என் சாவுக்கு நாலு பேர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 5,762 
 

அறைக்கதவு ‘தட…தட” வெனத் தட்டப்பட படுக்கையில் படுத்தவாறே செல் போனில் பேசிக் கொண்டிருந்த சுரேஷ், அவசரமாய் அதைத் துண்டித்து விட்டு பாய்ந்து சென்று கதவைத் திறந்தான்.

கண்ணன் நின்றிருந்தான் கலவர முகத்துடன்.

‘டேய்…கண்ணா…என்னடா?…என்னாச்சு?…ஏன் ஒரு மாதிரி பதட்டமாயிருக்கே?”

சட்டென்று உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டவன் தன் பாக்கெட்டிலிருந்து செல் போனை எடுத்து. அந்தக் குறுந் தகவலைக் காட்டினான்.

‘என் சீனியர்களான சுரேஷ்….கண்ணன்…வேணு…மற்றும் சக்தி ஆகியோர் என்னை மிகவும் கீழ்த்தரமாக ராகிங் செய்ததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்…என் சாவிற்கு இந்த நால்வருமே காரணம்…இப்படிக்கு….சீனிவாசன்.”

அந்தக் குறுந் தகவலைப் படித்து முடித்ததும், சுரேஷூக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

‘அய்யய்யோ….என்னடா இது?..சும்மா வெளையாட்டுக்கு ராகிங் பண்ணப் போக…அது இப்ப பெரிய பிரச்சனை ஆயிடும் போலிருக்கே..” சுரேஷ் புலம்ப,

‘இந்த மெசேஜ் உன் மொபைலுக்கும் வந்திருக்குமே?”

சுரேஷ் தன் மொபைலில் தேடினான். ‘ஆமாம்டா…எனக்கும் வந்திருக்கு…நான்தான் கவனிக்கலை”

‘நம்ம நாலு பேருக்கும் மட்டும் மெசேஜை அனுப்பிட்டு அவன் எங்கியோ போயிட்டான்”

‘எங்கடா போயிருப்பான்?,” சுரேஷின் குரல் நடுங்கியது.

”எனக்கென்னடா தெரியும்?…மெசேஜ் வந்ததும் உடனே அவன் ரூமுக்கு ஓடிப் போய்ப் பாரத்தேன்… அங்க அவனோட ரூம் மேட்ஸ் மட்டும்தான் இருந்தாங்க… அவனைக் காணோம்… நான் அவங்ககிட்ட கேட்டேன்… நேத்திக்கு ராத்திரி எட்டு மணிக்கு எங்கியோ கிளம்பிப் போனானாம்… அப்புறம் திரும்பி வரவே இல்லையாம்…”

‘நேத்திக்கு ராத்திரி எட்டு மணின்னா… அப்ப நைட் பூராவும் வரவேயில்லையா?”

‘ஆமாம்டா…” சொல்லிவிட்டுக் கையைப் பிசைந்தான் கண்ணன்.

அப்போது கதவு லேசாகத் தட்டப்பட இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனரே தவிர போய்க் கதவைத் திறக்கவில்லை.

தொடர்ந்து கதவு பலமாக இடிக்கப்பட்டதும்;

‘யாராயிருக்கும்டா?” சுரேஷ் கிசுகிசு குரலில் கேட்டான்.

‘தெரியலையேடா….” கண்ணன்.

‘திறக்கலாமா?”

‘ம்..”

மெல்ல நடந்து சென்று நிதானமாய்க் கதவைத் திறந்தான் சுரேஷ்.

வேணுவும்…சக்தியும்!

‘உள்ளார வாங்கடா…உள்ளார வாங்கடா” அவசரமாய் அவர்களை இழுத்து அறைக்குள் நுழைத்து கதவைத் தாழிட்டான் சுரேஷ்.

‘என்னடா…மெசேஜ் பாத்தீங்களா?” கண்ணன் கேட்க,

‘அதைப் பாரத்திட்டுத்தான் மிரண்டு போய் ஓடி வந்திருக்கோம்” என்றான் வேணு.

‘சரி… அந்த சீனிவாசனைப் பத்தி ஏதாவது தகவல்?”

‘ம்ஹூம்…” உதட்டைப் பிதுக்கினான் சக்தி.

சில நிமிட அமைதிக்குப் பின்

‘டேய்… எப்படியம் இன்னும் கொஞ்ச நேரத்துல…அவன் தூக்குல தொங்கிட்டதாகவோ… ரெயில் தண்டவாளத்துல கெடக்கறதாகவோ… இல்ல விசம் குடிச்சு செத்திட்டதாகவோ… தகவல் வரும்… அப்புறம் நம்ம நாலு பேரையம் தேடிட்டு போலீஸ் வரும்…” சுரேஷ் சொல்ல இடைமறித்தான் சக்தி

‘அதெப்படி… குறிப்பா நம்ம நாலு பேரை மட்டும் தேடிட்டு வரும்?”

‘அட ஞானசூன்யம்… போலீஸ் மொதல்ல அவனோட மொபைல் போனைத்தான் குடையும்… அப்படிக் குடையும் போது அதுல அவன் நமக்கு அனுப்பின மெசேஜ் இருக்கும்… அது போதாதா? அவன் தற்கொலைக்கு காரணம் நாம்தான் என்பதற்கு?”

‘டேய்…இதிலிருந்து தப்பிக்கணும்… அதுக்கு என்ன வழி… அதைச் சொல்லுவியா… அதை விட்டுட்டு… போலீஸ் வரும்… நாய் வரும்னுட்டு….”

‘ம்ம்ம்… ஒரே வழியிருக்கு… நாம நாலு பேரும் மொதல் வேலையா ஹாஸ்டலை விட்டு வெளியெறி… அவனவன் சொந்த ஊருக்குப் போறோம்…”

‘சுத்தம்…ஏண்டா தப்பிக்க வழி கேட்டா… மாட்டிக்க வழி சொல்றே… நாம் இங்க இல்லேன்னதும் நேரா நம்ம சொந்த ஊருக்குத்தான் வரும் போலீஸ்… அதனால நாம என்ன பண்ணறோம்… ஒரு மாசத்துக்கு லீவு போட்டுட்டு… நார்த் சைடு போய்டுவோம்…”

‘நார்த்துல எங்க?”

‘ம்…டெல்லி போய்டுவோம்டா… அங்க எங்க மாமா இருக்கார்… மிலிட்டரி ஆபீஸர்… ரொம்ப நாளா கூப்பிட்டுக்கிட்டே இருக்கார்… நான் போனா ரொம்ப சந்தொஷப்படுவார்…” சுரேஷ் சொல்ல,

‘சரி…நீ போய்டுவ…நாங்க?”

‘அய்யய்யோ… நாம நாலு பெரும் தாண்டா…”

அடுத்த சில நிமிடங்களில் அவசர அவசரமாய் லீவ் லெட்டர் எழுதி பக்கத்து அறைக்காரனிடம் கொடுத்து ‘ஊரில எங்க சித்தப்பாவுக்கு ரொம்ப சீரியஸாம்… இப்பத்தான் தகவல் வந்தது… நான் உடனே கௌம்பறேன்… இவனுகளும் என் கூட வர்றானுக… இந்த லீவ் லெட்டரை நாளைக்கு எங்க புரபஸரிடம் சேர்த்துடுப்பா… ப்ளீஸ்..” போலிச் சோகம் பூசிய முகத்துடன் சொல்லி விட்டு,

ரயில் நிலையம் நோக்கிப் பறந்தனர் அந்த நால்வரும்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு,

கல்லூரியில் எந்தப் பிரச்சினையும் இல்லை… எல்லாம் சுமுகமாகவே போய்க் கொணடிருக்கின்றது என்பதை தொலைபேசியில் விசாரித்துத் தெரிந்து கொண்டு ஊர் திரும்பினர்.

மறுநாள் காலை 9.15.

கல்லூரி நுழைவாயிலில் நின்று நிலைமையை நிதானமாய் ஆராய்ந்து கொண்டிருந்த அந்த நால்வரும் பஸ்ஸிலிருந்து இறங்கிய அந்த நபரைக் கண்டதும் அதிர்ச்சி வாங்கினர்.

சீனிவாசன்.

வெகு இயல்பாக தங்களைக் கடந்து சென்ற அந்த சீனிவாசனை ‘டேய்…சீனிவாசா…” அழைத்தான் சுரேஷ்.

‘அடடே… நீங்களா?… என்னாச்சு? ரெண்டு மாசமாத் தலைமறைவாயிட்டீங்க போலிருக்கு” கிணடலாய்க் கேட்டான்.

‘ஏண்டா தற்கொலை பண்ணிக்கப் போறதா மெசேஜ் அனுப்பிச்சிட்டு எங்கேடா போனே?”

‘சும்மா… ஊர் வரைக்கும் போயிருந்தேன்… மறுநாள் ஈவினிங்கே வந்திட்டேனே…”

‘என்னது மறுநாளே வந்திட்டியா? அப்ப நீ தினமும் காலேஜூக்கு வந்திட்டுத்தான் இருக்கியா?”

‘ஆமாம்… அதிலென்ன சந்தேகம்?”

‘அடப்பாவி… அப்புறம் ஏண்டா… எங்களுக்கெல்லாம் அப்படியொரு மெசேஜ் அனுப்பிச்சே?”

‘அதுதான் அமைதிப் படையோட அட்டாக்”

‘ச்சை… கிறுக்கா… கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுடா…” சுரேஷ் ஆத்திரமாகிக் கத்த,

‘நீங்கெல்லாம் என்னோட சீனியர்ஸ்!… உங்க கூடவெல்லாம் மோத என்னால முடியாது… அதனால் என்னைக் கேவலமா ராகிங் செஞ்ச உங்களை சைலண்ட்டா அட்டாக் பண்ணணும்னு நெனச்சேன்… பண்ணிட்டேன்…”

அவன் சொல்வது முற்றிலுமாய்ப் புரியாது போக, அவர்கள் நால்வரும் விழித்தனர்.

‘கண்ணுங்களா… நம்ம காலெஜ்ல அட்டண்டெண்ஸ்ல ரொம்ப ஸ்டிரிக்ட்… அதிகமா லீவ் போட்டா எக்ஸாமே எழுத விட மாட்டாங்க! நீ எப்பேர்ப்பட்ட கொம்பனாயிருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது… அனேகமா இப்பவே நீங்க நாலு பேரும் கிட்டத்தட்ட அறுபது நாளுக்கும் மேல லீவு போட்டுட்டீங்க… ஸோ… இந்த செமஸ்டர் உங்களுக்கெல்லாம்… கோவிந்தா… கோவிந்தா” சீனிவாசன் சிரித்தபடி சொல்லி விட்டு விசிலடித்தவாறே நடக்க,

அவனை எரித்து விடுவது போல் பார்த்தபடியே நின்றனர்.

சுரேஷூம்… கண்ணனும்… வேணுவும்… சக்தியும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *