இரட்டைக்கிளவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 13,585 
 

தமிழாசிரியர் தங்கத்தமிழன் காலையில் இருந்தே கடு கடுவென இருந்தார். அவர் ஒரு வாரமாக படிச்சு படிச்சு சொல்லிக் கொடுத்த இரட்டைக்கிளவி வகுப்பில் யாருக்குமே புரியவில்லை என்பதுதான் அவர் கோபமே.

வீட்டில் உட்கார்ந்து, காற்றில் பட படவென்று அடித்துக் கொண்டிருந்த மாதாந்திரத் தேர்வுத் தாள்களை மளமள வென திருத்த ஆரம்பித்தார். இரட்டைக்கிளவிக்கு மாணவர்கள் எழுதியிருந்த பதிலைப் படித்துப் படித்து பல்லை நற நற வென்று கடிக்க ஆரம்பித்து விட்டார். சின்ன சின்ன தப்பாயிருந்தால் விட்டு விடலாம். எல்லாமே முழுக்க முழுக்க தப்பாயிருந்ததால் எரிச்சல் எரிச்சலாய் வந்தது. பார்த்துப் பார்த்து திருத்தி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

இரட்டைக்கிளவிபோதாத குறைக்கு காலையில் கல்லு கல்லாய் இருந்த இட்லிக்கு வைத்த சாம்பார் தண்ணி தண்ணியாய் சல சல என்று இருக்கவே மனைவியிடம் டாம் டூம் என்று அடுப்பில் வைத்த குழம்பு போல எகிறி எகிறிக் குதித்தார்.

மனைவியோ திருப்பி பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டார். நானும் ஒரு வாரமா கேட்டுக் கேட்டுப் பார்த்துட்டேன் நீங்க துவரம் பருப்பும் உளுந்தம் பருப்பும் வாங்கித் தரவே இல்லை நான் என்ன செய்ய ? பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மிச்சம் இருக்கிறதை எல்லாம் பொறுக்கிப் பொறுக்கிப் போட்டு கடனே கடனேன்னு ஒரு சாம்பார் வச்சுட்டேன்.

ஆமா ! எப்பப் பார்த்தாலும் நானே ஓடி ஓடிப் போய் எல்லாத்தையும் வாங்கி வாங்கிப் போடறேன். நீ இப்படியே தூங்கித் தூங்கி எழுந்திரு. ஆனால் இப்படி ஓங்கி ஓங்கி கத்துறதுல மட்டும் கொறச்சலில்லை.

மனைவியும் விடவில்லை “எல்லாம் என் தலை விதி, இந்த வீட்டுல நான் என்னதான் பாத்து பாத்து செஞ்சாலும், பொறுத்துப் பொறுத்துப் போனாலும் இப்படித்தான் சிடு சிடுன்னு முஞ்சியைக் காட்டிட்டு வள் வள்ளுன்னு விழுவீங்க”ன்னு சொல்லி கண்ணை கசக்கி விட்டுப் போய் விட்டார்.

பள்ளிக்குப் போவதற்காக தெருவில் இறங்கியதுதான் தாமதம். கறு கறு வென்றிருந்த மேகம் சட்டுன்னு மாறி சின்ன சின்ன தூறலாய் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் மழை சட சட வென கொட்ட ஆரம்பித்து விட்டது. சுத்தி சுத்தி அடிச்ச காத்தும், கொட்டு கொட்டுனு பெய்த மழையும் போதாதுன்னு குடை வேறு தொற தொறன்னு ஒழுக ஆரம்பிடுச்சு. வேக வேகமாய் நடந்து ஒரு வழியாய் வகுப்புக்குள் நுழைவதற்குள், தங்கத்தமிழன் தொப்பல் தொப்பலாய் நனைந்து விட்டார். வெள்ளை வெளேர் என்று இருந்த வேட்டி சட்டை எல்லாம் திட்டுத் திட்டாய் சகதிகள்.

உள்ளே நுழைந்து வகுப்பறையைப் பார்த்ததும் முகம் ஜிவு ஜிவு என்று சிவந்தது அவருடைய ரத்த அழுத்தம் கிடு கிடுவென உயர்ந்தது. அங்கே பசங்களும் பொண்ணுகளும் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். கத்தி கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த பசங்களும் சிரித்து சிரித்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த பெண்களும் தமிழாசிரியரைப் பார்த்ததும் கப் சிப் என்று அடங்கி, அவரவர் இடத்திற்கு குடு குடுவென ஓடிப் போய் உட்கார்ந்தனர்.

தேர்வுத்தாள்களை தூக்கி மேசை மேல் எறிந்த தமிழாசிரியர் பட படவென பொரிந்து தள்ளினார். இதுக்கொண்ணும் கொறச்சலில்லை ! ஒரு வாரமா இரட்டைக்கிளவி சொல்லித் தாரேன் ரெண்டு பேரைத் தவிர எல்லாம் பெயில். பசங்கள்ள ராஜ ராஜனும் பொண்ணுங்கள்ள தேவ தேவியும் தான் பாஸ். மத்த எல்லாம் பெயில்.

நான் மாங்கு மாங்குன்னு சொல்லிக் கொடுத்தாலும், கழுதை மாதிரி காள் காள்னு கத்தினாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக்கிட்டு ஊம் ஊம்னு கேட்டுக்கிட்டு இருங்க ! ஆனா பரிட்சையிலே மட்டும் முட்டை முட்டையா வாங்கி ஃபெயில் ஆகுங்க ! என்று வாங்கு வாங்குன்னு வாங்கினார்.

ஒரு பையன் மட்டும் எழுந்து நின்று ,” சார் ! நீங்க வகுப்பில சொல்ல சொல்ல நாங்களும் கேட்டுக் கேட்டுக் கவனிச்சிட்டுத்தான் இருக்கோம், நீங்க போர்டுல எழுத எழுத நாங்களும் பாத்துப் பாத்து எழுதிட்டுதான் இருக்கோம். என்னதான் விழுந்து விழுந்து படிச்சாலும் பரிட்சையிலே கேள்வித்தாளைப் பார்த்தவுடனேயே பயந்து பயந்து போயிடுறோம் சார் ! உடம்பெல்லாம் வேர்த்து வேர்த்துக் கொட்டி, வெட வெடன்னு வந்து எல்லாத்தையும் மாத்தி மாத்தி எழுதிடுறோம் சார் “ என்றான்.

கஷ்டம் கஷ்டம்னு தலையில் அடித்துக் கொண்ட தமிழாசிரியர் தங்கத்தமிழன் மீண்டும் ஒரு முறை இரட்டைக்கிளவியை மாணவர்களுக்கு விளக்க ஆரம்பித்தார்.

ஒரு சொல் தரும் தாக்கம், கெடாது வளரும் பொருட்டு, அதை மேலும் மிகுதி செய்யும் பால், தனிச் சொல்லின் தன்மை குன்றாது, கூட்டுச்சொல்லாய் குறித்துரைப்பதுதான் இரட்டைக்கிளவி என்று ஆரம்பித்தபோது

வழக்கம்போல, இப்போதும், மாணவர்களுக்கு இரட்டைகிளவி சுத்தமாகப் புரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *