ஆறாங்கல் தர்கா

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 11,553 
 

கல்லா ராவுத்தருக்கு காலையிலிருந்தே மனசு ஒரு நிலையில் இல்லை. அதிகாலையில் ஃபஜர் தொழுது விட்டு, வழக்கம் போல கடைக்கு வந்து விட்டார். எப்போதும் கடையில் இருக்கும் போது எந்தச் சலனமும் இன்றி இருப்பவருக்கு, இன்று அப்படி இருக்க முடியவில்லை. ஒரு வாரமாக இருக்கும் பர பரப்பு இன்று ரொம்ப அதிகமாகவே தெரிந்தது.

கடைத்தெருவில் சிறிய கடை கல்லா ராவுத்தருடையது. முப்பது வருஷத்துக்கு முன்னால் என்ன அமைப்பில் இருந்ததோ, அதே அமைப்பிலேயே இப்போதும் இருக்கிறது. வருஷந்தோறும் வெள்ளை அடித்து, கடையை சுத்தப்படுத்தி, பார்க்க பளிச்சென வைத்திருந்தாலும், கடையை நவீனப் படுத்துவதில் அவருக்கு விருப்பமில்லை. சும்மா கண்ணாடிப் பெட்டிகளை வைத்துக் கொண்டு, ஆடம்பரமாக இருக்க பிடிக்காது என்று சொல்லிக் கொள்வார் கல்லா ராவுத்தார். அதுதவிர, அவரின் வியாபாரமும் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து செய்யும்படியானது இல்லை.

வெற்றிலை, பாக்கு, புகையிலை என்று பல பொருட்களை கடை நிறைய வைத்திருந்தாலும் அவர் கடைக்கு மூக்கு பொடிக்கடை என்று பெயர்தான் நிலைத்துப் போனது. மூக்குப் பொடி விற்கும் அத்தனை கம்பெனிகளின் தயாரிப்புகளும் கல்லா ராவுத்தர் கடையில் இருக்கும். நகரில் பொடி வாங்க வேண்டும் என்றாலே இவரின் கடைதான் நினைவுக்கு வரும். அந்தக் காலத்தில் இருந்த வியாபாரம் இப்போது இல்லை என்றாலும், அவருக்கு கடையை மூடி விடுவதில் விருப்பம் இல்லை. கடையின் இடது ஓரமாக அமைக்கப்பட்டிருக்கும் மேட்டில் ஒரு கல்லாப்பெட்டி, அதன் அருகில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் கல்லா ராவுத்தர் – இதுதான் பலரின் மனதிலும் பதிந்திருக்கும் கடையின் பிம்பம். அதனாலேயே அவரின் இயற்பெயர் கூட பலருக்கும் மறந்து போய் கல்லா ராவுத்தர் என்ற பெயரே நிலைபெற்று விட்டது.

கல்லாவையும், அவரையும் பிரிக்க முடியாத படி, அவர் பெயரைச் சொன்னாலே கல்லாவும் நினைவுக்கு வந்து விடும். மனுஷன் கணக்கிலும் அவ்வளவு கெட்டி. தேவையில்லாத செலவுகள் எதையும் செய்ய மாட்டார். அதே நேரம், உதவி என்று கேட்பவர்களுக்கு முடிந்ததைச் செய்யும் குணம் கொண்டவர். அநேகமாக, கல்லா ராவுத்தரைப் பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு வரவு, செலவு, வியாபாரம், பழக்கம் எல்லாவற்றிலும் சரியாக இருந்து கொள்வார்.

அப்படி சரியாக இருந்ததால்தான் , இந்தச் சின்னக்கடையை வைத்துக் கொண்டு குடும்பத்தை வசதியாக வைத்திருக்கிறார். மூத்த மகனை படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பியதும், மகளை வசதியான இடத்தில் நல்ல சீர், வரதட்சனையோடு கட்டிக் கொடுத்ததும் இந்தக் கடை வருமானத்தில் தான். இப்போது சில ஆண்டுகளாக வியாபாரம் பெரிதாக இல்லை. மகன் அனுப்பும் பணத்திலும், முன்பு வாங்கிப் போட்ட தென்னந்தோப்பு வருமானமும் தான் குடும்பத்திற்கு உதவுகிறது. அவர் மகனும் பலமுறை கடையை மூடி விட்டு, வீட்டில் இருக்குமாறு பலமுறை சொல்லிக் கொண்டே இருக்கிறான். ஆனாலும், கல்லா ராவுத்தரால் சும்மா இருக்க முடியாது.

“அதெப்புடி சும்மா வீட்டில இருக்கிறது. . ? நாலு பேரை பாத்துப் பேச, ஊரு ஒலகத்தோட இருக்க கடதான் நமக்குத் தோதுவு. எனக்கு ஒடம்பு ஏலுற வரைக்கும் கட அதுபாட்டுக்கு இருக்கட்டும்” இப்படிச் சொல்லியே விஷயத்தை முடித்து விடுவார்.

கடைக்கு அடுத்தபடியாக, அவருக்குப் பிடித்த விஷயம் பள்ளிவாசல் வேலைகள். எந்த வேலை என்றாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். தன்னால் முடிந்தவரை செலவுகளையும் சமாளித்துக் கொள்வார். வேறு யாரையாவது பள்ளி வேலைகளைப் பார்க்கச் சொன்னால், போக்குவரத்து – டீ, காப்பிச் செலவு என்று பெரிய பில்லையே கொடுத்து விடுவார்கள் என்பதால் ஜமாத் கமிட்டிக்கும் கல்லா ராவுத்தரைக் கூப்பிடுவது பிடிக்கும். அதே போல, இவர் போகிற வேலையும் சரியாகச் செய்து முடித்து விடுவார். எத்தனை முறை போக வேண்டும் என்றாலும், குறை சொல்லிக் கொண்டிருக்காமல் முடியும் வரை விடாமல் போய் முடித்து விடுவார்.

போன வருட ரம்ஜான் தொழுகைக்காக ஒழு செய்வதற்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட கலெக்டரைப் பார்க்க வேண்டியிருந்தது. வாய்க்காலில் தண்ணீர் இருந்தால் தொழுகைக்கு வரும் ஜனம் எல்லாரும் சுலபமாக ஒழுச் செய்து விட்டு, மைதானத்தில் தொழுவது சிக்கலில்லாமல் இருக்கும். எப்போதாவது வாய்க்காலில் தண்ணீர் இல்லை என்றால், லாரிகளில் தண்ணீர் வாங்கி, அதைப் பிரித்து பல இடங்களில் வைக்க வேண்டும். ஒழுச் செய்த தண்ணீர் ஓடுவதற்கு சாக்கடை வெட்ட வேண்டும். அதனால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவதற்காக, கலெக்டரைப் பார்க்க பள்ளிவாசல் நிர்வாகிகளோடு கல்லா ராவுத்தரும் போயிருந்தார். கலெக்டரைப் பார்க்கவே முடியவில்லை. அவருடைய உதவியாளர் விஷயத்தை தான் சொல்லி விடுவதாகச் சொன்னாலும், வாய்க்காலில் தண்ணீர் வருவது உறுதியாகவில்லை. ஜமாத் ஆட்கள் கூட, லாரி தண்ணீர் ஏற்பாடு செய்யலாம் என்று சொன்னார்கள்.

கல்லா ராவுத்தருக்கு விருப்பம் இல்லை. ”வழமையா நடக்குறத விட்டுக் குடுத்தா எல்லா வருஷமும் இதயே செய்ய வேண்டிவரும். ஒண்ணுக்கு நாலுதடவ அலைஞ்சாலும் பரவாயில்லை. முயற்சி செய்வோம். அப்புறம் அல்லா என்ன நாடுனானோ அது நடக்கட்டும்” என்று தொடர்ந்து ஆபீசுக்கு போய், ஒரு வழியாக கலெக்டரைச் சந்தித்து தண்ணீரை வரவழைத்தார்கள்.

இதே போன்றதுதான் இப்போது வந்திருக்கும் பிரச்சினையும். இது பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினை இல்லை. ஆறாங்கல் தர்கா சம்பந்தமானது. தர்காவுக்கு முழுப் பொறுப்பும் கல்லா ராவுத்தர்தான். அவர் தாத்தா காலத்தில் இருந்து தர்காவுக்கான மராமத்து வேலைகளைப் பார்ப்பதில் இருந்து, தர்கா தொடர்பான எல்லா வேலைகளையும் கல்லா ராவுத்தர் குடும்பம்தான் செய்து வருகிறது. ஆனால், வழக்கமாக வரும் சின்ன சின்ன வேலைகள் போல இது இல்லை. இந்தப் பிரச்சினை கொஞ்சம் சிக்கலானதுதான்.

நகரத்திலிருந்து ஆறு மைல் தொலைவில் அமைந்திருப்பதால் தர்காவிற்கு ஆறாங்கல் தர்கா என்று பெயர் வந்து விட்டது. அதற்கு முன்பு ஒலியுல்லா தர்கா என்றுதான் சொல்வார்கள். வியாழக் கிழமைகளில் ஏதாவது ஒரு குடும்பம் போய் ஓதி, விளக்கு வைத்து விட்டு வருவதும், வருஷத்துக்கு ஒருமுறை பெரிய அளவில் கொடி ஏற்றும் விழா நடப்பது வழக்கம். ஊரில் இருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் நல்லது கெட்டது எது என்றாலும் தர்காவுக்குப் போய் ஒரு பாத்திகா ஓதாமக் இருக்க மாட்டார்கள். தர்காவும் அவ்வளவு பெரியது இல்லை. ரோட்டோரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு சமாதி. அதைச் சிற்றி ஆட்கள் அமரும் விதத்தில் சிறிய சுற்றுப் பாதை. வெயில், மழை விழாத படி மேலே ஒரு கூரை. மூன்று வருஷத்துக்கு முன்புதான் கூரையை மாற்றி விட்டு, ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்டார்கள்.

பரபரப்பு ஆரம்பித்தது போன வாரம் தான். திங்கள் கிழமை நெடுஞ்சாலைத் துறையிலிருந்து நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். சாலை விரிவாக்கப் பணியின் காரணமாக தர்காவை இடிக்க வேண்டியுள்ளதாக குறிப்பிடப் பட்டிருந்தது. கடிதம் பள்ளிவாசலுக்குத் தான் வந்தது. அதை எடுத்துக் கொண்டு சைத்தான் சையதுதான் கடைக்கு ஓடி வந்தான்.

”ராவுத்தரே . . தர்காவை இடிக்கப் போறாங்களாம். . “ சையது மூச்சுவாங்க, அவசர அவசரமாகச் சொன்னான். கல்லா ராவுத்தருக்கு கோபம் வந்ர்து விட்டது. “யார்ரா சொன்ன. . ? லூசுப்பய மாதிரி ஏதாவது ஒளறிக்கிட்டு. . .”

மூச்சு வாங்குவது நின்றவுடன் தன் கருத்த முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே, இடது கையில் சுருட்டி வைத்திருந்த நோட்டீசை வலது கைக்கு மாற்றி கொடுத்து விட்டு சொன்னான். “இல்லத்தா. . . உண்மையிலதேன். ரோடு போடப் போறாங்களாம். . “

மூன்றாக மடிக்கப்பட்டிருந்த கடிதத்தை வாங்கி படித்துப் பார்த்த கல்லா ராவுத்தருக்கு பட படப்பாக இருந்தது. வாசித்து முடித்ததும் பெருமூச்சை விட்டுக் கொண்டே “யா அல்லா. . . இது என்னடா சோதன. . ?” என்றார் சையதைப் பார்த்துக் கொண்டே.

அன்று மாலை ஜமாத்தார்களிடம் பேசிய போது, இதே போல பல பேருக்கு போன வருஷம் நோட்டீஸ் வந்ததாகவும், ஆனால் ஒன்றும் ஆக வில்லை என்றும் சொன்னார்கள். ராவுத்தருக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நோட்டிஸ் கொடுத்தும் இடிக்கப்படாமல் விட்ட வீடுகளைப் போல தர்காவும் அப்படியே இருந்து விட்டால் . . . என்று யோசிக்கும் போதே, ஆசுவாசமாக இருந்தது.

நிர்வாகக் குழு உறுப்பினர் மைதீன் ”பிளான் போட்ட உடனே நோட்டீஸ் குடுப்பாங்க. வேல நடக்கும் போது இடிப்பாங்க. அதுதான நடமுறை” என்று சொன்ன பிறகு ராவுத்தருக்கு, குழப்பமும் பயமும் மறுபடியும் வந்து விட்டது. அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் பிரச்சினை எதுவும் இல்லாமல் கழிந்தது. ரோடை எப்போது போடப்போகிறார்கள் என்றும் தெரியாமல், நோட்டீஸ் கொடுத்த பின்பு சும்மா இருப்பது கல்லா ராவுத்தருக்கு என்னவோ போலிருந்தது. சைத்தான் சையது வேறு ஒரு நாளைக்கு மூன்று முறை வந்து ”என்னாச்சுத்தா. . ?” என்று கேட்டுக் கொண்டே இருந்தான். அவன் பலமுறை கேட்கும் போது கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், அவன் கேட்பது சரிதான். தர்கா இல்லையென்றால் அவன் பிழைப்பு என்னாகும்? என்ற கவலை அவனுக்கு.

காலையில் கிளம்பி தர்காவுக்கு போய் விடுவான் சையது. கூட்டி, துடைத்து அங்கேயே இருப்பான். குறிப்பாக வியாழன், வெள்ளி கிழமைகளில் அங்கேயேதான் இருப்பான். அங்கு வரும் குடும்பங்கள் கொண்டு வரும் பூவை வாங்கி அடக்கஸ்தலத்தின் மீது போடுவதும், பாத்திகா பண்டங்களை துவா முடிந்தவுடன் பிரித்துக் கொடுப்பதும் அவன் வேலை. இன்னும் சிலர் அவனையே பாத்திகா ஓதவும் சொல்வார்கள். அப்படி ஓதும் போது கூடுதலாக பத்து, இருபது கிடைக்கும். இதுதான் சையதின் அன்றாட வேலை. ஆனால், அவனுக்குப் பிடித்த மிக முக்கியமான வேலை ஒன்றும் உண்டு. அதுதான் பேய் ஓட்டுவது.

சுற்றுவட்டார ஊர்களில் எங்கு பேய் பிடித்திருக்கிறது என்று கேள்விப் பட்டாலும், தானே போய் விடுவான் சையது. அப்படிப் போகும் போது தர்காவில் இருந்து கொஞ்சம் ஓதிய தண்ணீரையும், பச்சை நிற கொடியில் ஒன்றை எடுத்து தலையில் கட்டிக் கொண்டும் கிளம்பி விடுவான். உதவிக்கு கறிக்கடை உசேனையும் அழைத்துக் கொள்வான். அப்போது அவனிடம் பேசினால் அவன் தோரணையே வேறுமாதிரி இருக்கும். எப்போதும் குறுகி, சிறிய உருவமாகத் தெரியும் சையது பச்சைத் துண்டு தலையில் கட்டியிருக்கும் போது கம்பீரமாகத் தெரிவான். ஊருக்குள் பலரும் அதைப் பற்றி பேசிக் கொள்வார்கள். ” சையது பச்சை கட்டிட்டா மொகத்துல நூரு எறங்கீரும். பேச்சே அதட்டலாத்தான் இருக்கும். அவனுக்கு அப்படி ஒரு பாக்கியத்தை அல்லா கொடுத்திருக்கான்”

கல்லா ராவுத்தருக்கும் அவன் மீது ஒரு மரியாதை உண்டு. தர்காவில் இருந்து நேரே ஊருக்குள் வரும் சையது ராவுத்தரைப் பார்த்து விட்டுத்தான் பேய் ஓட்டப் போவான். அதே போல, திரும்பி வந்தவுடன் வெற்றிலை, பாக்கு, மூக்குப் பொடி எல்லாம் வாங்கி கொண்டு, உசேனுக்கும் தேவையானதை வாங்கிக் கொடுத்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போவான். ஒவ்வொரு முறை அப்படி போய் வரும் போதும் கதை கதையாய்ச் சொல்லுவான். பேய்கள் பற்றிச் சொல்லும் போது அவனுடைய சுவாரசியமும், பேச்சுத் தொனியும் தான் அவனுக்கு சைத்தான் சையது என்ற பெயரைப் பெற்றித் தந்திருந்தன.

மேலத்தெரு பாத்துமாவுக்கு பேய் பிடித்திருந்த போதும் இவனும், உசேனும்தான் போனான். பாத்துமாவின் கணவன் இறந்து ஒரு வருஷத்தில் அவளுக்கு பேய் பிடித்தது. குழந்தைகள் இல்லாத பாத்துமா அம்மா வீட்டிற்கே வந்து விட்டாள். நாற்பது வயது வரைக்கும் குழந்தை இல்லாததால் அவள் நசீபு அவ்வளவுதான் என்று அவள் அம்மா சொல்லிக் கொள்வாள். திடீரென்று கட்டிட வேலைக்குப் போன இடத்தில் பாத்துமாவின் கணவன் விபத்தில் இறந்து விட்டான். கணவன் இறந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல், அமைதியாகவே இருந்தாள் பாத்துமா. திடீரென்று தான் பேய் பிடித்து விட்டதாக ஊரில் பேசிக் கொண்டார்கள். எப்போதும் அமைதியாக இருக்கும் பாத்திமா ஊரில் இருக்கும் ஆண்களைக் கண்டால் போடா, வாடா என்று பேசுவதும், பூக்களைக் கண்டால் பிய்த்து எறிவதும், எங்காவது கல்யாணம் என்று கேள்விப்பட்டால் சத்தமாகக் கத்துவதுமாக அவளது நடவடிக்கைகள் மாறிப் போயிருந்தன. தலை விரி கோலமாக இருக்கும் அவளைப் பார்க்கவே பயமாக இருந்தது.

சையது தான் அவள் வீட்டுக்குப் போய் ஓதி விட்டு வந்தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி விட்டாள் பாத்துமா.

பாத்துமா வீட்டுக்குப் போய் விட்டு வந்து ராவுத்தர் கடையில் பேசிக் கொண்டிருந்தான் சையது. ”இது சாதாக் கேசுதேத்தா. இத விட ஆக்ரோஷமான பேய்களெல்லாம் பாத்துருக்கேன். இது வெறூம் சத்தந்தேன். ரெண்டு அமட்டு போட்டு, தர்கா தண்ணீயை தெளிச்ச ஒடனே அடங்கீருச்சு. . “

உசேனும் அவனோடு சேர்ந்து கொண்டான். “ஆமாத்தா . . அண்ணே போட்ட அரட்டுலயே அதோட சத்தம் கொறஞ்சிருச்சு. மந்திரிச்ச தண்ணிய எடுத்து தெளிச்ச ஒடனே அப்புடியே ஒடுங்கிருச்சு . . .எல்லாம் ஒலியுல்லாவோட கராமத்து. . “

கல்லா ராவுத்தர் கூட கேட்டிருக்கிறார் . . “ ஏண்டா சையது. . . பேய், பெசாசு ஓட்ட ஓதப் போறியே . . ஒனக்கு பயமா இல்லயா. . . ?”

ரொம்ப சாதாரணமாகச் சொல்வான் சையது . ”ஒலியுல்லாவோட மந்திரிச்ச தண்ணியும், கபுர் கொடியும் இருக்கும் போது என்ன பயம். . ? எப்புடிப்பட்ட பேயா இருந்தாலும் தர்காவுல இருந்து கொண்டு வந்த கொடித்துணியப் பாத்து அரண்டு போயிரும். . “

தர்கா மீதும், ஒலியுல்லா மீதும் கல்லா ராவுத்தருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஏதாவது நல்ல காரியத்துக்குப் போகும் போது அவரும் தர்காவுக்குப் போய் உண்டியலில் காசு போட்டு விட்டுத்தான் போவார். நிறைய விஷயங்கள் நல்லதாக முடிந்தும் இருக்கின்றன. ஆனாலும், சையதுக்கு ரொம்பத்தான் தைரியம் என்று நினைத்துக் கொள்வார்.

தர்கா விஷயமாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைச் சந்தித்த போது முடிவாகச் சொல்லி விட்டார்கள். “இது செண்ட்ரல் கவர்மெண்ட் சமாச்சாரம். கோயிலோ, தர்காவோ. . ரோட்டுக்கு தடையா இருக்கிற எல்லாத்தையும் எடுத்திருவோம். . ரொம்ப வருஷமா தர்கா இருக்கதுனால லெட்டர் அனுப்பினோம். இல்லாட்டி, தகவலே சொல்லாம எடுத்திருப்போம். . அது பொறம்போக்கு நெலம் தான. . “

அங்கு வேலை செய்யும் முபாரக்கிடம் தனியாகப் பேசும் போதும் அவனும் இதையேதான் சொன்னான். கூடுதலாக, இன்னும் சில நாட்களில் வேலை ஆரம்பிக்கும் என்றும் சொன்னான். உடனடியாக ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கச் சொன்னான். அங்கு போய் விட்டு வந்த பிறகு, கல்லா ராவுத்தருக்கு நம்பிக்கை சுத்தமாகப் போய்விட்டது.

ஆனாலும் ராவுத்தர் ஓயவில்லை. தன்னால் முடிந்தவரை பெரிய அதிகாரிகளுடனும், தனக்குத் தெரிந்த கட்சிக் காரர்களிடமும் நடையாய் நடந்துதான் பார்த்தார். எதற்காகவும் அடைக்காத தன் கடையைக் கூட ஓரிரு நாட்கள் அடைத்து விட்டு, தர்கா விஷயமாகஅலைந்து கொண்டிருந்தார். ”தர்கா இனி அவ்வளவுதான். நம்மாள முடிஞ்சத செஞ்சு பாத்தாச்சு. இனி அவனோட கட்டளை” என்று தன்னையே சமாதானப் படுத்திக் கொள்ள முயன்றார்.

சையதால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ”ஏதாவது வழி இருக்கும் ராவுத்தரே. . . யோசியுங்க. . .”

உடன் நின்று கொண்டிருந்த உசேன் நம்பிக்கை இழந்தவனாக பேசினான். “ முந்தி வெள்ளைக்காரங் காலத்துல தர்காவெ இடிப்பேன்னு அவிங்க சொன்னதாவும், ஆனா இடிக்க முடியலைனும் சொல்வாகளேத்தா. . .அப்புடி எதுவும் இப்ப நடக்காதா. . ”

உசேன் சொன்ன பிறகு தான் தான் சின்ன வயசில் கேள்விப்பட்ட செய்திகள் கல்லா ராவுத்தருக்கு மங்கலாக நினைவுக்கு வந்தன. வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருந்த போது, ஆறாங்கல் தர்காவை இடிக்க உத்தரவு போட்டதை கதை கதையாகச் சொல்வார்கள். அப்போது முன்னாள் நின்று பிரச்சினையைக்காக அலைந்தவர் அஜரத் நன்னாதான். அப்போது அவர் சின்ன வயசுப் பையன். சமுதாய விஷயங்களில் துரு துரு என்று இருந்தாலும், ஆழமான யோசனைகள் சொல்லக் கூடியவர். எல்லா விதத்திலும் போராடி ஜமாத்தார்கள் ஓய்ந்த போதுதான் அஜரத் நன்னா தனி ஆளாய் வெள்ளைக்காரர்களின் சதியை முறியடித்ததாய்ச் சொல்வார்கள். வருஷம் தோறும் நடக்கும் கொடி ஏற்றும் விழாவில் அவருக்கு அழைப்பு தந்து விட்டுத்தான் மற்ற ஏற்பாடுகளையே செய்வார்கள்.

நேற்று சையது சொல்லி விட்டுப் போன பிறகு, ஆரம்பித்த பரபரப்பு தான். இன்று காலை வரை நீடிக்கிறது. அஜரத் நன்னாவை எப்படி மறந்தோம். . ? என்று தனக்குள் தவித்துப் போனார் கல்லா ராவுத்தர். இப்போது அவரது நடமாட்டம் குறைவு. முன்பு போல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. எப்போதாவது நினைவு வரும் போது ராவுத்தர் நன்னா வீட்டுக்குப் போய் பார்த்து விட்டு வருவது உண்டு.

நன்னாவுக்கு வயது எப்படியும் நூறு இருக்கும் என்று தோன்றியது. அந்தக் காலத்தில் பிறந்த தேதியை யார்தான் நினைவு வைத்துக் கொண்டிருந்தார்கள்? இப்போதுதான் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், அதனை ஆண்டுதோறும் கொண்டாட வேறு செய்கிறார்கள். பிறந்த நாளை மறந்து விட்டவர்கள் நீண்ட காலம் வாழ்வதாகவும், அதைக் கொண்டாடுபவர்கள் ஐம்பது, அறுபது வயதுகளில் இறந்து போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டார் ராவுத்தர். அதுவும் இந்தக் காலத்தில் மெழுகுவர்த்தியை கேக் மீது எரிய விட்டு, அதனை ஊதி அணைக்கும் போது ஆயுசின் வருசங்களை ஊதி அணைப்பதாகத் தோன்றும் ராவுத்தருக்கு.

இன்று மதியம் வீட்டுக்கு வருவதாக நேற்று இரவே நன்னாவுக்கு சொல்லி விட்டிருந்தார் கல்லா ராவுத்தர். அஜரத் நன்னா விவரமானவர். எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு யாரும் எதிர்பார்க்காதவாறு ஒரு தீர்வு சொல்லிவிடுவார். யோசித்துப் பார்த்தால், நன்னா சொன்ன வழியைத் தவிர, வேறு எந்த வழியும் இருக்காது. இன்று மதத்துக்குள் புதிது புதிதாக கிளம்பியிருக்கும் பிரச்சினைகளைக் கூட அவரிடம் பேசினால் நல்ல ஆலோசனைகளைப் பெற முடியும். ஆனால், யாரும் அவரிடம் போய் பேசுவதில்லை. நன்னாவும் அவராக எந்த பிரச்சினையிலும் தலையிட மாட்டார். வர வர வயதாகி, அவர் பேசுவதைப் புரிந்து கொள்வதும் சிரமமாக இருக்கிறது.

நன்னா தர்கா விஷயத்துக்கு என்ன சொல்லப் போகிறார் என்று யோசிக்கவே முடியவில்லை. மதிய வேளை நெருங்க, நெருங்க கடையில் இருப்புக் கொள்ள வில்லை ராவுத்தருக்கு. வழக்கமாக இரண்டு மணிக்கு கடை அடைப்பவர், இன்று ஒரு மணிக்கே அடைத்து விட்டார்.

பெரிய மனுஷன் மதிய உணவுக்குப் பிறகு கொஞ்சம் தூங்கவும் வாய்ப்பிருக்கிறது. சீக்கிரம் பார்த்து விட்டு வருவது நல்லது என்று நினைத்துக் கொண்டார் ராவுத்தர். ஆனாலும், அவர் தூக்கத்தை விட தன் பரபரப்பே சீக்கிரம் போக வைக்கிறது என்பதும் அவருக்குபுரிந்து தான் இருந்தது.

வீட்டின் வெளிப்புறம் நின்று “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று குரல் கொடுத்தார் ராவுத்தர். நல்ல வேளை இன்னும் மதிய உணவு ஆரம்பிக்கவில்லை என்று தோன்றியது. சின்னப் பெண் வந்து திரையை விலக்கி எட்டிப் பார்த்தது. உடனே தலையை உள்ளிழுத்துக் கொண்டு “அம்மா. . . யாரோ வந்திருக்காக. . .” என்று குரல் கொடுத்து, ஓடிவிட்டது. கொஞ்ச நேரத்தில் நன்னாவின் மகள் வந்து உள்ளே அழைத்தார். ராவுத்தர் உள்ளே போய், நன்னா படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் அமர்ந்து கொண்டார். நன்னா இவரைப் பார்த்தவுடன் மெதுவாக எழுந்து, தலையணையை முதுகிற்கு வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். “நல்லா இருக்கீகளா. . ?“ நன்னா புன்னகைத்தவாறு கேட்டார். ”நல்லா இருக்கேன் நன்னா, ஒங்களுக்கு ஒடம்புக்கு நல்லா இருக்கில்ல. . .”

நன்னா செருமிக் கொண்டார். “ எனக்கென்ன. . சாப்பிட, தொழுக, தூங்க. . .ஒடம்பெல்லாம் நல்லாத்தே இருக்கு. . . முன்ன மாதிரி மனுஷ மக்கள போயி பாக்க முடிய மாட்டிங்குது . . “ சத்தம் குறைவான குரலில், மென்மையாகப் பேசினார்.

பற்கள் மொத்தமும் விழுந்து, பொக்கை வாயாய் இருந்ததால் வார்த்தை உச்சரிப்பை உற்றுக் கவனித்து புரிந்து கொள்ள வேண்டி இருந்தது. தாடி நரைத்து, நல்ல வெண்மையாகி, சுருங்கி இருந்தது. முகம் முழுவதும் சுருக்கம் சுருக்கமாக பள பளப்பாக இருந்தது. வயதாகி விட்டாலே ஒரு அழகுதான். குழந்தையைப் போல ஆகி விடுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டார் ராவுத்தர்.

தர்கா விவரங்களையும், ரோடு அகலப் படுத்தும் வேலையால் இடிக்கப்போவது பற்றியும் கூறினார் கல்லா ராவுத்தர். நன்னாவிடம் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் முகத்தை வைத்து கண்டுபிடிக்க முடியவில்லை.

அடிவயிற்றை உள்ளிழுத்து தெம்பை திரட்டிக் கொண்டு செருமினார் நன்னா. “இது வழக்கம் தான. . . ஊரு பெருசாகும் போது ரோடு பெருசாகறது . . . அதுக்காக தர்காவ அப்படியே விட முடியாதுல . . .”

நன்னா என்ன சொல்ல வருகிறார் என்பதை ராவுத்தர் உன்னிப்பாகக் கவனித்தார். நன்னா கொஞ்சம் இடைவெளி கொடுத்து விட்டு தொடர்ந்தார். “தர்காவ இடிச்சுட்டு இன்னோரு தோதான எடத்துல கட்டுங்க. . . “

கல்லா ராவுத்தருக்கு தலை சுற்றியது. இது என்ன பள்ளிவாசலா. . ? நினைத்த இடத்தில் கட்டிக் கொள்வதற்கு. தர்காவில் இருக்கும் கபுர்ஸ்தானை என்ன செய்வது? ஒலியுல்லாவின் அடக்கஸ்தலத்தை இடித்து விட்டால் என்ன ஆகும்? நாமே வசதியான இடத்தில் கட்டிக் கொண்டால், தர்காவின் கராமத்துகள் நடக்குமா? அதே நன்மைகள் கிடைக்குமா? நன்னாவுக்கு வயசானதால் புரியாமல் சொல்கிறாரோ என நினைத்தார் ராவுத்தர்,

நன்னா மீண்டும் செருமிக் கொண்டு ராவுத்தரை அருகில் அழைத்து கம்மிய குரலில் சொன்னார். “நா வாலிபத்துல இருக்கும் போது இதே பிரச்சினை வந்துச்சு. அறுவது, எழுவது வருஷத்துக்கு முன்னால தர்கா இந்த எடத்துல இல்ல. கொஞ்சந்தள்ளி அபுசாலி தோப்பு பக்கத்துல இருந்துச்சு. . . “

“வெள்ளக் காரங்கெ காலத்துலதே ரோடே வந்துச்சு. ரோடு போட அவங்க வரைஞ்ச தடத்துலதே அப்ப தர்கா இருந்துச்சு. அன்னைக்கு ஒங்க அத்தா, நம்ம பிலாலோட தாத்தா எல்லாருஞ் சேந்துதே இப்ப உள்ள ஆறாங்கல்லு தர்காவை கட்டுனோம். . “

“தர்காவுல இருந்து ஒரு செங்கலை எடுத்து வச்சு புது தர்காவ கட்டுங்க. எல்லா சரியா வரும். . “

நன்னா சொல்வது புரிந்ததும் கல்லா ராவுத்தருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு ஏனோ சம்பந்தமில்லாமல் பச்சைக் கொடியை தலையில் கட்டிய கம்பீரமான சையது நினைவுக்கு வந்து, சிரித்தான்.

(உயிரெழுத்து இதழில் வெளிவந்த சிறுகதை)

Print Friendly, PDF & Email

1 thought on “ஆறாங்கல் தர்கா

  1. என்பது ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது அப்போது உள்ள மக்கள் அதை எவ்வளவு சுலபமாக எதிர்கொண்டனர் என்பதை எளிய நடையில் விளக்கியுள்ளார். இடத்தை மாற்றுவதன் மூலம் அதன் மீதுள்ள நம்பிக்கை மாறாது அதை ஏற்றுக் கொள்ள மனம் தயாராக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *