எல்லைகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 12, 2021
பார்வையிட்டோர்: 6,715 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் குருவியின் கத்தலுடன் அவனுக்கு விழிப்புக் கண்டது. அவன் இடப்புறமாகத் திரும்பிப் படுத்தான். பாதங்கள் குளிர்ந்து சில்லிடுவது போலிருந்தது. போர்வையை இழுத்துப் பாதங்களை மூடிக்கொண்டான். அடுத்த அறையில் மெல்லியதாக கொட்டாவி விடும் சத்தம் கேட்டது. ஆள் அசைவதினால் கட்டிலின் சரசரப்புக் கேட்டது. முழுவதாகத் தூக்கம் கலையாத மயக்கத்தில் அவன் கண்களை மூடியிருந்தான். மூடிய கண் இமைகளில் இருள் வட்டங்களும், ஒளி வட்டங்களும் ஒன்றோடு ஒன்று கலந்தும், கூடியும், பிரிந்தும், மாறுபட்டும் அசைவது போலிருந்தது.

ஒருவிதமான அமைதி; ஒருவிதமான மயக்கம் ; ஒருவிதமான இனம்புரியாத அலுப்பு. அந்தக் குருவி மட்டும் டிரிங்… டிரிங் என்று தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தது.

மூடிய கண்ணிமைகளின் ஊடாக ஒளி ஊடுருவிற்று. அவன் திடுக்கிட்டு விழித்தான். அடுத்த அறையில் வெளிச்சம் போடப்பட்டிருந்தது. கதவின் இடைவெளிகளூடாகவும், கூரையை ஒட்டிய இடைவெளியினூடாகவும் அது இவன் அறையிலும் பரவி இருந்தது. இவன் அறை நண்பன் சிவத்தக் கம்பளியால் உடல் முழுவதையும் மூடி குறங்கி உறங்குவது மங்கலாகத் தெரிந்தது. அடுத்த அறையிலெழுந்த சந்தடியிலிருந்து வீட்டு எஜமானி எழுந்து விட்டாளென இவன் ஊகித்தான்.

இவன் நீட்டி நிமிர்ந்து படுத்தான். கண்களை நன்றாக மலர விழித்துக் கூரை முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். அன்று இரவு சரியாக உறங்கவில்லைப்போல இவனுக்குப் பட்டது. இரவு பதினொரு மணிக்குப் படுக்கப் போகமுன் கடைசியாகப் படித்த கதை இவனுக்கு மங்கலாக ஞாபகம் வந்தது. முதல் நாள் மாலையில் ஒவ்வீசுக்கு லீவு போட்டுவிட்டுப் பார்த்த சினிமாப்படம் ஞாபகத்திற்கு வந்தது. முதல் நாள் அவன் நெருங்கிய நண்பனிடமிருந்து வந்த, கண நேரச்சலசலப்பை ஏற்படுத்திய, அவன் மனத்தில் ஏதோ இனம்புரியாத சோகத்தை ஏற்படுத்திய அந்தக் கடிதம் ஞாபகத்திற்கு வந்தது.

அந்தக் குருவி தொடர்ந்தும் டிரிங்.. டிரிங்…. என்று கத்திக்கொண்டேயிருந்தது. ‘இந்த இழவு ஏன் கத்தித் தொலைக்கிறது…’ என்று நினைத்துக்கொண்டான். தொடர்ந்து அப்படி நினைத்ததற்காக வெட்கப்பட்டான். அந்தக் குருவியின் கத்தலை அவன் மிக ஆழமாகக் கவனித்தான். அதில் பொங்கி வழியும் குதூகலத்தை அவன் உணர்ந்தான். அவனுக்கு அந்தக் குருவியின் மேல் பொறாமைப்பட வேண்டும் போல் இருந்தது.

பெருமூச்சு விட்டுக்கொண்டு ஏதோ நினைவில் மூழ்கிக் கிடந்தவன் சரேலென துள்ளி எழுந்துகொண்டான். கண்களைக் கசக்கிக்கொண்டான். கைகளை முன்னும். மேலும், பக்கவாட்டிலுமாக நீட்டி நீட்டி தேகாப்பியாசம் செய்து கொண்டான். வளைந்து குனிந்து நிமிர்ந்தான். ஒன்று மாறி ஒன்றாக கால்களை முன்னும் பக்கவாட்டிலும், பின்னும் பின்னும் வைத்து எடுத்தான். உடம்பின் அலுப்பு நீங்கி புத்துணர்ச்சி வந்து விட்டதாக அவன் தனக்குள் தானே நம்பிக்கொண்டான்.

மெதுவாக ஜன்னலின் ஒரு சிறகைத் திறந்து வெளியே பார்த்தான். பலபலவென்று விடிந்துகொண்டிருந்தது. அரையிருட்டில் மிதக்கும் மரங்களும் தென்னைமர ஓலைகளும் எதோ கனவுக் காட்சி போலிருந்தன. குருவி டிரிங். டிரிங் கென கத்துவது கேட்டது. அவன் மனத்திலும் குதூகலம் பொங்கி வழிவதுபோற் தோன்றிற்று.

அறையினுள் திரும்பி லைற்றைப் போட நினைத்தவன், குறங்கி உறங்கும் நண்பனின் நிலையைப் பார்த்ததும் தன் நினைப்பை மாற்றிக்கொண்டான். போர்வையால் உடம்பை மூடிக்கொண்டு, கண்ணை விழித்துக்கொண்டு அப்படியே நீட்டி நிமிர்ந்து படுக்கவேண்டும் போல அவனுக்குப்பட்டது. எவ்வளவு சாதாரணமாக நண்பன் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தான். இந்தத் தேடல்களும், காத்திருத்தல்களும், ஏன் வாழ்க்கையும் அர்த்தமற்றவைபோல அவனுக்குப் பட்டது. சோர்ந்துபோய் கட்டிலில் உட்கார்ந்தான்.

குருவி டிரிங். டிரிங்கென கத்திக்கொண்டிருந்தது.

பாத்ரூம் தொட்டியில் சளசளவென்று தண்ணீர் நிரப்பும் சத்தம் கேட்டது; வீட்டு எஜமானி திறந்து விட்டிருப் பாளென நினைத்துக்கொண்டான். அந்த அதிகாலையிலேயே, சில்லிடும் பனிக்குளிரில் குளித்தால் எப்படி இருக்குமென நினைத்துக்கொண்டவன் துவாய்த்துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு, சோப் பெட்டியையும், பற்பொடியையும் கையிலெடுத்துக்கொண்டு, மெதுவாக அறைக் கதவைத் திறந்தான். அது என்றுமில்லாதவாறு அன்றுதான் சத்தம் போட்டுத் திறந்தது போலிருந்தது. அறை நண்பன் மறுபக்கம் திரும்பிப் படுத்தான். பாத்ரூம் வாசலில் மின்விளக்கின் வெளிச்சம் மங்கலாகப் பரவி இருந்தது. பாத்ருமுக்கும் வீட்டுக்கும் இடைப்பட்ட ஓடையில் வீட்டு எஜமானி பல் துலக்கிக்கொண்டிருப்பது நிழலுருவமாய் தெரிந்தது.

வீட்டு வாசல் முகப்பில் நின்று கொண்டு இவனும் பல்லைத் துலக்கத் தொடங்கினான். குளிருக்குப் பாதுகாப்பாக துவாயினால் நெஞ்சை மறைத்துக்கொண்டான். தென்னை மர ஓலைகள் அசைவற்று நிர்ச்சலனமாகக் கிடந்தன. வானத்தில் இரண்டொரு நட்சத்திரங்கள் பளிச்சிட்டன. காக்கைகள் கத்திக்கொண்டு பறந்தன.

முகம் கழுவிக்கொண்டு வந்த எஜமானி இவனை ஏதோ அதிசயமாகப் பார்த்துக்கொண்டு குசினியுள் விரைந்தாள் இவன் குளியலறையில் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான். உடம்பு சில்லிட்டு நடுங்கிற்று பற்கள் தாளம் போட்டன. இவன் தண்ணீரைக் கையினால் அளைந்தவாறே தயங்கினான். ‘வாழ்க்கையின் அர்த்தமென்ன? வெறும் நாளாந்த இயக்கங்கள் தானா? குளித்து முழுகி, உண்டு உடுத்து, பேசிச் சிரித்து.

சிரித்து ………..

அவள் அழகாகச் சிரிப்பாள். அகத்தின் மலர்ச்சியாய் இதழ்கள் விரிய , கண்கள் பரவச ஒளி பெற்றுத்திகழ. வெண்பற்கள் பளிச்சிட அடித் தொண்டையிலிருந்து மென் மையான ஒரு தொனி கிளம்பி வர ………

கடகடவென்று தண்ணீரை அள்ளி உடம்பில் ஊற்றினான். சோப் போட்டு உடம்பைத் தேய்த்துக் கொண்டான் துவாயால் உடம்பை ஒத்திக்கொண்டு அறைக்கு மீண்டான்.

வீட்டு நடுக்ஹோலில் வெளிச்சம் போடப்பட்டிருந்தது. நடுக்ஹோலையும், அவன் அறைவாசலையும் பிரிக்கும் இடைவெளியின் திரைச்சீலை அரைகுறையாக இழுத்து மூடப்பட்டிருந்தது. இடைவெளியின் திறந்த பகுதியினூடாக புகை வளையங்கள் கிளம்பிச் சுழன்று சுழன்று செல்வது தெரிந்தது. மெல்லிய சத்தத்தில் வானொலியிலிருந்து நாத வெள்ளமாய் இன்னிசை கிளம்பி வந்தது.

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய்…….

அன்று திருவெம்பாவை ஆரம்பநாளென்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவனுக்கு கோவிலுக்குப் போகவேண்டும் போலிருந்தது. வீட்டின் வேலைக்காரச் சிறுவன் கொண்டுவந்து கொடுத்த ஆவி பறக்கும் தேனீரை மடக்மடக் கென்று குடித்தான். அந்தச் சிறுவனைப் பார்க்கையில் அவனுக்கு அனுதாபமாக இருந்தது. சோகை பிடித்த பையன் போல அவன் இருந்தான். சிறுவனின் கண்களில் கலையாத தூக்கத்தின் சாயல் தெரிந்தது .

“வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ” அவளது மெதுமையான நளினமான குரலோசை.

அவன் மளமளவென்று வெளிக்கிட்டுக்கொண்டான். அப்போதுதான் விழித்த அறை நண்பன் கேள்வியைக் கண்ணில் தேக்கி இவனைப் பார்த்தான் கோவிலுக்குப் போகிறேன்” என்று இவன் சொன்னான். “சோதனைக்கு இன்னும் இருபது நாள் கிடக்கு. நான் விடிய விடியப் படுக்கிறேன்” என்று துள்ளி எழுந்தான் அவன்.

இவன் தன் உற்சாகத்தை எல்லாம் இழந்தவனாக அவனைப் பார்த்தான். அவன்கன்னத்திலடித்து அவனைப் பேசாது படுக்கச்சொல்ல வேண்டும் போல இவனுக்குப் பட்டது. சிறிது நேரம் தயங்கி நின்றவன் “நான் வாறேன்” என்று சொல்லி அறையை விட்டுக் கிளம்பினான்.

வெளியே பனி புகையாய்த் தெரிந்தது. ஒழுங்கையில் முன் தலையில் வழுக்கை விழுந்த ஒருவர் இவனைக் “கோவிலுக்குப் போகிறீரா”? என்று விசாரித்தார். இவன் ஆமெனத் தலையசைத்தான். ஒரு கூடு கற்பூரத்தை இவன் கையில் திணித்து அவர் பரபரப்புடன், அவசரத்துடன் எங்கோ விரைந்தார்.

இவன் சோர்ந்துபோய் வஸ்ராண்டை நோக்கி நடந்தான்.

விடியற்காலை அமைதியில் வீதி நீண்டு கிடந்தது. கரையிலிருந்த வீதி விளக்குகள் மௌனமாக மினுங்கின. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளிக்கோடுகளாய் வாகனங்கள் அசைந்தன.

பஸ் ஸ்ராண்டில் சிலர் பஸ்ஸிற்காகக் காத்து நிற்கிறார்கள். அனேகமானோர் கோவிலுக்குப் போகின்றவர்களாகவே இருந்தார்கள். ஒருசிலர் கைப்பைகளுடன் எங்கோ தொலைதூரம் பயணப்படுபவர்கள் போல நின்றிருந்தார்கள். இரண்டொரு வாலிபர்களைத் தவிர கோவிலுக்குப் போக நின்றிருந்தவர்களில் அனேகர் பெண்கள். குளித்து முழுகி வண்ணங்களினாலான பட்டுச் சேலைகள் கட்டியிருந்தார்கள். இளம் பெண்கள் பளபளக்கும் நீண்ட பாவாடையும் சட்டையும் அணிந்திருந்தார்கள். அவர்களின் முகங்கள் அப்போதுதான் விரியும் மலர்களாக….

மலர்களாக … குழந்தையின் பேதைமை மாறாத அந்தக் காலத்தில் மழை பெய்த ஒரு திருவெம்பாவைக் காலைப்பொழுதில், கிராமக்கோவில் வீதியில் பவளமல்லிகை மரத்தின் கீழ் மலர்கள் பொறுக்கிய அவனும் அவளும்……

பஸ் இரைந்து கொண்டுவந்து நின்றது. எல்லோரும் இடித்துப் பிடித்துக்கொண்டு ஏறினர். இவன் கடைசியாக ஏறினான். இரண்டு மூன்று நிறுத்தங்களுக்கப்பால் இறங்கிக் தனியனாக நடந்து கோவிலுக்குச் சென்றான்.

கோவிலுள் கூட்டம் அதிகமாக இருந்தது. பாடற்பூசை அதன் இறுதிநிலைக்கு வந்திருந்தது. இறுதிப் பாடலைத் தொடர்ந்து பூசகர் தீபம் காட்டினார். மேளம் முழங்கிற்று. கூட்டம் அரோகரச் சத்தம் இட்டது. இவனுக்கு முன்னால் நின்றவர் கரங்களைத் தலைக்குமேல் தூக்கி மூன்று முறை தன்னைத்தானே சுற்றிவந்தார். இவனும் கரம் கூப்பினான். ஏதோ பொறி தட்டினால் போல: ‘இதெல்லாம் எதற்காக? எதற்காக?’

விபூதி கொடுத்தனர்; தீர்த்தம் கொடுத்தனர். சந்தனம் கொடுத்தனர்; பிரசாதம் கொடுத்தனர்; குசுகுசு கதைகள் மேலோங்கி நின்றன. மனிதர்கள் நடமாடும் நிழல்களாய் அசைந்தனர். ஒவ்வொரு முகத்தையும் பார்க்க வேண்டும் போலவும், அந்த அந்த மனங்களில் கனக்கும் சோகங்களை அறிய வேண்டும் போலவும் …. கையைப் பிடித்து வருடி ஆறுதல் சொல்ல வேண்டும் போலவும் ……

கோவிலுக்கு அவனுக்குத் தெரிந்த நெருங்கிய நண்பர்கள் எவரும் வந்திருக்கவில்லை. கோவில் மண்டபத்தை யொட்டிக் கட்டப்பட்டிருக்கும் குந்துச்சுவரில் சிறிது நேரம் இருக்க வேண்டும் போலிருந்தது. அசையும் மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். சிரிக்கும் முகங்களையும், கதைக்கும் வாய்களையும், தலையாட்டல் புன்முறுவல்களையும் மனத்தைச் சொக்கவைக்கும் வண்ணங்களையும், நளினங்களையும், கடைக்கண் விச்சல்களையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

கூட்டம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டிருந்தது. பெருமூச்சுவிட்டுக்கொண்டு எழுந்திருந்தான். வீதியை ஒட்டிய கோவில் வாசற்புறத்தை அடைந்தவன் நடந்து போவோமா, பஸ்ஸில் போவோமா என்று ஒரு கணம் தயங்கினான். விடியற்புறத்து நடை ஒரு மாறுதலாக விருக்குமென நினைத்தவன் நடக்கத் தொடங்கினான்.

காலை வெளுத்து நகரம் உயிர்த்துவிட்டது. அவசர அவசரமாக மனிதர்கள் வீதியில் நடமாடத் தொடங்கி விட்டார்கள். வாகனங்கள் இடையறாத இரைச்சலுடன் ஓடத் தொடங்கிவிட்டன.

அவன் மனதில் கவிந்த தவிப்புடன் நடந்தான். இந்த வாழ்வின் ஒவ்வொரு இயக்கமும் அர்த்தமற்றவை போலவும், சோகம் நிரம்பியவை போலவும் அவனுக்குப் பட்டது. அர்த்தமற்ற இயக்கங்களும், இனிமை கவிந்த சோகங்களுந்தான் வாழ்க்கையின் அர்த்தங்கள் போலவும் அவனுக்குப்பட்டது. ஏதோவொரு பாடலை முணுமுணுத்தவாறு நடந்தான்.

வழியில் பாலம் எதிர்ப்பட்டது கால்வாயின் மரங்களற்ற இடைவெளியினூடாக துரத்தில் தொழிற்சாலைப்புகைக் குழாயினூடாக புகை சென்று கொண்டிருந்தது. அது வளைந்து வளைந்து வானத்தில் ஏதோ தேடுவதாக அவனுக்குப்பட்டது. தங்கச் சூரியனின் பொன்னிறக் கதிர்கள் புகைக் கோடுகளாக மர இடைவெளிகளினூடாகக் கோலம் போட்டது.

நேரம் ஏழுமணியாகிக் கொண்டிருந்தது. தனித்த அவன் நடையின் துரிதம் கூடிற்று. கைகளை வீசிக்கொண்டு நடந்தான். எதையும் பார்க்காதவனாக எதையும் மனத்தில் வாங்காதவனாக நடந்தான். கையைத் தூக்கி அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு நடந்தான்.

தொழிற்சாலைச் சங்கூதிற்று. இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் அவன் அந்த வீதியில் குடியிருந்தபோது. அந்தச் சங்கூதலுடன் வீதியில் எதிர்ப்படும் அந்த அழகி, அவன் நினைவுக்கு வந்தாள். சிவந்த நிறமும், இளமை கொஞ்சும் வாளிப்பும், கனவுகளைத் தேக்கிய கண்களும், ஓய்யாரமான கைவீச்சும்…… அவனைக் கண்டு சில வேளைகளில் புன்னகை பூப்பள் சிலவேளைகளில் கண்டும் காணாதவளாக முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு செல்வாள். அவன் பார்வை தொலைவை ஊடுருவிற்று. அவள் அசைந்தாடி வருவது தெரிந்தது. அவன் மனத்தில் பரபரப்பு மேலோங்கிற்று. நீண்ட சில நாட்களின் பின் அவளை எதிர்கொள்ளத் தயாரானான். அவள் அவனை அண்மினாள். உயிரற்ற ஒரு பார்வை; தலை கவிழல்; மௌனம்; விரைந்த நடை.

அவனுள் ஏதோ நொறுங்கியது போலிருந்தது. தொழிற் சாலை, பஸ், கார். கைக்கடிகாரம், மூக்குக் கண்ணாடி எல்லாவற்றையும் அடித்து உடைக்க வேண்டும் போலிருந் தது. எல்லா மனிதரையும் பிடித்து வந்து சிரிப்பதற்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும் போலிருந்தது.

அவளும் சிரித்தாள். கோவில் திருவிழாவில் அவன் அவளுக்காகக் காத்திருந்தபோது, அவனுடன் சிரித்தவள் ….. அவனுடன் திரிந்தவள் …… வேறோருவனுடன் குலுங்கிக் குலுங்கிக் குதூகலமாய்ச் சிரித்தாள்.

அவன் தன் கண்களினாலேயே கண்டான்.

“ஐயா! பிச்சை” என்று கை நீண்டது. பாடசாலை மதிற் சுவரில் சாய்ந்திருந்தவன் கந்தல் துணி கட்டியிருந் தான். முகத்தில் நரை மயிர்கள் கண்களில் ….. பத்துச் சதத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு நடந்தான்.

கைகளை வீசிக் கொண்டு, கால்களை அகல வைத்துக் கொண்டு, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கன கம்பீரத் துடன் நடந்தான். அவனுக்குத் தன்னிலேயே வெறுப்பு வந்த மாதிரி இருந்தது. ‘இந்த மனிதர்கள் இந்த மனிதர்கள்’ என்று தலையில் அடித்துக் கொள்ளவேண்டும் போலிருந்தது.

மனிதர்கள் விரைந்து கொண்டிருந்தார்கள். கார்களும். பஸ்களும் விரைந்து கொண்டிருந்தன. அகன்ற அந்த வீதியைக் கடப்பதற்கான சரியான சந்தர்ப்பத்தைப் பார்த்து அவன் காத்திருந்தான்.

சந்தியிலிருந்த சிக்னல் விளக்கில் பச்சையொளி, எல்லாமே பேரிரைச்சலுடன், பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருப்பதாக…

அவன் நடைபாதையில் சிவப்புச் சைகைக்காகக் காத்து நின்றான்.

– 1977 – கோடுகளும் கோலங்களும் – அலை வெளியீடு – மார்கழி 1976
– சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “எல்லைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *