கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 4,541 
 

அரச மரம் சலசலத்துக் கொண்டிருந்தது.

அதனடியில், கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து டீ குடித் தபடியே, செய்திகளை முந்தித் தரும் நாள் தாள் ஒன்றில் ஆழ்ந்திருந்தார் ஆலங்காட்டுச் சாமியார்.

கமலா (வயது இருபது) என்ற பெண்ணும் ஜெயசந் திரன் என்ற வாலிபனும் (வயது 27) ஓட்டல் அறைக்குள் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். போலீஸார் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்’ என்று வாய் விட்டுப் படித்த சாமியார் : “பொழுது விடிஞ்சா ஒரு நல்ல செய்தி கிடையாதா? தற்கொலை செய்து கொண்ட ஜோடி, தடம்

புரண்ட ரயில், ஜாக்பாட் மாரடைப்பு, வெளிநடப்பு. கதவடைப்பு, கடத்தல் , பதுக்கல், கொள்ளை, கொலை. சதக் சதக்…”

சிரித்துக் கொண்டார். அவர் சிரிக்கும் போது கண்கள் இடுங்கி விழிகளும் சேர்ந்து சிரிக்கும்.

“டீ ஆறிப் போகுது தாத்தா…” என்றான் குமாரு. சின்னப்பையன்.

ஆகாசத்தில் வெகு உயரத்தில் விமானம் பறக்கும் சத்தம். சாமியார் அண்ணாந்து பார்த்துவிட்டு. “குமாரு. நாம் ரெண்டு பேரும் ஒரு தடவை ப்ளேன்லே போவோம் வாரியா?” என்று கேட்டார்.

“எந்த ஊருக்கு”

“சிங்கப்பூருக்கு?”

“அங்கே போய்? …”

“டேப் ரிக்கார்டரு, நைலான் கயிறு…”

“கயிறு எதுக்கு?”

“கட்டில் பின்ன?”

“அப்புறம்?…”

“பைனாகுலர் . ரிஷ்ட் வாட்ச், பிஸ்கோத்து. சாக்கு லெட்டு, சாப்பாட்டு ஜாமான்.”

“எனக்கு?”

“உனக்குதாண்டா அவ்வளவும். சட்டை, நிஜார். புக்ஸுங்க….”

“எனக்குத்தான் படிக்கத் தெரியாதே!”

“உங்க மாமன் கிட்டே சொல்லி படிக்க வைக்கச் சொல்லு.”

“அவர் மாட்டாரு.” “ஏன்?”

“எனக்கு அம்மா இல்லே , அப்பா இல்லே. நான் ஒரு அனாதைப் பையன். அவர் எனக்குச் சாப்பாடு போட்டு பளக்கூறாரே, அது போதாதா?”

“பைத்தியம். நீ அனாதை இல்லேடா! நான் தான் னாதை. உனக்கு மாமன் இருக்கான். பணக்கார மாமன். உங்கப்பன் சேர்த்து வைச்ச சொத்தெல்லாம் அவன் கிட்டே தான் இருக்குது. அந்த ரகசியமெல்லாம் உனக்குத் தெரியாது. படி படி, இந்த சாமியார் கிட்டே வந்து வந்து நிக்கறயே. இங்கே என்ன இருக்குது? விபூதி இருக்குது, கயித்துக் கட்டில் இருக்குது; முடிச்சுப் போட்ட கந்தலில் மூணுரூபா சில்லறை இருக்குது….நீ கொஞ்சம் டீ சாப்பிடறயாடா?”

வேணாம், நான் இங்கேயேதான் இருப்பேன். பொளு தண்ணைக்கும் இருப்பேன். எனக்கு ஓங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு . ராத்திரி தூக்கம் வரப்போதான் வூட்டுக்குப் போவேன். இதென்ன போஷ்டர்?”

“இது போஷ்டர் இல்லேடா. பானர் ! துணியிலே வரைஞ்சது. ஆட்டுக்கார அலமேலு படம் பார்த்தியா? இத பார் அலமேலுவும் ஆடும் கிளிஞ்சு போய் கிடக் கறாங்க”… ஒரு எக்காளச் சிரிப்பு ! பயங்கரக் குரல், பயப் படாத குரல்.

“இது எதுக்கு வச்சிருக்கீங்க?”

“கட்டில் கயிறு உறுத்துது. தூங்கி எளுந்திருச்சா முதுகிலே வரி வரியா கயிறு அளுந்திக் கிடக்குது. இந்த பானரைக் கட்டில் மேலே போட்டுக்கிட்டா சுகம்மா தூங்கறேன். ஆமாம், இப்ப வெல்லாம் அலமேலு மேல தான் தூக்கம் … முருகா, முருகா! -” தான் சொன்னதை நினைத்துச் சாமியார் தனக்குத்தானே சிரித்துக் கொண் டார்.

“என்ன தாத்தா சிரிக்கிறீங்க?”

“நான் தாத்தா இல்லேடா. தாடியும் மீசையும் பார்த்தா தாத்தாமாதிரி தோணுதா? எனக்கு ஐம்பது வயசு கூட ஆகல்லே. நான் யார் மாதிரி இருக்கேன் சொல்லு, பாப்பம்.”

“மதியளகன் மாதிரி அமுக்கலா குள்ளமா இருக்கீங்க? தாடியும் மீசையும் தான் அதிகப்படி. ஏன் சிரிச்சீங்க?”

“அது உனக்குப் புரியாது குமாரு. நீ சின்னப் பையன். இன்னும் அஞ்சாறு வருசம் போகணும்”

“ஆட்டுக்கார அலமேலு படம் பார்த்தீங்களா?”

“பஷ்ட் டே, பஷ்ட் ஷோ பார்த்துட்டேன். டெண்ட் சினிமாவிலே ஓடுதே பத்ரகாளி அதுகூ – பார்த்துட்டேன். ஓசிலேதான். நான் சாமியாராச்சே. எனக்கு ஏது காசு?”

“எப்ப சிங்கப்பூர் போகலாம்?”

“மூணு ரூவா வெச்சிருக்கேன். ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தேளு ரூவா குறையுது. சேரட்டும். ஒரு பயணம் போயிட்டு வந்துருவோம்.”

சிங்கப்பூர்லே துப்பாக்கி கிடைக்குமா?”

“துப்பாக்கியா! அது எதுக்குடா உனக்கு? காந்தியைச் சுட்டதாச்சே அது? அதைக் கையாலே தொடலாமா?”

“சிப்பாய் மாதிரி கையிலே துப்பாக்கி புடிச்சுக்கிட்டு ஒரு பெரிய வீரனாகப் போறேன்.”

“நல்ல ஆசைடா ! வீரனாகப் போறியா? அப்புறம் ஆகலாம். முதல்லே போய்ப் படிடா! உங்கப்பன் சொத்து ஏராளமாக் கெடக்குது. மாமன் ஏப்பம் விட்டுக்கிட் டிருக்கான். அதெல்லாம் புரிஞ்சுக்கோ.”

தூரத்தில் ரிக்கார்ட் சங்கீதம் மெலிதாக ஒலித்தது.

“வாங்கோன்னா….

“பத்ரகாளி பார்க்கணும்.”

“படிடா, இந்த சினிமா புத்தி வேணாம்டா உனக்கு?”

“நீங்க மட்டும் பார்க்கலாமா?”

“நான் சாமியாரு. நான் என்ன வேணாலுஞ் செய்யலாம்.

“சாமியாரு சினிமா பாக்கலாமா?”

“சாமியாருங்க கல்யாணமே செஞ்சுக்கறாங்களே சாமியார்லே ரெண்டு ரகம். சாமியாரா இருந்து கிட்டே சம்சாரியா வாள்றது ஒரு ரகம். அசல் சாமியாராவே வாள்றது இன்னொரு ரகம். நான் முதல் ரகம். எனக்கு ஆசை போகல்லே. வாள் வசதியில்லாததாலே சாமியாரா யிட்டேன். நான் என்ன சாமியார்? சோத்துச் சாமியார்! மசால்வடைச் சாமியார். பிரியாணி சாமியார். காஞ்சீ புரத்திலே இருக்காரு ஒரு சாமியாரு. போய்ப் பாரு, வயிறு ஒட்டிப்போய் …. கண்ணுலே ஒரு ஒளி வீசும், பாரு…”

“தாத்தா, இந்த ஊரார் ரகசியம் பூரா உங்களுக்குத் தெரியுமா?”

“அக்கு அக்காத் தெரியுமே. எல்லார் சங்கதியும் என் கிட்டே வந்துடும். ஜோசியம் கேக்க வருவாங்க. வைத்தியம் செஞ்சுக்க வருவாங்க. இந்த இரண்டிலேயும் அம்புடாத ரகசியம் என்ன இருக்குது? டெய்லர் கடை கேசவன், ஆப்பக்கடை ராஜாத்தி இவங்க ரெண்டு பேருக் குள்ளே ஒரு ரகசியம் , அவுட்போஸ்ட்தாணாக்காரு, டெண்ட் சினிமா தங்கப்பனோட தங்கச்சி இவங்களுக் குள்ளே ஒரு ரகசியம், நாட்டாமை கோதண்டம் , ட்ராமா காரி ரத்னாபாய் – அது ஒரு ரகசியம். இப்படி எல்லார் ரகசியமும் எனக்குத் தெரியும். அதோ வருது பாரு ரத்னா பாய். இப்ப நேரா இங்கேதான் வரும். இதோ இந்த அரச மரத்தடியிலே அந்தப் பக்கம் இருக்குதே புள்ளையார் அதைச் சுத்தும். அப்புறம் ஒரு சீட்டை எங்கிட்டே கொடுக்கும். லவ் லெட்டர் ….!

“சீட்டு யாருக்கு? உங்களுக்கா?”

கருமம்! நாட்டாமைக்கார கோதண்டனுக்குடா இவங்க ரெண்டு பேருக்கும் நான் தான் போஸ்டாபீஸ்.”

“சீட்லே என்ன இருக்கும்?”

“உனக்குத்தான் படிக்கத் தெரியாதே. இப்ப ஒரு சீட்டு வரும். நான் படிச்சுக் காட்றேன் பாரேன் …”

ட்ராமாக்காரி வந்தாள். பிள்ளையாரைச் சுற்றினாள். சாமியாருக்கு பக்கோடா பொட்டலம் கொடுத்தாள். ஜாக்கெட்டுக்குள்ளிருந்த சீட்டை எடுத்துக் கொடுத்து விட்டு ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

“சேர்த்துடறேன் போ.” பக்கோடாவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். தூ!…

தலையை வாரிப் பின்னாமல் ரிப்பன் கட்டி விட்டிருந்தாள் ரத்னாபாய்.

நெற்றியிலே குங்குமப் பொட்டுக்குக் கீழே இரு புருவத் தையும் இணைத்து விபூதிப் பொட்டு.

“நான் வரட்டுமா?”

“அடுத்த தடவை நல்ல பக்கோடாவா வாங்கிட்டு வா…ஒரே காறல்…எங்கே வாங்கினே?”

“நாடகத்துக்கு கோயமுத்தூர் போயிருந்தேன். மிட்டாய்க் கடைலே வாங்கினேன்.”

“கலப்பட எண்ணெய். காறுது…”

அவள் திரும்பி கொஞ்ச தூரம் போய்விட்டாள்.

“மூஞ்சியைப் பாரு. புருவத்தைச் சிரைச்சுக்கிட்டு கண்றாவி ..” சாமியார் குமாருவிடம் முணுமுணுத்தார்.

***

பக்கோடா வாசனைக்கு நாய் ஒன்று ஓடிவந்தது.

“பக்கோடா வாசனையை நல்லா மோப்பம் புடிப்பே. திருடன் வந்தா கோட்டை விட்டுடுவே. இந்தா, தொலை…”

மீண்டும் வானத்தில் விமானம் பறக்கிற சத்தம். சாமியார் நிமிர்ந்து பார்த்து விட்டுத் திரும்பும் போது கொடிக் கம்பம் அவர் பார்வையில் பதிந்தது. அதில் மூவண்ணக் கிழிசல் கொடி ஒன்று தன் கட்சியின் பரிதாப நிலையை உணர்த்திக் கொண்டிருந்தது.

“இந்த ஊர் கட்சித் தலைவன் மாலை போட்டுக்க வருவான். வோட்டுக்கு வருவான். வசூலுக்கு வருவான். நீட்டா அங்கவஸ்திரம் போட்டுக்குவான். இந்தக் கொடியை – ஒருநாளாவது நிமிர்ந்து பார்ப்பானா? ஏன் பின்னே கட்சி இந்த கதிக்கு வராது?” சாமியார் உறும் லோடு சிரித்தார்.

அடுத்தாற்போல் நாட்டாமைக்காரன் வந்தான்.

“என்ன சாமியாரே! உஷ்ணத்துக்கு மருந்து கேட்டேனே. வச்சிருக்கியா?”

“இந்தா” என்று அந்தச் சீட்டை எடுத்துக் கொடுத் தார் சாமியார்.

“இதைப் படி; உஷ்ணம் குறையும். காலண்டர் கேட்டேனே. எங்கே?”

ஒய்.விஜயா போட்ட காலண்டரை எடுத்துக் கொடுத்தான் நாட்டாமைக் காரன். அந்தக் காலண்டர் சுருளுக்குள் ஒரு கடிதம் இருந்தது. ட்ராமாக்களரிக்கு நாட்டா மைக்காரன் எழுதிய கடிதம். அதைப் படித்த சாமியார் சீ… அசிங்கம்….இப்படியா எளுதுவாங்க?…..கடர்மாடாட்டம் வயசாச்சு . வூட்லே சம்சாரத்துக்கு நாலு புள்ளைங்க. வெளி விவகாரம் வேறே. பெரிய மனிசனாம், நாட்டா மைக்காரனாம். நாம் வாயைத் திறக்க முடியுமா! என்னை ஊரை விட்டே துரத்திடுவான். ஒய். விஜயாவைப் பார்த் தார். தன் அகன்ற கண்களை விரித்துச் சிரித்தாள் விஜயா.

“ட்ராமாக்காரி புள்ளையாரைச் சுத்றா இந்த நாட்டா மைக்காரன் ட்ராமாக்காரியைச் கத்தறான். உங்க மாமன் யாரைச் சுத்தறான் தெரியுமாடா குமாரு…”

“தெரியாதே…”

“இதெல்லாம் தெரிஞ்சுக்க உனக்கு வயசு பத்தாது. வெளியே சொன்னால் வெட்கக்கேடு.ம்…உனக்கெதுக்கு அந்த வம்பெல்லாம்? தெரிஞ்சா துப்பாக்கி கேப்பே..வீரனாயிடுவே. வேணாம். வூட்டுக்குப்போ.”

“எங்க மாமா நல்லவராச்சே!”

“குமாரு! ஊரே அப்படித்தான் நம்பிக்கிட்டு இருக் குது. எந்தப் புத்துவே எந்தப் பாம்பு இருக்குதுன்னு எனக்குத்தான் தெரியும்? மாமனை நம்பாதே! ஆளுக்குள்ளே ஆளு. பாக்கப் போனா இந்த ஒலகத்திலே எல்லா ருமே இரட்டை வேஷக்காரங்கதான். ஒவ்வொருத்தனுக் குள்ளேயும் இன்னொரு ஆள் இருக்கான். நீ போயிடு. அதோ, உங்க மாமன் வந்துகிட்டிருக்காரு…”

2

முறுக்கு மீசை வேதாசலம் வந்தான். அவன் இடது கையிலே ப்ளாக்’ டயல் ‘ஸீக்கோ ‘ பளபளத்தது. V’ போட்ட தங்க மோதிரம். ஸில்க் ஜிப்பா.

ஸிகரெட் புகையை விழுங்கி மூக்காலும் வாயாலும் தேக்கமாக வெளியேற்றினான்.

சாமியாரை நெருங்கி வந்து “என்ன சாமி! சௌக் கியமா? சிகரெட் ஊதறீங்களா?” என்று பரிவோடு குழைந்த குரலில் கேட்டான். வேதாசலம் வலிய வந்து பேசுவது சாமியாருக்குவியப்பாயிருந்தது. ‘என்னமோ இருக்கு விசயம்!’

“என்ன பிராண்டு?”

“வில்ஸ்தான்; ஏன் 555 தான் குடிப்பீங்களா?”

“இல்லே, சார்மினார் தான் பளக்கம் ….”

“மணி என்ன ஆகுது சாமி?”

கையிலே வாச் கட்டிக்கிட்டு என்னை டைம் கேக்க றீங்களே! ஏளு மணி ஷோ ஆரம்பிக்கிற நேரமாச்சு. ரிக்கார்டு போடறாங்களே…”

“இன்னா படமாம்?”

“சில நேரங்களில் சில மனிதர்கள்.”

“நீங்க பாத்துட்டீங்களா?”

“நான் தான் நிஜ வாழ்க்கையிலேயே பல பேரைப் பார்த்துக்கிட்டிருக்கேனே! இதை சினிமாவிலே வேறே பாக்கணுமா? பதினாறு வயதினிலே வந்தா பாக்கலாம்னு ஒரு ஆசை!”

“சாமியாருக்குப் பதினாறு வயசு கேட்குதா?” வேதா சலம் கேலியாகச் சிரித்தான்.

“கேலி இருக்கட்டும்; எங்கே வந்தீங்க?”

“இந்த வாச் என் கைக்கு எப்படி இருக்குது?”

“அளகா இருக்குது; புது வாச்சா? எப்ப வாங்கினீங்க?”

“சிங்கப்பூரலேர்ந்து வந்துது.”

“கடத்தல் சரக்கா ?”

“தெரிஞ்சவர் வாங்கிட்டு வந்தாரு.”

“அவர் எனக்கும் தெரிஞ்சவர்தான்!” என்று கண் சிமிட்டிச் சிரித்தார் சாமியார்.

வேதாசலம் பழைய ரிஸ்ட் வாச் ஒன்றை ஜிப்பாப் பையிலிருந்து எடுத்து “இதைக் கையிலே கட்டிக்குங்க. ‘ஒமேகா’ வாச்! நாற்பது ரூபா கொடுத்து ரிப்பேர் செஞ்சிருக்கேன்” என்றான்.

“இந்தக் கட்டைக்கு எதுக்குப்பா இதெல்லாம்…”

“அட, கட்டிக்குங்க சாமி! அன்போட தரேன்.”

சாமியார் கையில் பலாத்காரமாக வாச்சைக் கட்டி “உங்க கைக்கு இது ரொம்ப சைஸா இருக்குது” என்றான்.

“என்ன வேதாசலம் என்ன விசயம்! எதுக்கு அடி போடறோ”

“உங்க கையாலே ஒரு உதவி …”

“அதானே பார்த்தேன். அதுக்குத்தான் இந்த வாச்சா! ம்…சொல்லு”

வேதாசலம், சாமியார் காதை ஐந்து நிமிடம் கடித்தான்.

“ஓகோ!” என்று பல்லைக் கடித்தார் சாமியார். ‘அடப்பாவி’ என்பது அதன் அர்த்தம்.

“நீங்க மனசு வெச்சாத்தான் முடியும். காலையிலே கருக்கலோட வீட்டுக்கு வந்துடுங்க.”

“எள்ளு இருக்கா?”

“மூட்டை மூட்டையா இருக்கு…”

“ஆளாக்கு எள்ளை எடுத்து ராத்திரியே தண்ணீலே ஊறப்போட்டு வை. பனவெல்லம் கொஞ்சம் வேணும்..”

“ஆவட்டும்…” வேதாசலம் திரும்பிப் போய் விட்டான்.

அயோக்கியன், இவன் என்னைப் பார்த்து பதினாறு வயசு கேட்குதான்னு கேலி பேசுறான்…வீதியிலே பெரிய மனுசனாட்டம் உலாத்திக்கிட்டு வீட்டுக்குள்ளே நடத்தற அக்கிரமம்…ம்…பாவம், பாவம், இந்தப் பாவத்துக்கு நான் வேறே ஓடந்தையா? சாமியார் உறுமினார்.

***

காலை வேளையில், இருட்டு பிரியாத முன்பே. சாமி யார் அந்த வீட்டுக்குள் வந்திருப்பது குமாருக்கு ஆச்சரியமாயிருந்தது.

“டேய், குமாரு! வாசக்கதவைச் சாத்துடா. சாமி! இப்படி சோபாவிலே உட்காருங்க. இட்லி சாப்பிடறீங்களா?”

“வேணாம்.”

“டீ?”

“காப்பி இருந்தா குடுங்க…”

சாமியார் காப்பி குடித்தார். சுற்றுமுற்றும் பார்த் தார். பெரிய வீடு. இரண்டு கட்டு. முற்றத்துக்கு மேலே பந்தோபஸ்து ‘ கம்பி போட்டிருந்தது. நெல் மூட்டைகள் அடுக்கியிருந்தன. குருவிகள் நெல் மணிகளைக் கொத்திக் கொண்டிருந்தன. கையில் கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு தகர டப்பாவை எடுத்து அதற்குள்ளி ருந்து லேகியத்தை எடுத்து கச்சக்காய் அளவுக்கு உருட்டினார்.

“எங்கே, வரச் சொல்லுங்க அம்மாவை” என்றார்.

“குமாரு, வனஜாவைக் கூப்பிடுடா” என்றான் வேதா சலம்.

பின் கட்டிலிருந்து வனஜா வந்து நின்றாள், ஐம்பொன் விக்கிரகம் மாதிரி . சின்ன வயசு. மூக்கு தீர்மையாக இருந் தது. பைர பேசரி போட்டிருந்தாள். சிரித்த முகத்தில் சோகம் தெரிந்தது. நெற்றியிலே பொட்டில்லை.

“நாக்கை நீட்டும்மா….” நீட்டினாள்.

கையைப் பிடித்து நாடி பார்த்தார். கண்களையும் பார்த்தார்.

“வாயிலெடுத்தியா?”

“இப்பக்கூட சத்தம் கேட்டுதே” என்றான் வேதாசலம்.

“இந்தா, இந்த லேகியத்தைச் சாப்பிடு. இன்னும் ஒரு மணி நேரம் களிச்சு, ஊற வைச்ச என் தண்ணியை எடுத்துப் பனவெல்லம் கலந்து சாப்பிடு. பானகம் மாதிரி இருக்கும். தண்ணிலே வெல்லம் கரையற மாதிரி அதுவும் கரைஞ்சிடும். ரெண்டே தினத்திலே சரியாப் போயிடும். கவலைப்படாதே போ” என்றார் சாமியார்.

குமாருக்கு எதுவும் புரியவில்லை.

“வனஜா அடிக்கடி வாயிலெடுக்கிறாங்களே, ஏன்?” என்று மட்டும் யோசித்தான்.

“அப்ப நான் வரட்டுமா?”

சாமியார் கிளம்பி வாசல் வரை போய்விட்டார். வேதாசலம் அவரைத் தொடர்ந்து போய், “சாமி, சங்கதி யாருக்கும் தெரியக்கூடாது. ஜாக்கிரதை. மானம் போயிடும்’ என்று ரகசியக் குரலில் எச்சரித்து அனுப்பினான்.

***

கட்டிலில் உட்கார்ந்திருந்த சாமியார் நெற்றியில் ‘பட்’ என்று அடித்துக் கொண்டார்.

“ஏன் அடிச்சுக்குறீங்க. குமாரு கேட்டான்.

“கொசு கடிக்குது.”

“வாச் ஏது?

“உங்க மாமன் கொடுத்தான்.”

“எங்க மாமா நல்லவரு!”

“குமாரு. உனக்கு வெவரம் தெரியாதுடா? உன் மாமன் இந்த வாச்சை எனக்கு ஏன் கொடுத்தான் தெரியுமா?”

“ஏன்?”

“லஞ்சம். அந்த ரகசியத்தை நான் வெளியே சொல்லக் கூடாதாம். சொன்னா உங்க மாமன் என்னை ஊரை விட்டே தொலைச்சுப்புடுவான்…”

“எனக்குத் தெரியணும்…”

“தெரிஞ்சாலும் புரியாதுடா”

“சொல்ல மாட்டீங்களா?”

தூரத்தில் இரண்டு நாய்கள் காதல் புரிந்து கொண்டி ருந்தன.

“மனுசங்க இந்த நாய்ங்களைவிடக் கேவலமாப் போயிட்டாங்க, குமாரு.”

“என்ன சொல்றீங்க?”

“உங்க மாமங்காரனுடைய அண்ணன் செத்துப் போய் எத்தனை வருசம் ஆகுது?”

“ரெண்டு வருசம்”

“வனஜா உங்க மாமனுக்கு என்ன வேணும்?”

“அண்ணன் பெண்ஜாதி.”

“அதாவது, உங்க மாமனோட அண்ணனுக்கு இரண்டாவது பெண்ஜாதின்னு சொல்லு. முதல் சம்சாரம் தவறிப் போனதும் இவளைக் கட்டிக்கிட்டாரு. ஏளைப் பொண்ணு. பாவம் தங்க விக்கிரகமாட்டம் இருக்கா, கலியாணம் கட்டி ரெண்டு வருசத்திலே புருசனைப் பறி கொடுத்துட்டா. அனாதையா இப்ப உங்க மாமன் வீட்டி லேயே வாளந்துகிட்டிருக்கா. இப்ப வாயிலெடுக்கறா? என்ன அருத்தம்? என்ன அருத்தம்னேன்?”

குமாரு விழித்தான்.

“உனக்குப் புரியாதுடா இந்த விவகாரமெல்லாம். நாய் ஜென்மங்கடா உங்க மாமனுக்கு விசயம் தெரிஞ்சா உன்னையும் என்னையும் தொலைச்சுப்புடுவான். நீ போய்ப் படி போடா…”

“எங்க மாமா ரொம்ப நல்லவராச்சே!”

“அயோக்யன். வனஜா சீதையுமில்லே. உன் மாமன் வேதாசலம் லட்சுமணனும் இல்லே. அண்ணன் சம்சாரத்தையே கெடுத்தவனை நீ நல்லவன்னு நம்பிக்கிட்டிருக்கயா? ஏன் புயல் அடிக்காது? ஆளுக்குள்ளே ஆளு. அதான் சொன்னனே. இந்த ஒலகத்திலேயே ஒவ்வொரு மனுசனுக்குள்ளேயும் இன்னொரு ஆள் இருக்கான். சில நேரத்திலே அந்த உள்ளுக்குள்ளே இருக்கிற ஆளு வெளியே வருவான். நல்லாப் பேரு வெச்சான் இந்த சினிமாவுக்கு – சில நேரங்களில் சில மனிதர்கள். அதிலே ஒருத்தன் உங்க மாமன். அவனைப் போயி நல்லவன்னு சொல்றியே! நம்பிக்கிட்டிரு. நாமத்தைப் போடுவான் உனக்கு. ஊர் சொத்தைக் கொள்ளை அடிச்சுக்கிட்டு அண்ணன் பெண்ஜாதியைக் கெடுத்துகிட்டு…நீ வூட்டுக் குப் போடா, உங்க மாமன் பாக்கப் போறான். சந்தேகப்படுவான்.”

அப்போது அந்தப் பக்கமாக டெய்லர் கடை கேசவன் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான். சாமியார் ‘ஒமேகா’ வைப் பார்த்தார். அது 7.50 காட்டியது.

இந்த இருட்டு வேளையிலே இவன் இப்படி எங்கே போகிறான். என்று சாமியார் சந்தேகப்பட்டார். சாவடிப் பக்கம் சைக்கிள் திரும்பியது. அங்கே ஆப்பக்கடை ராஜாத்தியின் உருவம் தெரிந்தது. சற்று நேரத்தில் அவர்கள் இரண்டு பேரும் சாவடிக்குள் நுழைவதும் தெரிந்தது.

‘இது வேறே ஒரு கேஸ் – தனிக் கதை!’ என்று சாமியார் சிரித்துக் கொண்டார்.

3

“ஜக்கம்மா, ஜக்கம்மா! – சிவாஜி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். நடு நசி நேரத்தில் அந்த சிம்மக் குரல், டெண்ட் சினிமாவிலிருந்து பயங்கரமாக ஒலித்தது.

சாமியார் அந்தப்படத்தை மூன்று முறை பார்த்தா யிற்று. வானம் பொழியுது. ‘பூமி விளையுது’ டயலாக் அவருக்கு மனப்பாடம்.

ஒரு தடவை மெட்ராஸுக்குப் போய் நடிகர் திலகத் தைப் பார்த்துப் பேசிட்டு வரணும். அவர் வீட்டு வாசல்லேகூடப் பிள்ளையார் கோயில் கட்டியிருப்பதாகக் கேள்வி. இந்த அரசமரத்துப் பிள்ளையாருக்கும் சின்னதா ஒரு கூரை போட்டுக் கொடுக்கச் சொல்லணும். மெட்ரா ஸுக்குப் போகக் குறைஞ்சது அம்பது ரூபாயாவது ஆகுமே; பணத்துக்கு எங்க போறது?

பின்பக்கத்திலுள்ள வில்வ மரத்திலிருந்து கோட்டான் ஒன்று கத்தியது. வடக்குத் திசையில், வெகு தூரத்திற்க் கப்பால் நாய் ஊனையிடும் சத்தம் காற்றில் மெலிதாக ஒலித்தது.

சாமியார் ஆகாசத்தைப் பார்த்தார். ஸப்தரிஷிகள்’ கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. தூக்கம் வரவில்லை. எழுந்து உட்கார்ந்தார். கிணற்றடிக்குப் போனார். டீ தயாரித்துச் சாப்பிட்டார். சார்மினார் ஒன்றைப் பற்ற வைத்து ஊதினார். சுகமாக இருந்தது.

சிவாஜி எட்டப்பனை ஏசிக் கொண்டிருந்தார்.

தென் திசையிலிருந்து யாரோ ஒரு ஆள் வருவது நிழலாகத் தெரிந்தது. அலை அலையாக வானத்தை நோக்கி உயர்ந்த கராப்.

ப்ளேட் பக்கிரி நெருங்கி வந்தான்.

“இப்படி எங்கிருந்து வரே?” – சாமியார் கேட்டார்.

“சினிமாவுக்குப் போயிட்டு வரேன்…”

“தெற்கு பக்கத்திலிருந்து வரே. சினிமாக் கொட்டா வடக்கால இல்லே இருக்குது?”

“வெளியூர்லே பார்த்தேன். இப்பத்தான் பஸ்ஸுலே இறங்கி வரேன்.”

“ப்ளேடு, எங்கிட்டேயே பொய் சொல்லாதடா! தப்பு. உண்மையைச் சொல்லிடு. அவினாசி தேருக்குப் போயிட்டு வரயா? திருவிளாக் கூட்டத்திலே பிக்பாக்கெட் அடிச்சுட்டு வந்திருப்பே!”

தூரத்தில் போலீஸ் விசில் கேட்டது.

“அவுட்போஸ்ட் ரோந்து போகுது.”

பக்கிரி பின்வாங்கினான்.

“ஏன் பயப்படறே? மடியிலே கனமா?”

“இந்தாங்க நூறு ரூவா.”

“எதுக்கு?”

“புள்ளையார் கோயில் கட்ட”

“எது?

“சாமியாரே! உனக்கெதுக்கு அந்தக் கேள்வியெல்லாம்? பேசாமெ வச்சுக்கோ. எங்கயோ அடிச்சேன் வாங்கிக்குவியா!”

“திருட்டு – சொத்தெல்லாம் தொடமாட்டேன். முதல்லே இந்த இடத்தை வுட்டுப் போயிடு நீ…”

பக்கிரி, இடுப்பில் கட்டியிருந்த தன் நாலு முழ் வேட்டியை விலக்கி, அதற்குள்ளிருந்த சிவப்பு நிற நிஜார் பாக்கெட்டுக்குள் கையை விட்டான். ஒரு பர்ஸ், கனமான பர்ஸ், வெளியே வந்தது….

“இது ஏது உனக்கு?”

“பொள்ளாச்சி சந்தையிலே அடிச்சேன். ஆயிரத்து இருநூறு ரூவா. இதைப் பத்திரமா வச்சிரு. காலையிலே வந்து வாங்கிக்கறேன். இதிலே புள்ளையாருக்கு நூறு ரூபா!”

“போலீசைக் கூப்பிடவா!”

“இன்னா சாமியாரே, பயமுறுத்தறயா? அவுட் போஸ்ட் எம்மேலே கை வைச்சிருவானா? கிழிச்சிறமாட்டேன். இந்தா புடி மரியாதையா வெச்சுக்கோ….”

“தொட மாட்டேன் பாவப் பணம்.”

“புடிக்கப் போறியா, இல்லையா?”

“இல்லேன்னா …?”

பக்கிரி இடுப்பிலிருந்த பிச்சுவாக் கத்தியை எடுத்து சாமியார் நெஞ்சுக்கு நேராகக் கொண்டு போனான். சாமியார் பயந்து போனார்.

“இதை வெச்சுக்கோ. இப்ப வூட்டுக்குப் போறேன். பெண்ஜாதி இந்த பர்ஸைப் பார்த்தா ஏதுன்னு கேப்பா. திருடின துன்னு தெரிஞ்சா ஊரைக் கூட்டுவா. அப்புறம் ஊருக்குள்ளே என் மரியாதை என்ன ஆகும்?”

‘உனக்கு மரியாதை வேறே இருக்குதா ஊருக் குள்ளே?’ சாமியார் எண்ணிக் கொண்டார்.

பக்கிரி மணிபர்ஸை சாமியார் மீது வீசிவிட்டு “சார்மினார் வச்சிருக்கியா? ஒண்ணு குடு” என்றான்.

கொடுத்தார். பற்ற வைத்துக் கொண்டு “காலையிலே பாக்கறேன்” என்று கூறிப் போய்விட்டான்.

‘கள்ளனுக்கு, கள்ளக் காதலுக்கு, கள்ளக் கடத்தலுக்கு, கள்ளச் சாராயத்துக்கு – இவ்வளவுக்கும் நான் தான் துணையா? அவருக்கிளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டிம்பாங்க. சரியான பளமொளி’ என்று எண்ணிக் கொண்டே பர்ஸை எடுத்துப் பைக்குள் பத்திரப்படுத்திக்னார் சாமியார்.

***

காலையில் குமாரு வந்தான்.

“கோடி வீட்டு கெய்வி ஸெத்துட்டாங்க என்றான்.

“அடப்பாவமே, எப்படா?”

“ராத்திரியே ஸெத்துட்டாங்களாம். வனஜாம்மா சொன்னாங்க…”

“வயசாச்சு. எண்பது எண்பத்தஞ்சு இருக்குமே. குளிரலே விறைச்சிட்டுது போலிருக்கு. பாவம் நடுவிலே கண் தெரியாமே இருந்து முந்தின ஆட்சியிலே கண் ஆப்ரே ஷன் செஞ்சு, கண்ணாடி போட்டாங்களே. அப்புறம் கண் ரொம்ப நல்லாத் தெரிஞ்சுதே. தெருக்கூத்துக்கெல்லாம் கூடப் போய் பார்த்துட்டு வருமே ! அடாடா” – சாமியார் ச்சுக் கொட்டினார்.

குமாரு, சாமியார் முகத்தையே பார்த்தான்.

“கெளுவியைத் தூக்கிப் போடறத்துக்கு ஏதாவது ஏற்பாடு நடக்குதாடா? அனாதைக் கெளுவி, பாவம்! ஒரே ஒரு புள்ளை இருந்தான் – மிலிட்ரியிலே செத்துட்டான். நீ போய்ப் பார்த்தயா குமாரு?”

“பார்த்தேன். யாருமே இல்லை. பக்கத்தூட்டம்மாத் தான் வந்திருக்காங்க. அளுவறத்துக்குக் கூட ஆள் இல்லே..”

“ராத்திரி இளமைக் கோட்டான் கத்திச்சு. நாய் ஊளை பிட்டுது. அப்பவே நெனைச்சேன். ஏதோ நடக்கப் போகு துன்னு. கெளுவியைத் தூக்கிடுச்சா!”

சாமியார் எழுந்து வேகமாக நடந்தார். பக்கிரி எதிரே வந்தான்.

“டே பக்கிரி, கூடவே வாடா. கெளுவி போயிடுச் சாம்”

“எந்தக் கெளுவி?”

“மிலிட்ரி சாமிக்கண்ணு அம்மாடா. வா, போய்ப் பாப்பம்”.

***

நாலு பேரைக் கூட்டி வறட்டி, விறகு சேர்த்து பச்சை மூங்கில் வெட்டி வந்து, புதுச் சட்டி கொண்டு வந்து ஒரு மாதிரி கிழவியின் காரியத்தை முடித்து விட்டுத் திரும்பிய சாமியார் கிணற்றடியில் போய் நின்று கொண்டு வா வாளியாகத் தண்ணீர் சேந்தித் தலையிலே ஊற்றிக்கொண் டார். தலையைத் துவட்டிக் கொண்டே கட்டிவில் வந்து உட்கார்ந்தார். நல்ல பசி. டீ போட்டுக் குடித்தார். இந்தச் சமயம் வெளியூரிலிருந்து வந்த ஆள் ஒருவன் அவரிடம் ஒரு சீட்டைக் கொடுத்தான்

சாமியார் படித்து விட்டு முகத்தைச் சுளித்தார்.

திண்டிவனத்திலிருந்து அவருடைய சகோதரி பண உதவி கேட்டு எழுதியிருந்தாள்.

“சாமியாராகி ஊரை விட்டு வந்தாலும் விடம் டாங்களே! என் கிட்டே ஏது பணம்?”

“நாலு நாளா காய்ச்சல்லே படுத்திருக்காங்க. செலவுக்குப் பணம் இல்லியாம் திருவிழாவிற் போறேயே, அப்படியே அண்ணனைப் பார்த்துட்டு வா. சீட்டுத் தரேன்’னு சொன்னாங்க என்றான் அந்தத் திண்டிவனத்து ஆள்.

“நான் பாங்க்கா வச்சிருக்கேன்? ஆண்டிகிட்டே ஏது பணம்?”

சைக்கிளில் பக்கிரி வந்தான். அவன் முகத்தில் அவசரம் தெரிந்தது.

சற்று தூரத்தில் ஒரு காலை பெடலில் வெத்தபடியே “தரீங்களா… என்று கேட்டான்.

சாமியார் எடுத்துக் கொடுத்தார்.

பக்கிரி அதிலிருந்து நூறு ரூபாய் நோட் ஒன்றை உருவி சாமியாரிடம் கொடுத்துவிட்டு வேகமாய்ப் போய் விட்டான். திண்டிவனத்து ஆசாமியை எதிரில் வைத்துக் கொண்டு சாமியாரால் அதிகம் பேச முடியவில்லை.

“இந்தா நூறு ரூபா இருக்குது. புள்ளையார் கோயில் கட்டறதுக்குன்னு கொடுத்தான். எடுத்துட்டுப் போய்க் கொடு. குளந்தீங்கல்லாம் நல்லாருக்குதா? ஜாரிச்சேன்னு சொல்லு.”

திண்டிவனம் ஆள் போய் விட்டான். குமாரு வந் தான். சாமியார் ஒமேகாவைப் பார்த்தார். அதை மறந்து போய்க் கையில் கட்டியபடியே தலை முழுகியி ருந்தது அப்போதுதான் தெரிந்தது.

“இன்னா ஆச்சுடா வனஜாவுக்கு?” – குமாருவைக் கேட்டார் சாமியார்.

“வாயிலெடுத்துட்டு தான் இருக்காங்க…”

“சரியாயிடும்…”

“இந்தாங்க, வனஜாம்மா குடுத்திட்டு வரச் சொன்னாங்க” எவர்சில்வர் டிபன் பாக்ஸைச் சாமியாரிடம் கொடுத்தான் குமாரு .

“இன்னாடா இது? வாசணை பலமா இருக்குது?”

“கோளி பிர்யாணி. வூட்லே செஞ்சாங்க…”

பசிக்கு சாமியார் ஒரு பிடி பிடித்தார். தண்ணீ ரைக் குடித்தார். ஏப்பம் விட்டார்.

“கோளி’ விடியக்காலை சீக்கிரம் எளுப்பிடும்டா கோளியாச்சே!” என்று சிரித்தார் சாமியார்.

எங்கிருந்தோ அந்த நாய் ஓடி வந்தது. “இந்த நாய்க்கு தான் எங்கே மணக்குமோ? சனியனே, இந்தாத் தொலை ….’ மிச்ச பிர்யாணியை, டிபன் பாக்ஸைக் கவிழ்த் துக் கொட்டினார்.

திடீரென்று ஊர்நாய்களெல்லாம் சேர்ந்து குலைத்தன. காது செவிடு பட்டது. நரிக்குறவர்கள் கூட்டம் ஒன்று ஊரோரத்தில் வந்து முகாம்’ போட்டுக் கொண்டிருந்தார்கள்.

குமாரு அவர்களை வேடிக்கை பார்க்க ஓடி விட்டான்.

ஒமேகாவை ஆட்டிக் காதில் வைத்துப் பார்த்தார். அது ஓடிக்கொண்டிருந்தது. மணி பன்னிரண்டரை.

ட்ராமாக்காரி ரத்னாபாய் வந்தாள். பிள்ளையாரைச் சுற்றினாள். விளக்குக்கு எண்ணெய் ஊற்றினாள்.

“இந்தாங்க மைசூர்ப்பாகு. நெய்யிலே செஞ்சது.”

“ஏது?”

“அவனாசி திருவிழாவுக்குப் போயிருந்தேன். ட்ராமா. ஓட்டல்லே வாங்கிட்டு வந்தேன். அசல் நெய்யிலே தயாரிச்சதுன்னு போர்ட்லே எழுதியிருந்தது.”

“அது நெய்யில்லே. பொய் அது சரி, நாட்டாமைக் காரரைப் பார்த்தியான

“எங்கே?”

“அவினாசிலே …”

“இல்லையே”

“நீயும் அவரும் சேர்ந்து உட்கார்ந்து ஓட்டல்லே சாப்பிட்டுக் கிட்டிருந்ததாக் கேள்விப்பட்டேன் ….”

“யார் சொன்னது?”

“சும்மா ஒரு யூகம்தான். நாட்டாமைக்காரரை ரெண்டு நாளாக் காணோம். அவினாசிலே திருவிளா! நீ ட்ராமாக்குப் போயிட்டே கணக்குப் போட்டுக் கிட்டேன். ரெண்டும் ரெண்டும் நாலு” என்றார் சாமியார்.

“நான் வாரன்” ரத்னாபாய் போய் விட்டாள்.

அவுட் போஸ்ட் பழனி மஃப்டியில் வந்தான்.

“சிகரெட் இருக்கா?” என்று கேட்டான்.

“இன்னா பள்னி. டிரஸ்ஸில்லாமே வரே?” சிகரெட் கொடுத்தார்.

ச”ஸ்பெண்ட்லே இருக்கே.”

“லஞ்சமா?”

“இல்லே. சத்தியமங்கலம் காட்டிலிருந்து புலி வந்தது பாருங்க. அதைப் புடிக்கலையாம். அது விசயமா எனக்கும் எஸ். ஐ.க்கும் கொஞ்சம் தகராறு” என்றான்.

“புலியைத்தான் புடிச்சுட்டாங்களே! பேப்பாலே பார்த்தேனே.”

“அறு வேறே புலி”- என்றான் பழனி.

4

உட்கார்ந்து, உட்கார்ந்து கட்டில் கயிற்றில் தொய்வு ஏற்பட்டிருந்தது. சாமியார் அதை இழுத்துப் பின்னி முறுக்கேற்றினார். தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.

“என்ன சிரிக்கிறீங்க சாமி?” என்று கேட்டான் அவுட் போஸ்ட் பழனி.

பானரை எடுத்து உதறிவிட்டு, அதிலிருந்த ஆட்டுக் கார அலமேலு மீதிருந்த தூசியைத் தட்டியபடி ” அலமே லுவும் ரெட்டை நாடி. நானும் ரெட்டை நாடி ! கட்டில் தொய்யாம என்ன செய்யும்? அதை நெனைச்சுத்தான் சிரிச்சேன்” என்றார்.

“சாமியார் நல்ல தமாஸ்!” என்றான் பழனி .

ஆப்பக்கடை ராஜாத்தி வந்தாள். அலுமினிய டியன் பாக்ஸ் ஒன்றில் இட்லியும் மீன் குழம்பும் கொண்டு வந்து சாமியார் பக்கத்தில் பணக்’ கென்று வைத்தாள். “இத் தோட ஆறு ரூவா நாற்பது பைசா” என்றாள். குரலில் ஒரு அழுத்தத்தோடு.

பழனி ஓரக்கண்ணால் அவளை ரசித்துக் கொண்டிருந் தான். களையான முகம். எடுப்பான நெற்றி – கன்னத்தில் குழி.

இன்னா அப்படிப் பாக்கறே?” என்று பழனியை அதிகாரத்தோடு அதட்டினாள்.

ரோட்லே கடை போடறே – ஈ மொய்க்குது. டிரா பிக்கு எடைஞ்சலா இருக்குது. கேஸ் எழுதிறவா?” என்றான் பழனி.

“பெரிய டிராபிக் துள்ளிப்போகுது ரோட்லே! ஏன்? காலையிலே சாப்பிடலையா? வந்து சாப்பிட்டுப் போயேன். என்ன ஆச்சு புலி அதைப் புடிக்காதே . ஈ மொய்க்குதாம். ஓசிலே சாப்பிடறப்போ ? சாமியாரே! காசு எப்ப தரப் போறே?” என்றாள்.

“தரேன்.”

“தரேன்னா? எப்பன்னு கரெக்டா தெரியணும்…”

“காசு வரட்டும்; ஆண்டி கிட்டே ஏது பணம்?”

“அந்த பேச்செல்லாம் வேணாம். சாமியாராச்சே, போனாப் போகுதுன்னு கொடுத்தா கெடு வெச்சிட்டே போறது நல்லாருக்கா? இது நாயமா உனக்கு? சனிக்கிழமை வருவேன். கொடுத்துடணும். இல்லே, நான் ரொம்பப் பொல்லாதவளாயிடுவேன்” வேகமாகத் திரும்பி நடந்தாள்.

சாமியாருக்கு அவமானம் தாங்கவில்லை. ஆனாலும் அவள் சொன்ன சுடுசொற்களை மௌனமாக ஜீரணித்துக் கொண்டார். அவுட்போஸ்ட் அசந்து போனான். ஆப்பக் கடைக்காரி மீது கேஸ் பிடித்து அவளைப் பழிவாங்க எண் ணினான். ஸஸ்பென்ஷனில் இருக்கும் தனக்கு அந்த அதிகாரம் இல்லாததால் சும்மா இருந்துவிட்டான்.

பழனியின் முகம் பசியால் வாடியிருப்பதைக் கண்ட சாமியார். டிபன் பாக்ஸிலிருந்து இரண்டு இட்லிகளை எடுத்துக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.

“நீங்க சாப்பிடலையா?”

“ஆப்பக்கடைக்காரம்மா பேசினது வயிறு நிரம்பிட்டது…ஆண்டவனே!”

மீன் குழம்பு வாசனைக்கு நாய் ஓடி வந்தது. அவன் சாப்பிட்ட பிறகு, ”சாமி கிட்டே பத்து ரூபா பணம் கேக்கலாம்னு வந்தேன். சாமியே சங்கடத்திலே இருக் காங்களே; நான் வரட்டுங்களா?….’ என்று இழுத்தபடி எழுந்தான்.

“பத்து ரூவாய்க்கு அப்படி என்ன நெருக்கடி”

“அரிசி வாங்கணும். சம்பளம் வாங்கலையே சஸ்பெண்ட்லே இல்லே இருக்கேன்?”

“ஓகோ! அப்படியா! இந்த வாச்சை எடுத்துக்கிட்டுப் போ. யார் கிட்டேயாவது கொடுத்து ஒரு அம்பது ரூவா கடன் வாங்கிட்டு வா. எனக்கு நாப்பது ரூவா கொடு. ஒரு மாசத்துலே திருப்பிக் கொடுத்துடலாம்” என்றார் சாமியார்.

“இது ஏது சாமி வாச்?”

“வேதாசலம் குடுத்தான்.”

“சும்மாக் குடுக்க மாட்டானே. கஞ்சனாச்சே! ஏதோ களுக்கு இருக்குது…” என்று இழுத்தான் பழனி.

“இருக்குன்னு வச்சுக்கயேன்” என்றார் சாமியார்.

பழனி ‘ஒமேகா’வை வாங்கிக் கொண்டு அவசரமாகப் புறப்பட்டான்.

சாமியார் கிணற்றடிக்குப் போய் தண்ணீரைச் சேந்தித் தலையிலே கொட்டிக் கொண்டார்.

“சாமியாராச்சே போனாப் போகுதுன்னு குடுத்தா, இது நாயமா இருக்கா உனக்கு?”

“சனிக்கிழமை வருவேன். கொடுத்துடணும். இல்லே. நான் ரொம்பப் பொல்லாதவளாயிடுவேன்”.

தலையைத் துவட்டிக் கொண்டார். நெற்றியிலும் உடம்பிலும் திருநீற்றைப் பூசினார். பிள்ளையாரைச் சுற்றி வந்தார். குளித்ததும் திடீரென்று பசி வேகம் தோன்றி வயிற்றுக்குள் உஷ்ண அலை புரண்டது.

கட்டிலில் போய் உட்கார்ந்து டிபன் பாக்ஸை எடுக்க கையை விட்டுத் துழாவினார். அது தட்டுப்படவில்லை. குனிந்து தரையில் பார்த்தார். இல்லை , எழுந்தார். தன்னைத் தானே சுற்றிச் சுற்றி வந்தார். காணவேயில்லை.

“ராஜாத்தி எடுத்துப் போயிருப்பாளோ?”

மரத்தின் மீது ஏதோ சலசலப்பு கேட்டது. அண் ணாந்து பார்த்தார். அரச மரத்தின் மீது உட்கார்ந்திருந்த குரங்கின் கையில் அந்த டிபன்பாக்ஸ் இருந்தது .! அது அந்த அலுமினிய டிபன் பாக்ஸைக் காலி செய்து விட்டு தொப்பென்று கீழே போட்டது.

“பிச்சையெடுத்தானாம் பெருமாளு, அத்தைப் பிடுங்கி னானாம் அனுமாரு. இந்தக் குரங்கு எப்போ வந்தது இங்கே? நேற்று நரிக்குறவங்களோடு வந்திருக்குமோ?”

***

குமாரு இட்லி கொண்டு வந்தான். தேங்காய்ச் சட்னி சலவை செய்த மாதிரி .

“ஏதுடா!”

“வனஜா அம்மா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க…”

“வாயிலெடுக்கறாங்களா இன்னும்?”

“இல்லே. சரியாயிடுச்சாம். சொல்லச் சொன்னாங்க, புள்ளார் விபூதி வாங்கிட்டு வரச் சொன்னாங்க.”

‘அப்படியா? மாமன் எங்கே போயிருக்கான்?”

“சேலம்…”

“அங்கே இன்னா”

“கரும்பு சாகுபடியாளர் கூட்டமாம். போயிருக்காரு ”

“உன்னை எங்கேடா காணோம் நேத்தெல்லாம்?”

“நரிக்குறவங்களைப் பார்க்கப் போயிருந்தேன், துப்பாக்கி வச்சிருக்காங்களே!”

“காடை கவுதாரி சுடுவாங்க….”

“நேத்து கூட ஒரு முயல் சுட்டாங்க..”

“உனக்கெதுக்குடா, அதெல்லாம். படி. நல்லாப் படிச்சு முன்னுக்கு வா!”

“மூணாவது படிச்சிருக்கேனே. பத்தாதா!”

“திருக்குறள் படிப்பியா? அர்த்தம் புரிஞ்சுக்குவியா?”

“அதிலே என்ன இருக்குது?”

“எப்படி வாளணுங்கிற தத்துவங்களெல்லாம் இருக்குடா. அதுக்கு ஒப்பான நூல் இந்த ஒலகத்திலேயே இல்லைடா”

“காக்கி டிரஸ் போட்டுகிட்டு துப்பாக்கி பிடிச்சுக் கிட்டு லெப்ட்ரைட் நடக்கணும். அதான் எனக்கு ஆசை….”

“நல்ல ஆசைடா”

“இந்தாங்க …”

“என்னடா அது?”

“வில்ஸ் பாக்கெட். உங்களுக்குத்தான்”

“ஏது?

“எங்க மாமன் நிறைய அடுக்கி வெச்சிருக்காரு. ஒரு பாக்கெட் எடுத்துட்டு வந்தேன்..”

“திருப்பிக் கொண்டு வெச்சிடு . திருடக் கூடாது. பொய் பேசக் கூடாது. தெரிஞ்சுதா! இதுக்குத்தான் திருக் குறள் படிக்கணுங்கிறது!”

“ஒண்ணே ஒண்ணு எடுத்துக்குங்க….”

“திருட்டு சொத்து. தொடமாட்டேன். கொண்டு போயிடு.” குமாரு உற்சாகம் குறைந்து வீட்டுக்குப் போனான்.

***

பழனி திரும்பி வந்தான். பத்து ரூபாய் நோட்டுகளை எண்ணிச் சாமியாரிடம் கொடுத்தான்.

“கிடைச்சுட்டுதா பணம்?”

“எண்பது ரூபா கெடச்சுது…”

“இந்தா . நீ இருபது வச்சுக்கோ. பணம் கெடச்சுதும் திருப்பிக் கொடு, போதும். போறப்போ ஆப்பக்கடைக் காரம்மாவிடம் இந்த ரூபாயைக் கொடுத்துடு’ என்று இன்னொரு பத்து ரூபாயை எடுத்துப்பழனியிடம் தந்தார்.

“அந்த பொம்பளையைச் சும்மா விடக்கூடாது சாமி மரியாதையில்லாமப் பேசிட்டாளே, மனசு கொதிக்குது. எனக்கு” என்றான் பழனி .

என்னைத்தானே பேசினா. நீ ஏன் கோபப்படறே? போ போ – பழனியைச் சாந்தப்படுத்தினார் சாமியார்.

அடுத்த நிமிடம் குமாரு இரைக்க இரைக்க ஓடி வந்தான்.

“டெய்லர் கேசவனை நல்லபாம் – கடிச்சுட்டுதாம். வண்டியிலே போட்டுக்கிட்டு வராங்க…” என்றான்.

நாலைந்து பேர், வண்டியிலிருந்த கேசவனைத் தூக்கி வந்து கட்டிலில் படுக்க வைத்தார்கள். ராஜாத்தி ஓடி வந்தாள். “ஐயோ . ஐயோ!” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள்.

கேசவன் மனைவி அவளைச் சந்தேகத்துடன் பார்த்தார்.

சாமியார், வேட்டியின் ஒரு மூலையில் நீளமாகக் கிழித் தார் . மந்திரித்தார். நாடா போல் கிழித்திருந்த துணியில் முடிக்க மேல் முடிச்சாகப் போட்டுக் கொண்டிருந்தார். ஏழாவது முடிச்சின் போது கேசவன் கண் திறந்தான்.

“இனி உயிருக்குப் பயமில்லை. எடுத்துக்கிட்டுப் போங்க என்றார் சாமியார். இதற்குள் ஊரே அரச மரத் தடியில் கூடிவிட்டது. ராஜாத்தி, சாமியார் காலில் விழுந்து கும்பிட்டாள். கேசவன் மனைவி அதையும் பார்த் தாள்.

தன் புருசன் மீது இவளுக்கு ஏன் இத்தனை கரிசனம்? ஏதோ ரகசியம் இருக்குது’ என்று எண்ணிக் கொண் டாள்.

“இன்னும் கொஞ்ச நாளைக்கு எண்ணெய்ப் பதார்த் தம் எதுவும் சாப்பிடக் கூடாது. உப்பில்லாப் பத்தியம் இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே சாமியார், முடிச்சுப் போட்ட துணியை அரச மரத்தில் கட்டி விட்டார் .

“பாம், அம்புட்டு தாமா?” கேவசன் மனைவியிடம் கேட்டார்.

“அம்புடலையாம். ஓடிடுச்சாம்.”

“அதுங்கண்ணைப் புடுங்க…” என்று சபித்தாள் ராஜாத்தி .

“இருளனைக் கூப்பிட்டு பாம்பு கடிச்ச எடத்துலே கொந்து” போடச் சொல்லுங்க. வெசம் வெளியே வந்துரும்” என்றார் சாமியார்.

போய் வரேன் சாமி. நீங்கதான் தெய்வம்” என்றாள் ஆப்பக்கடை ராஜாத்தி.

“அவுட்போஸ்ட் பணம் கொடுப்பாரு , வாங்கிக்க” என்றார் சாமியார்.

“மன்னிச்சுடுங்க சாமி! காலையிலே கொஞ்சம் துடுக்காப் பேசிட்டேன். அப்படிப் பேசியிருக்கக் கூடாது. தப்பு தான். மன்னிச்சுடுங்க. நீங்க பணம் கொடுக்க வேணாம்.”

“ஏன்?”

“கேசவனைக் காப்பாத்தனீங்களே.”

“மந்திரம், வைத்தியம், ஜோசியம் இதுக்கெல்லாம் நான் பணம் வாங்கற வளக்கமில்லே. தெரியுமா? ஆமாம். கேசவன் உனக்கு என்ன வேணும்?” – சாமியார் கேட்டார்.

“தெரியாத மாதிரி கேக்கறீங்களே!” ராஜாத்தி வெட்கத்தோடு திரும்பி நடந்தாள்.

***

சாமியாருக்கு மெட்ராஸில் வேலை இருந்தது. கட்டிலை எடுத்து அரச மரத்தடியில் சாற்றிவிட்டு, பையை எடுத்துக் கொண்டு குமாருவைக் கூப்பிட்டார். “நான் வரேண்டா!” என்று புறப்பட்டார்.

“பட்டணத்துக்கா?”

“ஆமாம்; சாயந்தரம் நாலு மணி பஸ்ஸுக்குப் போறேன். திங்கக்கிளமை திரும்பிருவேன். உங்க மாமன் வந்தா சொல்லு…”

“எனக்கு இன்னா வாங்கி வருவீங்க?”

“சிலேட்டு, வாய்ப்பாடு, பென்சில், பேனா, நோட்புக். முத்தமிழ் நான்காம் வாசகம், திருக்குறள். எனக்கு அபிராமி அந்தாதி…”

சற்று தூரம் நடந்தார். தெருக் கோடியில் கமலா எதிரில் வந்தாள்.

“வாம்மா, நல்ல சகுனம், எதிரிலே வரே” என்றார் சாமியார்.

“பட்டணம் போறீங்களா”

“ஆமாம்.”

“எனக்கு ஒரு வழி செய்ய மாட்டீங்களா? என்னைக் கொண்டு போய் என் புருசன் கிட்டே எப்ப சேர்க்கப் போறீங்க?” கண்ணீருகுத்தாள் அந்தப் பெண்.

“முருகனை வேண்டிக்க. பார்க்கலாம். எல்லாம் நல்ல படியா நடக்கும். சிந்தாதிரிப்பேட்டையிலே எங்கே இருக்கான்னு சொன்னே?”

“சாமிநாயக்கன் சந்துலே சைக்கிள் ஷாப்.”

“டயம் கிடைச்சா பார்க்கறேன். அளுவாதேம்மா. நல்ல காலம் பொறக்கும். புள்ளையாரைச் சுத்திட்டு போ.”

நாலு நாள் கழித்து சாமியார் திரும்பி வந்தார். ஊரில் ஏதோ பெரிய ரகளை நடந்திருப்பதுபோல் தோன்றி யது. சூழ்நிலை சரியில்லை. எல்லார் முகத்திலும் ஒரு திகிலும் பயமும் தெரிந்தது.

“இன்னாடா விசயம், குமாரு? ஊர்லே ஒருத்தன் முகத்திலேயும் சிரிப்பைக் காணோம்” என்று ஆவலோடு விசாரித்தார் சாமியார்.

“ஒரு கொள்ளைக்கூட்டம் வந்து ஊரையே கலக் கிடுச்சு.”

“என்னது, கொள்ளைக் கூட்டமா? என்னடா சொல்றே?” என்று கட்டிலை நிமிர்த்திப் போட்டார் சாமியார் .

5

சாமியாருக்கு மெட்ராஸ் புதிதல்ல. ரயிலை விட்டு இறங்கியதும் நேராக மூர்மார்க்கெட்டுக்குப் போனார். பத்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த மூர்மார்க்கெட் அப்படியே இருந்தது. சிவப்புச் செங்கல் சுவர்கள். எதிரே ராஜா சத்திரம், மர நிழலில் நாலு சக்கர வண்டியில், பெரிய கண்ணாடி ஜாடியில் ரோஸ் கலர் சர்பத், அதைச் சுற்றி துண்டு போட்ட எலுமிச்சம் பழங்கள், ஐஸ், பழைய பெளண்ட்ட ன் பேனாக் கடை. லாட்டரிச் சீட்டு விற்கும் பையன் , தேள்கடி, பாம்புக் கடி மருந்து, மூலிகைக்குச்சி கள், முதலியன.

சாமியார் மலிவு விலையில் ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொண்டார்.

இடது புறம் திரும்பினார். “வான் கோழி புலவ் – ரெடி’ என்ற எழுத்துக்களுடன் மிலிடரி ஓட்டல் ஒன்று பச்சை ட்யூப் விளக்குடன் வரவேற்றது.

பழைய கிராமபோன் பெட்டி ஒலிபெருக்கிக் குழாயுடன் ஈனசுரத்தில் ‘கீ’ தளர்ந்து போய் ‘தீன கருணாகரனே’ பாடிக்கொண்டிருந்தது.

வீலில் வந்துள்ள இராணுவ சேவகர்கள் மூன்று பேர் பழைய டிரங்குப் பெட்டியைப் புரட்டிப் பார்த்துப் பேரம் செய்து கொண்டிருந்தார்கள்.

சாமியார் மெயின் கட்டடத்தின் படிகளில் ஏறி உள் வட்டம், வெளி வட்டம் இரண்டையும் சுற்றினார்.

குமாருவுக்கு வேண்டிய பாடப் புத்தகம், பென்கில், பேனா, திருக்குறள் மலிவுப்பதிப்பு எல்லாம் கிடைத்தன.

நடந்தார். செருப்பு கடித்தது. அதை எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டு வெறும் காலுடன் நடந்தார்.

திரும்பத் திரும்ப மனித முகங்களைப் பார்த்து அலுத்துப் போயிருந்ததால் மிருகக் காட்சிச் சாலைக்குப் போனார். மிருகங்கள் அதிகமில்லை. இருந்த சில மிருகங் களும் நாளொரு எலும்பும் பொழுதொரு தோலுமாக “வளர்ந்து கொண்டிருந்தன.

கூண்டுக்குள் ஒரு புலி , செத்துப் போனது போல், தூங்கிக் கொண்டிருந்தது. மூச்சு விட்டுக் கொண்டிருப்பது ஒட்டிய வயிறு உப்பி வடிவதிலிருந்து தெரிந்தது.

புலியைப் பார்த்தபோது அவுட்போஸ்ட் பழனியின் நினைவு வந்தது சாமியாருக்கு.

மயில் பார்த்தார். முருகன் நினைவு வரவே, நேராகத் திரும்பி நடந்து, நடந்து நடந்தே கந்தசாமிக் கோயிலை அடைந்தார். அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. ஓதுவார் நின்றபடியே கணீரென்ற குரலில் திருப்புகழ் பாடிக் கொண்டிருந்தார். சாமியாருக்குத் தண்டபாணி தேசிகர் நினைவு வந்தது,

என்னமாய்ப் பாடுவார்?” விபூதியைப் பூசிக் கொண்டு வள்ளி தேவானையைச் சேவித்துவிட்டு கந்த கோட்டத்தை வலம் வந்து வெளி யேறினார். பக்கத்திலிருந்த புத்தகக்கடையில் கந்தர் அனுபூதி, அபிராமி அந்தாதி இரண்டையும் வாங்கிக் கொண்டார்.

சிவப்புப் பட்டைக் கரை போட்ட பிள்ளையார் துண்டு ஒன்று, நல்ல சாம்பிராணி கொஞ்சம் வாங்கிக் கொண்டதும் பஸ் ஏறி வள்ளுவர் கோட்டம் போனார். சிற்பங்கள் நிறைந்த அந்தப் பெரிய தேர், வள்ளுவர் சிலை, விசால மண்டபம், வழவழப்பான தரை, குறள் வாசகங்கள் இவ்வளவும் பார்த்தபோது தமிழ் உணர்வு மேலோங்கி உணர்ச்சி வசப்பட்டுப் போனார்.

‘இனி ஒரு முறை வள்ளுவனும் பிறந்து விட முடியாது, அவனுக்கு இப்படி ஒரு மண்டபமும் யாரும் கட்டிவிட முடியாது’ என்று எண்ணிக் கொண்டார்.

அங்கிருந்து ஜெமினியை அடைந்தார். மேம்பாலம் சென்னையின் ஜாடையை மாற்றியிருந்தது. பாலம் இல்லாதபோது அந்த இடம் எப்படி இருந்தது என்பதை எண்ணிப் பார்த்தார். அப்புறம், காதலன் என்ற பெயரில் கிழவன், குமநியைக் கட்டிப் பிடித்துக் குலவும் கண்ணராவி பானர்கள் வரிசை. இவற்றுக்கிடையில் ஆதி சங்கரர்.

டிரைவ்-இன், ஸ்டெல்லா எல்லாவற்றையும் கடந்து சோளா ‘ ஓட்டல்வரை போனார். வலது பக்கம் திரும்பி சோவியத் கல்ச்சரைத் தாண்டி ஒரு தெருவில் புகுந்து இன்னொரு சந்தில் திரும்பி கடைசியாக ஒரு பங்களாவுக் குள் நுழைந்தார்.

சாமியாருக்குத் தெரிந்த பணக்கார முதலியார் பங்களா அது. ஒரு அல்சேஷன், ஒரு வெள்ளை பாமரே னியன், மாம்பழக் கலரில் ஒரு கூர்க்கா , பெரிய நாகலிங்க மரம், ஒரு ஹெரால்ட், ஒரு அம்பாசிடர், வயதான புஷ்டி மீசை டிரைவர், கான்வெண்ட்டுக்குப் போகிற குழந்தை, டிபன்பாக்ஸ் – இவ்வளவும் அவர் கண்ணில் பட்டன; பட்டனர்.

“முதலியார் இருக்காரா? ”

“ஹாஹாம்” என்றான் கூர்க்கா.

சாமியாரைக் கண்டதும் அந்தப் பழைய டிரைவர் ஓடி வந்து அவரை உள்ளே அழைத்துச் சென்றான்.

போர்ட்டிகோ அருகில் ஃபெளண்ட்டன் பீச்சிக் கொண்டிருந்தது. குட்டி பாமரேனியன் வாலை ஆட்டிக் கொண்டே கீச்சுக் குரலில் குரைத்தது. அரைத் தூக்கத் திலிருந்த அல்சேஷன் ஓடி வந்து சாமியாரை மோப்பம் பார்த்து விட்டுப் போயிற்று. உள்ளேயிருந்த முதலியார். சாமியாரைப் பார்த்துவிட்டு வாசலுக்கு விரைந்து வந்தார்.

“எப்ப வந்தீங்க? லெட்டர் போடக் கூடாதா? ஸ்டேஷனுக்குக் கார் அனுப்பியிருப்பேனே” என்றார்.

“இந்தக் கட்டைக்கு அது வளக்கமில்லையே. திடீர்னு நெனைச்சேன். புறப்பட்டு வந்துட்டேன். எல்லாரும் சௌக்கியமா?”

“அம்மாவுக்குதான் உடம்பு சரியில்லை. எனக்கும் மனக்கவலை அதிகமாயிடுச்சு. பளட் ப்ரெஷர் இருக்குது. பிஸினஸ் சரியில்லே. மூத்த மகளுக்குக் கல்யாணம் செய்யணும். பல இடம் பார்த்துட்டேன். ஒண்ணும் சரிப்பட்டு வர்லே. சாமியார்தான் ஜாதகம் பார்த்துச் சொல்லணும். அம்மாவுக்கும் ஏதாவது மருந்து கொடுத் துட்டுப் போகணும். உங்களைப் பார்க்கணும்னு நானே அவ கிட்டே சொல்லிக் கிட்டிருந்தேன். தெய்வமே வந்துட்டுது…” என்றார்.

“மகள் நட்சத்திரம் என்ன சொன்னீங்க?”

“மூலம்..”

“ஜாதகத்தை எடுத்துட்டு வாங்க பாப்பம். அம்மாவுக்கு…”

“அம்மாவுக்கு மூலம்…”

“நட்சத்திரமா?”

“இல்லே, வியாதி…”

“மூலத்துக்குக் கைகண்ட மருந்து வெச்சிருக்கேன். சூரணம் தரேன். தேன்லெ குளைச்சு ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுங்க. மூலம் நிர்மூலமாயிடும்” என்றார்.

பெண் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தார். விரல்களை மடக்கிக் கணக்குப் போட்டார்.

ஏளுஏளு ஏளு….. எட்டு, எட்டு, எட்டாவது வீட்டிலே சனி இருக்கான், இன்னும் ரெண்டு மாசத்துலே சரியா யிடும். நாற்பது நாளைக்கு நவக்கிரகம் சுத்தி சனி பகவானுக்கு விளக்கேத்தி வெச்சா எல்லாம் சரியாயிடும். அப் புறம்…. நான் புறப்படட்டுமா என்று எழுந்தார் சாமியார்.

“எங்கே இவ்வளவு அவசரமாப் புறப்பட்டுட்டீங்க? இப்பத்தானே வந்தீங்க? வண்டி அனுப்பவா? ஹார்லிக்ஸ் சாப்பிடறீங்களா”

“வேணாம். வைத்தியம் செஞ்ச இடத்திலே தண்ணி கூடக் குடிக்கமாட்டேன் – உங்களுக்குத்தான் தெரியுமே என்னைப்பத்தி…”

“திடீர்னு மெட்ராஸுக்கு வந்திருக்கிங்க.. ஏதாவது சேஷம் உண்டா?”

“நான் தங்கியிருக்கிற மரத்தடியிலே ஒரு பிள்ளையார் ரொம்பக் காலமா ஆகாசம் பார்த்துக்கிட்டிருக்காரு. அவருக்கு ஒரு கூரை போடணும். அது விசயமா சிவாஜி கணேசனைப் பாத்து ஏதாவது கேக்கலாம்னு வந்தேன்.”

“இதுக்கெதுக்கு அங்கெல்லாம் போறீங்க? இவ்வளவு தானே விஷயம்? எவ்வளவு தொகை வேணும்? சொல்லுங்க!” என்றார்.

“மூவாயிரம் இருந்தால் ‘கேட்’டோட கோயிலைக் கட்டி முடிச்சுடலாம்.”

“இந்தாங்க , இப்பவே எடுத்துட்டுப் போங்க. நல்ல காரியத்துக்குப் பணம் கொடுக்கக் கொடுத்து வச்சிருக்கணுமே.”

மனைவியை அழைத்தார். ஆப்பிள் கொண்டுவரச் சொன்னார். வெற்றிலை பாக்குத் தட்டில் பணத்தையும் ஆப்பிளையும் வைத்துச் சாமியாரிடம் கொடுத்து விட்டுக் காலில் வீழ்ந்து வணங்கினார். “இன்னும் தேவைப்பட்டாலும் லெட்டர் போடுங்க. அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

“பணம் கொடுத்தது போதாது. கும்பாபிஷேகத்துக்கு வந்து நடத்தி வைக்கணும். சின்னப்பா தேவரைக் கூப்பிடலாமான்னு பாக்கறேன்.”

“கூப்பிடுங்க. அவர் முருகன் கோயில்னா வருவாரு. எதுக்கும் ஜாரிச்சுப் பாருங்க”

சாமியார் வந்த காரியம் எளிதில் முடிந்து விட்டது.

சிந்தாதிரிப்பேட்டை நினைவு வந்தது. நடந்தார். சாமிநாயக்கன் சந்திலுள்ள சைக்கிள் ஷாப்பைக் கண்டு பிடித்துவிட்டார்.

அங்கே கமலாவின் புருசன் பீடி குடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். சாமியாரைக் கண்டதும் சட் டென்று பீடியை, தான் உட்கார்ந்திருந்த ஸ்டுலின் கீழ் அழுத்தி விட்டு மரியாதையோடு எழுந்து நின்றான்.

“க்பாலி! நல்லாருக்கியா?”

“சாமியார் புண்ணியத்திலே. எப்ப வந்தாப்லேடீ சாப்பிடலாங்களா? நிக்கறீங்களே, இப்படி உட்காருங்க” ஆசார உபசாரம் செய்தான்.

“வேணாம். நான் ஒண்ணு கேப்பேன். செய்வியா?”

“தயங்காமை கேளுங்க…”

“கை மேலே சத்தியம் அடிச்சுக் கொடுப்பியா?”

“அதெப்டி?”

“அப்ப நான் வரேன்… ”

“வந்த சமாசாரத்தைச் சொல்லாமப் போனா எப்படி?”

“கையடிச்சுக் கொடு”

“என் பெண்ஜாதி கமலா விசயம் தவிர எதுவானாலும் சொல்லுங்க, செய்யறேன்…”

“எனக்கு வேறெ விவகாரம் என்ன இருக்குது உன் கிட்டே? அவ நல்ல பொண்ணு. ஒரு தப்பும் செய்யாதவ கைவிட்டுடாதே! பாவம், யாரோ உன் மனசைக் கெடுத்திருக்காங்க..”

“அப்ப அவளைப்பத்தி எனக்கு வந்த லெட்டர்…”

“அது லெட்டர் இல்லே. மொட்டைக் கடுதாசி அதெல்லாம் யார் வேலைன்னு எனக்குத் தெரியும். நீ என்னை நம்பு. நாளைக்கே புறப்பட்டுவா. கமலாவை வந்து பாரு. அவ களங்கமில்லாத பொண்ணு. அவளைக்கூட்டி வந்து வச்சுக்க. தொட்டுத் தாலி கட்டினவளைக் கண்கலங்க விடாதே. மகாப் பாவம். இந்தா ஆப்பிள், சாப்பிடு. நான் வந்த காரியத்தைப் பளமாக்கு. நான் சொல்ல வேண்டி யதைச் சொல்லிட்டேன். நான் வரேன்” சாமியார் அவசரமாக ரயிலுக்குப் புறப்பட்டு விட்டார்.

***

ஊரில் ஒரே ரகளை –

“என்னடா தமாக! சொல்லேண்டா கொள்ளைக் கூட்டம்னா எப்ப வந்தாங்க… என்ன செஞ்சாங்க? கொஞ்சம் விவரமாச் சொல்” என்றார்.

“அவங்கள்ள ஒருத்தன் செத்துட்டான். நம் ஊர்க்காரங்க யாரோ கொன்னுட்டாங்களாம். பொணம். வாராவதிக்கடியிலே விழுந்து கெடக்குதாம். ஊர்லெ பேசிக்கிறாங்க” என்றான் குமாரு.

“பள்னி எங்கடா?”

“அவரைக் காணோம், தேடிக்கிட்டிருக்காங்க.”

6

குமாருவின் கையில் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி இருந்தது. அதில் கேப்பு களை வைத்து படப்டப் பென்று சுட்டுக்கொண்டிருந்தான். அவன்,

“கொள்ளைக்காரங்க எதிரிலே வந்தா இதாலேயே சுட்டுடுவேன்” என்று வீரம் பேசினான்.

“இது ஏதுடா துப்பாக்கி?”

“மாமா சேலம் போய் வந்தாரே, அப்ப வாங்கிட்டு வந்தாரு. ரொம்ப நல்லவரு மாமா.”

“துப்பாக்கி வாங்கி கொடுத்துட்டாரே உனக்கு. அது போதுமே உனக்கு ரெண்டு ரூபா செலவிலே நல்லபேரு வாங்கிட்டான் உன் மாமன். அவனுக்கு உள்ளபடியே உன் மேலே அக்கறை இருந்தா என்ன வாங்கித் தருவான் புக்ஸுங்க வாங்கித் தருவான். பள்ளிக்கூடத்திலே சேர்ந்து படிக்கச் சொல்லுவான். நீ எக்கேடு கெட்டா அவனுக்கு என்னடா? உன் சொத்தெல்லாம் அவன்கிட்டே போயாச்சு. இனிமே நீ படிச்சா என்ன, படிக்காட்டி என்ன?”

சாமியார் அவனுக்காக வாங்கி வந்திருந்த புத்தகம், பென்ரில், பேனா, எல்லாவற்றையும் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார்.

குமாரு. அந்தப் புத்தகங்களை வாங்கி அவற்றிலுள்ள படங்களைப் பார்த்தான். திரு. வி. க. பெரியார், காமராஜ் அண்ணா. ராஜாஜி. இவர்களின் படங்கள் அத்தனையும் இருந்தன.

“காமராஜைத் தெரியுமாடா உனக்கு?”

“நம்ம இவருக்கு வந்திருக்காரே. மீட்டிங்லே பேசினாரே ஜெயாங்கர் , நம்பியாரெல்லாம் வரமாட்டாங்களா?”

“அவங்க எதுக்கு?”

“அவங்கதான் துப்பாக்கிச் சண்டை போடுவாங்க..”

“நீ துப்பாக்கிலேயே இரு. படிக்காதே. ஏனைப் பிள்ளைங்களெல்லாம் படிச்சு முன்னுக்கு வரணும். நாட்டிலே அறியாமை ஒளியணும்னு பாடுபட்டாங்க. காமராஜரும் அண்ணாவும், ஊர் ஊற பள்ளிக்கூடங்களைத் திறந்தாங்க. நீ அவங்களுக்கெல்லாம் நாமத்தைப் போட்டுட்டு ஊர் சுத்திக்கிட்டு இருக்கே…”

குமாரு புதுப் புத்தகங்களைப் பிரித்து முகர்ந்து பார்த்தான். “நீ எளுத்து வாசனை இல்லாதவன். அதான் புத்தகத்தை வாசனை பார்க்கிறே” என்றார் சாமியார்.

“நான் படிக்க போறேன், நீங்க சொல்லித்தருவீங்களா?”

“ஆவட்டும்… கொள்ளைக்கூட்டம் உங்க வூட்டுக் குள்ளே வரலையா குமாரு?”

“கம்பி போட்டிருக்குதே, எப்படி, வர முடியும்?”

“பின்னே யார் வூட்லே கொள்ளை அடிச்சாங்களாம்?”

“டெண்ட் சினிமா முதலாளி வூட்லே…”

“அப்புறம்?”

“போலீஸ்காரர் அதோ வராரோ!”

“கேள்விப்பட்டீங்களா சாமி?” என்று கேட்டுக் கொண்டே பழனி வந்தான்.

“ஆமாம், முழு வெவரம் தெரியல்லே. கொள்ளைக் கூட்டம்னா யாரு அவுங்க? எப்படி வந்தாங்க? இதுவரைக்கும் கேள்விப்படாத அதிசமாயிருக்கோ!”

“ஒண்ணுமே புரியலீங்க. நைட்ஷோ நடந்துக்கிட்டி ருந்தது. அம்மாவாசை இருட்டு. தரனு கரெண்ட் வேறே ஃபெயில் . ஷோ பாதியிலே நி. வட்டுது. இந்த நேரத்துலே தான் கொள்ளை நடந்திருக்கிறது. நாலைஞ்சு வீட்டிலே புகுந்து கொள்ளை அடிச்சிருக்காங்க. நகை நட்டு பணம் எல்லாம் போயிருக்கு. வந்தவங்க யாருன்னே புரியல்லே. ஆத்தோரம் வாராவதி பக்கத்திலே ஒரு ஆள் செத்துக் கிடக்கிறான். அவனைப் பார்த்தா வடக்கத்தி ஆள் மாதிரி தெரியுது. எப்படிச் செத்தான்னே தெரியல்லே . முகமெல்லாம் அடையாளம் தெரியாமே நசுங்கிப் போயிருக்கு. செத்தவன் யாருன்னு தெரியல்லோ”

“டி.எஸ்.பி.க்குத் தெரியுமா?”

“இண்டலிஜென்ஸ் டிபார்ட்மெண்டலேருந்து மோப்ப நாய்ங்க வந்திருக்குது…”

“செத்தவன் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவன் தான்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்க?”

“இன்னும் சரியாத் தெரியலையே! பாடி போஸ்ட் மார்ட்டத்துக்குப் போயிருக்கு… மெட்ராஸ் போன காரியம் என்ன ஆச்சு சாமி?”

“பளம் தான்; ஆனா இங்கே இப்படி ஆயிடுச்சே. ரெண்டு நாள் ஊர்லே இல்லே. அதுக்குள்ளே இத்தனை கலாட்டாவா?”

பழனி போய்விட்டான். சாமியார் பையைப் பத்திரப்படுத்திவிட்டு கிணற்றடிக்குப் போய் வெகுநேரம் குளித்தார். டீ போட்டுக் குடித்தார். குமாருவிடம் காசு கொடுத்து இட்லி வாங்கிவரச் சொன்னார்.

“குமாரு போனதும் கமலா வந்தாள். பிள்ளையாரைச் சுற்றிப் பெருக்கித் தண்ணீர் தெளித்தாள். கோலம் போட்டாள். விளக்கேற்றிச் சூடம் கொளுத்தினாள். பிறகு சாமியாரிடம் வந்து போன காரியம் என்ன ஆச்சுங்க?” என்று ஆவலோடு கேட்டாள்.

“நீ எதிர்லே வந்தே. நல்ல சகுனம். எல்லாம் பளமா முடிஞ்சுது. உன் புருசனைக்கூடப் பார்த்துப் பேசினேன்”

“பேசினீங்களா? என்ன சொன்னாரு?”

“வருவான்னுதான் தோணுது. நல்ல மாதிரியாத்தான் பேசினான். யாரோ அவன் மனசைக் கடைச்சிருக்காங்க. நான் எல்லாத்தையும் வெவரமா எடுத்துச் சொன்னேன். என் பேச்சிலே நாயம் இருக்கிறமாதிரி தலையாட்டினான். நாளைக்கே புறப்பட்டு வந்து கமலாவைக் கூட்டிக்கிட்டுப் போ. அவளைக் கண்கலங்கவிடாதே. தங்கமான பொன்னு சொல்பட்டு வந்தேன். வருவான்னுதான் நினைக்கிறேன்”.

கமலா மௌனமாக நின்றாள். நீர் நிறைந்த சோக விழிகளோடு, நம்பிக்கையோடு, நன்றியோடு, சாமி யாரைப் பார்த்தபடி நின்றாள்.

“கையிலே என்ன அது. எண்ணெயா? இப்படிக் கொஞ்சம் கொடு. செருப்பு காலைக் கடிச்சுட்டுது. கடிச்ச எடத்துல தடவறேன். ஆமாம்; உங்க வூட்டுக்குக் கொள்ளைக்காரங்க வரலையா?”

“எங்க வூட்லே என்ன இருக்குது? சினிமாக் கொட்டா தங்கப்பன் வூட்லேதான் ஏகப்பணம் போயிட்டுதாம்.”

“அதோ தபால்காரர் வரார் பாரு. உனக்குத்தான் ரதோலெட்டர்வருது . கபாலி எளுதியிருப்பான். என்றார் சாமியார் .

கமலாவிடம் ஒரு தபாலைக் கொடுத்துவிட்டுச் சென்றார் போஸ்ட்மேன்.

அது கமலாவின் புருசன் கபாலி எழுதிய கடிதம்தான்.

7

கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் கமலா.

“கபாலி என்ன எளுதியிருக்கான்? நல்ல சமாசாரம் தானே?”

செருப்பு கடித்த இடத்தில் எண்ணெயைத் தடவிக் கொண்டே கேட்டார் சாமியார்.

“ஆமாங்க; அடுத்த வெள்ளிக் கிழமை வராராம். உடனே புறப்படணுமாம்.”

“உனக்கு நல்ல காலம் பொறந்துட்டுதுன்னு சொல்லு. நான் சொல்லலையா, கபாலி வருவான்னு. பிள்ளையாரை இன்னொரு தடவைச் சுத்திட்டுப் போ” என்ரு சாமியார்.

கமலா பிள்ளையாரைச் சுற்றினாள். உணர்ச்சிப் பெருக்கில், பரவச நிலையில் சாமியார் காலில் வீழ்ந்து கும்பிட்டு விட்டு ‘நான் வரேங்க’ என்று சொல்லிப் புறப்பட்டாள்.

“இந்தாம்மா. எண்ணெய் டம்ளர். புருசன் வர சந்தோசத்திலே இதை மறந்துட்டியா!” என்று கூறி டம்ளரைக் கமலாவிடம் கொடுத்தார் சாமியார்.

சற்று நேரத்துக்கெல்லாம் குமாரு வந்தான். சாமி யாருக்கு லேசாகத் தலைவலித்துக் கொண்டிருந்தது. அலைச்சல், தூங்காமை, மனக் கவலை.

பையில் வைத்திருந்த அமிர்தாஞ்சனத்தை எடுத்து நெற்றியில் தேய்த்துக் கொண்டார். உடம்பெல்லாம் வலித்தது. அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டார். குமாரு அவரைத் தொட்டுப் பார்த்தான். நெருப்பாய்ச் சுட்டது. “தலை வலிக்குதா சாமி?” என்று அவர் தலையை அமுக்கிவிட்டான். “நல்ல காய்ச்சல் அடிக்குது” என்றான்.

அவர் உடல் நடுங்கியது. குளிர் ஜுரம். குமாரு ஒரு துணியை எடுத்துப் போர்த்தி விட்டான். சாமியார் பேச முடியாமல் திணறினார். மூச்சுக் காற்று உஷ்ணமாக வந்தது. அந்த உஷ்ணம் குமாருவைத் தாக்கியது.

அவன் கண்கலங்கினான்.

“நீ ஏண்டா அளுவறே!”

“நீங்க செத்துட்டீங்கன்னா நானும் செத்துடுவேன்.”

“நான் செத்துட்டா என்னடா நட்டம்! நீ சின்னப் பையன். வளர வேண்டியவன். உனக்கு சொத்து இருக்குது. எதிர்காலம் இருக்குது. நீ படிச்சு முன்னுக்கு வரணும். ஏதாவது தொழிற்சாலை தொடங்கி நடத்தணும். அதனாலே ஒரு நூறு பேருக்கு பிளைப்பு நடக்கணும்…செய்வியா?”

“துப்பாக்கித் தொழிற்சாலை ஆரம்பிக்கட்டுமா?”

“நீ துப்பாக்கியிலேயே இரு. அதெல்லாம் அரசாங்கத்திலே செய்வாங்க. நீ துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி படி”

“அது என்ன துப்பாக்கி”

“அது துப்பாக்கி இல்லேடா! திருக்குறள். மளை மாதிரி நாலு பேருக்கு உதவியாயிரு” என்றார்.

“மழை வரும் போல இருக்குதே. எங்க வீட்டுத் திண்ணையிலே வந்து படுக்கறீங்களா?”

“வேணாம்; நான் பிள்ளையார் கோயில் ஆண்டி. எனக்கு இந்த எடமே போதும்.”

“ஆண்டின்னா? உங்களுக்கு யாருமே இல்லையா?”

“திண்டிவனத்திலே தங்கச்சி இருக்கா. சம்சாரம் கோயமுத்தூர் மில்லிலே வேலை செய்யுது. ஒரே ஒரு மகன் தான். அவன் ஆட்டோ ரிக்ஷா ஓட்றான். படிப்பு ஏறல்லே…”

“நீங்க ஏன் இங்கே வந்துட்டீங்க?”

“நான் சாமியாராயிட்டேன். பந்தம் பாசம் எல்லாத் தையும் விட்டுட்டேன். ஆனால் அதுதான் என்னை விட மாட்டேங்குது. அந்தப் பாசம் உன் பேரிலே திரும்பிட்டுது. இந்தப் பிள்ளையாருக்கு ஒரு கோயில் கட்டணும்… உன்னைப் படிக்க வச்சுப் பெரிய மனுசனாக்கணும்..இதாண்டா என் லச்சியம்”.

ஜுர வேகத்தில் சாமியார் படபடவென்று பேசினார்.

“நீங்க ரொம்பப் பேசாதீங்க; காய்ச்சல் அதிக மாயிடும்” என்றான் குமாரு.

“டெண்ட் சினிமா தங்கப்பனைப் பார்த்தியா எங்கே யாவது?”

“இப்பக் கூடப் பார்த்தனே. ஸ்கூட்டர்லே போயிக் கிட்டிருந்தாரு.”

“அவரைப் பார்த்தா இங்கே வரச் சொல்லுடா?”

“இப்பவே இட்டுக்கிட்டு வரேன்” குமாரு எழுந்து ஓடினான். கமலா எதிர்ப்பட்டாள். “எங்கடா ஓடறே?” என்று கேட்டாள்.

“சாமியாருக்குச் சரியான காய்ச்சல்!”

“இப்பப் பார்த்தனே, நல்லா பேசிக்கிட்டிருந் தாரே…”

“உடம்பெல்லாம் சுடுது. தலைவலி . படுத்துட்டாரு.” குமாரு ஓடிக்கொண்டே சொன்னான்.

தங்கப்பன் வெளியே போயிருந்தான். அவன் வீட்டில் தகவல் கொடுத்துவிட்டு அங்கிருந்து தன் வீட்டுக்கு ஓடினான். மாமன் வேதாசலம் சிகரெட் ஊதியபடி செய்தி களை முந்தித் தரும் நாள் தாளைப் படித்துக் கொண் டிருந்தார்.

“சாமியாருக்குக் காய்ச்சல். படுத்திருக்காரு” என்றான்.

“இப்ப என்னடா அதுக்கு? நீ ஏன் பதர்றே?”

“பாவமாயிருக்குது?”

“பாவம் என்னடா! அனாதைச் சாமியார் தானே? இன்றைக்குச் செத்தால் நாளைக்கு ரெண்டு நாள்” என்றார் வேதாசலம் அலட்சியமாக.

ஆப்பக்கார அம்மாளிடம் போய்ச் சொன்னான். டெய்லர் கேசவனிடம் சொன்னான். நாட்டாண்மைக்காரரிடம் சொன்னான். ட்ராமாக்காரி ரத்னா பாயிடம் சொன்னான். யாருமே கவலைப்படவில்லை.

ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டார்கள். ரத்னாபாய் மட்டும் அலட்சியமாக “அவர் கிட்டதான் சூர்ணம் இருக்குமே சாப்பிடச் சொல்லு, சரியாயிடும்” என்றாள்.

அடுத்த ஊரிலிருந்து தினமும் ஒரு டாக்டர் வருவது வழக்கம். தெருக்கோடியில் உள்ள அவருடைய டிஸ்பென்ஸரிக்கு ஓடினான் குமாரு.

“சாமியாருக்குக் காய்ச்சல்! வந்து பாக்கறீங்களா?”

“பணம் வச்சிருக்கயா?” டாக்டர் சிரித்தார்.

“இல்லே …”

“இது தர்ம ஆஸ்பத்திரி இல்லே. போய்ப் பணம் கொண்டு வா. வந்து பாக்கறேன்.”

“எத்தினி ரூவா?”

“முதல்லே பத்து ரூவா கொண்டா; அப்புறம் மருந்துக்குத் தனி…”

குமாரு ஓடினான். கமலாவைத் தேடிப் போய்ப் பணம் கேட்டான்.

“டாக்டருக்குப் பத்து ரூவா வேணுமாம். பணம் இல்லாமே வரமாட்டாராம்…”

“இந்தாடா, என்கிட்டே இருக்குது பத்து ரூவா. இதைக் கொண்டு போய்க் கொடு. வருவாரு.”

கமலாவிடமிருந்து பத்து ரூபாயை வாங்கிக் கொண்டு குமாரு திரும்பி டாக்டரிடம் ஓடினான். பணத்தைக் கொடுத்து விட்டு ‘வாங்க’ என்று அவசரப்படுத்தினான். டாக்டர் ஸ்கூட்டரில் ஏறி அரசமரத்தடிக்கு வந்தார். குமாரு அதே வேகத்தில் பின்னோடு ஓடி வந்தான்.

சாமியார் நினைவின்றி முனகிக் கொண்டிருந்தார். இதற்குள் கமலா அங்கே வந்து விட்டாள்.

சாமியார் முதுகிலும் மார்பிலும் ஸ்டெதாஸ்கோப் வைத்துப் பார்த்தார் டாக்டர். பல்ஸ் பார்த்தார். கடைசி யில் தர்மாமீட்டர் வைத்துப் பார்த்து விட்டு, ‘நூத்தி மூணு இருக்குது….’ என்று சொல்லி ஒரு இஞ்செக்ஷன் போட்டார். “டிஸ்பென்லரிக்கு வாடா மருந்து தரேன்” என்று குமாருவைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனார். ஊரில் யாருமே சாமியாரை வந்து பார்க்கவில்லை. வேதாசலம், நாட்டாண்மைக்காரர், டிராமாக்காரி ரத்னாபாய், பிளேடு பக்கிரி, டெய்லர் கேசவன். ஆப்பக் கடைக்காரி அத்தனை பேரும் ஊரில் தான் இருந்தார்கள். ஆனால் யாருமே சாமியாரை எட்டிப் பார்க்கவில்லை.

கமலா மட்டும் சாமியாருக்கு பார்லி கஞ்சி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். குமாரு. டாக்டர் கொடுத்த மாத்திரை, பவுடர். மிக்சர் மூன்றையும் சாமியாருக்கு வேளை தவறாமல் கொடுத்துக் கொண்டிருந்தான்.

சாமியார் சாயந்திரம் கொஞ்சம் கண்விழித்துப் பார்த்தார். தங்கப்பனும் குமாருவும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

தங்கப்பனைப் பார்த்து “வா. தங்கப்பா! கொள்ளைக்காரங்க வந்தாங்களாம்..” என்று ஈனசுரத்தில் கேட்டார் சாமியார்.

“ஆமாம்; நகை நட்டு, வெள்ளிப் பாத்திரம், பணம் எல்லாம் போயிட்டுது…”

“எவ்வளவு ரூவா?”

“மூவாயிரம் எண்ணி வெச்சிருந்தேன். சினிமாக் கொட்டகை வசூல், பாங்கிலே கொண்டு போய்ப் போடற துக்கு… அவ்வளவும் போயிட்டுது . கூப்பிட்டீங்களாமே!”

“ஆமாம்; இந்தப் பையிலே மூவாயிரம் இருக்குது. இந்தா”

“ஏது?”

“இது வேறே பணம். பிள்ளையார் கோயில் கட்டறதுக்காக மெட்ராஸ்லேருந்து பிச்சை எடுத்து வந்தேன். நீதான் கோயிலைக் கட்டித் தரணும். முன்னே பின்னே ஆனாலும் நீயே போட்டுக் கட்டிக் கொடுத்துடு…”

“எனக்கு நேரம் சரியில்லையே! இப்ப எல்லாத்தையும் கொள்ளை கொடுத்துட்டு நிக்கறேன்.”

“பிள்ளையாருக்கு நீ செய். எல்லாம் சரியாயிடும். அவர் உன்னைக் காப்பாத்துவார்” என் சாமியார்.

தங்கப்பன் பணத்தை வாங்கிக் காண்டு புறப்பட்டான்.

அவன் போனதும், “டாக்டருக்கு யாருடா பணம் கொடுத்தாங்க?” என்று குமாருவைப் பார்த்துக் கேட்டார் சாமியார்.

“கமலா”

“எத்தனை ரூவா?”

“பத்து”

“வேறே யாரும் வந்தாங்களா?”

“ஒருத்தருமே வரல்லே…அவங்களுக்கெல்லாம் உடம்பு சரியில்லேன்னா உங்ககிட்டே வைத்தியத்துக்கு வருவாங்க..”

“உங்க மாமனுக்குத் தெரியுமா?”

“தெரியும்.”

“என்ன சொன்னாரு?”

“அனாதை சாமியார்தானே! இன்னைக்குக் செத்த நாளைக்கு ரெண்டு நாளுன்னாரு.”

“அப்படியா சொன்னான்?” சாமியார் சிரித்தார்.

“என்ன சிரிக்கிறீங்க?”

“அதாண்டா ஒலகம்! நல்லாப் படிச்சுக்க ” என்றார் சாமியார்.

8

ஐந்தாம் நாள் காலை.

இந்த நாலு நாள் காய்ச்சலில் சாமியார் அரை உடம்பாகிலிட்டார். குமாருதான் அவரைக் கூடவே இருந்து கவனித்துக் கொண்டான். வேளை தவறாமல் மருந்து கொடுத்தான்: தலை அமுக்கி விட்டான். கஞ்சி கொடுத்தான்

“இட்லி சாப்பிட்றீங்களா?”

“ஏதுடா?”

“கமலா கொடுத்தனுப்பிச்சு.”

“அதென்னடா சிவப்பா?”

“வெங்காய சட்னி.”

சாமியார் இட்லித் துண்டால் சட்னியை அமுக்கிச் சாப்பிட்டார். மண்ணாக ருசித்தது.

“நாக்கு செத்துப் போச்சு; நான் செத்திருக்கணும். தப்பிச்சேன். நாக்கு செத்துட்டுது. டாக்டர் என்னடா சொன்னாரு?”

“கொசுக்கடி ஜுரம்னாரு.”

“ஊரிலே இருக்கிற ஆடுமாடுங்க எல்லாம் அரசமரத் தடியிலே தானே வாசம்! கொசு உற்பத்தியே இங்கே தானே”

“தங்கப்பனும் மேட்டுத் தெரு மேஸ்திரியும் வாராங்க….” என்றான் குமாரு.

சாமியார் தள்ளாடி குமாருவின் தோள் மீது கை ஊன்றி நின்றார். பலகீனம். தலையைச் சுற்றி மின்மினிப்பூச்சிகள் பறந்தன.

“மயக்கமா வருதுடா” என்றார்.

“நீங்க கொஞ்சநேரம் அப்படியே உட்காருங்க” என்றான் குமாரு.

“இன்றைக்கு முகூர்த்த நாள். கோயில் வேலையைத் தொடங்கிடலாமா? மேஸ்திரி வந்திருக்காரு” என்றான் தங்கப்பன்.

“யாரு. பொன்னப்ப மேஸ்திரியா?”என்று கேட்டார் சாமியார்.

“ஆமாங்க” என்றான் மேஸ்திரி.

“அறுபதுக்குத் தொண்ணூறு அளவெடுத்துக்கோ. இப்பவே வேலையை அரம்பிச்சுடலாம். ரெண்டே மாசத்திலே கோயிலைக்கட்டி முடிச்சுடணும். தெரிஞ்சுதா?”

பொன்னப்பன் தலையாட்டினான்.

பிறகு, மூவருமாகப் போய் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துச் சூடம் கொளுத்தினார்கள்.

முதன் முதல் ஈசான்ய மூலையில் போய் நின்று எலுமிச் சம் பழத்தை நசுக்கினார்கள். சாமியார் கந்தசாமி கோயிலரு கில் வாங்கின சாம்பிராணியை எடுத்துக் கொடுத்துத் தூபம் போடச் சொன்னார். கடப்பாறையைத் தொட்டுக் கொடுத்தார். மேஸ்திரி அங்கே கடப்பாறை யால் தரையில் ஓங்கிக் குத்திப் பள்ளம் செய்த இடத்தில் ஒரு கம்பைச் செருகினான். தங்கப்பன் அந்தக் குச்சிக்கு மஞ்சள் குங்குமம் இட்டு மாவிலை கட்டினான். சூறை அடித்தான். பிறகு நாலு மூலைகளிலும் குச்சி அடித்து அந்த நாலையும் பிணைத்துக் கயிறு கட்டிச் சுண்ணாம்புக் கோடு போட்டுக் கொண்டார்கள். சிதறுகாய் பொறுக்கிக் கொண்டிருந்த சிற்றாட்களை மேஸ்திரி விரட்டி வேலை வாங் கினார். மளமளவென்று அஸ்திவார வேலை ஆரம்பமாயிற்று .

சாமியாருக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. டீ குடித்தார்.

நாலு நாளாகப் பிரிந்திருந்த சார்மினாரை எடுத்துப் புகைத்தார்.

சற்று தூரத்தில் கமலாவும் கபாலியும் வருவதைக் கண்டார்.

“வா கபாலி, எப்ப வந்தே?”

“ரபேத்திரி லாஸ்ட் பஸ்ஸுலே வந்தேன். மணி ரெண்டாயிடுச்சு. அந்த நேரத்திலே உங்களை எழுப்ப வேணாம்னு…”

“கையிலே என்னது?”

“ஹார்லிக்ஸ். சாமியாருக்குத் தான் கொண்டு வந்தேன். உடம்பு சரியில்லேன்னு கமலா சொல்லிச்சு.”

“இந்தக் கட்டைக்கு ஹார்லிக்ஸ் ஒரு கேடா? வேணாம்; எடுத்துட்டுப் போயிடு.”

“அன்போட தரேன்.”

“கமலாவைச் சாப்பிடச் சொல்லு. பாவம் இளைச்சிருக்கா..என் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து வந்தயே, அதுவே எனக்கு ஹார்லிக்ஸ் சாப்பிட்ட மாதிரி!”

“இன்னைக்கு நல்ல நாளாம். கமலாவை அழைச்சிட்டுப் போகலாம்னு வந்தேன். வாழ்த்தி அனுப்புங்க.”

“முதல்லே புள்ளையாரைக் கும்பிட்டுட்டு வாங்க…”

இருவரும் விநாயகரை வணங்கிவிட்டு வந்தார்கள். அப்புறம் சாமியார் காலில் வீழ்ந்து அவரது ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்கள்.

“நேரா பஸ்ஸுக்குத்தான் போறீங்களா?”

“ஆமாம், பத்து மணி பஸ்…”

“போய் லெட்டர் போடுங்க. சந்தோசமா செளக்கியமா இருங்க. கமலாவை நல்லா கவனிச்சுக்கப்பா. நல்ல பொண்ணு…இப்பத்தான் அவள் முகத்திலே சிரிப்பைப் பார்க்கிறேன்…” என்றார் சாமியார்.

“உடம்பைப் பார்த்துக்குங்க சாமி. வரோம்” என்றாள் கமலா.

***

குமாரு வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்தான்.

“மாமன் இருக்கானாடா வூட்லே?”

“இருக்காரு; என்னவோ தெரியல்லே, பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்திருக்காரு.”

“என்னடா விசயம்?”

“தெரியல்லே. தபால்காரர் வந்து லெட்டர் கொடுத்து விட்டுப் போனார். அதைப் படிச்சார். அதிலேருந்து இப்படி ஆயிட்டாரு”

“என்னடா விசயம்”

“தெரியலையே”.

“அப்புறம் என்ன நடந்தது?”

“நாட்டாமைக்காரரும் மணியக்காரரும் வந்தாங்க. கதவைச் சாத்திக்கிட்டு மூணுபேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க முகமும் சரியில்லே…”

“என்னடா அதிசமாயிருக்கு? என்ன விசயம்டா?”

“தெரியலையே “என்ன பேசினாங்க?”

“தெரியலையே. கதவைச் சாத்திக்கிட்டு ரகசியமாப் பேசிக்கிட்டு இருந்தாங்க….”

“எல்லோரும் போயிட்டாங்களா?”

“போயிட்டாங்க. மாமா மட்டும் அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்காரு…”

“ம்…. பாப்பம்; யாராத்தா செத்தாலும் பொளுது விடிஞ்சாத் தெரியுது” என்றார் சாமியார்.

**

ராத்திரியே தெரிந்து விட்டது. இரவு சாப்பாட்டுக்கப் புறம் குமாருவின் மாமன் வேதாசலம் ஏழெட்டுப்பேரோடு சாமியாரைப் பார்க்க வந்தான்.

“ஒரு முக்கியமான சமாசாரம் சாமி!” என்றான் வேதாசலம்.

நாட்டாமைக்காரர் மௌனமாக ஒரு கடிதத்தை காடுத்துச் சாமியாரிடம் நீட்டினார். சாமியார் “நீயே படி, கேட்கிறேன்” என்றார். இதற்குள் ஊரே அரச மரத்தடியில் கூடிவிட்டது. நாட்டாமை படித்தார்.

“காவிமாதாகி ஜே!

இதனால் சகல கனதனவான்களுக்கும் தெரிவிப்பது யாதெனில், இப்பவும் கடந்த மாதம் ஏழாம் தேதி இரவு உங்கள் ஊரில் நாங்கள் கொள்ளையடித்து விட்டுத் திரும்புகிற போது எங்களில் ஒருவனான மேத்தா என்பவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். அவனைக் கொன்றது நீங்கள் தான். உங்களில் யாரோ ஒருவன் தான் அவனைக் கொன்றிருக்கிறீர்கள். இப்பொழுது மேத்தா எங்களிடம் இல்லை. அவனுக்குப் பதில் உங்கள் ஊரிலிருந்து யாராவது ஒருவனை எங்களிடம் அனுப்பி வைக்க வேண்டும் பழிக்குப் பழி உயிருக்கு உயிர்! இல்லையேல் உங்கள் ஊரையே தீ வைத்துக் கொளுத்தி விடுவோம். வெடிகுண்டுகள் வீசி அழித்து விடுவோம்.

இம்மாதம் முப்பதாம் தேதி இரவு பன்னிரண்டு மணிக்கு அதே வராவதிக்கருகில் எங்கள் லாரி வந்து நிற்கும். நீங்கள் அனுப்பும் ஆள் அந்த லாரியில் வந்து ஏறிக் கொள்ள வேண்டும்.

போலீசுக்குத் தெரியப்படுத்தி எங்களை மடக்கி விடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள். எங்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன. வெடிகுண்டுகள் இருக்கின்றன. யாரும் எங்களைப் பிடித்துவிட முடியாது. ஜாக்கிரதை

இப்படிக்கு. கொள்ளைக்கூட்டத் தலைவன்”

“கையெளுத்துப் போட்டிருக்குதா?” சாமியார் கேட்டார்.

“போட்டிருக்குது. ஆனா ஒரே கிறுக்கலாயிருக்குது. எழுத்தைப் பார்த்தா இந்தி மாதிரி தோணுது. இங்கிரஸ் மாதிரியும் இருக்குது” என்றார் நாட்டாமை.

“இதுக்கு என்ன செய்யலாம்?” – சாமியார் சாவகாசமாகச் சார்மினார் ஊதியபடி கேட்டார்.

“அதைக் கேக்கத்தான் உங்ககிட்டே நாங்க வந்திருக்கோம் சாமி” என்றான் வேதாசலம்.

“வெறும் மிரட்டல் கடுதாசியா இருக்குமோ?…” – ஒரு குரல்.

“பதிலுக்கு ஆளை அனுப்பச் சொல்றாங்களே. இல்லேன்னா ஊரையே கொளுத்திப்பிடுவோம்னு சொல்றாங்களே”

“எனக்கு ஒண்ணு தோணுது” என்றான் நாட்டாமை.

“என்னது?”

“முப்பதாம் தேதி ராத்திரி வாராவதியைச் சுத்தி போலீசை ஒளிஞ்சிக்கச் சொல்றது. நம்மில் ஒருத்தன் லாரிக்குப் போறது. கொள்ளைக்காரங்க வரப்போ பாய்ஞ்சு புடிச்சுடறது.”

“கொக்கின் தலையில் வெண்ணெய் வைக்கிறது…அந்த யோகனை கொள்ளைக்காரங்களுக்குத் தெரியாதா? அகப்பட மாட்டாங்கப்பா. இதெல்லாம் தெரியாமலா அவங்க வருவாங்க? அதான் லெட்டர்லேயே எளுதியிருக்காங்களே” – சாமியார் சிரித்தார்.

“லாரியைச் சுற்றி வெடிகுண்டைப் போட்டுட்டு ஓடிடுவாங்க. நாம் தான் செத்துப் போவோம். எனக்குத் தோணுது; யாராவது ஒருத்தனை மரியாதையா பலி கொடுத்துட வேண்டியதுதான். என்ன சொல்றீங்க சாமி?” என்று கேட்டான் வேதாசலம்.

“இன்னம் யாருக்காவது லெட்டர் வந்திருக்காமா?”

“எனக்கு வந்திருக்கு. எனக்கு” என்று நாலைந்து பேர் சொன்னார்கள்.

“என்ன செய்யலாம் இப்போ? அதைச் சொல்லுங்க…”

“நம்மிலே ஒருத்தன் பலியாக வேண்டியது தான். வேறே எந்த வழியும் இல்லே”

“போலீசுக்குத் தகவல் கொடுத்தால் ஒருவேளை கெடுத லாகவும் முடியலாம். அதனாலே இந்த விசயத்தை நாமே போலீசுக்குத் தெரியாமல் தீர்த்துடறது தான் நல்லது. இல் லேன்னா நம் எல்லோருக்குமே ஆபத்துதான்” என்றான் வேதாசலம்.

“யாராவது ஒருத்தனை அனுப்பலேன்னா கொள்ளைக் கூட்டம் நம்மைச் சும்மா விடப் போறதில்லை, அவங்க எதுக்கும் துணிஞ்சவங்க. அதனாலே…”

“அதனாலே…”

“ஒருத்தனை அனுப்பிடுவோம்”.

“அந்த ஒருத்தன் யாரு? அது தெரியணுமே! இப்ப அதுதான் கேள்வி..” என்றார் சாமியார்.

“நாங்க எல்லாரும் பேசிட்டுதான் இங்கே வந்திருக்கோம். எங்களில் யாருமே அதுக்குத் தயாராயில்லை. ஊர் தப்பணும்னா அதுக்கு ஒரே வழி….” என்று கனைத்துக் கொண்டான் வேதாசலம்.

“என்ன அது” சாமியார் கேட்டார்.

“நீங்க பலியாகறதுதான்” என்றான் நாட்டாமை.

“என்னையா பலியாகச் சொல்றீங்க? நான் ஏன் போகணும்? உங்களைக் காப்பாத்த நான் எதுக்குப் பலியாகணும்?” — சாமியார் கேட்டார்.

“ஆமாம். நீங்கதான் ஆண்டி. உங்களுக்குப் புள்ளே குட்டி கிடையாது. குடும்பம் இல்லே. அதனாலே….”

“நான் போயிட்டா அப்புறம் உங்களுக்கெல்லாம் யார் வைத்தியம் செய்வாங்க?” – சாமியார் கேட்டார்.

“அது பரவாயில்லே. வேறே டாக்டர் இருக்காரே!”

“அப்புறம் இந்தக் கோயிலை யார் கவனிச்சுப்பாங்க?”

“நாங்க கவனிச்சுக்கிறோம்…”

“கோயமுத்தூர்லே என் பெண்சாதியும் மகனும் இருக்காங்களே. திண்டிவனத்திலே என் தங்கச்சி இருக்காளே. அவங்களுக்கெல்லாம் என்ன கதி?”

“நாங்க காப்பாத்தறோம்…”

“குமாருவைப் படிக்க வைக்கணுமோ…”

“நாங்க படிக்க வைக்கிறோம்.”

“என்னாலே எப்படி உங்களையெல்லாம் பிரிஞ்சு போக முடியும்? எனக்கு மட்டும் உயிர் மீது ஆசை இருக்காதா?”

“இப்ப வந்த காய்ச்சலில் செத்துப் போயிருந்தீங்கன்னா? அந்த மாதிரி நினைச்சுக்குங்களேன்.”

“அடப் பாவிங்களா” – சாமியார் வயிற்றெரிச்சலோடு கூவினார்.

சாமியார், வேதாசலத்தைப் பார்த்தார். அவன் தலை யைக் கவிழ்த்துக் கொண்டான். நாட்டாமைக்காரனைப் பார்த்தார். ரத்னாபாயைப் பார்த்தார். டெய்லர் கேசவனைப் பார்த்தார். ஆப்பக் கடை ராஜாத்தியைப் பார்த்தார். பிளேடு பக்கிரியைப் பார்த்தார். எல்லாரும் தலையைக் கவிழ்த்து கொண்டார்கள். ‘ம்…ம்’ சாமியார் ஒரு முடிவுக்கு வந்தார்.

“உங்களுக்காக, நீங்க வாழறதுக்காக என்னைப்போகச் சொல்றீங்க இல்லையா?” என்று அழுத்தமாக ஆவேசமாகக் கேட்டார்.

“ஆமாம், ஆமாம், ஆமாம், ஆமாம், ஆமாம், ஆமாம்…” – பல குரல்கள்,

“சரி; ஒரு நாள் அவகாசம் கொடுங்க. நாளைக்கு ராத்திரி பத்து மணிக்கு இதே இடத்துக்கு எல்லோரும் வாங்க. என் முடிவைச் சொல்றேன்” என்றார் சாமியார்.

“சரி சரி, சரி, சரி, சரி; சரி;”

எல்லோரும் மெதுவாகக் கலைந்து சென்றார்கள். கூட்டத்தோடு சேர்ந்து குமாருவும் போனான். பல்லை நற நறவென்று கடித்துக் கொண்டே போறான்.

***

சாமியார் கட்டிலில் பானரை இழுத்துப் போட்டுக் கொண்டார். சிரித்தார். சார்மினார் பற்ற வைத்து ஊதினார். ஆட்டுக்கார அலமேலு புன்னகை பூத்தாள். “அலமேலு, உன்னை விட்டா போகச் சொல்றே?”

கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டார். வானம் நிர்மலமாயிருந்தது.

தூரத்தில், டெண்ட் சினிமாவிலிருந்து கண்ணதாசன் பாடல் ஒலித்தது.

“போனால் போகட்டும் போடா!”

9

காலையில் இருட்டு அழியுமுன் அவுட் போஸ்ட் பழனி வந்தான். பல் துலக்க வேப்பங்குச்சி ஒடிக்கப் போனான்.

“வேப்பஞ் செடியை ஓடிக்காதே. இப்பத்தான் தலை தூக்குது” என்று கூறிப் பல்பொடி எடுத்துக் கொடுத்தார் சாமியார்.

“கன்னங்கரேல்னு இருக்குதே!” என்றான் பழனி.

“இதிலே துலக்கிப் பாரு. பல் வெள்ளை வெளேர்னு ஆகும்!” என்றார் சாமியார்.

“இது எதிலே செஞ்சுது?”

“ஆலங்குச்சி வேலங்குச்சி ரெண்டையும் இடிச்சு. உமித்தூள் கறுக்கி.. ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதிம்பாங்களே…”

“டீ சாப்பிடறீங்களா? கொண்டு வரச் சொல் லட்டுமா?”

“சாப்பிடலாம். ரெண்டு நாளா எங்கே காணோம் ஆளை?”

“ஒரு சாவுக்குப் போயிருந்தேன்…குமாரபாளையத்துக்கு.”

“குமாருவை எங்கே காணோம்? கோளி கூவறதுக் குள்ளே வந்துடுவானே, ராத்திரி ரொம்ப நேரம் இங்கே கண் விவிச்சுக்கிட்டிருந்தான் இல்லையா? தூங்கியிருப்பான். ஆமாம், நீ ஏன் ராத்திரி ஒண்ணுமே பேசாமெ மௌன மாக் குத்துக்கல் கணக்கா உட்கார்ந்துக்கிட்டிருந்தே?”

“என் அபிப்பிராயத்தை யாரும் கேக்கலையே!”

“உன் அபிப்பிராயம் என்ன? இப்பத்தான் சொல்லேன்.”

“இத இருங்க வரேன்” என்று கூறி, கிணற்றடிக்குப் போனான் பழனி. தண்ணீர் சேந்தி வாயைக் கொப்பளித்தான். முகத்தைக் கழுவினான். இதற்குள் டீ வந்தது.

சாமியாரும் பழனியும் அதைக் குடித்தார்கள். சுடச் சுட அது வயிற்றில் இறங்கியதும் தான் சாமியாருக்குச் சற்று சுறுசுறுப்பு வந்தது. இரண்டு சார்மினார் எடுத்து பழனிக்கு ஒன்று கொடுத்துத் தானும் பற்ற வைத்துக் கொண்டார்.

“என்ன பள்னி? என்ன செய்யலாம் சொல்லு”

“நீங்க எதுக்கு பலியாகணும்? நீங்களா கொலை செஞ்சீங்க?”

“இல்லே…”

“அப்புறம் நீங்க எதுக்கு போகப் போறீங்க?”

“போகலேன்னா ஊர்லே என்னைச் சும்மா விடமாட்டாங்க போலிருக்கே. ஊரைப் பகைச்சுகிட்டு அப்புறம் ஒளுங்கா வாள முடியுமா?”

“என்ன செஞ்சிடுவாங்களாம்?”

“நான் ஆண்டி. ஊருக்கு எளைச்சவன். என்ன வேணாலும் செய்வாங்க.”

“அதனாலே…”

“நான் போயிடறதே மேல். நான் இருந்து யாரைக் காப்பாத்தப் போறேன்? நான் போறதனாலே இந்த ஊருக்கு ஆபத்து இல்லேன்னா அதுக்காக நான் தியாகம் செய்தா என்ன?”

“இதுக்கு பேர் தியாகமில்லே சாமி. இளிச்சவாகதனம். கள்ளச்சாராயம் காச்சனாங்க. பாத்துகிட்டு சும்மா இருந்தீங்க. பிக்பாக்கெட் அடிச்சாங்க. தெரிஞ்சும் தெரி. யாத மாதிரி இருந்தீங்க. இந்த ஊரில் நடக்கிற அக்கிரமம்; அயோக்கியத்தனம், திருட்டுத்தனம், அடாவடித்தனம், அத்தனையும் பார்த்துக்கிட்டு, சகிச்சுக்கிட்டு இருந்தீங்க. இப்ப கொள்ளைக்காரங்க ஊரைக் கொளுத்திடுவோம்னு பயமுறுத்தினா அதுக்கு உங்களை பலியாகச் சொல்றாங்க? ஏன்? ஏன்? ஏன்னு கேட்கிறேன்..”

“ராத்திரி நீயே இதையெல்லாம் எடுத்துப் பேசியிருக்கலாமே?”

“நான் ஏன் பேசணும்? என்னை யார் கேட்டாங்க? அதனாலே கடைசி வரைக்கும் வேடிக்கைப் பார்க்கலாம்னு தான் சும்மா இருந்தேன். இது ஊரா இது? மனுசங்களா இவங்க? நன்றி கெட்டவங்க. சுயநலக்காரங்க. கொளுத்த வேண்டிய ஊர்தான் இது. சுடுகாடாக்க வேண்டியது தான்…”

“விசயத்தைப் போலீசிலே சொல்றதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

“எனக்கு சரியாப்படலே சாமி! அதனால் சிக்கல் ஏற்படும்னுதான் தோணுது. கொள்ளைக்காரங்க வாரா வதிக்குப் பக்கத்திலே லாரியைக் கொண்டு வந்து நிறுத்துவாங்க. அதுக்கு முன்னாடியே வந்து வேவு பாப்பாங்க. போலீசுக்கும் அவங்களுக்கும் கைகலப்பு ஏற்படலாம். உயிர்ச்சேதம் ஆகலாம். அவங்களைப் பிடிக்கவே முடியாது. இதே மாதிரி வடக்கே ஒரு ஊரிலே நடந்திருக்கு. பயங்கர கேஸ்”

“அதனாலே….?”

“காதும் காதும் வெச்சாப்பல யாரையாவது அனுப்பி வைச்சுடறதுதான் நல்லது. ஆனா நீங்க போகக் கூடாது, ஊர்லே யாராவது போகட்டும். ஒரு புலி வந்திச்சு. அதையே இந்தப் போலிசாலே புடிக்க முடியல்லே. என்னை சஸ்பெண்ட் செஞ்சு வெச்சிருக்காங்க. கொள்ளைக்காரங்களையா புடிச்சுடப் போறாங்க? விடுங்க சாமி. என்ன நடக்குதுன்னு பார்த்துடுவோம். நான் இன்னக்கி ஒரு கேஸ் விசயமா கூடலூர் போறேன். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க. நான் வரவரைக்கும் எந்த முடிவும் எடுக்காதீங்க” என்று கூறிப் புறப்பட்டான் பழனி.

காலையிலிருந்து குமாருவைக் காணாமல் சாமியாருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

ஆப்பக்கார ராஜாத்தி சொன்னாள்: “குமாருக்கு ஒடம்பு சொகம் இல்லையாம். ஒரு வேளை மாரியாத்தாளாயிருக்குமோன்னு சந்தேகப்படறாங்க.”

“என்னது?” சாமியார் பதறினார். சட்டென்று கிணற் றடிக்குப் போனார். குளித்தார். விபூதி பூசிக் கொண்டார். செடியிலிருந்து வேப்ப இலையைக் கொத்தாக ஓடித்துக் கொண்டார். நேராகக் குமாருவின் வீட்டுக்கு நடந்தார். அந்த வாசலிலுள்ன ஓடுகளின் இடுக்கில் அந்த வேப்பிலைக் கொத்தைச் செருகினார். உள்ளே எட்டிப் பார்த்தார். வேதாசலம் தலை தெரிந்தது.

“குமாரு இருக்கானா?”

சாமியார் குரல் கேட்டு. வேதாசலம் விரைந்து வந்தான்.

“இருக்கான். ராத்திரி வந்து படுத்தவன்தான். மாரியாத்தாளாயிருக்குமோன்னு தோணுது…”

சாமியார் உள்ளே போய் குமாரு பக்கத்தில் நின்று ‘குமாரு’ என்று கூப்பிட்டார். அவன் கண் திறந்து பார்க்கவில்லை.

“சாமி! சாமி! போவாதீங்க, போவாதீங்க. நீங்க போனா நானும் செத்துடுவேன்” என்று ஜுரவேகத்தில் அலறிக்கொண்டிருந்தான் குமாரு.

“எனக்கும் சந்தேகமாத்தான் இருக்குது. எதுக்கும் மாரியாத்தாளுக்குப் பொங்கல் வைக்கிறேன்னு வேண்டிக்குங்க. சரியாப் போயிடும். ஊர்லே எங்க பார்த்தாலும் ஒரு மாதிரியா இருக்குது.”

விபூதி எடுத்துக் குமாருவின் நெற்றியில் இட்டார். சாமியார் கண் கலங்கிப் போனார். அவன் அலறல் அவரைக் கலக்கிவிட்டது.

திரும்பி மரத்தடிக்கு வந்தார்.

பகலெல்லாம் நல்ல வெயில் அடித்தது. புழுதிக் காற்று வீசியது. அந்தக் காற்று கீழே கிடந்த அரசமரத்துச் சருகுகளை அடித்துக் கொண்டு போயிற்று. பகல் வேளைச் சோம்பேறித்தனம் கிராமத்தைக் கவ்வியிருந்தது. டெய்ல ரிங் மெஷின் சத்தம், காகங்கள் கரையும் ஒலி , கழுதைகள் கத்தும் ஓசை. தூரத்தில் நெடுஞ்சாலையில் லாரிகள் – பஸ்கள் ஓடும் தேசலான இரைச்சல், இதெல்லாம் சாமியார் காதில் விழுந்து கொண்டிருந்தன. இரண்டு அணில்கள் ஒன்றையொன்று துரத்திப் பிடித்துக் கொண் டிருந்தன. சாமியார் எண்ணமிட்டார். விசிறியால் விசிறிக் கொண்டார். படுத்தார், புரண்டார். எழுந்தார். மஞ்சள் வெயில் அடித்து இரண்டு தூறல் போட்டன. மண் வாசனை அடித்தது. இருட்டு வந்தது.

***

ராத்திரி எட்டு மணிக்கு எல்லோரும் மரத்தடியில் கூடி விட்டார்கள். சாமியார் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிந்து கொள்வதில் எல்லோருமே ஆவலாக இருந்தார்கள்.

“என்ன முடிவுக்கு வந்தீங்க சாமி?” – நாட்டாமை கேட்டான்.

“நான் எந்தக் குத்தமும் செய்யாதப்போ என்னை ஏன் போகச் சொல்றீங்க? உண்மைக் குற்றவாளியைக் கண்டு பிடிச்சு அவனை அனுப்புங்களேன்…” – சாமியார் குரல் தீர்மானமாக ஒலித்தது.

“யாரும் ஒத்துக்கிடலையே…”

“மேத்தா, வாராவதிக்கடியிலே செத்துப் போயிட்டான். லாரி மோதியிருக்குது. யாரோ துரத்தியிருக்காங்க. கைகலப்பு நடந்திருக்குதுங்கற வரைக்கும் தெளிவாத் தெரியுது. அப்புறம் துரத்தி ஓடினவன் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டியதுதானே?”

“முடியலையே…”

“அதுக்கு நான் என்ன செய்யட்டும்?”

“நீங்கதான் போகணும். இதுதான் ஊரார் தீர்ப்பு…”

“தீர்ப்பா, அபிப்பிராயமா? வேண்டுதலா? தெளிவாச் சொல்லுங்க…”

“அபிப்பிராயம், வேண்டுதல், தீர்ப்பு எல்லாம்தான்” என்றான் நாட்டாமை.

“நான் போகல்லேன்னா”

“போக வைப்போம்….”

“என்ன செய்வீங்க?”

“அதைச் சொல்ல முடியாது.”

“விசயம் அந்த அளவுக்கு வந்துட்டுதா! ஓகோன் னானாம்!”

“சரி, நான் போறதா வச்சுக்குங்க. அதில் எனக்கென்ன லாபம்?” சாமியார் கேட்டார்.

“இந்த ஊரைக் காப்பாத்தறீங்களே, அது புண்ணியம் இல்லையா?”

“புண்ணியம் மட்டும் போதுமா? பணம் வேண்டாமா!”

“கொடுக்கிறோம். அப்படி வாங்க வழிக்கு. எவ்வளவு பணம் வேணும்?”.

“என் மனைவிக்குப் பணம், என் மகனுக்குப் பணம். என் தங்கச்சிக்குப் பணம். பதினைந்தாயிரம் வேணும்.”

“அப்புறம்?”

“எனக்கு நிலம்.”

“நிலமா! எவ்வளவு?”

“ஒரு காணி நிலம் வேணும். பாரதியார் கேட்டாரே அவ்வளவுதான்”.

“நிலம் எதுக்கு?”

“ஒரு வேளை கொள்ளைக் கூட்டத்தாருங்க மனசு இரங்கி என்னை விடுதலை செஞ்சுடறாங்கன்னு வச்சுக்கு வோம். அப்ப நான் திரும்பி வருவேன். அந்த நிலத்தை வைச்சுப் பொளைச்சுக்குவேன்”

“தியாகத்துக்கு விலை கேட்கறீங்களா?”

“ஆமாம், தியாகி நிலம் கேட்கிறேன்.”

“சரி, ஒத்துக்குங்கப்பா சாமியார் திரும்பியா வாப் போறார்.” என்றான் நாட்டாமை சிரித்துக் கொண்டே.

“அப்புறம் என்ன சாமி வேணும்?”

“இந்தப் பிள்ளையார் கோவிலை ஒரு வாரத்துக்குள்ளே கட்டி முடிச்சுடணும். வீட்டுக்கு ஒரு ஆள் வந்து வேலை செய்யணும். கோயிலைக் கட்டி முடிச்சுப்புறம் தான் நான் கிளம்புவேன்.”

“இவ்வளவுதானே? அப்புறம் ஒண்ணுமில்லையோ உங்க இஷ்டப்படியே இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே கட்டிக் கொடுத்துடறோம், போதுமா?”

“இன்னொரு சங்கதி. கொள்ளைக் காரங்க ஒரு வேளை என்னைக் கொன்னு பாடியைக் கொண்டு வந்து இந்த ஊர்லேயே போட்டுடறாங்க அப்ப என்ன செய்வீங்க?”

“நாங்களே உங்க அந்திமச் சடங்குகளையெல்லாம் செய்து முடிச்சுடறோம்.”

“அனாதைப் பொணம் தானேன்னு அலட்சியப் படுத்துவீங்களே, உயிரோடு இருக்கிற போதே இந்த கதின்னா..?”

“ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டோம். நீங்க எப்படி செய்யச் சொல்றீங்களோ அப்படியே செய்றோம்.”

“பூப்பல்லக்கு ஜோடிக்கணும்.”

“ஜோடிக்குறோம் ”

“மேளம், பாண்டுவாத்தியம், தாரை தப்பட்டை எல்லாம் ஏற்பாடு செய்யணும்.”

“செய்யறோம்”

“பன்னீர் தெளிக்கணும்.”

“தெளிக்கிறோம்.”

“சந்தனம் பூசணும்.”

“பூசறோம்,”

“அதிர்வேட்டு ஆகாசவெடி எல்லாம் கொளுத்தணும்.”

“கொளுத்தறோம்.”

“ஊரே கூடி பல்லக்குக்கு முன்னாலும் பின்னாலும் பெருங் கூட்டம் தலைகுனிஞ்சபடி நடக்கணும்.”

“நடக்கறோம்.”

“அப்புறம்?”

“அப்புறம் என்ன?”

“இதெல்லாம் வாயாலே சொன்னாப் போதாது. செய்து காட்டணும். என் கண்ணாலே என் அந்திம கால ஊர்வலம் நடக்கறதை நான் பார்க்கணும். நாளைக்கே இதை நடத்திக் காட்டிடுங்க. நான் கேட்ட பணத்தைக் கொடுத்துடுங்க. நிலத்தை எழுதி ரிஜிஸ்டர் பண்ணிடுங்க.”

“இவ்வளவுதானா? வேறே ஏதாவது ஆசை உண்டா சாமியாரே” நாட்டாமை கேட்டான்.

“இவ்வளவுதான்.”

சாமியார் விருப்பப்படியே அவர் கேட்ட பணத்தை வசூலித்துக் கொடுத்தார்கள். நிலம் எழுதிக் கொடுத்தார்கள். பிள்ளையார் கோயிலைக் கட்டி முடித்தார்கள்.

பாண்டு வாத்தியம், வாண வேடிக்கைகளோடு ஊர்வலத்தையும் நடத்திக் காட்டினார்கள்.

***

முதல் நாளே வந்து ‘நாளைக்கு முப்பதாம் தேதி சாமி’ என்று ஞாபகப்படுத்தி விட்டுப் போனான் நாட்டாமை.

“ரெடியா இருக்கேன்” என்றார் சாமியார்.

மறு நாள் காலை யாரும் எதிர்பாராத அந்தச் செய்தி வந்தது. கொள்ளைக் கூட்டத்தைப் பிடித்து விட்டதாகப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த செய்தியைப் படித்த போது சாமியாருக்கு வியப்புத் தாங்கவில்லை.

கூடலூர் போன பழனிதான் கொள்ளைக் கூட்டத் தார் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டு பிடித்ததாக அந்தச் செய்தி சொல்லிற்று.

சாமியார் சந்தோஷ வெறியில் “ஹாஹாஹா!” என்று சிரித்தார்.

“என்ன சாமி?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் குமாரு. அவனுக்கு உடம்பு சரியாகிவிட்டது.

“இதப்பாருடா! கொள்ளைக் கூட்டம் பிடிபட்டுப் போச்சாம்டா பிடிச்சவன் யார் தெரியுமா? நம்ம பள்னி! முருகன் தான் பள்னி ரூபத்திலே வந்து புடிச்சிருக்கான். நான் தப்பிச்சுட்டேண்டா, தப்பிச்சுட்டேன்!” எக்காள சிரிப்புச் சிரித்தார் சாமியார்.

குமாரு பல்லைக் கடித்தான். தன் நிஜார்ப் பையிலிருந்த விளையாட்டுத் துப்பாக்கியை எடுத்தான். ஊராரைப் பார்த்து ‘டமால் டமால்’ என்று சுட்டான். ஊரார் அவ்வளவு பேரும் செத்துக் கீழே வீழ்வதைப் போல் கற்பனை செய்து பார்த்துக் கொண்டான்.

“உங்களுக்கு இதுதான் சரியான தண்டனை” என்று தனக்குத்தானே சொல்லி மகிழ்ந்தான்.

வானத்தில் ஒரு விமானம் பறந்து கொண்டிருந்தது. “ஒரு தரம் நாம் ரெண்டு பேரும் சிங்கப்பூர் போய் வருவோ மாடா குமாரு?” என்று கேட்டார் சாமியார்.

“அங்கே நிஜத் துப்பாக்கி கிடைக்குமா?” – குமாரு கேட்டான்.

“எதுக்கு நிஜத் துப்பாக்கி?”

“இந்த ஊராரை நிஜமாகவே ஒருதரம் சுடணும் போல இருக்கு” என்றான் குமாரு.

“நீ துப்பாக்கியிலேயே இரு; படிடா. வா, திருக்குறள் சொல்லித் தரேன். இப்படிப் பிள்ளையாருக்கு முன்னாலே வந்து உட்காரு. வா. உன்னைப் பெரிய படிப்பாளியாக்காமல் நான் விடப் போறதில்லை. அதான் ஊரார் கிட்டே நிறையப் பணம் வாங்கி வச்சிருக்கேனே. அவ்வளவையும் உன் படிப்புக்குச் செலவழிக்கிறேன். எனக்கெதுக்கு அந்தப் பணம்?” என்று கூறி உரத்த குரலில் பயங்கரமாகச் சிரித்தார். அம்மாதிரி அவர் சிரித்ததை ஊரார் அதுவரை கண்டதில்லை.

-முற்றும்-

ஆசிரியர் சாவி பற்றி…

அத்தனை தமிழர்களும் அறிந்த எழுத்தாளர் சாவி. பேராசிரியர் கல்கி அவர்களிடம் பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கியவர்.

கல்கி, ஆனந்த விகடன் இவ்விரு பத்திரிகைகளிலும் நீண்டநாள் பணியாற்றி அனுபவம் பெற்ற பின் தினமணி கதிர் ஆசிரியர் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியவர்.

கலைஞர் மு. கருணாநிதி, குங்குமம் வார இதழைத் தொடங்குவது என்று முடிவு செய்தபோது, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும்படி கலைஞர் அழைத்தது ஆசிரியர் சாவியைத்தான். ஓராண்டு காலம் அந்த இதழைச் சிறப்பான முறையில் நடத்தி கலைஞரிடம் ஒப்படைத்த பிறகு சொந்தப் பத்திரிகை தொடங்கும் முடிவில் விலகினார். 1979-ல் சாவி வார இதழைத் தொடங்கினார்.

இன்று புகழ் பெற்று விளங்கும் பல எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

உலக நாடுகள் பலவற்றைப் பலமுறை சுற்றிப் பார்த்தவர். நவகாளியில் மகாத்மா ஜியோடு கூடவே கிராமம் கிராமமாக நடந்து சென்று அந்த அனுபவங்களை நவகாளி யாத்திரை’ எனும் தலைப்பில் கல்கியில் எழுதி னார். அந்தக் கட்டுரைகளைப் படித்த ஆசிரியர் கல்கி தார்மிகக் கட்டுரைகள்’ என்று தமது முன்னுரையில் பாராட்டியுள்ளார் ‘வாஷிங்டனில் திருமணம்’ என்ற இவரது நகைச்சுவை நவினம் தமிழ் வாசகர்களின் பர பரப்பான வரவேற்பைப் பெற்றது. இதுவரை இரண்டு லட்சம் புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன. தலைவர் காமராஜிடம் நெருங்கிப் பழகியவர். தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டு 1942-ல் ஒன்பது மாத காலம் சிறைவாசம் புரிந்தவர்.

– இரண்டாம் பதிப்பு ஜனவரி 1987, மோனா பப்ளிகேஷன்ஸ், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *