கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 22,425 
 

வெளியே நிலா வெளிச்சம் பாலாய் காய்ந்துகொண்டிருந்தது. வெனீஷியன் ப்ளைண்ட்ஸிலிருந்து சந்திரன் அரைகுறையாய் தென்பட்டுக் கொண்டிருந்தான். மொட்டை மாடிவரையில் படர்ந்திருந்த ஜாதி மல்லிகை ஜன்னல் விழியாக நறுமணத்தை குப்பென்று வீசிக்கொண்டிருந்தது.

தொலைவில் எங்கிருந்தோ பதினோரு மணியடித்த ஓசை. மறுபடியும் நிசப்தம். ஊர் முழுவதும் நிசப்தமாக தூக்கத்தில் ஆழ்ந்திருந்து.

மயக்கம் குறைந்து விட்டாலும் இன்னும் முழுவதுமாக தெளியவில்லை. திரும்பிப் பார்த்தான். பக்கத்தில் சிறுக் குழந்தையைப் போல் அப்பாவியாக உறங்கிக் கொண்டிருந்தாள் மாலதி. குவித்த தாமரை மொட்டு போல் இருந்தன இமைகள் மூடிக்கொண்டு படுத்திருந்த கண்கள். திருந்திய மூக்கு, அழகான உதடுகள், உதட்டிற்குக் கீழே சின்ன குழி. வெண்மை நிற புடவையில், பூனைக்குட்டியைப் போல் படுத்துக் கொண்டிருந்த மாலதியைப் பார்த்தபோது, ஏதோ இனம் புரியாத உணர்வு மனம் முழுவதும் பரவியது போலிருந்தது. கன்னங்களில் விழுந்த கேசங்களை ஆள்காட்டி விரலால் மெதுவாக காதுக்குப் பின்னால் ஒதுக்கி சரி செய்தான். அந்த லேசான ஸ்பரிசத்திற்கே கண்களைத் திறந்தாள். தூக்கக் கலக்கத்தினால் இமைகள் கொஞ்சம் பாரமாய் கீழ் நோக்கித் தாழ்ந்திருக்க நெருங்கி வந்து அவன் கழுத்தைச் சுற்றிலும் கைகளைப் போட்டுக் கொண்டு முறுவலித்தாள்.

“தூக்கம் வரவில்லையா?” மென்மையான குரலில் கேட்டாள்.

சூடான மூச்சுக்காற்று அவள் உதடுகளைத் தாக்கும் அளவிற்கு இன்னும் கிட்டே நெருங்கி “ஊஹ¤ம்” என்றான் அவன்.

“தாலாட்டு பாடட்டுமா?” என்றாள்.

“பாடு” என்றான். “வாயால் இல்லை.”

“சீ … குறும்பு.”

குறும்புத்தனம் செய்யாமல் ஒருநிமிஷம் இருக்க முடிந்தது அவனால். ஆனால் மனம் சும்மா இருக்குமா? தலையை உயர்த்தப் போனான்.

“எழுந்திருக்காதீங்க” என்றாள். அந்தக் குரலில் குறும்புத்தனம் இல்லை. அவனுக்குக் கொஞ்சம் வியப்பாக இருந்தது. ஏதாவது சீரியஸான விஷயத்தைப் பற்றிப் பேசும்போது அவள் குரல் அவ்வாறு வித்தியாசமாக ஒலிக்கும்.

ஒரு நிமிஷம் மௌனமாக கழிந்தது.

“ஒரு விஷயம் கேட்கட்டுமா?” என்றாள் அவள்.

அவன் பதில் பேசவில்லை. அவளுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பற்றி விமரிசிக்கும் போது நேருக்கு நேராக பேசிவிடுவாள் மாலதி. அதை எதிர்த்துப் பேசுவது ஒரு விதத்தில் சாகஸமாகவே ஆகிவிடும்.

“நமக்குத் திருமணமான அந்த நாளெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

இந்த பீடிகை எதற்காகவோ அவனுக்குப் புரியவில்லை. கேட்டுக்கொண்டு பேசாமல் இருந்தான்.

இருவருக்குமிடையே இருந்த நிசப்தம் ஓடி மறைந்தது. அவள் சொன்னாள். “அந்த மாலை வேளைகள் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஐந்து மணி ஆனதுமே பால்கனியில் வந்து நின்று உங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பேன். சைக்கிளிலும், ஸ்கூட்டரிலும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் மக்கள், கார்களின் இரைச்சல். திடீரென்று தெருக்கோடியில் திரும்பி இந்த பக்கமாக வந்து கொண்டிருக்கும் உங்களைப் பார்ப்பேன். இவை எதற்குமே சம்பந்தம் இல்லாதது போல், யோசனையில் ஆழந்த படியே, தலை குணிந்துகொண்டு அவசர அவசரமாக நடந்து வந்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் நெருங்க நெருங்க ஏதோ இனம் புரியாத உணர்ச்சி என் மனம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும். வந்துவிட்டீர்கள்… நீங்கள் வந்துவிட்டீர்கள் என்ற உணர்ச்சி என்னுள் பரவசத்தை ஏற்படுத்தும். அந்த உணர்ச்சியில் இருக்கும் சந்தோஷத்திற்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் அப்படி காத்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்.

நீங்கள் ஜெனரல் மேனேஜர் ஆகிவிட்டீர்கள். அந்தஸ்து உயர்ந்து விட்டது. கார் வாங்கப் போகிறிர்கள். பெரிய சர்கிள்களில் நண்பர்கள்… கிளப்புகள். ஆனால் எனக்கு ஏனோ அந்த நாட்கள், அந்த மாலை வேளைகளே நன்றாக இருந்தன.” அவள் கொஞ்சம் பாரமாக மூச்சுவிட்டாள். “நீங்கள் மாறிப் போயிட்டிருக்கீங்க. கொஞ்சநாளாக மாறிப் போயிட்டீங்க. அதுதான் எனக்கு பயமாக இருக்கு. மாலையில் ஒரு மணி நேரம் கிளப்பில் கழித்துவிட்டு வீட்டிற்கு வருவது பழக்கமாகிவிட்டது. அந்த பழக்கம் இப்பொழுது தேவையாக மாறிவிட்டது. எதற்கு என்றால் என்ன பதில் சொல்ல முடியும்? நானும், என்னுடைய நெருக்கமும் முன் போல் உங்களுக்குச் சந்தோஷத்தைத் தருவதில்லையா? இது உண்மை என்றால் என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.” அவள் குரல் பாரமாகிவிட்டது. “நேற்று நீங்கள் பேசும் போது ஏதோ நாற்றம் வந்தது.” அவன் திடுக்கிட்டான். அவளே மேலும் சொன்னாள். “இனி இந்தப் பழக்கம் கூட தேவையாக மாறிவிட்டால்!” திடீரென்று சற்றும் எதிர்பாராத அளவிற்கு வேதனை அவள் குரலில் தென்பட்டது. அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை.

அந்த சமயத்தில் அவனுக்கு செத்துப் போகலாம் போல் இருந்தது. இந்த ராத்திரி வேளையில் இப்படி விசும்பினாள் என்றால் ஓஹ்! உண்மையிலேயே இன்று பகல் முழுவதும் நரகத்தை அனுபவித்திருப்பாள். சீ… அவன் ஒரு ரோக்! இடியட்!

யோசனையிலிருந்து மீண்டவனாய் சொன்னான் அவன். “நீ என்னவோ வீணாக ஊகித்துக்கொண்டு கவலைப்படுகிறாய் மாலதி! நேற்று என்னதான் நடந்தது என்று உன்னிடம் சொல்லாமல் போனது என்னுடைய தவறுதான். நேற்றைக்கு ஆடிய எல்லா ஆட்டத்திலும் அதிர்ஷ்டம் என்னையே வரித்தது. எல்லோரும் ஸ்டன் ஆகிவிட்டார்கள் என்றால் போரேன்! ராத்திரி ஆட்டத்தை விட்டு எழுந்திருக்கும் போது கிட்டதட்ட ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்திருந்தது. அதனால்தான் நண்பர்கள் எல்லோருமாக சேர்ந்து வற்புறுத்தினார்கள், பார்ட்டீ தரச்சொல்லி. அவர்களுடன் சேர்ந்து நா…னும் குடித்துத் தீரவேண்டியிருந்தது. அது கூட வெறும் பியர்தான் வேறொன்றுமில்லை.”

மாலதி பதில் பேசவில்லை.

அவன் செய்தது தவறு. அதை ஒப்புக்கொண்டுவிட்டால் மட்டும் போறாது. இனிமேல் செய்யக்கூடாது. இது பண்பாடு அவனுக்குக் கற்றுத் தந்திருக்கும் பாடம்.

கொஞ்ச நேரம் நிசப்தம் நிலவியது. அவன் ஏதோ சொல்லப்போனான். அதற்குள் தொலைவிலிருந்து யாரோ லேசாக அழுதுகொண்டிருக்கும் சத்தம் கேட்டது. கொஞ்ச நேரத்திற்குள்ளேயே பெரியதாகி விட்ட அக்குரலை சாவித்திரியுடையது என்று அவன் புரிந்துகொண்டான்.

அது அவர்களுக்குப் பழக்கப்பட்டதுதான்.

அந்தக் கட்டிடத்துக் காம்பவுண்டு சுவற்றுக்கப்பாலிருந்தது ரிக்ஷாக்காரன் சோமுவுடைய குடிசை. தினமும் சம்பாதிப்பதில் பாதியைக் குடியில் செலவழித்து விட்டுதான் திரும்புவான் அவன். அப்பொழுது அவன் பெரிய ஹீரோவாகிவிடுவான்.

“பாவம்! ஏன்தான் அவன் அவளை அப்படி அடித்துக் கொல்கிறானோ?” என்றான் தனக்குள் சொல்லிக்கொள்வது போல்.

“அவன் மட்டும் என்ன செய்வான்? குடித்திருக்கும் போது என்ன செய்கிறோம் என்றே அவனுக்குத் தெரியாது. மயக்கம் தெளிந்த பிறகு வருத்தப்படுவான்” என்றாள் மாலதி.

*******************************************************************

மாலை ஆகிவிட்டது.

பால்கனியில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டிற்கு முன்னால் அழகான தோட்டம். சின்ன போர்ட்டிகோ. எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த அவனுக்கு கனவிலும் ஊகித்துப் பார்த்திராத அளவுக்கு, மாலதியோடு திருமணம் ஆனதும், அதிர்ஷ்டம் கூடி வந்தது. ஒவ்வொரு படியாக, மேலும் மேலும் உயர்ந்த மட்டத்தில் புதிய அறிமுகங்கள், புதிய பழக்கங்கள்.

திடீரென்று நேற்று இரவு நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது.

நேற்று….

நேற்று!

ஆயிரம்! ஆடிய மூன்று மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய்! இதே விதத்தில் வந்தால் ஒரு வருஷத்தில்? அதற்குமேல் அவனால் யோசிக்க முடியவில்லை. லட்சங்கள்!

தன் யோசனையை நினைத்து அவனுக்கே சிரிப்பு வந்தது. கடியாரத்தைப் பார்த்தான். ஐந்து முப்பத்தைந்து. கிளப்பிற்கு நேரமாகிக் கொண்டிருந்தது. உண்மையில் இந்தப் பழக்கம் மாலதி சொன்னாற்போல் தேவையாக மாறிவிட்டது. இந்த விஷயத்தை இது வரை கவனிக்கவில்லை.

மறுபடியும் கடியாரத்தைப் பார்த்தான். வினாடி முள் வேகமாக சுற்றிக் கொண்டிருந்தது. பெரிய முள் ஒன்பதின் மீதும் சிறிய முள் ஆறின் மீதும். ஐந்தே முக்கால்!

போக வேண்டும்.

தொலைவில் சாலையில் ஜனங்களும் கார்களும்.

மெயின் ரோட்டிலிருந்து கிளையாக பிரிந்து அவர்கள் கட்டடத்திற்கு முன்னாலிருந்து போகும் மண்சாலை ஏறக்குறைய ஆளரவமில்லாமல் இருந்தது. சாலை ஓரத்தில் பத்து வயது சிறுமி ஒருத்தி மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள். சாவித்திரியின் மகள் போல் இருந்தது. சாவித்திரி குடிசையின் பின் பக்கத்தில் பற்றுப்பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தது இங்கிருந்து பார்க்கும் போது நன்றாக தெரிந்தது.

சிறுமி அவன் வீட்டைத் தாண்டிக் கொண்டுதான் போவாள். கையிலிருந்த எதையோ மேலே தூக்கிப் போட்டு பிடித்துக்கொண்டே போனாள். அப்படி விளையாடிக்கொண்டே ரொம்ப தூரத்திலிருந்து நடந்து வந்துக் கொண்டிருந்தாள் போலும். அது பத்து பைசா நாணயமோ அல்லது நாலணா காசோ?

மிக சாதாரணமான விளையாட்டு. ஆள்காட்டி விரலுக்கடியில் கட்டை விரலை வைத்து அதன் மீது நாணயத்தை வைத்து உயரே தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தாள். பிறகு இருகைகளையும் நீட்டி அந்த நாணயம் கைக்குள் விழும்படி செய்தாள்.

கீழே இறங்கி கேட்டிற்கருகில் வந்தான் அவன். அந்த சிறுமி அவன் வீட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தாள். கையிலிருந்த நாணயத்தை திரும்பவும் மேலே தூக்கிப் போடப் போன பொழுது அவனைப் பார்த்துவிட்டு வெட்கத்துடன் நிறுத்திக்கொண்டாள்.

அவன் சிரித்தான். “பாப்பா! அதோ பார்! அந்த மரம் உயரத்திற்கு தூக்கிப் போட்டு பிடித்தாய் என்றால் ஓரு ரூபாய் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு பர்சை எடுத்து கையில் வைத்துக் கொண்டான்.

ஒரு வினாடி தன் எண்ணத்தை நினைத்து தனக்கே சிரிப்பு வந்தது அவனுக்கு. சிறுமி சவால் விடுவது போல் தலையை அசைத்தாள். நேற்று மேஜைக்கு முன்னால் அவன் உட்காரப் போனபொழுது ஜோஷி பார்த்தப் பார்வை நினைவிற்கு வந்தது அவனுக்கு.

பந்தை வீசி எறிவதுபோல் நாலணாவை மேலே தூக்கியெறிந்தாள் சிறுமி. காசு மேலே .. மேலே போய் வேகமாக கீழே இறங்கி … அதற்குள் … எங்கே?

விழுந்த இடத்தை கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு தேடத் தொடங்கினாள்.

கடைசி நோட்டுக் கற்றை அவனுக்கு முன்னால் தள்ளியபோது கூட ஜோஷியின் முகத்தில் அப்படிப்பட்ட இயலாமைதான் தென்பட்டது.

தனக்குள் சிரித்துக்கொண்டே நடக்கத் தொடங்கினான். வேண்டுமானால் அந்தச் சிறுமிக்கு நாலணாவைத் தந்திருக்கலாம் அவன். ஆனால் அவனுக்கு அதில் விருப்பம் இல்லை. ஓருக்கால் அவன் இந்தப் பந்தயத்தில் தோற்றுப்போய் ஒரு ரூபாயை இழந்திருந்தால் அவனைப் பார்த்து யாருமே இரக்கப்பட்டு அதைத் தரமாட்டார்கள் இல்லையா என்ற உணர்வு அவனை அந்த நாலணாவைத் தர விடாமல் செய்தது.

மெதுவாக நடக்கத் தொடங்கினான். அதற்குள் பின்னாலிருந்து சோமு ரிக்ஷாவை ஓட்டிக்கொண்டு வந்து அவனுக்குப் பக்கத்தில் நிறுத்தினான். அவன் எப்பொழுது வெளியே போவான் என்று அவனுக்கு நன்¡றாகத் தெரியும்.

ரிக்ஷாவில் ஏறிக்கொண்டே தன்னையறியாமல் வீட்டை நோக்கித் திரும்பினான். ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி மாலதி நின்றுகொண்டிருந்தாள். சட்டென்று திரும்பி “போகலாம்” என்றான் சோமூவைப் பார்த்து.

ரிக்ஷா மெதுவாக போய்க் கொண்டிருந்தது. சோமுவைப் பார்த்தான். இப்பொழுதெல்லாம் அவன் பலம் குன்றிக் கொண்டிருந்தது. அதிகமாக குடிப்பதால் போலும். வயதுக்கு மீறிய தோற்றம். ஏனோ அவனிடம் பேச்சு கொடுக்க வேண்டும் போலிருந்தது.

“இன்றைக்கு எவ்வளவு சம்பாத்தித்தாய்? என்று கேட்டான். “உங்களுடையதுதான் போணி சாமி! காலையிலிருந்து சல்லிகாசு வரும்படி இல்லைங்க.”

“நேற்றைக்கு?”

ஒரு வினாடி யோசித்துவிட்டு “ஐந்தோ ஆறோ வந்ததுங்க” என்றான்.

“பரவாயில்லை. நல்ல வருமானம்தான்.”

“என்ன வருமானமோ? ரெண்டு குடிக்கறதுக்கும், ரெண்டு பிராக்கெட்டுக்ம் போய்விட்டால் என்ன மிஞ்சியிருக்கும்?” என்றான் விரக்தியாக.

ஏதோ காஸ்ட் ஆ·ப் லிவிங் அதிகமாகிவிட்டது போல் அவன் பேசியதைக் கேட்டு சிரிப்பு வந்தது. “போகட்டும். பிராக்கெட்டை விட்டுத் தொலைக்கக் கூடாதா?” என்றான்.

“”விட்டுட்டு என்னத்தை செய்யச் சொல்றீங்கய்யா? அது இருந்தால் ராத்திரி ஒரு மணிவரைக்கும் கடைத்தெருவில் பொழுதை போக்கிவிட்டு, க்ளோஸிங் வந்த பிறகு வீட்டுக்கு வந்து படுத்துக்கலாம். சீக்கிரம் வீட்டுக்கு வந்தால் பெண்டாட்டியோட தொல்லை தாங்க முடியாது” என்றான் சோமு.

சீட்டில் பின்னால் சாய்ந்துகொண்டே கேட்டான். “இதில் ஏதாவது லாபம் கிடைக்குமா?”

“என்ன லாபம் சாமீ! இன்னிக்கு வந்தால் நாளைக்கு ரெண்டு மடங்கு அதுக்கே போய்விடும்.”

“பின்னே எதுக்காக ஆடுகிறாய்?”

“அதான் சொன்னேனே சாமீ! வீட்டுக்கு சீக்கிரமாக போய்விட்டால், போனதிலிருந்து ஒரே கழுத்தறுப்பு.”

அவனுக்கு திடீரென்று மாலதியைப் பற்றி நினைவிற்கு வந்தது. அவன் வீட்டிற்கு வர எவ்வளவு தாமதமானாலும் கொஞ்சமும் எரிச்சலடையாத அந்தக் கண்கள்! அந்தப் பண்பு! அடுத்தவர் மனம் நோகாமல் நடந்துக் கொள்ளும் விதம் மாலதிக்கு நன்றாகத் தெரியும். அவர்களிருவருக்குமிடையே என்றுமே பிரச்னை வந்ததில்லை. வராது கூட. “நானும் என் நெருக்கமும் முன் போல் உங்களுக்குச் சந்தோஷத்தைத் தருவதில்லையா?” என்று மாலதி கேட்ட வார்த்ததைகள் நினைவிற்கு வந்தன. அவன் எதற்காக இப்படி மாறிப்போய்க் கொண்டிருக்கிறான்? எதை மறந்து போவதற்காக? அவனுக்கு எந்த வருத்தமும் இல்லையே? பணம் சம்பாதிப்பதற்காகவா? இந்த ரிக்ஷாக்காரனுக்குக் கூட தெரியுமே இந்த ஆட்டத்தில் எதுவுமே எஞ்சியிராது என்று. பின்னே எதுக்கு?

இந்த யோசனைகளைச் சிதறடித்தவாறு சோமு சொன்னான். “எங்களுக்கு எங்கேயுமே பிடிக்க முடியவில்லை சாமீ! ஓப்பனிங்க வந்தால் க்ளோஸிங் ஆப்போஸிட் தந்துடறாங்க.”

அவன் பதில் பேசவில்லை. திரும்பவும் சோமுவே சொன்னான். “முந்தாநாள் யாரோ நன்றாக படித்தவன் போல்தான் தென்பட்டான். இன்னிக்கு டபுள் ஜீரோ ஆடு என்றான். எதற்கும் நல்லதுன்னு பத்து பைசாவை அந்த எண்ணில் போட்டேன். காலையில் பார்த்தால் வந்து விட்டது.” அவன் சொல்லிக் கொண்டிருந்தபோது கிளப் வந்து விட்டது.

ரிக்ஷாவிலிருந்து இறங்கிக் கொண்டு, ஜேபியிலிருந்து ரூபாயை எடுத்துத் தந்தான். அதை வாங்கிக் கொண்டே “சில்லறை இல்லீங்க சாமீ” என்றான். கடியாரத்தைப் பார்த்தான் அவன். பெரிய முள் பன்னிரெண்டின் மீதும் சின்னமுள் ஆறின் மீதும். எல்லோரும் சேர்ந்துவிட்டிருப்பார்கள்.

“பரவாயில்லை. வைத்துக்கொள். அந்த எஞ்சிய பணத்தைப் போட்டு பிராக்கெட் ஆடிவிடு” என்றான் சிரித்துக்கொண்டே.

சோமு ஆர்வத்துட்ன் “நம்பரை நீங்களே சொல்லுங்கய்யா! இந்த ரூபாயை அதன்மீதே போடுகிறேன்” என்றான்.

அவன் உரிமை எடுத்துக்கொண்டு பேசியதற்கு ஆச்சரியப்பட்டாலும் சிரித்துக்கொண்டே, “ஆறு ஒன்பது, இவற்றின் மீது ஆடு” என்றான் உள்ளே அடியெடுத்து வைத்துக்கொண்டே.

***************************************************************************

மணி எட்டாகிவிட்டது. அவன் வெளியே வந்தான். கிளப்பிலிருந்து இவ்வளவு சீக்கிரமாக திரும்பி வருவது இதுதான் முதல் தடவை. இரண்டு மணி நேரத்திற்குள் நேற்று வந்த ஆயிரத்தோடு கூட மேலும் ஆயிரத்தைநூறு ரூபாயும் போய்விட்டது. போனதற்குக் கூட வருத்தமில்லை. ஜோஷி பார்த்த பார்வை! ஓஹ்! ஹெல்!

ஜுரம் வந்தாற் போலிருந்தது. நெற்றியில் திரும்பத் திரும்ப வியர்த்த்து கொண்டேயிருந்தது. ஏதோ புரிபடாத வெறுப்பு உள்ளிருந்து பொங்கிக் கொண்டிருந்து. யார் மீதென்று தெரியவில்லை. நேற்று இதே நேரத்தில் எவ்வளவு ஆர்வத்தோடு விளையாடிக் கொண்டிருந்தான்! நேற்று அவனிடமிருந்து பார்ட்டீ வாங்கிக் கொண்ட நண்பர்கள் யாருமே கம்பெனி கொடுக்க மாட்டார்கள். வெறுமே இரக்கத்தோடு பார்ப்பதோடு சரி. வேண்டுமானால் “பெஸ்ட் லக் நெட்ஸ்ட் டைம் ” என்று வாழ்த்துவார்கள். அவ்வளவுதான்.

எதிரே பார் விளக்குகள் வரவேற்றபடி தென்பட்டன. இந்த சமயத்தில் கவலை போக வேண்டுமென்றால் வேறு எந்த வழியும் தென்படவில்லை. தன்னையறியாமலேயே உள்ளே போனான். கௌண்டருக்குக் கொஞ்ச தூரத்தில் சியாம் நேற்று உட்கார்ந்துகொண்ட அதே இடத்திலேயே உட்கார்ந்துகொண்டான். தலை வெடித்துவிடும் போலிருந்தது. விரல்களை கேசங்களுக்குள் அளையவிட்டுக் கொண்டு நெற்றிப் பொட்டை உள்ளங்கையால் அழுத்திக் கொண்டான். அதற்குள் பேரர் வந்தான்.

“டு பெக்ஸ், சோடா, சிப்ஸ்.” உத்தரவு தந்தான். பேரர் கௌண்டரிடம் போய் அலமாரியிலிருந்து பாட்டிலை எடுத்து கிளாஸில் நிரப்பிக் கொண்டிருந்தான். பாட்டில் மேல் ஆறு ஒன்பது. பாட்டிலை தலைகீழே வைத்தாலும், ஆறு ஒன்பதாகவே தெரியும். குடி மயக்கத்தில் எல்லா பொருட்களுமே தலைகீழாக தென்பட்டாலும் ஆறு ஒன்பது மட்டும் அப்படியேதான் தெரியும் என்று யோசித்துப் பார்த்தபொழுது அத்தனை எரிச்சலிலும் சிரிப்பு வந்தது.

அரைமணியில் பாரை விட்டு வெளியே வந்தான். ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு வீட்டு விலாசத்தை சொன்னான். தலைவலி மட்டும் குறைந்திருந்து. ஆனால் கலக்கம் போகவில்லை. இன்னும் அதிகமாகிவிட்டது போல் இருந்தது. உடல் சுவாதீனத்தின் இல்லாவிட்டாலும் மனம் மட்டும் யோசித்துக்கொண்டே இருந்தது. விட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தானோ அவனுக்கே தெரியாது. காம்பவுண்ட் கேட்டைத் திறந்துகொண்டு, வாசலுக்கு வந்து, கதவைத் தடதடவென்று தட்டினான். ஒரு நிமிஷம் தாமதமாயிற்று. அந்த ஒரு நிமிஷம் நின்றுகொண்டிருப்பதற்குகக் கூட எரிச்சலாக இருந்தது.

இன்னொரு முறை கதவை ஓங்கித் தட்டப் போனபொழுது மாலதி கதவைத் திறந்தாள். அந்த வேகத்தில் முன்னுக்கு விழப் போய் , பலமாக காலை ஊன்றிச் சமாளித்துக் கொண்டான். அந்த நிமிடத்தில் அவன் பண்பு எங்கே போயிற்றோ அவனுக்கே தெரியாது. “இவ்வளவு நேரமாக எங்கே போய்த் தொலைந்தாய்?” என்றான்.

மாலதி ஒரு நிமிடம் பதில் பேசவில்லை. அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டே “இன்றைக்குக் கூட குடிச்சீங்க இல்லையா?” என்று கேட்டாள்.

அவ்வளவுதான். அதுவரை அவனுள் அந்தரங்கமாக படிந்துபோயிருந்த எரிச்சல் சட்டென்று கட்டுமீறிக்கொண்டு வெளியேறியது. “இன்றைக்குக் கூட…” ஏதோ ஏளனமாக தன்னை கேலி செய்வது போல் தோன்றியது. ஒரு வினாடி தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் அவள் கன்னத்தில் பலமாக ஓங்கி அறை விட்டான்.

கொஞ்ச நேரம் பயங்கரமான நிசப்தம் அவ்விருவருக்கும் இடையே நிலவியது. அவன் மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பனி கரைந்தாற்போல் அவனை விட்டுப் போயிற்று.

மாலதி விசும்பி விசும்பி அழவில்லை. குறைந்தபட்சம் அவள் கண்களில் கண்ணீர்கூட ததும்பவில்லை. சலனமில்லாமல் பார்த்துவிட்டு ஒதுங்கி அவன் உள்ளே போவதற்கு வழிவிட்டாள்.

அதுபோதும்! அந்த பார்வையில் தென்பட்ட சலனமின்மை போதும், அவன் இதயத்தை ரம்பத்தால் அறுததெறிவதற்கு. மனம் ஒன்றுபட்ட நெருக்கமானவர்களுக்கு இடையே கோபம் வந்தால் கெஞ்சலோ அல்லது கொஞ்சலோ அதைப் போக்கடிக்க முடியும். ஆனால் அவர்கள் நம் மீதுள்ள கோபத்தை சலனமில்லாமல் எடுத்துக்காட்டினால் அதைவிட நரகம் வேறு இல்லை.

*******************************************************************************

மாலை ஐந்தரை ஆகிவிட்டது. காலையிலிருந்§து அவனுக்கு எரிச்சலாக இருந்தது. எந்த வேலையிலுமே மனம் சரியாக நிலைக்கவில்லை. நேற்று இரவு நடந்த சம்பவத்திற்குப் பிறகு மாலதியை எந்த முகத்தை வைத்துக் கொண்டு பார்ப்பது என்று தெரியவில்லை.

காம்பவுண்ட் கேட் அருகில் நின்றான். கிளப்பிற்கு போனால் கொஞ்சம் நிம்மதி கிடைக்கக் கூடும் என்று தோன்றியது. அதோடு நேற்று பணம் போய்விட்டதே என்று நினைக்கும் போது ஆத்திரமாகவும் இருந்தது.

பக்கத்து குடிசையைப் பார்த்தான். குடிசைக்கு முன்னால் ரிக்ஷாவைக் காணவில்லை. சோமுவின் மீது கோபம் வந்தது அவனுக்கு. ஜங்கஷனில் ரிக்ஷா பிடிக்கலாம் என்று நினைத்து இரண்டடிகள் வைத்தவன் அப்படியே நின்று விட்டான். எதரே கொஞ்சம் தூரத்தில் பெட்டிக்கடைக்கு முன்னாலிருந்த போர்டின் மீது சாக்பீஸால் எண் எழுதப்பட்டிருந்தது.

ஆறு ஒன்பது! சந்தேகமில்லை. ஆறு ஒன்பதுதான்.

“எண்ணை நீங்களே சொல்லுங்க சாமீ! அப்படியே ஆடுகிறேன்” என்று சொன்ன சோமுவின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.

அந்த போர்டில் போடப்பட்டிருந்த எண் நேற்றிரவு வந்தது என்றும், அதன் மீது சோமு கட்டிய பணத்திற்கு எழுபது ரூபாய் வந்திருக்கும் என்று அவனுக்குப் புரிந்தபோது ஏதோ புரியாத உத்வேகம் அவனுள் பரவியது.

இந்தப் பணத்தை என்ன செய்திருப்பான்? முட்டாள்! இவனுக்கு நன்றி என்பதே இல்லையா? குறைந்த பட்சம் மாலையில் கிளப் நேரத்திற்கு முன்னால் தன்னை வந்து பார்த்திருக்கலாம் இல்லையா?

அதற்குள் எதிரே சோமுவின் மகள் வந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். “இன்றைக்கு உங்க அப்பா ரிக்ஷாவை எடுக்கவில்லையா?” என்று கேட்டான். அந்தச் சிறுமி அவன் அருகில் வந்து நின்று “எங்க அப்பாதான் ஆஸ்பத்திரியில் இருக்காரே” என்றாள்.

திடுக்கிட்டான்.”ஆஸ்பத்திரியிலா? என்றான்.

ஏதோ பெரிய விஷயத்தை அவனுக்குச் சொல்வதுபோல் “ஆமாம். உங்களுக்குத் தெரியாதா? காலையில் அப்பா மேல் லாரி ஏறிடுச்சே? அதனால் அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க. காலை எடுத்து விடப் போறாங்களாம்” என்றாள்.

“காலை எடுக்கணுமா? ஆக்ஸிடெண்டு எப்படி நடந்தது?” என்று கேட்டான்.

அந்தக் கேள்வி புரியாதவளாக அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு “அம்மா அழுதுகிட்டே அப்பாவை திட்டினாங்க, காலையிலேயே நன்றாக குடிச்சுட்டு ரிக்ஷாவை ஓட்டுகிறாயா என்று” என்றாள்.

அவன் அதிர்ச்சியடைந்தவனாக அப்படியே நின்றுவிட்டான்.

நிமிஷத்தில் அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. பிராகெட்டில் பணம் கிடைத்ததே பேரிய விஷயமாக நினைத்திருப்பான். அதுவும் எழுபது ரூபாய்! வேறென்ன? காலையிலேயே அந்த எழுபது ரூபாயை எடுத்துக் கொண்டு, வயிறுமுட்டக் குடித்துவிட்டிருப்பான், சந்தோஷம் தாங்கமுடியாமல். அதன் விளைவுதான் இது.

இப்படி நடு ரோட்டில் நின்றுகொண்டு யோசிப்பதில் அவன் பண்பாட்டிற்கு எந்தக் குந்தகமும் ஏற்பட்டுவிட்டதாக அவனுக்குத் தோன்றவில்லை.

இப்பொழுது அவனைத் துளைத்தெடுக்கத் தொடங்கியிருந்த பிரச்னை இதில் அவனுடைய பங்கு எவ்வளவு என்றுதான்!

மனதை எவ்வளவு சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றாலும் முடியவில்லை.

“தேர் ஈஸ் சம்தங் சம் வேர் ராங்!”

“அவன் மட்டும் என்ன செய்வான்? குடித்திருக்கும்போது என்ன செய்கிறோம் என்றே அவனுக்கு தெரியாது.” மாலதி சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனாலும் எழுபது ரூபாய் வந்துவிட்டதற்கு இப்படியா காலையிலேயே போய் குடிப்பது?

இந்த ஆட்டத்தில் எதுவும் மிஞ்சியராது என்றும், அதனால் வந்தபோது சந்தோஷப்படுவதும், போனபோது வருத்தப்படுவதும் வீன் என்று தெரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு பண்பாடு சோமுவிடம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அவனுக்கு அது இருக்கிறதா?

இந்த யோசனை வந்ததுமே திடுக்கிட்டான். அவன் செய்தது மட்டும் என்ன? அவனுள் சதா குமுறிக் கொண்டிருந்த இந்த மனப் போராட்ம் தீவிர நிலையை அடைந்தது.

அவனுக்கும் சோமுவுக்கும் இந்த விஷயத்தில் வேறுபாடு இல்லையா?

அவ்வளவு மனஉறுதி இல்லாதவனா தான்? கெட்ட வழக்கங்களுக்கு அடிமையாகி, தம் நடத்தைக்கு தாமே சால்ஜாப்பு சொல்லிக் கொள்ளும் நிறையபேருக்கும் அவனுக்கும் வேறுபாடு இல்லையா? உதறிவிடலாம் என்று தீர்மானித்துக் கொண்டுவிட்டால் இந்தக் குடி என்ன? சீட்டாட்டததையே கூட விட்டு விட முடியும் அவனால்.

விருட்டென்று திரும்பி “வா” என்றான். இருவரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள்.

மனம் லேசாகிவிட்டாற்போல் நிம்மதியாக உணர்ந்தான். அதுவரை மனதில் படிந்துப் போய்விட்டிருந்த வருத்தமெல்லாம் திடீரென்று மாயமாகிவிட்டது போலிருந்தது.

நேற்று எவ்வளவு குடித்த போதிலும் போகாத துன்பம் ஒரே தீர்மானத்தின் மூலம் போய் விட்டது அவனுக்கே வியப்பாக இருந்தது.

“வந்து…” என்றாள் சிறுமி. யோசனையிலிருந்து மீண்டு அவளைப் பார்த்தான். எதையோ சொல்ல வேண்டுமென்று தவித்துக் கொண்டிருந்தாற்போல் தென்பட்டாள்.

“என்ன?” என்றான்.

“நேற்று தெலைந்து போன நாலணா கிடைத்துவிட்டது.”

அந்தச் சிறுமியின் வயது எவ்வளவு சிறியதென்றால் தன் தந்தையின் கால் போய்விட்டதை விட, தன் நாலணா கிடைத்துவிட்டதை , அதை அவனிடம் சொல்ல வேண்டும் என்ற தவிப்புதான் அவளுக்கு முக்கியமான செய்தியாக இருந்தது.

“எப்பொழுது?” என்றான் வியப்புடன்.

ஏதோ பெரிய வெற்றியைச் சாதித்துவிட்டாற்போல், தன் வெற்றியைப் புரிந்துகொள்ளக் கூடியவன் அவன்தான் என்பது போல் “காலையில்! நேற்று சாயங்காலமெல்லாம் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. காலையில் மறுபடியும் தேடிப்பார்த்தேன். கிடைக்காமல் போகுமா?” என்றாள் பெருமை பொங்கும் குரலில்.

சிரித்துவிட்டு “குட்” என்றான். அதே சிறுமி அரைமணிக்கு முன்னால் இந்த வார்ததைகளை சொல்லியிருந்தால் அவனால் சிரித்திருக்க முடியாது. அலட்சியமாக ஒதுக்கித் தள்ளியிருப்பான் அந்த வார்த்தைகளை.

அப்பொழுதுமட்டும் இதே சிறுமி ” காலையில் கூட ரொம்ப நேரம் தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை” என்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தால் பெரிதாக சிரித்திருப்பான் அவன்.

ஒரு நல்ல தீர்மானத்தை, ஒரு நல்ல முடிவை எடுத்துக் கொண்டதில் இருக்கும் சந்தோஷம் புரிந்தது.

கெட்டுப்போவது கூட ஒரு கலையாகவே இருக்கட்டும். ஆனால் மனதில் ஏற்படும் நிரந்தர குமுறல்களைத் தாங்கிக்கொள்வதைவிட, கெட்டுப் போகாமலிருப்பதே சுகம். இந்த சறுக்கு மரத்தின் மீது நின்று கொண்டிருக்கையில் மனக் குமுறல் தொடங்கக் கூடாதே தவிர, அதுவே தொடங்கிவிட்டால் உடனே கொஞ்சம் பிடி கிடைத்தாலும் போதும், மேலே போய்ச் சேர்ந்துவிடுவதுதான் நல்லது.

தெலுங்கில் எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்

– மே 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *