இலக்கியச் சண்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 6,547 
 

அவன் : மனதில் எழும் எண்ணங்களை மேகம் முகிழ்ந்து செல்வது போல இயல்பாக அலையவிட்டு இரு மேகங்கள் முட்டி மோதி முகிழ்த்து, புணர்ந்து, உயிர்ச்சாரை பொழியும் தருணத்தில் அதில் நனைந்து, தன்னை மறந்து ‘தான்’ ஐத் தொலைத்து, இவ்வண்டப் பிரபஞ்சத்தில் எங்கு தேடினும் கிடைக்காத ஓருயிராய், கைகளுக்கு மட்டும் உணர்வு கொடுத்து, சற்று உயிரும் கொடுத்து வார்த்தைகளை வார்தெடுக்க முடியுமானால் அதுவல்லவா எழுத்து………………..

இவன் : மச்சி சத்தியமா புரியலடா, என்னடா சொல்ற

அவன் : ஞான சூனியம்

இவன் : (திரும்பிப்பார்த்தான், யாரும் இல்லை, அவன் தன்னைத்தான் சொல்கிறான் என்றால் அதற்கு கோபப்பட வேண்டும் என்கிற விதிமுறைக்கு உட்பட்டு, சற்று கோபப்பட்டு…….)

இவன் : மச்சி …. உனக்கு அவசரமா டாய்லெட் வரும் போது, நான் உள்ளே உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள், நீ எப்படி என்னை அழைப்பாய்?

1. நண்பா என் ரத்த ஓட்டம் இயல்பாக வேண்டுமானால், என் உடல் கழிவை வெளியேற்ற வேண்டும். மேலும் என் கண்கள் வேறு இருண்டு கொண்டு வருகிறது. தயை கூர்ந்து வெளியே வா, என்று கூறுவாயா? அல்லது

2. டேய் பரதேசிப் பயலே, இப்ப நீ வெளிய வரலன்னா செருப்பால அடிப்பேன் என்று கூறுவாயா?

ஏன்டா மச்சி நடைமுறை மொழி வழக்கை, இலக்கியத்துக்கு பயன்படுத்த மாட்டேன் என்கிறாய். அதுல எந்தகுற்றமும் இல்லையே, அது ஏன் புரியாமல், முதல் வரியை போட்டு, இரண்டாவது வரியை விட்டுவிட்டு, மூன்றாவது வரியை தொட்டு, பின் 5, 7…. என வார்த்தைகளையும், ​மொழியையும் பிய்த்து போட்டு குழப்புகிறாய். நீ கோணங்கியை மிஞ்ச வேண்டும் என்கிற ஆர்வத்தில் பிபொனோசி எண் வகையை பயன்படுத்தி வார்த்தைகளை அமைப்பாய் என்றால் ஓடி ஒளிந்து கொள்ள நான் செவ்வாய் கிரகத்தில் தான் இடம் தேடுவேன், மேலும் துப்பாக்கி ஒன்றையும் கையோடு எடுத்துச் செல்வேன். நீ பின் தொடர்ந்தாலும் தொடர்வாய். புரியாத எழுத்துத் தொகுதியை கொடுப்பதில் அப்படியென்ன உங்களுக்கெல்லாம் திமிர்த்தனம்……….ம்

இவ்வளவு தம்கட்டி பேசிய பின்னும் அவனுடைய பதில் ஒரு மெல்லிய சிரிப்பு ………… ஏதோ சால்வை போட்ட சாக்கரடீஸ் போல. பின் கூறினான்.

அவன் : ராஜேஸ்குமாரில் திருப்தியடையும் முட்டாள்களுக்கு அது புரியப்போவதில்லை

தலையைப் பற்றி தவறாக கூறியதைக் கேட்ட இவன் இரத்தம், குமிழிகள் தோன்றுமளவுக்கு கொதித்தது. அது எப்படியிருந்தது எனில், அதில் உருளைக் கிழங்கை போட்டால் 10 நிமிடங்களில் வெந்து விடுமளவிற்கு…. இவன் கூறினான்.

இவன் : மச்சி ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தை மட்டும் உன்னை எழுதச் சொன்னால், 6 வயது சிறுவன்கள் எல்லாம், அரை கிறுக்கன் ஆகிவிடுவார்கள். மேலும், அதோ பார் பூச்சாண்டி வருகிறான் என்று குழந்தைகளை பயமுறுத்த வேண்டிய அவசியம் தாய்மார்களுக்கு ஏற்படப்போவதில்லை. அவர்களுக்கு அந்த ஒரு புத்தகம் போதுமானதாக இருக்கும். மூணுகண்கொண்ட பூதத்தை நினைத்து பயப்படும் குழந்தையைப் போல தமிழ் மக்களை மிரள வைக்க நீ தீட்டியிருக்கும் திட்டத்தை பார்த்துக் கொண்டு அரசாங்கம் சும்மா இருக்கும் என்று நீ நினைக்கிறாயா? எனக்கு அப்படித் தோன்றவில்லை.
மீண்டும் அவனிடம் அதே சிரிப்பு, ஒருவேளை வெறுப்பேற்றுவதற்கான உபாயமாக இருக்கலாம்… அவன் கூறினான்.

அவன் : என் எழுத்தை புரிந்து கொள்ளுமளவுக்கு ஒரு நூறு பேர் இங்கிருந்தால் அதுவே எனக்கு போதுமானது

இவன் : அப்படியென்றால் உன்னை நீ சமுதாய சீர்திருத்தவாதி, இந்த சமூகத்தில் உள்ள அழுக்குகளை கூட்டிப் பெருக்க வந்த துப்புரவாளன், மனித மனங்களை மாற்றியமைக்க வந்த மருத்துவன் என்றெல்லாம் கூறிக் கொள்ள மாட்டாயே, ஏனென்றால் எனக்குத் தெரிந்து ஒரு நூறுபேர் ஒரு சமுதாயமாக முடியாது”

அவன் : நான் யாருமல்ல, நான் வெறும் நான்தான், என்னை அறிந்து கொள்ளும் ஒரு நூறுபேர் இந்த முழு உலகுக்குச் சமமானவர்கள்

இவன் : அந்த ஒரு நூறு பேருக்கு 7வது அறிவு வந்து விட்டது என்று வாய் கூசாமல் நீ கூறுவாயா?, இல்லை மனங்கூசாமல் மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா

அவன் : நான் உலகத்துக்கு உயர்வானதை, அமுதத்துக்கு ஈடானதை வழங்குகிறேன். எடுத்து பருக தகுதியுடைவர்கள், (இவனை உற்றுப் பார்த்து) வக்குள்ளவர்கள், திராணியுள்ளவர்கள், எடுத்துப் பருகிக் கொள்ளலாம். நீச்சல் தெரியாதவர்கள் கடலில் இறங்கி முக்குளிக்க நினைப்பது இயலாத காரியம்தான். அதற்காக முக்குளிப்பவனை மூடன் என்று சொல்லக்கூடாது அல்லவா? கிணற்றுத் தவளைகளுக்கு என்றுமே சற்று வாய் நீளம் தான்.

அது சரி தவளையின் வாயை எப்பொழுது சென்று அளந்து பார்த்தான் (காலஸ் ஃபெல்​லோ) ஒருவாயில்லா ஜீவனின் வாயை வதைத்திருக்கிறானே, கொடூரன் என யோசித்தபடி இவன் கூறினான்.

இவன் : மச்சி … மளிகைக் கடைக்கு போயி, கோல்கேட் பேஸ்ட் ஒண்ணு குடுங்கன்னு கேட்டா குடுக்கப் போறான், உலகம் இவ்வளவு எளிமையா இருக்கும் போது அதை ஏன் கஷ்டப்படுத்தி பாக்குற உன்னோட 100 பேர்ல ஒருத்தன். இப்படி கேக்குறான்னு வச்சுக்க, “அந்த 2வது மூளையில் தொங்கிக் கொண்டிருக்கும், நான்கடுக்கு பேழையில் 8வது சிவப்பு டப்பாவை எடுத்துக் கொடு, எவ்வளவு விலை”, கடைக்காரனுக்கு பைத்தியம் பிடிச்சுடாதா? எளிமையான வார்த்தைகளை உபயோகிக்கிறதுல அப்படி என்ன அழகு கெட்டுப் போச்சு, எனக்கு என்ன தோணுதுன்னா? எளிமையான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி, அதை ஒரு வாசகன் எளிமையா புரிஞ்சுகிட்டா, வாசகனையும், உன்னையும் எப்படி தரம்பிரிச்சு பாக்குறது அப்டிங்கிற பயம் உனக்கு. அந்த பயத்தில்தான், கடினமான வார்த்தைகளை பிரயோகப்படுத்துற. எங்க ஒரு வாசகன் உன்னை ஈசியா ஜட்ஜ் பண்ணிடுவா​னோன்னு பயந்து, தெறிச்சு ஓடுற புரியாத உலகத்த நோக்கி. அந்த புரியாத உலகத்துல நீ பாதுகாப்பா இருக்கிறதா நினைக்கிற. தன்னை எந்த வாசகனும் பின் தொடர்ந்து வந்துட முடியாதுன்னு ஜம்பம்மா மார் தட்டிக்கிற. நீ மட்டும் புரியக்கூடிய மொழி நடையில் எழுதிவிட்டால் உன் வண்டவாளம் தான் வெளியே தெரிந்து விடுமே. உன்னுடைய சப்பை கருத்துக்களை புரியாத மொழி நடைக்குள் போட்டு அமுக்கி, அதை புத்தகமாக வெளியிட்டு மார்தட்டி திரிய நினைக்கிற தடித்தனத்த, எத்தனை நாள்தான் இந்த மக்கள் அடையாளம் கண்டுக்க மாட்டாங்கன்னு நினைக்கிற. எழுத்தை ஒரு ‘ட்ரிக்’காக எடுத்துகிட்டு எழுதுகிறாயா? உன் ஆன்மா எப்படி வெளிப்படும். நடிப்பில் எப்படி ஆன்மா வெளிப்படும். உன்னுடைய சிந்தனையில் குழந்தையினுடைய ‘இன்னொசென்ட்நெஸ்ஸை’ தொலைச்சுட்ட. நேர்மையை தொலைச்சுட்ட. உன்னோட ஒரே அளவுகோள், எழுத்து கடினமாக இருக்கணும் அவ்வளவுதான். அந்த எழுத்தை எவனும் புரிந்து கொள்ளக் கூடாது அவ்வளவுதான்.

மணிரத்னம் படத்துல இருட்டுக்குள்ளேயே சம்பவங்கள் நடக்குற மாதிரி, உன் கடினமான மொழிநடைக்குள்ளேயே நீ காய்களை நகத்துற. அதுக்குள்ள இருக்குறதுக்கு உனக்கு அவ்வளவு பெருமை, அந்த பெருமையுணர்ச்சிலதான் நீயெல்லாம் எழுதவே செய்ற. காருக்கு பெட்ரோல் மாதிரி, உனக்கு இந்த பெருமையுணர்ச்சி, உனக்கு என்னோட ஒரே அட்வைஸ் ‘வாழ்க்கை கடினத்துல இல்ல’ எளிமைலதான் இருக்கு, சின்ன சின்ன எளிமையான விஷயங்கள்ளதான் கடவுள் இருக்காரு”

அவன் : அரிஸ்டாட்டில் மட்டும் இப்பொழுது என் முன் தோன்றி, ‘நான் அரிஸ்டாட்டில் வந்திருக்கிறேன்’ என கம்பீரமாக கூறுவாரேயானால் அவர் முகத்தில் ஓங்கி அறைய நான் இரு வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்வேன். எதற்காக என்னை அடித்தாய் என கோபத்தில் என்னைப் பார்த்து கேட்பாரேயானால், இதோ ஒரு அரிஸ்டாட்டில் எனக்கு போதித்துக் கொண்டிருக்கையில் எத்தனை போ் போலியாக உருவெடுப்பீர்கள் என அவமானம் கொள்ளும்படி அசிங்கமாக கேட்பேன். மேலும், நீயும் என்னுடன் சேர்ந்து கைகட்டி நில் அரிஸ்டாட்டில் அறிவுரையை கேட்போம் என்பேன். என்ன நான் சொல்வது சரிதானே.

இவன் : குத்தம் சுமத்துனா பதில் சொல்லாம ஓடி, ஒளியறது பேடித்தனமா உனக்குப் படல

அவன் : எது கடினமான எழுத்து, எது எளிமையான எழுத்து என்பது அவரவர் புரிந்து கொள்ளும் தன்மையை பொறுத்தது. மேலும், கடினமானது, எளிமையானது என எழுத்தில் 2 வகை மட்டுமல்ல. ஏராளமான வகை உண்டு, அவரவர் ஏற்றுக் கொள்ளும் கொள்ளளவைப் பொறுத்து எழுத்தானது தனது மதிப்பை பெறுகிறது. என்னுடைய கேள்வி இதுதான் சவாலற்ற எழுத்து எதற்கு அச்சேற வேண்டும்.

இவன் : வாழ்க்கைதான், இலக்கியம் என்றால், அதில் சவாலுக்கு என்ன தேவை வேண்டி கிடக்கு. தினசரி பல் துலுக்குவதை கூட சவாலாக்க நினைக்கிறாயோ என்னவோ? சாப்பிடுவதற்கான உணவு சவாலாக இல்லாவிட்டால் சாப்பிடவே மாட்டாயா? எதையுமே கஷ்டப்படுத்திப் பார்க்க நினைக்கும் உன்னுடைய மனநிலை எனக்கு புரியவே மாட்டேன் என்கிறது. எத்தனையோ விதமான புதுபுது மனோ வியாதிகளை, தினசரி உளவியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உன்னுடைய மனோவியாதி இதுவரை கண்டுபிடிக்கப்படாததாகக் கூட இருக்கலாம். கவலைப்படாதே, கடவுளை வேண்டிக்கொள். கடவுள் நம்பிக்கை ஒரு எளிமையானதியரி, எனக்குத் தெரியும் நீ ஒரு நாத்திகனாகத்தான் இருப்பாய் என்று. ஏனெனில் நீ கடவுளை கூட குழப்பிக்கொண்டிருப்பாய். கடவுள் இல்லையென்று சொல்லிவிட்டு, இல்லாத கடவுளுடன் காலம் காலமாக சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்கள் தானே உன்னைப்போன்ற நாத்திகர்கள். இல்லாத ஒன்றிடம் இவ்வளவு காரி உமிழ்ந்துவிடும் குரோதத்தையும், செருப்பு மாலை அணிவிக்கும் வெறுப்புணர்ச்சியையும் வளர்த்துக் கொள்ள உலகத்தில் வேறு எந்த ஜந்துவால் முடியும். உன்னைப் போன்றவர்களால் மட்டும் தான் முடியும். இல்லாத ஒன்றின் மேல் வளர்த்துக் கொண்ட நெகடிவ் தாட்ஸ், மூலம் அதை இருப்பதாக உறுதி செய்யும் புத்திசாலித்தனமெல்லாம், உன்னைப் போன்றவர்களால் மட்டும்தான் முடியும். ஒருவேளை உன் கடவுள் எதிர்ப்பு, கடவுள் மேல் உள்ள ஈகோ பிராப்ளமாக இருக்கலாம். குறைந்த பட்சம் என்னிடமாவது நீ ஓத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். இல்லாத கடவுள் மேல் உனக்குள்ள குரோதத்தை. சமுதாயத்திடம் நடித்துக் கொள், சமுதாயம் வேறு எதற்கு இருக்கிறது.

வாழ்க்கை அதிகபட்ச எளிமையை உனக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. உதாரணமாக உன்னால் எளிமையாக மூச்சுவிட முடிகிறது. வாழ்க்கை மட்டும் சவாலான இலக்கியவாதியாக உன்னிடம் நடந்து கொண்டால் நீ எங்கு போய் ஓடி ஒளிந்து கொள்வாய். என்னைப் போல் கட்டிலுக்குஅடியில்ஒளிந்து கொள்ள இடத்தை தேர்ந்தெடுத்து விடாதே. அங்கே எலித்தொல்லை தாங்க முடியவில்லை. அந்த எலிகள் சவாலான இலக்கியத்தைவிட அவ்வளவு கொடூரம் இல்லையென்றாலும், அந்த இடத்தை புறக்கணித்துவிடு, ஏனென்றால் அந்த எலி அங்கு தன் குடும்பத்தை நிலைநிறுத்திவிட்டது. உன்னுடைய காலணியையும். காலுறையையும் உன்னை கேட்காமலேயே அவை எடுத்துக்கொண்டன. அந்த எலிகள் கூட உன்னைப் போலத்தான், சவாலான வாழ்க்கையை மேற்கொண்டிருக்கின்றன. உன்னுடைய காலுறை அருகில் வாழ்வது எவ்வளவு சவாலான விஷயம் என்பதை நீ மறுக்கப் போகிறாயா என்ன? அதனால் அவைகளை மன்னித்துவிடு.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் புரிதலுக்குரிய வாய்ப்பு காலடியில் இருந்தும் பார்வையை எங்கேயோ மேயவிட்டுக்கொண்டு, எல்லைவரை தேடிக்கொண்டு போக நினைக்கும் க்யூரியாசிட்டி, மனிதனில் மிக மோசமான பரிணாம வளர்ச்சி அல்லது மிகமோசமான மனநோய்.

அவன் : புரிதல் இல்லாதது என்று இந்த உலகில் எதுவும் இல்லை. எல்லாவற்றிலும் ஏதோ ஒரு புரிதல் உள்ளது. அந்த புரிதலுக்கு உரிய தன் முயற்சியும், மனோபாவமும் இல்லாததே பிரச்னை. வாழ்க்கையில் எல்லாமே எளிதாக புரிந்து விட வேண்டும் என்றால், நாம்காட்டுவாசிகளாக மட்டும் தான் இருந்திருக்க முடியும். எளிதான புரிந்துவிட முடியாத விஷயங்களையும் நோக்கி பீனிக்ஷை போல பறந்ததன் காரணமாகத்தானே இத்தனை கண்டுபிடிப்புகளையும், இத்தனை தத்துவங்களையும், இத்தனை கலை உணர்ச்சியையும் மனிதன் கடந்து வந்திருக்கிறான். ஆறாவது அறிவு மனிதனிடம் மட்டும் மேம்பட்டதற்கான காரணம் வேறு எதுவாக இருந்திருக்க முடியும். புரியாத விஷயங்களை நோக்கிய அவனது பயணம் தான் காரணமாக இருக்க முடியும். பரிமாண வளர்ச்சியில் மற்ற உயிரினங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு மனிதன் மட்டும் அறிவில், பலத்தில் என அசாதாரண வகையில் உயர்ந்திருக்கிறான் என்றால் தொடர்ந்து புரியாத விஷயங்களுடன் அவன் செய்த போர்களே காரணமாக இருக்க முடியும். மனிதனின் அறிவு சிறு உளி போன்றது. அதன் உறுதியும், கூர்மையும் எத்தனை பெரிய மலைகளையும் சாய்த்து விடும். ஒன்றுமில்லாமல் செய்துவிடும். அறிவை எப்பொழுதும் உளிபோன்று கூர்மையாகவும், கடினமாகவும் வைத்துக் கொள்வது மேலும், மேலும் பரிணாமத்திலும், வாழ்க்கையிலும், உள்ளுணர்வான ஆன்மீகத்திலும் உயர்வதற்கான வழியை அமைத்துக் கொடுக்கும். அறிவு ஒன்றே இந்த உலகில் நிரந்தர ஆயுதம். அறிவு ஒன்றே நம் உடல் நிலைத்திருக்கும் வரை நம்முடன் பயணிக்கக் கூடிய மிகச்சிறந்த நண்பன். அவன் என்றுமே நம் மை ஏமாற்றப் போவதில்லை. அவன் எந்த நேரமும் நம்மை கைகொடுத்து காப்பாற்றுவான்.

ஊசிமுனை கூர்மையையும், இரும்பின் கடினத்தன்மையையும் அறிவுக்கு கொடுக்கும் சக்தியை எந்த ஒரு மனித உடலுக்கும் இறைவன் பரிசாக அளித்திருக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் கொடுத்திருக்கும் மிகப்பெரிய கையிருப்பு அது. தொழில் தொடங்க முயற்சி செய்பவனுக்கு இலவசமாக ஒரு கோடி ரூபாய் கிடைக்கப்பெற்றது போல, பிறந்த மனிதன் ஒவ்வொருவனுக்கும், அறிவு என்னும் மூலதனத்தை பக்கபலமாக இறைவன் வழங்கியிருக்கிறான். இதில் எந்தவொரு மனிதனுக்கும் இறைவன் பாரபட்சமே காட்டியதில்லை. ஒவ்வொரு பறவையும் பறப்பதற்கு எவ்வளவு உரிமையை இயற்கையிடம் இருந்து பெற்றிருக்கிறதோ, அவ்வளவு உரிமையை ஒவ்வொரு மனிதனும் தன்னை, தன் ஆன்மாவை, தன் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்வதற்கான மூலதனத்துடன் பெற்றிருக்கிறான்.

அறிவு மேலும் மேலும் தன்னை வளர்த்துக் கொள்வதற்கு தானே உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு சவாலான சூழ்நிலைகளை வழங்க வேண்டும். சவாலான இயற்கை ரகசியங்களை புரிந்து கொள்வதிலும், வாழ்க்கைத் தத்துவங்களை விடுவிப்பதிலும் ஆறாவது அறிவுக்கு இருக்கக் கூடிய பங்கை புறக்கணிக்கக் கூடாது. இவை போன்ற வாய்ப்புகளை முற்றாக, முழுதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவன் : நீ சொல்றது எல்லாம் சரிதான் மச்சி, ஒரு குழந்தைய உருவாக்க, ஜீன், குரோமசோம், டெஸ்ட் ட்யூப், குளோனிங்னு போய்கிட்டு இருக்கிற இந்த காலத்துல, இயற்கையா, எளிமையா, சந்தோஷமா ஒரு உயிர உருவாக்குற சூழ்நிலையை ஆண்டவன் இன்னும் அப்படியேதான் வச்சிருக்கான். எதுக்காக ஒரு உயிர உருவாக்க சிக்கலான வழிமுறையை கையாளணும். எளிமையான வழியை மீறாமல் இருப்பதே நாம் இயற்கைக்கு செய்ற பெரிய நன்மையா இருக்கும்னு நினைக்கிறேன். வாழ்க்கை எளிமைல தான் இருக்குங்கற உண்மைய மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமா சொல்லிக்க ஆசைப்படுறேன். மனித அறிவு இயற்கையோட, அதன் ரிதத்தோட ஒன்றி செயல்படனும். அப்படி இல்லாத பட்சத்துல மனித அறிவுக்கே உள்ள திமிர்த்தனம் இயற்கைய அழிச்சிரும். அறிவு வளர்ச்சி அதோடு சேர்ந்து அதன் தடித்தனத்தையும், திமிர்த்தனத்தையும் சேர்த்துத் தான் வளர்த்துக் கொண்டிருக்கிறது. அதை உன்னால மட்டுமல்ல யாராலும் மறுக்க முடியாது. அறிவு வளர்ச்சியில் இருக்கும் ஆபத்தை ஒதுக்கி விட்டு அதன் வளர்ச்சியை பற்றி உன்னால் கற்பனை செய்ய முடியுமா? அதனால் அறிவு வளர்ச்சியே தப்புன்னு சொல்ல வரல. இயற்கை அனுமதிச்சிருக்கிற வரை, இயற்கை நமக்கான ஏற்பாடுகளை செய்து வச்சிருக்கிற வசதிகளை சிதைக்காத வரை அதோடு ஒன்றி அதோடு இசைந்து, ரிதத்தோடு நம்முடைய அறிவு வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ளணும்னு தான் நான் சொல்றேன். இதை உன்னால கண்டிப்பா புரிஞ்சுக்க முடியும்னு நெனைக்கிறேன்.

எளிமையா சொல்லணும்னா, நமக்கு செவ்வாய் கிரகமும், சந்திரனும் வேண்டாம். அதைவிட இங்கிருக்கிற நல்ல காத்து முக்கியம். நல்ல காத்து கெடைக்கிறதுக்கு அறிவு ஒரு மிஷின கண்டுபிடிக்கும். ஆனா, நல்ல காற்று கிடைக்காத சூழ்நிலையை உருவாக்கி வச்சதுக்காக நாம் நம் அறிவை சாடித்தான் ஆக வேண்டும். நிச்சயமாக 5 அறிவு படைத்த விலங்குகள் இதற்கு காரணமாக இருக்கப் போவதில்லை. இயற்கை ஏற்கனவே நல்ல ஏற்பாட்டுடன் நம்மை பேணி பாதுகாக்கக் கூடிய வல்லமையுடன் வாழ்க்கையை எளிமையாக்கி வச்சிருக்கு. வாழ்க்கையும் சரி, வார்த்தைகளும் சரி மிக எளிமையாக ஆரோக்கியத்தோட இருக்கு. இனிமேல் சாதனைகள் எல்லாம் சிதைக்கப்பட்ட இயற்கைய, அப்படியே திரும்ப உருவாக்குறதா தான் இருக்கப் போகுது. மிகப்பெரிய சவாலா மாறப்போறது இயற்கைய திரும்ப உருவாக்கப் போறதுதான்.

அவன் : இயற்கையை மீறும் சக்தியை மனிதனுக்கு மட்டும் இயற்கை ஏன் கொடுக்க வேண்டும். அவன் அதற்கு தகுதியானவன் என்கிற பிரக்ஞை அதனிடம் இருப்பதால் தான். இத்தனை கோடி உயிரினங்களை படைத்து இயற்கை தன் காலடியின் கீழ் வைத்திருக்கையில், மனிதனுக்கு மட்டும் தன்னை மீறும் சக்தியையும், தன்னை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது என்றால் அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை தான் பெற்றெடுத்த உயிரினங்களை பேணிப்பாதுகாக்கக் கூடிய சூழ்நிலைகளை தானே உருவாக்கி கொடுத்திருக்கிறது. அதை பல்வேறு காரணங்களையும், நியாய தர்க்கங்களையும் கூறி புறக்கணிப்பது மனிதனின் முட்டாள்தனம். நீ உண்மையில் இயற்கையை மதிப்பவனாக இருந்தால் இயற்கையை நேசிப்பவனாக இருந்தால், இயற்கை கொடுத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இயற்கை மனிதனை தேர்ந்தெடுத்திருக்கிறது. மனிதனுக்குரிய முக்கியத்துவத்தைக் கொடுக்க அது விளைகிறது. மனிதனை மேம்படுத்த அது ஆசைப்படுகிறது. மனிதனுக்கு அது வாய்ப்பளித்திருக்கிறது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது மனிதனின் உரிமை மட்டுமல்ல. மனிதனின் கடமையும் கூட. இயற்கை உனக்குக் கொடுத்திருக்கும் சவாலை பூர்த்தி செய்வது தான் உன் கடமை, அதுதான் உன் வாழ்க்கை. சவாலற்றது மரணத்திற்கு ஈடானது. சவால்தான் வாழ்க்கை.

இவன் : நீ கோவிச்சு மாட்டேனா உன்னை ஒருவார்த்தை சொல்லி திட்ட ஆசைப்படுறேன்.

“அறிவு கெட்டவனே, உனக்கெல்லாம் ஒரு தடவ சொன்னா புரியாதாடா?, விட்டா பேசிக்கிட்டே போற.”

அவன் : உன்னையும் மதிச்சு பேசியதற்காக நீ சந்தோஷப்பட வேண்டும். நான் தெருவில் செல்லும் நாய்களை எப்பொழுதாவது மதிப்பதுண்டு. அவை குளைக்கும், கடிக்கும் என்றெல்லாம் கவலைப்படுவதில்லை.

இவன் : உன்னையும் ஒரு நாய் கடிக்கும்னு நீ எதிர்பார்க்கிறியா? நீ ஒருநாய் பக்கத்துல போய் அதோட காதுல, ‘நான் ஒரு தமிழ்முற்போக்கு எழுத்தாளன்’ அப்படின்னு சொன்னா, அந்த நாய் உன் கால்ல விழுந்து கதறும், ‘நான் எந்தத் தப்பும் செய்யல என்னை உயிரோட விட்டிருங்க’ அப்படின்னு கெஞ்சி கூத்தாடும். செத்து போவதற்கு முன் ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போமே என நாலு கால் பாய்ச்சலில் ஓடிப்பார்க்கும், அதன் முயற்சி தோல்வியடைந்து விடும் என்பது கூட தெரியாமல்….

அவன் : அந்த நாய் நீயாக இருந்தால் நான் சந்தோஷமடைவேன்.

இவன் : என்னது நான் நாயா, அப்போ நீ கழுதைடா, பேப்பர் திங்கிற கழுதை, எழுதுறேன்னு சொல்லி பேப்பர் திங்கிற கழுதை…

அவன் : போடா பன்றி

இவன் : எருமை மாடு கோவித்துக் கொள்ளும் என்கிற ஒரே காரணத்துக்காக மட்டும்தான் உன்னை அவ்வாறெல்லாம் திட்டப் போவதில்லை இல்லையென்றால்…

அவன் : என்னை கொலை செய்யத் தூண்டாதே.

இவன் : அப்போ இவ்வளவு நேரம் நீ செய்தது கொலை முயற்சி இல்லை என்று நினைக்கிறாயா?

அவன் : லூசுப்பயலே உன்னுடன் பேசிப் பேசி எனக்கு தலை வலிக்கிறது.

இவன் : சுவற்றில் போய் முட்டிக்கோ.

அவன் : உன் தலையை விட சிறந்த பாறை இந்த ஊரில் இருப்பதாகத் எனக்குத் தோன்றவில்லை. உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் அதில் முட்டிக் கொள்ளலாமா?

இவன் : உன் தலையில் நீ வீடு கட்டக் கூடிய அளவிற்கு மண் உள்ளதே, அதை என்றைக்காவது கவனிச்சிருக்கியா?

அவன் : இவ்வளவு நேரம் நான் பேசிக் கொண்டிருந்தது ஒரு களிமண் தலையனுடன் என்பதை நினைத்துப் பார்க்கையில் மனம் வலிக்கிறது.

இவன் : எனக்கு மட்டும் என்ன குதூகலமாகவா இருக்கு. பேசாம செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிருக்கலாம்

அவன் : இனி என் முகத்துலேயே முழிக்காத

இவன் : நீ கால்ல விழுந்து கெஞ்சினாலும் உன் முகத்துல முழிக்க மாட்டேன். நம்பிக்கை இல்லைன்னா சொல்லு. 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதித் தர்றேன்.

அவன் : இதுக்காக பின்னாடி நீ வருத்தப்படுவ

இவன் : அப்படி மட்டும் நடந்துச்சுன்னா நான் 2 தடவை தூக்குல தொங்கி தற்கொலை பண்ணிக்குவேன்.

அவன் : ஆண்டவா………

இவன் : பாத்தியா, பாத்தியா… அவசரத்துக்கு சாமி கும்பிடுகிற போலி நாத்திகண்டா நீ.

அவன் : நான் உன்னோட ஃபிரண்ட கூப்பிட்டேன்.

இவன் : நடிக்காதடா நாடகக்காரா…

மறுநாள் காலை

அவன் : விழிப்பின் முன் தோன்றும் – மாயக் கனவொன்றின்
பிடிபடாத அடுக்குகளில, விழுந்து உடையும் மழைத்துளியின்
ஸ்பரிசத்திலும், மழைத்துளி துளிர்க்க, அப்போது அந்தப்
பூக்களின் மணத்திலும் அவளை நான் முதன் முதலில் கண்டேன்.

இவன் : டேய் மச்சி ஒண்ணுமே புரியலடா?……………………

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *