கறை படிந்தவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 6,822 
 

‘இளம் வாசகர்களுக்குப் பிடித்தாக,ஆறுமாதம் தொடர்கதையாக வரத்தக்கதாக,அரசியல் கலக்காத ஒரு தொடர்கதை எழுதித்தருவாயா?’ பத்திரிகை ஆசிரியர் முரளி தனது பெரிய பற்கள் பளிச்சிடச் சிரித்தான்.அவனுக்கு முன்னாலுட்கார்ந்திருந்து அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அவனது நண்பன் கேசவன்,சிறிய புன்முறுவலைக் காட்டிக்கொண்டான்.

இருவரும் ஒருகாலத்தில் ஒன்றாகப்படித்தவர்கள்.அந்த ஒருகாலம் என்பது எத்தனையோ வருடங்களுக்கப்பாற்பட்டது.முரளி எப்போது லண்டன் வந்து சேர்ந்தான் என்று கேசவனுக்குத் தெரியாது. கேசவன் தனது படிப்பு விடயமாகத் தனது பதினெட்டுவயதில் லண்டனுககு வந்தவன்.எப்போதாவது இருந்து ஒரு கதையோ கட்டுரையோ எழுதுவான்.

அவன் பாலிய வயதாகவிருந்தபோது,தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தனிலுள்ள காந்தமும்,ஜானகிராமனின் கதைகளில் வரும் காவேரி நதிக்கரைகளில் நடந்த கற்பனை இலங்கையில் ,கண்டியில் மகாவலி நதிக்கரையின் அழகிய தவழல் என்பனஅவனுள் இணைந்து,அவனையும் ஒரு எழுத்தானாக வேண்டும் என்ற உந்துதலையுண்டாக்கிவிட்டிருந்தது. பதினெட்டு வயதில் லண்டன் வந்தபோது அவன் இருதயத்தில் அந்த இலக்கிய தாகத்தையும் கொண்டு வந்திருந்தான்.

லண்டனுக்கு வந்து படிப்பில் அவனை அமிழ்த்திக்கொண்டபோது,பன்முக அனுபவங்களை எதிர்நோக்கியபோது,அவற்றிற்கு உருவம் கொடுக்கவேண்டும் என்ற எழுத்துத்தாபம் பிரசவ வேதனையாக வலித்தது. இருபது வயதில் எழுதத் தொடங்கினான். இலங்கையிலுள்ள,அவனின் சினேகிதனின் தகப்பனின் பத்திரிகையில் அவனின் கதை பிரசுரிக்கப் பட்டது.பலரால் வாசிக்கப்பட்டது. கேசவன் என்றொரு எழுத்தாளன் அன்று பிறந்தான்.

சில எழுத்தாளர்கள்போல்,இவன் கற்பனையில்,இளம் கன்னிகள் தங்கள் தேன்வழியும் அதரங்களால் இவனை முத்தமிட்டு வெறியுண்டாக்கவில்லை. அரசியலயறிவற்ற ஆயுததாரிகள்,அறிவை மறைத்து விட்டு உணர்வைத்தூண்டும் சுதந்திரகீதம் இசைக்கவில்லை.இவன் தனக்கு லண்டனிற் கிடைத்த அனுபவங்களை வைத்து எழுதினான்.

லண்டனில் அதிகாலையில் எழுந்து வேலைக்குப் போகும்போது,சிலவேளைகளில் இவனின் காதுகளுக்குள்ளால் நுழைந்து காதைப் புண்ணாக்கிய இனவாதக் கிண்டல்கள், வேலை செய்யுமிடங்களில் இவனை ஒரு இரண்டாம்தரப் பிரஜையாக்கிய துவேசங்கள்,படிப்புத்தளத்தில் வெள்ளை மாணவர்களையுயர்த்தி வைத்த இரட்டை வேடங்கள், அத்துடன் பிரித்தானியாவுக்குக் குடிபெயர்ந்த பல ஆசிய நாட்டவர், வசதிக்காகப் பிரித்தானிய வளங்களைப் பெற்றுக் கொண்டு, தங்களின் பாரம்பரிய’கலாச்சாரம்’; என்ற பெயரில் தங்கள் கலாச்சாரத்தில் ஆளுமைசெய்யும் ஆணாதிக்கத்தைப் பெண்களில் திணிக்கும் கொடுமைகமைகள் என்பன கேசவனை வருத்தியது. அதன் பிரதிபலிப்புக்கள் அவன் எழுத்தில் உருவெடுத்தன.

இவனின் முதற்கதை,வெளிவந்ததும்,பலர் பாராட்டுக்கள் தெரிவித்தார்கள். இலங்கையில்,பத்திரிகை நடத்தும் கேசவனின் நண்பனின் தந்தைக்குப் பெரிதாகப் பிரித்தானிய நாட்டிலுள்ள இனவாதம் தெரியாவிட்டாலும்,அவர் ஒரு ‘நல்ல மனிதர்’,நல்ல விடயங்களை மதிப்பவர்,மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கொடுப்பவர் என்று கேசவனின் நண்பன் மாதவன் தனது தகப்பனைப் பற்றிச் சொல்லியிருந்தான். அத்துடன்,அவர் ஆத்மிக விடயங்களில் அக்கறை கொண்டவர்,தமிழுணர்வு கொண்டவர். இலங்கையில் ஆங்கிலம் படித்த தமிழர்கள் மட்டும் லண்டனில் வாழ்ந்த காலமது. தனது பத்திரிகை மூலம்,லண்டன் தமிழர்களின் மொழியுணர்வை வளர்க்க நினைத்தவர்.

இன்று, கேசவன் ஒருநாள் தற்செயலாக முரளியைச் சந்தித்திருக்கிறான். முரளியும்,கேசவனும் ஒருகாலத்தில் கண்டியிலுள்ள பாடசாலை ஒன்றிற் படித்தவர்கள்.இருவரின் தகப்பன்மாரும் அப்போது அங்கு அரச உத்தியோகத்தர்களாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.இலங்கையிற் பல தமிழர்கள் நாடோடிகளாக வந்ததும் இவர்களும் வெவ்வேறு திசைகளிற் பிரிந்து விட்டார்கள்.

கேசவன் லண்டன் பல்கவைக்கழகத்தில் படித்துக்கொண்டு பகுதி நேர வேலை செய்து கொண்டிருக்கிறான்.முரளியைத் தற்செயலாகக் கண்டது சந்தோசமாகவிருந்தது. முரளி மிகவும் மெலிந்திருந்தான்.முன் பற்கள் முட்டிக்கொண்டு தெரிந்தன.பலவருடங்களுக்கு முன் மிகப் பொலிவாக இருந்தான்.முரளி அவர்களின் குடும்பத்தில் மூத்த மகன். அவனுக்குக் குடும்பப்பொறுப்பு மிக அதிகம்.

இளவயதில் முரளியும் கேசவனும் பாவை விளக்குத் தொடர்கதை மூலம் இலக்கியத்தை ரசிக்கப் பழகியவர்கள். ஆனாலும், கேசவனின் தகப்பன் ரீடர் டைஜஸ்ட் போன்ற பத்திரிகைகளையும் வாங்குபவர். மகனின் ஆங்கில அறிவு வளர்ச்சிக்காக அவனுடன் ஆங்கிலம் பேசுபவர்.மகனுக்குப் பொதறிவும், பன்முக எழுத்து ஆர்வமும் வருவதற்கு கேசவனுக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அறிமுகம் செய்து வைத்தார்.

கேசவனும் முரளியும், அந்தக்காலத்து முன்னணித் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களை விரும்பிப் படித்தார்கள்.பல வருடங்களுக்குப் பின் லண்டனிற் சந்தித்துக்கொண்டபோது,முரளி ஓவர்க்கோட்டால் உடம்பை மறைத்துக்கொண்டு,லண்டன் பாதாள ரெயில்வே ஸ்ரேசன் ஒன்றில் தமிழ்ப் பத்திகை வாசித்துக்கொண்டிருந்தான்.பல காலத்தின் பின் சந்தித்துக் கொண்டதால் இருவரும் தயக்கத்துடன் ஒருத்தரை ஒருத்தர் ; பார்த்துக்கொண்டனர்.கேசவன் இயல்பாகவே கொஞ்சம் கூச்ச சுபாவமுடையவன். உருவத்தில் எத்தனையோ விதத்தில் வித்தியாசம்.எவ்வளவோ மாறியிருந்தார்கள். கேசவன் உயர்ந்து வளர்ந்திருந்தான்,முரளி எப்போதோ அன்று பார்த்ததைவிட ஒரு அடி கூட வளர்ந்திருந்தான். அடையாளம் கண்டதும் இருவரும் ஆனந்தத்துடன் பழைய உலகத்திற்கு ஒருதரம் போய் வந்தார்கள்.கேசவனின் எழுத்தைத் தான் வாசித்திருப்பதாக முரளி சொன்னான்.

கேசவன் தனது நண்பனின் புகழ் மாலைகளைத் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டான்.

தான் இன்னும் தமிழ் எழுத்துக்களில் ஆர்வம் என்றும் பாலகுமார் போன்றோர் எழுத்துக்களை விரும்பி வாசிப்பதாகவும் முரளி சொன்னான் கேசவனுக்குத் தமிழ்ப்பத்திரிகைகளையோ புத்தகங்களையோ ஒழுங்காக,லண்டனில் வாங்கவோ படிக்கவோ இப்போதெல்லாம் அதிகம் நேரமிருப்பதில்லை.எப்போதாவது இருந்து விட்டு,ஏதோ ஒரு உந்துதல் வந்தால் ஒரு கதை எழுதுவான் அவ்வளவுதான்.

லண்டனில்,தான் ஒரு தமிழ்ப் பத்திகை நடத்த ஆசைப்படுவதாகவும் முரளி சந்தோசத்துடன் சொன்னான். நண்பர்களுக்கிடையில்,தமிழ் என்ற மொழியின் தொடர்பைத் தவிர இருவரின் சிந்தனையும் வெவ்வேறு விதமானவை என்பதைக் கேசவன் உணரப் பெரிய நேரமெடுக்கவில்லை. அவன் தான் கண்ட அனுபவங்களுக்குப் பின்னிருக்கும் அரசியல் முரண்பாடுகளை, கலாச்சாரக் கொடுமைகளை,இனவிரோத நடவடிக்கைகளைக் கண்டு குமுறி எழுதுபவன்.ஆனால்,முரளி தமிழ் மொழியின் ஆற்றலை வியாபாரமாக்க நினைப்பவன் என்று தெரிந்தது.

முரளி என்ன செய்யப்போகிறான்? ஓரு பத்திரிகையைத் தொடங்கி, இடியப்ப,மீன்வியாபார விளப்பரங்கள்,மணமகள் மணமகன் தேவை விளம்பரங்கள், மரணஅறிவித்தல்கள் நடுவில்,இனவெறியைத் தூண்டும் அரசியல் வாதிகளின் ஆவேசப் பேச்சுக்களுடன் ஒரு சில கதை கட்டுரை போட்டு வியாபாரம் செய்யப் போகிறானா?

கேசவன் நண்பனைப் பார்த்தான். ‘இளைஞர்களுக்குப் பிடித்தாக ஒரு கதை,அரசியில்லாத,காதற் கதையொன்றை’ எழுதித் தரச்சொல்லி கேசவனைக் கேட்கிறான்.

தான் இலங்கையில் ஒரு தமிழ்ப்பத்திரிகையில் உதவி ஆசிரியராகவிருந்ததாக முரளி சொன்னான். இலங்கையிற் தொடரும் பிரச்சினைகளால், தான் லண்டனுக்கு வந்ததும், பத்திரிகை ஒன்றைத் தொடங்கவேண்டும் என்ற ஆசையை நடைமுறைப் படுத்தப்போவதாகவும் முரளி திரும்பத் திரும்பச் சொல்லிச் சந்தோசப் பட்டான்.

எப்போதாவது இருந்து ஒரு கதை எழுதுவதை விட,ஆனமானமான ஒரு தொடர்கதை கேசவனுக்கும் விருப்பம்தான்.ஆனால் அவனுக்கு நேரமில்லை. புதிதாக ஒரு வேலை கிடைக்கும் தருணம் வந்திருக்கிறது. அது கொம்பியூட்டர் கல்லூரியிற் கிடைக்கவிருக்;கிறது.

அத்துடன் நிறைய வேலைகளும் உண்டு.

நண்பனிடம் தனது நிலையைச் சொன்னான் கேசவன். ‘வீட்டில் என்ன பிரச்சினை? நீ வீட்டில் கடைசிப் பிள்ளை,பொறுப்புக்கள் அதிகம் கிடையாது அத்துடன் இன்னும் உனக்குக்கல்யாணம் ஆகவில்லை என்று சொன்னாயே?’ ஆச்சரியத்துடன் கேட்டான் முரளி.

கேசவன் முரளியை எத்தனையோ ஆண்டுகளுக்குப்பின் கண்டதும்,முரளியிடம் ஒட்டுமொத்தமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கைபற்றிச் சொல்லவேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இருப்பதாக அவன் நினைக்கவில்லை.அவன் தனது தமக்கை இலட்சுமியுடனிருப்பது பற்றியோ,அவளின் வாழ்க்கையின் சிக்கல்கள் பற்றி முரளியிடம் விளக்க அவன் தயாராயில்லை.

இதுவரையும் பத்திரிகைத்தொழிலில் பரிச்சயம் இருப்பதால் அதைத் தவிரத் தனக்கு வேறு ஏதும் செய்யமுடியாது என்றும், அதற்கு,நண்பன் என்ற முறையில் கேசவன் உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டான் முரளி.

இருவரும் பாதாள இரயிலில் பேசிக்கொண்டு வந்தார்கள். பேச்சின் ஈடுபாட்டில் கேசவன் தான் இறங்கவேண்டிய இடத்தை மறந்து விட்டான்.’இதென்ன இந்த ட்ரெயின்,லண்டனைச் சுற்றியோடிக்கொண்டிருக்கும் சேர்க்கிள் லைன் ட்ரெயின்தானே? பேசிக்கொண்டிருப்போம், அதற்கிடையில் நீ இறங்கவேண்டிய இடம் இன்னொரு தரம்; வந்து சேரும்தானே?’ முரளி அப்படிச்சொன்னதும் கேசவன் தனது மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்துக்கொண்டான்.அவன் இன்று கல்லூரிக்குப் போகவில்லை..கல்லூரியில் சில கட்டிடத் திருத்தம் அவசரமாகச் செய்வதால் இரண்டு நாள் வீட்டிலிருந்து கல்லூரி வேலைகளைச் செய்கிறான். ஆனால் இன்று தன்னுடன் படிப்பிக்கும் சக ஆசிரியை ஒருத்தியின் மகனின் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்கப் பட்டிருந்தான் தான் வருவதாகச் சொல்லியிருந்தான். கட்டாயம் போகவேண்டும்.

முரளி நீண்டகாலத்துக்குப்பின் கண்ட நண்பன்தான். அதனால் நேரம்போவது தெரியாமற் பேசிக்கொண்டிருந்து விட்டார்கள்.முரளியிடமிருந்து தப்பிப்போவது போதும் போதும் என்றாகி விட்டது.

இருவரும் தங்களின டெலிபோன்; நம்பர்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.

தனக்குப் பிடித்தமாதிரி ஏதும் எழுதவேண்டும் என்ற உந்துதல் வந்தால் மட்டும் ஏதும் எழுதுபவன் கேசவன். அதுவும், அண்மையில் இவன் படிப்பிக்கும் கல்லூரிக்கு வேலைக்கு வந்திருக்கும் மஞ்சுளா என்ற பெண்ணை நினைத்தால்,அவளின் சோகமான முகத்தைப் பார்த்து கவிதை எழுதவேண்டும்போல் வருகிறது.; முரளியின் கட்டாயத்துக்காக அவனால் எழுத முடியுமா? என்னவென்று மஞ்சுளாவின் நினைவுவந்ததும் கற்பனை கண்டபாட்டுக்குப் பறக்கிறது?அவள் வாழ்க்கையை எழுதினால் எத்தனையோபோர் படிப்பார்கள், பரிதாபப்படவும் செய்வார்கள்-அவள் மாதிரிப் பலபெண்களின் துக்கமான வாழ்க்கையை எழுதலாமா?

கேசவன் ட்ரெயினை விட்டு இறங்கியதும்,மழை பெய்யத் தொடங்கியிருந்தது. லண்டனில் பெரிய ஸ்ரேசன்களில் ஒன்றான,படிங்ரன் ஸரேசனிலிருந்து மக்கள் சாரிசாரியாகப் போய்க்கொண்டிருந்தார்கள.;பின்னேரம் நான்கு மணி என்றபடியால், பாடசாலைகளிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு போகும் தாய் தகப்பன்களில் கார்களால் தெருக்கள் நிரம்பி வழிந்தன.

அவன் தான் போக வேண்டிய இடமான, சக ஆசிரியை பார்பரா கோர்டனின் விலாசத்தைச் சரி பார்த்துக்கொண்டான்.தெருவின் கடைசியில் அவள் வீடிருந்தது.

கேசவனின் சக ஆசிரியை ஒரு ஆங்கிலேயப்பெண். அவளுக்கு,ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவளின் காதலின் சின்னம் தனது மகன் என்று சொல்வாள் அந்தப் பையனுக்குத் தனது தகப்பனைத் தெரியாது.

‘ஒருகாலத்தில், எனது தகப்பன் யாரென்று உனது மகன் கேட்டால் என்ன பதில் சொல்வாய்?’ பார்பராவைக்கேட்டான் கேசவன். அவள் கேசவனை ஏற இறங்க ஒருதரம் பார்த்தாள்.

‘தகப்பனிலாமல், தாயாகலாம் என்ற வித்தில் விஞ்ஞானம் வளர்ந்தபின்னும் இப்படிக்கேள்வி கேட்கிறாயே? நீ ஒரு இந்தியன், பெண்கள் எதையும் ஆண்களின் தயவிற்தான் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதைச் சொல்லப் போகிறாயா,அது காலம் கடந்த தத்துவம்’ என்று அவள் விளக்கச் சொல்லவிருப்பதை அவள் பார்வை விளக்கியது.

அதற்கு மேல் அவன் அவளிடம் அவளின் பழைய வாழ்க்கையையோ, அவள் மகனின் தகப்பனின் தகப்பனைப் பற்றியோ எதுவும் கேட்கவில்லை.பார்பரா,கேசவனைவிடக் கூடப்படித்தவள். நிறைய விடயங்களில் ஈடுபடுபவள்.அவனைவிடப் பரந்த விதத்தில் உலகைப் பார்ப்பவள்.

உலக அரசியலில் அக்கறைகாட்டுபவள். கேசவனும் பார்பராவும் பல மணித்தியாலங்கள் அரசியற் சர்ச்சைகளில் ஈடுபட்டு நேரத்தைக் கழித்திருக்கிறார்கள். கேசவன் கல்லூரியிலிருந்து வீடுவர நேரமாகிவிட்டால், அவனது தமக்கை இலட்சுமி பார்பராவின் வீட்டுக்குப் போன்பண்ணி அவனைத் தேடுமளவுக்கு பார்பராவும் கேசவனும் சினேகிதமாகியிருந்தார்கள்.

கொஞ்ச காலத்துக்கு முன்வரையும் இருவரும் ஒருத்தொருத்தர்,மிகவும் அண்மையான வீடுகளில்,கல்லூரிக்கு அருகில் வசித்தார்கள். அடிக்கடி சந்தித்தார்கள். இப்போது அவள் வீடு மாறிவிட்டாள். அவளை அடிக்கடி சந்தித்து அரசியல் பேசமுடியாதிருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு முன் கல்லூரியில் சில மாணவர்கள் ரகளை செய்தார்கள்அதில் கேசவன் இடையிட்டபோது,சில மாணவர்கள் அவனைத் தாக்கி விட்டார்கள். கேசவன் ஒரு ‘இந்தியன்’ என்பதாற்தான் அவர்கள் அவனைத் தாக்கினார்களா அல்லது சண்டையில் இடையில் அகப்பட்டுக்கொண்ட ஒரே காரணத்துக்காத் தாக்கப் பட்டானா? ஏன்று பல கேள்விகளை எழுப்பினாள் பார்பரா.

தான் ஒரு இந்தியனில்லை, இலங்கையன் என்ற சொல்ல அவன் முயற்சித்தபோது, அவள் சிரித்தாள்.’இங்கிலாந்தில் வாழும் எங்களின்; மூதாதையினர் ஐரோப்பாவின் பல பகுதியிலுமிருந்து வந்தவர்கள். அப்படித்தான், நீயும், ஏதோ ஓரு காலத்தில் உனது மூதாதையினரும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருப்பார்கள்’ என்று விளக்கம் சொன்னாள்.

‘எங்களின் மூதாதையினர் அத்தனைபேரும் ஒரு காலத்தில் ஆபிரிக்காவிற் பிறந்து பல கால கட்டங்களில் உலகின் பல பாகங்களிலும் சிதறிப்போய்ப் பல அடையாளங்களைக் கொண்டிருக்கிறோம்’.அவளின் விளக்கங்கள் எப்போதும், ‘நாங்கள் எல்லோரும் ஏதோ விதத்தில் இணைக்கப் பட்டிருக்கிறோம்’; என்பதன் அடித்தளத்தில் அமைந்திருக்கும். அவை அரசியலாகவிருக்கலாம்,ஆத்மீகமான விடயமாகவிருக்கலாம், எதிலும்,மனித இனத்தின்,வளர்ச்சியின், மாற்றத்தின், என்று பல விடயங்களிலும் ஏதோ ஒரு ஒற்றுமையைக் காண்பவள் பார்பரா.

கல்லூரியில் மாணவர் பிரச்சினை நடந்த கால கட்டத்தில், ‘அந்த நிகழ்ச்சியில் ஏதும் இனத் துவேசம் காட்டப்பட்டால் அதற்காக ,வெள்ளையினத்தவரின் சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவள் சோகத்துடன் சொன்னாள். அதற்காக அவள்,அவனைத் வீட்டுக்குத் தேனிர் சாப்பிட அழைத்தாள். அதுதான் அவர்களின் சினேகிதத்தின் ஆரம்பம். அவனைப் பற்றி அவளுக்கு அதிகம் தெரியாது.

அன்று அவன் அவளின் வீட்டுக்குப் பின்னேரத் தேனிர் விருந்துக்காகப் போனபோது, பிரான்ஸ் நாட்டைச் சோர்ந்த ஒரு இளம்பெண்,அவளின் மகன் ஜெரமியைப் பார்த்துக்கொள்ள நியமிக்கப் பட்டிருந்தது தெரிந்தது. ஐரோப்பாவிலிருந்து ஆங்கிலம் படிக்க வரும் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள், மத்தியதர ஆங்கிலேயர்களின் வீட்டில் வேலை செய்வது தெரியும்.’அவள் பெயர்; சிமோன்’ என்று கேசவனுக்கு அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைத்தாள் பார்பரா. பிரான்சிய இளம் பெண்ணான சிமோனின் சிரிப்பு அழகான மலர் விரிதுபோலிருந்தது. ;’பிரான்ஸ் நாட்டின் பிரபல எழுத்தாளி சிமோன் டி புவாக்கு இவள் சொந்தம் என்று நினைத்துக்கொள்ளதே’ பார்பரா கேசவனைச் சீண்டினாள்.

சிமோன் மிகவும் கள்ளமற்ற இளம் பெண். லண்டன் தனக்குப் பிடித்திருப்பதாகத் தனது மழலை ஆங்கிலத்தில் கேசவனுக்குச் சொன்னாள்.தான் இலங்கையைச் சேர்ந்த தமிழன் என்று சிமோனுக்குச் சொன்னான் கேசவன்.

சிமோன்,பிரான்சிலுள்ள தமிழ் அகதிகள்பற்றி தனக்குத் தெரிந்த விடயங்களை, கேசவனுக்குச் சொன்னாள் இவன் உம் கொட்டிக்கொண்டான்.சிமோனின் குரலில் தமிழ் அகதிகளுகு;கான பரிவு நிறைந்திருந்தது. அவனும் லண்டனில் ஒரு தமிழ் அகதியா என்று கேட்டாள். அவள் குரலில் அவனை ‘அணைத்துக்’கொள்ளும் தாய்மை கலந்திருந்தது. சுயநலம் பிடித்த உலகில், வாழ்வின் முதற்படியில் காலடி எடுத்து வைக்கும் இந்த இளம்பெண் எவ்வளவு பாசத்துடன் இன்னுமொரு இனத்தவனைக் கணிக்கிறாள் என்ற நினைவு அவனை மெய்சிலிர்க்கப் பண்ணியது.

அதன்பின் பல தடவைகளில் பார்பரா வீட்டில் சிமோனை அடிக்கடி சந்தித்திருக்கிறான்.அவள் குரல் கேசவனுக்கு மிகவும் பிடிக்கும். கபடமற்ற இளவயதின் பரிசுத்தமான புன்னகையில் அழகு நர்த்தனம் செய்கிறது.ஆங்கிலம் படிப்பதற்காகத் தனது பதினேழுவயதில் இன்னொரு நாட்டுக்கு வந்த அவள் துணிவு அவனுக்குப் பிடித்திருந்தது. முப்பத்திஏழு வயதான தமக்கை இலட்சுமிக்கு அந்தத் துணிவு கிடையாது. வாழ்க்கை இலட்சுமியின் தலையில் போட்டுக் குவிக்கும் பல தரப்பட்ட பாரங்களால் இலட்சுமி திணறிக் கொண்டிருக்கிறாள்.

சிமோன்,இன்னும் சில வருடங்களில்; பல்கலைக் கழகம் போவாளாம்,அதற்கு முதல் ஆங்கிலம் திறமையாகப் பேசிப்பழக லண்டன் வந்தாளாம்.அவள்,குழந்தை ஜெரமியை வெளியில் அழைத்துக்கொண்டுபோகும்போது,இவனையும் கூட வரச் சொல்லிக் கேட்பாள் இவன் மறுத்துவிடுவான். பார்பரா இவனை ஆச்சரியத்துடன் பார்ப்பாள்.

‘சிமோனுடன் பார்க்குக்குப்போக ஏன் இவ்வளவு தயக்கம் உனக்கு?’ பார்பரா குழப்பத்துடன்; கேட்பாள்.

‘லண்டன் நிறையத் தமிழர்கள் இருக்கிறார்கள். என்னை ஒரு இளம் பெண்ணுடன் கண்டால் கண்டபாட்டுக்குப் பேசத்தொடங்கிவிடுவார்கள்’ அவன் முணுமுணுத்தான்.

பார்பரா அவளின் நீலவிழிகள் இவனைப்பார்த்து நகைத்துத் தானும் சிரிப்பாள். சிமோன் இப்போது பிரான்சுக்குத் திரும்பி விட்டாள். அவன் வாழ்க்கையில் அவன் காணும் சில பெண்கள் அவனின் நினைவில் நிலைத்து நிற்பவர்கள் அவர்கள் ஒவ்வொருத்தரிடமும் எத்தனையோ கதைகள் இருக்கின்றன். ஆனால் அவர்களின் கதைகள்; கடைசி வரைக்கும் முரளிக்குத் திருப்தி தராது என்ற அவனுக்குத் தெரியும்.

பார்பரா வீட்டுக்குப்போனதும்,’ஏன் லேட்டாக வருகிறாய்?’ என்பதுபோல் அவள் இவனைக் கேட்கவில்லை. இந்தியர்களுக்கும்,குறிப்பிட்ட இடத்திற்கு சரியான நேரத்துக்குச் செல்வது என்ற நியதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று இவனுடன் பழகத் தெரிந்த கொஞ்ச நாட்களில் பார்பரா தெரிந்து nhண்டாள்.

‘வரும் வழியில் ஒரு சினேகிதனைக் கண்டேன் அதுதான் நேரமாகிவிட்டது’ குற்ற உணர்வுடன் கேசவன் முணுமுணுத்தான்.

அவள் வீடுநிறையக் குழந்தைகளும் அவர்களுடன் வந்த பெற்றோர்களுமாக நிறைந்திருந்தார்கள்.பார்பராவின் பெற்றோர்களை இவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.அங்கு வந்திருக்கும் ஒருசிலரைத் தவிரப் பலரை இவனுக்குத் தெரியாது. மகனின் ஐந்தாவது பிறந்த தினப் பார்ட்டிக்கு வந்த குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருத்தனாகக் கேசவனில்லை,ஆனால்,அவன் பார்பராவின் வாழ்க்கையில் ஒரு முக்கியமானவனாக இருக்கவேண்டும் என்ற பார்வை வந்திருந்த ஒரு சிலரிடமிருந்து வெளிப்பட்டது. அந்த மாதிரியான உறவுடன் பார்பராவையும் தன்னையும் இணைப்பதை நினைத்து அவன் தர்மசங்கடப் பட்டான்.

‘குழந்தைகளின் கும்மாளம் முடியப் பெரியவர்களுக்குச் சாப்பாட்டு விருந்து நடக்கும், நீ நிற்பாய்தானே?’ அவனுக்கு ஒரு கேக் துண்டைக் கொடுத்தபடி,அவனின்; சம்மதத்தை எதிர்பார்த்த தொனியில் பார்பரா கேட்டாள்.

‘ மன்னிக்கவும் பார்பரா, அக்காவின் சினேகிதி ஒருத்திக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தச் சினேகிதியைப் பார்க்க ஹாஸ்பிட்டலுக்குப் போகவேண்டும் என்று அக்கா சொன்னாள்….நான்..’அவன் அவள் கொடுத்த கேக்குடன் வார்த்தைகளையும் மென்று விழுங்கினான்.

அவள் சிரித்தாள். கேசவன் அக்காவின் சந்தோசத்துக்கும் திருப்திக்கும் எதையும் செய்யத் தயங்காதவன் என்று அவளுக்குத் தெரியும்.

கேசவனின் மைத்துனர் ஒரு குடிகாரன். லண்டன் மாம்பிள்ளை என்று பெரிய கற்கனைகளுடன் கைபிடித்தவள் கணவனின் குடியைமாற்ற வழிதெரியாமல் தவிப்பதும் அவள் வாழ்க்கையை அவளின் தம்பி கேசவன் தாங்கிப் பிடிப்பதும் பார்பராவுக்குத் தெரியும்.முப்பது வயது தாண்டியம் தனது எதிர்காலத்தைக் கவனிக்காமல் அக்காவுக்காகக் கேசவன் வாழ்கிறான்.

‘நாளைக்குக் கட்டாயம் வருவேன்”அவன் அவள் கொடுத்த காப்பியை உறிஞ்சியபடி சொல்கிறான்.

;’நிச்சயமாகவா?’அவள் அவநம்பிக்கையுடன் கேட்கிறாள். ஐந்து வயதுப் பட்டாளங்களால் வீடு அமளி துமளியாகிறது.இந்தப் பிஞ்சுமனம் படைத்த குழந்தைகள் ஒவ்வொருத்தரிடமும் எதிர்காலத்தில் எத்தனையோ கதைகள் ஆரம்பிக்கும்

அவன் நினைவு எங்கேயோ போகிறது.

‘இங்கு வரும்போது ஒரு நண்பனைச் சந்தித்தேன்’

அவன் பார்பராவைப் பார்த்தபடி சொன்னான்.

‘அதுதான், இங்கு வந்து இறங்கியதும்; சொன்னாயே’ அவள் குழப்பத்துடன் புருவத்தை உயர்த்துகிறாள்.

‘அவன் ஒரு பத்திரிகை தொடங்கப் போகிறானாம்…

‘ஓ நல்ல விடயம்;’

அவள் மேலும் அவன் சொல்லப் போகிறான் என்று தன்னைத் தயார் படுத்திக்கொண்டாள்.

‘…அவன் என்னிடம் ஒரு தொடர்கதை ..காதற்கதை எழுதச்சொல்லிக் கேட்டான்’அவன் பார்பராவைப ;பார்த்தபடி சொன்னான். அவளது நீலவிழிகள் ஆயிரம் கவிதைகளுக்குச் சமம் என்று அவனுக்குத் தோன்றியது.

அவள் கணிரென்று சிரித்தாள்

‘ஏன் சிரிக்கிறாய்?’;.

‘உனக்குக் காதலிக்கத் தெரியுமா?’அவளது கிண்டல் அவனைந் துண்டியிழுத்தது.

”ம்..ம்; மஞ்சுளா போன்ற பெண்களின் கதையைப் பற்றி எழுதப்போகிறேன்’

‘ஏன் மஞ்சுளாவைக் காதலிக்கிறாயா?’

அவனுக்கு எரிச்சல் வந்தது.

‘அவள் ..மஞ்சுளா கல்யாணமானவள்’ அவன் மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.

அவள் அவன் குடித்த முடித்த தேனிர்க் கோப்பைகளை வாங்கிக் கொண்டாள். அவன் அவளைப் பார்த்தான்.பார்பரா, இன்று மிகவும் அழகாக இருக்கிறாள். அவனுடைய வயதுதான் அவளுக்கும். ஆனால் இவனை விடப் பல அனுபவங்களில் மூழ்கியெழுந்து அறிவில் முதிர்ச்சி கண்டவள்.

கலைகளைப் பற்றிய பல்கலைக்கழகப் பட்டம் முடித்த கையோடு, தன்னுடைய காதலுடன் ஆபிரிக்காச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டாள்.

திரும்பி வரும்போது வயிற்றில் ஒரு குழந்தை, வாழ்க்கையின் துணைவனான இருப்பான் என்று இவள் நினைத்து நம்பியவனுடன் முறிவு.

வாழ்க்கையைத் தனியாக ஓட்டத் தொடங்கினாள் அழகிய ஓவியங்களை வரையும் ஒரு கலைஞி. கேசவனையும் இழுத்து வைத்து அவனையும் ஓவியமாக்கினாள்.

அந்த ஓவியத்தைக் கேசவன் தனது தமக்கைக்குக் கொண்டு காட்டினான். அக்காவுக்கு அதையெல்லாம் ரசிக்க நேரமில்லை.

அவனது மைத்துனர் நாகலிங்கம் வேலைக்குப்போகாத நேரங்களில்,அளவுக்கு மீறிக்குடித்தபோதையில் தள்ளாடிக்கொண்டிருப்பார்.அவள் அவருடன் மாரடித்துக் கொண்டிருப்பாள்,வாதம் செய்து கொண்டிருப்பாள், அல்லது பல தடவைகளில் அழுது கொண்டிருப்பாள்.அவளது குழந்தைகளான,

அவனது மருமக்களுக்கு இப்போதுதான் பத்து,ஆறு,நான்கு வயதுகளாகின்றன.

பத்து வயது மகன், பாடசாலையற்ற நேரத்தில் சினேகிதர்களுடன, பந்து விளையாட வெளியில் போய்விடுவான்.

ஆறுவயது மருமகன் எதிர்காலத்தில் கலைகளை ரசிப்பான் எனத் தெரிகிறது. விளையாட்டுக்காகக் களிமண்ணில் உருவங்கள் செய்து மகிழ்கிறான்.தாய் தகப்பனில் சண்டையிலிருந்து தப்ப அவன் தனது மனத்தைக் களிமண் சிலைகளுடன் சங்கமித்துக்கொண்டான் என்று கேசவனுக்குத் தெரியும்.

கேசவன்,தனதுநேரத்தைப் பார்த்துக்கொண்டான்.

‘என்ன அவசரப்பட்டு ஓடுகிறாய்?’

அவனுக்குச்சில பலகார வகைகளைக் கட்டிக்கொடுத்தபடி பார்பரா கேட்கிறாள். அவளுக்கு அவன் தமக்கை ஆஸ்பத்திரிக்குப்போவதுபற்றிச் சொன்னது ஞாபகம் வருகிறது.

இலட்சுமியில் பார்பராவுக்குப் பரிதாபமா அல்லது கோபமா என்று தெரியாத உணர்ச்சி வருவதுண்டு. இலட்சுமி தன் கணவனின் சுயநலமான போக்கைக் கண்டிக்காமல்,சமுதாயத்தின்’ கவுரமான’ தம்பதிகள் என்ற போர்வைக்குள் தன்னைத்தானே பலியாக்கிகொள்வதை பார்பரா போன்றவர்களால் விளங்கிக் கொள்ளவோ அல்லது பொறுமையாகச் சகித்துக் கொள்ளவோ முடியாமலிருக்கிறது.

‘மஞ்சுளாவைப்பற்றி எழுத ஏன்யோசிக்கிறாய்?’ கேசவனை வழியனுப்ப வாசல் வரைக்கும் வந்த பார்பரா கேட்டாள்.அவன் அந்தக் கேள்வியைத் தனக்குத் தானே ஒருதரம் கேட்டுக்கொண்டான்.

‘அவள் உனது ஆசிரியர் கேட்கும் காதற்கதைக்குத் தகுதியானவள் இல்லையே’ பார்பரா சொன்னாள்.

‘நீ சொல்வது சரிதான் பார்பரா’ கேசவன் ஒப்புக் கொண்டான்.

அவன் புறப்பட்டான். மழை தூறத் தொடங்கிவிட்டது.போகும் வழியில் முரளியை நினைத்துக் கொண்டான் முரளி எப்படியும் வாழ நினைப்பவன்.அந்த மனப்போக்கு முரளிக்கு அவனது இளவயதிலேயே அப்பட்டமாகத் தெரிந்தது. கேசவன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலடசியத்தைக்கொண்டவன்.அவனது தமக்கை இலட்சுமியின் வாழ்க்கையை நினைத்தபோது அவனுக்குச் சோகமாகவிருக்கிறது.அவள் தான் சந்தோசமாக இருப்பதாக மற்றவர்களுக்கு நடிக்கிறார்கள். அவர்கள் வீட்டில் நடக்கும் இடைவிடாத தர்க்கங்களையும் சண்டைகளையும் கேசவன் அறியாதவனல்ல.

‘இலங்கையில் நடக்கும் கொடுமையால் வாழவேண்டிய எத்தனையோ தமிழ்ப்பெண்கள்,தங்கள் வாழ்க்கைத் துணைவர்களைப் பறிகொடுத்துவிட்டு விதவைகளாக வாழ வழியில்லாமலிருக்கிறார்கள்,அவர்களோட பார்க்கும்போது நான் அதிர்ஷ்டசாலிதானே’ என்று தம்பியைக் கேட்கிறாள்.

‘அக்கா பாவம்’ அவன் தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.

அக்காவின் கணவர் லண்டனில் நல்ல வேலையிலிருக்கிறார், என்று சொல்லிக் கல்யாணம் செய்துவைத்தார்கள். ஓரு நல்ல மனிதனா அவர்? என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. தமிழ்ச்சமுதாயக் கல்யாண சந்தையின் பலியாடுகளில் அக்காவும் ஒருத்தி. தன் துயர்களைத் தன் குழந்தைகளில் அன்பில் மறக்கிறாள் அவள். அவர்களின் படிப்பில், நன்னடத்தையான வளர்ச்சியில் மிக மிக அக்கறையாகவிருக்கிறாள்.

கல்யாணத்தில் அக்கா மாதிரி தோல்வி கண்ட மஞ்சுளாவுக்குக் குழந்தை என்று கொஞ்ச ஒன்றும் கிடையாது. மஞ்சுளா,கிழக்கு ஆபிரிக்காவிற் பிறந்தவள்.பெற்றோருடன் லண்டனுக்கு வந்து படித்தவள். தாய் தகப்பன் சொல்லிக் கொடுத்த இந்து உபதேசங்களின் கட்டுப்பாட்டில் வளர்ந்தவள்.இந்தியாவில் தாய்தகப்பன் பார்த்த உறவுக்காரப்பையனைத் திருமணம் செய்யச் சென்றாள்.

மிக மிக ஆடம்பரமானவிதத்தில் திருமணம் நடந்தது.சாந்தி முகூர்த்தத்திற்கு முதல் ‘மனம்விட்டுப்’போசவேண்டும் என்று மாப்பிள்ளை கேட்டானாம். மஞசுளாவும் சந்தோசத்துடன் தலையாட்டினாள்.

புது,மாம்பிள்ளை,மஞ்சளாவின் ‘லண்டன் அனுபவங்களைப்’ பற்றிக் கேட்டானாம். அவளும் சந்தோசமாகத் தனது படிப்பு, சுதந்திரமான வாழ்க்கைமுறைகள் பற்றிச் சொன்னாளாம். மாப்பிள்ளை, மஞ்சுளாவுக்கு, லண்டனில் எத்தனை ஆண் சினேகிதர்கள் இருந்தார்கள் என்று கேட்ட, அவளும் தனது பல்கலைக்கழக் மாணவ சினேகிதர்களை;பற்றிச் சொன்னாளாம். ‘அதில் எத்தனைபேர் சீரியசான போய்பிரண்டாகவிருந்தார்கள்’என்று அவன் கேட்க,
‘ஒருத்தரும் போய் பிரண்டாக இருக்கவில்லை. சாதாரண சினேகிதர்களே’ என்ற அப்பாவித்தனமாக மஞ்சுளா சொல்ல, ‘அப்படியானால் நீ ஒருத்தருடனும் படுத்தெழும்பவில்iயா?’ என்று கூருராமாகக் கேட்டானாம். ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன் தாலி கட்டிய புது மாம்பிள்ளை.நடுச்சாம்தில் அவளின்’கற்பு@(?) பற்றிய வினாவிடையால் ஆத்திரமடைந்த மஞ்சுளா தேசாய் பெட்டி படுக்கையுடன் அடுத்த நாட்காலையிலேயே விமானம் எடுத்து லண்டனுக்கு வந்து விட்டாள்.

கன்னி கழியாத கல்யாணப் பெண்ணாகத் திரும்பி வந்ததும் உலகம் அவளுக்கு வெறுத்து விட்டது. இப்படியான ஒரு கேவலாமான மனிதனைத் தனது தலையிற் கட்டிவைத்த தாய்தகப்பனில் அவளுக்கு ஆத்திரம்.அவர்களின் உபதேசங்கள், நல்ல அறிவுரைகளைக்கேட்டு வளர்ந்த தன்னை அவமானம் செய்த இந்திய ஆண்களில்; அவளுக்குப் படுகோபம்;. கறைபடிந்த ஆண்வர்க்கம் என்று திட்டுகிறாள்.ஒட்டு மொத்தமாக உலகத்து ஆண்வர்க்கமே அவளுக்குத் தற்போது எதிரியாகவிருக்கிறார்கள். கண்ணியமாகப் பெண்களை நடத்தத்தெரியாதவர்கள் என்று திட்டுவாள்.பெரும்பாலான ஆண்கள், சதைப் பிண்டத்தைத்தேடும் மிருகங்கள் என்று வைவாள். பலகாலமாக ஒரு இடமும் போகாதவள், கடந்த நத்தார்ப் பண்டிகைப் பார்ட்டியில் அளவுக்கு மிறி வைன்குடித்து விட்டு தள்ளாடினாள்.

அவளைப் பார்க்க கேசவனுக்குப் பரிதாபமாகவந்தது. தள்ளாடியவளைத் தாங்கிப் பிடிக்கப்போன கேசவனை மஞ்சுளா தேசாய் கண்டபாட்டுக்குத் திட்டினாள். கேசவன் அவளுக்கு ‘இந்திய’மாப்பிள்ளையை ஞாபகப் படுத்ததியிருக்கலாம்.அவர்களுடன் வேலை செய்யும் சைமனின் தோளில் துவண்டு விழுந்தாள். கேசவனுக்கு,சைமனைப்பற்றி நல்ல அபிப்பிராயம் கிடையாது. சேறுகண்ட இடத்தில் கால் புதைத்து, தண்ணி கண்ட இடத்தில் கழுவி விட்டு வாழக்கையைக் கொண்டு செல்பவன் சைமன் என்று கேசவன் அறிவான். கேசவன் அவளைச் சமாதானப்படுத்தி,; அவளைப் பத்திரமாக வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டான். அதன் பிறகு மஞ்சுளா,கேசவனைக் கவுரமாக நடத்துகிறாள். எப்போதாவது ஒரு புன்னகையையும் அவனுக்குச் சமர்ப்பிக்கிறாள்.

இன்று,கேசவனை அவனது நண்பன் முரளி காதல் கதை ஒன்று எழுதித் தரச் சொல்லிக் கேட்கிறான்.

கேசவனுக்கு, இதுவரை காதல் வரவில்லை. அவனுக்குத் தெரிந்த பெண்கள், அக்கா, பார்பரா, மஞ்சுhளா போன்றவர்கள். ஏதோ ஒரு விதத்தில் ஆண்களால் மனவேதனைப் பட்டவர்கள். காதல், கல்யாணம், சினேகிதம் என்ற பல போர்வைகளுக்குள்களால் நடக்கும் கொடுமைகளுக்கு ஏதோ ஒரு வித்தில் பலியானவர்கள்.

பிரான்சிய இளம் பெண் சிமோன் ஞாபகம் வந்தாள் அவள், பிரான்சுக்கு வந்த தமிழ் அகதிகளைக் கண்ட அனுதாபத்தில் கேசவனிடம் நட்புடன், பரிவுடன், மதிப்புடன் நடந்துகொண்ட இளம் மொட்டு. அவளும் ஒரு காலத்தில் யாரோ ஒரு ஆணால் மஞ்சுளா மாதிரி சோகத்தின் கொடுமையைக் காண்பாளா, அல்லது அக்கா மாதிரி எல்லாவற்றையும் மூடிமறைத்துவிட்டு நடிப்பாளா, கண்ணீரைக் காஞ்சிபுரப் பட்டாற் துடைத்துக்கொள்வாளா? பார்பரா மாதிரி துணிந்து நிற்பாளா?

பார்பராவின் அன்புக்காக,நட்புக்காக,வாக்குவாதாத்திற்காக,அவள் தயாரிக்கும் வித விதமான உணவுகளுக்;காக ஏங்குபவன் அவன் என்று அவளுக்குத் தெரியும். அதற்கு மேலும் அவளிடம் வேறு ஏதோ தேடி ஏங்குகிறானா?இவனின் ஏக்கம் இவனிற் பார்வையிற் தெரிந்ததோ என்னவோ, ஒரு நாள் அவள் கேட்டாள், ‘முட்டாளே, நான் உன்னைக் காதலிப்பேன் என்ற கற்பனை செய்யாதே, நான் ஒரு லெஸ்பியன். எனக்கு வந்த அனுபவத்துக்குப் பின் இன்னமொருதரம் ஒரு ஆணை நம்புவேன் என்று நினைக்கிறாயா’?

கேசவன் ஆடிப்போனான். அவள் லெஸ்பியன் என்று தெரிந்து கொண்டது அவனுக்கு ஆச்சரியமான விடயமாகவிருந்தாலும், அவளின் சந்தோசமான நட்பு அவனுக்குத் தேவையாகவிருந்தது. அவர்களின் நட்பான வாழ்க்கை அவனுக்குத் தேவையாகவிருந்தது.

மழை நின்று விட்டது. அக்கா பிள்ளை பிறந்த சினேகிதியைப்பார்க்க ஆஸ்பத்திரிக்குப்போய்விட்டா. முரளிக்குக் காதல் கதை எழுத கேசவனால் முடியாது. அதை அவனுக்குச் சொல்லவேண்டும் என்ற நினைத்தபடி தூங்கிப் போனான் கேசவன்.

(யாவும் கற்பனையே)

– தாயகம்-கனடா, பிரசுரம் 17.12.1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *