தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,322 
 

வெயில் உக்கிரமாகவே தகித்துக் கொண்டிருந்தது. ரேஷன் கடை முன், வரிசையும் நீண்டிருந்தது. தாம் கொண்டு வந்திருந்த பையையோ அல்லது வெயில் கடுமையை எதிர் பார்த்து பிரத்யேகமாகக் கொண்டுவந்திருந்த துண்டையோ தலையில் போட்டபடி பல கடந்த கால இளைஞர்கள், வரிசையில் காத்திருந்தார்கள்.

ரேஷன் கடை இலக்கணத்தை மீறாத, கடை ஊழியர்கள் மிகவும் சாவகாசமாக வந்து கடையைத் திறந்ததோடு, வரிசையில் நின்றிருப்பவர்களை வெகு அலட்சியமாகப் பார்த்தபடி, எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக பில் புத்தகத்தை எடுப்பதும், பெரிதாகக் கொட்டாவி விடுவதுமாக உணவுப்பொருட்களில் உரிமையுடன் கூடிய தம் பங்கைப் பெறக் காத்திருந்தவர்களின் பொருமையை சோதித்தார்கள்.

அடுத்தது, தாம் உரிமையுடன் கோரும் பொருட்கள் இல்லை என்ற பதிலை (இருப்பு அளவை அறிவிப்புக் பலகை அறிவித்திருந்தபோதும்), அவர்கள் சொல்லப் போகிறார்கள் என்று தெரிந்தும் நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள், வரிசை அப்பாவிகள்.

உரிமை

சும்மா நின்று கொண்டிருப்பது என்பது அந்த மக்களைப் பொறுத்தவரைச் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. அதாவது, அப்படி நின்று கொண்டிருப்பதில் நேரம் வீணாவதைப் பற்றி அக்கறை இல்லை; ஆனால், “சும்மா’ நின்று கொண்டிருப்பது இயலாதது. அடுத்து நிற்பவரிடம் பேசுவது, பொதுவாக ரேஷன் கடை பற்றியோ அல்லது வேறு பொது விஷயங்களைப் பற்றியோ புலம்பிக் கொண்டிருப்பது. கேட்பதற்கு ஆள் யாரும் இல்லையென்றாலும், யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமலும் அவ்வாறு அரற்றுவது எல்லாம், சும்மா நின்று கொண்டிருக்கப் பிடிக்காததால்தான்.

பேச்சுத் தொடக்கம் சம்பிரதாயமாக இருக்க வேண்டும் என்பதற்காக, “என்ன சார், ரேஷன் சாமான் வாங்க வந்தீங்களா?’ என்று ஒருவர் ஆரம்பிப்பதும், அவருக்கு ஓரளவுக்காவது பழக்கமான, கேள்வி கேட்கப்பட்ட நபர், “ஆமாம் சார்,’ என்று அந்தச் சம்பிரதாயத்தைக் கேலி செய்யாமல் அங்கீகரிப்பதும் அங்கே யதார்த்தமாக நடக்கும்.

அன்று இப்படிப் பேச்சைத் தொடங்கியவர் கோபாலசாமி. அவருக்குப் பதில் சொன்னவர் லோகநாதன்.
சம்பிரதாயக் கேள்வியை அடுத்து, தன் பிரமிப்பை வெளியிட கோபாலசாமிக்கு ஆசை. அதாவது லோகநாதனின் அந்தஸ்துக்கு அவர் இப்படியெல்லாம் ரேஷன் கடை முன்னால் நின்று பங்கீட்டுப் பொருட்களை வாங்க வேண்டுமா என்ற ஆதங்கம். அதை பிரமிப்பாக வெளியிட்டார் அவர். “நீங்கள்லாம் ஏன் சார், இப்படி இந்தப் படபடக்கற வெயில்ல கால்கடுக்க நீன்னுக்கிட்டிருக்கீங்க?’

வம்பைத் தொடங்கிய தென்னவோ கோபாலசாமிதான். ஆனால் வரிசையில் நின்றிருந்த பலருடைய தலைகள் இவ்விருவரையும் பார்க்கத் திரும்பின.

லோகநாதனுக்கு வெயிலைவிட, ரேஷன் கடைக்காரர்களின் ஆமை வேகச் செயல்பாடுகளைவிட, வரிசையில் நிற்கும் சில பெண்கள், தாம் மாதம் தவறாமல் அந்தக் கடைக்க வந்து பொருள் வாங்கிக் செல்லும் நட்புரிமையில் கடைக்காரர்களுடன் விகாரமாகப் பேசுவதைவிட, கோபாலசாமி கேட்ட கேள்வியால் ஏகமாய்க் கோபம் வந்தது.

“வேலைக்காரங்க யாரும் இல்லையா சார்? வீடு பெருக்கறவங்க, பாத்திரம் தேய்க்கறவங்க, துணி தோய்க்கறவங்க, தோட்டக்காரங்க…’ கோபாலசாமி தொடர்ந்தார்.

எட்டிப் பார்த்த தலைகளுக்கு லோகநாதனின் “ஸ்டேடஸ்’ புரிந்தது. இத்தனை வேலைக்õரர்களை வைத்து மேய்த்துக் கொண்டிருக்கும் பணக்காரர் அவர். வெள்ளைக் குடும்ப அட்டைக்காரர். அவருக்குச் சக்கரை மட்டும்தான் உணவுப் பங்கிட்டுத் துறையால் வழங்கப்படுகிறது என்றாலும், துவரம் பருப்பு முதலான மளிகைச் சாமான்களும் மலிவு விலையில், பங்கீட்டு அளவில் கொடுக்கப்படுகிறது. என்னதான் பணக்காரராக இருந்தாலும், இப்படி, தானே வரிசையில் நின்று பொருள் வாங்குவது அநாகரிகம்தான். அதைவிட, பெரிய பெரிய டிபார்ட்மென்டல் கடைகளில், அந்தந்த அலமாரிகளில் இருக்கும் பேக் செய்யப்பட்ட பொருட்களைத் தேர்ந்தெடுத்து, சக்கர தள்ளுவண்டியில் சேகரித்துக் கொண்டு, கேஷ் கவுன்ட்டரில் க்ரெடிட் கார்டை அலட்சியமாகக் கொடுத்து, சுற்றுமுற்றும் பெருமையுடன் பார்த்துக் கொள்ளும் ஜாதியைச் சேர்ந்த இவர், இப்படிப் பிச்சைக்காரத்தனமாக இந்த அற்ப வரிசையில் நின்று கொண்டிருப்பது ரொம்பவும் அநாகரிகம்தான்!

“ஆங், ஆங்… வாங்க, வாங்க. வீட்டுக்குப் போய் அரட்டை அடிச்சுக்கோங்க. கார்டைக் கொடுங்க, என்ன வேணும்?’ என்று கடைக்காரர் வரிசை அடிமைகளை விரட்டிக் கொண்டிருந்தார். வரிசை மெல்ல முன்னே நகர்ந்தது.

ஆனாலும் லோகநாதன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்வதில், வரிசைக்காரர்களுக்கு, ரேஷன் பொருட்களைப் பெறுவதைவிட ஆர்வம் அதிகமாகவே இருந்தது.

“நீங்க சொன் வேலைக்காரங்க ஒவ்வொருத்தருக்கும் ரேஷன் கார்டு இருக்கு,’ என்று எதையோ உள்ளே பொதிந்து, கோபாலசாமியைக் குத்தினார் லோகநாதன்.

“அட, அது தெரியுது சார்,’ என்று சிரித்தபடி சொன்னார் கோபாலசாமி. “<உங்க நிலைமைக்கு நீங்க இந்த ரேஷன் சாமான்களை வாங்கத் தான் வேணுமா சார்?’

“நான் எனக்குன்னு அரசாங்கம் கொடுக்கற சலுகையை அனுபவிக்கறேன் தப்பா?’ குரலில் கொஞ்சம் சூடேற லோகநாதன் கேட்டார்.

“இதப் பார்ரா… ஐயா இலவச டி.வி.கூட வாங்கிட்டார் போல இருக்குதே…’ லோகநாதனின் கைவிரல்களில் மின்னிய மோதிரங்களைப் பார்த்தபடி கேட்டார் வரிசை அப்பாவி ஒருவர்.
“ஸ்கூல்ல படிக்கற என் பொண்ணுக்கு சைக்கிள் கொடுத்தாங்க; வாங்கிட்டோம்; என் பையன் ஸ்கூலுக்கு இலவச பஸ் பாஸ்லதான் போய் வர்றான். அதே சமயம், அதோ, அங்கே நான் சாமான் வாங்கிட்டுப் போறதுக்காக நிக்குதே என் கார், அதேபோல் இன்னும் ரெண்டு கார் எனக்கு இருக்கு…’
“வெட்கம்கெட்டவன்; இலவசத்துக்க இப்படி அலையறானே!’ என்ற இளக்காரம் வரிசை அப்பாவிகள் முகத்தில். கோபாலசாமிக்குக் கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது, மற்றவர்களைவிட லோகநாதனை அவருக்கு அதிகமாகவே தெரியும் என்பதால்.

“நான் இந்த, எனக்குன்னு அரசாங்கம் கொடுக்கிற உணவுப் பொருட்களை வாங்காவிட்டால் என்ன ஆகும்?’ லோகநாதன் பொதுவாகக் கேட்டார். “அப்படி மிஞ்சிப் போற பொருட்களை இந்தக் கடைக்காரங்க திரும்ப உணவுப் பங்கீட்டுத் துறைக்கே அனுப்பிடுவாங்களா என்ன?’

பலபேர் தன்னையே பார்ப்பதை உணர்ந்து கொண்டு தொடர்ந்தார் லோகநாதன்: “மாட்டாங்க. உபரியாகத் தேவைப்படறவங்களுக்கு வித்துடுவாங்க. சரி, இப்படி உபரியா தேங்கறதைத்தான் விக்கறோமேன்னு அதோட திருப்தியாவாங்களா? மாட்டாங்க. வேற யாராவது இப்படி விட்டுக் கொடுத்துப் போக மாட்டாங்களான்னு எதிர்பார்ப்பாங்க. அதோட, இவங்ககிட்ட வந்து வாங்கிக்கறாங்களே, உபரியாகத் தேவைப்படறவங்க, அவங்க இன்னும் நிறைய கொடுக்கச் சொல்லி வற்புறுத்துவாங்க. இந்த நிர்பந்தத்துக்காகவும், கூடுதலாகத் தங்களுக்குப் பணம் கிடைக்கறதேங்கறதுக்காகவும், கடைக்காரங்க, வாங்காம விட்டுடறவங்களோட பொருட்களை மட்டுமல்லாம, “ஸ்டாக் இல்லே’ன்னா ஒண்ணும் பேசாம, “அடுத்த மாசமாவது கிடைக்குமா?’ன்னு பரிதாபமாகக் கேட்டுட்டுப் போயிடறவங்களோட பொருட்களையும் “திருடி’ வித்துடுவாங்க.

அதனால எனக்கு உரிமையான பொருளை நான் நாகரிகம் பார்த்து விட்டுக் கொடுத்துப் போய், இந்தக் கடைக்காரங்களைத் திருடன்களாக்க விரும்பலே. அதே போல் உபரியாகத் தேவைப்படறவங்க, கூடுதலாகச் செலவழிக்கக்கூடியவங்களா இருப்பாங்கங்கறதால அவங்களையும் கொள்ளைக்காரங்களாக்க விரும்பலே. எனக்குன்னு அரசாங்கம் கொடுக்கறது, அது மலிவு விலையோ, இலவசமோ, அதை அலட்சியமா “வேண்டாம்’னு நான் மறுத்தால், மறைமுகமா நான் இந்த ஊழல்ல சம்பந்தப்பட்டுடுவேன்.

திருடர்களும், கொள்ளைக்காரர்களும் வளர, நானும் காரணமா ஆயிடுவேன். இதுதான் அநாகரிகம்; என் பொருளை, அது அற்ப விலையானதாக இருந்தாலும், வாங்காமல் விட்டால் அதுதான் அநாகரிகம். எனக்கு வசதி இருக்கு, இந்தப் பொருட்கள் வந்துதான் நான் வாழ வேண்டும் என்பதில்லைதான்; ஆனால், இந்தப் பொருட்களை வாங்கும் நான், இதைக் கூட வாங்க வசதியில்லாதவங்களுக்குக் கொடுப்பேன். அல்லது நானே பயன்படுத்திக் கொள்வேன். ஆனால் ரேஷன் கடையிலிருந்து அமைச்சர் வரை நீளக்கூடிய ஊழலுக்கு நானும் ஒரு காரணமாக இருக்க மாட்டேன்.’

அந்த பதிலால் “அதிருப்தி’ அடைந்த கோபாலசாமி, “சரி, சரி என்ன வேடிக்கை? வரிசை நகருதில்லே, முன்னே போங்க,’ என்று தன் முன்னே நின்றிருந்தவர்களை விரட்டினார்.

– நாகா கண்ணன் (மார்ச் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *