கடைசி வீட்டு ஆச்சி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 9,266 
 

‘‘கடைசி வீட்டு ஆச்சி செத்துப்போயிட்டா..!’’ பேச்சிமுத்துவின் குரல் எங்கோ கடலுக்குள் இருந்து ஒலிப்பது போல மெலிதாகக் கேட்டது. என்னால் செய்தியை உள்வாங்க முடியவில்லை. சில கணங்களில் செய்தி உறைத்த போது அதிர்ச்சியாக இருந்தது!

‘‘எப்படியும் நாளைக்குச் சாயங் காலம் ஆகிடும் தூக்குறதுக்கு. நீ வந்துடுவியா?’’ என்றான். உடைந்த அவனுடைய குரலில் இருந்து எவ்வளவு நேரம் அழுதிருப்பான் என்று யூகிக்க முடிந்தது.

‘‘என்னடா கேக்கறே, உடனே வர்றேண்டா! டேய், கொஞ்சம் முன்னப்பின்ன ஆனாலும் தூக்கிற வேண்டாம்னு சொல்லுடா. ஒரு தடவையாவது ஆச்சி முகத்தைப் பாக்கணும்’’ என்றபோது எனக்கும் குரல் உடைந்தது.

எனக்காகவெல்லாம் ஆச்சியைத் தூக்காமல் வைத்திருக்க, நான் ஒன்றும் அவளுக்கு மகன் வயிற்றுப் பேரனோ, மகள் வயிற்றுப் பேரனோ கிடையாது. சொல்லப்போனால், அவளை ஆச்சி ஆச்சி என்று சுற்றி வந்த யாருமே அவளுக்குப் பேரன், பேத்தி கிடையாது.

எங்கள் தெருவின் கடைசி வீடு ஆச்சியுடையது. அவளுடைய பெயர்கூட எங்களுக்கு நீண்ட நாட் களுக்குத் தெரியாது. கடைசி வீட்டு ஆச்சி என்றுதான் சொல்வோம். ஜாக்கெட் போடாத கறுத்த உடம்புக்கு வெள்ளைச் சேலை பளீரென்று இருக்கும். கையில் வைத்திருக்கும் துணிகூட வெள்ளை நிறத்தில்தான் வைத்திருப்பாள். ‘‘ஏன் ஆச்சி, வெள்ளைக் கலரையே வெச்சிருக்கே?’’ என்று கேட்டால், ‘‘ம்… அதுதான் உன் தாத்தா’’ என்பாள் சிரித்துக்கொண்டே!

ஒரு மனுஷிக்கு அத்தனை பெரிய வீடு தேவை இல்லை. பெரிய முற்றம், தேக்குத் தூண்கள் கூரையைத் தாங்கி நிற்கும் நீளமான வராண்டா, மேற்குப் பக்கச் சுவர் முழுக்க கயிலைநாதனில் தொடங்கி கன்னியாகுமரி வரை சாமி படங்கள், தெற்குப் பக்கத்துச் சுவரில் கையில் குச்சியைத் தாங்கியபடி கோட்டு வேட்டியில் உட்கார்ந்த நிலையில் தாத்தா, இரண்டு புறமும் மூக்குத்தி, மையும் கொஞ்சம் பயமும் பூசிய கண்கள், எண்ணெய்க்குப் படிந்த தலைமுடி, அதில் எட்டிப் பார்க்கும் செவந்தி என்று சர்வ அலங்காரமாக நின்றபடி இருக்கும் ஆச்சியும் எடுத்துக்கொண்ட போட்டோ என்று அறை முழுக்க போட்டோக்கள் நிறைந்த பட்டாசாலை, இரண்டு பக்கமும் இரண்டு சைடு ரூம்கள், வலப் பக்கம் நெற்குதிரும், இடப் பக்கம் அரங்கு வீடுமாக மறித்துக் கட்டப்பட்ட இரண்டாம் பத்தி, அதைத் தாண்டி இரண்டு படி இறங்கினால் வலப் பக்கம் குளிக்கும் ரூமும் இடப் பக்கம் தண்ணீர்த் தொட்டியும் இருக்கும் வானவெளி, அதைத் தாண்டி அகன்றுகிடக்கும் அடுக்களை என்று பெரிய வீடு… இது தவிர மச்சு வேறு!

வெள்ளியும் செவ்வாயும் மொத்த வீட்டையும் சாணி போட்டு மெழுகுவாள். இடையில் கிருத்திகை, அமாவாசை வந்தால் அதற்கும் மெழுகுவாள். பல அறைகளில் மெழுகுவதற்குத் தவிர, அவள் நுழைந்ததுகூடக் கிடையாது. ஆனால், எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் அவளுக்கு!

அவளுக்கு வேலை வைப்பதற்கென்றே பிறப்பெடுத்த மாதிரி, லீவு நாளென்றால் அங்கேதான் கொட்டமடிப்போம். ஆச்சி வீடே பள்ளிக்கூடம் மாதிரி ஆகிவிடும். புறவாசலில் இருக்கும் பூவரசு மரத்தில் ஊஞ்சல் கட்டிப் போட்டிருப்பாள். பம்பரம், கோலி விளையாடி, குண்டும் குழியுமாக புறவாசலையே போர்க்களம் போல ஆக்கிவைத்திருப்போம். ஆனால், ‘‘ஏம்டா… இப்படி குட்டப் புழுதியா ஆக்குதிய வீட்டை…’’ என்று கடிந்துகொள்ளும் பாவனை யில் செல்லமாக அலுத்துக்கொள்வாளே தவிர, ஒரு சுடுசொல் வராது.

புளியையும் கருப்பட்டியையும் போட்டு, பானை நிறைய கரைத்து பானைக்காரம் செய்து வைத்திருப் பாள். வெயிலுக்கு இதமாக மொண்டு மொண்டு குடித்துவிட்டு, விளை யாடிக்கொண்டே இருப்போம். தெருவுக்குள் எந்தப் பிள்ளையைத் தேட வேண்டுமென்றாலும், அவள் வீட்டில்தான் தேடுவார்கள்.

முகமெல்லாம் வெயிலில் கறுத்து, சட்டை டிராயரையெல்லாம் புழுதி யாக்கிக்கொண்டு நிற்பவனை அழைத்து, ‘‘ஏ… சின்னவனே! உங்கம்மா தேடி வந்துருக்கால… அவ கண்ணுல நீ இந்தக் கோலத்துல மாட்டுன… உன் தோலை உரிச்சு உப்பைத் தடவிருவா. மூஞ்சியைக் கழுவிட்டு ஓடு’’ என்று குளிர்ந்த தண்ணீரைக் கொடுத்து, சேலை முனையில் துடைத்தும் விடுவாள். ‘‘ராசா என்கூடத்தான் இருந்து தாயம் விளாண்டுக்கிட்டு இருந்தான். அடிக்காத செல்லம்மா… புள்ள பட்சியா ஒடுங்கி நிக்குது பாரு… அடிக்காத புள்ளய…’’ என்று சொந்த ஜாமீன் கொடுத்து அனுப்புவாள். ஆனாலும், புளிய விளார் ஒடிந் திருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். சாயங்காலம் போனால் எண்ணெய்க் கிண்ணத்தோடு உட்கார்ந்திருப்பாள்.

‘‘உங்க ஆத்தா உன்னை வலிச்சுப் பெத்தாளா… இல்லை, வழியில தவிட்டுக்கு வாங்கியாந் தாளா? இப்படிப் போட்டு அடிச் சிருக்கா’’ என்றபடி எண்ணெய் தடவிவிடுவாள்.

போன வருஷம் சம்மருக்கு ஊருக்குப் போயிருந்தபோது, என் மகனை அழைத்துக்கொண்டு போய் கடைசி வீட்டு ஆச்சியின் முன்னால் நிறுத்தினேன். கலங்கி நிற்கும் கண்களோடு என் மகனைத் தடவித் தடவிப் பார்த்தாள். ‘‘அய்யா… இளராசன் கணக்கா இருக் கானே! பணியாரம் சாப்புடுதியா?’’ என்றாள். ‘‘இல்ல பாட்டி… எனக்கு இன்னிக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு’’ என்று பத்து நிமிடம்கூட ஆச்சி வீட்டில் தங்காமல் ஓடி விட்டான்.

எங்கள் ஊர் கிரிக்கெட் டீமில் சிறப்பு பேட்ஸ்மேனாக என் மகனைச் சேர்த்திருந்தார்கள். இரண்டு வருஷம் தொடர்ந்து கப் வாங்கிவிட்டார்களாம். இந்த வருஷமும் கப் வாங்கிவிட்டால், கப்பே சொந்தமாகிவிடுமாம். அதற்காக லீவு முழுக்க கண்மாயில் பிராக்டீஸ் நடந்துகொண்டு இருந்தது.

முன்னேயெல்லாம் கண்மாயில் தண்ணீர் தளும்பிக்கொண்டு இருக்கும். பகலெல்லாம் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சப் போகிறவர்கள் ஒரு பக்கம், குளத்தில் குளிக்கும் எருமைக் கூட்டத்துக்கு முதுகு தேய்ப்பவர்கள் ஒரு பக்கம் என்று பிஸியாக இருக்கும்.

எங்கள் ஊரில் எல்லா வீட்டிலும் டாய்லெட் கிடையாது. கருக்கல் நேரத்தில் கண்மாய்ப் பக்கமாகத்தான் ஒதுங்க வேண்டும். அப்படிப் போகிற பெண்கள், கடைசி வீட்டைத் தாண்டித் தான் போக வேண்டும். போகும்போதோ, இல்லை வரும்போதோ ஆச்சி வீட்டில் எட்டிப் பார்க்காமல், எந்தப் பெண்ணும் போக மாட்டாள். பஞ்சாயத்து போர்டில் பல்ப் திருடி யதில் ஆரம்பித்து, ஊர் விஷயங்கள் அனைத்தும் அங்கேதான் அரைபடும். அந்த நேரத்தில் பல சிபாரிசுகளும், விண்ணப்பங்களும்கூட பரிமாறப் படும்.

‘‘ஆத்தா, தாமரைச் செல்வி… நம்ம கார வீட்டு கணேசன் பி.ஏ, எல்லாம் படிச்சிருக்கான் தெரியுமில்ல. உங்கப்பன் தேடித் தேடிப் போனாலும் உனக்கு என்ன தேசிங்கு ராசனையா கொண்டாந்துரப் போறான்? பேசாம அந்த கணேசனுக்கு வாக்கப்பட்டு போற வழியைப் பாரு. அவனும் எங்கிட்ட வந்து அழுது புலம்புறான்… ‘அந்தப் புள்ள ஏறெடுத்தும் பாக்க மாட்டேங்குது’னு. ஏனாத்தா… உனக்கு அவன் மேல என்னமாச்சும் தப்பாப்படுதா?’’ என்று பேசிப் பேசி விவரம் சேர்த்துக் கொள்வாள்.

அடுத்த நாள் தாமரைச் செல்வியின் தாயாரைப் பிடிப்பாள். ‘‘ஏ புள்ள… உன் மவளைத் தூர தேசத்துல கட்டிக் குடுத்துப்புட்டு கண்ணக் கசக்கிட்டு நிக்கப்போறியா? உள்ளூருக்குள்ள ஒருத்தன் கையில் புடிச்சுக் குடுத்தா, மேலுக்கு ஏதும்னா அந்தப் புள்ள ஓடியாந்து உன்னைத் தாங்கும்ல… என்ன சொல்லுத..?’’ என்று அடுத்த ரவுண்ட் பேச்சுவார்த்தையில் இறங்கு வாள்.

இப்படி ஒரு காதல் கல்யாணத்தை ஒற்றை ஆளாக நின்று ஏற்பாடு செய்து, தாலி கட்டிக்கொண்டு காலில் விழும் தம்பதிக்கு நெற்றி நிறைய விபூதியைப் பூசி, ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து அனுப்பு வாள். காலையில் இட்லியும், சாயங் காலம் பணியாரமும் சுட்டுக் காலந் தள்ளும் அவளால் அவ்வளவுதான் முடியும். அவளுடைய மகன் அனுப் பும் காசைக்கூட போஸ்ட் ஆபீஸில் போட்டு வைத்துவிடுவாள்.

‘‘ஏன் ஆச்சி… மாமா மெட்ராஸ்ல இருக்காம்ல. வந்திரு ஆத்தானு கூப்பிட்டும் ஏன் போக மாட்டேங்க..?’’ என்று ஒருநாள் கேட்டதற்கு, ‘‘ச்சீ… மனுஷி வாழ்வாளா அந்த ஊர்ல… என்னமோ கொலைக்குத்தம் பண்ண மாதிரி, நாலு சுவத்துக்குள்ளயே அடைஞ்சுகிடக்க வேண்டியிருக்கு. எதுத்த வீட்டுக்காரன் தீவாளிக்கு இனாம் கேக்க வந்த தீவட்டி கணக்கா ஆடிக்கொருக்க அம்மாசைக்கொருக்க மூஞ்சியைக் காட்டுதான். அதென்னமோ அந்த ஊருக்குப் போனா எனக்கு ஊர் வெலக்கிவச்ச மாதிரி இருக்கு. விடிஞ்சு போய் அடைஞ்சு வாறவங் களுக்குத்தான் அந்த ஊரு லாயக்கு’’ என்று தலைநகரத்தை விமர்சனம் செய்து முடித்துவிட்டாள்.

அவளுக்கு ஊரில் ஆயிரம் வேலைகள் இருந்தன. ஊருக்குள் எந்தப் பிரசவம் என்றாலும், ஆச்சிதான் மருத்துவச்சி. புள்ளைத்தாச்சியின் முகச் சுழிப்பை வைத்தே வலியின் தன்மையைச் சொல்லி, பிள்ளை பிறக்கும் நேரத்தைச் சொல்லிவிடுவாள். அந்த நேரத்தை வைத்து பிள்ளையின் ஜாதகத்தைக் கூட குறித்துக்கொள்ளலாம். நேரம் தப்பவே தப்பாது. யார் வீட்டில் பிரசவம் பார்த்தாலும் அங்கேயே ஒரு பானை வெந்நீர் போடச் சொல்லி குளித்துவிட்டு, தலையைக் காயப் போட்டபடி கிளம்பி வந்துவிடுவாள்.

ஆச்சியின் மகன் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவருக்குத் தகவல் போய்ச் சேர்ந்து கொள்ளி போட வந்துவிடுவாரா என்று தெரியவில்லை.

கையில் இருந்த செல்போனில் வீட்டுக்கு போன் அடித்தேன். நீண்ட நேரம் ரிங் அடித்த பிறகு, அம்மா வந்து எடுத்தாள். ‘‘பாத்ரூம்ல இருந்தேண்டா… நீ ஊருக்கு வந்துட்டிருக்கியா? மாமனுக்குத் தகவல் சொல்லியாச்சு. அமெரிக்காவுல இருந்து கிளம்பிடுச்சாம். ஒத்தைக் கிழவியாக் கிடந்து ஊருக்கே சேவுகம் பார்த்துக்கிட்டிருந்துச்சு. ஆச்சிக்கு ஆன கதியைப் பார்த்ததும் நாலு தடவை பாத்ரூம் போயிட்டேண்டா…’’ அம்மா மேற் கொண்டு பேச முடியாமல் விம்மினாள்.

தாத்தா செத்துப்போனபோது, மாமாவுக்கு ஏழு வயது என்று ஆச்சி சொல்லியிருக்கிறாள். ‘‘கையில புள்ளையும் கண்ணுல தண்ணியுமா நின்னேன். உங்க தாத்தா எனக்கு வெச்சிட்டுப் போனது இந்த வீட்டையும் ஆட்டுப் புழுக்கை கணக்கா கையகலம் நிலத்தையும்தான். அந்த நிலத்தைக்கூட உங்க மாமன் காலேசு படிக்கப் போகையில வித்துட்டேன். அன்னிக்கும் சரி, இன்னிக் கும் சரி, இந்த ஊருதான் ராசா எனக்கு ஆதரவு. நம்ம தெரு பூரா இருக்கும் சொந்தக்காரங்க ஊக்கத்துலதான் உங்க மாமனை வளர்த்தேன்’’ சொல்லும்போதே கரகரவென்று கண்ணில் நீர் வந்துவிடும் ஆச்சிக்கு.

மாமனும் ஆச்சிக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. தன்னோடு வைத்துக் கொள்ளத்தான் ஆசைப்பட்டது. ஆனால், மெட்ராஸ§க்கே போகாத ஆச்சி அமெரிக்காவுக்கு எப்படிப் போகச் சம்மதித்திருக்கும்?

ஊர் போய் இறங்கியபோது, ரயில்வே ஸ்டேஷனுக்கு வண்டியை எடுத்துக்கொண்டு வந்திருந்தான் பேச்சி முத்து.

‘‘மாமா இப்பத்தான் மதுரைல ஃப்ளைட்டில் இறங்கி, கார்ல வந்துட்டி ருக்காரு. எப்படியும் தூக்குறதுக்கு நாளைக் காலைல ஆகிடும்’’ என்றபடி வண்டியை ஊருக்குள் திருப்பினான்.

சிறுவர்கள் கிரிக்கெட் மட்டை, பந்து சகிதம் கண்மாயிலிருந்து கரையேறிக் கொண்டு இருந்தார்கள். தண்ணீர் வறண்டுகிடந்த கண்மாய், கிட்டத்தட்ட கிரிக்கெட் ஸ்டேடியம் போல, பல நாட்கள் விளையாடியதில் கெட்டிப் பட்டுக்கிடந்தது.

‘‘என்னடா… ஏதும் உடம்புக்கு முடியாம இருந்துச்சா ஆச்சி, திடீர்னு…’’ என்று நான் வார்த்தையை முடிக்கும் முன் குரல் பிசிறடிக்கச் சொன்னான் பேச்சிமுத்து…

‘‘இல்லடா, தூக்கு போட்டுக்குச்சு!’’

அதிர்ச்சியில் பேச்சிமுத்துவின் தோளை இறுக்கிப் பிடித்தேன். ‘‘ஏண்டா..?’’

‘‘தெரியலைடா… காலையிலயே தொங்கிடுச்சு போலிருக்கு. இப்பல்லாம் யாரும் அடிக்கொருதரம் ஆச்சி வீட்டுக்குப் போறதில்லை, இல்லையா… அதனால, எப்போ தொங்கிச்சுன்னே தெரியலை. பிச்சைக்காரன் போட்ட சத்தத்துலதான் எல்லாரும் ஓடிப் போய்ப் பார்த்திருக் காங்க.’’

வண்டியை பிரேக் போட்டு நிறுத்தி விட்டுக் குலுங்கி அழத் தொடங்கினான் பேச்சிமுத்து.

– ஜூன் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *