ஏக்கக் கடல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 11,061 
 

‘இன்னும் கினோவும் ஜீனோவும் கடலையே பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். கடலின் மேல் பரப்பு ஒரு பச்சைக் கண்ணாடி போல் பளபளக்கிறது. மிகுந்த துயரத்துடன் அவர்கள் வீசி எறிந்த அற்புத முத்து, கடல்பாசிகளுடைய நெளிந்த அழைப்புக்கு இடையில் மணலில் புதைகிறது. ஒரு நண்டின் நகர்வு உண்டாக்கிய மணல் மேகம் சிதறி அடங்குவதற்குள், முத்து காணாமல் போயிருந்தது. இதுவரை கேட்டுக்கொண்டே இருந்த முத்தின் சங்கீதம் சிறுத்து மெள்ள மெள்ள ஓய்கிறது…’

ஜான் ஸ்டீன்பெக்கின் ‘கடல் முத்து’ என்கிற குறுநாவலை நேற்று படித்து முடிக்கும்போது மிகுந்த பின்னிரவாகியிருந்தது. நான் உறங்குவதற்கு முன் கடலின் ஓசையைக் கேட்க முயன்றுகொண்டு இருந்தேன். எங்கெங்கோ தூரத்தில் இரைந்து ஒலிக்கிற கடல் அலைகளின் ஓசையை, நான்கு சுவர்களுக்குள் தருவிக்க முடிந்தது. நான் சமீபத்தில்தான் கடல்களுக்குச் சென்று நெருக்கமாகியிருந்தேன்.

கடல் தெரிகிற மாதிரி அறைவேண்டும் என்ற கோரிக்கையை தங்கும் விடுதி கௌரவித்திருந்தது. பின் கதவு திறந்தால் தோட்டம். அதற்கப்புறம் ஒரு மதில். மதிலுடன் துவங்கியது திருச்செந்தூர் கடல். எழுதப்பட்டுக்கொண்டு இருக்கிற ஒரு கவிதையின் வரி போல அந்தக் காட்சி இருந்தது. வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்திருக்கிற இளம் பெண்ணாக இருக்க வேண்டும். பதின் வயது. ஒரு குருத்து வாழையிலை மாதிரி. குழந்தைமையிலிருந்து கன்னிமைக்கு ஊஞ்சல் கட்டி, இரண்டின் வர்ணங்களையும் சாதகமாகக் குழைத்துத் தீட்டின முகமும் கண்களும். முக்கால் கால்சட்டையும், முழங்கை வரை மூடிய ஒரு எளிய வரிகளிட்ட உடையுடன் அந்த மதிலின் மேல் போய்க்கொண்டு இருக்கிறது. பூத்துச் சடைசடையாகப் பிஞ்சுவிட்டு இருக்கிற முருங்கைக் கிளையில் ஓர் அணில் குஞ்சு நகர்வது மாதிரி இருந்தது. கொறித்த பூ உதிர்ந்து, கடல் நுரைத்தது.

ஒரு கட்டத்துக்கு மேல் பனை மரங்கள் பின்வாங்கிவிட்டன. குளிர்ந்த சாலையை உதறிக் கொண்டு போன சக்கரங்களின் ரப்பர் முணுமுணுப்புக்கு மேல் உடை மரப்பூக்களின் வாசனை படர்ந்து கொண்டு இருந்தது. நிலவு உதயமாகி எழுகிற, போக்குவரத்தற்ற நெடுஞ்சாலையில் இரண்டு புறமும் பூத்துக்கிடக்கிற உடைமரக் காடுகளை வகிர்ந்துகொண்டு போகும்படி முழு வாழ்விலும் இப்படி ஒரே ஒரு இரவுப் பயணமாவது வாய்க்க வேண்டும் எல்லோருக்கும். திருச்செந்தூரிலிருந்து குலசேகரப்பட்டினத்துக்கு அல்லது, எங்கிருந்து எங்கோ .

குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நிற்கும்போது கடல் நிலவற்ற இரவுக்குள்தான் நெளிந்து கொண்டு இருந்தது. அதிகம் போனால் எட்டு மணிகூடத் தாண்டியிராத இரவின் கறுப்பு, ஓர் அடர்த்தியான சல்லாத்துணியாகக் கடலின் முகத்தை மூடியிருந்தது. கடற்கரையில் நடமாடிக்கொண்டு இருந்த உப்புக் குரல்கள் எங்களை யாரென்று விசாரித்தன. ஓரியன் கூட்டங்களுக்கு அருகில் கூடுதல் நட்சத்திரங்கள் வந்து எங்களைக் குனிந்து பார்ப்பதை அறிந்த சந்தோஷத்துடன் கரை மணல் குளிர்ந்து அமுங்கியது. மணல் வரை வந்த பாதங்கள் அலை வரை போகாமல் இருக்குமா? கலங்கரை விளக்கு சுழன்று கடல் காட்டியது. மின்மினிப்பூச்சிகள் மொய்ப்பது போல தூரத்துக் கடலின் விளிம்பில் வெளிச்சம் சிமிட்டிக் கூப்பிடுகிற மணப்பாடு ஊர். துழாவித் துழாவி வாகனங்களுக்குத் திரும்புகையில், வலது கை உடைந்து கிடப்பதைப் பொருட்படுத்தாமல் கடல் பார்த்து அமர்ந்திருக்கிற ஏதோ ஒரு அம்மனின் சுதை உருவம்.

மணப்பாடு ஊரை நெருங்க நெருங்க… பிலோமியையும் ரஞ் சியையும் சாமிதாஸையும் தேட ஆரம்பித்து, மனம் ‘கடல்புரத்தில்’ அலைய ஆரம்பித்தது. சர்ச்சுக்கு இந்தப் பக்கம் ஏறி பின்பக்கம் இறங்கினால், கடல் வேறுமாதிரி ஜாடையுடன் அலையடிக்கிறது. நாங்கள் நான்கு பேர்களாகச் சேர்ந்தே போயிருந்தாலும், கடலுக்கு அருகில் போகிற ஒவ்வொரு முறையும் நாங்கள் தனித்தனியாக ஆகிவிடுவதை உணர முடிந்தது. எல்லோர்க்கும் பெயர்கள் இருந்தன. யாரும் பேச முடியாதவர் இல்லை . கடலைப் பற்றி ஒரு புதிய கவிதை எழுதவோ அல்லது வேறு யாரோ எழுதிய பழைய கவிதையைச் சொல்லவோ முடியும். ‘செம்மீன்’ அல்லது ‘படகோட்டி’ பாடல்களைப் பாடினால் யாரும் தடுக்கப்போவது இல்லை. ஆனால், எதையும் செய்யாமல் ஒருவரைவிட்டு ஒருவர் விலகியிருந்தோம். கடலில் தன்னந்தனியாகத் தூண்டில் போடுகிற கிழவரின் இடுப்புக் கயிற்றில் ஒரு தேளி மீன் துடிப்பதை ஒருத்தர் பார்க்கிறார். காலம் காலமாக அலைமோதிக் கரைத்த பாறையை இன்னொருவர் புகைப்படம் எடுக்கிறார். நான் அறுந்துபோன செருப்பைக் கையில் தூக்கியபடி, ‘ஜபம் செய்தும் தவம் செய்தும் சவேரியார் அர்ச்சித்த’ இடத்தையே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். கடல் பார்த்துக்கொண்டு இருந்தது எங்களை!

உவரிக் கடலுக்கு வெயில் என்றால் மிகவும் இஷ்டம்! ஒரு அந்தரங்கமான மோகத்துடன் வெயிலுக்குத் தன்னைத் திறந்து திறந்து காட்டிக்கொள்வது போல, ஜரிகைச் சேலை விலக்கி கடல் தன்னைப் புரட்டிக்கொண்டு இருந்தது. பக்கத்தில் தெரிகிற கடலின் பரவசத்தைத் தூரத்தில் தெரிகிற படகுகளின் அமைதியின் மூலமே உணர முடியும்!

அது கேரளாவின் எந்த பகவதியுடைய சிறிய கோயில் என்று தெரியவில்லை. நாங்கள் போயிருந்தபோது யாருமில்லை. கருவறையில் சரவிளக்கு வெளிச்சம் மட்டும். கும்பிடுகிற இடத்திலிருந்து பார்த்தால் விளக்குச் சுடரின் வெளிச்சத்தைத் தவிர, வேறு எதுவும் தெரியவில்லை. கருவறையின் படிக்கட்டில் செம்பருத்தி போன்ற, ஆனால் செம்பருத்தி அல்லாத ஓர் ஒற்றைப் பூ இருந்தது. அன்றைக்கு அந்தப் பூவே எனக்கு பகவதி. இன்றைக்கு இந்தப் படகுகளே கடல்.

பனங்கிழங்குகளைவிட ஐஸ் வியாபாரம் கணிசமாக இருந்தது. ரொம்ப காலத்துக்குப் பிறகு, அது அந்த ஐஸ் விற்கிறவரின் திருவிழாநாளாக இருந்திருக்கும். குழந்தைகளுக்குச் சமமாக அல்லது குழந்தைகளைவிடவும் பெண்கள் குச்சி ஐஸ்களை உறிஞ்சியபடி நின்றார்கள். வீட்டுக்கு வெளியே இருக்கிற காற்று, கடவுளுக்கு அருகில் இருக்கிறதால் ஒரு பத்திர உணர்வு, கடல் உண்டாக்குகிற ஒரு கிளர்ச்சி… எல்லாவற்றாலும் வீட்டிலிருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்ததை விட இங்கே அழகாகிவிட்டிருந்தார்கள். ஓர் அறுவடைக் காலத்தில் ஈர வைக்கோல் கடிப்பது அழகானதா, சந்தோஷமானதா? சந்தோஷத்தின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறபோது ஒரு குச்சி ஐஸ் மட்டுமல்ல, ஒரு கோழித் தூவல் பறந்து வந்தால்கூட அவர்களை மேலும் அழகாக்கியிருக்கத்தான் செய்யும்.

இந்த அழகுக்கு நேர் எதிராக, சற்று மனநிலை தவறிய அந்தப் பெண், சர்ச்சுக்கு முன் உள்ள கொடிக்கம்ப வட்டத்தில் துவங்கி, ஓர் இயந்திர உருளையைப் போல மணலில் புரண்டு புரண்டு வேகமாகச் சுழன்றுகொண்டு கடல் பக்கமாகவே போனார். ஒரு புள்ளிக்கு அப்புறம், மணலின் சரிவில் உருண்டு அவர் மறைந்து போய்விட்டதற்கு யாரும் பதற்றம் அடையவே இல்லை.

இந்த முறை விவேகானந்தர் பாறையில் எந்தத் தியான உணர்வும் இல்லை. வெளிப்பக்கம் சூழ்ந்திருந்த முக்கடல், தியான மண்டபத்தின் நீல நிற ‘ஓம்’-ஐ விட நீலமாக இருந்தது. செதுக்கி வைத்தது போல முக, உடல் அமைப்புக்களுடன் எங்களுக்கு முன்னால் நின்ற வெளிநாட்டுத் தம்பதியும், பெரிய பெரிய தலைப்பாகைகளுடன் எளிய விவசாயி முகங்களுடன் எங்களுக்குப் பின்னால் நின்றவர்களும்தான் எனக்கு அன்றைய தியானம்! படகில் கூட்டம் கூட்டமாக ஏறிய பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள், அடுத்துக் கிடைத்த அற்புதம். அவர்களில் நான் விவேகானந்தரைத் தேடவில்லை. சிறுவர்களைச் சிறுவர்களாகவே பார்ப்பது மட்டுமே என் விவேகமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.

தங்கும் விடுதியின் கதவைத் திறக்கும்போது, மறுபடியும் அந்த இலவ மரங்களைப் பார்த்தேன். மிகவும் நெருக்கமாகக் காய்த்துத் தொங்குகிற இந்த இலவ மரம் எப்போதாவது என் கனவில் மீண்டும் வரும். கனவில் இதன் காய்கள் வெடிக்கும் பஞ்சுச் சுளைகளுக்குப் பதிலாக, படகில் ஏறின பையன்களின் வெள்ளைச் சிரிப்பு வெயிலில் பறந்து மினுங்கும். இது இன்னொரு கடற்கரை. சற்று நேரத்துக்கு முன்பு வரை இந்த இடத்தில் அலையும் கரையும் மட்டுமே இருந்தன. இப்போது அந்தப் பெரிய கடல் ஆமை ஒதுங்கியிருக்கிறது, தன் அனைத்து நீச்சலையும் முடித்து! பிளாஸ்டிக் வாளித் தண்ணீரில் ஒரு விளையாட்டு பொம்மை மிதப்பது போல அது கனமற்று, அலைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தது. இப்போதுகூட மூன்றாம் நாள் உயிர்த்தெழச் சம்மதத்துடன் நீச்சலுக்குத் தயாராக துடுப்பு வசத்தில் நான்கு கால்களும் இருந்தன. இறந்த பறவைகளின் கண்களில் உறைந்திருக்கிற கடைசி மூச்சின் வானம் போல, அந்த ஆமையின் கண்களில் ஒரு நீந்தும் கடல் இருந்தது. இழுத்துக் கட்டப்பட்டு இருக்கிற ஒரு படகின் நுட்பமான அசைவுடன், அது அலைகளின் அஞ்சலியை ஏற்றுக்கொண்டு இருந்தது. எனக்குத்தான் என் ஒரே ஒரு கடற்கரைச் சினேகிதியை இழந்த பிறகு சந்திக்க நேர்ந்த துக்கம்.

விளிம்பில் நிற்கிறவர்கள்’ கதையில், ‘அழைக்கிறவர்’ கதையில் எல்லாம் ஒரு தனலட்சுமி, ஒரு அலமேலு நரசையா வருவார். இருவருமே ஒருவர்தான். அசல் பெயர்கள் வேறு. அப்போது மட்டுமல்ல, இப்போதும்கூட யாரையும் பெயர்சொல்லிக் கூப்பிடுகிற மாதிரி யாருக்கும் வாழ்க்கையில் அனுமதியில்லை.

பெயரைச் சொல்வதற்குக்கூட அனுமதி வேண்டியிருக்கிற வாழ்க்கையில் பெயரைத் தாண்டி வேறு எதையும் எப்படிச் சொல்லிவிட முடியும்? அலுவலகம் சார்ந்து ஊர்கள் மாறிக்கொண்டு இருந்த ஒரு ஜூன் மாதக் கடற்கரை. எனக்குப் பரிசளிக்கப்பட்டு இருக்கிற புத்தகங்களில் உபரியாக இப்போதும் இருப்பவை, பாரதியார் கவிதைகளும் திருக்குறளும்தான்! நான் தனலட்சுமிக்கு பாரதியார் கவிதைகளைக் கொடுத்தேன். அன்றைக்குக் கடற்காற்று சற்று அதிகம். பாரதியாரின் எந்த வரிகளைத் தேடி அவ்வளவு வேகமாகக் காற்று புத்தகத்தைப் புரட்டியதோ தெரியாது!

கடல் எங்கிருந்து துவங்குகிறது? கடலின் மறுபக்கம் எது? நதி மூலம் போல கடல் மூலம் உண்டா ? நதிமூலம்தானே கடல் மூலம்!

‘இக்கரைக்கும் அக்கரைக்கும் பரிசலோட்டி பரிசலோட்டி
எக் கரை என் கரை என்று பறக்கும் இடையோடும் நதி
மெல்லச் சிரிக்கும்.’

நதி மெல்லச் சிரித்தால், கடல் உரத்துச் சிரிக்கும். அவ்வளவுதானே!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *