உற்சாகப்படுத்தினால் உழைப்பு அதிகமாகும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 27, 2022
பார்வையிட்டோர்: 8,704 
 

”குருவே என்னுடைய நிறுவனத்தில் ஒரு பிரச்சனை” என்று வருத்ததுடன் சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.

“என்னாச்சு?” என்று கேட்டார் குரு.

“என் வேலையாட்கள் யாரும் சரியாக வேலை பார்ப்பதில்லை. எவ்வளவு திட்டினாலும் கேட்க மறுக்கிறார்கள்” என்றான்.

இதைக் கேட்டதும் குருவுக்கு அவனின் பிரச்சனை என்னவென்று புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.

’ஒருவன் வெளியூருக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தான். ஒரு கிராமத்தைக் கடந்துக் கொண்டிருந்தபோது சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கார் இறங்கிவிட்டது. ஆக்சிலேட்டரை முடுக்கிப் பார்த்தான் காரால் மேலே வர இயலவில்லை. இறங்கி காரைத் தள்ளிப் பார்த்தான், அவனால் முடியவில்லை. சரி, உதவிக்கு யாரையாவது அழைப்போம் என்று கிராமத்துக்குள் சென்றான். அங்கே ஒரு வீட்டுமுன் நின்றிருந்த கிராமத்து ஆளை உதவிக்கு அழைத்தான். அவனும் உடனே தனது மாட்டை கூட்டிக் கொண்டு கிளம்பினான், மாட்டைக் கட்டி காரை இழுக்கலாம் என்று. அந்த மாட்டைப் பார்த்தபோது காரோட்டிக்கு பெரிய நம்பிக்கை வரவில்லை. காரணம் அது கிழ மாடாக இருந்தது. ஆனாலும் கிராமத்து ஆள் நம்பிக்கையிழக்கவில்லை. ’நம்ம ராஜா இழுத்துருவான்’ என்று மாட்டைத் தட்டிக் கொடுத்து உற்சாகமாய் நடந்தான்.

கார் விழுந்திருந்த இடத்துக்கு வந்ததும் கயிறை எடுத்து காரில் கட்டி மாட்டை இழுக்க செய்தான் கிராமத்து ஆள். ’ராஜா நல்லா இழு இன்னும் இழு’ என்று மாட்டுக்கு உத்தரவு கொடுத்துக் கொண்டே ‘டேய் ராமு நீயு இழு’, ‘மணி நீயும் இழு’ என்று நிறைய பெயர்களைச் சொல்லி உத்தரவு கொடுத்தான். காரோட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. கிழ மாடு பலம் கொண்ட அளவு இழுத்து காரை வெளியில் கொண்டு வந்துவிட்டது.

காரோட்டிக்கு ஆச்சர்யம். ‘மாடு காரை இழுக்கும்போது யார் யார் பெயரையோ சொன்னீங்களே, என்ன அது?’ என்று விசாரித்தான்.

‘அது ஒண்ணுமில்லீங்க, மாட்டுக்கு வயசாயிடுச்சு. கண்ணு சரியா தெரிய மாட்டேங்குது. நீ இழுத்துருவனு தட்டிக் கொடுக்கும் போது அதுக்கு உற்சாகமாயிடுது, இன்னும் நாலஞ்சு பெயரை சொல்லும்போது, தனியா இழுக்கல நம்ம கூட இன்னும் நிறைய பேர் இழுக்குறாங்கனு அதுக்கு நம்பிக்கை வருது. இப்படி தாஜா பண்ணி வேலை வாங்கும்போது நல்லா வேலை செய்யுது’ என்றான் கிராமத்து மனிதன்.’

இந்தக் கதையை சொன்னதும் வந்தவனுக்கு தன்னுடைய பிரச்சனை புரிந்தது.

அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: உற்சாகப்படுத்தினால் உழைப்பு அதிகமாகும்.

– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *