ஒரு பவுண்ட் எத்தனை கனம்?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 15, 2013
பார்வையிட்டோர்: 9,395 
 

வீட்டுக்கு கொஞ்சம் பணம் அனுப்ப வேண்டியிருந்தது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்ப நாலைந்து வழிகள் இருந்தன. இன்டர்நெட் மூலமாக அனுப்புவது அதில் ஒரு வழி. நண்பர்கள் ஒரு சில வெப்சைட்களை பரிந்துரைத்திருந்தார்கள். ரிவ்யு வெப்சைட்களில் பெரும்பாலும் ஒரே விஷயம் தான் திரும்ப திரும்ப சொல்லபட்டிருந்தது. பணம் அனுப்பினேன், பத்து நாளாகியும் இந்திய கணக்கில் சேரவில்லை என்பதுதான் அது. இதையெல்லாம் படித்த பிறகு வரும் குழப்பமென்பது தேர்தலில் யாருக்கு ஒட்டு போடுவது என்று வரும் குழப்பத்துக்கு சமமானது. குற்ற குணாதிசயங்களில் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் .0001 அளவே வேறுபாடு இருந்தது. ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். ஜனநாயக பண்பின் படி நல்லபடியாக இருந்த மோசமான ஒன்றை தேர்ந்தெடுத்தும் விட்டேன்.

பணம் அனுப்பும் முறை மிக சுலபமாக இருந்தது. பயனர் கணக்கை தொடங்கி விட்டு, மின்னஞ்சலில் உறுதி செய்ய வரும் இணைப்பை சொடுக்கி, கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே செல்லவேண்டும். அமெரிக்க, இந்திய வங்கி எண்கள், மற்றும் இதர விவரங்கள் கேட்க்கப்படும், எவ்வளவு பணம் என்பதை தெரிவித்தால் அப்போதைய டாலர்க்கு நிகரான இந்திய மதிப்புக்கு பணம் பரிமாற்றம் செய்துவிடப்படும். ஞாயிறு காலை பணம் அனுப்பினேன் , திங்கள் காலை (இந்திய நேரம்) மனைவி அழைத்து பணம் கிடைக்கப் பெற்றதாக கூறினாள். அதற்க்கு முன்னரே பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எனக்கு மின்னஞ்சல் வந்திருந்தது. வாவ் என்ன வேகம் என்று சொல்லிக் கொண்டேன். நுகர்வோர் கருத்து சொல்வதற்கென்றே இருக்கும் வெப்சைட்-களில் சென்று இந்த நிறுவனத்துக்கு ஐந்து நட்சத்திரங்களை வாரி வழங்கினேன்.

ஒரு பத்து பதினைந்து நாட்கள் கடந்திருக்கும். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன், நான் வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு பூங்கா இருக்கிறது, சிறிய குழந்தைகள் சீசா பலகையிலும் சறுக்கு மரங்களிலும் விளையாடுவார்கள், கொஞ்சம் பெரிய குழந்தைகள் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறப்பார்கள். அதை வேடிக்கை பார்த்து கொண்டே நடப்பது வழக்கம், என் இரு குழந்தைகளையும் அழைத்து வந்தால் இங்கே விளையாட விட வேண்டும் என்று நினைத்து கொண்டேன். சட்டென்று ஏதோ ஒன்று நினைவை கலைத்தது, அனிச்சையாக செல்பேசியை எடுத்து என் அமெரிக்க வங்கி கணக்கை திறந்து பார்த்தேன், இந்தியாவுக்கு அனுப்பிய பணம் என் வங்கி கணக்கில் இருந்து இன்னுமும் கழிக்கப்படாமலே இருந்தது. சீசா பலகை ஒரு பக்கம் உயரும் போது மறுபக்கம் இறங்க வேண்டும் அல்லவா? அதற்கான சுவடே இல்லாமல் இருந்தது எண் கணக்கு அறிக்கை. நேற்று நான் சாப்பிட்ட பர்கர்-க்காண பரிவர்த்தனை மட்டுமே நிலுவையில் இருந்தது, அதுவும் எனக்கு நேற்றே செரித்துவிட்டிருந்தது.

நண்பர்களிடம் விசாரித்தேன், இந்த சேவையின் செயல்முறையே அப்படித் தான். முதலில் இந்தியக் கணக்கில் வரவு வைத்து விட்டு பிறகு உங்கள் கணக்கில் இருந்து எடுத்து கொள்வார்கள். இந்த தாமதம் பெரிய விஷயமில்லை என்றார்கள். அப்படியேத் தான் நினைத்து கொண்டிருந்தேன் ஒரு மூன்று நாட்கள் போனது, அதற்க்கு பிறகு முழுசாக ஒரு வாரமும் போனது. அலுவலகத்தின் வேலைப் பணிகளுக்கிடையில் இன்னும் ஒரு ஐந்து நாட்களும் ஓடியே போனது. யாரை அணுக வேண்டும் என்று புரியாமல் இருந்தேன். என்ன செய்ய வேண்டும் என்று சில போரம்களில் கேள்வி எழுதிவிட்டு காத்திருந்தேன். ரௌட்டிங் என்னை சரி பார்க்க சொன்னார்கள். எல்லாம் சரியாகவே இருந்தது. வேறு உருப்படியான பதில் கிடைக்கவில்லை. மாப்பிள்ளை இவர்தான் ஆனால் சட்டை இவருடையது இல்லை என்பது போல் இருந்தது என் நிலைமை.

ஒரு வேளை வேறு ஏதாவது காரணங்களுக்காக இந்த பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டிருக்குமோ என்று வங்கியில் விசாரித்தேன். அப்படி நிராகரிக்கப்பட்டிருந்தால் அது உங்கள் கணக்கிலும் இந்த கம்ப்யூட்டரிலும் எழுதப்பட்டிருக்கும் அப்படி ஏதும் நடக்கவில்லை. நீங்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்வது தான் சிறந்த வழியாகும் என்றார்கள்.

அடுத்து அந்த பணம் பரிமாற்றம் செய்த நிறுவனத்தை அழைத்தேன், நான் அழைத்தபோது அவர்களின் சேவை கணிப்பொறிகள் இயங்காமல் இருந்தன. என்னிடம் விவரங்களை வாங்கி கொண்டு அவர்களே என்னை தொடர்பு கொள்வதாக கூறினார்கள். மூன்று நாட்களுக்கு பிறகு அந்த நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது, இந்த விஷயத்தை எங்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி. உங்கள் வங்கியை தொடர்பு கொண்டிருக்கிறோம். இந்த கணக்கு நேர் செய்யும் வரை, உங்களின் பயனாளர் கணக்கு முடக்கப்பட்டிருக்கும் என்றிருந்தது. என் கிரெடிட் மதிப்பெண்ணுக்கு பங்கம் வருமோ என்று கவலைப்பட்டேன். மீண்டும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசிய போது அப்படி ஏதும் நிகழாது என்று உறுதி அளித்தார்கள்.

கோடைக்காலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பித்திருந்தது. பகல் நேர ஒளி சேமிப்பில் ஒரு மணி நேரம் பின்னோக்கி போய் இருந்தது. தினமும் நான் செல்லும் பேருந்தில் ஏறி இறங்கும் சகப் பயணிகளை போல் என் வங்கிக் கணக்கில் பணம் ஒரே சீராக ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தது. குறைந்தது நான்கு வேளையாவது என் கணக்கில் நுழைந்து அந்த பரிவர்த்தனைக்கு தீர்வு வந்துவிட்டதா என்று பார்த்து கொண்டிருந்தேன். உலகத்தில் மற்ற விஷயங்கள் யாவையும் மிகச் சரியாக நடந்து கொண்டிருந்தன, இது ஒன்றை தவிர.

மாயன் நாள்காட்டி முடிவுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன் மீண்டும் ஒரு கடிதம் வந்திருந்தது. தொழில்நுட்பக் காரணங்களால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. நீங்கள் மாற்று முறையில் செலுத்தலாம் என்றிருந்தது.

http://upload.wikimedia.org/wikipedia/ta/d/d5/Visa_Debit_logo.pngஉடனே அழைத்தேன், டெபிட் அட்டையில் பணம் செலுத்தலாம் என்று ஒரு தேர்வு இருந்தது. அப்படியே செலுத்துகிறேன் என்றேன். அதன் ஒப்புதலுக்காக IVR-க்கு இணைப்பு கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு எண்ணை அழுத்தி கொண்டிருந்தேன், மூன்றாவது சுற்றில் தேர்வு இரண்டை அழுத்தியபோது “enter your debit  card number followed by the pound key(#)” என்றது.

டெபிட் அட்டையின் பதினாறு இலக்கங்களையும் ஒவ்வொன்றாய் அழுத்திவிட்டு முடிவாக பவுண்ட் விசையை அழுத்தினேன், ஒரு பவுண்ட் இத்தனை கனமானதாக இருக்குமா என்று தெரியவில்லை. கடைசியாக அந்த பவுண்ட் விசையை அழுத்தியபோது மனதில் இருந்த பாரம் கரைந்து போயிருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு பவுண்ட் எத்தனை கனம்?

  1. சூப்பர்-ஆ இருக்கு ரஜினி. கொஞ்சம் ட்விஸ்ட் எதிர்பாத்தேன் ஸ்டோரில…அணிவே கிளாச்சிக் தமிழ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *