களவாடிய பொழுதுகள்..

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 13,042 
 

வெறுமையை யாரால் அனுபவிக்க முடியும்.

எனக்கு இந்த வெறுமையான நேரம் மிக பிடிக்கும். ஒரு விடுமுறை நாளின் மாலைவேளை நண்பர்கள் அற்றவனாய், உறவுகள் துறந்தவனாய் தனியாக சென்று கொண்டு இருப்பேன். யாரிடமும் பேச பிடிக்காது, என்னை அறியாத மக்கள் இருக்கும் ஒரு சுழலில் என்னை விதைத்து கொள்வேன். எந்த சிந்தனையும் இருக்காது, பேச்சும் இருக்காது. ஆனால் அது அமைதி கொள்ளும் நேரம் என்ற அர்த்தம் அல்ல. சுவாரசியமான புத்தகங்களின் பக்கத்திற்குள் ஒளிந்திருக்கும் வெறுமையான காகிதமோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போது விழும் தொழில்நுட்ப குறைபாட்டின் வெறுமையோ தர முடியாத ஒன்று. நீங்களும் தேடிய, நீங்கள் யாரும் இல்லாமல் தனியே அமர்ந்த சில மணித்துளிகளுக்கு பெயர் வைக்க தெரியாமல் “வெறுமை” என்றே வைத்து கொள்வோம்.

நான் யார் என்று முழுமை அறிந்து கொள்ள நான் முயலும் நேரங்களை நான் தோண்டி பார்த்தேன். ஆம்., உங்கள் அறையில் இப்போது யாரும் இல்லை, கதவுகள் தாளிடபட்டுள்ளன, உங்களை யாரும் பார்க்க போவது இல்லை. நீங்கள், இல்லை நீ மட்டுமே.. அப்போது நீ என்ன செய்கிறாய். உன் முகம் என்னவாறு இருக்கும், உன் வார்த்தைகள் எவ்வாறு இருக்கும். அந்த நொடிகளில் வாழ்பவன் மட்டுமே நீ.

உணவு நேரங்கள், கல்லூரி நாட்கள், வேலை அலுவல்நேரங்கள் என்று அனைத்தும் கற்பிக்கப்பட்டது. கற்றும் கொண்டோம், கலவி உட்பட. ஆனால் சில தனிமை நேரங்கள் நடந்துகொள்ள எந்த விதிமுறையும் அல்ல. அந்த வெறுமை நேரத்திற்குள் இறங்கி அங்கே இருப்பதை அறிந்து கொள்ள தேடினேன். எனக்கான பதில் அல்ல, அனைவருக்குமான தேடல் அது. இருளோ, வெளிச்சமோ இருக்காது. அதை ஒளி என்றும் கூற முடியாது. அதை அறிய யாரும் ஆவல் கொண்டது இல்லை. ஆனால் நீங்கள் அறியாமல் அங்கே பல முறை பிரயாணம் செய்து இருப்பீர்கள். உங்களின் சில தனிமை நேரங்கள், நினைவில் கொள்ளும் அளவிற்கு சுவாரசியம் இல்லாததும் கூட. மகிழ்ச்சியும் அல்ல, துக்கமும் அல்ல. இனம் புரியாத சில நேரங்களை நீங்கள் செலவு செய்து இருப்பீர்கள் இந்த வெறுமையில். அதற்கு தனியாக அமர்ந்து அமைதியாக இருந்தோம் என்று பெயர் வைத்து விட்டீர்கள்.

நான் அதை தேடி போனேன். அப்போது காதலி, மனைவி, நண்பர்கள், பெற்றோர் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் தொலைத்து போவோம். அவர்களை பற்றி சிந்தனை இருக்காது, ஆனால் பார்ப்பவர்களுக்கு நாம் ஏதோ துக்கத்தில் இருப்பதாக தோன்றும். அங்கே சிந்தனை இல்லாமலே ஒரு சிந்தனை இருக்கும். நமக்கே தெரியாமல் களவாடிய பொழுதுகள் அவை. விவரிக்க முடியாத உணர்வுகளும், அனுபவங்களும் ஏற்படும். அப்படி நான் தேடி சென்ற ஒரு நாள். இதை உணர்ந்து கொள்ள மால்கம், ரோன்சன் போன்ற உளவியல் தத்துவ மேதைகளின் புத்தகங்களை படிக்க தேவையில்லை. ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட அனுபவமே போதுமானது.

யாரிடம் பேச தோன்றாமல், தெரிந்தவர்கள் இல்லாத இடம் தேடி ஓர் எல்லையில் அமர்ந்து இருந்தேன். அங்கே கடல் அரணாய் இருந்தது. கடல்கரை மணல் பரப்பில் அலைகள் கால்களை தொட்டு விடும் தூரம் தான். பல முறை அலைகள் ஏமார்ந்து போனது, சில முறை கால்களை தொட்டு நனைத்து விட்டு என்னை ஏமாற்றி போனது. நான் கடலை தேடி கொண்டேன், நீங்கள் வீட்டின் மாடியில் நிலவையோ, மைதானத்தில் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் உள்ள மேகத்தையோ, உங்கள் அறையின் மாடத்தில் உள்ள மின்விசிறியையோ தேர்ந்த எடுத்திருபீர்கள். இது உங்கள் சிறு வயதிலோ, நேற்றோ, நினைவில் கொள்ளாத நாட்களில் பல முறை நடந்திருக்கும். அப்படி பற்ற இந்த நாளில் கடற்கரையில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். அவரவர் எண்ணங்களின் படி வியாபாரம், காதல், விளையாட்டு என கடற்கரையின் அணைத்து அம்சங்களோடு இருந்தனர். என்னை தொந்தரவு செய்ய யாருக்கும் மனம் வரவில்லை. மெல்ல அந்த வெறுமைக்குள் என்னை தள்ளி பார்த்தேன். தூரத்தில் இருக்கும் கடலின் ஓர் எல்லையை பார்ப்பதாய் என்னை ஏமாற்றி கொண்டே உள்ளே சென்றேன். கடலின் அலைஓசை என்னை மீண்டும் வெளியே இழுத்தது. காதை பொற்றி கொண்டோ, அலைஓசை கேட்காத தூரம் தள்ளி சென்றோ என்னை மறைத்து கொள்ள முடியாது. எனக்கு அந்த அலைஓசை கேட்கவில்லை என்று நினைத்து கொண்டேன், மீண்டும் மீண்டும் நினைத்து கொண்டேன். இப்போது அங்கே எந்த ஓசையும் கேட்கவில்லை. அந்த வெறுமைக்குள் நான் சென்று கொண்டு இருக்கிறேன். என் கண்கள் திறந்திருந்தும், மற்ற புலன்கள் திறந்திருந்தும் அங்கே வெறுமைக்குள் நடந்து கொண்டிருகிறேன். அதற்குள் முகங்களோ, உருவங்களோ இல்லை. கனவுகளில் வருவது போல் சிந்தனைகளை ஓட விட முடியாது. அதற்குள் வண்ணங்களும் இருக்காது. நம்மை சுற்றி நடப்பது தெரியாது. இனம் தெரியாத சோகம் அங்கே நம்மை ஆட்கொள்ளும். எவ்வளவோ மகிழ்ச்சியான தருணங்களிலும் வெறுமை நமக்கு அப்போது அந்த சோகம் கலந்த ஓர் யாருமற்ற உணர்வை தான் தரும். இதற்காகவே நாம் பல முறை இந்த வெறுமையை நம்மை நெருங்க விட மாட்டோம்.

அந்த உணர்வுக்குள் மாறிக்கொண்டே பின்னர் அங்கே ஒரு மௌனமான ஒலி கேட்கும். நம்மால் மௌனங்கள் கேட்க முடிவது அங்கு மட்டுமே. அப்போது எந்த வர்ணங்களும் இல்லாத, ஏன் குவியம் இல்லாத ஓர் காட்சி கிடைக்கும். பலரும் அந்த நிகழ்வு நமக்கு மட்டுமே நடப்பதாக நினைத்து கொள்வோம். என் செவியும், கண்களும் இனம் தெரியாத ஒரு புலனில் அகப்பட்டு கொள்ள, என் மனம் அங்கே காற்றில் பறக்கும் காகிதமாய் சென்று கொண்டு இருந்தது. அந்த கற்றும் கொஞ்சம் வெப்பம் கலந்து, சுறாவளி போல் சுற்றியது. எந்த நோக்கமோ, திசையோ அறியாது உயரே பறக்க தொடங்கியது. என் எல்லைகளை தாண்டி சென்று விட்டது. இப்போது ஒரு தொடுதலை என்னால் உணர முடிந்தது. காற்றின் ஈரபதமும், குளிரும் நான் உணர்ந்து இருக்கிறேன். ஆனால் அப்போது தான் ஒரு நபரின் தீண்டல் போல காற்று என்னை தொடுவதை உணர்கிறேன். காற்றும் நம்மோடு உலவும் ஒரு ஆத்மாவாக இருக்குமோ என்ற வேடிக்கையான எண்ணங்கள் கூட தோன்றியது. என்னை சுற்றி வெறுமையே சுழற்றி அடிக்கிறது. மனம் இங்கு இல்லை, புலன்களுக்கு தெரிவதற்கும் ஒரு ஒலியோ, ஒளியோ இல்லை. தீண்டலும் உண்மை இல்லை. இதற்கு அமைதி என்றோ, கலவரம் என்றோ சொல்லிவிட முடியாது. நீங்கள் இதை உணரும் நேரத்தில் நம்மை சுற்றி இருப்பவருக்கு நாம் குழப்பங்களில் மீன் பிடிப்பவன் போல் தான் தோன்றுவோம். அப்படியே என்னை என் கட்டுபாட்டில் இருந்து வெளியே விட்டுவிட்டேன். மெல்ல என்னை தொலைத்து விட்டேன். இன்னும் கொஞ்சம் தூரம் இந்த வெறுமைக்குள் என்னை சென்று பார்க்க அனுமதித்தேன். அவை அடுத்த கட்டத்திற்குள் என்னை அழுத்தியது. நாம் கற்பனையிலும், கனவிலும் உணராத நிமித்தம் அது. அவற்றை சொல்வதோ, கடப்பதோ எளியது அல்ல. நம்மை காத்து கொள்ள அங்கிருந்து என்னை திரும்பி அழைத்தேன். என்னிடம் களவாடபட்ட நிமிடங்கள் அவை. வெளியில் வருவது, அவற்றின் சுவடுகள் இல்லாமல் இருப்பதும் அன்றைய தினத்தில் சாத்தியம் அல்ல. நம்மை அன்று காண்போருக்கு நமது முகமே அந்த விவரிக்க முடியாத வெறுமையின் தடங்களை காட்டி விடும்.

மனிதனின் மனம் எப்போதும் எதாவது சிந்தனையில் இருந்து கொண்டே இருக்கும், ஒவ்வொரு நொடியும் எதையாவது பிடித்து தொங்கி கொண்டே இருப்போம். பாதுகாப்ற்றவனாய் உணர்வோம். இந்த உலகின் மிக சிறந்த கெட்டவன் நாம் என்ற எண்ணம் கூட நம்மை பாடாய்ப்படுத்தும். நம்மை சுற்றி நண்பர்களையும், உறவுகளையும் எப்போதும் வைத்து கொள்வது, நம்மிடம் இருந்து நம்மை காத்து கொள்ள தான். ஏனெனில் யாரும் இல்லாமல், யாருடைய கவனமும் இல்லாமல் தனி இடத்தில் நீ மட்டும் இருக்கும் தருணங்கள் மட்டுமே நீ. இந்த சிந்தனைகள் இல்லாமால் அமைதியாக இருக்கும் தருணங்கள் கனுவுகள் இல்லாத உறக்கமும், எண்ணங்கள் ஓடாத பயணங்களும் தான். இந்த சிந்தனைகளுக்கும், அமைதிக்கும் அப்பாற்பட்ட தருணங்களே வெறுமையின் நிஜம். பல முறை உணர முடியாமல், விவரிக்க முடியாமல் தடுமாறிய வெறுமையை அனைவரும் கடந்து வந்திருப்போம். அந்த வெறுமையை நம் மனம் சில நேரங்களில் நாடும், நம்மை அறியாமலே கூட அந்த வெறுமைக்குள் சென்ற நிமிடங்களும் உண்டு. ஒரு முறை அந்த வெறுமை உங்களை களவாட விடுங்கள்.

Print Friendly, PDF & Email

1 thought on “களவாடிய பொழுதுகள்..

  1. நல்ல கதை.. நான் அந்த இடத்தில் இருப்பது போல உணர்ந்தேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *