ஐந்து ரூபாய்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 4,598 
 

மணி 8.50.

வனஜா அவசர அவசரமாக அள்ளிச் சொருகிய சேலையும் அவசர வேலைகள் நிறைந்த கையுமாகப் பரபரத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளது 10 வயது மகன் நிர்மல் முதுகுச் சுமையான பையை மாட்டிக் கொண்டு முகம் வெளிறி தாய் முன் போய் நின்று திரு திருவென்று விழித்தான்.

“என்னடா..? ”

“கா…கா..காசு முழுங்கிட்டேன். ! ”

“காசா..? ஏது..?”திகிலுடன் அவனைப் பார்த்தாள்.

“நீ இப்போ கொடுத்தேல்லே.. அது…”

அவ்வளவுதான் ! அவளுக்குப் பதற்றம் தொற்றியது.

“எங்கே.. வாயைக் காட்டு..?”குனிந்தாள்.

“ஆஆ….”

பார்த்தவளுக்குப் பகீரென்றது. வாயில் துரும்பில்லை.

“நிசம்தானா..?”குரல் நடுங்கியது.

“ஆமா..”

”ஐயோ…!…”- அடுத்த நொடி அலறி இழுத்துக்கொண்டு கணவனிடம் ஓடினாள்.

செருப்பு மாட்டிக் கொண்டுருந்த சேகர்…..

“என்னடி…? ”

“அஞ்சு ரூபாயை முழுங்கிட்டாங்க..”

“என்னது ..?”அவன் திடுக்கிட்டான்.

“ஆமாங்க. கொடி நாளுக்கு அஞ்சு ரூபாய் வேணும்ன்னு கேட்டான். கொடுத்தேன். முழுங்கிட்டான். ! ”

“ஆமானாடா..???…”

”ம்ம்…”

அவ்வளவுதான் !

“உன்னை எவன்டி குழந்தைக் கையில காசு கொடுக்கச் சொன்னது…?”படீரென்று மனைவி மேல் பாய்ந்தவன்…

“கையில காசை வைச்சுக்காம உன்னை எவன்டா வாயில வைக்கச் சொன்னது…??”‘ என்று எகிறி கையை ஓங்கினான்.

சடாரென்று மகனை இழுத்து அணைத்துக் கொண்ட வனஜா…

“இவன் ஏற்கனவே மிரண்டிருக்கான். அடிச்சா மட்டம் என்னாகப் போகுது..? ரகளை செய்யாம சீக்கிரம் கிளம்புங்க. காசு வயித்துல சிக்கிக்கிட்டு புள்ள உயிருக்கு ஆபத்தாய்ப் போயிடப் போகுது..!”பரபரத்தாள்.

சேகர் முகத்திலும் திகில் பரவ….

“ஏற்கனவே நான் லேட்டு. அதுல இது வேற தொல்லை..”பற்களைக் கடித்துக் கொண்டே தந்து இரு சக்கர வாகனத்தைக் கிளப்பினான்.

இவர்கள் பதற்றப்பட்ட அளவிற்கு டாக்டர் பதற்றப்படவில்லை.

பையனை நிறுத்தி, நிதானமாக பரிசோதித்து…

“முழு அஞ்சு ரூபாய்தானே ! ஒன்னும் கவலைப் படாதீங்க. வயித்துல சிக்காது. நாலஞ்சி வாழைப்பழம் கொடுங்க. காலையில் வெளியே வந்துடும்.இல்லே தம்பி எப்போ வெளியே போறானோ அப்போ வந்துடும். !”சொன்னார்.

“வந்துடுமா டாக்டர்..?”ஏறக்குறைய இருவரும் ஏக காலத்தில் கேட்டார்கள்.

“வந்துடும்மா..”

“எங்கேயாவது ஏடாகூடமாய் சிக்கி இருக்கான்னு ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கலாமா சார்..?”- சேகர்.

“தேவையே இல்லே. எதுவும் குடல்ல தாங்காது. தானா வெளியில வந்துடும். நாம எக்ஸ்ரே அது இதுன்னு கலாட்டா பண்ணினா… ஏற்கனவே மிரண்டிருக்கிற பையன் இன்னும் மிரண்டிடுவான். ! ”

“வாந்தி , வயித்துப் போக்கு… ஏதாவது..?”வனஜா இழுத்தாள்.

“ஒன்னும் வராதும்மா. பையன் பை மாட்டி இருக்கான். தைரியமா வாழைப்பழம் கொடுத்து பள்ளிக்கூடத்துல விடுங்க.”

டாக்டர் இவ்வளவு சொல்லியும் சேகருக்கும் , வனஜாவிற்கும் அரை மனசுதான். மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்கள்.

“என்னங்க ! இன்னைக்கு இவனைப் பள்ளிக்கூடத்துல விடாம விடுப்பு எடுத்துக்கிட்டு வீட்டில இருக்கலாமா..?”வனஜா கணவனைப் பார்த்தாள்.

“விளையாடுறீயா..! இன்னைக்கு அலுவலகத்துல ஆடிட்டிங். போகலேன்னா மானேஜர் கடிச்சிக் குதறுவாரு..”

“பக்கத்து வீட்டுப் பாட்டிக்கிட்ட விட்டுப் போகலாமா..? ”

“அவ மட்டும் என்னத்தைப் பார்த்துக்கப் போறா.டாக்டர்தான் ஒன்னும் பண்ணாதுன்னு சொல்லி இருக்காரே. பேசாம பள்ளிக்கூடத்துல விடுறதுதான் சரி. ”

வனஜாவுக்கு மனசில்லை. இருந்தாலும் வழி இல்லை.

“சரி ‘ ‘ தலையாட்டினாள்.

பள்ளிக்கூட வாசலில் வண்டி நின்றதுமே… நிர்மல் வழக்கம் போல் இறங்கினான். கூடவே வனஜாவும் இறங்கினாள்.

“நிர்மல் ! வயிறு வலிச்சா, மயக்கம் வந்தா மிஸ்கிட்ட சொல்லு..? ”

“சரிம்மா..”

இறங்கிய வனஜா மீண்டும் வண்டியில் ஏறினாள்.

“அம்மா ! காசு..?”பையன் கை நீட்டினான்.

‘ எதுக்கு..? ”

“கொடி நாள் ! ”

“இன்னைக்கு அலுவலகத்துக்கு நேரமாயிடுச்சி. நாளைக்கு நேரத்தோட வந்து நானே உன் மிஸ்கிட்ட குடுக்கிறேன்.”

“மிஸ் இன்னைக்குத்தான் கேட்டாங்க. நான் குடுத்துறேன். ”

“இதையும் விழுங்கிடுவே..”

“மாட்டேன் ! ”

“சரி சரி. சீக்கிரம் கொடுத்துத் தொலை ! ஏற்கனவே லேட்டு..”சேகர் எரிச்சலில் காய்ந்தான்.

வனஜா தனது தோள்பையிலிருந்து எடுத்துக் கொடுக்க…

“நன்றிம்மா !”நிர்மல் உள்ளே ஓடி குழந்தைகள் கூட்டத்தில் கலந்தான்.

இவர்கள் வண்டியை விட்டார்கள்.

நிர்மல் பள்ளி மைதானத்தில் பாதி தூரம் சென்றவன்…

“கணேசு !”முன்னே சென்றவனை அழைத்தான்.

அவன் திரும்பி….

“என்னடா…?”நின்றான்.

அருகில் சென்று…

“இந்தா காசு..”நீட்டினான்.

”எதுக்கு…? ”

“உன் கொடி நாளுக்கு ..”

“அப்படியா ..!?…”

“ஆமாம் . வீட்ல சாப்பாட்டுக்கே வழி இல்லே கஷ்டம். கொடி நாளுக்குக் காசு கேட்டா அம்மா அடிப்பா . நாளைக்கு நான் மிஸ்கிட்ட அடிவாங்கப் போறேன்னு நேத்திக்குச் சொன்னீல்லே…. இந்தா…”- நீட்டினான்.

“உனக்கு..? ”

“உனக்காகத்தான் நான் அம்மாக்கிட்ட காசு முழுங்கிட்டேன்னு சொல்லி வாங்கிக்கிட்டு வந்தேன்.இதோ எனக்கு இருக்கு..!!”

தன் கால் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் காட்டினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *