ஒரு கோப்பை தேநீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 1,693 
 

(1999 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அலை ஓய்ந்திருந்தபோது…

காலையில் பிட்டும் கறியும், மதியம் சோறும் கறியும், இரவு பிட்டும் கறியும்,

பரவாயில்லை.

பின்னர்.

காலையில் பிட்டும் கறியும், மதியமும் இரவும் சோறும் கறியும்,

இதுவும் பரவாயில்லை.

கொஞ்ச நாளின் பின்,

மூன்று நேரமுமே சோறும் கறியும். அதுவும் எப்படியென்றால் காலையில் சோறும் கத்தரிக்காய்க் கறியும், மதியம் கத்தரிக்காய்க் கறியும் சோறும், இரவு சோறும் கத்தரிக்காய்க் கறியும். அதிலும் மதியமே இரவுக்குரிய உணவும் சேர்ந்து வரும். இன்னும் கொஞ்ச நாளின் பின், காலையில் கஞ்சி, மதியமும் இரவும் சோறும் கத்தரிக்காயும், கத்தரிக்காயும் சோறும்.

“கத்தரிக்காயை கண்டு பிடித்தவன் நாசமாய்ப் போக!”

“கத்தரித்தோட்டம் வைத்திருப்பவர்கள் தலையில் இடி விழ!”

என்றெல்லாம் உரத்த குரலில் சாபமிட்டவாறே ஒவ்வொரு கவளமாக விழுங்கினோம். நாவிலுள்ள சுவை மொட்டுக்களுக்கெல்லாம் கட்டாய ஓய்வு கொடுத்தோம். உணவு விடயத்தில் ஒருவாறு பற்றற்ற நிலைக்கு வந்த நாம் ஒரு கோப்பை தேநீருடன் திருப்தியடைந்தோம். எங்கள் முழுக் கவனத்தையும் எதிர் முன்னரங்கிலுள்ள இராணுவம் மீதே திருப்பினோம்.

“உன்னால்தானே எங்களுக்கு இந்த நிலை. கொஞ்சம் பொறு பகைவனே, உன்னாலேயே நாம் பழைய நிலையை அடைவோம்” என்று கறுவிக்கொண்டோம். கோப அலைகள் குமுறியெழ கடமைகளில் மூழ்கிப்போனோம்.

கத்தரிக்காயுடன் எங்கள் விருப்பத்துக்கு மாறாக கை கோர்த்துக்கொண்ட காரணத்தால், சோற்றுப் பைகள் கேட்பாரற்று தலைமேல் மரக் கிளைகளில் தொங்கின. அண்ணாந்து பார்த்தால் கோபம்தான் வரும். கூடவே கவலையும் வரும். இதைப்போய் எறிவதா? என்னவென்று? எம் மக்கள் ஒரு நேர உணவுக்கே அல்லாடிக் கொண்டிருக்கையில், இவ்வளவு சோற்றையும் வெட்டிப் புதைப்பதா?

மனம் கேட்கவில்லை (மனம் மட்டுமென்ன, வயிறும் கேட்கவில்லை) அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கையிலேயே புதிய சிந்தனை பளிச்சிட்டது (சேர் ஐசாக் நியூட்டனும் இப்படித்தானாமே. அப்பிள் பழத்தை அண்ணார்ந்து பார்த்துத்தான், பின் புவியீர்ப்பு சக்தியை கண்டு பிடித்தாராமே. நாங்களும் அப்படித்தான்.)

சிந்தனை வந்தால் பிறகென்ன, செயலாற்றவேண்டியதுதானே. பரபரவென இயங்கினோம். காப்பரணைப் பலப்படுத்தவெனத் தரப்பட்டிருந்த உரப்பைகளுள் நல்லதாக ஒன்றை எடுத்து கழுவி உதறி வெயில் படக்கூடிய இடமாகப் பார்த்து, விரித்து, அதன்மேல் சோற்றுப் பருக்கைகளைப் பரப்பிக் காயவிட்டு மீண்டும் அரிசியாக்கினோம். தேநீர் சுடவைக்கும் அலுமினியப் பாத்திரத்தில் அதைக் கொட்டிக் கிளறிச் சூடேற்றி, அடுப்பிலிருந்து இறக்கி, அந்தப் பாத்திரத்தில் வைத்தே இடித்துப் பொடியாக்கினோம். வெகு அபூர்வமாக வந்த பிட்டையும்கூட காயவைத்து வறுத்தோம்.

அதில் ஒரு பிடி அள்ளி வாயில் போட்டால் நறுக் முறுக் என்ற ஒலியுடன் தேவாமிர்தமாக வாயிலே கரையும். இப்போது மாலை நேரத்திற்குரிய A1 சிற்றுண்டி தயார் (மாலை நேரச் சிற்றுண்டியா? மண்ணாங்கட்டி, பசித்தபோதெல்லாம் ஒரு கோப்பை தேநீருடன் ஒரு பிடி மாவே வயிற்றை நிறைக்கும்.)

கை தவறிக்கூட ஒரு சோற்றை கீழே போடமாட்டோம். மூன்று நேரமும் எஞ்சிய சோற்றை சிற்றுண்டியாக்கும் திட்டம் உடனடியாகவே அனைத்து காவலரண்களுக்கும் பரவலாக்கப்பட்டது. ஒரு கோப்பை தேநீருடன் ஒரு தட்டுப் பொரிமா தரும் பலத்தில் ஒரு மணி நேரத்துள் ஒன்றரை அடி ஆழத்தில் காப்பகழி வெட்டலாம். கொழும்பிலிருந்து எவர் எதைத் தடுத்தாலும் எங்களுக்கென்ன? எங்களை ஒருவரும்

அசைக்க இயலாது என்ற நிலையை காட்டுக்குள் நாம் தோற்றுவித்தோம்.

வெளியே உணவு நெருக்கடி அதிகரிக்க, எம் கையிருப்பிலுள்ள சீனியின் அளவு குறையத் தொடங்கியது. தேநீரில் சீனி கலந்து குடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சீனியைத் தொட்டுத் தேநீர் குடிக்கத் தொடங்கி, அதிலும் நெருக்கடி ஏற்பட, கையிலிருந்த சீனியைப் பொரிமாவுடன் கலந்து விட்டு, அதனோடு தொட்டுத் தேநீர் குடிக்கத்தொடங்கினோம். தேநீருடன் கொறிப்பதற்கான உப உணவாகச் செய்து செய்து வைத்திருந்த பொரிமா கடைசியில் தேநீருக்கான மூலப் பொருட்களுள் ஒன்றானது.

வீரைப்பழ காலங்களில் வீரைப்பழப் பாணியுடனும், பாலைப்பழக் காலங்களில் பாலைப்பழப் பாணியுடனும் சில நேரம் உலுவிந்தப்பழப் பாணியுடனும் என்று அந்த ஒரு கோப்பை தேநீரை, எங்கள் அபிமானத் தேநீரை விதம் விதமாகக் குடித்தோம். ஒரு கோப்பை தேநீர் தரும் மன உற்சாகத்துடன், கஞ்சியும் கத்தரிக்காயும் தந்த பலத்துடன் கடமையில் கண்ணாயிருந்தோம். அருகிருந்த அரண்களை பொறுப்பெடுத்த எல்லைப் படையினர் எம் உணவைப் பார்த்து ஏங்கிப்போயினர்.

“என்ன பிள்ளையளே, இந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டோ இந்த மாதிரிச் சண்டை பிடிக்கிறீங்கள்?” என்று மலைத்துப்போனார்கள். சும்மா இடையிடையில் தாம் சாப்பிடுவதற்காக கொண்டுவந்த சொக்லேட்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அவற்றை வாங்கி காற்சட்டைப் பைகளுள் போட்டுக்கொள்வோம். ஒருதரம், இரண்டுதரம் இப்படியே போனது.

அவர்களுக்கு எம் செய்கை ஆச்சரியமாக இருந்திருக்கவேண்டும். ஒருமுறை கேட்டேவிட்டார்கள்.

“ஏனக்கா சாப்பிடாமல் பொக்கற்றில் வைக்கிறீங்கள்? நீங்கள் இதைச் சாப்பிடுங்கோ. உங்கட ஆட்களுக்கு கொண்டுபோய்க் குடுக்கிறதுக்கு நாங்கள் ரொபி தாறம்” என்றார்கள். எங்களுக்கு சிரிப்பே வந்துவிட்டது.

“நாங்கள் இந்த ரொபியோடைதான் அண்ணை ரீ குடிக்கிறனாங்கள். எங்களிட்ட சீனி இல்லை” என்றோம்.

“இந்த நாலைஞ்சும் உங்களுக்கு எந்த மூலைக்கு காணும் அக்கா? ஒரு ரீ குடிக்க உங்களுக்கு எத்தனை ரொபி வேணும்?” என்றவர்கள்,

“ஒரு ரொபியில் நாலு தரம் குடிப்பம்.” என்ற எம் பதிலில் அரண்டுபோனார்கள். இன்னமும் தாம் காணாதிருக்கும் தமது போராளிச் சகோதரி, போராளி மகள், போராளி மருமகள், பெறாமகள், மைத்துனி எல்லோருமே எல்லையின் ஏதோ ஒரு முனையில் இவர்களைப்போலத்தானே துன்பங்களுக்கு நடுவே வாழுவார்கள் என்ற நினைப்பு அவர்களை உலுப்பிவிட்டிருக்கவேண்டும். தம்மோடு கொண்டுவந்திருந்த பிஸ்கற்றுக்கள், தின்பண்டங்கள், இனிப்புகள் என்று எல்லாவற்றையும் எங்களிடம் தந்து,

“நாங்கள் ஒரு கிழமையில் போற ஆக்கள்தானே. நாங்கள் வீட்டுக்கு போயும் சாப்பிடுவம். நீங்கள் சாப்பிடுங்கோ ” என்றார்கள் ஈரமாகிய கண்க ளுடன்.

கொஞ்ச நாள் வெள்ளிதிசைதான். விதவிதமான தின்பண்டங்களுடன் சாயத் தண்ணீர் அமர்க்களப்பட்டது. இது அலை வீச முன்னர் நடந்த கதை.

அலை நடுவே…

ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, கரிப்பட்டமுறிப்பு, ஒலுமடு, மாங்குளம், கனகராயன்குளம் என்று தலைவரின் சிந்தனையை நடைமுறைப்படுத்தியவாறு அணிகள் நகர்ந்துகொண்டிருந்தன. எதிரி ஓடிய வழியெங்கிலும் அவனின் எச்சங்கள், பாதணிகள், மழைக்கவசங்கள், இடைப்பட்டிகள், சீஸ் ரின்கள், பொதி செய்யப்பட்ட பேரீச்சம்பழ அல்வாக்கள், அடுப்பைவிட்டு இறக்கப்படாததால் தீய்ந்து போன கறிகள், மேசையில் பீங்கான்களில் பரிமாறி வைக்கப்பட்டிருந்த உயர் மட்ட உணவு வகையறாக்கள், குளிர்சாதனப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பச்சைக் காய்கறிகள், உரித்த கோழிகள் உயர்ரகக் குடிவகைகள், பலதரப்பட்ட சோடாக்கள்… பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

கிளித்தட்டும் மறிக்கும் பாணியில் எதிரியுடன் திசைக்கொன்றாக மோதி, விரட்டி, குறுக்கே பாய்ந்து போ அடிக்க, எதிரி பாய்ந்து ஓட, விரட்டியவாறு எதிரியின் பின்னாலேயே ஓடியதில் எல்லாருக்குமே கீழ்மூச்சு மேல்மூச்சு வாங்கியது. தாகத்தில் நாக்கு தொங்கிப்போயிற்று. நின்று நிதானிப்பதற்கிடையில் அவன் கண்காணாத தூரம் ஓடிவிடுவானே. விரட்டி ஓடியபோதே கிடைத்த ஓரிரு வினாடித் துளிகளில் வண்ணவண்ண நிறங்களில் இருந்த சோடாக்களைக் குடித்து சோடாவாலேயே முகத்தையும் கழுவி, பீங்கான்களில் பரிமாறி மூடப்பட்டிருந்த விருந்தில் இரண்டு கவளத்தை அள்ளி வாயில் போட்டு, கைகழுவவும் நேரமின்றி ஓமந்தைவரை எதிரியை ஓட ஓடத் துரத்தினோம்.

சண்டை ஆரம்பிப்பதற்கு முதல் நாள் காலையில்கூட கஞ்சி குடித்த புலிகள் விரட்டியதில், ஓடுவதற்குப் பத்து நிமிடங்கள் முன்புவரை சீசும், பழமும், பிஸ்கற்றும், இறைச்சியும், மஞ்சள் சோறும் சாப்பிட்ட சிங்கங்கள் போட்டது போட்டபடி வாகனங்களிலேறி ஓமந்தைக்கப்பால் ஓடின.

– வெளிச்சம் 1999 மார்கழி தை, மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *