கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 13,385 
 

இலையுதிர்காலம் தொடங்கிவிட்டதன் அடையாளமாக மலையில் இருக்கும் மரங்கள் அத்தனையும், கோடையை மறந்து பூக்கத் தொடங்கியிருந்தன.

‘பொழுசாயம் ஆட்ட வெரசா ஓட்டிக் கொண்டாந்திருடா. நாளைக்குக் கொஞ்சத்தை திண்டுக்கல் சந்தையில போயி வித்துட்டு வரணும்…’ – காலையில் கிடையில் இருந்து ஆடுகளைப் பத்தும்போது ராசகிட்ணக் கீதாரி சொன்னதை மனதில் வைத்துத்தான், பிற்பகலுக்குப் பின்பாக ஆடுகளை வேகமாகக் கிடையை நோக்கித் திருப்பினான் அப்பு. அடிவயிற்றில் இருந்து கிளம்பிய பசிக்கு, அவன் கை தானாக ட்ரவுசர் பையில் சேமித்து வைத்திருந்த ஆவாரம் பூக்களைத் தேடிச் சென்றது. வாடிய அந்தப் பூக்களை மெல்லும்போது நாவில் படர்ந்த லேசான கசப்பை மறக்கச்செய்திருந்தது பசி. ஆடுகள் கூட்டமாக ஒரே இடத்தில் மேய்ந்துகொண்டிருந்ததால், கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகள் எழுப்பும் ஒலி அதீதமாக எதிரொலித்தன. இவனோடு நன்கு பழகிவிட்டதால், பாதிக்கும் மேல் சொல்பேச்சு கேட்பது இல்லை.

‘தா… கத்திட்டே இருக்கேன்… எருமை மாதிரி நீ ஒரு பக்கமாப் போற. வெச்சு இழுத்தன்னா தெரியும்!’ – அவன் ஆவேசமாகக் கத்த, கிடாய்க்குட்டிகள் தலையை ஆட்டியபடி ‘பர்ர்ர்ர்ர்’ எனச் சத்தம் எழுப்பின. பக்கத்தில் கிடக்கும் மண்கட்டியைத் தூக்கி ஆட்டுக் கூட்டத்துக்குள் எறிந்தான். பயந்து ஓடுவதுபோல் போக்குக் காட்டிவிட்டு, மலையை விடுத்து சரிவில் இருந்த புற்களை மேயத் தொடங்கின.

ஆட்டின் கண்களுக்குள் கோடை தணிந்துபோன நிம்மதியும், இளம்புற்களைக் கண்டுகொண்ட ஆர்வமும். அடிக்கு ஒருதரம் தனது இருப்பை உறுதிசெய்துகொள்ளும் விதமாக, ‘ஹேய்ய்ய்ய்ய்… த்தர்ர்ர்ர்…’ எனச் சத்தமாக ஒலி எழுப்பினான் அப்பு. அந்த மலையின் செம்மண் சாலை முழுக்க அப்புவின் காலடித் தடங்களும், மேயும் ஆடுகளின் உதிர்ந்த ரோமங்களும் பரவிக்கிடக்கின்றன. உலகம் எத்தனை தூரம் முன்னே போனாலும், இந்த மலையும் மலைக்கிராமங்களும் முடிந்தவரை தங்களை அதற்குப் பின்னால்தான் வைத்திருக்கின்றன.

இங்கு கிடை ஓட்டிவருவதற்கு முன்னர், சில மாதங்கள் சிதம்பரத்துக்கு அருகில்தான் ஆட்டுக்கிடை போட்டிருந்தார் ராசகிட்ணக் கீதாரி. அங்கு கிடைபோடத் தொடங்கிய ஆரம்ப நாட்களில், ‘மேய்ச்சலுக்கு பையன்கள் யாராவது இருந்தால் தேவலாம்’ எனச் சொன்னபோதுதான் ஏஜென்ட் சொல்லி, அப்புவை அவன் அய்யா கூட்டிவந்தார்.

பண்ருட்டியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் இருக்கும் சின்னக் கிராமம் அப்புவின் ஊர். ஆறாம் வகுப்புகூட முடித்திருக்க வில்லை. அப்புவின் அண்ணன் மூன்று வருட கான்ட்ராக்ட்டில் ஷிமோகாவில் கோழிப் பண்ணை வேலைக்கு அனுப்பப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. வறண்ட ஊரில் இனி வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்ள எதுவும் எஞ்சியிருக்கவில்லை என்பதால், ஊரில் இருந்த எல்லோருமே ஏதோ ஒருவகையில் இடம்பெயர்ந்து செல்லவே நினைத்தனர். சொந்த ஊர் குறித்த நினைவுகளையும் வயல்வெளிகளின் வாசனைகளையும் முந்திரிக்காட்டின் வெக்கையையும் வெகுசீக்கிரத்தில் எல்லோராலும் மறக்கவும் முடிந்தது.

‘வருஷத்துக்கு பதினஞ்சாயிரம் தர்றேன். பயலுக்கு சாப்பாடு போட்டு, வேணுங்கிறதைச் செய்றேன். பொங்கல், தீவாளிக்கு துணிமணி எடுத்துக் குடுத்துப் பார்த்துக்கிறேன். நம்மகிட்ட இதுக்கு முன்னயே நிறையப் பயக வேலை பார்த்திருக்காய்ங்க. அதனால நீங்க எதுக்கும் பயப்பட வேணாம்.’

அப்பு, பார்ப்பதற்கு ஆள் திருத்தமாக இருந்ததால் எப்படியும் அவனை வேலைக்குச் சேர்த்துவிடுவது என ராசகிட்ணக் கீதாரி தீவிரமாக இருந்தார். அப்புவின் அப்பாவுக்கு அந்தத் தொகை பெரிய ஆறுதல். தவிரவும் அவன் வயிற்றுக்கு இனி பிரச்னை இல்லை என்ற நிம்மதி. ஆனாலும் அத்தனை எளிதில் பிள்ளையைப் பிரிந்து சென்றுவிட முடியவில்லை அவரால்.

‘அய்யா சின்னப் பய, இதுக்கு முன்ன தூரந்தொலவு போனது இல்லை. உங்கள நம்பித்தான் விட்டுட்டுப் போறேன். நல்லா படிக்கிற பய. வீட்டுக் கஷ்டம்… வேற வழி இல்லை. அதான் வேலைக்கு அனுப்புறேன்’ – விட்டுப் போக மனது இல்லாமல், அவன் அய்யா கடலூர் பஜாரில் வாங்கிய புதுச் செருப்பை மகனுக்குக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.

அதற்கு முன்பு வரையிலும்ஆ டுகளோடு அவன் விளையாடியது கூட இல்லை. ஆடு பற்றி எதுவுமே தெரியாத அவனை நம்பி, ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாது என்பதால், ராசகிட்ணன் தன்னோடே கூட்டிச் சென்றார். விருப்பம் இல்லாதபோதும் அவரோடு அலைந்து திரிந்தான். இதற்கு முன்னர் இல்லாதபடி தன் மீது அளவுக்கு அதிகமாக ஆட்டின் வாசம் சேர்ந்திருந்ததால், அருவருப்பாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஆடுகளோடு அதிக நேரம் அலையவிட்டு, அவர் வேகமாக அவனை மேய்ச்சலுக்குப் பழக்கினார்.

”நாம எம்புட்டுத் தூரத்துல இருந்தாலும் நாம குடுக்கிற சத்தத்துக்கு மேஞ்சுக்கிட்டு இருக்கிற ஆடுங்க கட்டுப்பட்டு நிக்கணும். அப்படி நிக்கணும்னா, அதுங்களை உனக்குப் பழகுற மாதிரி வித்தியாசமா ஏதாச்சும் சத்தம் குடுத்துப் பழக்கணும்.’

வெயிலுக்குத் தலையைத் துண்டால் மறைத்திருந்த ராசகிட்ணன் அடித்தொண்டையில் இருந்து சத்தம் எழுப்ப, தூரத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் ஓர் ஒழுங்குக்குள் வந்ததைப் பார்த்தான். திரும்பிச் சிரித்துக்கொண்டவர், அவனுக்கும் அதுமாதிரி சத்தம் எழுப்பப் பழக்கினார். குழந்தைகள் விளையாட்டைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடு மேய்ச்சலைக் கற்றுக்கொண்டவன், தனக்கு விருப்பமான வகையில் நீண்ட தொரட்டி ஒன்றைச் செய்துகொண்டு, அதன் முனையில் அறுப்புக்கு வைத்திருக்கும் சின்ன அருவாளும், கீழே இரண்டு மணிகளையும் கட்டிக்கொண்டான். தனது இருப்பை ஆடுகள் தனித்து உணரும்பொருட்டு அவ்வப்போது தொரட்டியை உயர்த்தி, நன்றாகச் சத்தம் வரும்படி உலுக்குவான். தனித்துவிடப்படும் பகல்பொழுதுகளில் தனக்குத் துணைவர்களாக ஆடுகள் மட்டுமே இருப்பதால், மிக விரைவிலேயே அவற்றை தனது தோழர்களாக நினைக்கத் தொடங்கிவிட்டான். ஒடுங்கிச் சுருங்கிய அவன் முகத்தில், பிரிவின் வேதனையைப் பிரதிபலிக்கும் ரேகைகள் விரிந்தோடிக்கிடக்கும். ராசகிட்ணன் இது மாதிரி நிறையச் சிறுவர்களின் முகங்களைப் பார்த்தவர் என்பதால், வலிந்து அவனிடம் கடுமையாக நடந்துகொள்ளவில்லை.

மேய்ச்சலை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது சோம்பலான வேலையாகத் தோன்றலாம்; உண்மையில், அசாத்தியமான பொறுமையும் வலுவும் வேண்டும். ராசகிட்ணக் கீதாரி, தான் சிறுவனாக இருக்கும் காலத்தில் இருந்தே ஆடுகளுடன் இப்படி அலைந்து, திரிந்து வாழ்பவர். இளையான்குடியில் அவருக்கு சொந்த வீடும் நிலங்களும் இருக்கின்றன. ஆனால், அவர் வாழ்க்கை ஆடுகளுக்கானவை. மேய்ச்சலின் காரணமாக அலைந்து பழக்கப்பட்ட மனிதன், ‘ஒரே இடத்தில் உட்கார்ந்து தின்பது தனக்குச் சரிவராது’ என்பார்.

ஆடுகளோடு ஆடுகளாக அலைந்துதிரிவது மட்டும் அல்ல, அவை சரியாக மேய்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். விஷச் செடிகள் எதையும் தின்றுவிடாதபடி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

‘காலையில பட்டியில இருந்து ஆடுகளைப் பத்துறதுக்கு முன்னால புழுக்கையை கையில அள்ளி கசக்கிப் பாக்கணும். ஈரமா இருந்துச்சுன்னா, முந்தின நாள் குட்டி நல்லா

மேஞ்சிருக்குனு அர்த்தம். இது எப்பவும் முக்கியம்.’

முதல் நாள் பட்டியில் இருந்து ஆடுகளை ஓட்டுவதற்கு முன்னால், அவர் சொல்லிக் கொடுத்ததில் இருந்து, தினமும் காலையில் அப்பு கவனமாகப் பரிசோதிப்பான். ஊரில் இருந்து கிளம்பிய நாளில் இருந்து, அவன் கடக்கும் எல்லா இடங்களிலும் இன்னும் ஊரின் அடையாளங்களைத் தேடுகிறவனாகத்தான் இருக்கிறான். புதிய நிலங்கள் பழைய வாழ்வின் ஜீவன்மிகுந்த நினைவுகளை அத்தனை எளிதில் மீறிச் சென்றிருக்கவில்லை.

வெளிச்சம் விலகி, லேசான சாரல் விழத் தொடங்கியபோது, ஆடுகள் குளிருக்குச் சலசலத்துக்கொண்டன; உடலைக் குலுக்கியபடி ஆடுகள் வேகமாக பட்டியை நோக்கி இறங்கின. சரிவில் இருந்து பார்க்கும்போது, தூரத்தில் ராசகிட்ணன் தனது குட்டிகளை கிடையை நோக்கி பத்த முயற்சிப்பது தெரிந்தது. இவனும் தலை மறைப்புக்குத் துண்டைப் போட்டுக்கொண்டு, ‘ஏய்ய்ய்… த்ர்ரீ… ஓடுங்க ஓடுங்க…’ எனப் பத்தினான். சமவெளியில் இறங்கிய சில நிமிடங்களில் இன்னொரு பக்கத்தில் இருந்து ராமுவும் வந்து சேர்ந்துகொண்டார்.

”ஏன்டா தம்பி இம்புட்டுப் பிந்திட்ட. மழை வர்றதாட்டம் தெரிஞ்சதுமே குட்டியை எறக்கிவிட்ருக்க வேண்டியதுதான?’

அப்பு தனது தொரட்டியை குட்டிகளுக்குள் ஒருமுறை நுழைத்து ஒரு கிடாக்குட்டியை மட்டும் உந்தித் தள்ளினான். அது துள்ளி ஓட, அதோடு இருந்த மற்றக் குட்டிகளும் வேகமாக ஓடின.

‘குட்டிக சரியா மேயணும்ல சின்னய்யா… அதான் பொறுத்துட்டு இருந்தேன். நாளைக்கு யாவாரத்துக்கு வேற போறேன்னு சொன்னீக. நல்லா மேஞ்சாத்தானே விடிகாலையில வரைக்கும் தெம்பா இருக்கும்.’

ராமு, அவர் பக்கத்து ஆடுகளை வேகப்படுத்தினார்.

‘மழையடிக்கிற அடிப்பப் பாத்தா காலையிலைக்குப் போக முடியுமானு தெரியலை. ஃபாரஸ்ட் ரேஞ்சர் வந்தானே… எதும் கேட்டானா?’

அவர்கள் இருவருக்கும் நடுவில் இப்போது மழை வலுத்துப் பெய்துகொண்டிருந்தது.

‘இல்லை சின்னய்யா. ஆனா, வெள்ளாட்டங்குட்டி ஒண்ணு மேல அந்தாளுக்கு கண்ணுன்னு நினைக்கிறேன். முந்தியே ரெண்டு தரம் வரும்போது, ‘நல்ல வெள்ளாட்டங்கறி தின்னு நாளாயிப் போச்சுடா தம்பி. உன் கீதாரிகிட்ட சொல்லி வை’னு சொன்னான்.’

ராமு சத்தமாகச் சிரித்தார். ‘சரியான எச்சக்கல பயக. உழைச்சு சாப்டறவனுக்குத்தான்டா அப்பு ஒரு வீட்டுச் சோறு. இந்த மாதிரி புடுங்கித் திங்கிறவனுக்கு எல்லாம் தினம் ஒரு வீட்டுச் சோறு. எதுக்கும் அவங்கிட்ட ஜாக்கிரதையா இரு. வம்பு வளக்கணும்னே, குட்டியைத் தூக்கிட்டுப் போவான்.’

பேசியபடியே அவர்கள் கிடைக்குப் பக்கமாக வந்துவிட்டிருந்தனர். அவர்களுக்கு முன்பாக குட்டிகளைப் பட்டியில் அடைத்துக்கொண்டிருந்த ராசகிட்ணன் இவர்களின் ஆடுகள் போட்ட சத்தம் கேட்டு டார்ச் அடித்தபடி திரும்பிப் பார்த்தார். ராமுவும் அப்புவும் தங்களுக்கு என இருந்த தனித்தனிப் பட்டிகளில் குட்டிகளைப் பத்திக்கொண்டிருந்தனர்.

”நாம ஆடு மேய்க்கிறதுக்குனே முறையா அனுமதி வாங்கியிருக்கோம்; ரசீதும் இருக்கு. அப்புறம் ஏன் சின்னய்யா இந்தக் காட்டாபீஸருங்க நடுநடுவுல வந்து துட்டு கேக்கிறாங்க?’

அப்பு, ராமுவைக் கூப்பிட்டு சத்தமாகக் கேட்டான். ராமு குட்டிகளை பட்டிக்குள் பத்துகிற அவசரத்தில் உடனடியாக அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் போக, ராசகிட்ணன் சிரித்தபடி, ‘ஏலே அப்பு… இதெல்லாம் காலங்காலமா இருக்கிறது. நம்மளுக்கு முன்னால வந்த யாரும் காரணம் கேக்கலை. நாம போயி இப்ப காரணம் கேட்டம்னா, நாளைக்கே இங்க இருந்து கிடையை மாத்திட்டு வேற ஊருக்குப் போக வேண்டியதுதான்.’

”என்னவோ கீதாரி… நாம வெயில் மழைனு இப்படி கஷ்டப்படறோம். அவனுங்க நோகாமத் திங்கிறானுங்க.’

அப்பு மழையினூடாக பட்டியை வேகமாக சுற்றிக்கொண்டு வந்தான். ராமுவும் ராசகிட்ணனும் தங்கள் ஆடுகளைப் பட்டிக்குள் அடைத்துவிட்டதால், வேகமாக குடிலை நோக்கித் திரும்பினர். இவன் மட்டும் கிடையைச் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்தார் ராசகிட்ணன்.

‘என்னடா ஆச்சு?’

– சத்தம் போட்டுக் கூப்பிட்டார். மழைக்கு அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. பதில் சொல்லாமல் சுற்றியவன் இன்னொரு முறை அவர் சத்தம் போட்டுக் கூப்பிடவும், ‘நெற மாசமா இருந்த வெள்ளாடு ஒண்ணு குறையுது கீதாரி. மழை வர்றதுக்கு முன்னால வரைக்கும் அதைப் பாத்தேன். இப்போ காணாம்.’

அவன் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே ராசகிட்ணனும் ராமுவும் வேகமாக ஓடிவந்தார்கள். ராசகிட்ணன் கிடைக்குள் இறங்கி கண்களை அலையவிட்டபடியே, ”என்னடா சொல்ற… சரியா பாத்தியா?’ எனச் சத்தமாகக் கேட்டார்.

‘நல்லா பாத்துட்டேன்.’

அவர் கிடைக்குள் இருந்து வெளியில் வரவில்லை.

‘சரி… நீ மழையில நிக்காம போயி தலையைத் துவட்டிட்டு துணியை மாத்து, நான் வர்றேன்.’

தன் பங்குக்கு அவர் கிடைக்குள் தேட, அப்பு அங்கு இருந்து நகராமல் அப்படியே நின்றான்.

‘இல்ல கீதாரி… எனக்கு என்னவோ மலையைவிட்டு இறங்கிறப்பவே அது குட்டி ஈண்டுருக்கும்னு நினைக்கிறேன். அதான் பள்ளத்துல எங்கயாச்சும் ஒதுங்கியிருக்கும். நான் ஒரு நடை போயிப் பாத்துட்டு வர்றேன்.’

குளிருக்கு அவன் குரல் நடுங்கியது. ராசகிட்ணன் தலையில் இருந்த துண்டை அவிழ்த்து, தண்ணீரை நன்றாகப் பிழிந்தபடியே வந்தார்.

‘கிறுக்கனாட்டம் பேசாத. மழையைப் பார்த்தல்ல. எதுன்னாலும் காலையில பார்த்துக்கலாம். நீ வந்து சாப்புட்டுப் படு.’

அவர் அவனை கூடாரம் நோக்கி இழுத்துக்கொண்டு நடந்தார்.

அப்புவுக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. பாவம் அந்த ஆடு. வலியில் திசை மிரண்டுபோயிருக்கும். காலை வரை இந்த மழையில் தனியாகத் தாங்குமா என்பது சந்தேகம்.

”இல்லை கீதாரி… நான் போயிப் பாத்துட்டு வந்துடுறேன். இங்க இருந்தாலும் மனசு நிம்மதி இல்லாம இருக்கும்.’

அவன் பிடிவாதமாக நின்றான். ராமு, அவன் தலையைத் துவட்டிவிட்டார்.

”நீ பேசாம இரு. நான் போய் தேடிப் பார்க்கிறேன்.’

அப்பு அவரிடம் இருந்து துண்டை வாங்கித் துவட்டிக்கொண்டான்.

”இல்லை சின்னய்யா… உங்களுக்கு வழி தெரியாது. நான் வழக்கமாப் போற பாதைதானே. நான் போனா, எப்படியும் ஒரு மணி நேரத்துல கண்டுபிடிச்சுருவேன். நீங்க இருங்க.’

அப்பு ஓடிப்போய் கூடாரத்தில் செருகிவைத்திருந்த பாலித்தீன் கவரை எடுத்து தலையை நன்றாக மறைக்கும்படி போட்டுக்கொண்டான். ராசகிட்ணனின் கையில் இருந்து டார்ச்சை வாங்கியவன், வேகமாக மழைக்குள் இறங்கி, தான் வந்த பாதையில் ஓடினான். பட்டியில் இருந்த குட்டிகள் மழையின் சத்தத்தை மீறி, அவ்வப்போது சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தன. மந்தையில் இருந்து விலகிப்போன ஒற்றை ஆட்டைத் தேடி எழுப்பின சத்தம்.

செம்மண் பாதை முழுக்க மழைநீரால் அடிக்கப்பட்டு கரைந்து சென்றுகொண்டிருந்தது. டார்ச்சில் இருந்து கசிந்து நிறைந்த வெளிச்சத்தை மீறி நிறைந்திருந்தது இருள். நீண்ட நேரமாக மழையில் நனைந்திருந்ததால், குளிரில் உடல் வெடவெடத்துப்போனான் அப்பு. பற்கள் தானாகவே அடித்துக்கொண்டன. இறுகக் கடித்துக்கொண்டு சமாளித்தான். மலைப்பாதை பகலில் இருந்ததைப்போல் இலகுவாக இல்லை. இருளான பள்ளங்கள்தோறும் நிதானமாக டார்ச் அடித்துத் தேடினான். மொத்தக் காடும் அந்தக் கனமழையை அமைதியாக அனுமதித்து இருந்ததால், மழைச் சத்தத்தைத் தவிர்த்து வேறு சலனம் இல்லை. கால்கள் வலியில் பின்னிக்கொண்டுவிட, ஒரு மரத்தில் சாய்ந்து நின்றான். ‘நேரம் என்ன இருக்கும்?’ எனக் கணிக்க முடியவில்லை. காலத்தை மீறி மழை மட்டுமே நிறைந்திருந்தது. மூச்சு வாங்கியது. ஒருவேளை ஆடு, குட்டி ஈன்றிருக்கும்பட்சத்தில் இந்த மழைக்கு இரண்டையும் காப்பாற்ற முடியுமா என அவனுக்குக் கவலை.

அவன் நின்ற இடத்தில் இருந்து சற்றுத் தள்ளி, ஒரு பள்ளத்தில் இருந்து முனகல் சத்தம் கேட்க, வேகமாக அந்தப் பக்கம் டார்ச் வெளிச்சத்தைத் திருப்பினான். செடிகளுக்குள் உடலை மறைத்துக்கிடந்தது ஆடு. நீர் இறங்காமல் இருக்கும்படி பாதுகாப்பான சிறிய பள்ளம். போதாக்குறைக்குச் சுற்றிலும் செடிகளும் மிகுந்திருந்தன. ஆட்டின் அனத்தலில் இருந்து ஒருவாறாக நிலைமையைப் புரிந்துகொண்டுவிட்டான் அப்பு. அந்தப் பள்ளத்தை நோக்கிச் சென்றபோது குளிர் தாங்காமல் நடுங்கிய ஆட்டின் உடலில் பிரசவக் குருதியும் நீரும் சேர்ந்து படர்ந்திருந்ததைப் பார்த்தான். வேகமாக ஆட்டை நோக்கி ஓடினான். தனக்கு அருகில் ஆள் அரவம் கேட்கவும் பயந்து எழுந்துகொண்ட ஆடு, தன் குட்டியைப் பாதுகாக்கவேண்டி இறுக மூடிக்கொண்டது. டார்ச் வெளிச்சம் ஆட்டின் மீது நிரம்பியிருந்ததால் எதிரில் வருகிற இவனை, அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. வெளிச்சம் அருகில் நெருங்க, ஆட்டின் அலறல் அதிகமானது. பதற்றத்தில் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் அப்பு அப்படியே நின்றான். நிதானம் பிடிபட்டதும் டார்ச்சை அணைத்தான். நின்ற இடத்தில் இருந்து அசையவில்லை. கால்களில் வந்த நிதானம், இன்னும் அவன் உடல் முழுக்க வந்திருக்கவில்லை. ஆடு நிதானம் ஆகும் வரை அப்படியே காத்திருந்தான்.

அதீத வெளிச்சம் கண்ட அச்சத்தில் அடிவயிற்றில் இருந்து அலறிய ஆடு, இப்போது பழைய நிலை வந்ததும் சத்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தது. இன்னும் முழுமையாக சந்தேகம் விலகியிருக்காததால், இடைவெளி விட்டுவிட்டு சத்தம் போட்டது.

”ஏய் த்த்ரீரீரீ… கழுதை எதுக்குக் கத்துற நாந்தேன்..!’ – சத்தமாகக் கத்தினான். அவன் குரலை உள்வாங்கிய ஆடு வேகமாக எழுந்து நின்றது. மெதுவாக ஆட்டை நெருங்கிப் போனான். ஆடு இப்போது நீண்ட நேரம் தேக்கிவைத்திருந்த வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாக அனத்தியது.

‘கிறுக்குக் கழுதை… மந்தையோட நகர்ந்து வராம இங்கன கிடந்து கத்திட்டு இருக்க. வந்து நாலு இழுப்பு இழுக்கிறேன்.’

மெதுவாக ஆட்டின் அருகில் சென்று முதுகைத் தடவிக்கொடுத்தான். அதன் அனத்தல் இப்போது கொஞ்சமாகக் குறைந்தது. டார்ச் வெளிச்சத்தை அவர்கள் இருக்கும் திசைக்கு சற்றுத் தள்ளிப் பாய்ச்சினான். அந்த இடத்தின் நிலைமையைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஆட்டுக்கு அருகில் உட்கார்ந்தவன், அதன் கால்களுக்கு நடுவே கிடந்த குட்டியைத் தொட்டுப்பார்த்தான். உயிர் இருப்பதற்கு அடையாளமாக வேகமாக மூச்சு வாங்கியதில் வயிறு ஏறி இறங்கியது. அதன் உடலை மிருதுவாக வருடிக்கொடுத்தான். மனித உடலின் கதகதப்புக்கு குட்டியின் உடல் மென்மையாகச் சிலிர்த்தது. இடுப்பில் இருந்த தொரட்டிக் கத்தியை எடுத்து, தாய் ஆட்டோடு சேர்ந்திருந்த தொப்புள்கொடியைக் கவனமாக அறுத்து எறிந்தான். தனது பாரம் நீங்கிய நிம்மதியில், நீண்ட பெருமூச்சுக்களை விட்டுக்கொண்டிருந்தது ஆடு.

உலர்த்தப்பட்ட துண்டுக்குள் உறங்கிய குட்டியைக் கையில் எடுத்துக்கொண்டவன், ஆட்டை அந்தப் பள்ளத்தில் இருந்து வெளியே பத்தினான். குருதிக் கறைகள் மழைநீரால் இன்னும் முழுமையாகக் கழுவப்படவில்லை. மணலும் சகதியும் கலந்து ஆட்டின் உடலில் விநோதமான வாசனை. பிரசவ வேதனையை மறந்து, வேகமாக சரிவை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தது ஆடு. கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டிருந்த மழைக்கு இசைந்து கொடுத்துக்கொண்டிருந்த காட்டின் அத்தனை இயக்கங்களையும் மீறி, பெருகி நிறைந்தது அந்த ஆட்டின் பிரசவ வாசனை. பிறந்த ஓர் உயிரை இத்தனை நெருக்கமாக முதல் முறையாக கையில் எடுத்துக்கொண்ட பூரிப்பு அப்புவுக்கு. கிடையை நோக்கி வேகவேகமாக நடந்தான்.

கூடாரத்தில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கிடையைக் கண்டுவிட்ட ஆடு உற்சாகத்தில் சத்தமாகக் கத்த, ஆட்டின் சத்தம் கேட்டு கிடையில் இருந்து மற்ற ஆடுகளும் பதில் குரல் எழுப்பின. ராசகிட்ணனும் ராமுவும் வேகமாக ஆடு வந்த திசையில் ஓடிவந்தனர்.

”அப்பு, உனக்கு ஒண்ணும் இல்லையேடா..?’

ராமுதான் முதல் சத்தம் கொடுத்தார்.

”அதெல்லாம் ஒண்ணும் இல்ல சின்னய்யா…’

கையில் பிறந்த குட்டியுடன் நடந்துவந்த அப்புவின் முகத்தில் களைப்பை மீறின சந்தோஷம். ராசகிட்ணன் குட்டியைக் கையில் வாங்கிப் பார்த்தார். நேர்த்தியான வெள்ளாட்டங் குட்டி.

‘எங்கனடா கிடந்துச்சுக ரெண்டும்?’

அப்பு உடலில் வழிந்த நீரைத் துடைத்தபடியே ‘கடைசியா இருட்ட முந்தி ஒரு மேட்டுல மந்தையை மேயவிட்ருந்தேன் கீதாரி. இது மட்டும் அங்கேயே படுத்துக்கிருச்சுபோல. நல்ல வேளை பூச்சி பொட்டு எதுவும் இல்லை…’ – நடுங்கியபடி நின்ற அப்புவின் முகத்தில் இன்னும் சிரிப்பு அகலவில்லை.

”மொதல்ல துணியை மாத்திட்டு, சாப்புடு. பிறகு பேசிக்கலாம்.’

ராமு அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டு கூடாரத்தை நோக்கி கூட்டிக்கொண்டு போனார். தலையைத் துவட்டி வேறு உடை அணிந்தபோது, அவ்வளவு நேர ஈரத்தையும் மீறி கொதித்தது அவன் உடல். கயிற்றுக்கட்டிலில் ஒன்றுக்கு இரண்டாகப் போர்வைகளை விரித்திருந்தனர். ராசகிட்ணன் தட்டில் சாப்பாட்டை எடுத்து வந்து கொடுக்க, அவ்வளவு நேரமும் மறந்துபோயிருந்த பசிக்கு அப்புவின் கைகள் பரபரத்தன. எதுவும் பேசாமல் வேகவேகமாகச் சாப்பிட்டு முடித்தான்.

”சந்தைக்கு நான் இன்னொரு நா போயிக்கிறேன். நீ நல்லாத் தூங்கி, காலையில சாவகாசமா எந்திரி.’

ராசகிட்ணன் அவன் தலையணையைச் சரியாகப் போட்டுவிட்டு பக்கத்து கூடாரத்துக்குப் போனார். அப்பு ‘சரி’ எனத் தலையாட்டிக் கொண்டான். அசதியில் உறக்கம் மேலிட்டது. ஆனாலும் படுத்துக்கொள்ளாமல் கால்களை நீட்டி கட்டிலில் உட்கார்ந்தபடி பட்டியையே பார்த்துக்கொண்டிருந்தான். இப்போது மழை ஓய்ந்த அந்த இடம் இருளில் நீண்ட அமைதியில் கிடந்தது.

இன்னும் விடிந்திருக்கவில்லை. ஃபாரஸ்ட் ஜீப் கூடாரத்துக்கு அருகில் வந்து ஹார்ன் அடித்த சத்தம் கேட்டு ராசகிட்ணன் பதறி வெளியே வந்தார்.

ரேஞ்சர் வேகமாக வந்து, ‘யோவ் கீதாரி… சீக்கிரமா வா இங்க.’

பாதித் தூக்கத்தில் பதற்றம் விலகாமல் வந்து நின்ற ராசகிட்ணனின் முகத்தில் அச்சம். அருகில் வந்ததும் ரேஞ்சர் பளார் என ஓர் அறை விட்டான்.

‘அறிவு இல்லை உனக்கு. மேய்ச்சலுக்கு சின்னப் பயகளைக் கூட்டியாரலாமாய்யா..?’

கீதாரிக்கு நிலைமை எதுவும் பிடிபடவில்லை. அவர் தடுமாறி நிற்க, சத்தம் கேட்டு ராமுவும் ஓடிவந்துவிட்டார்.

‘என்னாச்சுங்கய்யா, எதும் வில்லங்கமா?’ – ராசகிட்ணனுக்கு வார்த்தைகள் தடுமாறின.

‘வில்லங்கம்மா? பச்சப்பயல அடாத மழையில அலையவிட்ருக்கீக. காட்டுக்குள்ள வந்தவன் வழி தெரியாம பள்ளத்துல விழுந்து செத்துப்போனான்யா. லாரிக்காரன் ஒருத்தன் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணினான்.’ ராசகிட்ணனுக்கு உடல் வெலவெலத்தது.

‘என்னய்யா சொல்றீக? அவன்தான் எப்பவோ வந்து சாப்பிட்டுப் படுத்துட்டானே…’

ரேஞ்சருக்கு அவர் சொன்னதைக் கேட்டதும் கோபம் அதிகமாக இன்னோர் அறை விட்டார்.

‘ஏன்டா… நான் என்ன சொல்லிக்கிட்ருக்கேன். நீ தனியா ஒரு கதை சொல்ற?’

ராமு அவரை விலக்கிவிட்டு வேகமாக முன்னால் வந்து, ‘அய்யா… பொய்யா நெசமானு நீங்களே வந்து கூடாரத்துல பாருங்க’ – ஆவேசமாகக் கத்தினான்.

ரேஞ்சர் திரும்பி ஜீப்புக்குப் போனான். அவனுடன் இருந்த காவலரும் அவனுமாகச் சேர்ந்து இப்போது அப்புவைத் தூக்கிக்கொண்டு வந்தனர். பார்த்துக்கொண்டிருந்த இவர்கள் இருவருக்கும் அச்சத்தில் உடல் நடுங்கியது. ராசகிட்ணனுக்கு நடந்தது இன்னும் முழுமையாக விளங்கவில்லை. ரேஞ்சர் தூக்கிவருவதும் சந்தேகமே இல்லாமல் அப்புதான். வேகமாக ஓடிப்போய் அப்பு படுத்த கூடாரத்தைப் பார்த்தார். போர்வை அலுங்காமல் விரித்தபடி அப்படியே இருந்தது. கட்டிலைத் தொட்டுத் தடவிப்பார்த்தார். அங்கு ஓர் ஆள் இருந்ததற்கான எந்த ஓர் அடையாளமும் இல்லை. ஆனால், விநோதமான ஒரு வாசனை மட்டும் கட்டிலில் இருந்து மூர்க்கமாகச் கசிந்து கொண்டிருந்தது. சடார் என பிடிபடவில்லை. ஆழமாக மூச்சை உள் இழுத்துப்பார்த்தார். ஆவாரம் பூக்களின் வாசனை!

– அக்டோபர் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *