உண்மையான செல்வம்

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 4,777 
 

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானியர்களின் கைதியாகி அவர்களது கேம்ப் ஒன்றில் மாட்டிக் கொண்டு பல நாட்கள் அங்கு இருந்த ஒரு யூதர் தன் அனுபவங்களைப் பின்பு கூறுகையில் சொன்னார். “எங்களது கேம்பில் குறுகிய அறைகளில் நிறைய ஆட்கள் அடைக்கப்பட்டு இருந்தார்கள். தினமும் ஒவ்வொரு அறையில் இருந்தும் துப்பாக்கி முனையில் பல கைதிகள் வெளியே அழைத்து செல்லப்பட்டு கொல்லப்படுவார்கள். மறுபடியும் புதிய கைதிகள் பலர் உள்ளே அடைக்கப்படுவார்கள். அடுத்து யார் மரணத்திற்கு எப்போது அழைத்து செல்லப்படுவார்கள் என்று அறியாமல் பயந்து பயந்து இருப்போம்.”

“அப்படி அங்கு அடைபட்டு இருந்த காலத்தில் கடவுளிடம் அடிக்கடி பிரார்த்திப்பேன். ‘கடவுளே நான் இங்கிருந்து உயிரோடு தப்பித்துச் சென்று என் குடும்பத்தோடு சேர்ந்து விட அருள் புரி. அது மட்டும் போதும். எனக்கு வேறொன்றும் வேண்டாம்’.”

“அப்படி ஒரு முறை பிரார்த்திக்கையில் ஒரு உண்மை எனக்கு உறைத்தது. இவர்களிடம் பிடிபடுவதற்கு முன்பு நான் அப்படித் தானே குடும்பத்துடன் சுதந்திரமாக இருந்தேன். கடவுள் அந்த பாக்கியத்தை எனக்கு ஆரம்பத்தில் இருந்தே தந்திருந்தாரே. ஆனால் அந்த சமயங்களில் அதை பாக்கியமாக நான் நினைத்தது இல்லையே. இழந்தால் ஒழிய எதன் அருமையையும் மனிதன் உணர்வதில்லை என்பதற்கு என் நிலையே ஒரு உதாரணம்….”

ஒரு துர்ப்பாக்கியமான சூழ்நிலையில் அவர் உணர்ந்த நிதரிசனமான உண்மையை நம்மால் நம் தினசரி வாழ்க்கையிலும் உணர முடிந்தால் அதை விடப் பெரிய பாக்கியம் வேறு இல்லை.

கடவுள் எத்தனையோ நல்லவற்றை நம் வாழ்வில் தந்து அருளி உள்ளார். ஆனால் நாம் திருப்தியாக இருக்கிறோமா? இல்லாதவற்றின் பட்டியலை வைத்து நாம் புலம்பிக் கொண்டு இருக்கிறோம். கடவுள் அந்தப் பட்டியல் அம்சங்களையும் நிறைவேற்றி விட்டால் அப்போதாவது சந்தோஷப்பட்டு விடுகிறோமா என்றால் அதுவும் இல்லை. நம்மிடம் அடுத்த பட்டியல் தயாராகி விடுகிறது.

உண்மையான செல்வம் திருப்தியே. அது இருந்து விட்டால் வாழ்க்கையின் நிறைவு குறைவதில்லை. அது இல்லா விட்டால் உலகில் உள்ள அனைத்து செல்வங்களைக் கொண்டு வந்து நம்மிடம் கொட்டினாலும் நாம் நிறைவு அடையப் போவதில்லை. ஓட்டைக் குடத்தில் எத்தனை தண்ணீர் ஊற்றினாலும் அது எப்படி நிறைந்திருப்பதில்லையோ அதே போல் தான்.

இதற்கு அருமையான இரு உதாரணங்களைச் சொல்லலாம்.

நெப்போலியன் தான் வாழ்ந்த காலத்தில் அடையாத செல்வம் இல்லை. பெறாத புகழ் இல்லை. வாழ்வின் கடைசி நாட்களில் சிறைப்பட்டிருந்தாலும் அவன் வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி அதிர்ஷ்ட தேவதை அவனை பலவிதங்களில் அனுக்கிரகித்து இருந்தது. ஆனால் அவன் தன் கடைசி நாட்களில் செயிண்ட் ஹெலெனா தீவில் சொன்னது இது தான். “நான் என் வாழ்க்கையில் ஆறு சந்தோஷமான நாட்களைக் கண்டதில்லை.”

ஹெலென் கெல்லர் என்ற பெண்மணி குருடு, செவிடு, ஊமை. தன் பெருமுயற்சியால் ஊமைத் தன்மையை அவர் வெற்றி கொண்டாலும் மற்ற இரண்டு பெரிய குறைபாடுகள், அவரது வாழ்நாள் முழுவதும் இருந்தன. ஆனால் அவர் சொன்னார். “நான் என் வாழ்க்கையை மிகவும் அழகானதாகக் காண்கிறேன்”

சக்கரவர்த்தியான நெப்போலியன் தன் வாழ்க்கையில் ஆறு சந்தோஷமான நாட்களைக் காணாததும், ஐம்புலன்களில் மூன்றைப் பறிகொடுத்து வாழ்ந்த ஹெலென் கெல்லர் தன் வாழ்க்கையை மிக அழகானதாய்க் கண்டதும் சிந்தனையைத் தூண்டும் செய்திகள். உண்மை என்னவென்றால் நாடுகளைத் தனதாக்கி சரித்திரம் படைத்த சக்கரவர்த்திக்கு ‘திருப்தி’ என்னும் செல்வத்தை அடையத் தெரியவில்லை. எத்தனையோ இழப்புகள் இருந்தாலும் ஹெலென் கெல்லர் திருப்தி என்னும் செல்வத்தை இழக்கவில்லை. இது தான் இரு நபர்களுக்கு இடையே உள்ள ஒரே பெரிய வித்தியாசம்.

புத்தாண்டை ஆரம்பிக்கும் இந்த வேளையில் ‘இல்லை’ என்ற பட்டியலை வீசி எறிந்து விட்டு தங்கள் வாழ்க்கையில் ‘இருக்கிறது’ என்று நன்றியுடன் நினைக்கத் தக்கவற்றின் பட்டியலை தயாரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் இல்லாமல் எத்தனை பேர் இதற்கென தவமிருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இருப்பதைக் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். திருப்தி என்ற செல்வத்தை இழக்காமல் வாழப் பழகுங்கள்.

உள்ளதை வைத்துத் திருப்தி அடைய முடிந்தால் மேற்கொண்டு கிடைப்பதெல்லாம் கூடுதல் லாபம் தானே! இந்த மனப்பக்குவத்துடன் வரும் புத்தாண்டை எதிர் கொள்ளுங்களேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *