கரப்பான் பூச்சிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 6,992 
 

எதையும் மதிக்காமல் வானத்தையே அண்ணாந்து பார்த்துக்
கொண்டு நடப்பவன், காலடியில் இருக்கும் பள்ளத்தில்
தடுக்கி விழுந்து நகைப்புக்குள்ளாவான்.

From : Aesop Fables

‘ எண்ணிப் புள்ளி வைத்த
இழைக் கோலம் மறந்து போகும்.
உண்ணச் சோறு எடுத்தால்
உன் நினைப்பால் புரைக்கேறும்
தண்ணீருக்கு உருளும் ராட்டை
உன்னைப் போல் முரடாய் பேசும்
துணி உலர்த்தும் கொடிக் கயிற்றில்
அணி வகுக்கும் அண்டங் காக்கை
உன் பெயரைச் சொல்லிக் கரையும்
பாடத்தில் வரிகள் மாறி
பாதியில் உன் முகம் தெரியும்
உனக்கென்ன புத்தகம் கவிதையொன்று
எப்படியோ பொழுது போகும் …
எனக்கு ? உன் நினைவே கவிதையாகும் ’

“ எப்படி இருக்கு கவிதை ” என்று பத்திரிகையை நீட்டினாள் ஜான்ஸி. ஆவலும் நாணமும் ததும்பும் குரல்.

“ கவிதையா ? இதில் எங்கே இருக்கு கவிதை ? ” என்றான் சிவராமன்.

“ இதைப் பார்த்தா கவிதை மாதிரி தெரியலையா உங்களுக்கு? பரிசு கொடுத்திருக்காங்க. இளைஞர் ஆண்டின் இரண்டாம் பரிசுக் கவிதை. யாரு ? அட்டையைத் திருப்பி பேரைப் பாருங்க ! லட்சக்கணக்கான காப்பி விக்கிற பத்திரிகை. எங்க கையெழுத்துப் பத்திரிகைன்னு நினைச்சுக்கிட்டீங்களாக்கும் ! இது கவிதையா இல்லாமலா இத்தனை பெரிய பத்திரிகையில் பிரசுரிச்சிருக்காங்க ? ”

“ பிரசுரம் பண்ண அவங்களுக்குக் கவிதை எதுக்கு ? கனவு போதுமே ! ”

“ இது கற்பனை இல்லீங்க நிஜம் ! ”

“ தெரியுதே ! இது வாசற் கோலம், கிணற்று ராட்டினம், பாடப் புத்தகம் என்று நிஜம் போல் தோற்றம் தருகிற பொய். தமிழி சினிமா, வாரத் தொடர்கதை … ஸாரி ! இதில் வாழ்க்கையும் இல்லை, கவிதையும் இல்லை. ’

“ பெரிய அலட்டி ! ” – ஜான்ஸி சிரித்துக் கொண்டே கோபப்பட்டாள். “ கவிதை யில்லை. ஸாரி ! ” என்று சிவராமன் குரல் மாற்றிக் கேலி செய்தாள்.

“ இதிலே உங்களுக்குக் கவிதைதான் தெரியலை, மனசாவது புரியுதா ? ”

“ சிவராமன் அவள் விழிகளையே இமைக்காமல் பார்த்தான்.

“ மனசா ? யார் மனசு ? ”

“ கவிதையில ஒரு பொண்ணு உட்கார்ந்திருக்கால்ல ? அவ மனசு ! ”

“ எனக்கு, உன் நினைவே கவிதையாகும். ”

“ ம். அவதான். அவளேதான். ”

ரகசியம் முடிச்சவிழ்ந்து போய்விடப் போகிற குறு குறுப்பைத் தாங்க முடியாத தவிப்பு முகத்தில் படர்ந்தது.

“ அது கற்பனையா ? நிஜமா ? ”

“ நிஜங்க. நாலடி, பதினொரு அங்குலத்தில நடமாடிக்கிட்டு இருக்கிற நிஜம். நீங்க தினம் பார்க்கிற நிஜம். உங்க கூட பஸ்ஸிலே வருகிற நிஜம். ”

“ அப்படியா, யாரு ? ” – முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு கேட்டான் சிவராமன்.

“ அது… அதுகூட வாய்விட்டுச் சொல்லுவாங்க ! மூளை நிறைய கொடுத்துருக்கார்ல. யோசிக்கிறது … ”

ஜான்ஸியைப் பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்திலிருந்தே தெரியும். பக்கத்து வீட்டுப் பெண். கிராமத்திலேயே சூட்டிகையான பெண் என்று சுலபமாகச் சொல்லிவிட முடியும். பத்தாம் வகுப்பில் பள்ளிக் கூடத்தில் முதலாவதாக வந்த பெண். மாவட்ட அளவில் கூட நான்காவதோ ஐந்தாவதோ ரேங்க். அதனால் அதிகம் அலைக்கழிக்காமல், பக்கத்திலிருந்த ஜுனியர் காலேஜில் இடம் கொடுத்து விட்டார்கள். நான்கு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற அந்த நகரத்துக்குத்தான் சிவராமனும் எம்.ஏ., படிக்கப் போய் வருகிறான்.

பஸ்ஸில் வருகிற மாணவர்கள், புத்தகப் புழு என்று ஜான்ஸிக்குப் பெயர் வைத்திருந்தார்கள். சீட்டில் உட்கார்ந்து கையிலிருக்கிற புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டால், பள்ளிக்கூடம் வரை தலை நிமிராது. விறு விறு என்று பக்கங்கள் புரண்டு முகத்தில் ஒளி ததும்பும். புத்தகங்கள் என்றால் பாடப் புத்தகங்கள் அல்ல. பத்திரிகைகளில் வருகிற தொடர்கதைகளைக் கிழித்துத் தொகுத்த புத்தகங்கள். இரண்டு மூன்றாய்ச் சேர்த்து பைண்ட் செய்த மாத நாவல்கள். இல்லாத காதலியைத் தொலைத்து விட்டு ஏங்கிப் புலம்புகிற புதுக் கவிதைகள். சினிமாப் பாட்டை அலசி ஆராய்ந்தபடி, புத்திசாலிப் பெண்டாட்டியும், பெருந்தன்மைக் கணவனும் கட்டிப் புரண்டு வாழ்க்கை பற்றி யோசிப்பதாக போதிப்பதாக எழுதும் புது எழுத்தாளர்தான் ஜான்ஸியின் ஆதர்சம்.

ஜான்ஸி ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தது. மல்லிகை என்றோ புன்னகை என்றோ பெயர். பத்திரிகைச் சித்திரத்தை அப்படியே நகலெடுத்து, வர்ணம் பூசி, ஜிகினாவெல்லாம் ஒட்டித் தயாரிக்கப்பட்ட அட்டை முதல் பக்கத்தில் ஆதர்ச எழுத்தாளரின் மேற்கோள் வரிகள் ; பக்கத்துக்குப் பக்கம், அவர் நாவல்களில் இடம் பெற்ற சினிமாப் பாடல்கள். பாடலுக்கேற்ற புகைப்படங்கள். கல்லூரி மாணவன் தன்னோடு படிக்கிற பெண்ணைக் காதலித்துப் போராடி வெற்றி பெறுகிற சிறுகதை.

“ பத்திரிகை எப்படி இருக்கிறது ? ” என்றது ஜான்ஸி.

“ அப்படியே அச்சாக பெரிய பத்திரிகைகள் மாதிரி இருக்கிறது. ”

“ அப்பாடா ! இப்பவாவது பாராட்டாய் ஒரு வார்த்தை சொன்னீர்களே. ”

“ போரடிக்கிறது என்பதற்காகத்தானே பத்திரிகை படிக்கிறோம். கையெழுத்துப் பத்திரிகை நடத்தறோம். பொழுதுபோக்குங்கறது சந்தோஷத்துக்குத் தானே ! ”

“ வாழ்க்கை அலுத்துவிட்டது என்று நீங்கள் சொன்னால், உங்கள் கலாசாரத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம் ” – சொன்னது யார் தெரியுமா ?

ஜான்ஸி உதட்டைப் பிதுக்கியது.

“ டி.எச்.லாரன்ஸ். கேள்விப்பட்டிருக்கிறாயோ ? ”

மறுபடியும் உதடு பிதுங்கிற்று.

மலிவான உதாரணங்களையே அறிந்து, அவற்றை மாத்திரமே அறிந்த காரணத்தினால் அவற்றைப் பயின்று, அவற்றையே மறுபடியும் உருவாக்குகிற விஷச் சுழலில் இவர்கள் சிக்கிக் கொண்டு விட்டது எத்தனை பரிதாபம் !

கடைசியில் ப்ளாங்கா கொஞ்சம் பக்கம் விட்டிருக்கோம். உங்க அபிப்பிராயங்களை எழுதிக் கொடுங்களேன் ! ” பத்திரிகைகள் உங்களை நிராகரித்து விட்டதன் துக்கமா அல்லது அவற்றை நீங்கள் நிராகரிக்க இயலாத பலவீனமா ? உங்கள் படைப்பு உங்கள் சாயலில் இருப்பது என்பது யோக்கியமானது என்பது மட்டுமல்ல. உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ளும் கௌரவமும் ஆகும். இப்போது அது அடுத்தவர் சாயலில் இருக்க நேர்ந்தது விபத்துக்குத்தானா அல்லது விபரீதமேவா ? ”

“ புரியலை ” என்றது ஜான்ஸி.

“ யோசிக்கிறவர்களுக்குப் புரியும். ”

“ எங்களுக்கு எல்லாம் யோசிக்கத் தெரியாது. நாங்கள் மக்குகள். ”

‘ இவர்கள் முட்டாள்கள் இல்லை. சிந்திக்கப் பயிலாதவர்கள். இவற்றுக்கெல்லாம் காரணம், பயிற்சியின்மையா அல்லது தவறான பயிற்சியா ? சமூகத்தின்பால் அன்பும் வாழ்வின்பால் காதலும் அற்ற, சுயகௌரவமோ லட்சியங்களோ அற்ற இந்தப் பத்திரிகைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் சினிமாக்களுக்கு இவர்கள் முற்றாகப் பலியானார்களோ ? ’

“ நீங்கள் எழுதறது எல்லாமே உங்கள் கற்பனையா ? ”

ஜான்சி எழுந்து முதல் கேள்வியை வீசிற்று. எல்லோர் கண்களும் எழுத்தாளர் மீது திரும்பின. கல்லூரித் தமிழ்மன்றம் அந்த நேருக்கு நேர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பல நாவல்கள் எழுதிப் பிரபலமான எழுத்தாளர் வந்திருந்தார். மேடையில் பக்கத்தில் ஒரு வாரப் பத்திரிகை ஆசிரியர்.

“ என்னோட எழுத்துக்களைக் கொண்டு நீங்கள் என் மனத்தை ஆராய்ச்சி செய்யக்கூடாது ” என்றார் எழுத்தாளர், ஹாஸ்யமாக.

“ அவற்றைக் கொண்டு உங்களோட குணத்தை எடை போடலாமா ? என்றான் சிவராமன்.

“ அப்படின்னா … ? ”

“ நீங்க அதிகமா விபசாரிகளைப் பற்றியும் சோரம் போகிற பெண்களைப் பற்றியும் எழுதியிருக்கீங்க. அது உங்களுடைய மனத்தைக் காட்டவில்லையென்றால், உங்களுடைய குணத்தைப் பிரதிபலிக்கிறதா என்று கேட்கிறேன் ? ”

“ என்னை அவமானப்படுத்தறதா நினைச்சுக்கிட்டு இந்தக் கேள்வியை கேட்கிறீங்க. நான் உண்மையைச் சொல்றதுன்னு ஆரம்பிச்சா வாசகர்களாகிய நீங்கதான் சார் அவமானப்படுவீங்க. நான் காசுக்குத்தான் சார் எழுதறேன். விபசாரிகள் கதைதான் சீக்கிரம் வித்துப்போவுது. வாசகர்களுக்கு, சோரம் போகிற பெண்களைத் தான் பிடிக்குது, அதனால்தான் எழுதறேன்.

“ நீங்க ஏன் புனைப்பெயரில் எழுதறீங்க ? ”

“ நான் வருமானத்துக்காகத்தான் எழுத ஆரம்பிச்சேன். எழுத ஆரம்பிச்சபோது அரசாங்க உத்தியோகத்திலே இருந்தேன். அதனால புனைபெயர் வச்சுக்கிட்டேன். ”

“ அரசாங்கத்திலே சம்பளம் கொடுத்தாங்கல்ல ? அப்புறம் ஏன் இப்படி எழுதிச் சம்பாதிக்கணும்னு தோணிச்சு உங்களுக்கு ? ”

“ எனக்கு தேவைகள் அதிகம் சார். ”

“ தேவைகள் அதிகம், மேல் வருமானம் வேணும்னா திருடப் போவீங்களா ? போதை மருந்து விற்பீங்களா ? விபசாரம் செய்வீங்களா ? ”

கேள்வியில் இருந்த கடுமை கண்டு கூட்டம் திகைத்தது. சட்டென்று கனமான மௌனம் நிலவியது. எழுத்தாளர் வெடித்துப் பொங்கி விடுவார் என்ற பயம் எல்லோர் முகத்திலும் ஒளிர்ந்தது.

எழுத்தாளர் கோபப்படவில்லை. சிரித்தார். வழக்கமான முறுவல் இன்னும் சற்று பெரிதாய் விரிந்தது.

“ அப்படியெல்லாம் செஞ்சா போலீஸ்ல மாட்டிக்க வேண்டி வருமே. இதிலே அப்படி இல்லை பாருங்க. எழுத்தாளர்ங்கிறது சட்டப்பூர்வமா அங்கீகரிக்கப்பட்ட தொழிலாச்சே ? ”

கூட்டம் படபடவென்று கைதட்டியது. சிவராமன் சோர்ந்து போனான். கண்ணை மூடிச் சுவரில் சாய்ந்தான். மனத்தில் பரபரவென்று கரப்பான் பூச்சி ஓடிற்று. விரல் நீளத்துக்குக் கரும் பழுப்பில், மீசையை இடமும் வலமும் அலைத்துக் கொண்டு நகர்கிற கரப்பான் பூச்சி. பார்க்கவே அருவருப்பூட்டுகிற கரப்பான் பூச்சி. ‘ கரப்பான் பூச்சியை லேசில் அழிக்க முடியாதாம். புகை, விஷம், மருந்து, வெந்நீர் எல்லாவற்றிற்கும் தப்பித்துக் கொள்ளுமாம். அணு யுத்தம் நிகழ்ந்து கதிர் வீச்சுகள் ஏற்பட்டால் கூட பூமியில் உயிரோடு தப்பிவிடக் கூடிய ஜீவிராசி அதுதானாம். கரப்பான் பூச்சியை அழிக்கணும்னா ஒரே வழி. ஓங்கி மிதிக்கணும்.

பத்திரிகை ஆசிரியர் பேசுவதற்கு எழுந்தார். “ கழுத்தில் சுருக்கு மாட்ற மாதிரி நண்பர் வீசிய கேள்விகளுக்கெல்லாம் நம்ப எழுத்தாளர் சிரித்துக்கொண்டே பதில் சொல்லிவிட்டார்…” கூட்டம் மறுபடி வியந்து குதூகலித்தது. “ என்கிட்டே அந்த சாமர்த்தியம், மோகனப் புன்னகை எல்லாம் கிடையாது. நான் கிழவன். அதனாலே கொஞ்சம் கருணையோடு உங்கள் கேள்விகளைக் கேளுங்கோ … ”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *