பட்டா, இன்னொரு ரிட்டர்ன் பைல் பண்ணிக்கலாம். இன்கம் டாக்ஸ் என்ன பைன் போடராங்களோ, அதை ஒப்புக்கோ. இல்லே ஆடிட்டர் சொன்னா, அப்பீல் பண்ணு. முடிஞ்ச வரை
லஞ்சம் கொடுக்கறதை தவிர். அதனாலே வேறே ப்ராப்லம் வரக்கூடும். ”

“கொடுக்கலேனா, அந்த ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரச்சனை பண்ணுவானே?”

“பண்ண மாட்டான்னு தோணுது. ஏன்னா அவனும் மாட்டிப்பான்!”

“அதெப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றே?”

“எனக்கு தெரியும். இன்கம் டாக்ஸ் ரூல் பிரகாரம், அவங்க வரதுக்கு முன்னாடி உனக்கு அதிகார பூர்வமான தகவல் கொடுக்கணும். அப்புறம், அவங்க மேலதிகாரி போன் நம்பர், ஈமெயில் எல்லாம் உனக்கு கொடுக்கணும்”

“ஓ. அப்படியா. சரி நான் இப்போவே ஆடிட்டர் பாக்கிறேன்”
“கவலை படாம போ. உன்னோட இன்னொரு பிரச்னையை நாளைக்கு பாக்கலாம்”

****

அடுத்த நாள்:

இப்போ எனக்கு எந்த பயமும் இல்லை, கவலையும் இல்லை. தைரியம் வந்து விட்டது. என்ன ஆயிடும் பாத்துடலாம். ஆடிட்டரை பார்த்தேன்.

எங்க ஆடிட்டர் சொன்னார், “சுந்தர், உங்க ரிட்டர்ன்லே எந்த பிரச்னையும் இல்லை. யாரோ உங்களை போட்டு பாக்கராங்கன்னு நினைக்கிறேன்”

“எனக்கும் அது தான் சார் தோணறது”
“எதுக்கும், நாம ஐ.டி ஆபிஸ் போய் அசிஸ்டெண்ட் கமிஷனரை பார்க்கலாம் வாங்க. எனக்கு தெரிந்தவர்தான்!”

எ.சியும் இதை கேட்டு ஆச்சரியப் பட்டார்.

“கோவிந்தனா ! அப்படி ஒரு இன்ஸ்பெக்டரே இங்கே வேலை செய்யலியே. உங்க கம்பனி ரெகார்ட் படி, உங்க பேரிலே எந்த புகாரும் இல்லையே”

“சார், அந்த கோவிந்தன் என்கிட்டே நாளைக்கு வரேன்னு சொல்லியிருக்கான் சார்!”

“அப்படியா! சரி, நீங்க ஒன்னு செய்யுங்க ! அவன் வந்தவுடன், எங்களுக்கு தகவல் கொடுங்க. நாங்க வரோம்”

இதுக்கு மேலே, என்ன நடந்ததுன்னு நீங்க ஊகிச்சிருப்பீங்க. கோவிந்தனை அதிகாரிங்க, கையும் களவுமா பிடிச்சிட்டாங்க. அவன் ஒரு பிராடு. என் கிட்டே ஆட்டைய போட பார்த்திருக்கான். எங்க துரை தான் அவனுக்கு கையாள். துரையை கம்பனியை விட்டு துரத்திட்டேன்.

***

இப்போ எனக்கு ஒரே ஒரு பிரச்சனை தான். ஷூ பிரேக் உதிரி பாகம் தயார் பண்ணுவது. துரைக்கு பதிலாக இப்போது முருகன் தான் சுபெர்வைசர். அவனிடம் அதை ஒப்படைத்து விட்டேன். ரெண்டு பேரும் சேர்ந்து தயார் பண்ணினோம். அந்த மாதம் கொடுக்க முடியவில்லை. பரவாயில்லை. ஒன்றும் தலை முழுகிவிட வில்லை.

ஒரு பதினைந்து நாள் கால தாமதத்தில் 1000 யூனிட் டெலிவரி கொடுத்து விட்டோம். எனது கஸ்டமர் திருப்தியாக, புது ஆர்டர் வேறு கொடுத்து விட்டார். வியாபாரத்திலே இதெல்லாம் சகஜமப்பா!

மனைவியுடன் ஊருக்கு சென்று படையலில் கலந்து கொண்டேன். எனது மெடிக்கல் செக் அப்செய்து கொண்டேன். அல்சர் தான். எல்லாம் சரியாகிவிடும். ஒன்றும் பயமில்லை. இப்போது தான் நான் கவலை படுவதை விட்டுவிட்டேனே. விஷ்வாவின் சொல்படி வேளா வேளைக்கு, நேரந்தவராமல் சாப்பிடுகிறேனே!

ஒரு மாசம் கழித்து

விஷ்வாவிடமிருந்து போன்:
“சுந்தர், எப்படி இருக்கே!”
“நல்லாயிருக்கேன் விஷ்வா! இப்போ ஒரு பிரச்சனையும் இல்லை”

“அப்படி சொல்லாதே! பிரச்சனை இல்லாம யாருமே இருக்க முடியாது. பிரச்னைகளை கண்டு பயப்படாமே, வொர்ரி பண்ணிக்காம, சந்தோஷமா வாழ கத்துக்கிட்டேன்னு சொல்லு”

“உன்னோட ஆலோசனைக்கு ரொம்ப நன்றிடா. அது படிதான் நடக்கறேன். ரொம்ப தேங்க்ஸ் விஷ்வா.”- மனதார நன்றி சொன்னேன் என் நண்பனுக்கு.

நன்றி : கூகிள், விக்கிபிடியா, டேல் கார்னேகி, ஸ்டீபன் கோவி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *