கடவுள் பாதி மிருகம் பாதி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 4,680 
 

ரஜனி திரைப்படத்தின் இரண்டாவது ஆட்டம் முடிவு. கொட்டிக் கவிழ்த்த நெல்லிக்காய்கள் போல் மக்கள் கூட்டம் கொளேரென்று திரையரங்கிலிருந்து சிதறியது.

சேகரும் அதில் ஒருவனாக வெளி வந்தான்.

நேற்று வெளியான படம். நண்பன் ஒருவன் அதில் நடித்திருப்பதால் பார்த்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்.

அண்ணா நகர் உதயத்திலிருந்து தியாகராய நகர் பாண்டி பஜார் பக்கம் போக வேண்டும்.

ஆட்டோவைப் பார்த்தான் சேகர். நிற்பவைகளில் மக்கள் முண்டி அடித்துக் கொண்டு ஏற……இறுதியாக நின்றதில் ஓட்டுநர் ஏறினான்.

“சார். ஆட்டோ பாண்டி பஜார் வருமா..?”கேட்டான்.

“நானே படம் பார்த்த வெறுப்புல இருக்கேன். வராது. போ.”கடுப்படித்தான்.

அக்கம் பக்கம் கூட்டம் குறைவாக இருப்பதைப் பார்த்த சேகருக்குப் பயம்.

“சார்ர்ர்ர்…..”இழுத்தான்.

“போய்யான்னா…..!!”அடுத்துப் பேசினால் அடித்து விடும் கோபத்தில் கத்தி வண்டியை விட்டான் அவன்.

சேகர் படம் எடுத்தவனை நொந்தான். நடித்த நண்பனை நினைத்து பல்லைக் கடித்தான்.

உதயத்தில் விளக்குகள் நிறுத்தப்பட்டது. அங்கு இவனைத் தவிர வேறு யாருமில்லை. கோயம்பேடு சாலையில் ஆள் நடமாட்டமில்லை.

மின் விளக்குகள் எல்லாம் எரிந்தாலும் சாலை வெறிசோடல் ஆளைப் பயமுறுத்தியது.

நடக்கத்தான் வேண்டும் வேறு வழி இல்லை.

நடந்தான்.

காட்டு வழி பயணமென்றால்”ஹே..! என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…!”பாட்டுப் பாடி செல்லலாம்.

இங்கே அப்படி செல்ல முடியாது.

இது இந்தியாவின் பெரிய நகரம். மாநகராட்சி. ரோந்து வரும் போலீசார்…

“என்ன தனி ஆளாய்ப் பயணம்..? எவனைப் போட்டுத் தள்ளிட்டு வர்றே..? எங்கு திருடிட்டு வர்றே..? வா.. காவல் நிலையத்திற்கு..” – . இழுத்துச் சென்று விசாரிக்க வாய்ப்புண்டு. இல்லை கேசுக்காக அழைத்துச் செல்லவும் செய்வார்கள் ! ‘ நினைக்க நெஞ்சுக்கூடு படபடவென்று சிறகடித்தது.

தொட்டுப்பார்த்தான்.

லப் – டப் ஏறி இறங்கியது. சத்தம் இவனுக்கும் கேட்டது.

அடக் கிரகமே..! தெருவில் சுற்றும் நாட்டு நாய்கள் கூட இல்லை குரைக்க.! இதுவே கிராமமாக இருந்தால் ஒரு நாய் குரைத்து ஒன்பது நாய்களை உசுப்பும். எல்லாம் ஓலமிடும். வீடுகளில் திருடிக்கொண்டிருக்கும் திருடர்கள் கூட ‘ ஆள் வருகிறார்கள் ! ‘ என்கிற எச்சரிக்கையில் பதுங்குவார்கள். – நினைத்துக் கொண்டே நடந்தான்.

தூரத்து மெர்குரி விளக்கு கம்பத்தின் கீழ் வெளிச்சத்தில் ஒரு உருவம் குத்துக்காலிட்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது. முகம் தெரியவில்லை. அழுக்கு வேட்டி, அழுக்கு சட்டை. நாற்பது வயது தோற்றம்.

‘ இப்படி தனி ஆளாக ஒருவன் யாரைப் போட்டுத்தள்ளக் காத்திருப்பு..? ! நினைக்கும்போதே நெஞ்சுக்குள் சொரக்கென்று உள்ளுக்குள் தீ பிடித்து நடுக்கம் வந்தது.

விளைவு..?….

ஆளைக் கடந்து போக பயம்.! எப்படிப் போக..?!.. என்று தடுமாற்றம்.

ஒரு கணம் நின்று யோசிக்கவும் தயக்கம்.

‘ பயத்தை வெளிக்காட்டினால் எதிரிக்கு இளக்காரம் பிறக்கும். சாதாரணமானவனுக்கும் சீண்டிப் பார்க்கத் துணிவு வரும்.’ – புரிந்தது.

கடந்து செல்வதைத் வழி இல்லை. துணிந்து நடந்தான்.

“தம்பி ! நில்லுங்க…!”அவனிடமிருந்து குரல் சாதாரணமாகத்தான் வந்தது. ஆனால் இவன் மனம்…

“ஓடு..! ஓடு…!”விரட்டியது.

ஓடினாலும் விட்டுவிடுவானா என்ன..?…

நின்றான்.

“ஒரு உதவி…”

“என்ன..? ”

“மாம்பலத்துக்கு வழி தெரியனும்…”

‘இவன் தெரிந்து கேட்கிறானா..? தெரியாமல் கேட்கிறானா…? – சேகருக்குள் யோசனை.

“ஏன்…?”கேட்டான்.

“போகனும்..”

“கிழக்கு மாம்பலமா..? மேற்கு மாம்பலமா…? ”

“பாண்டி பஜார் எங்கிருக்கு..? ”

‘சரிதான் ! ஆளை வளைக்கிறான். ! ‘ – மனது எச்சரித்தது.

“என்ன யோசனை..? ”

வினை வேண்டாம். சொல்லிவிடவேண்டியதுதான். !

“கிழக்கு..!”

“அங்கேதான் போகனும்…”

“இங்கே மேற்கு எது ? கிழக்கு எது…? ”

குழம்பி அமர்ந்திருக்கிறான் போல. ஆள் ஊருக்குப் புதுசு ! – புரிந்தது.

“சென்னைக்குப் புதுசா…? ”

“ம்ம்…”

“எப்படி வந்தீங்க..? பேருந்தா… வேனா..? ”

“லாரி ! ”

“லாரியா..???!!…”

“ம்ம்…லோடு லாரியில வந்தேன். அங்கே இறக்கி விடுறதுக்குப் பதில் இங்கேதான் பக்கம்ன்னு சொல்லி இறக்கி விட்டுடானுங்க. திக்கும் தெரியல. திசையும் தெரியல..”

“எந்த ஊரு..? ”

“மானாமதுரை. ! ”

“நான் மதுரை. மாம்பலத்துல யாரிருக்கா..? ”

“யாருமில்லே. அங்கே போனா பிழைப்புக் கிடைக்கும்ன்னு சொன்னாங்க..”

“யாரு..? ”

“எங்க ஊர்ல…”

‘பாவம் ! மனுசனுக்கு மனுசன். உதவி !’ சேகருக்கு மனம் இளகியது.

“வாங்க. நான் அங்கேதான் போறேன். !`”நடந்தான்.

அவனும் எழுந்து சேகரைப் பின் தொடர்ந்தான்.

“ஐயா.. ! உங்க பேரு.? ”

“கார்த்திகேயன். ! ”

சிறிது நடந்த பின்..

“சார் !”அழைத்தான் கார்த்திகேயன்.

“என்ன..? ”

“ஒரு உதவி..! ”

“சொல்லுங்க..? ”

“வந்து இறங்கினதுமே சகுனம் சரி இல்லே. லாரியோட என் பை போச்சு. எனக்கு இந்த ஊரும் பிடிக்கலை. திரும்பிப் போகனும்..”

“எங்கே..? ”

“என் ஊருக்கு…! ”

“அதுக்கு நான் என்ன செய்யனும்…? ”

“கையில ஒத்த ரூபா இல்லே. பேருந்து செலவுக்கு ஐநூறு கொடுத்து உதவி செய்தால் ஊர் போய் திருப்பிடுவேன். …”

‘ ஆகா !… வழி காட்டி அழைத்து வந்ததற்கு வம்பு. பணம் இழப்பு. ! முகம் தெரியாத ஆள். கொடுத்தால் திரும்பாது. !”மனம் எச்சரித்தது.

“இல்லே கார்த்திகேயன்.”

“சார் ! சாமி சாத்தியமா நான் சொல்றது உண்மை. பையை மறந்து லாரியிலேர்ந்து இறங்கிட்டேன். அவனும் போய்ட்டான். அது திரும்பாது. போனது போனதுதான். நான் ரொம்ப யோக்கியன் சார். கேட்பார் பேச்சைக் கேட்டு இங்கே வந்து இறங்கிட்டேன். கண்டிப்பா நான் ஊர் திருப்பிடுவேன். !”அவன் கெஞ்சாத குறையாகச் சொன்னான்.

“இல்லே கார்த்திகேயன். ! நான் பணம் இல்லாமத்தான் ஆட்டோவுல போகாமல் நடக்கிறேன். ! ”

“சார் ! தயவு பண்ணுங்க சார். நீங்க இருக்கும் இடம் போய் எடுத்துக் கொடுத்தாலும் சரி. வர்றேன்.”கெஞ்சினான்.

ஒரு திருப்பத்தில் ரோந்து காவலர்கள் இருவர் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.

“சார் ! ரொம்ப பசி. ஒரு டீ…!”கார்த்திகேயன் பரிதாபமாகக் கேட்டான்.

“வாங்க சாப்பிடலாம்..! ”

கடை அருகில் சென்றார்கள்.

“யாரடா நீங்க..?”ஒரு காவலர் குரல் கொடுத்தார்.

இது அவர்களுக்கே உள்ள குணம்.

“உதயத்துல படம் பார்த்துட்டு வர்றோம் சார். டிக்கெட் காட்டட்டுமா…?”சேகர் மேல் சட்டை பையில் கையை விட்டான்.

“வேணாம். ! ”

அவர்கள் டீ குடித்துவிட்டு புல்லட்டில் ஏறி சென்றார்கள்.

“மாஸ்டர். ! ரெண்டு டீ…”என்றான் சேகர்.

“பண்ணு சாப்பிடுறீங்களா கார்த்திகேயன்..”

“கொடுங்க சார். ”

பாட்டிலிருந்து நான்கு எடுத்துக் கொடுத்தான்.

இருவரும் முடித்துவிட்டு நடந்தார்கள்.

சிறிது தூரம் நடந்ததும்….

“ஏய் ! நில்லு…”கார்த்திகேயன் குரல் மரியாதைக் குறைவாக ஒலித்தது.

சேகர் திடுக்கிட்டு நின்றான்.

“என் கையைப் பாரு..”

சேகர் பார்த்தான். ஒரு சாண் நீளத்திற்குக் கத்தி !!

“கத்தி…..!!”சேகர் கொஞ்சமாக அலறினான்.

“உஸ்ஸ்..! சத்தம் போடக்கூடாது. உன்னை டீ வாங்கி கொடுக்கச் சொன்னதே உன் பர்ஸ்ல பணம் இருக்கான்னு பார்க்கத்தான். நீ டீக்கு பணம் எடுக்கும்போதே…இரண்டாயிரம் ஐநூறு தாட்கள் தலை நீட்டிச்சு. பார்த்தேன். ஒழுங்கு மரியாதையாய் ஆயிரம் கொடு. ஊர் போய் திருப்புறேன். கொடுக்கலைன்னா குத்திடுவேன். ! ”

உயிர் பயம். சேகர் வேறு வழி இல்லாமல் மூவாயிரத்தில் இரண்டு ஐநூறு தாட்கள் ஆயிரம் எடுத்துக் கொடுத்தான்.

வாங்கிய கார்த்திகேயன்….

“பணம் திருப்ப உன் விலாசம்….?”பார்த்தான்.

“வேணாம் வைச்சுக்க…”

“வேணாம். உன் அடையாள அட்டை. விசிட்டிங் கார்டு பார்த்தேன் எடு. ”

எடுத்துக் கொடுத்தான்.

அப்போதுதான் எதிர்பாராத விதமாக ஒரு ஆட்டோ வந்து நின்றது.

“சார் சவாரியா…?”கேட்டான். ஓட்டுநர்.

“ஆமாம். கோயம்பேடு போ..”சொல்லி கார்த்திகேயன் அதில் ஏறினான்.

அது விரைந்து செல்ல…

சேகர் அப்படியே திக் பிரமைப் பிடித்து நின்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *