இதை என்னவென்று சொல்வது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 10, 2022
பார்வையிட்டோர்: 3,834 
 

காந்தி நகர் என்பது விஜயவாடாவில் எப்போதும் பரபரப்புடன் இயங்கும் ஒரு வணிக மையம். அங்கு லெபாக்ஷி காட்சி அறைக்கும் சதர்ன் க்ராண்ட் ஹோட்டலுக்கும் நடுவில் சுருக்கி மடித்துப் பொட்டலம் கட்டி வைத்தது போல இருந்தது அந்தப் பழங்காலத்துக் கட்டிடம். அதைச்சுற்றி அடர்த்தியான கிளைகளுடன் பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த கொண்டசிந்தா மரக்கூட்டங்கள் ஏற்கனவே சிதைந்துகொண்டிருந்த அக்கட்டிடத்தின்மீது ஆக்கிரமிப்பதுபோல கிளைகளைப் பரப்பி விரித்திருந்தன. நான் அந்தக் கட்டிடத்தையோ, மரவரிசையில் செருகப்பட்டதுபோல் இருந்த அதன் சிறிய நுழைவுவாயிலையோ முதலில் கவனிக்கவில்லை; கார் உள்ளே நுழையும்போதுதான் பார்த்தேன்.

‘வந்துவிட்டோம். இதுதான் டிஸ்ட்ரிக்ட் ட்ரெஷரி. லெட்ஸ் கெட் ஆஃப்,’ என்றான் ராமராஜு. காரை ஒரு மரத்தின்கீழ் சாணக் குவியல்களுக்கு நடுவில் ஜாக்கிரதையாகப் பார்க் செய்துவிட்டு இருவரும் கீழே இறங்கினோம்.

இறங்கியவுடன் நான் ஆச்சர்யத்தில் மூச்சைப் பிடித்துக்கொண்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த வளாகத்தைப் பசுமை போர்த்தியிருந்தது. சுற்றி இருந்த கொண்டசிந்தா மரங்களுக்கு நடுவில் அரசு, வேம்பு, நாவல், மா என்று மரங்கள் போட்டிபோட்டுக்கொண்டு காட்டுத்தனமாக வளர்ந்திருந்தன. அவற்றின் கீழே இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பழங்காலத்துக் கட்டிடங்கள்; அவற்றில் அரசாங்க அலுவலகங்கள். ‘இந்தக் கான்கிரீட் காட்டில் இப்படி ஒரு சுந்தர வனமா! பாலைவனச் சோலை மாதிரி அல்லவா இருக்கிறது! நகர விரிவாக்கத்தில் இது எப்படி தப்பித்தது, ராமராஜு?’

‘நான் பாலைவனச் சோலையையோ, வேறு எந்த எழவையோ பார்த்ததில்லே. அது எப்படியிருக்கும்? கேட்பாரற்ற மாடுகளும், சாணக்குவியல்களும், கோமய நெடியும், மனுஷ மூத்தர நாத்தமும், இடிஞ்சு விழற கட்டிடங்களுமா இருக்குமா? அப்படீன்னா, இந்தக் கண்ராவி எடம் பாலைவனச் சோலைதான்.’

ராமராஜூவுக்குத் திட்டாமல், சபிக்காமல் பேசத்தெரியாது. அவன் வேதியியல் பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்றவன். கெமிஸ்ட்ரியைக்கூட இப்படித்தான் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தான் என்று கேள்வி.

‘நீ ஒரு ஸினிக், ராமராஜு. இங்கிலீஷில் நகைமுரணோட சொல்லணும்னா, ஏமியபுல் ஸினிக். எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் காடு மாதிரி வளர்ந்திருக்கும் இந்த மரங்களைப் பாத்து ஆச்சர்யப்பட்டு பாலைவனச்சோலைன்னு சொன்னேன். இது மே மாஸம். வெளியில எப்படி கொளுத்தறது! இன்னிக்கு விஜயவாடாவில் நாப்பத்திமூணு டிகிரீன்னு கூகுல் சொல்றது. இங்க முப்பத்தியெட்டு கூட இருக்காது. அது இருக்கட்டும், நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லையே. நகர விரிவாக்கத்தில் இந்த இடம் எப்படித் தப்பித்தது?’

”சுற்றுச்சூழல்காரர்களின் ஆர்வக்கோளாறினால் தப்பித்தது. ஒரு மரத்தில கத்தியை வெச்சா, நாலு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வந்து நிக்கறாங்க. இது கமர்ஷியல் ஏரியா. இவ்வளவு வணிக வளாகங்களுக்கு நடுவில இங்க எதுக்கு தோப்பும் துரவும்? இந்தக் காட்டை எப்பவோ அழித்து இந்த இடத்தை கமர்ஷியலா டெவலப் பண்ணியிருக்கணும். அப்படிப் பண்ணினா கார்ப்பரேஷனுக்கு எவ்வளவு வருமானம் வரும் தெரியுமா? அதை விட்டுட்டு வருமானம் இல்லேனு அழறான் முனிசிபல் கமிஷ்னர். குப்பையை வார்ரத்துக்கு யூசர் சார்ஜ்ஸ்னு சொல்லி மாசம் நூத்தியிருபது ரூபா வரி போட்டுண்டிருக்கான்…. சாணி, சாணி, தரையைப் பாத்து வா! பாழாப்போன மரங்களையே பாத்துண்டு வராதே; வழியெல்லாம் சாணி! வாட் அ டிஸ்கஸ்டிங் பிளேஸ்! சரி, முனிசிபல் கார்ப்பரேஷன் நாசமாப் போகட்டும், இப்ப நாம வந்த வேலைய கவனிக்கலாம், வா,” என்னைக் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு அரசாங்கக் கருவூல அலுவலகத்தினுள் நழைந்தான்.

அது ஒரு பரிதாபகரமான பழைய கட்டிடம். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். இந்த சுவர்கள் சுண்ணாம்பை எப்போது பார்த்திருக்கக்கூடும்? ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பு இருக்குமா? ஏடாகூடமாகக் கட்டப்பட்டிருந்தாலும், கட்டிடத்தில் ஏகப்பட்ட அறைகள் இருந்தன. அறைகளின் இருட்டுடன் தோல்வியை ஒப்புக்கொண்டு அழுதுவடிந்துகொண்டிருந்தன குழல்விளக்குகள். எல்லா அறைகளிலும் கடந்த காலங்களுக்குச் சொந்தமான, பெரியதும் சிறியதுமான மேஜைகள். அவற்றின்மீதும், அவற்றைச் சுற்றியும், அரசாங்க அலுவலகங்களில் மட்டுமே பார்க்கக்கூடிய “அர்ஜெண்ட்,” “ஆர்டினரி” என்ற அட்டைகளுடன் கூடிய ஏராளமான ஃபைல்கள். ஒவ்வொரு மேஜைமேலும் சுற்றியிருக்கும் புராதனங்களையெல்லாம் கேலிசெய்வதுமாதிரி ஒரு கணினி. அதன் எதிரில் ஒரு பணியாளர். ஒவ்வொரு பணியாளரைச் சுற்றியும் எங்களைமாதிரி ஒன்றிரண்டு ஓய்வூதியம் பெறுபவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். பாதி மூடிய ஒரு பெரிய அறையில் ஒரு விண்டோ ஏசி ஓலமிட்டுக்கொண்டிருந்தது. ஏசியை அவமதிக்கிறமாதிரி அறையில் எல்லா ஜன்னல்களும் திறந்து கிடக்க, அதிகாரி ஒருவர் இன்டர்காமில் யாரையோ உரத்த குரலில் தெலுங்கில் திட்டிக்கொண்டிருந்தார்.

‘வேடிக்கை பாத்துண்டு நிக்காதே, இங்க வா,’ ராமராஜு சிடுசிடுத்தான். நான் விரைந்து சென்று அவன் பின்னால் நின்றுகொண்டேன். நான் ஒரு கையாலாகாதவன்; ராமராஜுமாதிரி ஓர் ஆள் இல்லையென்றால் இந்தமாதிரி இடங்களில் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.

‘ராமராஜு, இது பண விஷயம். பேரப்பேச்சு வேற நடக்கப்போறது. இங்க நான் என்ன பண்ணப்போறேன்? வெளியில உக்காந்திண்டிருக்கட்டுமா?’

‘அதுவும் சரிதான். உன் பேப்பர்ஸை எல்லாம் குடுத்துட்டு, வெளியில எங்கேயாவது மரத்தடியில உக்காந்திண்டிரு. அரைமணி நேரம் வெளியில் உட்கார்ந்தேயானால், மறுபடியும் ட்ரெஷரிக்கு வரேன்னு இந்த ஜென்மத்தில் சொல்லமாட்டே; அந்தமாதிரியான அனுபவம் கிடைக்கும். நல்லவேளையா கூட்டமில்ல; ஒரு பதினைஞ்சு இருபது நிமிஷத்தில முடிஞ்சுடும். எவ்வளவு கொண்டுவந்திருக்கே?’

‘பத்தாயிரம்.’

‘போறும், குடு.’

நான் நிம்மதிப் பெருமூச்சுடன் பேப்பர்களையும் பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் ராமராஜுவிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். அதிகாரி இன்னும் இண்டர்காமில் திட்டிக்கொண்டிருந்தார்.

வெளியில் வந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். சற்றுத்தள்ளி ஒரு பெரிய அரசமரம் இருந்தது. அரசமரத்தைச் சுற்றியும், அதைத் தாண்டியும் ஐந்தாறு பசுமாடுகள் பலவித கோணங்களில் படுத்து, உச்சி வெயிலின் தாக்கத்தில் உடம்பு தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்தன. எல்லாப் பசுக்களுமே குட்டை ரகம். ஆனால் கொழுத்த தேகத்துடனும், பெரிய மடிகளுடனும், வாயிலிருந்து முன்னங்கால் வரை பெரிய பெரிய தோல் மடிப்புகளுடனும் பார்ப்பதற்குப் புங்கனூர் பசுக்கள் மாதிரி இருந்தன. பசுங்கன்றுகளுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை போலிருக்கிறது; வெயிலை லக்ஷியம் செய்யாமல் உற்சாகமாக அலைந்து கொண்டிருந்தன. எல்லாம் கோயில் மாடுகளாக இருக்கவேண்டும். மற்ற மாடுகளுக்கு இவ்வளவு உரிமை ஏது? இரண்டு பசுக்களுக்கு நடுவே இருந்த இடைவெளியில் புகுந்து, ஒரு சாணக்குவியலைத் தாண்டி, அரசமரத்தடியைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த திண்ணைப்பாறையில் போய் உட்கார்ந்தேன். வெப்பக்காற்று வீசியது. அதில் கோமயம், கோமூத்திரம், மனுஷ மூத்திரம், வியர்வை துர்நாற்றம், இவற்றுடன் வேப்பம்பூ வாசனையும் கலந்து வந்தது.

அங்கிருந்து பார்க்கும்போது எதிர் வரிசை மிகவும் மகிழ்வூட்டும் விதமாக இருந்தது. அங்கேயும் ராக்ஷஸத்தனமாக வளர்ந்த ஓர் அரசமரம். அதன் பின்னால் சற்றுத்தள்ளி தாழ்ந்த கூரையுடன் ஒரு கருங்கல் கட்டிடம். கருவூலக் கட்டிடத்தைவிடப் பழைமையாகக் காணப்பட்ட அந்தக் கட்டிடத்தின் கல்சுவரில் “டிஸ்ட்ரிக்ட் சப்ஜெயில்” என்ற பெயரைத் தாங்கிய ஒரு போர்டு. கருநீலப்பின்னணியில் பளிச்சென்ற குண்டுகுண்டான வெள்ளை எழுத்துக்களுடன் கூடிய அந்த போர்டைப் பார்த்ததும், எழுபதுகளில் சென்னை ரயில்வே ஸ்டேஷன்களில் நான் தினமும் பார்க்கும் “இந்த வாரம் ஆனந்த விகடன் வாசித்தீர்களா?” போர்டு ஞாபகத்திற்கு வந்தது. சிறைக்கூடத்தின் உட்புறம் தெரியவில்லை; வாசலிலேயே இருட்டு ஒட்டிக்கொண்டது. சிறைச்சாலைக்குப் பக்கத்தில் மாவட்ட நீதி மன்றமும், அதைத் தாண்டி ஒரு தாசில்தார் அலுவலகமும் இருந்தன. நூறு நூற்றைம்பது வருடங்களுக்குக் குறையாத, சரியான பராமரிப்பு இல்லாத, சிதிலமடைந்து வரும் கட்டிடங்கள். எல்லா அலுவலகங்களும் கரோனா கட்டுப்பாடு காரணமாக வெறிச்சோடிக் கிடந்தன.

சிறைச்சாலையின் இருட்டிலிருந்து இப்போது இரண்டு உருவங்கள் வெளிப்பட்டன. முதலில் வந்த ஆள் ஓர் உயரமான இளைஞன்; அவனுக்கு முப்பது வயது கூட இருக்காது. காவல் துறை சீருடையில் இருந்தான். அவனுக்குப் பின்னால் புங்கனூர் பசுமாதிரி குட்டையாக, பெருத்த உடம்புடன் ஒரு நடுத்தர வயது மனிதர் தடுக்கி விழுந்துவிடுவதுபோல் நடந்து வந்தார். சட்டை இல்லாத அந்த உடம்பில் இறுக்கமான பனியன் போலிஸ் தொப்பையை இன்னும் பெரிதாகக் காட்டியது. தொப்பைக்குக் கீழே முட்டிவரை நீண்டது விறைப்பான காக்கி கால்சட்டை. அதன் கீழே குட்டையான — ஆனால் கொழுத்த — கால்கள். பருத்த முகம். தலை பெரும்பாலும் வழுக்கை; கீழ்மண்டையில் மட்டும் இரண்டு காதுகளையும் இணைப்பதுபோல் அரைவட்டமாக, ஏனோதானோவென்று கருப்பு சாயம் பூசப்பட்ட முடி. முகத்தில் தொங்கும் விஷமப் புன்னகையுடன் உருண்டு வந்த அந்தப் பொலிஸ்காரரை வேறெங்கோ பார்த்திருக்கிறேனே. எங்கே? ஞாபகம் வந்துவிட்டது! ஷேக்ஸ்பியரின் ஹென்றி த போர்த். “தடியன் ஜாக்கை நிராகரி, உலகையே நிராகரிப்பாய்!” என்று கூச்சலிட்டு வரும் ஃபால்ஸ்டாஃபை நினைப்படுத்தினார் அந்த பீப்பாய் மனிதர்.

தொப்பை பொலிஸ்காரர் ஜெயிலுக்கு வெளியே இருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார். ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துப் புகையை ஆழமாக இழுத்தார். வளையம் வளையமாகப் புகையை வெளிவிட்டு, பாதி மூடிய கண்களுடன் அதை வேடிக்கை பார்க்கும்போது அவருடைய புன்னகை பெரிதாகி விரிந்தது. ‘உட்காரு, சுதாகர்,’ என்று தெலுங்கில் சொன்னார். போலீஸ்கார இளைஞன் அவரெதிரில் அரசமரத்தடியில் உட்கார்ந்தான்.

‘நாக்கு அரட்டிப்பண்டு காவாலி — இத தமில்லே எப்படிக் கேட்கிறது?’ என்று இளைஞனைப் பார்த்துக் கேட்டார்.

‘எனக்கு வாழைப்பழம் வேண்டும்.’

‘வா…’

‘வா-ழைப்-ப-ழம்’

‘வாளப்ளம்’

‘வாழைப்-பழம், ஸார். அண்டே அரட்டிப்பண்டு.’

‘ப்ளம் அண்டே?’

‘ப்ளம் காதாண்டி, பழம். பழம் அண்டே பண்டு.’

‘பளம்…ப்ளம்… சே, நாக்கு ராது. (என் வாயில் நுழையாது.) அரவம் கஷ்டமான பாஷைதான்,’ என்று ஒரு மதிப்பீட்டை வெளியிட்டுவிட்டு, புகைவளையங்களைச் சிந்தனையுடன் வேடிக்கை பார்த்தார். இளைஞன் சிரித்தான்.

இது தொடர்ந்தது. தொப்பை பொலிஸ்காரர் தெலுங்கில் வாக்கியங்களையோ அல்லது பழமொழிகளையோ கொடுக்க, அதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் என்று சுதாகர் விளக்கிக்கொண்டிருந்தான். அவனுடைய மொழிபெயர்ப்பு கிட்டத்தட்ட சரியாகவே இருந்தது. தொப்பை சில பாலியல் விஷயங்களை நகைச்சுவையான வார்த்தைகளில் சொல்லி, “அரவத்தில்” அவற்றை எப்படி வெளிப்படுத்துவது என்று கேட்டபோதுகூட, தயங்காமல் ஏதோ அறிவியல் சொற்பொழிவு செய்வதுபோல் முகத்தை கண்ணியமாக வைத்துக்கொண்டு, தமிழில் தனக்குத் தெரிந்த ஆபாச வார்த்தைகளை ஒன்று சேர்த்து ஒரு பாலுணர்வு சொல்லியல் தயார் செய்து சொன்னான். சில இடங்களில், சொல் வரிசைமுறை, சொல் ஒன்றிணைப்பு, உச்சரிப்பு இவை கொஞ்சம் அசாதாரணமாக இருந்தன. மற்றபடி மொழிபெயர்ப்பு போதனை நன்றாகவே நடந்துகொண்டிருந்தது. நான் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். போதனைமுறையின் அடிப்படை விதிகள் இந்தப் பையனுக்குத் தெரிந்திருக்கின்றன. இவன் வகுப்பறையில் இருக்கவேண்டியவன். பொலிஸில் என்ன செய்கிறான்?

முகத்தில் வெந்நீர் சாரல் அடிக்க, திடுக்கிட்டு எழுந்தேன். என்னைச்சுற்றியுள்ள பசுக்களில் ஒன்று எழுந்துநின்று விட்டுவிட்டு மூத்திரம் பெய்துகொண்டிருந்தது.

சிரிப்புச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். தொப்பை போலிஸ்காரர். ‘இது கோமூத்ர சிகிச்சை. இன்னும் ரெண்டு நிமிஷம் அங்கேயே இருந்தால் கோமய சிகிச்சையும் கிடைக்கும். கரோனாவுக்கு ரொம்ப நல்லது.’ இதைச் சொல்லிவிட்டு திரும்பவும் சிரித்தார். பிறகு எதோ ஞாபகம் வந்ததுபோல் எழுந்து தட்டுத்தடுமாறும் நடையுடன் தாசில்தார் அலுவலகத்தைத் தாண்டி ஒரு பெரிய மரத்தின் பின்னல் மறைந்தார்.

இப்போது இன்னொரு பசு எழுந்தது. நான் விரைந்து எதிர்பக்கம் சென்றேன்.

‘கூர்ச்சோண்டி,’ என்று சுதாகர் பெஞ்சைக் காண்பித்தான்.

‘சுதாகர், நீங்க ரெண்டுபேரும் பேசிண்டிருந்ததைக் கேட்டேன்,’ என்று தமிழில் ஆரம்பித்தேன்.

‘நீங்க தமிழா, ஸார்?’

தலையசைத்தேன். ‘ஆனா, நாப்பத்தைஞ்சு வருஷமா இங்கதான் இருக்கேன். நீ எப்படி தமிழ் கத்துண்டே?’

கொஞ்சம் வெட்கப்பட்டு சிரித்தான். ‘ஒரு தமிழ்ப் பொண்ணுகிட்ட கத்துக்கிட்டேன், ஸார். கொஞ்ச வருஷத்துக்கு முன்னே அவுங்க குடும்பம் எங்க வீட்ல வாடகைக்குக் குடியிருக்க வந்தாங்க.’

‘அப்புறம் உன் வீட்டுக்காரியே ஆயிட்டாளாக்கும்.’

சிரித்தான். ‘அதுமட்டுமில்ல, ஸார். நான் நெறய்ய தமிழ்ப்படம் பார்ப்பேன். நல்லாப் பேசறேனா, ஸார்?’

‘ரொம்ப நல்லாப் பேசறே. உன் உச்சரிப்பில்கூட தெலுங்குவின் தாக்கம் அதிகமா இல்லை. நீ தமிழ்நாட்டுக்குப் போனா, உன்னை யாரும் ஆந்திராக்காரன்னு சொல்லமாட்டாங்க.’

‘ஐ கன் சீ தட் யு ஆர் ஹாவிங் எ நைஸ் டைம்.’

திரும்பிப் பார்த்தேன். ராமராஜு.

‘முடிஞ்சுதா?’

‘பணத்தைக் கொடுத்தா எது முடியாது? ஆளுக்குப் பத்து கேட்டான். ஏழுக்கு ஒத்துக்கவெச்சேன் –- மச்சீலிப்பட்டணத்துக்கும் சேத்து. அடுத்த மாசம் ரிவிஷன் ஆயிடும்.’

‘கிரேட்!’

‘இப்படிப் பேசியே உங்காலம் ஓடிப்போச்சு. நீ மதிப்பு மரியாதையோட வெளியில உக்காந்துண்டு மரத்தையும் பசுவையும் பாத்து கவிதை எழுதிண்டிருப்பே; நாங்கள்ளாம் உள்ள போயி உனக்காக டர்ட்டி வேலை பண்ணிண்டிருக்கணும், இல்லையா?’

ராமராஜு அப்படித்தான் — எப்பவும் திட்டிண்டே நல்லது பண்ணுவான். அவனை எனக்கு நாற்பத்தைந்து வருடங்களாகத் தெரியும்.

கார் கதவைத் திறந்துகொண்டே கேட்டான், ‘அது சரி, நீ ஒரு சுகாதார வெறியனாச்சே. இந்த சாணி, மூத்திர நாத்தத்தைச் சகிச்சுண்டு எப்படி இங்கே அரைமணி நேரம் உக்காந்துண்டிருந்தே? உன் ஸ்நாபரிக்கு ஹாய்-பொலாய் தோழமை வேறு! என்ன நடக்கிறது?’

‘நான் ஒண்ணு சொல்லட்டுமா?’ என்றேன்.

‘சொல்லு.’

‘இதற்கும் சுகாதாரத்திற்கும் எந்த முரண்பாடும் கிடையாது.’

‘ரொம்ப சந்தோஷம். நானும் ஒண்ணு சொல்லட்டுமா?’

‘சொல்லு.’

‘எனக்குக் கொஞ்சம் பைத்தியம் பிடிக்கிறமாதிரி இருக்கு. ரிடயர் ஆனதிலிருந்து பத்து வருஷமா சரியா மூணு மணிக்கு காஃபி சாப்பிட்டுப் பழக்கமாயிடுத்து. இப்ப மணி மூணுக்கு மேல ஆயிடுத்து. நீ தயவுபண்ணி காரில் உக்காண்டா, கிளம்பலாம்.’

‘ஒரு நிமிஷம்,’ என்று தாசில்தார் அலுவலகம் இருந்த திசையைப் பார்த்தேன். ஒரு பெரிய மரத்துக்குப் பின்னாலிருந்து வெளிவந்த தொப்பை பொலிஸ்காரர், ஜிப்பை அவசர அவசரமாக இழுத்துவிட்டுக்கொண்டு தோழமையுடன் ஒரு கையை ஆட்டினார். நானும் பதிலுக்குக் கை அசைத்தேன்.

‘வாட் எ ஸ்வீ ட் ஃபெலோ!’ என்றேன் காரில் உட்கார்ந்துகொண்டு.

‘அந்த பொலிஸ் தடியானா? இந்த இடம் எவ்வளவு அசிங்கமோ, அவ்வளவு அசிங்கம் அவனும்… அந்த கண்ராவியைப் பார்!’

அவன் சுட்டிக்காட்டிய திசையில் என்னுடைய அரசமரம் இருந்தது. அதன்கீழே மூன்றாவது பசு ஒன்று, முதல் பசு துயிலெழுந்தவுடன் ஆற்றிய கடமையைச் செய்துகொண்டிருந்தது.

‘டிஸ்கஸ்டிங்! இனிமே இந்த இடத்துக்கு வரக்கூடாது; எல்லா வேலையையும் ஆன்லைனிலேயே முடிச்சிக்கணும்,’ என்றான் ராமராஜு.

நான் அப்படி நினைக்கவில்லை.

– நன்றி: https://solvanam.com, Issue 252, August 8, 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *