ஏன் அழுதாள்?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 8,803 
 

நகராட்சியில் குப்பை வாரும் ஒப்பந்தத் தொழிலாளியான கன்னியம்மாள் மண்டை பிளக்கும் உச்சி வெயிலில் குப்பை வண்டியோடு அந்தத் தெருவில் வந்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்குனு ஒதுக்கப் பட்ட நாலு தெருக்களில் உள்ள குப்பைகளை வண்டியில் ஏற்றி வந்து குப்பை கிடங்கில் கொட்டுவது தான் அவளின் அன்றhட வேலை. அதை, வாங்கும் கூலிக்கு வஞ்சனை இல்லாமல் தினமும் செய்வாள்.

அன்று ஏனோ தெரியவில்லை அசதியில் அவள் உடம்பு ஓய்வுக்காக கெஞ்சியது. “இது தான் கடைசி லோடு குப்பைகளை அள்ளிப் போட்டுட்டு வீட்டுக்குப் போய் அக்கடானு படுக்கனும், என நினைத்து, இன்னும் பத்து வீடு தான், தம் பிடிச்சி வண்டிய தள்ளினு போய் குப்பைய வாங்கிடலாம். இல்லனா, குப்பை எடுக்க ஆள் வரலைன்னு யாராவது சானிடரி இன்ஸ்பெக்டரிடம் கம்ப்ளைன்ட் பன்னா வேலையே போயிடும்” என்று பயந்து குப்பை வண்டியை இழுத்துக்கொண்டு போனாள் விசில் ஊதிக்கொண்டே.

ஒவ்வொரு தடவையும் அவள், விசிலை ஊதும் போது அடிவயிற்றில் இருந்த காற்று வாய்க்கு வந்து விசில் வழியாக வெளியேறும் போது ரெண்டு பக்கத்து விலா எலும்பும் வலிக்கும், என்ன செய்றது, தொழிலுனு வந்துட்டா செய்து தானே ஆகனும் என்று உயிர் போகும் வலியைப் பொருத்துக் கொண்டாள்.

எவ்வளவோ நாற்றத்தைப் பொருத்துக் கொண்டு குப்பைவாரும் அவள், குப்பையை கொண்டு வந்து போடுபவர்களிடம், மக்கும் குப்பைய தனியாகவும், மக்காத குப்பைய தனியாகவும் பிரித்துப் போடுங்கள் என்று எத்தனை தடவை சொன்னாலும், யாரும் கேக்கறதில்ல. “நீ எதுக்கு இருக்குற, அதுக்குத் தானே, சம்பளம் வாங்குற, பிரிச்சிப் போடு என்று சட்டம் பேசுவார்கள்.
ஆனால், குப்பைகளை போடும் போது, அருவருப்போடு முகத்தை அஷ்டக் கோணலாக்கி ஏதோ தொடக் கூடாதத தொட்டு விட்டதைப் போல துணியால் மூக்கை மூடிக்கினு, குப்பையப் பாக்கறதே பாவன்ற மாதிரி முகத்தை திருப்பி வேண்டா வெருப்பா அந்த வண்டியில் போடுவார்களே, அதைத்தான் அவளாள் தாங்கிக்க முடியாது.

இந்த குப்பைகள் எல்லாம், அவர்கள் வீட்டில் மணிக்கணக்காய் நாரிக் கொண்டிருக்கும், அப்போதெல்லாம் அதை சகித்துக் கொண்டவர்கள், குப்பையை கொட்டும் போது மட்டும் இவளையும் இவள் வண்டியையும் பார்த்து அருவருப்படைவார்கள்.

இருந்தாலும், செய்ற வேலைய சுத்தமா செய்யனும்ற எண்ணம் உள்ள கன்னிம்மா கொஞ்சங்கூட அருவருக்காமல் நாத்தமெடுக்கும் குப்பைய வாங்கி வண்டியில் இருக்கும் மட்கும் தொட்டியிலும் மட்காத தொட்டியிலும் தனித் தனியாக பிரித்துப் போடுவாள்.

சில நேரத்தில் குப்பைகளை பிரித்துப் போடும் போது எது மட்கும் குப்பை எது மட்காத குப்பை என்று லேசா குழப்பம் வரும். அது எதுன்னா பெண்கள் பயன்படுத்திய நாப்கின்தான். அதை எதில் போடுவது என்ற குழப்பம் வந்தாலும், அதை எடுத்துப் போடும் போது மட்டும் அவளுக்கு லேசா மனசு கூசும். அவளும் பெண்தானே. அப்படிப் பட்ட நேத்தில், அதை ஏதோ ஒரு தொட்டியில் போட்டுவிடுவாள்.

ஒரு சிலர் சமுதாய அக்கறையுடன் குப்பைகளை தன்pத் தனியாக பிரித்தே கொண்டு வந்து வண்டியில் இருக்கும் தொட்டிகளில் போடுவார்கள். ஒரு சிலர் டீக் குடிக்க காசு குடுப்பார்கள். கன்னிம்மா அதை வாங்கமாட்டா “இந்த வேலைக்கித்தான் எங்களுக்கு சம்பளம் குடுக்குறhங்க, அதுவே போதும்”, என்பாள்.

அன்று, அந்தத் தெருவில் இவளின் விசில் சத்தத்தைக் கேட்டு அழகான குழந்தை ஒன்று வீட்டு வாசலைத் தாண்டி தத்தி தத்தி நடந்து வந்து கேட்டை பிடித்துக்கொண்டு நின்றது. கரு கருவென்ற சுருண்ட தலை முடியோடு சிரிச்ச முகமாக, துரு துருத்த கோலிக் குண்டு கண்களுடன் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அது கன்னிம்மாவையும் குப்பை வண்டியையும் பார்த்து து]க்கச் சொல்லி இரண்டு கைகளையும் நீட்டியது. குழந்தையில்லாத கண்ணியம்மா குழந்தைகள் மீது கொள்ளை பிரியம் வைத்திருந்த காரணத்தால் அந்தக் குழந்தையைப் பார்த்ததும் தன்னை மறந்து, ஓடிப் போய் து]க்க கை நீட்டும் போது, “ஏய் உனக்கு அறிவில்ல, குப்பை எடுக்குற அழுக்கு கையால குழந்தைய தொட்டு தூக்கிறியே கொஞ்கமாவது அறிவு இருக்கா? ச்…சீ…. நீயும் உன் கோலமும், அழுக்கு படிஞ்ச அசிங்கம் பிடிச்ச கையால குழந்தைய தொடுறியே, குழந்தைக்கு நோய்வந்தா நீயா பார்ப்ப, நைஸா குழந்தைய கொஞ்சரமாதிரி கொஞ்சி குழந்தைய திருடினு போயி , நகைய கழட்டிகினு குழந்தைய வத்துடலாமுன்னு பாக்குறியா போ…போ…போ… அந்தப் பக்கம், குழந்தைய தூக்குனே பொல்லாதவளா மாறிடுவேன்” என்று அடிக்காத குறையாக விரட்டினாள் அந்தக் குழந்தையின் தாய்.

துக்கத்தோடு மௌனமாக, எதுவும் பேசாமல் குப்பையை அவளிடமிருந்து வாங்கி வண்டியில் போட்டுக் கொண்டு, கண்ணீருடன் விதியை நினைத்து வண்டியை தள்ளிக் கொண்டு போனாள்; கன்னியம்மா. அப்போது, அவள் அடித்த விசில் சத்தத்தில் காற்று வரவில்லை கண்ணீர் வந்தது, அதில் சில ரத்தத் துளிகளும் இருந்தது.

“அய்யோ, என் குழந்தை, என் குழந்த காவாயில் விழுந்திடுச்சி, என்ற சத்தம் நடந்து போய்க் கொண்டிருந்த கன்னியம்மாவின் காதில் விழுந்தவுடன் பதறி துடித்து ஓடி வந்த அவள், மூடி திறந்திருந்த பாதாள சாக்கடையில் குதித்து சாக்கடையில் தத்தளித்துக் கொண்டிருந்த குழந்தையை ஒரு பூச்செண்டைப் போல வாரி எடுத்து மார்பில் அணைத்து உச்சி மோந்தாள். அந்தக் குழந்தையின் வாசம் சாக்கடை நாற்றத்திலும் மணமாக அவளை வசீகரித்தது அதில் மயங்கிய அவள், அதே மயக்கத்துடன் அந்தக் குழந்தையை தூக்கி வெளியே நீட்டினாள்.

பதறிப் போன ஷனங்கள், சாக்கடையும் கழிவுமாக இருந்த குழந்தையை வாங்கி மூச்சி இருக்கிறதா என்று பார்த்தனர். நல்ல வேளை குழந்தைக்கு ஒன்றும் ஆக வில்லை, இருந்தாலும் டாக்டரிடம் காட்ட சென்றனர். அப்புறம் தான் கன்னியம்மாவை தூக்கினர். அதற்குள் கன்னியம்மா, குழந்தை தன் கையில் இருக்கும் நினைப்போடே அந்த பாதாளச் சாக்கடையில் மயங்கி சரிந்தாள். ஆம், கன்னியம்மாள் பாதாள சாக்கடையில் இறந்துவிட்டாள்.

சாவில் இருந்து தப்பிப் பிழைத்த தன் குழந்தையை மார்போடணைத்த அந்தத் தாய் செத்துப் போன கன்னியம்மாவையும் தன் குழந்தையையும் பார்த்து பெருங்குரலெடுத்து அழுதாள். அவள் ஏன் அழுதாள்? ஏதற்காக அழுதாள்?

Print Friendly, PDF & Email

1 thought on “ஏன் அழுதாள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *