இருள்வெளியின் ஒளி துவாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 5,986 
 

குளிரா பனியா வெயிலா மழையா.. இருளா ஒளியா…. எங்கும் எங்கெங்கும் காண காண தூரங்கள்… கண்டு கொள்ள கண்டு கொள்ள அருகாமை. இடைவெளி முழுக்க நிழல்வெளி . நிழல்வெளி சுற்றிலும் நிகழ்கலை.

இருப்பதும் இல்லாமையும் இருந்தும் இல்லாமலும்.. நானொரு நானாக.. யாதொரு தானாக… செல்கிறேன். எங்கு எப்படி எதற்கு ஒன்றும் விளங்கவில்லை. என்னோடு ஒரு கூட்டமே மாரத்தான் ஓடுகளத்தில் ஓடுவது போல ஓடுகிறார்கள்.

அவரவர் முகத்தில் அவரவர் சாயல். அவரவர் சாயலில் அவரவர் மாயம்.

எல்லாரும் வெறி கொண்டு ஓடுகிறார்கள். ஒரு பிசாசின் நுரை தள்ளும் வரி கொண்டு கரை தேடும் முயற்சியாக அது இருக்கிறது. வேறு வழியில்லை. எங்கு பதிந்ததோ எதற்கு பதிந்ததோ.. நானும் ஓடுகிறேன். ஓடை கவிழ்க்கும் வெள்ளமென துரிதப்படுகிறது எனதுள்ளே. பால்வெளியின் இருத்தலை கொண்டது போல ஒரு சூனிய வெளியில் சூத்திரம் நுணுக்கம்… நுட்பம்…. எல்லாம் கலந்த புள்ளியில் வரைவுகள் என எனது ஓட்டம் மிக வேகமாகிறது. கனவுக்குள் வரையும் மறதியை ஒத்திருக்கிறது எனது வேகம். மறைய மறைய மறைந்து முடிவதில்லை யாகம். திமிர் பிடித்த பசி என நான் மற்றவர்களை முந்துகிறேன்.

இதற்கிடையில் என்னால் ஒரு விஷயத்தை நன்றாக கவனிக்க முடிகிறது. யாரென்று தெரியவில்லை. எல்லாரும் ஓடிக் கொண்டிருக்கையில் ஒருவன் மட்டும் ஓடாமல், ஓடும் ஒவ்வொருவரையும் பிடித்து அவனையும் கூட்டிக் கொண்டு போக சொல்கிறான். எல்லாரும் அவனை உதறிக் கொண்டு ஓடுகிறார்கள். அவனவன் ஓடுவதே சிரமமாக இருக்கையில் இன்னொருவனையும் எப்படி சேர்த்து இழுக்க கொண்டு ஓடுவது என்று தோன்றியிருக்கலாம். எனக்கும் தோன்றியது. நான் வந்த வழி மறந்தது கொண்டே போகிறது. இன்னும் சற்று நேரத்தில் நான் இலக்கை அடைய வேண்டும். இதில் இன்னொருவனை கண்டிப்பாக என்னால் தூக்கி செல்ல முடியாது. உதறி விட்டு இன்னும் பலம் கொண்டு ஓடுகிறேன்.

ஆசையும் பேராசையும் ஒன்று கூடி என்னை இழுத்துக் கொண்டு போகிறது. பெருத்த நம்பிக்கையின்பால் எனது வேகம் நொடிக்கு நொடி கூடுகிறது. உணருதலின் பொருட்டு குளிரும் வெயிலும்… சூடும் தவிப்பும்… பொழிவும் பொலிவும் என்னை கூடுதல் கவனத்தோடு கடக்க சொல்கின்றன. நான் அலைந்து திரியும் அத்தனை நிஜத்தையும் நிழலோடு சேர்த்துக் கொண்டு முன்னேறுகிறேன்.

மூச்சு வாங்க…. உயிர் வாங்கி இதோ அடைந்தே விட்டேன். இலக்கில் என் திரி எரியத் துவங்கி விட்டது. என்னோடு வந்த அத்தனை போரையும் முந்திக் கொண்டு ஒரு வெற்றியாளனாய் ஒரு வேரின் நீட்சியாய் என் தாயின் கருமுட்டைக்குள் சென்று விட்டேன்.

எல்லாரிடமும் போல என்னிடமும் தன்னை அழைத்து செல்லுமாறு கெஞ்சிய கடவுள் மீண்டும் தேமேவென சூனியத்தில் உறைந்து நிற்கிறார். இம்முறையும் அவரை கை விட்டே நகருகிறது மானுடம்.

மீண்டும் அவர் அடுத்த முறை கெஞ்சக் கூடும்.

கண்டடைபவன் பாக்கியவான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *