இரண்டு பாபிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 4,698 
 

இருள் கவியவில்லை இன்னும்…

நாகரிகப் பெருநகரம் அசுரவேகத்தோடு, ஆரவாரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் வேளை, மாலை நேரம்.

புற்றுக்களிலிருந்து கிளம்பி எங்கெங்கும் திரிகிற எறும்புகள் போல, அலுவலகங்களில் அடைபட்டுக் கிடந்துவிட்டு வெளியேறிய உழைப்பாளிகள் – இயந்திரங்களை ஓட்டிப் பிழைக்கிறவர்களும், பேனா ஓட்டி வாழும் குமாஸ்தாக்களும், பிறரும் – வீடுகளை நோக்கிச் செல்லும் வேளை. உளச் சோர்வும் உடல் சோர்வும் இருந்த போதிலும், வீடு எனும் ஜம்பப் பெயரை உடைய பொந்துகளிலும் வளைகளிலும் குகைகளிலும் ஒடுங்கிவிடும் ஆசையோடு சென்ற இந்த அப்பாவிப் பிராணிகளின் நடையிலே வேகம் துடித்தது. நடக்கத் தெம்போ ஆசையோ இல்லாதவர்கள் பஸ்களில் முட்டிமோதி ஏறி, இடித்து நெருக்கி அவஸ்தையுற்றும் பிரயாணம் செய்வதிலே சுகம் கண்டார்கள்.

வசதி உள்ளவர்கள் கார்களிலே பறந்து கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு விதமான கார்கள் !
எத்தனை வர்ண பேதங்கள்!
எத்தனை உருவ விசித்திரங்கள் !

பெரிய நகரத்தின் ஜீவ நரம்புகளில் ஒன்றான முக்கிய ரஸ்தாவின் ஓரத்தில், பேவ்மெண்டின் விளிம்பு போல் அமைந்திருந்த சிறு சுவரின் கல் முகட்டின் மீது உட்கார்ந்திருந்த ஞானப்பிரகாசத்தின் கண்கள் கார்களை மட்டும் தானா எடைப்போட்டன?

15 கார்கள், மோட்டார் பைக், லேம்பிரட்டா, சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா நாகரிக வேகத்தில் சிக்கி அவதியுறுகிற மனித ஜாதியின் அவசரத்துடிப்புக்கு ஈடு கொடுப்பதற்காக ஏற்பட்ட விதம் விதமான இரும்பு அவதாரங்களையும், அவற்றிலே ஹாயாக சவாரி செய்த ஆண் பெண்களையும் அவர் கண்கள் ஆராய்ந்து கொண்டிருந்தன. வேகமாகவும், அவசரமற்ற கதியிலும், நடந்து சென்றவர்களையும் அவர் கவனிக்கத்தான் செய்தார்.

நாகரிகம் அழகோடும் அலங்காரத்தோடும், பகட்டோடும் மேனாமினுக்கித் தனத்தோடும் புரண்டு கொண்டிருந்த இடம் அது. நகரத்துக்குப் பெருமை தந்த கடற்கரையை ஒட்டிய அழகிய ரஸ்தா அது ஜீவனோடும் பூரணப் பொலிவுடனும் திகழ்கிற நேரம் அப்பொழுது.

எவ்வளவு மனிதர்கள்! எத்தனை எத்தனை ரகங்கள்! எவ்வளவு மொழி பேதங்கள்!

ஞானப்பிரகாசம் தன்முன்னால் மெதுவாகவும் வேகமாகவும் இயங்கிக் கொண்டிருந்த மனித ஓட்டத்தைக் கவனித்துப் பெரு மூச்சு விட்டார்.

இந்த ஜனசமுத்திரத்திடையே நான் ஒரு ஒற்றைத் தீவு மாதிரி! அசைகின்ற இம் மனித நதியின் மத்தியிலே தனித்து நிற்கும் மணல் திட்டு மாதிரித் தான் நானும்!

அவரைக் கவனியாமல் – அவரைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாதவர்களாய் – எல்லோரும் போய்க்கொண்டிருந்தார்கள். எல்லோரையும் வேடிக்கை பார்த்தபடி சோம்பி இருப்பதிலே சுகம் கண்டார் அவர்.

தன்னை மறப்பதற்கு, தனது வேதனைகளை மறப்பதற்கு, ஒவ்வொருவனுக்கும் ஒரு போதைச் சரக்கு தேவை. தன்னிலே தானே ஆகி, தன்னைப் பல்வேறு கூறுகளிட்டு விநியோகிப்பது போல், ஆக்குதல் தொழிலில் ஈடுபடுகிறவனுக்கு உள்ளத்து வேதனை அதிகம்தான். அவற்றை மறப்பதற்காக அவன் உலகத்தை வேடிக்கை காண முற்படுகிறான்.

ஞானப்பிரகாசம், ஜனசமுத்திரத்தின் மத்தியிலே வசித்த போதிலும், தன்னந்தனியனாகிவிட்டது போலவே உணர்ந்து வந்தார்.

16 என இரண்டு பாபிகள் அவருடைய இன்பங்களில் பங்குகொள்ளக் காத்திருக்கும் துணை யாரும் இல்லை. துயரங்களைப் பகிர்ந்து ஆறுதல் கூறுவதற்கும் எவருமில்லை. கனவுகளை, ஆசைகளை, ஏக்கங்களை, இதயத் துடிப்புகளை எல்லாம் கேட்டு ரசிப்பதற்கோ அல்லது பொறுமையோடு கேட்டுச் சகித்துக் கொள்வதற்கோ-ஒருவர்கூட இல்லை.

அவர் தனியன்., உள்ளத்திலே தனிமை வேதனையாய், பெருஞ்சுமையாய், கோடையின் கடும் உஷ்ணமாய், கவிந்து கனத்துக் கிடந்தது.

அந்த வேதனையைத் தணித்துக் கொள்வதற்காகவே – சுமையை இறக்கி வைக்கவே உஷ்ணத்துக்கு மாற்றாகக் குளுமை பெறத்தான் அவர் நாகரிகம் மிதந்து செல்லும் பெரிய ரஸ்தாவின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தார்.

காலத்தைப் பற்றி அவருக்குக் கவலை கிடையாது. உறுத்துகின்ற கடமை உணர்வு எதுவும் அவருக்கு இல்லை.

விண்ணில் பொன் வெயிலில், பூத்தொகுப்பில் இன்பமாய் நீந்தும் பாக்கியம் பெறவிருக்கும் வண்ணாத்திப் பூச்சியாகப் பரிணமிக்கப் போகிற உணர்வு உள்ளூர இருந்தோ- இல்லாமலோ, குட்டிப் புழு ஓய்வு ஒழிவு இன்றி இலைகளை அரித்துத் தின்று தின்று வளர்கிறது. பிறகு தூங்குகிறது. புதுமைகளைச் சிருஷ்டிக்கின்ற சிந்தனைத் திறனும் ஓயாது அரித்துக் கொண்டிருக்கும் புழு மாதிரித்தான். அதற்கும் தூக்கம் தேவைதான். ஆனால் அது தூங்குவது இல்லை. தன்னைப்பற்றி எண்ணுவது அதைப் பற்றக்கூடிய ஒரு நோய் என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஞானப்பிரகாசத்தின் பார்வையில் தம்மிலே தாமே ஆகிவிட்ட சூழ்நிலை மறந்து. தங்கள் தனி இன்பத்திலே சொக்கிப்போன இரண்டு பேர் தென்பட்டார்கள். ஓடிக்கொண்டிருந்த லேம்பிரட்டாவில் இருந்த ஒருவனும் ஒருத்தியும், முன்னாலிருந்த அவன் தோள்களில் கையை சொகுசாகப் போட்டுக் கொண்டு, பின்னால் ஒய்யாரமாக அமர்ந்திருந்த அவள் முகம் மகிழ்ச்சியினால் முழுதும் மலர்ந்து திகழ்ந்தது. அத்தோற்றம் அழகாக விளங்கியது. அவன் சந்தோஷமாக என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். வாகனம் வேகமாக ஓடியது.

அவர்களும் தம்மிலே தாமே ஆகிவிட்ட தனியர்தான். ஆயினும், அவனுக்கு அவள் துணை. அவர்கள் எப்பொழுதாவது செய்ய முனைவதும் சிருஷ்டித் தொழில் தான். ஆனால், இலக்கிய சிருஷ்டியில் ஈடுபடுகிறவனுடைய தன் மயமும் தனிமையும் தனிரகமானவை. அது வேதனை. அது சுமை. தானேயாகித் தனித்திருந்த கடவுள் அந்தத் தனிமையை – வேதனையை – சுமையைத் தாங்கமாட்டாமல் தான் உலகத்தைப் படைத்து களிப்பதை “அலகிலா விளையாட்டு ஆகக் கொண்டு விட்டான்….

இருள் பரவத் தொடங்கியது எங்கும்….

ரஸ்தாவின் பரபரப்பு வடிந்து விடவில்லை. பொழுது போக்குவதற்காக அசைந்தவர்களும், காதல் மோப்பம் பிடித்து நடந்தவர்களும் ஜோடிகளும், நண்பர் குழுக்களும், தனி மனிதர்களும் அப்படியும் இப்படியும் போய்க் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு அருகே, அவர்களைப் பார்த்தபடி, அவர் இருந்தார். ஆனாலும் அவர்களை விட்டு வெகு தொலைவில் எங்கோ வழி தவறி நிற்பது போன்ற உணர்வுதான் அவருக்கு இருந்தது. அப்பொழுது மட்டும்தான் என்று சொல்வதற்கில்லை. எப்பொழுதுமே அப்படித்தான்.

அவரது கண் தூண்டில் ஒரு உருவத்தின் மீது குத்தியது. அதனால் உறுத்தப்பட்டவள் போல அவளும் திரும்பி அவரைப் பார்த்துவிட்டுப் போனாள். நாகரிக மைனர் ஒருவனைத் தொடர்ந்து நடந்தாள் அவள் எலிப் பத்தயம், எலிப் பொறி, எலி போன் என்றெல்லாம் இருப்பது போல மேன் ட்ரேப் (Man-trap) என்பதற்கும் தமிழில் ஒரு பதம் தேவை. இந்த மாதிரிப் பெண்களைக் குறிப்பிடுவதற்கு இவள் சரியான ஆள் பிடிக்கி”தான். இவளுக்குப் பணத் தேவை அதிகம் இருக்கும் போலும் … பணத்தேவை என்பது யாருக்குத்தான் இல்லாமல் போய்விட்டது?

இருள் நன்றாகக் கவிந்துவிட்டது. தெருவிளக்குகள் ஒளி சிந்தி மின்னின. பகட்டையும் பரபரப்பையும் பேரொளியையும் விட இருட்டே மனசுக்கு இதமாக இருக்கும் என்று தோன்றியதனால் ஞானப்பிரகாசம் எழுந்து நடந்தார். இருள் மலிந்த கடற்கரை மணல் பரப்பில் ஒரு இடம் கண்டு அமர்ந்தார்.

தூரத்தில் ஒளியும் இருளும் “கண்ணாம்பூச்சி” விளையாடி மகிழ்வது போல் ஓடித் திரிந்து கொண்டிருந்தது. தீபஸ்தம்பச் சுழல் விளக்கு இருளின் ஆழத்திலே எதையோ நழுவ விட்டுவிட்டு ஏதோ ஒரு சக்தி மாய ஒளிக்கரம் நீட்டித் தடவித் தேடுகிறது” என்று நினைத்தார் அவர். அப்புறம் நினைப்பு எதுவுமற்றுச் சும்மா கிடக்க
முயன்றார்.

எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ தெரியாது. அவருக்கு அருகே மிகச் சமீபத்தில் – பெண் வாடை வீசியது. அவர் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். அவள் தான். ஆணுக்கு வலைவீசி அலையும் பண்பு பெற்று விட்ட பெண் தான். அவளை அவர் எவ்வளவோ நாட்களாகக் கவனித்திருக்கிறாரே அவளை இனம் கண்டு கொள்வது கஷ்டமில்லை தான்.

அவருக்குச் சிரிப்பு வந்தது. அவள் ஏமாறப் போவதை எண்ணித்தான்!

அவர் அவளையே பார்த்தபடி இருந்தார். அவள் அவரையே கவனித்தபடி நின்றாள். இரவருக்குமிடையே மௌனம் தூங்கிக் கிடந்தது.

எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும்? “என்ன?” என்று கேட்டார் அவர்.

அக் கேள்விக்குப் பதிலாக வெறும் ஒலிக்குறிப்பு காட்டிச் சிரிக்கும் சிறு பெண் போல அவளும் “தொன்னெ” என்றாள். களுக்கென நகைத்தாள்.

“பாயசம் வாங்கிச் சாப்பிடுவது தானே!” என்று அலட்சியமான ஒரு பதில் கிடைக்கும் என அவள் எதிர் பார்க்கவில்லை . ஊங்?” என்றாள்.

என்ன என்றேன். தொன்னை என்றாய். தொன்னை பாயாசமோ, ரசமோ வாங்கிக் கொள்ள உபயோகப்படுவது தானே? நீ பாயாசமே வாங்கிக் கொள்ளலாம். அது தான் இனிக்கும்” என்று அவர் பேசினார். நீண்ட கால மௌனத்துக்குப் பிறகு, யாரிடமாவது விளையாட்டாகப் பேச வேண்டும் போல் இருந்தது அவருக்கு
அவள் சிரித்தாள். அங்கேயே உட்கார்ந்து விட்டாள். என்னிடம் காசு இல்லையே!” என்றாள்.

“இதுவுமதே….அல்லது இஃதும் அஃதே என்க!”

“உங்கள் பேச்சு எனக்குப் புரியலியே” என்று அவள் சொன்னாள்.

அது ரொம்பப் பேருக்குப் புரியாது என்ற உண்மை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அதனால் தான் நான் அதிகமாகப் பேசுவதில்லை ‘

“நீங்கள் கதை எழுதுகிறவரா?” “உனக்கு எப்படித் தெரிந்தது” என்று ஆச்சரியப்பட்டார் ஞா.பி.

கதை எழுதுகிறேன். காரணத்தை எழுதுகிறேன்னு அலைகிறவங்க தான் இப்படி யெல்லாம் உளறிக்கிட்டிருப்பாங்க எனும் பதிலை அவளிடமிருந்து அவர் எதிர்பாக்க வில்லைதான்

“பரவால்லியே. உனது அனுபவம் அகண்டமானது, ஆழமானது என்று தான் தோன்றுகிறது” என்றார் அவர்.

அவள் பெருமூச்செறிந்தாள்.

எங்கோ போயிருந்த மௌனம் மீண்டும் ஓடிவந்து அவர்களுக்கிடையே உட்கார்ந்து கொண்டது.

அந்நிலைமை சகிக்க முடியாததாக இருந்தது அவருக்கு.

ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்? வேறு யாரையாவது தேடிப் போ. உனக்கு பணம் தானே குறி? என்னிடம் பணமே கிடையாது. அள்ள அள்ள வற்றாது கொடுத்து வந்த அமுத சுரபி மாதிரி பணச்சுரபி ஏதாவது கிடைக்காதா என்று தான் நானும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்..”

தலைகுனிந்து உட்கார்ந்திருந்த அவள் அழுகிறாள் என்று புரிந்தது. ஏன், ஏன் என்று பதைத்தது அவர் உள்ளம்.

“நீ ஏன் இங்கு வந்து அழவேண்டும்? அழுவதற்கு வீட்டு மூலையோ, தெய்வச் சிலையோ அகப்படவில்லையா உனக்கு?” என்றார் அவர். பிறகு ஏன் இப்படிப் பேசினோம் என்ற வருத்தம் ஏற்பட்டது அவருக்கு.

அவள் விம்மி விம்மி அழுதாள்.

மனப்புழுக்கம் தீரும் வரை அவள் அழுது தீர்க்கட்டும் என எண்ணி அவர் சும்மா இருந்துவிட்டார்.

அவளாகத் தேறிய பிறகு, அவள் சோகக் குரலில் முனங்கினாள், “எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். காசு ஆசை பிடித்தலையும் பிசாசு என்றுதான். நான் என்ன பணத்துக்காக மட்டும்தானா இப்படித் திரிகிறேன்? நானும் மனுஷப் பிறவிதானே? நாலுபேரைப் போல வாழ வேண்டும் என்ற ஆசை எனக்குக் கிடையாதா? நாலு பேரோடு பேசிப் பழகிச் சிரித்துக் கலகலகப்பாக இருக்க வேணும் என்ற நினைப்பு எனக்கு இருக்காதா? எனக்கும் மனம் உண்டு, உணர்ச்சிகள் உண்டு என்று யார் நினைக்கிறார்கள்? காசை வீசிவிட்டால், அவர்கள் சொல்படி எல்லாம் இயங்கக் கூடிய – நடந்தாக வேண்டிய – மிஷின் என்றுதானே எல்லோரும் எண்ணுகிறார்கள்?”

அவள் பேச்சில் தொனித்த உண்மை அவர் இதயத்தைத் தொட்டது. ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக அவர் பேசினார். “நீ ஏன் இந்தத் தொழிலில் ஈடுபட்டாய்?” என்று கேட்டார்.

“ஏனா? ஏன் என்றா கேட்கிறீர்கள்? உயிர் வாழ வேண்டுமே அதற்காகத்தான். எலலோரும் ஏதாவது ஒரு தொழில் செய்துதானே பிழைக்க வேண்டியிருக்கிறது. எனக்கு வேறு என்ன தொழில் தெரியும்? என்று வெறிபிடித்தவள் மாதிரிக் கத்தினாள் அவள்.

பிறகு தன் வரலாற்றைச் சொன்னாள். அவள் கதையில் புதுமை எதுவுமில்லை. நகரத்துக்கு வந்தால், சினிமாவில் சேர வாய்ப்புகள் கிட்டிவிடும்; சினிமாவில் சேர்ந்துவிட்டால் சுலபத்தில் புகழும் பணமும் பெறலாம்; பிறகு ராணி மாதிரி வாழ்க்கை நடத்தலாம் என்று ஆசைப்பட்டு, பட்டணத்துக்கு வந்து. எவன் எவனையோ நம்பி ஏமாந்து வஞ்சிக்கப்பட்டு – நாசமாய்ப்போன ஆயிரக்கணக்கான பெண்களில் அவளும் ஒருத்தி. ஒரு தடவை வழுக்கி விழுந்த பிறகு நிமிர்ந்து நிற்க வகை அற்றவளாய், தெம்பற்றவளாய், துணையற்றவளாய் தவித்து, தறிகெட்டு பாழ்பட்டுப் போனவள் அவள். அவளுடைய பிழைப்பும் நடந்து கொண்டு தானிருந்தது.
“யாருடைய பிழைப்புதான் நடக்கவில்லை? யாருக்குத்தான் சாக மனம் வருகிறது?” என்று அவள் கேட்டாள். அவர் தலையசைத்தார்.

அவள் வாழ்விலே அமைதி இல்லை. இன்பம் இல்லை. வளம் இல்லை. பசுமை இல்லை . வறுமை இருந்தது. பயம் இருந்தது… வெறுப்பு இருந்தது. வேதனை இருந்தது. ஒரே வீட்டில் தங்கி இருக்க முடியவில்லை அவளால். சட்டம் அவளை வேட்டையாடியது. சமூக மதிப்பு அவளை விரட்டி அடித்தது.

அவளுக்குச் சாகவும் பயமாக இருந்தது. எல்லோரும் அவளை அவமதித்தனர். அலட்சியம் செய்தனர். கேவலமாக நடத்தினர். அன்புக்காக ஏங்கிய அவளுக்கு அனுதாபம் காட்டக்கூடிய மனித உள்ளம் இந்தப் பரந்த உலகத்திலே ஒன்று கூட இல்லை என்றே தோன்றியது. வெறுமையாகிவிட்ட அவளுடைய வாழ்வில், அவளுக்குத் துணையாகிவிட்ட தனிமை வேதனையாக மட்டும் தானா இருந்தது? சித்திரவதை செய்யும் சைத்தானாக இருந்தது. பயங்கரமான எதிர்காலத்தைக் கண்முன் நிறுத்தி அவளை அலற வைக்கும் பூதமாகத் தோன்றியது. அவளைப் பாடாய்ப்படுத்தும் சித்தப் பிரமையாக – மனநோயாக – மாறி வளர்ந்தது அது. அதிலிருந்து தப்புவதற்காகத்தான் – தன்னிலிருந்து தானே நழுவி ஓடுவதற்காகவே அவள் ஆண்களைத் துரத்தித் திரிந்தாள். இம் முயற்சியில் காசு கிடைத்தது. எனினும் அதுவே அவளுடைய முக்கிய நோக்கமாக அமைந்ததில்லை.

இதை அவள் ஒரு மாதிரியாகக் சொல்லி முடித்தாள். நான் பாவிதான். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆனால் இந்த உலகத்திலே நான் மட்டும் தானா பாபி? பணம் பெற்றிருப்பவர்கள், அதன் ஒளியினால் மற்றவர் கண்களைக் கூசவைத்துவிட்டு, எவ்வளவோ பாபங்களைச் செய்து கொண்டிருக்கிறார்களே! அவர்களை ஏன் யாரும் ஒதுக்கி வைக்கவில்லை? ஏன் வெறுப்பதில்லை?” என்று அவள் கேட்டாள்.

பதிலை எதிர்பாராமலே கேட்கப்படும் எவ்வளவோ கேள்விகளில் இவையும் சில என்று எண்ணினார் ஞா.பி.

தங்களைப்போல் வாழக் கற்றுக் கொள்ளாதவர்களை – வாழமுடியாதவர்களை – வாழ விரும்பாதவர்களை எல்லாம் பாபிகள் என்றுதான் மற்றவர்கள் நினைக்கிறார்கள். சிந்திப்பதிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டவர்களும், சிந்தனைக்குச் சீட்டுக் கிழித்து விட்டவர்களும் மலிந்த மனித ஜாதியிலே சிந்தனையாளன் கூட ஒரு பாபிதான்.

“நான் கூட ஒரு பாபிதான்” என்று சொன்னார் ஞானப் பிரகாசம்.

“உங்களைப் பார்க்கும் போதெல்லாம், பாவம் செய்யத் தெரியாத சாதுக் குழந்தை என்று அல்லவா நான் எண்ணினேன்” என்றாள்.

அவர் ஒன்றுமே சொல்லவில்லை.

உங்கள் அருகே இவ்வளவு நேரம் இருந்ததில் எனக்கு எவ்வளவோ சந்தோஷம் ஏற்பட்டுவிட்டது. உங்களோடு பேசியதில் எனக்கு எவ்வளவோ வேதனை கரைந்தது போலிருக்கிறது. உங்களிடம் எனக்கு மரியாதையும் அன்பும் ஏற்பட்டுவிட்டன். உங்களை நான் எத்தனையோ தினங்களாகக் கவனித்து வந்திருக்கிறேன், இன்று தான் உங்கள் அருகில்வர எனக்குத் துணிவு பிறந்தது…”

அவள் பேசிக்கொண்டே இருந்தாள். அவருக்கும் அது புதிய அனுபவமாகத்தான் இருந்தது.

அன்றுவரை இருட்டில் தனிமையில் அவர் அருகே அமர்ந்து எந்தப் பெண்ணும் பேசியதில்லை. எவளும் அழுததில்லை ஒருத்திகூட முணுமுணுத்ததில்லை. ஒரு பெண்ணும் சிரித்ததில்லை.

அவளுடைய “சாமிப்பியம் அவருக்கு இதமாக இருந்தது. இனிமை தந்தது. குளுமை புகட்டியது. உள நிறைவு கொடுத்தது அவரை வதைத்த தனிமை எனும் கொடு நோய்க்கு அவளே ஒரு மருந்தாக வந்து சேர்ந்திருந்தாள். அது அவளுக்குத் தெரியாது.

நான் உன்னை மதிக்கிறேன். நான் உன்னைப் போற்றுகிறேன். உனக்கு நான் நன்றி கூறுகிறேன்.

ஏதோ வேத வாக்கியத்தை உருப் போடுவதுபோல அவர் உள்ளம் ஜெபித்துக் கொண்டிருந்தது.

ஏசுமுனி மரியா மகதலேனாளை மதித்ததுபோல; புத்தன் ஆம்ரபாலியை கௌரவித்தது போல ; உபகுப்தன் வாசவத்தத்தைக்கு நன்றி அறிவித்தது போல….

“சரி, நேரமாகிவிட்டது. நான் போய்வருகிறேன். எப்பொழுதாவது இத்தகைய பாக்யம் கிடைக்க நீங்கள் அருள் புரிவீர்கள் என்று நம்புகிறேன். ஊம்? மறுக்க மாட்டீர்களே?”

“நீங்கள் தான்…’ என்று அவர் உதடுகள் வரை வந்துவிட்டது வார்த்தை. அவர் சமாளித்துக் கொண்டார். “நீ தான் மனமிசைந்து அருள்புரிய வேண்டும்” என்றார்.

“தங்கள் சித்தம், என் பாக்கியம்” என்று கூறிச் சிரித்தாள் அவள். ள அங்கிருந்து போக மனமில்லாதவளாய் நகர்ந்தாள். திடீரென்று நினைத்துக் கொண்டவராய்,
“ஆமாம் உன் பெயர்?” என்று கேட்டார் ஞா.பி.

“உங்களுக்கு பிடித்தமான பெயரைச் சொல்லி அழைக்கலாம். எனக்கு இதுவரை எத்தனையோ பெயர்கள் வந்து போய்விட்டன. விலாசம் மாறும் போதெல்லாம் என் பெயரும் மாறிவிடும். பிரேமா வசந்தா, பத்மா, சகுந்தலா… இப்படி அழகு அழகான பெயர்கள் எனக்கு உண்டு …”

“உன்னை நான் வசந்தா என்றே கூப்பிடுவேன். ஏனெனில் நீ வசந்தத்தைப் போல் இனியவளாக இருக்கிறாய். குளுமை தருகிறாய்…”

“நன்றி, மகிழ்ச்சி, வணக்கம் என்று கூறிக் கும்பிட்டு விட்டு நகர்ந்தாள் அவள். பார்வைப் புலனுக்கு எட்டாதவளானாள்.”

இருள் கனத்துக் கடந்தது நெடுகிலும்….

அறியாமை இருளிலே உண்மையைத் தேடிப்பிடிக்க அலைகின்ற அறிவுக் கதிர் மாதிரிச் சுற்றிச் சுழன்று திரிந்து கொண்டிருந்தது லைட் ஹவுஸின் ஒளிக்கற்றை.

– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் – முதற் பதிப்பு ஆகஸ்ட், 2002 – பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *