தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,451 
 

திடீரென்று ஒரு ஒளிவட்டம். சாட்சாத் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதியே எதிரில் நின்றார். கண்களைக் கசக்கினேன்… சந்தேகமேயில்லை; அவரேதான். இருந்தாலும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த அதிசயம் நிகழ்ந்தது…
“பெருமானே… எனக்கு காட்சி தந்த உங்கள் மாட்சியை என்னென்று சொல்வேன்…’ கண்களிலே மளமளவென்று ஆனந்த ஜலம்.
“போதும், போதும்… கண்களைக் துடைத்துக் கொள். என்னைப் பார்ப்பதற்காக கோடானு கோடி ஜனங்கள் வந்து, காத்துக் கொண்டிருக்க, நீ மட்டும் என்னை ஏன் காண வருவதில்லை; அதனால்தான் நானே… உன்னைக்…’
கடவுள்“பெருமானே… அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். திருப்பதிக்கு வந்து தங்களைப் பார்க்காவிட்டாலும், தங்களின் திவ்யரூபத்தை, நான் என் மனக் கண்ணால் அடிக்கடி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் சுவாமி…’
“தெரியும், தெரியும்… ஒரு பேச்சுக்காக அப்படிச் சொன்னேன். உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன?’
“சுவாமி… எல்லாரும் போல், நானும் திருப்பதிக்கு வந்து, தங்களைத் தரிசிக்க வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறேன்; இருந்தாலும்…’
“என்ன இருந்தாலும்… சொல்… அந்தக் கூட்டத்தையும் தள்ளு, முள்ளுகளையும் தாண்டி, மணிக்கணக்கில், நாள் கணக்கில் வரிசையில் நின்று, நேரத்தைத் தொலைக்க உன் மனம் இடம் தரவில்லை; அப்படித்தானே?’
“ஆமாம் பெருமாளே… சரியாகச் சொன்னீர்கள். நான் ஒண்ணு கேட்டால், தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே?’
“கேள் அப்பனே…’
“சின்னஞ் சிறுவயதில், என்னுடைய ஊரில் நானும், தினம் தினம் கோவிலுக்குச் செல்வேன். பெருமாள் கோவில் தான் அதுவும். பவழமல்லிப் பூக்களைப் பறித்து, கூடை நிறைய அங்கிருக்கும் குருக்களிடம், அர்ச்சனைக்கு கொடுத்துவிட்டு வருவேன்; மாலையிலும் செல்வேன். ஆராதனை மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
“அவ்வளவாக கூட்டமே இருக்காது; ஆரவாரம் அறவே இருக்காது. மனதிற்கு மிகவும் அமைதியாக இருக்கும். மணிக்கணக்கில் அமர்ந்து இறைவனைக் கண்ணாரக் கண்டுகளிக்கலாம். அர்ச்சனை, ஆராதனை, நைவேத்யம் நடந்து கொண்டே இருக்கும். ஜனங்கள் வருவதும், போவதுமாக இருப்பர்; யாருக்கும் எந்தச் சிரமும் இருக்காது.
“காத்திருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லாமல், இறைவன் காட்சி கிடைத்துக் கொண்டே இருக்கும். பிரத்யேகமாக கட்டணம் என்று அந்த நாளில் எதுவுமே கிடையாது. ஏழை – பணக்காரன் என்ற வித்தியாசம் கொஞ்சம் கூட இருக்காது. மொத்தத்தில் அடைத்து வைப்பதும், அடைகாப்பதும் இருக்கவே இருக்காது…’
“முடித்து விட்டாயா… நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குப் புரிகிறது. ஏன் மணிக்கணக்கில், நாள் கணக்கில், அடைத்து வைத்து உயிரை எடுக்கின்றனர் என்று தானே கேட்கிறாய்?’
“ஆமாம் சுவாமி!’
“ஏன் இத்தனைச் சுற்று… ஏன் இத்தனைத் தடைகள்… ஏன் இத்தனை வேண்டாத வேலை… கடவுளுக்கும், பக்தனுக்கும் ஏன் இந்த நீண்ட நெடுந்தொலைவான இடைவெளி. கையில் எடுத்து நேராக, வாயில் வைப்பதை விட்டுவிட்டு, தலையைச் சுற்றி மூக்குக்குக் கீழே கொண்டு செல்ல வேண்டுமா உணவை… இது என்ன வேண்டுதல்?
“வருபவர் வரட்டும்; வந்து கொண்டே இருக்கட்டும். பார்த்துவிட்டு செல்லட்டும் என்று விடாமல், கூட்டத்தை ஏன் சேர்க்க வேண்டும். பெருங்கூட்டம் பெருங்கூச்சல். ஏன் இத்தனை களேபரத்தை காட்ட வேண்டும்?
“மொத்தத்தில்… பக்தி என்பது இன்று வியாபாரமாகி விட்டது என்கிறாய்… அப்படித்தானே?’
“ஆமாம்… நீங்களே சொல்லி விட்டீர்கள். வியாபாரமாகி விட்டதென்று. தாங்கள் கொஞ்சம் தயவு செய்து, இதில் தலையிட்டு, கருணை கூர்ந்து, இந்த நடைமுறைகளைக் கொஞ்சம் மாற்றக் கூடாதா பெருமானே?’
சிரித்தார் பெருமாள்.
“என்ன சொல்கிறாய் நீ… வழக்கத்தை மாற்றச் சொல்கிறாயா… என்னையா… இங்கே, என் பக்கத்தில் வா. இன்னும் பக்கத்தில். இன்னும், இன்னும்… உனக்கொரு ரகசியம் சொல்கிறேன்… யாரிடமும் சொல்லி விடாதே…
“இதையெல்லாம் மாற்றி விடுங்கள் என்று, நானே போய்ச் சொன்னாலும், இதை மாற்றுவதற்கு, அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் வைத்தது தான் இன்றைக்குச் சட்டம். அவர்கள் போட்ட சட்டத்தை, அவர்களே மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்ற போது, நான் அதில் தலையிட்டு, பொல்லாப்பை ஏன் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்?
“என் மரியாதை ஏன் கெட வேண்டும் சொல்லப்பனே!’
“சுவாமி… <உங்கள் நிலை எனக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. <உங்களுக்கே இப்போதெல்லாம் சுதந்திரம் இல்லை என்பதைக் கூட, உங்களால் சுதந்திரமாகச் சொல்ல முடியவில்லை. அப்படித்தானே?' "அப்படியேதான்... சரி... இவ்வளவு தூரம் உன்னைத் தேடி, உன் வீட்டிற்கே வந்திருக்கிறனே... இது என்ன உபசாரம், நிற்க வைத்தே... உட்காரக் கூட சொல்ல மாட்டாயா? "சாப்பிட ஏதாவது தருவாயென்று பார்த்தால், எதையும் கண்ணால் கூடக் காட்ட மாட்டேன் என்கிறாயே... நியாயமா; இது தர்மமா அப்பனே?' "மன்னிக்க வேண்டும். அடியேன் அபச்சாரம் செய்து விட்டேன். அடியேன் தங்களைத் திடீரென்று கண்டதில், என்னையே மறந்து விட்டேன். என்ன செய்வது என்பதையும் மறந்து விட்டேன். கல்யாணத்திற்குச் சென்றிருந்தோம். அங்கேயே குடும்பம் மொத்தமும் சாப்பிட்டு விட்டோம்; வீட்டில் சமையல் செய்யவில்லை. ஆங்... சுவாமி, லட்டு இருக்கிறது சாப்பிடுகிறீர்களா? உங்களுடைய திருப்பதி லட்டு அளவுக்கு இருக்காது. அய்யர் பவனில் வாங்கியது; நன்றாகவே இருக்கும். எடுத்து வரட்டுமா?' "போ... போய்க் கொண்டு வா!' "இந்தாருங் கள் ஐயனே... கால் கிலோ லட்டு. மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும்...' "ஏன்... மிச்சம் வைத்தால் என்னவாம்?' "அதொன்று மில்லை... என் வீட்டில் என் மனைவி, குழந்தைகள் யாரும் இனிப்பை விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். வீணாகி விடக் கூடாதே என்று நான் எடுத்துச் சாப்பிட்டாலும், என் மனைவி என்னை அர்ச்சனை செய்வாள். ஏன் அந்த வேண்டாத அர்ச்சனையும், ஆராதனையும் என்று தான்...' "ஓ... உன் மனைவியிடம் உனக்கு அவ்வளவு பயமா?' "இல்லை சுவாமி... பயமில்லை; அவ்வளவு மரியாதை. என்ன இருந்தாலும், கடைசி வரை என் கூடவே இருப்பவள் அவள் தானே!' "சரி சரி... நீ சொன்னபடி மொத்தத்தையும் சாப்பிட்டு விட்டேன்; நன்றாகவே இருக்கிறது... இப்படி லட்டு சாப்பிட்டு எத்தனை காலமாகிறது தெரியுமா?' "என்ன சாமி... திருப்பதிக்கே லட்டு கிடைக்கவில்லை என்பது போல் இருக்கிறது உங்கள் பேச்சு!' "அடப்பாவி மனிதா... நைவேத்யம் என்று காட்டிக் காட்டி என்னை நையாண்டி செய்து, நீங்களே அல்லவா மொத்தத்தையும் லபக்கி விடுகிறீர்கள். அப்புறம் எனக்கெங்கே கிடைக்கும்... "என்ன சிரிக்கிறாய்... என் ஆற்றாமை உனக்குச் சிரிப்பாக இருக்கிறதா?' "இத்தனைப் படு அப்பாவியாக இருக்கிறீர்களே சுவாமி... அதை நினைத்துத்தான் சிரிக்கிறேன். படைப்பது அனைத்தையும், நீங்களே சாப்பிட ஆரம்பித்து விட்டால், அப்புறம் யார் உங்களுக்குப் படைப்பர்... சாப்பிட மாட்டீர்கள் என்ற தைரியத்தில் தானே படைக்கிறோம்?' "நீ சொல்வது சரிதான்... நான் கிளம்பட்டுமா... நாழியாகிறது...' "இப்போதுதானே வந்தீர்கள்... அப்படியென்ன அவசரம்... கொஞ்சம் பொறுத்துத்தான் போவது... திருமகள் கோபித்துக் கொள்வாரோ?' "அப்படியொன்றுமில்லை... ஏதோ கேட்க நினைக்கிறாய் போலிருக்கிறதே... தயங்காமல் கேள். சங்கோஜம் எதற்கு?' "மன அமைதிக்காகவும், மன நிம்மதிக்காகவும் எங்கெங்கிருந்தோ உங்கள் சன்னிதிக்கு வருகிறோம். உங்களைப் பார்ப்பதற்கு, குறைந்தது ஒரு நிமிட அவகாசமாவது எங்களுக்குத் தரக் கூடாதா... "அதுவும் இப்போது முன் போல் இல்லாமல், பின்னால் நகர்ந்து ரொம்ப தூரம் சென்று விட்டீர்கள். நாங்கள் நடந்து வரும் போதே, தங்களைக் கண்டால் தான் உண்டு. இந்த துர்ப்பாக்கிய நிலை எங்களுக்கு எதற்கு... மனமுருக உன்னை, ஒரு நிமிடமாவது சேவிக்க முடியாதா ஸ்ரீவாரி பெருமானே!' "புரிகிறது அப்பனே... உன் தவிப்பும், வருத்தமும்...' "அதற்கில்லை பெருமானே... என் நண்பர் ஒருவருக்கு, திருப்பதி நடைமுறை எதுவுமே தெரியாது. உன்னைத் தொலைவில் பார்த்த போதே, பக்திப் பெருக்கால் தம் கண்களை மூடிக் கொண்டார். கண்ணைத் திறந்த போது, அங்கிருக்கும் குருக்கள், "ஜர்கண்டி... ஜர்கண்டி...' என்று, அவரை இழுத்து வெளியிலே தள்ளி விட்டிருந்தனர். "பாவம் அவர்... இதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார். கண்மூடி பக்தி செய்வது தவறா... கண்மூடித்தனமான பக்திதானே தவறென்று சொல்வர்?' "எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது அப்பனே... ஒரு வகையில் பார்த்தால், இதற்கெல்லாம் காரணம் நீங்கள் தான்... நன்றாக யோசித்துப் பார்...' "என்ன சொல்கிறீர்கள் சுவாமி!' "ஆமாம் அப்பனே... எனக்கே இப்போதெல்லாம் ஒரு சந்தேகம் எழுகிறது. நான் மனிதனைப் படைத்தேனா... இல்லை மனிதன் என்னைப் படைத்தானா என்று... பக்தி என்பது, இன்று, ஆடம்பரமாகி விட்டது; அட்டகாசமாகி விட்டது... எனக்கே சில நேரங்களில், என் மீதே கோபம் கோபமாக வருகிறது!' "சரி சுவாமி... இன்னொன்றையும் தாங்கள் எனக்கு விளக்க வேண்டும். எத்தனையோ ஊர்களில், எத்தனையோ கோவில்களில், பெருமாளாகிய நீங்கள் இருக்கும் போது திருப்பதிக்கு மட்டும், திருப்பதி வெங்கடாஜலபதி பெருமானுக்கு மட்டும், அப்படி ஏன் ஒரு சிறப்பு... எங்கிருந்தாலும் கடவுள் ஒன்றுதானே... கடவுள் கடவுள் தானே! "இதில், திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமான் என்ன... திருப்பதி வெங்கடாஜலபதி பெருமான் என்ன... நூற்றி எட்டு திவ்ய தேசம் என்று வேறு, வேறுபடுத்தப்படுகிறது... மனிதர்களில் தான் பிரிவினை என்று பார்த்தால், இறைவனிடம் கூடவா? "இன்று எத்தனையோ கோவில்களில், அன்றாடம் விளக்கேற்றுவதற்கே நிதிநிலை இல்லாத போது, அங்கு மட்டும் ஏன் இந்த ஆடம்பரம், அமர்க்களம், ஆரவாரம், ஆர்ப்பாட்டம் எல்லாம்...' "இதற்கு நானெப்படி பதில் சொல்வது அப்பனே... இதற்கு நானா காரணம்; நீங்கள் தானே அப்படி ஒரு மாயையை ஏற்படுத்தி, அந்த மாயையில் மக்கள் எல்லாரையும் மயக்கி வைத்திருக்கிறீர்கள்... "ஒன்று மட்டும் சொல்வேன்... அவரவர் கடமையை, அவரவர் தவறாமல் செய்தால், என்னைத் தேடி வர வேண்டும் என்ற அவசியமே இல்லை; நானே உங்களைத் தேடி வருவேன். அப்படி ஒரு நிலைமையை நீங்கள் எனக்கு இதுவரைத் தரவே இல்லையே; இனியாவது... "சரி அப்பனே... நேரமாகி விட்டது வருகிறேன். இன்னும் ஏதாவது சொல்ல வேண்டி இருக்கிறதா?' "ஆமாம் சுவாமி... எனக்கு நான்கு மைத்துனர்கள். அடுத்த மாதம் குடும்பத்தோடு நாங்கள் எல்லாரும் திருப்பதிக்கு வர வேண்டும் என்று எண்ணியிருக்கிறோம்!' "கண்டிப்பாக கூட்டிக் கொண்டு வா...' "அதற்கில்லை சுவாமி... அங்கிருக்கும் கோவில் குருக்களிடம் கொஞ்சம் சொல்லி வையுங்கள். காண்பதற்கு சிறிது அவகாசம் தரச் சொல்லுங்கள். "ஜர்கண்டி... ஜர்கண்டி...' என்று பலாத்காரம் செய்ய வேண்டாம் என்று சொல்லி வையுங்கள். கொஞ்சம் மனிதாபிமானம் காட்டச் சொல்லுங்கள் போதும்...' "என்ன சிபாரிசா?' சிரித்தார் கடவுள் . "ஆகட்டும் அப்பனே... நான் வரட்டுமா?' "வரட்டுமா... வரட்டுமா...' என்று, போவதிலேயே குறியாக இருக்கிறீர்களே... இருங்களேன் இன்னும் கொஞ்ச நேரம். என் மனைவியை எழுப்பி, தங்களுக்குக் கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலும், சுண்டலும் செய்து தரச் சொல்கிறேன். சாப்பிட்டு விட்டு செல்லலாமே... "இன்னுமொன்று... என்னை விட, என் மனைவிக்கு கடவுள் பக்தி அதிகம். தங்களை நேரில் பார்த்தால், மிகவும் சந்தோஷப்படுவாள்!' "இருக்கட்டும் அப்பனே... பாவம் அவளைப் பாதித் தூக்கத்தில் எழுப்ப வேண்டாம். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்றே, உன் மனைவி எமக்காக செய்த அந்த சர்க்கரைப் பொங்கலின் கமகம வாசம், வைகுண்டம் வரை வந்தது. திருமகளும், அதற்கு மயங்கி விட்டாள். எங்கள் இருவரின் ஆசியையும் உன் மனைவியிடம் கூறு!' "சுவாமி... நீங்கள் வந்து போனதைக் கேள்விப்பட்டால், எல்லாரும் என்னை உண்டு, இல்லையென்று செய்து விடுவர். என்னை படாதபாடு படுத்தி விடுவர். அடிக்கடி படுத்தி எடுப்பர். கொஞ்சம் இருங்கள் என் அக்கா, மாமா, அவர்களுடைய குழந்தைகள், மருமகன், மருமகள்கள், என்னுடைய மைத்துனர்கள், அவர்களுடைய மனைவி, குழந்தைகள், என் தம்பி, என் தம்பி மனைவி, அவர்களுடைய குழந்தைகள், என் மாமியார், என் மனைவி, என் குழந்தைகள் எல்லாரும் இருக்கின்றனர். எழுப்பிக் கூட்டி வருகிறேன்; கொஞ்சம் பொறுங்கள்!' "சரி, சரி அழைத்து வா... காத்திருக்கிறேன்!' ""எல்லாரும் எழுந்திருங்க... சீக்கிரம், சீக்கிரம் திருப்பதி வெங்கடாஜலபதி, நம் வீட்டுக்கு வந்திருக்கிறார்; வந்து பாருங்க...'' ""என்னது... திருப்பதி குடைதானே வருஷா, வருஷம் வரும். இந்த வருஷம், திருப்பதி வெங்கடாஜல பதியே வந்துட்டாரா... எங்கே... எங்கே?'' ""இங்கேதானே இருந்தார். உங்களை எல்லாம் கூட்டி வரச் சொன்னாரே... அதுக்குள்ளே எங்கே போனார்?'' ""சுவாமி... சுவாமி... சுவாமி...'' ""அய்யய்யோ...'' ""அடக்கடவுளே... எல்லாம் கனவா?'' ""கனவில் கண்டாலும், உன்னைக் கண்ணாரக் கண்டேனே... ஏழுமலையானே... வெங்கடாஜலபதி பெருமானே...'' - கலவை சண்முகம் (டிசம்பர் 2011) வயது : 56, கல்வி: பி.ஏ., பணி: "ரத்னபாலா' குழந்தைகள் மாத இதழில், 13 ஆண்டு காலம் உதவி ஆசிரியராக இருந்துள்ளார். அதன்பின், எண்ணூர் அசோக் லேலண்ட் கம்பெனியில், 22 வருட இயந்திர பணி. சென்னை வானொலியில் இவர் எழுதிய கவிதை, நாடகங்கள், சிறுகதை ஆகியவை ஒலிபரப்பாகியுள்ளன. எழுத்துத் துறையில் பல பரிசுகளை பெற்றுள்ளார். இவர் எழுதிய படைப்புகள், பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email

1 thought on “கடவுள்

  1. சார்,
    சூப்பர் திருப்பதி சென்று திரும்பும் எல்லோர் மனதிலும் எழும் எண்ணங்களை அப்படியே எழுதி இருக்கிறீர்கள்

    யாரிடம் சென்று முறையிடுவது என்று உண்மையில் புரியவே இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *