கதையாசிரியர்:
தின/வார இதழ்: இதயம் பேசுகிறது
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 23,310 
 

இவன் கவலையோடு அண்ணாந்து பார்த்தான். மழை வருகிற மாதிரி இருந்தது. இருட்டை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தது வானம். வரும், இன்று மழை வரும். அதன் எல்லா அழகுகளுக்குப் பின்னாலும் இருக்கிற சோகங்களை நினைவுபடுத்துகிற மாதிரி, மழை அதன் சோகங்களுடனும் வரும்.

இன்றும் மழை வந்துவிட்டால் இந்தச் சட்டை காயாமல் போய் விடுமோ என்று பயமாகவும் இருந்தது. நாளைக்கு இன்டர்வியூவுக்குப் போக இந்தச் சட்டையைத்தான் நம்பியிருந்தான். இந்தச் சட்டைதான் கிழிசல் இல்லாமல், காலர் நைந்து போகாமல், கலர் மங்கிவிடாமல் பளிச்சென்று இருந்தது. இதுவும்கூட இவனுடையதில்லை. அண்ணா கொஞ்சநாள் போட்டுக் கொண்டு போவதற்காகக் கொடுத்த சட்டை. இவனது மெலிதான உடம்பிற்கு ஒரு சுற்றுப் பெரிதாக இருக்கிற சட்டை.

இதுவும் இரண்டு நாளாய் மழை ஈரத்தில் உலராமல் கிடந்து புழுங்கிக் கொண்டிருந்தது. இந்தப் புழுங்கலுக்கே ஒரு குமட்டுகிற வாசனை உண்டு. குமட்டலுக்கும் புழுங்கலுக்கும் தப்பித்துக் கொண்டு இந்தச் சட்டை காய்ந்துவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். இரவில் காய்ந்து, காலையில் அயர்ன்பாக்ஸ் சூட்டில் தன்னை நிமிர்த்து கொண்டு இண்டர்வியூவுக்கு போக வேண்டும். இவனும்தான். வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. நெரிசலில் கசங்கி, நம்பிக்கைச் சூட்டில் அவ்வப்போது தன்னை நிமிர்த்துக் கொண்டு என நினைத்துக் கொண்டான்.

மழை நின்று விட்டது. கட்டடத்திற்கு வெளியே ‘ ஹோ ’ வென்று மழை நெய்து நெய்து விசிறுகிற நீர்ச் சேலைகள் அருமையாக இருந்தது. திடீரென்று மழை சிறுத்து, தூற்றலாய்க் குறுகி, நின்றே விட்டது. தெருவிற்கு உயிர் வந்தது. குடைப் பூக்கள் நடமாட ஆரம்பித்தன. இவன் ‘ கருப்பாய் மலர்ந்து … கறுப்பாய் மலர்ந்த ’ என்று மனத்திற்குள் ஒரு கவிதை மாதிரிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். ஆயிரமாயிரம் குடைகள் மட்டும் தெரிகிற ஒரு நெரிசலை வீக்லியிலோ ஃபிலிம் டிவிஷன் டாக்குமெண்டரியிலோ பார்த்த ஞாபகம் கண்முன் வந்தது. இந்த நெரிசலில் தன்னுடைய குடையின்மையை நினைத்துக் கொண்டான். சொட்டச் சொட்ட வந்து நிற்கிற இந்த பஸ் கூட்டத்தில் தொற்றிக்கொண்டு போனால் சட்டை பாழாகி விடும் என்று தோன்றியது. கையிலிருந்த ஃபைலை உயர்த்திக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். நடக்கிறபோது ஜாக்கிரதையாக நடந்தான். தெருவில் போகிற லாரியோ, பஸ்ஸோ சேற்றைத் தெளித்து விடாமல் ஒதுங்கி நடந்தான். நடக்கிறபோது, அலைச்சலும் இரைச்சலுமாய் ஆபீஸுக்கு விரைகிறவர்களைப் பார்த்துக் கொண்டே நடந்தான். உலகத்தில் எல்லோருக்கும் ஏதோ வேலையிருக்கிறது என்று தோன்றியது. வாழ்க்கையில் எதைச் சம்பாதிக்க முடியாமல் போனாலும், நம்பிக்கையை மாத்திரம் இழந்து விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான்.

இன்டர்வியூ ஒன்பதரைக்கு என்று போட்டிருந்தது. அந்த ஆபீஸில் இன்னும் யாரும் வந்ததாகத் தெரியவில்லை. இவனை மாதிரி இன்டர்வியூவுக்கு வந்தவர்கள் காரிடாரில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு ஐம்பது, அறுபது பேர் இருந்தார்கள். பத்துப் பதினைந்து பெண்கள் தனியாய் சைக்கிள் ஸ்டாண்டிலும், சொட்டுச் சொட்டாய் நீர்ப்பூவை உதிர்த்துக் கொண்டிருந்த மரத்தில் கீழேயும் ஒதுங்கி இருந்தார்கள். ஆபீஸ் வாசலில் கணுக்கால் அளவிற்குத் தண்ணீர் தேங்கியிருந்தது. இவன் வழியில் தள்ளித் தள்ளிப் போட்டிருந்த அரை செங்கல்களை மிதித்துக் கொண்டு தாவித் தாவிப் போனான். ஒவ்வோர் அடியெடுத்து வைக்கும் போதும் சட்டையில் மழைத் தண்ணீர் தெளித்து விடக்கூடாது என்று கவனமாக இருந்தான்.

இன்டர்வியூ ஆரம்பிக்கிற வழியாய் இல்லை. காத்திருந்தவர்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகிக் கொண்டே போனது. பதினைந்து இடம் காலியிருக்கிற வேலைக்கு இருநூறு பேரை இன்டர்வியூவுக்கு அழைத்திருப்பதை எண்ணிக் கொஞ்சம் கலைந்து போனான். மேலே வேலையைப் பற்றி நினைக்கப் பிடிக்காமல், வருகிறவர்கள் சட்டைகளைப் பார்க்கத் தொடங்கினான். எத்தனை நிறம் ? எத்தனை விதம் ? எல்லாச் சட்டையிலும் ஏதோ ஒரு மூலையில் சகதிக் கறை அல்லது ஈரம். இவன் தன் சட்டையைக் குனிந்து ஒருமுறை பார்த்துக் கொண்டான்.

நேரம் ஆக ஆக லேசாகப் பசித்தது. காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்பதற்காக, சாப்பிடாமலேயே கிளம்பியிருந்தான். போட்டுக் கொண்டிருக்கிற ஷு காலை அழுத்தியது. லேசாக வலிக்கிற மாதிரி இருந்தது. இவன் சட்டையைக் கருதி சுவரில் சாய்ந்து கொள்ளாமல் நின்றிருந்தான். உட்கார ஈரமில்லாத இடமாகத் தேடினான். அநேகமாக எல்லோரும் நின்றுகொண்டுதான் இருந்தார்கள். பெண்கள்கூட. கொஞ்சம் துணிச்சலானவர்கள் மாத்திரம் ஜன்னல் விளிம்பிலும், கைப்பிடிச்சுவரிலும் தொற்றிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பக்கம் ஒவ்வொருத்தர் போகும்போதும் எழுந்து எழுந்து நிற்க வேண்டியிருந்தது. இன்டர்வியூவுக்கு வந்தவர்கள் உட்கார எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஒரு பெஞ்சு கூடப் போடப்பட்டிருக்கவில்லை.

இவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. வேலை தேடி வந்தவர்கள் என்றால் அவ்வளவு இளப்பமா ? எதற்காக இந்த ‘ இன்ஸல்ட் ? ’ இவர்களால், எப்படி வந்திருப்பவர்களை வெளியில் மணிக்கணக்காக காக்க வைத்து விட்டு உள்ளே அரட்டை அடித்துக் கொண்டிருக்க முடிகிறது ? இத்தனை பேர் நின்று கொண்டிருக்கிற நினைப்பே இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்க முடிகிறது ? Why they are so inhuman

மூன்றரை மணிக்கு மேல் இவனை உள்ளே கூப்பிட்டார்கள். உள்ளே இருந்தவர்கள் எல்லோருக்கும் வழுக்கைத் தலை. ஒருவர் புகைப்படங்களில் பார்க்கிற சர்ச்சில் மாதிரி சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார். இரண்டு பேர் சூட் அணிந்திருந்தார்கள். ஒருவர் ஜிப்பா. மாசு மறுவில்லாத வெள்ளை ஜிப்பா. இவர்களுடைய சட்டைகளில் ஈரமோ, சகதிக் கறையோ இல்லாததைக் கவனித்தான். காலையில் பார்த்த சட்டைகள் ஞாபகம் வந்தது.

பெயர் ? வயது ? குடும்பத்தில் எத்தனை பேர் ?

சொன்னான்.

“ ஸ்வீடனின் தலைநகர் எது ? ”

“ ஸ்டாக்ஹோம். ”

“ கங்கையின் நீளம் என்ன ? ”

“ தெரியாது சார் … ”

“ ஸ்வீடனைப் பற்றித் தெரிந்திருக்கிற அளவுக்கு நம்ப தேசத்தைப் பற்றி உனக்குத் தெரியாது போலிருக்கே … ! ”

இவன் முகம் சிறுத்துப் போயிற்று. காதோரங்கள் சிவந்து கொண்டன. தான் வலியக் கூப்பிடப்பட்டு அவமானப் படுத்தப்பட்டதாகத் தோன்றியது. ‘ விருட் ’ டென்று எழுந்து கொண்டான் … வாசலில் தேங்கியிருந்த சகதியைத் தாண்டிக் கொண்டு வெளியே வந்தான். உள்ளே உட்கார்ந்திருந்த அழுக்குகளின் மீதான கோபத்தில், அடிகளை அழுத்தி அழுத்தி வைத்தான். ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும் போதும் சட்டையின் மீது தெறிக்கிற சேற்றைப் பற்றின அக்கறையில்லாமல் நடந்தான். பஸ்ஸில் கசங்கிக் கொண்டு கலைந்து போய் வீட்டிற்குள் நுழைந்தான்.

வயிற்றில் பசி தகித்தது. வாசற்படியில் பலகையைத் தலைக்கு வைத்துப் படுத்திருந்த அம்மா கூடவே எழுந்து வந்தாள். “ இன்னிக்கு வந்தது … ” என்று தபாலை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

இன்னொரு ‘ இன்டர்வியூ கார்ட் ’ . கையில் வாங்கிக் கொண்டு அதையே வெறித்துப் பார்த்தான்.

சட்டையைக் கழற்றி சோப்பில் நனைக்க பக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *