கண்ணோட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 8,780 
 

சிவநேசன் ஒரு நிமிடம் அதிர்ந்து போய்விட்டார், உடனிருந்த நண்பரும் ஆண்டவன் உன்னோட இருக்கான்ப்பா என்று நடுங்கிய குரலில் சொல்லிக்கொண்டே சிவநேசனை அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார். சிவநேசன் வீட்டுக்கு சென்றபின்னரும் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. மனைவியும், குழந்தைகளும் ஊருக்கு சென்றிருந்தனர், தனியாக இருப்பது மேலும் மனதை உலுக்கியது. இரவு உறக்கம் வராமல் தவித்து பின் எப்போது துாங்கினாரோ, அவருக்கே தெரியாது. காலையில் கண்விழிக்கும் போது மணி ஓன்பதை நெருங்கி கொண்டிருந்தது, அலுவலகத்திற்கு கைபேசியில் அழைத்து விடுப்பு தெரிவித்துவிட்டு, காப்பி போட்டு எடுத்து வரும் போது மீண்டும் அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

செய்திதாளில் வந்திருக்குமோ என்று எண்ணி புரட்டிப்பார்த்தபோது அந்த சம்பவம் ஒரு ஓரமாக எழுதபட்டிருந்தது. அதை படிக்கும் போது மீண்டும் தன் கண்முன் நடப்பது போல பிரமை ஏற்பட்டது.

சிவநேசன் தன் நண்பருக்காக ஊரின் பிரதான சாலையில் உள்ள அரசாங்க அலுவலகத்தின் எதிர்புறம், ஓர் புளியமரத்தடியில் காத்துக்கொண்டிருந்தார். அந்த சாலையில் இரண்டு அரசாங்க பள்ளிகளும் மற்றும் ஓர் கல்லுாரியும் உண்டு, காலை வேளை ஆதலால் மாணவ, மாணவியர் சென்று கொண்டிருந்தனர். சிவநேசனின் நண்பர் அரசாங்க அலுவலகத்தின் முன்னே வந்து கையசைக்க, சிவநேசன் சாலையை கடக்க முற்பட்டு நான்கடி சென்ற அடுத்த நொடி எங்கிருந்தோ வேகமாக வந்த லாரி தனக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவனையும் சேர்த்து புளியமரத்தில் மோதியது. சிவநேசனும், நண்பரும் அதிர்ந்து போய்விட்டனர், அதன் விளைவு தான் இந்த மன உலைச்சல்.

மீண்டும் அந்த செய்தியை படிக்கத்தொடங்கினார், அந்த மாணவனின் பெயர், ஊர் மற்ற விவரங்கள் இருந்தது, பெயரை படித்ததும் ஏனோ அங்கே செல்ல வேண்டும் போலிருந்தது. யாரிடமும் கூறாமல் அங்கே சென்றவர், அங்கே கல்லுாரியை சேர்ந்தவர்கள் வந்திருக்க, சிவநேசனும் அவர்களுள் ஒருவராக நின்று கொண்டார்.

அந்த மாணவனின் தாய் பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள், தந்தை தலையிலடித்து அழுது கொண்டிருந்தார், வந்திருந்தவர்கள் அனைவரும் தாயை பாதிப்பிலிருந்தும், தந்தையை மனதை தேற்றிக்கொள்ளவும் முயன்றனர். ஆனால் அவர்கள் எப்படி சொன்னாலும் பெற்ற மனது தாங்குமா, தாயின் நிலையில் மாற்றமில்லை, தந்தையும் அழுவதை நிறத்தவில்லை.

அந்த மாணவனின் உடலை இடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல தயாராயினார்கள், தந்தை ” நீ எனக்கு செய்வேன்னு நினைச்சேன், ஆனால் என்னை உனக்கு செய்ய வைச்சுட்டியே” என்றழுதார். அழுகுரல்கள் அதிகமாயின, ஆனால் அந்த தாயால் எதையும் உணரமுடியவில்லை.

அனைவரும் இடுகாட்டுக்கு நடந்து செல்லும் போது, அந்த மாணவனின் கண்ணீரஞ்சலி சுவரோட்டி சிவநேசனுக்கு தென்பட்டது. மாணவனின் பெயர் சிவக்குமார். ஏதோ சொல்ல முடியாத தவிப்பு சிவநேசனின் மனதில். அவர் கண்ணோட்டத்தில், தனக்கு வந்ததை இவன் எடுத்துக்கொண்டானோ என்ற பரிதவிப்பு . இப்போது அவரை இடுகாடு வரை வரவைத்திருக்கிறது.

திருக்குறள்:
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. (குறள்: 571)

பொருள்: இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் இருக்கும் காரணத்தால் தான் அழியாமல் இருக்கின்றது.

(பொருட்பால்-அரசியல்-கண்ணோட்டம்)———–திருவள்ளுவர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *