கடவுளின் குரலில் பேசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 21, 2011
பார்வையிட்டோர்: 11,856 
 

ஜான் வீடு திரும்பும் வழியில் விசாரணைக்காரர்களால் விசாரிக்கப்பட்டான். அவர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஜானிடம் பதிலிருந்தது. அவர்கள் அந்த நாடகத்தைப் பற்றியே திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மாலையும் அந்த நாடகம் சதுக்கத்தில் நடைபெறுகிறது. தினமும் அதில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. முதல் நாள் அன்று ஜான் ஒருவன் மட்டும் அந்த சதுக்கத்தில் சிறு மேஜையைப் போட்டு, ஏராளமான காகிதங்களை வைத்து எழுதிக்கொண்டிருந்தான். பொது இடத்தில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தான்.

பொது இடத்தில் உட்கார்ந்து எழுதும் அவனை மக்கள் வேடிக்கை பார்த்துப் போனார்கள். கேட்கும் சிலரிடம் இது தனிநபர் நடிக்கும் நாடகம் என்றான். நாடகத்தின் ஒரே பாத்திரம் ஜான். நாடக ஆசிரியன் பலகாலமாக முயன்று நாடகம் எழுதமுடியாமல் தோற்றுக்கொண்டிருக்கிறான். நாடகம் எழுதுவதற்கான காகிதங்கள் குரோட்டோவெஸ்கி நாடக அரங்கு பற்றிய புத்தகம், வில்ஸ் பாக்கெட், மை பேனாக்கள், சிவப்புநிற சிகரெட் லைட்டர், அவன் லைட்டரை கொளுத்துவதும் சிகரெட்டை எடுக்க முனைவதும், பின் விட்டுவிடுவதும் கண்டு மாபெரும் அபத்த நாடகம் என மக்கள் சிரித்தார்கள்.

ஜான் நாடகம் எழுத பேப்பர்களை வேகமாக எடுப்பான். மக்கள் கூட்டம் சிரிக்கும். பின் அவன் நாடகப் பாத்திரங்கள் பெயரை வரிசையாக எழுதுவான். அவற்றை வாய்விட்டுப் படிப்பான். இப்படியாக தனி ஆளாக நடந்த ஜானின் நாடகத்தின் இரண்டாம் பாத்திரம் இரண்டாம் நாள் கிடைத்தது. இரண்டாவது பாத்திரமாக ஒருவன் மாலைப்பேப்பரை வாங்கிக் கொண்டு வந்து ஜானுக்குப் பக்கமாக உட்கார்ந்து தினமும் படித்தான். சுவாரஸ்யமான அரசியல் தலைப்புச் செய்திகள். நடிகைகளின் ரகசிய உறவுகள், குரங்குகுசலா, சிந்துபாத்தின் கன்னித் தீவு இப்படி. ஜான் நாடகம் எழுதுவதை நிறுத்தி விட்டுப் பேப்பர் படிப்பவனோடு சிறிது நேரம் சேர்ந்து படிப்பான். அவர்கள் அரசியல் சர்ச்சை செய்து கொள்வார்கள்.

இப்படியாக ஜானின் நாடகத்தில் இப்போது நாற்பது பாத்திரங்கள் சேர்ந்துவிட்டன. அவர்கள் வருவார்கள். பேசிக்கொள்வார்கள். ஜான் சொல்வது போலக் கேட்பார்கள், அல்லது தங்கள் வேலைகளைச் செய்வார்கள். ஜான் பாத்திரங்களை ஒழுங்குபடுத்துவதில்லை. பாத்திரங்கள் தங்கள் வசனங்களைத் தாங்களே பேசினார்கள். ஒருவர் கணக்கிட்ட படியிருந்தார். இன்னும் சிலர் பாடம் நடத்தினார்கள். தினமும் புதுப் புதுப் பாத்திரங்கள் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. பாத்திரங்கள் அதிகமான ஒரு நாளில் இரண்டு காவலர்கள் வந்த ஜானிடம் விசாரித்தார்கள்.

“என்ன நடக்கிறது இங்கே”

‘நாடகம்’

‘யார் எழுதியது’

‘யாரும் எழுதவில்லை’

‘பின்னே’

“அவர்களாக வருகிறார்கள், நடிக்கிறார்கள். சொல்லப் போனால் நீங்கள் இருவரும்கூட இரண்டு பாத்திரங்கள்” தான்.

“நாங்கள் விசாரிக்க வந்திருக்கிறோம்”

விசாரிக்கும் இரண்டு பாத்திரங்கள்”

‘நாங்கள் நினைத்தால் உன்னை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம், கைது செய்யக் கூட முடியும்’

‘நாடகம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்’

அவர்கள் அவர்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டார்கள். சில பாத்திரங்கள் தங்கள் வேலைகளை விட்டு இதை வேடிக்கை பார்த்தன. காவலர்கள் பேசாமல் திரும்பிப் போய் விட்டார்கள். மறுநாள் மாலையிலும் வந்தார்கள். வந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாடகத்தில் புதிதாக வந்து சேர்ந்திருந்த ஒரு பாத்திரம் ஓடியபடியிருந்தது. இரண்டு அரசியல்வாதிகள் பேசிக் கொண்டார்கள். ஜானிடம் காவலர்கள் வந்து நின்றார்கள். அவர்கள் முகம் வெளுத்துப் போயிருந்தது.

‘இது நாடகமில்லை. நீங்கள் எதிர்ப்பாளர்கள்’

‘தெரியவில்லை எனக்கு’

‘நீ என்ன செய்கிறாய்’

‘நாடகம் எழுதுபவன்’

‘இதன் முன்பு என்ன நாடகம் எழுதியிருக்கிறாய்.

‘சவரக் குறிப்புகள்’

அவர்கள் சிரித்துவிட்டார்கள். ஜான் திரும்பிப் பார்த்த போது சதுக்கம் எங்கும் ஆட்கள் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டிருந்தார்கள். சிலர் குடைகளை விரித்த படி முன்னும் பின்னும் நடந்தார்கள். ஜான் காவலர்களிடம் திரும்பினான். அவனுக்கு அவர்கள் நாடகப் பாத்திரங்கள் போலவே தோன்றின. நாடகப்பாத்திரங்கள் சொல்லும் வசனத்தைத்தான் குறித்துக்கொள்ள வேண்டுமென முயற்சி செய்தான். காவலர்கள் விசாரித்ததை அவன் பேப்பரால் குறித்துக் கொண்டதை காவலர்கள் கண்டார்கள். காவலர்கள் அந்தப் பேப்பரை பிடுங்கிக் கொண்டார்கள். பின் அவனிடம் கேட்டார்கள்.

‘எங்கே அந்த நாடகப் பிரதி’

‘வீட்டில் இருக்கிறது’

‘வா, போகலாம்…’

‘நாடகம் இன்னமும் முடியவில்லை.’

காவலர்கள் சதுக்கத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள். சதுக்கம் எங்கும் வெளிச்சம் பரவியது. நேரமாகிக் கொண்டே போனது. சோடியம் விளக்கு எரிய துவங்கியது. அவரவர்களாக கலைந்து போகத் தொடங்கினார்கள். வெகு நேரம் வரை பேப்பர் வாசிப்பவர்களும் ஜானும் மட்டுமே இருந்தார்கள். கடைசியாக அவன் பேப்பரைச் சுருட்டி கையிடுக்கில் வைத்துக்கொண்டு ஜானிடம் சொன்னான்.

“எவ்வளவோ நடக்கிறது வெளியே”

ஜான் அவனுக்கு பதில் சொல்லவில்லை. காவலர்களைக் கடந்து போகும் போது அவன் மாலை பேப்பரை ஆட்டி வணக்கம் வைத்துப் போனான். ஜான் மேஜையைத் திருப்பி ஒரு பழைய கட்டிடத்தின் உள் கொண்டு போய் போட்டு வைத்தான். காவலர்கள் அவனோடு வெளியே வந்தார்கள். ஜான் சிகரெட் பிடித்தான். அவர்கள் ஜானிடமிருந்து சிகரெட்டு வாங்கிக் கொண்டார்கள். பின் அவர்களில் ஒருவன் கேட்டான்.

“நாங்களும் இந்த நாடகத்தில் நடிப்பவர்கள் என்கிறாயா?”

“இருக்கலாம்”

“எனக்கு அப்படித்தான் படுகிறது”

மற்றொரு காவலர் முறைத்தார். உடனடியாகப் பதில் சொன்னார்.

நாம் எல்லா விபரங்களையும் சேகரித்து அனுப்ப வந்திருக்கிறோம். பாத்திரங்கள் அல்ல

“அப்படியானால் அங்கே நடந்தது நாடகல்ல.”

“பின் என்ன அது”

அவரவர் காரியங்களை அவரவர் செய்கிறார்கள். அதைப் பார்க்கும்போது நமக்கு அலுப்பும் எரிச்சலும் வருகிறது. குறிப்பாக அந்தடைப்பிஸ்ட் கணக்குப் பார்ப்பவன், வாத்தியார், கேஷியர்.. சே..

நீ அவர்களோடு சேர்ந்து பேசுகிறாய்.

காவலர் என்பதும் பாத்திரம்தான்…

“உளறாதே, நீ அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட ஆள். ஊழியன்

ஜான் அவர்கள் பேசுவதைக் கேட்டபடி வந்தான். பின் அவர்களிடம் திரும்பிச் சொன்னான்.

“பாத்திரங்கள் பேசிக் கொள்வதுபோல நிஜ வாழ்க்கையில் கூட எவரும் பேசிக் கொள்வதில்லை… அற்புதம் மிக அற்புதம்.

“உளறாதே.. இது நிஜவாழ்க்கை.. உன் நாடகம் அல்ல. அத்தோடு நாங்கள் நடிகருமல்ல″

“நடிகர்கள் எப்போதும் நடிகர்களாகவே இருப்பதில்லை. அவர்களும் வீடு திரும்பி விடுகிறார்களே”

“எங்களைக் குழப்பி… நீ எங்களை உன் நாடகத்தில் நடிக்க வைக்க பார்கிறாய்.. அப்படித்தானே உன் வீடு எங்கே”?

ஜான் அவர்களிடம் பேசவேயில்லை. மூவரும் நடந்தார்கள். இருட்டடைந்த சந்துகள்; வெங்காய வாடைவீசும் தெருக்கள். நிழல்கள் சரிகின்றன. வெளிச்சம் மங்கி நிற்கும் வீடுகள். காரைகள்பெயர்ந்த குடியிருப்புகள். மரங்கள் கூட இலைகள் உதிர்ந்து நின்றன. நாய்கள் குரைக்காது பின்தொடர்கின்றன. தெருவை அடைத்தபடி கிடக்கும் கோவில்மாடுகள். யார் வீட்டிலோ கேட்கும் பாட்டுச்சத்தம். பிள்ளைகள் பாடம் வாசிக்கும் சப்தம். காவலர்கள் மீண்டும் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

“நாம் வீடு திரும்ப வெகு நேரமாகிவிடும்.”

அவர்களின் சலிப்புத் தாங்கமுடியாததாகியிருந்தது. ஜான் சிறிய ஓட்டுவீட்டில் இருந்தான் ஜானின் மனைவி உறங்கியிருந்தான். கதவைத் தட்டியதும் திறந்து வந்தாள். அவள் காவலர்களைப் பார்த்துவிட்டு உள்ளே வந்து லைட்டைப் போட்டுக் கேட்டாள்.

“இப்போதுதான் நாடகம் முடிந்ததா…”

“இன்னும் முடியவில்லை”

அவர்கள் யார்.. நடிப்பவர்களா…

நாடகப்பிரதிவேண்டி வந்திருக்கிறார்கள்..

அவள் மூலையிலிருந்த பானையிலிருந்து தண்ணீர் குடித்துவந்தாள். பின் அவனைப்பார்த்துச் சொன்னாள்.

“உறக்கம் வருகிறது எனக்கு. சீக்கிரமாக அவர்களை அனுப்பு”

அவர்கள் வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். மரமேஜை கிடந்தது. பெரிய கிதார் ஒன்று. சில நாடகப் பொருட்கள், பேப்பர்கள், பூஜாடி, மீன் தொட்டி, காலி சிகரெட்பெட்டிகள், வர்ணக்காகிதங்கள். அவர்கள் இருவரும் ஸ்டூலில் உட்கார்ந்தார்கள். ஜான் பழைய பெட்டியில் தேடி நாடகப்பிரதியை எடுத்துவந்தான். பழுத்துப்போன காகிதத்தில் கறுப்பு மசியில் எழுதப்பட்ட நாடகம். அவர்கள் அந்தக்காகிதத்தை எடுத்துப்படித்துப்பார்த்தார்கள். பின் சுருட்டிக் கொண்டார்கள். ஜான் அவர்களுக்கு அந்த நாடகத்தைப் பற்றி விளக்கி பேசினான்.

‘மூன்று பாத்திரம் மட்டும்தான். ஒன்று கடவுள், மற்ற ஒன்று சவரக்காரன். மூன்றாவது நபர் காத்திருப்பவன்… நாடகம் கடவுளுக்கும் சவரம் செய்பவனுக்கும் நடக்கும் உரையாடல். உங்களுக்கே தெரியும் தானே… முகத்தில் மயிர் இருப்பது எந்தக் கடவுளுக்குத் தான் பிடிக்கும் சொல்லுங்கள். மழிக்கப்பட்ட கடவுள் முகம்தான் எல்லாருக்கும் வேண்டும்… இங்கே கூட அப்படித்தான். உங்களுக்குத் தெரியும்தான்’

அவர்கள் அவளிடம் உரக்கப் பேசினார்கள்.

நாங்கள் இதை நாடகம் போடக் கேட்கவில்லை… விசாரணைக்காகக் கேட்கிறோம்.. இதன் பிரதிகள் பல இடங்களுக்கும் அனுப்பப்படும்… நிச்சயம் உனக்குத் தண்டனை கிடைக்கும்.

இதை நானாக எழுதவில்லை. சவரம் செய்யும் இடத்தில் பேசிக்கொண்டவை. இவை நாவிதனின் வசனங்கள் நான் அவற்றைக் குறித்து வந்தேன்… அவ்வளவு தான்.

அவர்கள் திரும்ப ஒரு முறை பிரதியைச் சரிபார்த்துக் கொண்டார்கள். பின் அவர்கள் கிளம்பிப் போனார்கள். நள்ளிரவாதலால் தெருவில் ஜன நடமாட்டமில்லை. வெறிச்சோடிய தெரு. காவலர்களில் ஒருவன் பேசினான்.

“அந்த ஆளை என்ன செய்யப்போகிறது அரசாங்கம்.”

“நமக்கு சம்பந்தமில்லாதது”

“நாளையும் நாம் சதுக்கத்திற்கு வரவேண்டுமா?”

“தினமும் நம் வேலை அதுதான்…”

ஞாயிற்றுக் கிழமையன்று ஜானின் நாடகத்தில் நூறு பேர்கள் நடித்தார்கள். இடைவிடாத சப்தம், கூக்குரல், நிறைய பெண்கள், பெண் பாத்திரங்களில் சில ஜானிடம் வந்து நின்று ஏங்கி கேட்டன.

காதல் நாடகம் எழுதேன் ஜான்.

எனக்குத் தெரியாதது அது.

ஜான் காதல் இல்லாத நாடகம் வேண்டாம்… இளம் உள்ளங்களை வதைக்கும் காதல் நாடகம் போடு ஜான்

மிகச் சிறந்த நடிகையாக இருக்கிறாய் நீ…

அந்தப் பெண் வெட்கப்பட்டாள் ஜானிடம் ஒருவயதான நபர் வந்து நின்று பேசினார்.

ஜான் என் கண்ணே… நான்தான் அப்பா…

யாருடைய அப்பா…

நாடகத்தில் வரும் அப்பா… நான். நீ நாடகங்களே பார்த்ததில்லையா..

இருக்கலாம்.

அப்பா பாத்திரம் ஜானை விட்டு விலகிப்போனதும் ஜான் காகிதங்களைப் புரட்டினான். கோழிமயிர்சொருகி, வைக்கோல் தொப்பி வைத்த பாத்திரம் ஒன்று மஞ்சள் சட்டையிட்டு கறுப்புப் பேண்ட்டை கால்வரை மடித்துவிட்டு, பழையகால பூட்ஸ்போட்டு, கிடாரோடு வந்து நின்று சிரித்தது. அவன் கிடாரிலிருந்து சப்தம் விநோதமாக வந்தது. அவன் ஜானிடம் மண்டியிட்டுக்கேட்டான். ஜான் என்பிரிய நண்பனே, நான் தான் சாகசக்காரன். கோமாளி, என் பாத்திரம் என்ன சொல் ஜான். அவனைப் பார்த்ததும் ஜானுக்குச் சிரிப்பு வந்தது.

உனக்கு எதற்குப் பாத்திரம். உன் சாகஸங்களை நீ காட்டுவது தானே உன் இயல்பு. உன்னை நான் பழைய நாடகங்களில் பார்த்திருக்கிறேனே என்றான். கிடாரிலிருந்து இனிய சப்தம் வர அவன் பேசினான். என் தாத்தாவின் தாத்தாவின் தாத்தா கப்பில் நாடகம் நடித்தவர். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எல்லாம் அவர் தான் நடித்தார். அவரிடம் ஹாம்லெட்டின் கத்தி இருந்தது. ஒத்தல்லோவின் கர்சீப் இருக்கிறது. நீண்ட கால் கொண்ட மதுக் கோப்பைகள் இருந்தன. ஒத்தல்லோவின் கர்சீப்பை தான் என் தாத்தா தலையில் கட்டிக்கொண்டு வருவார் ஒத்தல்லோ என்று கறுப்பனின் இசைப்பாடல் இதோ. படுவேகமாக வாசித்தான். கூட்டம் சிரித்தது. அவன் தன் வைக்கோல் தொப்பியை எடுத்துச் சுழற்றி வீசினான்.

ஜானின் பேனா பலவாறாக முயன்று புதிய நாடகம் எழுதப்பார்த்தது. யாருடைய கதையை நாடகமாக்குவது என யோசித்தான். சிறையில் இறந்து போன நாடகக் காரனைப்பற்றிய நாடகத்தை எழுதலாம் என நினத்தான். அவனுக்கு நாடகத்தில் கோரஸ்பாடுவது பிடித்திருந்தது. ஜானுக்கு கோரஸ் பாடல்கள் பிடித்திருந்தன. கோரஸ்காரர்கள் சுழன்று சுழன்று பாடும் நாடகம் எழுத விரும்பினான். சதுக்கத்தில் வெயில் மிஞ்சியிருந்தது. இன்றைக்கு நிறைய பாத்திரங்கள் நடிக்கிறார்கள் என நினைத்துக் கொண்டான். கடற்கரையில் உலவும் யானை என ஒருவன் அவனாக நினைத்துக் கொண்டு கைகளை உயரே தூக்கி பிளிறிக்காட்டி நடித்துக்கொண்டிருந்தான். அன்றைக்கு வேடிக்கைப் பார்க்க குழந்தைகள் நிறைய வந்திருந்தன. அவை ஜான், ஜான் எனக் கூச்சலிட்டன. சிறு கண்ணாடி கொண்டு ஜான் மீது வெயிலைப் பாய்ச்சி கண்களைக் கூச வைத்தன.

ஜான் சதுக்கமெங்கும் அலைந்தான். அவ்வளவு பெரிய நகரத்தில் மக்கள் கூட்டம் நிறையவேயிருந்தது. எல்லாவற்றையும் ஆட்கள் விசாரித்தார்கள். ஜானிடம் அப்பா பாத்திரம் வந்தது.

ஜான்… ஆசிர்வதிக்கப்பட்ட மகனே… என்னை என்ன செய்யப் போகிறது… வயதான அப்பாவிற்கு தனிமை தானா.

நீங்கள் பேசுவது எனக்குப் புரியவில்லை..

நீ நாடகம் எழுதுபவன், ஜான். நான் பாத்திரம்…. பலரின் நாடகத்திலும் வந்த பாத்திரம்…

நீங்கள் மட்டுமா…

நான் மட்டுமில்லை. அம்மா, அக்கா, காதலி, காதலன், நீதிபதி, அச்சுகா; பாலி எல்லாம் பாத்திரங்கள் என் ஜானே… நான்லியர்… எனக்கு மூன்றுபெண்கள் உண்டு.

நான் என்ன செய்ய வேண்டும்..

அப்பாவை எதிர்க்கும் மகன் நாடகம் எழுதாதே ஜான், அப்பா வயதானவர், நோயாளி சிடுசிடுப்பானவர். இப்படிவசனம் எழுதாதே ஜான்… அப்பா நல்லவர், , ஜான்.

போய்விடுங்கள் இப்போது நான் நாடகம் எழுத வில்லை.

ஜான் என்னை மறக்காதே.. ஜான்.. ஜான்.. பலகுரல்கள் கேட்டன. ஜான் மேஜைமீது அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் கூட்டத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் சிலர் கேலி செய்தார்கள். ஜான் சிகரெட் பற்றவைத்துக் கொண்டான். நாயை வைத்துக் கொண்டு உலவும் ஒருவயதானவன் கூட இன்றைய நாடகத்தில் இருந்தான். ஜானிடம் ஒருவன் கேட்டான்.

இந்த நாடகத்தின் பெயரென்ன..

கூட்டம்

பேப்பர் வாசிக்கும் ஜான் பக்கம் திரும்பிக் கேட்டான்.

எங்கே நடக்கிறது கூட்டம். யார் பேசுகிறார்கள்?

தெரியவில்லை.

மாலைப்பேப்பரில் செய்திவரவில்லையே… இரண்டு காணாமல் போன பையன்கள் படம்தான் வைத்திருக்கிறது.

ஜான் காவலர்கள் வந்து கொண்டிருப்பதை பார்த்தான். உடன் வேறு ஒரு ஆள் வேறு வந்தான். அவன் உயர மானவனாக இருந்தான். அவர்கள் சதுக்கத்தின்பக்கம் வந்து நின்று கேட்டார்கள்.

ஜான் உன் நாடகத்தை நிறுத்து.

நான் எந்த நாடகமும் நடத்தவில்லை.

உன் கூட்டத்தை நிறுத்து.

அது என் வேலையில்லை… உங்களுடையது.

காவலர்கள் உரக்கக்கத்தினார்கள். சதுக்கம் விரைவில் காலியானது. உயரமான நபரின் கையில் நாடகப்பிரதி இருப்பதை ஜான் பார்த்தான். உயரமான நபர் மீசை மழிக்கப்பட்டு பெரியகண்களோடு இருந்தார். அவர் ஜானைப் பார்த்துக் கேட்டார்.

இது உன்னுடைய நாடகம்தானே.

இல்லை .. குறிப்பு…

சவரக்குறிப்பு… இதை நிகழ்த்திக்காட்டு… எதுவுமே புரியவில்லை வாசிக்க.

என்னிடம் நடிகர்கள் இல்லை.

எங்கே போனார்கள்.

நான் நடிகர்களைத் தேடுவதுமில்லை… அவர்கள் என்னுடன் நடிப்பதுமில்லை.

இப்போது என்ன செய்வது.

நீங்கள் நினைத்தால் நாம் மூவரும் நடிக்கலாம்… மூன்று பாத்திரங்கள்… நீங்கள் கடவுள் நான் நாவிதன்.. மூன்றாம் ஆள் காத்திருப்பவன்.

சதுக்கத்தில் பலர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஜான் தன்னுடைய சட்டையை கழட்டிவைத்துவிட்டு தரையில் உட்கார்ந்தான். அவன் எதிரில் இரண்டு கல்லை தூக்கிப்போட்டு அதிகாரியை உட்காரச்சொன்னான். மற்றொரு ஆள் தள்ளி நின்றான்.

ஜான் பாக்கெட்டிலிருந்து சிறிய கத்தியை எடுத்து வைத்துக் கொண்டான். அதிகாரியின் சட்டையும் கழட்டப்பட்டது. ஜான் அவருடைய முகத்தைக் கைகளால் தடவிவிட்டுக் கேட்டான்.

கடவுளே உங்கள் முகம்தான் எவ்வளவு வழவழப்பானது… நீங்கள்தானே எல்லாவற்றிற்கும் அதிகாரி.. ஜானின் நாடகத்தில் கடவுளுக்கு வசனம் இல்லை. கடவுளின் மொழி பற்றி யோசிக்க யோசிக்க யோசிக்க ஜானுக்குக் குழப்பமே மிஞ்சியது. அதனால் கடவுள் தலையை மட்டும் ஆட்டினார். காத்திருப்பவன்தான் அதிகம் பேசினான். காத்திருப்பவன் ஒரு கைதியைப்போல, குடும்பஸ்தனைப்போல கல்லூரி மாணவனைப்போல பல குரலிலும் பேசினான். ஜானின் கத்தி கடவுளின் கன்னங்களில் உரசியது ஜான் இப்போது நாவிதனாகவே மாறிப் போயிருந்தான். அவன் குரல் உயர்ந்து கேட்டது.

நீசத்தனமானவனே… உன் பெயர் கடவுளா… முட்டாள்.. சவரக்கத்தியின் முனையால் எந்த சரித்திரத்தையும் மாற்ற முடியும் ததெரியுமா.. உன் பெயர் என்ன? கர்னலா… சக்கரவர்த்தியா, எண்ணெய் வயலுக்கு சொந்தக் காரனா, உளவாளியா யாராயிருந்தாலும் சவரக்கத்தியின் நுனியில் உன் தலை எப்போதும் இருக்கிறது தெரியுமா…

காத்திருப்பவன் அவசரப்படுத்தினான்.

இன்னுமா சவரம் செய்கிறாய். நேரமாகிறது… சினிமா போகவேண்டும். காதலியைச் சந்திக்கவேண்டும்.. தப்பிக்கவேண்டும்.. வேகம்..

கடவுளகாக இருந்த அதிகாரியின் முகம் வெளுத்துக் கொண்டு வந்தது. சதுக்கத்தில் ஆட்கள் குறைந்து கொண்டிருந்தார்கள். சோடியம் விளக்கு வெளிச்சத்தில் ஜானின் கண்கள் மின்னின. அதில் இனம் புரியாத குரூரம் தோன்றுவதைக் கண்ட அதிகாரி சப்தமிட்டான். ஜான்… நாடகம் போதும்.. நிறுத்து

கடவுளுக்குப் பேச உண்மையில்லை.. இன்னமும் சவரம் பாக்கியிருக்கிறது. காத்திருப்பவன் ஜானின் முதுகில் அறைந்து பேசினான்.

கிழப்பிணமே.. அவசரமாக சிரைத்துவிடு.. அவசரம் ஜானின் கத்தி அதிகாரியின் தொண்டையின் கீழே போனது. ஜானின் கண்களை அவர் பார்த்தபடியிருந்தார். ஜான் சரால் என ஒரு இழு இழுத்தான். ரத்தம் பெருகியது காவலர்கள் தன்னிலை பெற்றார்கள்.

ஜான் .. டேய்… என்ன செய்கிறாய்.

அதிகாரி ஜானை எட்டி உதைத்தார். ஜான் தள்ளிப் போய் விழுந்தான். அவர்கள் ஜானை பிடித்துக் கொண்டார்கள். அதிகாரி  கர்சீப்பால் கழுத்தை ஒத்திக்கொண்டார். ஜான் முகத்தை உலுக்கிக் கேட்டார். ஜான் தலையை திருப்பாது சொன்னான்.

நாடகம் அது.

என்ன நாடகம்… மடையனே.. உன்விரல் நகங்களை பிடுங்கினால் தான் உனக்கு சொரனை வரும்.

அவர்கள் ஜானைத் தள்ளிக் கொண்டுபோனார்கள். ஜானின் மேஜை, பேப்பர் அப்படியே கிடந்தது. ஜான் தெருவில் நடக்கும் போது கூட நாடகத்தில் நடிப்பது போலவே அவனுக்குத்தோன்றியது உடன்வரும் மூன்று பாத்திரங்களுடன் தான் போவது போலவேயிருந்தது. ஒருவன் கையில் நாடகப்பிரதியிருந்தது. ஜான் முடிவடையாத தன் நாடகத்தை நினைத்துக்கொண்டே போனான். ரத்தம் வழிந்த இடத்தில் தீயாக எரிந்தது அதிகாரி புலம்பினான் , ஜானோ ஒரு நாடகப் பாத்திரம் போலவே மெதுவாக உடன் நடந்து போனான்.

– ஏப்ரல் 1993 வெளியான இந்த சிறுகதை மலையாளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *