இப்படியும் ஒருத்தியா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 8,736 
 

மனோகரி வெகு நேரமாய் அந்த பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கிறாள். முக்கால் மணி நேரமாய் காத்திருந்ததில் கால்கள் கடுக்கத் தொடங்கியதோடு, காலையில் வாங்கிய புதிய மை வேறு கண்ணைக் கரிக்கிறது. மணி இரவு ஒன்பதேகாலை தாண்டியும், வைகாசி மாதத்து பகல் வெப்பத்தின் மிச்சம், அவள் முகத்து, பௌடர் பூச்சை வியர்வையால் திட்டு திட்டாக்கிக் கொண்டிருந்தது. இவற்றோடு பாழும் பசியும் சேர்ந்து கொண்டு அவளை பாடாய்ப் படுத்தியது. மனோகரி காத்துக் கொண்டிருந்தது பஸ்ஸுக்காக அல்ல. கஸ்டமருக்காக.. கடவுளே! எவனையாவது சீக்கிரம் அனுப்பேன்!

‘ஏஜெண்ட்’ என்று ஒருவன் இருந்தால், இப்படி நிற்க வேண்டிய அவசியமில்லை. அவன் நைச்சியமாகப் பேசி வாடிக்கையாளர்களை பிடித்து வருவான். ஆனால், அதற்கான கூலி அல்லது கமிஷன் மிக மிக அதிகம். அரைமணி நேரம் சாராய நெடியும், பீடி நாற்றமும், வியர்வை கசகசப்பும் நிறைந்த ஆண்களோடு நரகத்தில் உழன்று சம்பாதிப்பதில் பாதியை ஏஜண்டுக்கு கமிஷனாகக் கொடுப்பது என்ன நியாயம்? அதனால்தான் எவனும் வேண்டாமென்று தனியே நின்று ஆள் பிடித்துக் கொண்டிருக்கிறாள் மனோகரி. இங்கே வியாபாரியும் அவளே. வியாபாரப் பொருளும் அவளே.

குள்ளச்சாமி சந்தில் மனோகரியுடன் வசித்த சக தொழிலாளிகள் புவனா, ரோஸ், பாத்திமா, இவர்களுக்கெல்லாம் ஏஜெண்ட், ஹரிபாபு. தொழில் சற்று சுணக்கமாக இருக்கும் போதெல்லாம் கடனும் கொடுப்பான் – வட்டிக்குத்தான். அதையும் இது நாள் வரை மனோகரி வாங்கியதில்லை. அவள் வித்தியாசமானவள். அதனால்தானோ என்னவோ, வயிற்றுக்குள் பசியின் கோர நர்த்தனம் அவளுக்குப் பழக்கமாகிப் போயிருந்தது.

மனோகரி சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டாள். இரண்டு நடுத்தர வயதுப் பெண்களும், நான்கைந்து ஆண்களும் தான் இருந்தார்கள். ஆண்களில் ஒருவன் மட்டும், மூக்குக் கண்ணாடியை கழற்றித் துடைக்கும் சாக்கில் இரண்டு மூன்று முறை மனோகரியை அடிக்கண்ணால் பார்த்தான்.

இவன் படுவானோ? வருவதென்றால் சீக்கிரம் வந்துத் தொலையேன், இன்றைய என் நரகம் சீக்கிரம் முடியட்டும்! வந்தாலும் பேரம் பேசுவானோ? பேரமோ பேரமில்லையோ, இந்தப் பாடாய்ப் படுத்தும் வயிற்றுக்குக் காசு என்று ஒன்று கிடைத்தால் சரி.

மீண்டும் மீண்டும் பசியின் அக்கினிப் பிராண்டல். ‘அடங்கு’ என்றால் அடங்கவா போகிறது? இல்லையென்றால், ‘இடும்பை கூர் வயிறே, உன்னோடு வாழ்தல் அரிது’ என்று ஔவை தன் வயிற்றை சபிப்பாளா?

கடைசியில் கண்ணாடிக்காரன் ஏமாற்றி விட்டான். பஸ்ஸில் ஏறிப் போகும் போதும் மனோகரியை பார்த்துக் கொண்டேதான் போனான். கையில் காசில்லையோ? காத்திருக்கிறேன். நாளை காசுடன் வாடா மன்மதா!

சாதாரணமாக இது போன்ற ஏமாற்றங்கள் அவளுக்கு பழக்கமானதுதான். ஆனால் பசியின் பாதிப்பினாலோ என்னவோ, இன்று அது அவளுக்கு எரிச்சலூட்டியது. சற்று மயக்கமாயிருந்தது போல் தோன்றிற்று. எங்காவது சாய்ந்தபடி நின்றால் பரவாயில்லை என்று நினைத்தாள். அதற்கென அந்த விளக்குக் கம்பத்தைத் தேடும்போதுதான், தாடியுடன் ஒரு வாலிபன் ஏற்கனவே அதில் சாய்ந்து தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

இவன் படுவானோ?

மெதுவே அவன் இவள் பக்கம் நகர்ந்தான். மனோகரி அங்கு நின்றிருந்த ஆட்களிடமிருந்து இன்னும் சற்றுத் தள்ளி நகர்ந்தாள். தலை குனிந்து மெதுவே அடிக்கண்ணால் பார்த்தாள். அவன் அருகில் வந்து விட்டான். தரையை பார்த்தபடி, ‘க்குக்கும்’ என்று சன்னமாய் கனைத்தாள். இது ஒரு சமிக்ஞை. அவனும் இப்போது அதே போல் குரலெழுப்பினான். சரி, அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கலாம்.

‘போலாமா?..’ என்று அக்கம் பக்கம் கேட்காதவாறு, அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் கேட்டாள்.

‘ம்..’

அப்பா! கடைசியில் கடவுள் கண் திறந்து விட்டார். அகோரப் பசியிலிருந்து விடுதலை!

‘வாங்க..’

‘எங்கே போகணும்?’ அவளைத் தொடர்ந்த அவன் குரல் தாழ்த்திக் கேட்டான்.

‘குள்ளச் சாமி சந்து.. தெரியும் இல்லயா?’

‘ம்ம்..’

‘ஆட்டோ பிடிப்பமா?’ மனோகரி கேட்டாள்.

‘எதுக்கு? பக்கத்துலத் தானே, நடந்துடலாம்..’

ஐயோ! நடக்கவா? பாழும் பசி வயிற்றை முறுக்குகிறதே.

‘இல்ல.. என்னால…’ தயங்கினாள்.

‘என்ன சொல்லுங்க..’

‘நடக்க முடியாது..’

‘ஏன்? ஒடம்புக்கு முடியலையா?’

ஆமாம் என்று சொல்லவா, அல்லது உண்மையைச் சொல்லவா? ஆமாம் என்று சொல்லி, அதனால் அவன் கழற்றிக் கொண்டு விட்டால்? பசியோடு இன்னமும் என்னால் மன்றாட முடியாது கடவுளே. உண்மையை சொல்வதே சரி.

‘காலைலேருந்து சாப்பிடலை.. பசி..’

‘ஐயோ! பசியா?.. பசியோட….. சரி, சரி வாங்க.. மொதல்ல ஏதாவது சாப்பிடுங்க..’

‘இல்லங்க, வேணாம்.. நடந்தே போயிடலாம்..’

வாலிபன் சம்மதிக்கவில்லை. சற்றுத் தள்ளி இருந்த முனியாண்டி விலாஸுக்குக் கூட்டிப் போனான். வாசலில் ‘ணங..ணங.’ என சத்தத்துடன் கொத்து பரோட்டா போட்டுக் கொண்டிருந்தவன் கையின் வேகத்தைக் குறைத்து இவர்களை சந்தேகமாகப் பார்த்தான்.

வாலிபன் மனோகரியை உட்காரச் சொல்லி, அவளெதிரே அமர்ந்தான். தனக்கு டீயும் அவளுக்கு மட்டன் பிரியாணியும் ஆர்டர் செய்தான்.

‘எனக்கும் டீ போதுங்க..’ என்றாள் மனோகரி.

‘இல்ல. பிரியாணி சாப்பிடுங்க..’

சர்வர் பிரியாணியை வாலிபனுக்கு எதிரில் வைக்க, அதை மெதுவே மனோகரிக்கு எதிரில் நகர்த்தினான் அவன். பாதி முட்டை உள்ளே புதைந்திருக்க, மஞ்சளும் இளஞ்சிவப்புமாய் மட்டன் பிரியாணி மனோகரியின் வாயில் நீர் ஊற வைத்தது. வாலிபன் ‘சாப்பிடுங்க’ என்று தலையால் சைகை செய்ய, அதற்காகவே காத்திருந்தவள் போல, முட்டையையும் பிரியாணியில் பாதியையும் தனக்கெதிரே இருந்த காலி பிளேட்டில் தள்ளிக் கொண்டாள்.

சோறும், முட்டையும், இறைச்சியும், பிரவாகமாய் சுரந்த உமிழ் நீருடன் கலந்து பற்களில் அரைபட, அதற்கு தோதாய் நாக்கு லாவகமாய் அவற்றைப் புரட்டிக் கொடுக்க, நாவின் சுவை நரம்புகள் அத்தனையும் புளகாங்கிதமாய்… ஆஹா, இது சொர்க்கம். பெயர் தெரியாதவனே, உனக்கு நன்றி என்று மனோகரி நீர் கோர்த்த கண்களால் அவனை ஏறிட்டுப் பார்க்க, தண்ணீர் டம்ளரை அவன் சுட்டிக் காட்டினான். பசியின் அகோரப் பிடி மெதுவே மெதுவே அவளிடமிருந்து தளர்ந்து கொண்டிருந்தது.

ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் இப்போது மனோகரி தெம்பாக, ‘வாங்க, போகலாம்’ என்றாள். சொர்க்கம் முடிந்தது, இனி நரகத்தைக் கடக்க வேண்டும்.

‘இல்ல.. நீங்க போங்க.. நான் நாளைக்கி வர்றேன்..’ என்றான் வாலிபன்.

நாளைக்கா? என்ன மனிதன் இவன்? முதலாவது, மனிதன் தானா இவன்? நின்ற இடத்தில் கண்ணாலேயே பெண்ணை துகிலுரித்துப் போடும் துச்சாதனர்கள் நடுவில் இப்படி ஒருவனா? நரம்பும், சதையும், ரத்தமும் ஓடும் மனிதப் பிறவிதானே இவன்?

இத்தனை கேள்விகளோடும் அவனையே பார்த்தபடி நின்றிருக்கிறாள் போலும்.

‘ஏங்க அப்படி பாக்கறீங்க? இப்பத்தான் சாப்பிட்டிருக்கீங்க.. போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க.. நான் எங்கே போறேன்?.. நாளைக்கு வர்றேன்..’

இன்னமும் மனோகரியால் பேச முடியவில்லை. விக்கித்து நின்றிருந்தாள்.

‘எனக்குத் தெரியுங்க.. பசின்னா என்னன்னு எனக்குத் தெரியும்.. நான் நெறைய அனுபவிச்சிருக்கேன்.. கொலப் பட்டினி கெடந்து பசியாறினப்புறம் எப்படியிருக்கும்னும் எனக்குத் தெரியும்..’

‘இல்லைங்க. நான் சாப்பிட்ட கடனை என்னால காசா திருப்பிக் கொடுக்க முடியாது.. ‘

‘புரியுது.. அதைப் பத்தி கவலைப் படாதீங்க.. நான்தான் நாளைக்கி வர்றேன்னு சொல்றேனே.. இதே நேரத்துல இதே பஸ் ஸ்டாப்புக்கு வர்றேன்..’ என்றபடி அவள் பதிலுக்குக் காத்திராமல் அந்த வாலிபன் செல்லவாரம்பித்தான்.

ஓ, இப்படியும் ஒருவன் இருக்க முடியுமா? இலையைப் போட்டவுடனேயே பாயசத்துக்குப் பறக்கும் ஆண்களின் நடுவில்… ஐயோ அவன் பெயரைக் கூட நான் தெரிந்து கொள்ளவில்லையே.

‘என்னங்க..’

நின்று திரும்பினான்.

‘உங்க பேர்..’

‘சுதாகரன்..’

அடுத்த நாள் அந்த பஸ் ஸ்டாப்பில் அவள் காத்திருந்தாள். சுதாகரன் வரவில்லை. மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஹரிபாபு வந்தான். ‘வட நாட்டுக்காரர் – சுளையாய் நானூறு ரூபாய் – எனக்கு கமிஷன் வேண்டாம் – அவரிடமே வாங்கிக் கொள்கிறேன் – மற்ற மூன்று பேரும் எங்கேஜ்டு – அதனால்தான் நீ’ என்றான். முடியாது. சுதாகரனின் கடனை அடைத்த பிறகுதான் இன்னொருவன்! ‘ப்போடீ, பெரி…ய்ய …ர் நீ’ என்று திட்டிவிட்டுப் போனான் ஹரிபாபு.

அதற்கு அடுத்த நாள்.. அதற்கும் அடுத்த நாள்… ஊஹூம், சுதாகரன் வரவேயில்லை. வேறு எவன் எவனோ வந்தான். காசு வேண்டும்தான். ஆனால் சுதாகரனுக்கு பட்ட கடனை தீர்க்காமல், வேற்றுக் கை த்ன் மீது படக் கூடாது.. நிச்சயம் கூடாது. கடைசி கடைசியாய் டிரங்குப் பெட்டியின் அடியில் வைத்திருந்த ஒரே பட்டுச் சேலையை விற்றாள். முன்னூத்திச் சொச்சம் ரூபாய் வந்தது. பரவாயில்லை, ஒரு வாரம் கூட ஓட்டி விடலாம். அதற்குள் வராமலா போய் விடுவான்?

உறங்கியும் உறங்காமலுமாக மனோகரி தன் பாயில் புரண்டு கொண்டிருந்தாள். அருகிலிருந்த மசூதி அனைவரையும் தொழுகைக்கு எழுப்பியது. ஓ, விடிந்து விட்டது. எழுந்து முகம் கழுவி தெரு மூலையில் உள்ள டீக் கடைக்கு சென்று, தள்ளி நின்று டீ ஒன்று சொன்னாள். பெஞ்சில் உட்கார்ந்திருந்த பெரியவர் தமிழ் தினசரி ஒன்றை கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். தற்செயலாக மனோகரியின் கண்கள் அவரது வலது கை சுட்டுவிரலுக்கு அருகிலிருந்த படத்தை… அது… அது.. ஆ!

காசு கொடுத்து அந்த தினசரியை வாங்கி வேகமாக அந்தப் பக்கத்தை புரட்டினாள். ஐயோ!

குள்ளச்சாமி சந்தை விட்டு இதோ மனோகரி வெளியேற தயாராகி விட்டாள். கடைசியாக ஒரு முறை அந்த நரகத்தை சுற்றி வரப் பார்த்தாள். யாரிடமும் சொல்லாமல் போகிறோமே என்று அவளுக்கு ஆதங்கம்தான். நேற்று இரவு மூவரும் ஓவர்-டைம் பார்த்திருப்பார்கள் போலும், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். இனி இது போன்ற நரகத்தில் நிச்சயம் மாட்டிக் கொள்ள மாட்டேன்; ஆனாலும் வேறு விதமான ஏதோ நரகம் எனக்காக எங்கோ காத்திருக்கும். படிகளில் இறங்குகையில் மனோகரியின் டிரங்குப் பெட்டி வாசற்படியில் இடிக்க, அந்த சத்தத்தில் ரோஸ் எழுந்து கொண்டாள்.

‘ஏய் மனோ, எங்கேடி பெட்டியோட போறே? ஐயய்யோ, என்னடி கோலம் இது? வெள்ளைப் பொடவை, நெத்தியில பொட்டைக் காணோம், கைல வளையலைக் காணோம்? நம்ம வாழ்க்கைல இந்த டிரஸ் கிடையவே கிடையாதுடி.. என்ன ஆச்சு உனக்கு?’

படியிறங்கிய மனோகரி அப்படியே நிற்க, ரோஸின் குரல் கேட்டு மற்ற இருவரும் எழுந்து ஓடி வந்தனர். மனோகரியின் கோலத்தைப் பார்த்து திகைத்து நின்றனர்.

‘ஏய்.. பாருங்கடி.. இவளுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு போல..’ என்று ரோஸ், புவனாவையும். பாத்திமாவையும் துணைக்கழைத்தாள்.

‘புருசன்னு ஒருத்தன் இருந்து அவன் செத்துப் போனாத் தானேடி இதெல்லாம்..?’ புவனா கேட்டாள்.

‘என் புருசன் செத்துப் போயிட்டான். இதோ பாருங்க..’ மனோகரி தினசரியில் இருந்த ஃபோட்டோவைக் காண்பித்தாள்.

சுதாகரன் ஒரு லாரி விபத்தில் இறந்து விட்டதாக, அவனுக்கு அஞ்சலி செலுத்தி அவன் நண்பர்கள் வெளியிட்டிருந்த விளம்பரம் அது.

‘தன் ஒடம்புப் பசியை ஒதுக்கிட்டு, என் வயித்துப் பசியை ஆத்தணும்னு நெனைக்கிறவன் புருசன் மட்டும் தானே? அன்னைக்கு அதை அவர் நெனைச்சாரு, செஞ்சாரு.. அதுக்கு நான் கடன் பட்டிருக்கேன். அந்தக் கடனை என்னால இனி தீர்க்க முடியாது.. கடைசி வரைலும் மனசளவுலேயும் உடம்பளவுலேயும் அவருக்கு பொண்டாட்டியா இருக்கிறதுதான் அதுக்கு நான் செய்யுற பிராயச்சித்தம்.’

‘பிராயச்சித்தம்’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் மற்ற மூவரும் விழித்துக் கொண்டிருக்க, மனோகரி கடைசி முறையாக அந்த வீட்டின் படியை விட்டு இறங்கி, குள்ளச்சாமி சந்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள். அவள் வித்தியாசமானவள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *