ஊருக்கு உதவிக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 9,657 
 

ஏப்பா ஏய், யாருப்பா அது விசிலடிக்கறது, செத்த சும்மானு இருக்க மாட்டீங்களாய்யா?

அட இங்க வா ரக்கும்பா.

ஏன்? என்னவாம்? போப்பா ஏய், மண்டைய உடைச்சுப் போடுவேன் ஆமா.

நான் கூப்பிடுல காசிம்ணே கூப்புடுறாப்புளா ரக்கும்பா.

சித்த கன்னினுதேன் இரேன்பா. உங்களையோட ஒரே துன்பமா போச்சு.

அப்போ டீ வேணாம்ங்கறயா நீ.

போப்பா, நீயும் உன் டீயும்.

ஹோய்… ஓசு சோறா இன்னைக்கு?

இந்த பாரு, வந்தண்ணா செருப்பு பிஞ்சிடும் பார்த்துக்கோ.

ரக்கு மச்சே நான் இல்லை. ஜாகிர் அண்ணேதான்.

ஏம்பா ஜாகிர் ஏன், பிச்சுப் போடுவேன் வந்தேண்ணா.

டேய் நீ பார்த்தயா, நான் கூப்பிட்டேனு?

ஐய்யோ ஐயோ! வலிக்குது ஜாகிர், கைய விடுப்பா ஏய்.

ரக்கு மச்சே, திருப்பி கல்லெடுத்துப் போடும்பா நீ பார்த்துக்கலாம்.

செத்த மூடிக்கிட்டு போப்பா பசீர் , மூடிக்கிட்டு போ. ஜாகிரண்ணே கையை விடுண்ணே, கடைக்குப் போகணும்.

சரி, வா டீ குடிக்கலாம்.

வேணாம்பா, வேணாம் நான் காலைலயே குடிச்சுட்டேன்.

கொடுமுடி மெளத் ஆகலையா இன்னும்?

ஐயோ, என்ன ரக்கு மச்சேன் இப்புடி கேட்க்கறாப்புள முருகேசன்.

நீ கைய விடுண்ணா, நோவ் கைய விடு, அந்த மீசையன் மண்டைய உடைச்சத்தான் சரிப்பட்டு வருவான் போல.

டேய் மீசை, உடம்பு புண்ணாகிப் போயிடும் பார்த்துக்கோ ஆமா.

கொடுமுடி கணேஷா…

ஓய் என்ன, வீடு போக மாட்டா ஆமா பார்த்துக்கோ.

என்ன ரக்கும்பா, கல்லை கீழே போடும்பா. கொடுமுடி உன் பேரா என்ன?

செத்த கிளம்புப்பா, கிளம்பு. பொடணியைச் சேர்த்தி விட்ருவேன்.

ஹேய் காலைல அவங்கிட்ட வம்புளுக்கறதே, வேலையாப் போச்சு உங்களுக்கு, பேசாமப் போங்கம்பா, போங்க. ரக்கும்பா நீ கடைக்குப் போ.

பாருண்ணா, பாரூக். ஒரே தொல்லையா இருக்கு.

சரி, சரி நீ கடைக்குப் போம்பா. ஆமா மதியம் என்ன கறியும் சோறா?

யெண்ணாவ், வேணாம் போயிடு ஆமா.

சரி மச்சேன் கோச்சுக்காத கிளம்பு.

********************************

இப்படித்தான் விடியும் ரக்கு எனும் ரபீக்தீனின் காலைப் பொழுதுகள் பெரும்பாலும்.
பிறப்பிலே மனநலம் குறைபாடுகளோடு பிறந்தவன். உடன் பிறந்தவர்களைக் காட்டிலும் உடல் தோல்கள் கருத்தவனாக, வளர்ச்சி குன்றியவனாகவே இருந்தான் ரக்கு. இதனாலே இவன் தள்ளியே வைக்கப்பட்டான். தன்க்கென்று சொல்லிக் கொள்ளும்படிக்கு நிலச் சொத்துக்கள் இருந்தாலும். அவனுக்கு அதுகுறித்து எந்த அறிவும் இல்லை. அவனுடைய சொத்துகளில் முனைப்பாக இருந்து, அதில் குளிர்காயும் உடன் பிறந்த சகோதரர்கள், அவனை ஊருக்கு மேய்ந்துவிடப்பட்டவனாக மாற்றி வைத்து விட்டனர்.

ஐம்பது வயது எய்தியும், வாலிபனாகவே உள்ளான். அதாவது தனக்கென்ற ஒரு வாழ்க்கைத் துணைகளற்றவனாக. மூத்த சகோதரரின் வீட்டில் தங்கி உள்ளான். இருப்பிடம், உணவு, உடை போன்றவற்றில் உதவியாக அவனது மூத்த சகோதரர் மட்டுமே உள்ளார். இவரை விடவும் ஊரார் ஒருபடி மேலேயே உள்ளனர், என்பதுவே உண்மை. ஊரில் பலராலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் இவனை கிண்டல் செய்யாதவர்கள், வம்பிற்கு இழுக்காதவர்கள் கிடையாது. காலையிலே இவனின் வருகை எதிர்பார்த்தே காசிம் டீக்கடையில் ஒரு கூட்டம், கடைவீதி ராவுத்தர் மளிகைக் கடை முன்பு ஒரு கூட்டம், இப்படி நிறையப் பேர் இருப்பர். கடந்து செல்லும் பாதை முழுவதிலும் யாரையேனும் திட்டிக் கொண்டே நகர்வான். அவ்வளவு நபர்கள் இவனிடம் வம்பிற்கு எப்பொழுதும் இருப்பர். இவனும் சிலரிடம் நின்று திட்டுவதும், அடிப்பதும், பின்னர் இவன் அடி வாங்குவதுமாகச் செல்வான். காலையில் இருந்து இரவு வரைக்கும் ஊருக்குள் இவனால் எங்காவது ஒரு போலிக் கலவரம் உண்டாகிக் கொண்டே இருப்பது வாடிக்கை.

ஊரில் எங்கு விருந்து என்றாலும், தனது பாக்கெட்டில் நூல் தொப்பி தயாராய் இருக்கும் அவனிடத்தில். தான் ஒரு இசுலாமியன், தான் தொழுக வேண்டும் என்பது குறித்து எவ்வித அறிவும் இல்லையென்றாலுமே கூட, வாரம் வாரம் வெள்ளிக் கிழமை மசூதிக்கு, குளித்து, நல்ல சட்டை, லுங்கி கட்டிக் கொண்டு சென்றுவிடுவான். அங்கு சிறப்பாக, நேர்த்திக்காக பலர் வாழைப்பழம், இன்னபிற கனி வஸ்த்துக்கள் கொண்டு வந்து கொட்டியிருப்பர். இவனி இருப்பிடம் மசூதியில் அங்குதான் இருக்கும். அதனை எவருக்கும் முதலில் வாங்கி இல்லை எடுத்து வருபவன் இவனாகத்தான் இருக்கும். மசூதிக்குள் உள்ள பணியாட்களின் சட்டைகளைக் கூட பிடிப்பான், தேவையெனில். அவ்வளவு உக்கிரமங்களும் உண்டு, அப்பாவித்தனமும் உண்டும். அவன் செய்வதில் அவனுக்கு சரி தவறுகள் என்பன பரிட்சயங்கள் கிடையாது. யாரேனும் உசுப்பேற்றி விட்டால் போதும் இன்னும் சீறுவான்.

********************************************

இந்தாம்பா ரக்கு வச்சுக்கோ.

எதுக்கு, வேண்டாம்பா, வேண்டாம்.

அட மச்சேன் சும்மா வச்சுக்கோ, பீடி, டீ குடிச்சுக்கோ.

வேணாம்டா சாமி, வேண்டாம் காசு நமக்கெதுக்கு.

அட போ மச்சே. பஸ்ஸீக்கு லேட் ஆச்சு நான் கிளம்பறேன்.

அட ஓடுப்பா ஏய், ஓடு. பழனி ஐஞ்சா நம்பரு கிளம்பிரும் போ, போ!

டேய் ரக்கும்பா, இங்க வாடா.

ஆமா, என்ன டேய், ஓய்ங்கிற செட்டியாரு, நமக்கிதெல்லாம் புடிக்காதாமா சொல்லிப் போட்டேன்.

கோவத்தைப் பாரு ரக்கும்பாக்கு. அட இந்த சிலிண்டர், மேற்க்கே ஹாஜியார் வீட்டுக்கு கொண்டு போயி கொடுத்திரு. நீ போறயா இல்ல சின்னப்பையன அனுப்பிரட்டுமா?

போயிருவானா அவன், உதை வாங்கிக்குவான். அவனத்தாட்டி அவன் காசு வாங்கிட்டுப் போயிருவான். அண்ணா செத்த நீ கம்முணு இரு, நானே கொண்டு போறேன்.

சூதானாமா கொண்டு போயி கொடுத்திட்டு, சிலிண்டருக்கு காசு கேட்டாங்கனு வாங்கிட்டு வாம்பா…

சரிண்ணா, சரி!

*****************************

ஏய் காசிமு ஒரு டீ போடுப்பா.

காசு யாரு உங்க அத்தா தருவாரா?

பார்த்துக்கோ, அடி பிண்ணிடுவேன் ஆமா.

சுடச்சுட அடுப்புக்கட்டி தூக்கி போட்டுவிட்டுருவேன், நம்மகிட்ட சேட்டை பண்ணிக்கிட்டு இருந்தனா பார்த்துக்கோ ரக்கும்பா.

காசிம் போட்டு விடுப்பா, போடு நம்ம மச்சேன்தான.

ஏம்ப்பா காசிமு இருக்கு உனக்கிருக்குப்பா யேய் இருக்கு சுல்தான் காசு கொடுப்பாப்புள ஒழுங்கா டீ போடு.

அடிங்க கொப்பேன் மவனே, உனக்கு காசு கொடுத்தாலும் டீ போட முடியாதுடா போடா நீ முதல்லே.

சரிதான் போப்பா, ஏய் போ. நான் நாயன் கடைல குடிச்சுக்கறேன்.

கொடுமுடி கணேஷா, ஓசு சோறா?

ஏய் காசிமு மரியாதை கெட்டுப் போயிடும் ஆமா. கையை விடுப்பா, உன் கடையில ஒன்னும் தேவையில்லை.

அட மச்சேன், கையைக் கால கட்டி மேலே போட்டுருவேன் ஆமா.

போடுவ, போடுவ, எங்க அண்ணேமார்கிட்ட சொல்லி தொலைச்சுப் போடுவேன் ஆமா.
சரி, சரி டீயக் குடி மச்சே.

வேணாம்பா, வேணாம் நீயும் உன் டீயும்.

அட ரக்கு மாமு, கம்முனு கையில வாங்கிட்டு வந்து உட்காரு நீ.
கொடுப்பா யேய், கொடுப்பா.

இந்தா தூக்கிட்டுப் போ நாயே.

ஆஹ்ஹ்.. ஏய் சூடு வச்சு விட்றானுப்பா காசிமு வெளங்காதவன்.

நீ இங்க உட்காரு மச்சேன். ஆமா என்ன சொத்து உனக்கு கிடையாதாமா?

நீ பேசாமா இருக்க மாட்டீயா சுல்தானு?

பாரு உனக்கு சோத்துல விசம் வச்சு கொலை பண்ணிட்டு உன் சொத்தை தூக்கிக்குவாங்க பாரு மாமா.

அடி பிண்ணிப் போடுவேன் ஆமா. எங்க அண்ணனுக உசுர எடுத்துப் போடுவேன் பாரு.

அட போ மாமு உனக்கு வெவரம் பத்தாது.

ஏய் வெவரம் பத்தாதுனேனா பார்த்துக்கோ ஆமா.

கை, கை, கை…. அட அறிவுகெட்ட மாமா, கடிச்சுட்டயே.

ஏம்பா சுல்தான், போயி ஊசி போடுப்பா, அவன் பல்லு விளக்காதவன், செப்டிக் ஆயிடப் போகுது.

சண்முகா மூடிக்கிட்டு இருப்பா என்ன மூடிக்கிட்டு இரு.

ரக்கு மச்சே, டீ குடிச்சுட்டியா? வடை சாப்பிடு இந்தா?

அப்புடி ஒழுங்கா நடந்துக்கோ, ஆமா சண்முகா, ஆமா.

அட மச்சேன் இப்புடி கடிச்சு விட்டிட்டியே, ஒழுங்கா காசு கொடு, பத்மா நர்ஸ்கிட்ட போயி ஒரு ஊசி போடனும்.

போப்பா, போப்பா அந்தம்மா நல்லா குத்திவிடும்.

மச்சேன், நான் கடைவீதி கமர் கடைக்குப் போறேன், வந்தேனா புரோட்டா குர்மா வாங்கித் தருவேன்.

இருப்பா, இந்த வடையைத் திண்ணுட்டு வந்தறேன்.

ஆமா, வயிறா வண்ணாந் தாளியா இது?

ஏய் சண்முகா, ஆமா உடம்பு பஞ்சர் ஆயிடும்!

மச்சே வரீய்யா இல்லையா, லேட் ஆகுது நான் கிளம்பறேன்.

அட பொறு ஜாகிரம்பா, பொறு.

*****************************

இந்த நாய ஏன் ஜாகிரண்ணே கூட்டிட்டு வந்திருக்க? இன்னைக்கு கல்லா நிறைஞ்ச மாதிரித்தான்.

அச்சச்சோ, என்ன மச்சே இப்புடி சொல்லீட்டாப்புள.

கமரு, கொடலை உருவிடுவேன் ஆமா.

போடா, போடா ஓசுல கொட்டிக்கோ.

ரக்கும்பா நீ கோவப்படாம உள்ள வாம்பா.

ஆமா, என்னம்பா உனக்கு அந்தப் பொண்ணை பார்த்திடலாமா?

கம்முணு இருப்பா, யாராது அண்ணேங்கிட்ட சொல்லிடப் போறாங்க.

அட, மச்சானுக்கு சிரிப்பப் பாரு.

பொண்ணுகிண்ணுட்டு, சும்மாவே இருக்க மாட்டீயா ஜாகிரூ.

என்ன மச்சேன் இந்தா இந்தப் பொண்ணு எப்புடி?

அடச்சீ சும்மா இருப்பா, ஏய் சும்மா இரு.

என்ன ரக்கு மச்சேன், ரெண்டு நாளைக்கு உனக்குக் கொண்டாட்டம்தான்.

ஏன் என்ன விசேசம் கையூம்பா?

என்ன மாப்ளே, நாளைக்கு கொளுஞ்சுவாடிக்காரங்க வீட்ல கல்யாணம்ல தெரியாதா என்ன?

அட ஆமா, ஆமா மறந்துட்டேன் பாரு. ஓஹ் அப்புடினா மச்சானுக்கு செம்ம சரக்குதான் ரெண்டு நாளைக்கு. பிரியாணி, கறினு மச்சேன் வயிறு ஊதிடும்.

ஆமா, ஆமா போட்றாங்க, போட்றாங்க. வாய் வைக்காத ஜாகிரண்ணே.

டேய் நாயே, சீக்கிரம் திண்ணுட்டு காசியப்பன் கடையில அரை கிலோ சீனி வாங்கிட்டு வா.

அடிங்கொப்பன் மவனே, நாயினு சொல்வியா?

மச்சே….மச்சே…மச்சே சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்.

அது அந்த பயம் மனசுக்குள்ள இருக்கோனும் ஆமா.

பல்லா அது விசம்…ஐய்யோ…இப்புடியா மச்சேன் கடிப்ப…

அப்புறம் நாயி, நயினு சொல்ற.

சரி, சரி அரை கிலோ சீனி வாங்கிட்டு வா மச்சேன்.

எங்கேயாமா?

காசியப்பன் கடைக்கு போ மச்சேன். பார்த்து இருபது ரூபாத் தாளு ஆமா.

தெரியும்பா ஏய் தெரியும்.

போச்சு கமருக்கு இன்னைக்கு இருபது ரூபாய் நட்டம்தான். நல்லா விவரம் தெரிஞ்ச ஆளுகிட்ட கொடுக்க மாட்டியா கமரு?

என்ன மச்சேன் இப்புடி சொல்றான் பக்கீரு.

அவன் கிடைக்கறான் சொறி நாயி. இந்தப் பக்கம் வந்தேன் இரத்தம் ஆகிப் போயிரும்டா நாயே, நீ வா, பார்க்கலாம்.

அட யாருப்பா இது, ரோட்டுல மனுச மக்க போக வேணாமா கல்லைத் தூக்கிப் போட்டுகிட்டு.
போப்பா நீ போப்பா மணி எங்களுக்குத் தெரியும்.

வர வர ரக்கு ரவுடித்தனம் அதிகமாயிடுச்சு, அவங்க அன்ணேகிட்ட சொன்னத்தான் சரிப்பட்டு வரும் போல.

அண்ணகிட்ட போன, மணி உசுரு எடுத்துப் போடுவேன் ஆமா.

இப்படி கோபமாய் கத்தியவனாகவும், முனங்கியவனாகவும் கமர் உணவகத்திலிருந்து சர்க்கரை வாங்க காசியப்பன் நாடார் கடைக்கு சென்றான் ரக்கு. கமர் கடையும், காசியப்பன் கடையும் கடைவீதியில்தான் உள்ளது. இரண்டு நிமிட நடை போதுமான தூரம். ஆனால் சாலை சற்று வளைவாக இருக்கும். அதனால் கமர் கடையில் இருந்து காசியப்பன் கடையினைக் காண முடியாது. பிச்சை வாழை இழைக் கடை அந்த வளைவின் மையத்தில் உள்ளது.

பிச்சையின் கடையருகே சென்றதும் ரக்கு, தனது பாக்கெட்டில் ஜாகிர் திணித்துவிட்ட குமுதம் இதழின் ஒரு துண்டுப் பேப்பரை எடுத்து, அதில் இருந்த அந்தப் பெண்ணின் புகைப்படத்தினை பார்த்து, யாரும் அறியாத வண்ணம் சிரிக்கிறான் ரக்கு. மீண்டும் அதனைச் சுருட்டி தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறான்.

காசியப்பன் கடைக்குச் சென்றுவிட்டு இவன் திரும்ப எப்படியும் ஒரு மணி நேரம் ஆகிவிடும். வழியில் பலரின் வரவேற்ப்புகளையும் கடந்து, அந்த மளிகைக் கடையில் உள்ள ஆட்களின் சலசலப்புகலை எதிர்கொண்டு, கடைக்காரரின் அலட்சியங்களை பொறுத்துக் கொண்டு அவன் திரும்பியாக வேண்டுமே.

இதையெல்லாம் குறித்து ரக்கு கவலைப்படாமால் இருப்பவனாகத் தெரியவில்லை. அவனுக்கும் பருவ எண்ணங்கள் மேலோங்கியே உள்ளது. இருப்பினும் அதெல்லாம் வாழ்வில் ஏதேனும் சில நொடிகளில் தோன்றி அவனுள்ளே மறைந்துவிடும் போலும். அவன் இன்றியோ, அவனது உதவிகளின்றியோ கீரனூரில் எவரும் இலர். என்னதான் இமசைகள் கொடுக்கப்பட்டாலும், அவையெல்லாம் ஊராருக்கு வேடிக்கைதான். அதே சமயம் ஊரார் அவனுக்கு, அவனது சகோதரர்களையும் விடவும் அனுதாபத்தோடுதான் நடந்து கொள்வர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *