கரக ரெட்டியார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 14,066 
 

பெரிய மகன் அதைச் சொன்னபோது நம்ப முடியாமல்தான் பார்த்தாள் சுந்தரம்மாள்.

“டே நைனா… இந்த வெளாட்டுப்புத்தி என்னிக்கித்தாண்டா உன்ன உட்டுப் போவுங்?” என்று சிரித்தாள்.

“அய்யே… இப்ப உங்கூட வெளாடிகினு கீர்துதாங் எனுக்கு வேலயா? மெய்யாலுமே உனுக்கு ரத்தத்துல சக்கர, உப்பு கீதாம்” என்றான் அவன் கவலையுடன்.

“இன்னாடியிது கூத்தா கீது… துன்ற பொருள்ல கீற மாதிரி உப்பு, சக்கர, வெல்லங் எல்லாங் ரத்தத்துல கூடவாடி கீது” என்று ஆச்சரியப்பட்டாள் தன் மருமகளிடம். கொஞ்ச நாளாகவே சுந்தரம்மாளுக்கு கை கால்களில் வீக்கமும், நாலடி தூரம் நடந்தாலே படபடப்பும், மூச்சிரைப்புமாய் இருக்கிறது. அன்று விடியற்காலை ஒண்டி புளியமரக்கிளையில் உட்கார்ந்து உறங்கும் ராகாசியின் கறுப்புச் சேவல் கூவத் தொடங்கியபோது வாசலில் சாணம் தெளித்து தென்னந் துடைப்பத்தால் பெருக்கக் குனிந்தவளுக்கு கிர்ரென்று தலை சுற்ற, ரங்கராட்டினத்திலிருந்து குதித்தவளைப்போல தடுமாறி குப்புற விழுந்தாள். குய்யோ முய்யோ என்று ஊரே கூட, தூக்கிக்கொண்டு பொன்னைக்கு ஓடினர்.

“வயசானா இதெல்லாம் சகஜந்தான்” என்று கூறிய அந்த மருத்துவர்தான் ரத்தம் டெஸ்ட் பண்ண அனுப்பினார்.

“அர உப்பு, கால் உப்புதாங் சாப்பிடனுங், சக்கரயத் தொடவேக்கூடாது. சோத்தப் பாக்கவே கூடாது. தெனமும் சுகர் மாத்திரையுங், நீர் மாத்திரையுங் சாப்பிடனுங்” என்றார் ரிசல்டைப் பார்த்துவிட்டு.

“இந்த பட்ச் டாக்டருங்களே இப்டிதான்டா நைனா… துண்றத வாணான்னுவாங்க, வாணாண்றத துன்னுண்ணுவாங்க… உப்புயில்லாம எப்பிட்ர துன்றது?” என்றாள் விசனத்துடன்.

சுந்தரம்மாள் இங்கே வாழ்க்கைப்பட்டு வந்து நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டிருக்கும். இவள் வைக்கும் கருவாடு, மீன் குழம்பு என்றாள் இவளின் வீட்டுக்காரர் திருமலை ரெட்டியாருக்கு உயிர். இவள் வீட்டு மீன் குழம்பு வாசனையிலேயே ஊரில் பாதிப்பேருக்குப் பசியாறிவிடும்.

“கொயம்பத் தொட்டு நாக்குல வெச்சதுமே சுர்ருன்னு நரம்புல ஏறணூங்.. இன்னாத்த கொயம்பு காசறாங்க இப்ப.. நாக்குங் மூக்குங் செத்துப்போற மாதிரி” என்று மருமகள்களின் குழம்பைத் தொடக்கூட மாட்டார் ரெட்டியார்.

அவர் இருந்தவரை சுந்தரம்மாள்தான் சமைத்தாள். உப்பும் உரைப்புமாய் காரஞ்சாரமாய் சமைத்தாள். ஒரு பிடி காய்ந்த மிளகாயும், ஒரு கை பச்சரிசியும் எண்ணெயில் வதக்கி, நான்கு கொட்டை புளி போட்டு கடைந்தால் தெருவே மணக்கும்.

“இன்னா அத்தே மொளகா வறுத்துக் கடஞ்சி கீற போல கீது… எனுக்கும் கொஞ்சூண்டு ஊத்திக்குடு” என்று இரண்டு மூன்று பேராவது கிண்ணத்தைத் தூக்கிக்கொண்டு, எச்சிலைக்கூட்டி விழுங்கியபடி வந்து நிற்பார்கள்.

கடைசி வரைக்கும் இவள் சாப்பாடே கதி எனக் கிடந்தார் ரெட்டியார். ஊரே மெச்சிய எப்பேர்ப்பட்ட பெரிய மனிதர். பீமன் மாதிரி உடம்பு. ஆனால் சாகும்போது அந்தக் கட்டையில் ஒன்றுமே இல்லையே. மாம்பழத்தைச் சப்பி கொட்டையைப் படுக்க வைத்ததைப்போலக் கிடந்தார். நிற்கக் கூட திராணியற்றுக் கிடந்த அவரின் கால்களைப் பார்த்துப் பார்த்து ஈரக்குலை பதறும் சுந்தரம்மாளுக்கு.

“அய்யோ சாமி… உனுக்கா இந்த கோராம… உந்தலகூட மொட்டையாய் போற மாதிரி அவ கரகத்தக் தூக்கினு நீ ஆட்ற ஆட்டத்தப் பாக்க ஏழுரு ஜனங்க கூடுமே அந்தக் கெங்கம்மாத் தாயிகூட உன்னை கை உட்டுட்டாளே” என்று மாரிலடித்துக்கொண்டு கதறுவாள்.

இப்போது நினைத்தாலும் அடி வயிற்றில் “கபீர்’ என்கிறது அவளுக்கு. அவரைப் பாடையில் படுக்க வைத்து நீவா நதிக்கரையில் வாரிப் புதைத்து விட்டு ஊர் சனம் இதே தெருவில் திரும்பி வந்தபோது அவளுக்குள் விழுந்த பெரும் திகில் தான் அவளை கொஞ்சம் கொஞ்சமாக உருக்கத் தொடங்கிவிட்டது. அதே நீவா நதிக்கரையில் இருந்து பறை மேளம் முழங்க, பம்பையும் பாட்டும் ஓங்காரமாய் ஒலிக்க, தலையில் ஐந்தடி உயர பூங்கரகம் சுமந்து முன்னும் பின்னுமாய் அடிபோட்டு திருமலை ரெட்டியார் ஆடிவர, அவர் பின்னால் திமுதிமுவென சனக்கூட்டம் ஊருக்குள் நுழையும் போதே தெருவெங்கும் பக்தியும் பரவசமுமாய் ஊரே சொக்கிப்போய் நிற்கும். இந்த ஊர் கெங்கையம்மன் ஜாத்திரை என்றால் மட்டும் சுத்துப்பட்டு ஊர்மக்கள் எல்லோருமே திரண்டு வந்து நிற்பார்கள். அதற்கு இந்த ஊர் அம்மன் சிரசு ஒரு காரணம். சிரிக்கும் உதடுகளும் அருள் சுரக்கும் அகன்ற கண்களுமாய் சாந்த சொரூபிணியாய் இருக்கும் அம்மனைப் பார்க்கப் பார்க்க மனசு குளிரும். நெஞ்சுக்குள் பாறாங்கல்லாய்க் கணக்கும் பாரம்கூட அவளைப் பார்த்தாள் பனிக்கட்டியைப் போல உருகிவிடும் என்பார்கள்.

இன்னொரு காரணம் ரெட்டியார் கரகமெடுக்கும் அழகு. மஞ்சள் நிறப் புடவையும் கை பனியனும் அணிந்து கைகளிலும் காலிலும் மலர்ச்சரங்கள் சுற்றி, கழுத்தில் சாமந்தி மாலை தவழ, மீசை சிரைக்கப்பட்ட முகத்தில் மஞ்சளும் குங்குமமும் மினுமினுக்க, கரகத்துடன் கோவிந்தா… கோவிந்தா என்று முழங்கியபடி மாட்டுவண்டியில் சிரிக்கும் அம்மன் சிரசுக்கு முன்னால் அவர் ஆடி வர, அம்மன் சிரசையும், கரகத்தையும் அவர் ஆட்டத்தையும் மாறி மாறிப்பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்ளும் ஊர். இடது கையில் சூலமும், வலது கையில் வேப்பிலையும் இருக்க, கால்களை முன்னே நான்கடியும், பின்னே இரண்டடியும் வைத்து, தாளத்துக்கும், மேளத்துக்கும் இழைந்து குழைந்து ஆடிவரும் அவர் தலையியிலிருக்கும் கரகத்தைத் தொடவே மாட்டார்.

“இவ்ளோ ஒசர கரகம் அவரு தலையில சாயாம சரியாம எப்டி நிக்கிது பாரு…. அந்த கெங்கம்மாவே வந்து ஆட்ற மாதிரி கீது பார்ரா” என்று அதிசயிக்கும் மக்கள் கூட்டம். மடியேந்தி நிற்கும் பெண்களின் தலையில் வேப்பிலையால் மந்திரம் போட்டு, நான்கைந்து இலைகளை உருவி அவர்கள் ஏந்தும் மடியில போட்டு கோவிந்தா.. என்பார்.

நீவா நதியின் ஊற்றுப்பள்ளத்தில் காலை எட்டு, எட்டேகால் மணிக்கு இடையில் கரகம் தலையிலேறினால் நான்கு தெருக்களிலும் வீடு வீடாய் காட்டப்படும் கற்பூர ஆரத்திகளையும், உடைக்கப்படும் தேங்காய் நீரையும் ஏற்று, தரையில் கவிழ்ந்து படுத்து கைகள் நீட்டி கரம் குவிக்கும் பெண்களையும், குழந்தைகளையும், ஆண்களையும் ஆடியபடியே தாண்டிச் செல்வார். ஏறு வெயிலில் கால் வைத்து நடக்க முடியாமல் உடன் வருவோர் தவிக்க, தரையின் சூடோ, வெயிலின் தகிப்போ எதுவுமே உறைக்காமல், நிமிட நேரம் கூட நிலையாய் நிற்காமல் அடிபோட்டு ஆடியபடியேதான் இருப்பார். சனங்களாகவே வேப்பமரக் கிளையை வெட்டி வந்து அவர்மேல் நிழல் விழுமாறு பிடித்து நிற்பார்கள். வீட்டுக்கு வீடு அவர் பாதங்களில் மீது குடம் குடமாய் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பூசி, குங்குமம் இடுவார்கள்.

முன்னால் மேளமும், பம்பையும், சிலம்பு ஆட்டமும், பின்னால் கூழ்ப்பானையின் மீது தட்டில் பச்சரிசிச் சோறும், கத்தரிக்காய் கருவாட்டுக் குழம்பும், வறுத்த வேர்க்கடலை இடித்துப்போட்ட முருங்கைக் கீரையையும் தலையில் சுமந்தபடி பெண்களும் சூழ ஊர்வலம் கரகப்பந்தலை அடைவதற்குள் பகல் பனிரெண்டு மணியைத் தாண்டிவிடும். பந்தலுக்குள் சிரசில்லாமல் கிழக்குப் பார்த்து அமர்ந்திருக்கும் அம்மன் சிலைக்கு முன் பரப்பிய வைக்கோல்மீது விரிக்கப்பட்ட வேட்டிகளில் சோற்றைக் கொட்டி, பெரிய பெரிய கொப்பரைகளில் கூழைக்கவிழ்த்துவிட்டு பெண்கள் சுற்றி நிற்க, ஒரு பிடிச் சோறும் ஒரு வாய்க்கூழும் அள்ளித் தின்றபின் பின்பக்கமாகவே நடந்து சிலையருகே செல்லும் ரெட்டியார், கழுத்தை விலுக்கென பின்னால் சாய்த்துவிட்டு, “கோவிந்தா’ என்று அலறியடி அப்படியே மயங்கிச் சரிவார்.

கரகத்தை இரண்டு பேரும், ரெட்டியாரை இரண்டு பேரும் தாங்கிப் பிடித்து “கோவிந்தா…” என்று மெய்சிலிர்க்கும் கூட்டம். மயங்கிய ரெட்டியாரைத் தூக்கிக்கொண்டு சொக்கலிங்க ரெட்டியார் வீட்டுக்கு ஓடுபவர்கள், கட்டிலில் படுக்க வைக்க, சுந்தரம்மாள் விசிறியால் விசுறுவார். ஐந்து பத்து நிமிடங்கள் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்ததும் வெது வெதுப்பான பசும்பாலைக் கொடுத்து ஆசுவாசப்படுத்துவார். அதற்குள் வண்டியிலிருந்து அம்மன் சிரசை இறக்கிவந்து சிலையின் கழுத்தில் பொறுத்தி, கரகத்தை மடியில் சாய்த்து பூவில் தேங்காய் நீர் தொட்டு அம்மனின் கண்களைத் திறந்து, திரை பிடித்து கல்யாணப் பூசணி காவு கொடுத்த பின் மேளம் உச்சத்தில் முழங்க வண்ணார ஆனந்தன் அம்மனுக்குத் தாலி கட்டுவார்.

கூட்டம் முழுவதும் கை கூப்பி முழங்க, சோற்றையும், குழம்பையும் பிசைந்து ஆளுக்கொரு பிடி வாங்கித் தின்றபின் மீதியை பறையரும், வண்ணாரும், நாவிதரும் சரிசமமாய்ப் பிரித்துக் கொள்வார்கள். கூழை தவளைகளிலும், குண்டான்களிலும் ஜோகிகளும், சக்கிலியர்களும், வண்ணார்களும் தூக்கிக்கொண்டு போவார்கள்.

மதியமும், இராத்திரியும் ஊரே கருவாட்டுக் குழம்பும், கறிக்குழம்பும், சோறுமுமாய் வெளுத்துக்கட்ட, ரெட்டியாருக்கு மட்டும் கத்தரிக்காய் பருப்பு சாம்பார்தான். இளசுகளும், பெரிசுகளும் நாள் முழுவதும் சாராயத்தில் மிதக்க, இவர் பயபக்தியோடு முன் நாளே காப்புக்கட்டி, விரதமிருந்துதான் கரகமெடுப்பார். மீண்டும் மாலை ஏழு மணிக்கு கரக ஊர்வலம் கிளம்பினால் மீண்டும் பந்தலையடைய பத்துப் பதினோரு மணியாகிவிடும். அசுர போதையிலிருக்கும் இளசுகளும் சிறுசுகளும் கரகத்துக்கு முன்னால் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் விசிலும், ஆட்டமுமாய் சுழன்று சுழன்று ஆடி புழுதி பறக்கும் சாணம் தெளித்த தெருக்கள் மண் பூமியாகிவிடும். அப்பனும் மகனும்கூட சேர்ந்து சேர்ந்து ஆட, அடித்து அடித்து கை ஓய்ந்து போவார்கள் பறமேளக்காரர்களும், பேண்டுகாரர்களும்.

இரவு தெருக்கூத்தோ, டிராமாவோ முடிந்து, மறுநாள் விடியலில் மேள தாளத்தோடு கரகத்தைக் கொண்டுபோய் ஏரி நீரில் முழுகவிட்டுத் திரும்பியதும் ஆடிய களைப்பும், ஆட்டம் பார்த்தக் களைப்பும் தீர கும்பகர்ணத் தூக்கம் தூங்குவார். அன்று முழுவதும் ஊரே தூக்கத்தில் விழுந்து கிடக்கும். இவருக்கு புத்தி தெரிந்த நாளிலிருந்து இவர்தான் கரகம் எடுப்பது. இவருக்கு முன்னாள் இவருடைய அப்பா நடேச கவுண்டர் எடுத்தாராம்.

காய்ச்சல், தலைவ என்று படுத்தால்கூட ஜாத்திரைக்கு முன்பாகவே துள்ளிக்குதித்து எழுந்து விடுவார். சுந்தரம்மாளுக்குத் தெரிந்து ஒரு வருடம்கூட கரகம் எடுக்காமல் இருந்ததில்லை அவர். அந்தக் கடைசி வருடம் தவிர.

பொதுவாகவே காலையில் எழுந்ததும் கோயிலை ஒரு சுற்று வந்து, திருநீறை நெற்றியில் பூசிக்கொண்டுதான் நிலத்துக்கே போவார். சுத்துப்பட்டு ஊரில் யாருக்கேனும் தீராத வயிற்று வலியோ, வியாதியோ, கல்யாணம் தள்ளிப்போனாலோ, யாரேனும் தொலைந்து போனாலோ இவரிடம்தான் குறி கேட்பார்கள். அப்படி யாரேனும் குறி கேட்க வருகிற செவ்வாய்கிழமை இரவுகளில் ஊரே பரபரப்பாகிவிடும். பத்திருபதுபேர் மிருதங்கம், பெட்டி, தாளத்துடன் கோயிலிருந்து பஜனைப் பாடல்களைப் பாடியவாறு தெரு முனையிலிருக்கும் சத்தியம்மன் மரத்தருகே வருவார்கள். அவர்களோடு அமைதியாக நடந்து வரும் ரெட்டியார் அந்த இடம் வந்ததும் கிழக்கு நோக்கி தலை குனிந்து கருட கம்பத்தில் அலைந்தலைந்து எரியும் சுடரையே பார்த்தபடி நிற்பார்.

அவருக்கு முன்னால் மிருதங்கமும், ஆர்மோனியமும் ஒரே சீராக ஒலிக்க, பாட்டும், பின்பாட்டும் களை கட்டும், பாடலுக்கேற்ப இரண்டு ஜோடி தாளங்கள் “ஜன் ஜன் ஜன். ஜன் ஜன் ஜன்’ என்று உயர்ந்ததும், தாழ்ந்தும் ஒலிக்கும். கால்கள் தரைக்குள் வேர்விட்டதுபோல் நிற்க, ரெட்டியாரின் உடல் மட்டும் மெதுவாய் முன்னும் பின்னுமாய் அசையத் தொடங்கும். நேரம் ஆக ஆக அசைவின் வேகம் கூடும்.

ஆறேழு பாடல்களைக் கடக்கும்போது திடீரென “கோவிந்தா” என்று அலறியபடி மல்லார்ந்த நிலையில் “தடாரென’ கீழே விழுவார். அவர் தலை தரையில் மோத அந்த நொடியில் சகலமும் அமைதியாக, ஒரு பேரதிர்ச்சியிலிருந்து மீண்டு “கோவிந்தா கோவிந்தா” என்று சனமெல்லாம் பதறி கை கூப்பும். கீழே விழுந்த ரெட்டியார் புரண்டு புரண்டு, புதிதாய் நிற்கும் குழந்தையைப் போல தவழ்ந்து எழுந்து நின்று “கோவிந்தா’ என்று உச்சத்தில் முழங்குவார்.

“பாலகன் மேல வந்துகீறது யாரு?” என்று முனிசாமி ரெட்டியாரோ, நாராயணசாமியோ பணிவாகக் கேட்பார்கள்.

“நாந்தான்டா கெங்காதேவி வந்துகீறன்டா” என்று அம்மன் வாய் திறக்கும். எல்லோரது மனசும் சட்டென்று மலரத் தொடங்கும்.

“இப்ப எதுக்குடா என்ன வரவெச்சீங்க?’ என்று அம்மன் கேட்கும்.

“அம்மா… தாயே… ஊரு ஒலகத்தில கீற ஆடு, மாடு, கோயி, மன்ச்ச ஜனம் எல்லாத்தயும் எந்த நோவு நொடியில்லாம நீதாங் காக்கனுங்தாயே” என்று முனிசாமி ரெட்டியார் கையெடுத்து கும்பிடுவார்.

“அம்மா இந்தப் பாலகனுக்கு ரொம்ப நாளா வயித்துவ தீராம கீதே… உங்கொயந்திய காப்பாத்த மாட்டியா?” என்று கேட்டால் அவனை அருகில் அழைத்து வேப்பிலை மந்திரம் போட்டு, திருநீறை நெற்றியில் பூசுவார்.

“ஏந் ஸ்தலத்த ஒரு மண்டலம் சுத்திட்டு, பொங்குலு வைச்சி, பூஜ பண்றா செரியாவுங்” என்று சொல்லும்.

கல்யாணம் ஆகாதவர்கள் வாக்குக் கேட்டால், “வடக்கப்போடா… உங்குடும்பத்துக்கேத்த பொண்ணு கீறா”” என்று பதில் வரும்.

காணாமல் போனவர்களைப் பற்றி கேட்டால் “பாலகனோட உயிருக்கு எந்த ஆபத்துமில்லடா… தென் தெசயில போயி தேடுங்கடா” என்று சொல்லும்.

குழந்தை பாக்கியம் கேட்டால், எலுமிச்சம் பழத்;தைக் கொடுத்துவிட்டு, “நாப்பத்தி எட்டு நாளு ஒருபொய்து இருந்து, வேப்ப மரத்த சுத்திகினு வா, வாரிசு உருவாவும்” என்று வயிற்றில் பால் வார்க்கும்.

எல்லாம் முடிந்ததும், “எனுக்கு ஆகாரங் குடுங்கடா… நாம் மலயேறணுங்” என்று கை நீட்டும். நீட்டிய உள்ளங்கையில் கற்பூரத் துண்டை வைத்து கொளுத்தியதும் கோவிந்தா என்று அதை வாயில் போட்டு விழுங்கி, கண் மூடி நிற்பார். ஒன்றிரண்டு நிமிடங்கள் கழித்து கண்கள் திறந்து, பின் மெதுவாக வீட்டை நோக்கி நடப்பார்.

“நிக்க நின்னாப்ல தடால்னு கீய வீய்ந்து எய்ந்துகிதே சாமி… தலயில அடிகிடி பட்டா இன்னா ஆவரது சித்தி” என்று யாராவது கேட்டால், சுந்தரம்மாளுக்கு கலங்கும்.

“அல்லாத்தயுங் அந்த கெங்கம்மா பாத்துக்குங்” என்பாள் கன்னத்தில் போட்டுக்கொண்டு.

அவர் சொல்லும் வாக்கு அப்படியே பலிப்பதாக மெய்சிலிர்க்கும் ஊர். அதற்காக பைசா எதுவும் வாங்குவதில்லை அவர். வெற்றிலைப் பாக்கும், இரண்டு வாழைப்பழங்களும்தான் தட்சணை.

ரெட்டியாருக்கு இரண்டு பையன்கள் பிறந்த பிறகு, ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஊராரின் வேண்டுதல்களைத் தீர்க்கும் கெங்கையம்மன் அவரின் ஆசையை மட்டும் தீர்க்கவேயில்லை.

இவரைப்போலவே விவசாயம் பார்த்தனர் இரண்டு பிள்ளைகளும். இவருக்குப் பிறகு கரகம் எடுக்கும் பொறுப்பையும் யாராவது ஏற்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர்களுக்கு அதில் ஆர்வமே இல்லாததும் அவருக்கு பெருங்குறையாக இருந்தது. சதா நேரமும் கோயிலும், கரகமும், விதைப்பும், விளைச்சலுமாக இருந்தவரை பொன்னையில் புதிதாகத் திறக்கப்பட்ட அந்தத் திரையரங்கம் புரட்டிப் போட்டு விட்டது.

பயிருக்கு உரம் வாங்க பொன்னைக்குப் போனவர் தியேட்டரின் நெற்றியில் கட்டப்பட்ட ஒலிபெருக்கியின் பக்திப் பாடல்கள் ஈர்த்தன. பெரிய திரையில் படத்தைப் பார்த்ததும் பிரமித்துப் போனார். டென்ட் கொட்டகையில் படம் பார்க்க ஊரார் பலர் போய் வந்தபோதும் இவர் போனதில்லை. பஜனைப் பாடல்களும், கூத்து, நாடகப் பாடல்களுமாய், பழக்கப்பட்ட இவரது காதுகளுக்கும், கண்களுக்கும் பெரு விருந்தாய் இருந்தன சினிமாவின் பிரமாண்டங்கள்.

அன்று பிடித்த ருசிதான். பக்திப் படங்களில் தொடங்கி, பின்னர் அந்தத் தியேட்டரில் போடும் எந்தப் படத்தையும் விடாமல் பார்க்கத் தொடங்கினார். அதன் பிறகு ஆற்காடு, வேலூர் என படம் பார்க்கக் கிளம்பி விடுவார். ஊர்ச்சனங்கள் கிண்டலாய்ச் சிரிக்கத் தொடங்கினர்.

“இன்னா ரெட்டியாரே… சினிமா கொட்டாயே கெதின்னு கீற மாதிரி கீது?” என்று யாரேனும் நக்கலாய்ச் சிரிப்பார்கள்.

“சொம்மா கீற நேரத்துல பார்த்தா இன்னாடா பூடுது? எத்தினி ஊரு, எத்தினி நாடு, எத்தினி கத…. ஊரு ஒலகத்த இப்டினா பார்க்கக் குட்த்து வச்சி கீதே” என்று சொல்வார்.

ஆனாலும் பக்தியிலோ, கரகம் எடுத்து ஆடுவதிலோ, குறி சொல்வதிலோ எந்தக் குறையும் வைக்கவில்லை அவர். மூத்த மகனுக்குத் திருமணம் முடிந்து, முதலில் பெண் குழந்தை பிறந்தபோது குளிர்ந்து போனார். அகல அகலமான கண்களும், சிரிக்கும் உதடுகளுமாக கெங்கையம்மனே தனக்குப் பேத்தியாக வந்து பிறந்துவிட்டதாகப் பூரித்து “கெங்கையம்மாள்’ என்றே பெயர் வைத்தார்.

“எப்பா… இன்னாப்பா இந்தக் காலத்ல போயி கெங்கம்மா, முனிமான்னு பேரு வெச்சிகினு…” என்றான் மகன். அதனால் கெங்கம்மாள் “கங்கா’ ஆனாள். இளைவனுக்கு கல்யாணமான அடுத்த வருடத்தில் பேரன் பிறந்ததும் மேலும் பூரித்துப் போனார்.

“இவந்தாண்டா எம்பேரு சொல்லப் போறாங்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். தலையில் கரகத்தைச் சுமப்பதைப்போல, எந்நேரமும் பேரனைத் தோளில் சுமந்து கொண்டே திரிவார்.

அவர் கடைசியாக கரகம் எடுத்த திருவிழாவுக்கு சில நாட்களுக்கு முன்புவரை காய்ச்சலோடு படுத்துக் கிடந்தார்.

“இந்தவாட்டி ரெட்டியாரால கரகத்த… எடுக்க முடிமா?” என்று ஊரில் சந்தேகம் எழுந்தது. திருவிழாவுக்கு முதல் நாள் எழுந்து தலைக்குக் குளித்து விட்டு காப்புக்கட்டிக் கொண்டார்.

“இந்தாம்மே… உனுக்குதாங் ஒடம்பு இப்டி கீதே… எப்டிமே கரகத்த எடுப்ப… உட்ருமே… இந்த வாட்டி யாருனா எடுக்கட்டுங்” என்றாள் சுந்தரம்மாள்.

“எனுக்கு இன்னாடி… எங்க ஆத்தாளும், எம் பேத்தியும் கீற வெரிக்கும். எனுக்கு ஒண்ணுமே ஆவாதுடி” என்றார்.

இரவு தடபுடலாய் கரகம் நகர்ந்தபோது, இவருக்கு முன்னால் “ஆத்தா ஆத்தோரமாய் வாரீயா… நாம் பார்த்தா பாக்காமலே போறீயா?’ என நாதஸ்வரத்தில் சினிமாப் பாடல் முழங்க, போதை வடிய வடிய ஏற்றிக்கொண்டு நடுராத்திரிவரை சுழன்று சுழன்று ஆடின இளசுகள். கரகம் இறங்குவதற்குள்ளாகவே டிராமாவும் தொடங்கி விட்டது.

நேற்று வரை படுக்கையில் இருந்தது இவர்தானா என்று நம்பமுடியாமல் பார்த்தது ஊர். ரெட்டியாரின் ஆட்டத்திலும், ஆசீர்வாதத்திலும் அப்படி ஒரு மிடுக்கு. மறுநாள் ஏரியில் கரகத்தை மூழ்கவிட்டுப் படுத்தவர்தான், எழவே இல்லை. காய்ச்சலும், குளிரும் மாறி மாறி வந்தன. படுத்த படுக்கையாகவே கிடந்தார். நாளாக நாளாக மல ஜலம் கூட படுக்கையிலேயே கழிந்தது. இடுப்புக்குக்கீழே துணியால் துடைத்துவிடும் ஒவ்வொரு முறையும் அவரது நிலையைப் பார்த்துக் குமுறுவாள் சுந்தரம்மாள்.

அடுத்த திருவிழாவின்போது யார் கரகம் எடுப்பது என்கிற கேள்வி ஊரின் முன் நின்றது.

“டே நைனா… பெரியவந்தாங் கட்ச்சி வெரைக்கும் ஒடம்பு வளையாம கீணம்னு பாக்கறாங்.. அம்மா கரகத்த எடுக்கற கொடுப்பன யாருக்குங் கெடைக்காதுடா.. நீயானா ஒடம்பு கஸ்டம் பார்க்காம எட்றா” என்று சின்னவனிடம் கெஞ்சினாள் சுந்தரம்மாள்.

“மோவ்… அத்தினி தெருவுக்கு கரகத்தத் தூக்கிகினு சுத்தறது என்னால ஆவாது… வேற ஆளப்பாரு” என்று மறுத்துவிட்டான்.

வேறு வழியே தெரியாதபோது நாராயணசாமி ரெட்டியார் எடுக்க முன் வந்தார். அவராலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஊற்று முளைத்ததைப் போல உடலெல்லாம் வியர்வைப் பீறிட்டு புடவை நனைந்து கசகசக்க, ஜெர்சி பசு மாட்டைப்போல புஸ் புஸ் என்று மூச்சிறைக்க, ஓட்டமும் நடையுமாய் தெருக்களைக் கடந்தார். பனிரெண்டுக்கு மேல் முடிய வேண்டிய ஊர்வலம் பத்து மணிக்கெல்லாம் முடிந்துவிட, திருவிழாவே களை கட்டவில்லை.

இவர் வீட்டருகே வந்த கரகம் சற்றுத் தயங்கி நிற்க, ரெட்டியாரை இரண்டு பேர் தூக்கி வந்தனர். கரகத்தையும், நாராயணசாமியையும் மாறி மாறிப் பார்த்த ரெட்டியாரின் கண்களில் நீர் தளும்பியது. திருநீரை இவர் நெற்றியில் பூசிவிட்டு உள்ளே கொண்டுபோய் படுக்க வைத்தனர். அன்றிலிருந்து கிழக்கு திசையையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த பதினோறாம் நாள் “கோவிந்தா’ என்று நாக்குழறியபோது அவரது மூச்சு நின்றுவிட்டது.

“சாமி கரகத்த எடுக்கறவரு எப்பப் பார்த்தாலும் சினிமா சினிமான்னு சுத்தனாரே… அதுனால எதுனா தெய்வக் குத்தம் இருக்குமா?” என ஊரில் சிலர் புதி பீதியைக் கிளப்பினர்.

அடுத்து வந்த திருவிழாவிற்கு முன் சின்னவனின் கால்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள் சுந்தரம்மாள்.

“டே நைனா… என்னப் பெத்த அப்பனா உன்ன நெனச்சிகினு கேக்கறேன்டா… உங்கப்பனோட ஆசய தீக்கனுன்டா… அவரையுங், அந்த ஆத்தாளையும் மனசுல நெனச்சிகினு கரகத்த எட்றா… ஒன்னும் ஆவாதுடா” என்று அழுதாள்.

கரகம் எடுக்க அவன் ஒப்புக்கொண்டபோது ஊருக்குள் புதிய உற்சாகம் பரவத் தொடங்கியது. கரகத்தோடு கொஞ்ச தூரம் நடந்ததும் தலையும், கழுத்தும், முதுகும், இடுப்பும் விண்விண்ணென்று வலிக்கத் தொடங்கியது. ஒரு தெருவைச் சுற்றுவதற்குள்ளாகவே தளர்ந்து போனான். கரகம் ஒருபுறம், முதுகும், புட்டமும் ஒரு புறம் என அலங்கோலமாய் நடந்தான். ஒரு அடிகூட போட்டு அவனால் ஆட முடியவில்லை. சாதாரணமாக நடப்பதே பெரும்பாடாய் இருந்தது. பெரிய நெல் மூட்டையைக் சுமந்துகொண்டு மலையேறுபவனைப்போல திணறினான். திருவிழா முடிந்து மூன்று நாட்கள் வரை எழுந்து உட்காரக்கூட முடியவில்லை அவனால். முட்டிகளும், முதுகும் பச்சைப் புண்ணைப்போல வலித்தன.

“இனி ஜென்மத்துக்குங் கரகத்தயுங் தூக்க மாட்டேங்… கஸ்மாலத்தயுங் தூக்க மாட்டேங்” என்றான். வாயிலடித்துக்கொண்டு பதறினாள் சுந்தரம்மாள்.

அதன்பிறகு அடிக்கடி ரெட்டியாரின் படத்திற்கு முன்னால் உட்கார்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். யாருடனும் அதிகம் பேசுவதில்லை. பேரனும், பேத்தியும் மட்டுமே அவளது புகலிடமாய் இருந்தனர். திடீர் திடீரென மார்பு படபடக்க, உடல் நடுங்கும். சதையெல்லாம் உருவிக்கொண்டு, மீன் முள்ளை வீசுவதைப்போல, சக்தியெல்லாம் யாரோ உருவி விட்டதைப்போல சோர்ந்து சோர்ந்து எழுந்துக் கொள்வாள். அப்போதும் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் முடிந்த வேலைகளைச் செய்வாள்.

ஆனாலும் இப்படி குப்புறத் தள்ளி, உப்பும், சர்க்கரையும் இருப்பதாகச் சொல்லும் என்று அவள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

“மோவ்… அப்பா இர்ந்தவரைக்குங் உப்பும் ஒரைப்புமா ஆக்கிப்போட்டு, நீயுந்துன்னது செரி… இப்போ வயசாயிட்ச்சி… வாயக்கட்னாதாங் ஆவும்” என்றான் பெரியவன்.

அடுத்து வந்த நாட்களில் கைகால்களோடு, முகமும் வீங்க நடமாட்டத்தையேக் குறைத்துக் கொண்டாள். அடுத்த ஜாத்திரையின்போது வேடிக்கைப் பார்க்கக்கூட வெளியே வரவில்லை. வாசலுக்கு வந்த கரகம், அங்கேயே நெடுநேரம் நிற்க, மெதுவாக வெளியே வந்தாள். “கோவிந்தா’ என்று ஓங்கிக் குரல் கொடுத்த முனிசாமி ரெட்டியார், இடது கையால் கரகத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, வலது கையால் இவள் தலைமீது வேப்பிலையை அடித்தார். இரண்டொரு வேப்பிலையையும், திருநீறையும் இவள் முந்தானையில் போட்டபின் நகர்ந்து போனார். இப்போதெல்லாம் அவர்தான் கரகம் எடுக்கிறார். கரகத்தின் உயரமும் குறைந்து உயிரும் தொலைந்து விட்டதாக ஊர் பேசிக்கொண்டது.

மீண்டும் சுவற்றைப் பிடித்து நடந்து போய் அவர் படத்தின் முன்பு குந்தினாள். வெளியே தெரியாத மெல்லிய விரிசலிருந்து பானை நீர் கசிந்து சொட்டுவதைப் போல, அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீர் புடவையின்மீது கொட்டிக்கொண்டிருந்தது. அன்று இரவு அவளால் தூங்கவே முடியவில்லை. கட்டியக்காரனின் பாட்டும், கேலியும் சன்னமாய்க் கேட்டுக்கொண்டிருந்தது. இவளுக்கோ உடல் ஆகாசத்தில் பறப்பதைப்போல மயக்கமாக இருந்தது. பல தலைமுறைகளைத் தொலைத்துவிட்ட இருட்டு கண்களுக்குள் உட்கார்ந்து கொண்டதைப் போல எல்லாமே இருட்டாக இருந்தது.

திருவிழா முடிந்த நான்காவது நாள் பள்ளி விடுமுறையாக இருந்தது. நண்டும், சிண்டும், எலியும், பூனையுமாய் இருந்த ஊர்ப்பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஊர் ஆலமரத்தினடியில் ஜாத்திரை விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தன. நான்கு சிறிய கொம்புகளை நட்டு, அதன்மேல் சீகலான் மண்டைகளையும், அவுஞ்சித் தழைகளையும் பரப்பி பந்தல் போட்டனர். களிமண்ணில் கெங்கையம்மன் சிலையென்று ஒன்றைப் பிடித்து வைத்து, கிழிந்த புடவையை அதன் மீது சுற்றிவிட்டு, மஞ்சள் குங்குமம் பூசியதும் தகர டப்பாக்களை அடித்துக் கொண்டு ஓ வென்று கூச்சல் போட்டுக்கொண்டிருந்தனர்.

“அத்த… வா… வா… வந்து பாரு… அய்யோ அத வந்து பாரு அத்த” என்று சின்ன மருமகள் சுந்தரம்மாளை அசைத்து எழுப்பினாள்.

“இன்னாமா… இன்னானு சொல்லுடி” என்று முக்கிக்கொண்டே எழுந்தாள். அவளை கைத்தாங்கலாய்ப் பிடித்து ஆலமரத்தடிக்கு நடத்திக்கொண்டு போனாள்.

மரத்தை நெருங்க நெருங்க தகர டப்பாக்களின் சத்தமும், “கோய்ந்தா… கோய்ந்தா’ என்ற கத்தல்களும் காதில் விழுந்ததும் இவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

பெரியவர்கள் தூர நின்று வேடிக்கைப் பார்க்க, அதை அறியாத சிறுவர்கள் மும்முரமாய் குதித்துக் கொண்டிருந்தனர். வேப்ப மண்டைகளைச் சேர்த்துக் கட்டிய கரகத்தைத் தலையில் வைத்துக் கொண்டு அவளது பேரன் ஆடிக்கொண்டிருக்க, அவனைச் சுற்றி “கோய்ந்தா… கோய்ந்தா’ என சிறுசுகள் குதித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் கிழவிக்குள் பளீரென ஒரு மின்னல் இறங்கியது.

தலையிலிருக்கும் கரகத்தை இடது கை பிடித்திருக்க, வலது கையிலிருந்த கொம்பை வீசியபடி, முன்னால் நான்கடியும், பின்னால் இரண்டடியும் வைத்து அவன் ஆடுவதைப் பார்த்ததும் குபீர் என அவள் கண்களில் கண்ணீர் சுரந்தது.

“ரெட்டியாரு மாதிரியே அடி போட்டு ஆட்றானே” என்று அதிசயித்துப் பார்த்தனர் சுற்றியிருந்தவர்கள். மருமகளின் பிடியை உதறிவிட்டு நடந்து முன்போன சுந்தரம்மாள் பேரனை இழுத்துக் கட்டிப்பிடித்துக் கன்னத்திலும், தலையிலும் முத்தம் கொடுத்தாள். இதனால் திகைத்துப்போன சிறுவன் கரகம் கீழே சரிய மிரண்டு போனான். அங்கிருந்து தானாகவே வீட்டுக்குப் போன கிழவியின் முகம், மேகங்கள் இல்லாத வானம் போல் இருந்தது. அதில் பிரகாசிக்கும் நிலாவைப்போல கண்கள் பிரகாசித்தன.

“இனிமே கெய்வி தேறிடும்” என்றனர் உறவினர்கள்.

இரவு வயிறு நிறைய்ய சோற்றைச் சாப்பிட்டவள், ரெட்டியாரின் படத்தைப் பார்த்து கும்பிட்டுவிட்டு படுக்கப் போனாள்.

மறுநாள் விடிந்தபோது அவள் எழுந்திருக்கவே இல்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *