ஓவர் ப்ரிஜ்ஜில் ஆக்சிடெண்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 6,313 
 

அந்த பிஸி சிக்னலைத் தாண்டிய ஆட்டோவை நிறுத்திய போலீஸ் கான்ஸ்டபுள் சந்திரன் திகைத்தார். இறங்கிய டிரைவர் வயது சுமார் பதினைந்து இருக்கும்.

“வண்டிய ஓரங்கட்டிட்டு லைசென்சு இன்சூரன்சு பேப்பர் எல்லாம் எடுத்தாடா!” என்று அவனைப் பார்த்துக் கோபத்துடன் சொன்னார்.

“சரி சார்” என்று அவன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான். வண்டிக்குள் பயணிகள் யாரும் இல்லை. பின்னர் கண்ணாடியில் கட்டித் தொங்கப் போட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்து அவர் கேட்ட ஆவணங்களை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் தந்தான்.

அதைப் பார்த்த அவர் “ டேய்! இதுல ஆறுமுகமின்னு பேரு போட்டிருக்கு. ஆனா உன் போட்டோ இல்ல. ஆருடா இது?” என்றார்.

“அவரு என் அப்பாங்க….”

“அப்பாவா? வண்டிய எடுத்துட்டு வந்தது உங்கப்பாவுக்குத் தெரியுமா?”

அவன் மெளனமாக நின்றான். “அடக் களவாணிப் பயலே! சொல்லாமா எட்தாந்டிட்டியா?”

அவன் பதில் எதவும் சொல்லவில்லை. அதற்குள் வெகு வேகமாக ஒரு போலீஸ் கார் அங்கு வந்து நின்றது. அந்த ஏரியா ஸ்டேஷன் இன்சார்ஜ் இறங்கினார். சந்திரன் ஒரு சல்யூட் வைத்து விறைப்பாக நின்றார்.

கண்ணாலேயே ரிலாக்ஸ் ஆகச் சொன்ன சோமசேகர் (ஸ்டேஷன் இன்சார்ஜ்) பார்வை அந்தச் சிறுவன் மீது விழுந்தது.

“யாருய்யா இவன்? என்ன செஞ்சான்?”

“ சார் வீட்டுல சொல்லாம அப்பாவோட ஆட்டோவ எடுத்துக்கிட்டு வந்திருக்கான் சார். அதான் நீங்க வர்ற வரையில பிடிச்சு வச்சேன்” என்று சொல்லி சோமசேகரிடம் லைசன்ஸ் வகையறாக்களைக் கொடுத்தார். அதைப் பார்த்த சேகர் அந்தப் பையனைப் பார்த்தார்.

அவன் பசியில் இருந்தது போல இருந்தான். அவர் ஏதோ சொல்ல வாயெடுத்த போது அவர் செல் போன் ஒலித்தது.

“ஹல்லோ, சோமசேகர் ஹியர்”

“சார்! நா ஸ்டேஷனிலிருந்து பேசறேன்! நம்ம GST ரோடு ப்ரிஜ் மேல ஒரு ஆக்சிடெண்டாம். ஹெட் க்வார்ட்டர்லேர்ந்து போன் வந்திச்சு. உங்கள ஒடனே அங்க போகச் சொன்னாங்க.”

“என்னய்யா ஆச்சு? எதுனா வெவரம் சொன்னாங்களா?’

“இல்ல சார். ஒங்கள ஒடனே போவச் சொன்னாங்க”

போனை கட் பண்ணிவிட்டு சந்திரன் பக்கம் திரும்பி, “நான் GST ரோடு வரைல போகணும். ஏதோ ஆக்சிடென்ட். இவன வந்து பாக்கறேன்” என்று சொல்லிவிட்டு காரில் கிளம்பினார்.

“ஒக்காருடா” என்ற சந்திரனுக்கு எந்தவொரு பதிலும் சொல்லாமல் அந்தச் சிறுவன் ஒரு கல்லில் உட்கார்ந்தான்.

சேகர் ஆக்சிடென்ட் ஸ்பாட்டை அடைந்த போது அங்கு நிறைய கூட்டம் இல்லை. இனிமேல் தான் கூடும் போல. ஒரு கறுப்பு நிற BMW ஒரு ஓரமாக நிறுத்தப் பட்டிருந்தது. அருகில் ஒரு நசுங்கிய நிலையில் ஒரு மொபெட். சற்று தள்ளி ஒரு ஆள் கீழே விழுந்திருந்தான். அவன் கால்களில் இருந்து ரத்தம் இன்னுமும் வழிந்து கொண்டிருந்தது. ஒரு ட்ராபிக் போலீஸ் வேடிக்கைப் பார்க்க வந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்தார்.

காருக்குச் சொந்தக்கரனைத் சேகரின் கண்கள் தேடுவதைப் பார்த்து “உள்ளாற இருக்கார் சார்” என்று ட்ராபிக் போலீஸ் காரை நோக்கி சைகை செய்தான்.

கார் அருகில் சென்று அதன் ஏற்றப்பட்டிருந்த கண்ணாடியில் இரண்டு தட்டு தட்டினார் சேகர். உடனே ஜன்னல் கதவு கீழே இறக்கப்பட்டது. உள்ளிருந்த ஏசி குளிர் காற்று சேகர் முகத்தில் அறைந்தது.

“Oh, you took such a long time to reach man” என்றவனுக்கு சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும். வெள்ளி நிற டி ஷர்ட், வெளிர் நீல ஜீன்ஸ் அணிந்திருந்தான். டி ஷர்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ஐ போன் எட்டிப் பார்த்தது.

சட்டென்று பின் சீட்டில் இருந்து வந்த அசைவு அவர் கண்களை ஈர்த்தது. ஒரு பெண். இருவது வயதிருந்தால் ஜாஸ்தி. கும்மென்று சிம்லா ஆப்பிள் போல இருந்தாள். ஜீன்ஸ் பெண்கள் அணியும் ஷர்ட் போட்டிருந்தாள். அந்த ஷர்ட்டின் மேல் பட்டன்கள் திறந்து அவள் காஸ்ட்லி உள்ளாடையை விளம்பரப் படுத்திக்கொண்டிருந்தது. இது எதையும் பற்றிக் கவலைப்படாமல் அவள் தன் உதடுகளுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள்.

சேகரின் பார்வையைப் பின்பற்றிய அந்த இளைஞன் “லுக் மிஸ்டர்… லீவ் ஹர் அலோன். ஐ யாம் ஷிவ். மினிஸ்டர் …. சன். அப்பா ஐஜி அங்கிள காண்டாக்ட் பண்ணிப் பேசச் சொன்னார். அவரும் பேசிட்டாராமே! என் அப்பா செக்ரடரி இதோ வந்துடுவார். அண்ட் லெட்ஸ் பீ டன் வித் திஸ் மெஸ் asap. “ என்றான்.

அவனுக்கு ஒரு பதிலும் சொல்லாமல் கீழே விழுந்து இருந்த ஆளிடம் சென்றார் சேகர். அவனுக்கும் சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும். சாதாரண ஆடை அணிந்த சாதாரணன். இடது கால் மிகவும் சேதமாகி இருந்தது. வலியில் துடித்துக் கொண்டிருந்தான். “ ஆம்புலன்சுக்குச் சொல்லியாச்சா? இவனுடைய குடும்பத்தாருக்குச் சொல்லியாச்சா?” என்று கேட்டார் டிராபிக்கிடம். “சொல்லியாச்சு சார்” என்றார் டிராபிக்.

“கார் தப்பு தான் சார்” என்றான் கீழே விழுந்திருந்த குமரன். “திடீர்னு ஸ்பீடா வந்து மோதிட்டார் சார். நா பாட்டுக்கு ஓரமாத் தான் போயிட்டிருந்தேன்.”

“ம்ம்ம்ம். நான் விசாரிக்கிறேன். இதோ ஆம்புலன்ஸ் வந்திடிச்சி. உன் போன் இருந்தா குடு. உன் பேமிலி மெம்பெர்ஸ் கூட பேசறேன்” என்றார் சேகர்.

“சரி சார்,” என்று ஒரு நம்பிக்கையுடன் அவரிடம் கொடுத்தான்.

பின்னர் அங்கு வந்த ஆம்புலன்சில் அவனை ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த ஒரு பெரிய ஆசுபத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

சேகர் மீண்டும் காரிடம் வந்தார். “லுக் மிஸ்டர் ஷிவ் … அந்த ஆள் ஏராளமா செதஞ்சிருக்கான். இது புக் பண்ண வேண்டிய கேஸ். ப்ளீஸ் உங்க லைசன்ஸ் அண்ட் பேப்பர்ஸ் ஹேண்ட் ஓவர் பண்ணுங்க” என்றார்.

“மேன்… டோன்ட் யூ அண்டர்ஸ்டாண்ட் ஹூ ஐ அம்? இந்த மெஸ் சீக்கிரம் கிளியர் பண்ணிக் குடுன்னா நீ கேஸ் புக் பண்றேங்கறே? லூஸா நீ?”

“மரியாதை குடுத்து மரியாதை வாங்கு மிஸ்டர் ஷிவ்”

“ ஒரு ஸ்டேஷன் இன்சார்ஜுக்கு என்னய்யா மரியாதை?” என்று அவன் சப்தமாக இரையும் போதே இன்னொரு BMW அவர்கள் அருகில் சரேலென்று வந்து நின்றது. அதிலிருந்து ஒரு நடுத்தர வயது மனிதர் ஒரு பிரீப் கேசுடன் இறங்கினார். அதே சமயம் இரண்டு ஆட்டோக்கள் வந்து நின்றன. அதிலிருந்து நான்கைந்து பேர் தபதபவென இறங்கினர். ஒரு பெண்மணி “ஐயோ குமாரு! எங்கடா நீ” என்று ஓலமிட ஆரம்பித்தாள்.

சேகருக்கு தலை வலிக்க ஆரம்பித்தது. அவருக்கு என்ன நடக்கப் போகிறது என்று புரிந்தது. செக்ரடரி அவரை நோக்கி வந்தார். “சார் நான் சண்முக சுந்தரம். மினிஸ்டர் பீ ஏ. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”

“என்னய்யா பேசப் போற? இவன் மினிஸ்டர் மகன். இவன விட்ருங்க. எதுனாச்சும் கொடுத்து சமாளிச்சிரலாம்.. இது தானே?” என்றார் கோபமாக. தலை வலி இன்னும் அதிகமாயிற்று. ஷிவ் குரல்வளையை நெரித்து அவனை அந்த ஓவர் பிரிஜ்ஜிலிருந்து கீழே எறிந்து விடலாம் போல உணர்ந்தார்.

“நல்லதாப் போச்சு. நீங்க டைரக்டாவே மேட்டருக்கு வந்துட்டீங்க. உங்களுக்குத் தெரியாததில்லை. நீங்க என்ன தான் கேசு போட்டாலும் நாளைக்கு கோர்ட்டுன்னு வரும்போது சாட்சிகளக் கலச்சிர்வானுங்க. கேச ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாங்க. ஆருக்கு என்ன ப்ரோசனம்? நான் சொல்றத நல்லாக் கேளுங்க. இந்தப் பெட்டில அஞ்சு லட்சம் இருக்கு. அந்தக் குமாரு என்ன படிச்சிருக்கானோ அதுக்கு தக்காப்போல சார் கடைங்கள்ள எதுனாச்சியும் வேலை போட்டுக் கொடுத்திரலாம். ஆசுபத்திரி செலவும் எங்களது. ‘தப்பு என் மேலதான்’ன்னு குமார எளுதிக் குடுத்துறச் சொல்லுங்க. “

“உங்களுக்கே நியாயமா இருக்கா மிஸ்டர் செக்ரடரி?” என்றார் சேகர்.

“இல்லை தான். நானும் உங்கள மாதிரி நடுத்தர வர்க்கம் சார். ஆனா நிதர்சனத்த நெஜத்தச் சொல்றேன். உங்களுக்குத் தயக்கமா இருந்தா நானே அவன் அப்பா அம்மாகிட்டா பேசறேன். என்ன சொல்றீங்க?”

சேகரின் தலைவலி உச்சத்தை அடைந்திருந்தது. பின் கழுத்தெல்லாம் கூட வலிக்க ஆரம்பித்தது. “என்னவோ செய்ங்க. அவங்க ஒத்துகலேனா கேசு தான்”

செக்ரடரி குமார் குடும்பத்தார் அருகில் சென்று பேச ஆரம்பித்தார். சேகருக்கு அந்தக் காட்சியைப் பார்க்கவே பிடிக்கவில்லை. பாக்கெட்டிலிருந்து சிகரெட் பாக்கெட் எடுத்துத் திறந்தார். ஒரு சிகரெட் தான் இருந்தது. அதைப் பற்றவைத்துக் கொண்டு புகை இழுத்து விட்டார்.

சுமார் பத்து நிமிடங்களில் செக்ரடரி அவரிடம் வந்தார். அவர் கையில் ஒரு பேப்பர். குமார் அப்பா கையில் அந்த பிரீப் கேஸ். அவர் முகத்தில் ஒரு வெட்கம் கலந்த முக பாவம்.

“இந்தாங்க சார் பேப்பர். பாத்து செஞ்சுடுங்க. மினிஸ்டர் கிட்ட சொல்லி ஐஜியோடப் பேசச் சொல்றேன். நல்ல எடமா ட்ரான்ஸ்பர் கேளுங்க.” என்று சொல்லியபடியே ஷிவ் இருந்த காரிடம் சென்றார். அவரைப் பார்த்ததும் ஷிவ் கண்ணாடியை இறக்கினான்.

“தாங்க்ஸ் அங்கிள். அப்ப நாங்க கெளம்பவா?” என்று கேட்டான்.

“ சரிங்க சின்னய்யா. நீங்க போங்க. எல்லாம் முடிச்சாச்சு.” என்றார் செக்ரடரி.

சேகர் அப்போது தான் கவனித்தார். அந்த சட்டையில் மேல் பட்டன்கள் போடாத பெண் முன் சீட்டுக்கு வந்திருந்தாள். அவள் முகம் சிவந்திருந்தது. கண்கள் செருகியிருந்தது. ஷிவ் முகம் கூட flushedஆக இருந்தது. சேகருக்கு வாந்தி வரும் போல இருந்தது.

அடுத்த இருவது நிமிடங்களில் அந்த இடத்தில் ஒரு ஆக்சிடென்ட் நடந்ததுக்கான சாத்தியக்கூறுகளே தென்படவில்லை. குமார் பெற்றோரை செக்ரட்டரி தன் காரில் ஏற்றிச் சென்றுவிட்டார். எல்லாரும் கலைந்து விட்டார்கள்.

ஆயாசத்துடன் சோமசேகர் தன் காரில் ஏறி திரும்பவும் அந்த சிக்னல் அருகே சென்றார். தன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கியவர் கண்ணில் அந்தச் சிறுவன் பட்டான்.

“யோவ் சந்திரன், இவன் இன்னும் என்னய்யா பண்ணிக்கிட்டு இருக்கான்?” என்று இரைந்தார். சந்திரன் மீதான் தன் கோபம் நியாயமற்றது என்று அவர் மனசாட்சி சொன்னது.

“சார் நீங்க தான் இருக்கச் சொன்னீங்க…” என்று இழுத்தார் சந்திரன்.

“ ம்ம்ம் சரி சரி. டேய் இங்க வாடா” என்று அவனை அழைத்தார்.

சிறுவன் மிரண்ட படியே அவர் அருகில் வந்தான். அவன் தோளில் ஒரு கையைப் போட்டு “ உங்க அப்பாவுக்கு என்னடா ஆச்சு?” என்று கேட்டார்.

“அவருக்கு மூணு நாளா சொகமில்ல சார். கைல காசும் இல்ல. அதுனால தான் அவருக்குத் தெரியாம வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன். தப்புன்னா மன்னிச்சிரு சார்” என்றான்.

“இனிமே உன்ன இந்த மாதிரி வண்டியோட பார்த்தேன் கால ஓடச்சிருவேன். மெயின் ரோடுல போவாம இந்த சந்து வழியா வண்டிய எடுத்துக்கிட்டுப் போயிரு”

சரியென்று நகர்ந்தவனை “இங்க வாடா” என்றார்.

குழப்பத்துடன் வந்தவன் கையில் தன் பர்சிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் தாளைத் தந்து “நீயும் சாப்புட்டுட்டு வீட்டுக்கும் வாங்கிப் போ. அப்பாவா டாக்டர் கிட்டயும் கூட்டிகிட்டு போடா” என்றார்.

சிறுவன் நன்றியுடன் ஆட்டோவை ஓட்டிச்சென்றான்.

சந்திரன் தன்னை வியப்புடன் பார்ப்பதை உணர்ந்த சோமசேகர், “யோவ், ஒரு சிகரெட் இருந்தா குடுய்யா” என்றார்.

சந்திரன் தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட்டை அவரிடம் பயபக்தியுடன் நீட்டினான்.

– டிசம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *