தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 7,969 
 

இன்று தீர்ப்பு கூறும் நாள். காலையில சீக்கிரம் கோர்ட்டுக்கு வரும்படி சேகரிடம் கூறியிருந்தார் வழக்கறிஞர். அதனால், தன் மனைவி சுமதியுடன் ஒன்பது மணிக்கெல்லாம் வந்து விட்டான்.
கோர்ட் வளாகம், பத்து மணிக்கு மேல் தான் களைகட்டும். ஒரு சில கட்சிக்காரர்கள் மட்டும், ஆங்காங்கு மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தன்னை போலவே, அவர்களுடைய வழக்கறிஞர்களும் அவர்களை வரச்சொல்லியிருப்பர் என எண்ணினான் சேகர்.
அவன் அருகில் அமராமல், தனியே ஒரு மரத்தடியில் குழந்தை ராகவனுடன் உட்கார்ந்திருந்தாள் சுமதி. அங்கு கொட்டியிருந்த மணல் குவியலில், சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தான் ராகவன்.
சேகரும், சுமதியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. சுமதியின் முகத்தில், சோகம் அப்பியிருந்தது. அவள் கைகள், மணலை அளைந்து கொண்டிருந்தன. “இன்று வழங்கப்படும் தீர்ப்பில், எனக்கு என்ன தண்டனை வழங்கப்படும்…’ என நினைத்துக் கொண்டிருப்பாள் போலும். அதனால் தான் தன்னிடம் பேசவில்லையென எண்ணினான் சேகர்.
ஆயுள் தண்டனை!“தீர்ப்பு நிச்சயம் நல்லபடியாகத்தான் வரும்…’ என, வழக்கறிஞர் கூறியிருந்தாலும், சேகருக்கும் உள்ளுக்குள் கலக்கம் ஏற்படாமல் இல்லை. எனவே, இயல்பாக இருப்பது போல் நடந்து கொண்டான்.
சேகரும், சுமதியும் இருப்பதை பார்த்து, நேரே அவர்களிடம் வந்தார் வழக்கறிஞரின் குமாஸ்தா.
“”தம்பி… இன்னிக்கு உங்க கேஸ் தான் முதல்ல எடுத்துக்கப் போறாங்க. அதனால தான் வழக்கறிஞர் உங்களை சீக்கிரம் வரச் சொல்லியிருக்கார்,” என்று சேகரிடம் கூறியவர், சுமதி அருகில் வந்து, “”அம்மா… கவலைப்படாதீங்க… உங்க கணவர் நிச்சயம் விடுதலை ஆயிடுவார். அதற்குண்டான வேலையெல்லாம், வழக்கறிஞர் ஐயா செஞ்சிருக்கார். போன மாசம் கூட, இதே மாதிரி ஒரு கேசுல ஐயா விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கார். எல்லாம் நல்லபடியா முடியும். சாமியை வேண்டிக்கோங்க,” என்று கூறியவாறே, தன் அறைக்குப் போனார்.
“இந்த நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டிய நான், இப்படி கோர்ட் வாசலில் காத்திருக்க வேண்டியதாகிவிட்டதே… அந்தப் பொம்பளை மட்டும் ஏன் அப்படி செய்யணும்…’ என்று எண்ணியவனின் சிந்தனை, சம்பவம் நடந்த தினத்திற்கு தாவியது.
பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, தன் இருக்கைக்கு வந்து கொண்டிருந்த சேகரை, அந்தப் பெண், வழியிலேயே மடக்கினாள்.
“ஐயா… இன்னிக்காவது உத்தரவு வாங்கிக் கொடுக்கறீங்களா?’
“என்னம்மா இது, ஆபீசுக்கு வரும்போதே இப்படி கேட்டா எப்படி… உனக்கு முன்னால கொடுத்தவங்க மனுவெல்லாம் கவனிச்சிட்டு தானே, உன் கோரிக்கைகளையும் கவனிக்க முடியும்… ஒரு மாசத்துக்கு முன்தான் உங்க, வி.ஏ.ஓ., உன் மனுவை எங்களுக்கு அனுப்பியிருக்கிறார். மூணு மாசத்துக்கு முன்னால வந்த மனுக்களையே, நான் இன்னும் தொடல. உன் மனுவைப் பார்க்கறது மட்டும் தான் என் வேலையா…’ அந்தப் பெண்ணிடம் பொரிந்து தள்ளினான் சேகர்.
இப்படி இழுத்தடித்தால் தான், கேட்ட பணம் கிடைக்கும் என்பது அவனுக்கு தெரியும்.
“ஐயா… எனக்கிருந்த ஒரே புள்ளையும், பத்து வருஷத்துக்கு முந்தி மும்பைக்கு ஓடிப் போயிட்டான். இன்னிக்கு வரைக்கும், அவன் என்ன ஆனான்னே தெரியலை… என்கிட்ட இருந்த நகை நட்டெல்லாம் வித்து, வைத்தியம் பார்த்துக் கூட, என் வீட்டுக்காரர் பிழைக்கல. இந்த விதவை உதவிப்பணம் வந்தா, மிச்ச காலத்தையும் பட்டினியில்லாமல் ஓட்டிடலாமுன்னுதான் பார்க்கறேன். இப்ப கூட பாருங்க… இந்த பணம் வந்தா தந்துடறேன்னு, ஒருத்தர் கிட்டே வட்டிக்கு நூறு ரூபாய் கடன் வாங்கிட்டு வந்திருக்கேன்யா…கொஞ்சம் சீக்கிரம் கிடைக்க மாதிரி பார்த்தீங்கன்னா, உங்க புள்ள குட்டிக்கு புண்ணியமாகப் போகும்…’ அந்தப் பெண், சேகரை கும்பிட்டவாறே கூறினாள்.
“எப்படியாவது ஒரு மூவாயிரம் ரூபாயாவது இந்தப் பெண்ணிடம் இருந்து கறந்துடலாம்ன்னு பார்த்தா, பைசா பெயராது போலிருக்கே…’ என்று எண்ணியவன், “சரி சரி… நான் உடனடியா உத்தரவு தர எழுதி வச்சிடுவேன். ஆனா, என் மேலதிகாரி உடனே கையெழுத்து போடணுமே… அவர், நாங்க கொடுக்கற லீவ் லட்டருக்கே, “சம்திங்’ எதிர்பார்க்கிறவரு… அதனால, ஒரு மூவாயிரம் ரூபாய புரட்டிட்டு வந்து கொடுத்திடு, உடனே கையெழுத்து வாங்கி கொடுத்துடறேன்… என்ன சரியா?’
“ஐயா… அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்…’ அந்தப் பெண் கேவினாள்.
பியூன் பொன்னுசாமி சொன்னான்…
“இந்த பொம்பளைங்கள நம்பவே கூடாது… கிழிந்த புடவையைக் கட்டிக்கிட்டு, ஆபீசில் நுழைவதற்கு முன், நகையெல்லாம் கழட்டி சுருக்குப் பையில போட்டு, இடுப்பில் சொருகிக்குவாங்க… ரொம்பக் கஷ்டத்தில் இருப்பது போல் நடிச்சு, பத்துபைசா செலவில்லாம கையெழுத்தை வாங்கிகிட்டு போயிருவாங்க. நாம் தான் ஜாக்கிரதையா இருக்கணும்…’
பொன்னுசாமி சொன்னதும் சரிதான் என, எண்ணினான் சேகர். அந்தப் பெண்ணும் அப்படித்தான் தோற்றமளித்தாள்.
“நிறைய பேர் இப்படித் தான் லஞ்சப் பணத்தை கொறைக்கறதுக்கு நடிப்பாங்க… ஏமாந்து விடக்கூடாது. நான் எத்தனைப் பேரை பார்த்திருக்கேன்… எப்படியாவது ஒரு ஆயிரம், இரண்டாயி ரமாவது இந்தப் பெண்ணிடம் வாங்கிட வேண்டும்…’ என மனதுக்குள் எண்ணியவன், “சரி சரி… உன்னைப் பார்த்தா ரொம்ப பாவமாத்தான் இருக்கு. நாளைக்கு வரும்போது, ஒரு இரண்டா யிரமாவது கொண்டு வந்துடு. எனக்கு வேணாம்; அதிகாரிக்கு கொடுத்து, ஆர்டர் வாங்கிக் கொடுத்துட றேன்…’
மறுநாள் காலை, அலுவலகம் நுழையும்போதே, அந்தப் பெண்ணை பார்த்து விட்டான் சேகர். அவனைப் பார்த்ததும், கையெடுத்து கும்பிட்டாள்.
“நாம் கேட்ட பணம் கொண்டு வந்திருப்பாள் போலிருக்கிறது…’ என எண்ணிக் கொண்டான் சேகர்.
இருக்கையில் அமர்ந்ததும், அந்தப் பெண் அருகில் வந்தாள்.
“என்னம்மா… கொண்டு வந்திருக்கியா?’
“கொண்டு வந்திருக்கேன் சார்…’ இதமாக பேச ஆரம்பித்தாள்.
அந்தப் பெண்ணின் அருகில், ஒரு விவசாயியைப் போல் வேட்டி சட்டை அணிந்து, தலையில் தலைப்பாகை கட்டியபடி ஒருவர் நின்றிருந்தார்.
“இது யாரும்மா… உங்க கூட வந்தவரா?’
“ஆமாம் ஐயா… நான் ஏற்கனவே சொன்னேன்ல, ஒருத்தர் கிட்ட நூறு ரூபாய் கடன் வாங்கிட்டு வந்தேன்னு… அவருதான் இவரு. இவருதான் இப்ப நீங்க கேட்ட ரூபாயும் கொடுத்து உதவியிருக்கிறார். பணத்தை எங்கயாவது தொலைச்சிடப் போறன்னு துணைக்கு வந்திருக்கார்…’ என்று கூறியவாறே, பணத்தை எடுத்து சேகரிடம் கொடுத்தாள்.
பணத்தை வாங்கி எண்ணி, அப்படியே தன் மேஜை டிராயரில் போட்டான் சேகர்.
“மிஸ்டர் சேகர்…’ யார் கூப்பிடுவது என்று நிமிர்ந்து பார்த்தான். அந்தப் பெண்ணின் அருகில் நின்று கொண்டிருந்தவர், தன் தலைப்பாகையை அவிழ்த்துக் கொண்டே கூறினார்.
“மிஸ்டர் சேகர்… யூ ஆர் அண்டர் அரெஸ்ட். இந்தப் பெண்ணிடம் லஞ்சம் வாங்கியதுக்காக, உங்களை கைது செய்யறேன். நான் இவங்களுக்கு தெரிஞ்சவனில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்…’ என்று கூறியவர், வெளியே நின்று கொண்டிருந்த தன் சகாக்களை கூப்பிட்டு, அடுத்து செய்ய வேண்டியவற்றிற்கு உத்தரவு போட்டார்.
ஆறு மாதங்களுக்கு மேலாக சஸ்பென்ஷனில் இருப்பதும் அல்லாமல், அவன் மீது லஞ்சம் வாங்கியதற்கான கிரிமினல் வழக்கும் தொடரப்பட்டது.
“”என்னங்க மிஸ்டர் சேகர்… நீங்க வந்து ரொம்ப நேரமாச்சா…” வழக்கறிஞர் அவனை விளித்த போது தான் அவனுக்கு சுயநினைவு வந்தது.
“”வாங்க போகலாம்… எல்லா ஏற்பாடும் பக்காவா பண்ணியிருக்கேன். நீங்க விடுதலை அடைஞ்ச மாதிரி தான். தீர்ப்பை நீதிபதி தன் வாயால் சொல்ல வேண்டியது தான் பாக்கி,” என்று, உற்சாகமாக சொல்லிக் கொண்டே போனார் வழக்கறிஞர்.
“ம்… இந்த ஏற்பாட்டை நீங்க பண்ணறதுக்கு, நான் தண்ணியா இல்லே பணத்தை செலவழிச் சிருக்கேன்…’ என மனதுக்குள் கூறிக் கொண்டே அவர் பின் சென்றான். அதற்குள் அவன் அலுவலக நண்பர்களும் வந்து விட்டனர்.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே, குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வில்லை. எனவே, சேகரை வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிடுவதாக நீதிபதி தீர்ப்புக் கூறினார்.
நண்பர்கள் படைசூழ, சுமதியிடம் வந்தான் சேகர்.
“”என்ன சுமதி… சந்தோஷம் தானே… என்னவோ பயந்துகிட்டிருந்தியே… இப்ப தீர்ப்பைக் கேட்டல்ல.”
அவன் கூறியதற்கு, எந்தவிதமான பதிலும் சொல்லாமல், மவுனமாகவே நின்றிருந்தாள் சுமதி.
சேகரின் நண்பனொருவன் கேட்டான்… “”ஏம்பா சேகர்… நிறைய பணம் செலவு செய்திருக்கியே… எப்படி ஈடுகட்டப்போற?”
“”டேய்… மக்களும், அவங்களுக்கு பிரச்னைகளும் இருக்கிற வரைக்கும், எனக்கு கவலை இல்லை. இன்னும் ஒரு வருஷத்துல, என்கிட்ட வர்றவங்க கிட்ட இருந்து, நான் செலவழிச்ச பணத்தை கறந்துட மாட்டேன்,” என, சப்தமாக சிரித்துக் கொண்டே கூறினான் சேகர்.
“”சேகர்… நீ பலே கில்லாடிடா,” என்று, நண்பர்கள் சிரித்துக் கொண்டே கூறினாலும், சுமதிக்கு தன் கணவனை பார்ப்பதற்கே அருவறுப்பாக இருந்தது.
“”சுமதி… வழக்கு சம்பந்தமாக இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு… கொஞ்ச நேரமாகும்ன்னு வழக்கறிஞர் சொன்னார். அதுவரையில் நான் இருக்க வேண்டியிருக்கும். நீ குழந்தையை தூக்கிகிட்டு வீட்டுக்குப் போ… நான் பின்னால் வருகிறேன்,” என்றான் சேகர்.
கோர்ட் வேலை முடிந்து, ஸ்வீட் பாக்சுடன் வீட்டுக்கு திரும்பினான்.
அவனைப் பார்த்ததும், பக்கத்து வீட்டுப் பெண் ஓடிவந்து, “”ஆன்ட்டி, வீட்டு சாவியை உங்கக் கிட்ட கொடுக்கக் சொன்னாங்க,” என்று சாவியை அவன் கையில் திணித்துவிட்டு மறைந்து விட்டாள்.
சாவியை வாங்கியதும், வீட்டைத் திறந்து உள்ளே போனான். “எங்கே போயிருப்பாள்… ஏதாவது மளிகை சாமான் வாங்குவதற்கு கடைக்குப் போயிருப்பாளோ…’ என்று குழம்பியவன், சரி சுமதி மொபைலுக்கு போட்டு பேசிப் பார்க்கலாம் என நம்பரை அழுத்தினான்.
மொபைல் மணியோசை, வீட்டினுள்ளேயே ஒலித்தது. “அப்போ மொபைலை எடுத்துப் போக மறந்து விட்டாளோ…’ என எண்ணியவாறே, மேஜையில் ஒலித்துக் கொண்டிருக்கும் மொபைலை பார்த்தான். மொபைலுக்கு அடியில், ஒரு வெள்ளைத்தாள் மடித்து வைக்கப்பட்டிருந்தது. என்னவாக இருக்கும் என்ற சிந்தனையோடு பிரித்து படிக்க ஆரம்பித்தான்.
சுமதி எழுதிக் கொள்வது… நீங்கள் வரும்போது, நானும், குழந்தையும் வீட்டில் இருக்க மாட்டோம். லஞ்சம் வாங்குவது கேவலமான செயல் என பலமுறை கூறியும், நீங்கள் அப்பழக்கத்தை கைவிடவில்லை. உங்களுக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் அனைவரும், உங்களையும், நம் குடும்பத்தையும் சாபமிட்டிருப்பர் என ஒரு முறை கூட நீங்கள் யோசித்ததில்லை…
கடந்த ஆறு மாத காலமாக, என்னைப் பார்த்தவர்கள், “லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டவன் பொண்டாட்டி வெட்கம், மானமில்லாமல் நடமாடுகிறாள் பார்…’ என, பார்வையாலே கூறுவதை நீங்கள் அறிய மாட்டீர்கள். நம் குழந்தையைப் பார்க்கிறவர்களும், “லஞ்சம் வாங்கியவனின் பிள்ளைதானே…’ என சொல்லாமல் சொல்வதையும் நீங்கள் அறிய மாட்டீர்கள்…
உங்கள் குறிக்கோள் எல்லாம் பணம் பணம் தான். யார் செய்த புண்ணியமோ, நீங்கள் விடுதலையாகி விட்டீர்கள். இதற்கு பின்பாவது நீங்கள் திருந்தி வாழ்வீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், நீங்களோ, “வழக்கிற்கு செலவு செய்த பணத்தை, மீண்டும் லஞ்சம் வாங்கியே ஈடு செய்வேன்…’ என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், உங்கள் நண்பர்களிடம் கூறியபோது, நான் கூனி குறுகிப் போனேன்.
நானும், குழந்தையும் உங்களுடனேயே இருந்தால், எங்களுக்கும் பாவத்தில் பங்கு வந்து சேரும் என்பதால், உங்களை விட்டு பிரிவதென்று அப்போதே, தீர்மானித்து விட்டேன். கல்லூரித் தோழிக்கு போன் செய்தேன்…
அவளும் என் முடிவை வரவேற்றதோடல்லாமல், தன்னுடனே வந்து தங்கும்படியும், எனக்கு ஒரு வேலையும் வாங்கித் தருவதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும் கூறியதால், புறப்படுகிறேன்.
லஞ்சம் வாங்குபவர்கள், என் நடவடிக்கையை கேள்விப்பட்டு, தங்கள் வீட்டிலும் இது போல், தம் மனைவி செய்து விடுவாளோ என பயந்து, திருந்தினர் என்றால், அதுவே எனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
நீங்கள் செய்த தவறுக்கு தண்டனை தர, கோர்ட் தவறியிருக்கலாம். ஆனால், நான் தருகிறேன் உங்களுக்கு ஆயுள் தண்டனை. ஆம்… நீங்கள் வாழ்நாள் முழுவதும், என்னையும், குழந்தையையும் பிரிந்து, தினமும் சித்ரவதை அடைய வேண்டும். இதுவே என் தீர்ப்பு.
இப்படிக்கு சுமதி!
பி.கு: என்னையும், குழந்தையையும் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்க வேண்டாம்!
கடிதத்தை படித்து முடித்த பின், “ஐயோ சுமதி… என்னை விட்டுட்டுப் போயிட்டியா…’ என
அலறிய சேகரின் குரல், அந்த வீடெங்கும் எதிரொலித்தது.

– ரா. சந்திரன்(ஜூலை 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *