ஆன்மாக்களின் கல்லறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 10,226 
 

‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தில் சார்லி சாப்ளின் மாட்டிக்கொண்டு விழிபிதுக்கும் பெரிய எந்திரத்தைக் காட்டிலும் மிகப் பெரும் எந்திரம் அது. சென்னை நகரின் மையத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இரண்டு நூற்றாண்டுகளாய் இயங்கிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கில் ரோபோட்கள் அதன் உள்ளும் புறமும் இருந்து கொண்டு அதனை இயக்கின. என்னையும் சேர்த்து சில மனிதர்களை கூண்டு வண்டியில் அடைத்து அந்த இயந்திரத்தின் முன் இழுத்து வந்தன. அந்த இயந்திரம் தனது பெரிய வாயை கர்ர…கரவென்ற இரும்பு உரசும் இரைச்சலுடன் திறந்து திறந்து மூடியதைப் பார்க்க பயமாக இருந்தது. அதன் அகலமான வாயில் அந்த ரோபேட்கள் என்னைத் தூக்கி போட்டன. பெரும் சத்தத்துடன் அந்த இயந்திரம் வேலை செய்தது. தடித்த ஊசிகள் நாற்புறமும் இருந்து என் உடம்பில் பாய்ந்தன. உடலின் உயிர்ப்பை ஒவ்வொரு செல்களிலும் துடித்துக்கொண்டிருக்கும் உயிர் திரவத்தை சொட்டு சொட்டாய் அவைகள் அலறி அலறி துடிக்க உறிஞ்சின. சிறிது நேரத்தில் என் சப்தநாடிகளும் ஒடுங்கியது. சக்கையாய் பிழியப்பட்டு உயிரற்ற உருப்படியாய் அந்த எந்திரம் தன்னுள் என்னை இழுத்துக் கொண்டது. தனது கடைசிப் போராட்டமாய் தனது பலத்தையெல்லாம் திரட்டி ஒரு முறை ஓங்காரமாய் அலறி எனதுயிர் துடித்து அடங்கியது.

“அம்..ம்மா..” என பகல் கனவு கண்டு அலறினேன். பக்கத்தில் இருந்த மின்தொடர் வண்டிப் பயணிகள் அச்சமடைந்து முகம் சுளித்தனர். இன்னும் சில பயணிகள் ஏளனமாய் புன்னகை பூத்தனர். அவமானம் பிடுங்கித் தின்ன தலையைத் தொங்க போட்டுக் கொண்டேன். எனக்கு இப்படி அடிக்கடி நிகழ்கிறது. எதைப் பற்றி சிந்தனை செய்கின்றோனோ அதற்குள் திளைத்து மூழ்கி அதுவாகவே மாறிப் போய்விடுகிறேன். இது தவறு என்று அறிவிற்குத் தெரிகிறது. ஆனால் உணர்வும் உணர்ச்சியும் அதை ஏற்க மறுக்கின்றன.

பூங்கா தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினேன். என்னைத் தள்ளி முண்டியடித்துக் கொண்டு மக்கள் பாய்ந்து கொண்டு ஒடினர். அடுத்தவனைப் பற்றி சிந்திக்க நேரமில்லாமல் வயிற்றுக்காக, வேலைக்காக ஆளாய்ப் பறந்து கொண்டிருக்கும் கூட்டம் அது. மெல்ல நடந்து சென்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள மேம்பாலத்தில் ஏறினேன். மத்திய சிறைச்சாலையின் வெளிப்புற வாயிலை அடைந்தேன். மத்தியச் சிறைச்சாலையை சுற்றிக் காட்டும்படி என்னிடம் கேட்டிருந்த நண்பர் சலீம் இன்னும் வரவில்லை.

துப்பாக்கி சனியன்களை ஏந்திய காவலர்கள் பூட்டிய பெரிய இரும்பு கிரில் கதவுகளுக்கு பின்பிருந்து கண்காணிக்கப்படும் அந்த வாயிற்புற‌த்தை யாரும் எளிதில் கடந்து செல்ல முடியாது. வழக்கமாக கவலையும், பதட்டமும் நிறைந்த சிறிய கூட்டம் பொறுமையாய் அங்கு காத்து சோர்ந்து போயிருக்கும். இன்று அப்படியானதொரு காட்சி இல்லை.

மூடாத கதவுகளுக்குப் பின் ஒரே ஒரு காவலர் வேர்க்கடலையை கொறித்தவாறு யாருடனோ சலசலவென்று பேசிக் கொண்டிருந்தார். மக்கள் சாரை சாரையாக குடும்பத்துடன் சிறைக்குச் சென்று கொண்டு இருந்தனர். தவறாக திரைப்படங்களால் சித்தரிக்கப்பட்ட, ஊடகங்களால் மிகையாக விளம்பரப்படுத்தப்பட்ட சிறைக்கூடத்தை காண மக்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது.

சிறையைப் பார்க்க இவ்வளவு மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா என்ற வியப்பிலிருந்து என்னால் அவ்வளவு எளிதில் விலகமுடியவில்லை. ‘சிறைக்கு போகும் மக்கள் அலை’ என்ற பரபரப்பு தலைப்பிட்டு கட்டம் போட்டு முதல் பக்கத்தில் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டதால் இந்த கூட்டமா, இல்லை கூட்டம் திரண்டதால் இப்படி செய்தி வெளியானதா என்று உடனடியாக‌ என்னால் முடிவுக்கு வர இயலவில்லை.

நானும் சிறைக்கு செல்ல வேண்டுமென நினைத்தேன். வலி நிறைந்த நினைவுகளை கீறிக் கிளிறி மனதை சஞ்சலம் செய்து விடும் என்பதால் தயங்கினேன். சலீம் தொடர்ந்து பல முறைகள் வலியுறுத்தியதால் சிறை வாயிலில் இன்று இருக்கிறேன்.

சர்வ சதாரணமாய் அந்த நுழைவாயிலின் வழியே நடைபயின்று நிதானமாய் எந்த பதட்டமும் இல்லாமல் சிறைவாயிலை அடைந்தேன். சிலர் தள்ளு வண்டிகளில் வேர்க்கடலை, ஐஸ்கீரீம் விற்றுக் கொண்டிருந்தனர். பைக்குகள், கார்களில் சர்ர்.. சர்ரென வந்து மக்கள் குவிந்தது கொண்ருந்தனர்.

திட்டிவாசல் கதவு* இணைத்திருந்த நீலநிற பெரிய இரும்புக் கதவுகளை மக்கள் முன்னும் பின்னும் மூடிமூடி திறந்து சிறு பிள்ளைகளாய் விளையாடிக் கொண்டு இருந்தனர். அதன் அருகில் நின்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விளையாடவும், புகைப்படமெடுத்து அதைப் பார்த்து ரசிக்கவும் கூடிய இடமா இது? பல ஆயிரக்கணக்கான மனிதர்களை சிதைத்தும், சில நூறு மனிதர்களை மாமனிதர்களாக, விரல் விட்டு எண்ணக்கூடிய மகாத்மாக்களை சிருஷ்டித்த மாய உலகம்!

குப்பென்று சிறைலிருந்து வந்த வாசனை எனது உடலை சிலிர்க்கச் செய்தது. மனிதர்களால் சிருஷ்டிக்கப் பெற்ற பல கட்டிடங்களுக்குள் சென்றுள்ளேன். கட்டிடங்களுக்குகான தனித்த மணம் பொதுவாகக் கிடையாது. மருத்துவமனையும், சிறையும் இதற்கு விதிவிலக்குகள். இந்த கட்டிடங்களுக்கு பிரத்யோகமான வாசம் உண்டு. முதல் முறையாக சிறைக்குச் சென்று பிணையில் வெளிவந்த பொழுது அம்மா தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து வலுக்கட்டாயமாகக் குளிப்பாட்டினார். அத்துடன் சிறைக்கு தலைமுழுகி விட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வீட்டினர் அப்படிச் செய்தனர்.

நல்லெண்ணெய் குளியலுக்குப் பிறகு உடலில் சீயக்காய் மணம் கமழும். கொஞ்சம் எண்ணெய் நறுமணத்துடன் வரும் அந்த வாசனை எனக்கு ரொம்பவும் பிடித்தமானது. ஆனால் அதையும் மீறி சிறை வாசனைதான் அன்று மூக்கில் நாறியது. சில நாட்களுக்கு இந்த வாசனை என்னை பின்தொடர்ந்து வந்து இம்சித்துக் கொண்டிருந்தது. பல இடங்களுக்குச் சென்று, பலவித மனிதர்களுடன் பழகிய பிறகு தான் அந்த வாசனை அகன்றது.

அந்த வாசனை பிரமையாய் இருக்குமோ? இந்த நினைப்பு அடிக்கடி வரும். மத்திய சிறைக்குள்ளிருந்து வீசும் அந்த வாசனையை நிதானமாக ஆழ்ந்து நுகர்கிறேன். வேடிக்கை பார்க்க வந்த மனிதர்களின் கதம்ப வாசனையையும் தாண்டி சிறை வாசனை என்னை இம்சித்தது. ஆன்மாக்கள் புழுங்கி வியர்த்து, சிறிது சிறிதாக சிதைந்து அழுகிக் கொண்டிருக்கும் நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. இதே போல் கோயில் கருவறைகள் அருகில் நிற்கும்பொழுது அங்குள்ள மலர்களின் நறுமணங்களையும் தாண்டி நெக்குருகி வேண்டிக் கொண்டியிருக்கும் பக்தர்களின் ஆன்மாக்கள் அழுது புழுங்கி சிதைந்து நாற்றமடிப்பதை நுகர்ந்ததை சிந்தித்தபடி இருந்தேன்.

“என்ன.. தோழர்…எப்ப…வந்தீங்க?” என்று சலீம் கேட்டபடியே எனது தோளைத் தட்டினார்.

“நீங்க இந்திய நேரப்படி வந்திருக்கீங்க… நானோ கம்யூனிஸ்ட் கட்சி நேரப்படி வந்திருக்கேன்…” என்று கூறி புன்னகைத்தேன்.

சலீம் காமிராவை கழுத்தில் மாலையாய் மாட்டி இருந்தார். சென்னை மத்திய சிறைச்சாலை இன்னும் பத்து நாட்களுக்குப் பிறகு இடிக்கப்பட்டு விடும். அந்தமான் சிறைச்சாலை கொண்டு செல்லப்படும் சுதந்திர போராட்டக்காரர்களை கப்பலில் ஏற்றுவதற்கு முன்பு இடைத் தங்கலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறை பின்னர் முழுமையான சிறைச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. சுதந்திரத்திற்காக, பொதுவுடைமைக்காக, இன-மொழி விடுதலைக்காக, எமர்ஜன்சி கொடுமைகளுக்கு எதிராக, சாதி கொடுமைகளுக்கு எதிராக, ஈழ விடுதலைக்காக களம் கண்ட போராளிகள் முதல் சந்தேகக் கேஸில் அடைக்கப்படும் அப்பாவி பொதுசனம் வரை கண்ட இந்த வரலாற்றுச் சின்னம் இன்னும் சில நாட்களில் மறையப் போகிறது. அதற்குள் அதை தனது காமிராக்குள் சிறைப்படுத்தி விட வேண்டும் என்பது சலீமின் ஆசை!

நீண்ட கொடிய வரலாற்றை ஒரு சில மணித்துளிக்குள் எப்படி அடக்கி விட முடியும் என்று அவருக்கு விளங்க வைக்க எனக்கு முடியவில்லை.

பார்வையாளர் சந்திக்கும் இடம், சிறைக்கண்காணிப்பாளர் அறை, விசாரணை கைதிகளின் தொகுதிகள், தண்டனை கைதிகள் தொகுதிகள், உயர் பாதுகாப்புத் தொகுதிகள் 1 & 2., மைய கண்காணிப்பு கோபுரம், சமையல் அறை, ஆங்கிலேயர் கட்டிய பழைய செல்கள், கண்டம் (தனிமை) அறைகள், தூக்கு மேடை, தொழிற் கூடங்கள், மருத்துவமனை என்று ஒவ்வொன்றாக நண்பனுக்கு விளக்கினேன். அந்த கட்டங்களைத்தான் என்னால் அறிமுகப்படுத்த முடிந்தது. அவைகளுக்குள் சிதைந்த, புதைந்த மானுடம் பற்றி ஒரிரு வார்த்தைகளுக்குள் எப்படி அடைப்பது என்று புரியாமல் மவுனமாய் மனத்திற்குள் புழுங்கினேன்.

பல சுவர்களில் கொசுக்களின், முட்டைப் பூச்சிகளின் இரத்தக்கறைகள் உறைந்து கிடந்தன. அவைகளை டி.டென்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினால் சில ஆண்டுகளுக்கு முன்போ அல்லது ஒரு நூற்றாண்டுக்கு முன்போ வாழ்ந்த மனிதர்களிடம் இருந்து உறிஞ்சப்பட்ட விதவிதமான இரத்த வகைகளைப் பார்க்க முடியும். ஆனால் அவைகள் ஒரே வண்ணத்தில்தான் இருந்தன.

பிள்ளையார், முருகன், மாரியம்மன், ஏசு, மேரி, மசூதி என்று பல வித கடவுளர்களின் படங்கள் கரியால், வண்ணச் சாக்கு கட்டிகளால் வரையப்பட்டு இருந்ததை படம் எடுக்க சொன்னேன். சிறைவாசிகளால் வணங்கப்பட்ட அவைகள் கோணல்மாணல் கோடுகளாய் இருந்தாலும் அந்தக் கோடுகளில் பளிச்சிட்ட நம்பிக்கைகள் பல மனிதர்களை மனசிதைவுகளுக்கு ஆளாகாமல் காப்பாற்றி இருப்பதை சலீமிடம் விளக்கினேன்.

அனைத்தையும் காமிராவுக்குள் பதிக்க சலீம் விரும்பினார்.

“தோழர்… சிறை செல்லில் உள்ளே கம்பிகளைப் பிடித்து கொண்டிருப்பது மாதிரி போஸ் கொடுங்க…” என்றார். தூரத்தில் வி.ஐ.பி. ஒருவர் சிறையில் இருப்பது மாதிரி நின்று புகைப்படங்கள் எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார். மீண்டும் ஒரு சில நிமிடங்கள் சிறைக்குள் என்னை நானே அடைத்துக் கொண்டேன்

“போட்டோ எடுத்தாச்சு ….வெளியே .. வாங்க” என்றார். ஒருகணத்தில் சூழ்ந்த தனிமை இருள் என்னை சூழ்ந்து அமுக்கியது. அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்தேன்.

… கடுங்குளிரும் காரிருள் தனிமையும் தூக்கத்தைக் கெடுத்தன. எங்கோ தூரத்தில் இருவர் முணுமுணுவென பேசிகொண்டு இருந்தனர். காதுகள் இருளுக்குள் துழாவிக் கொண்டு பேசும் சத்ததைத் தேடிச் சென்றன. பக்கத்து செல்லில் இருந்து பேச்சுக் குரல் கேட்டது அந்த இரவு முழுவதும் அந்த உரையாடல் நடந்தது.

புண்ணிய பாரதத்தின் ஆன்மாவாக சித்தரிக்கப்படும் கிராமங்களில் ஒன்றிலிருந்து வறுமையினால் பீடிக்கபட்ட விவசாயக் குடும்பத்தில் இருந்து நகரத்திற்கு விரட்டப்பட்ட இளைஞன் ஒருவனின் கதை அது. முதலில் அவன் எடுத்தது நெடும் சாலையின் சாக்கடை வடிகால் கால்வாயில் ஆங்காங்கே மூடியிருந்த வட்ட இரும்பு மூடிகள் தான்! வயிற்றுப் பசியை போக்க அவனின் அந்த செயலை திருட்டு என்று இந்த சமூகம் வரையறுத்தது. திருடனாக்கப்பட்ட அவனை சிறைச்சாலையும் அங்கிருந்த நண்பர்களும், காவல்துறையும் விடுபட முடியாத குற்ற உலகிற்குள் இழுத்துச் சென்றனர். திடுமென்று விழித்துக் கொண்ட அவன் அதிலிருந்து தப்பித்து மீண்டும் கிராமத்தில் தஞ்சமடைந்தான். சிலகாலத்திற்குப் பிறகு அக்கா மகளின் அன்பில் புது வாழ்க்கை தொடங்கினான். மோப்பம் பிடித்து துரத்தி வந்த போலிசார் திருந்தி வாழ நினைத்த அவனை மீண்டும் பொய்யான திருட்டு வழக்கு ஒன்றில் சேர்த்து சிறைக்குள் அடைத்தனர். திருமணமாகி ஒரு வாரம்தான் இருக்கும். புலம்பலும், ஆறுதலும், தேம்பலுமாய் இரவு முழுவதும் விட்டு விட்டு தொடர்ந்த அந்த ஆன்மாக்களின் குரல்கள் இருளைக் கிழித்து தெளிவாய் கேட்டுக் கொண்டே இருந்தன.

அந்த இருளிலிருந்து விடுபட்டு மீள எனக்கு சில நொடிகள் தேவை இருந்தது. சிறையிலிருந்து வெளியேறுவதற்காக வாயிலை அடைந்தோம். சூடான தேநீரை பழைய சிறைவாசி ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார். தேநீரை வாங்கிப் பருகிக் கொண்டே அவரிடம் சலீம் பேசிக் கொண்டிருந்தார். தற்செயலாக எனது பார்வை அங்கிருந்த ஒரு பெண் குழந்தை மீது படிந்தது.

அந்தக் குழந்தை தனது அம்மாவிடம் உச்சாவோ, கக்காவோ போகணும் என்று வளைந்து நெளிந்து முகத்தை கோணலாக்கி சொல்லிக் கொண்டிருந்தது. கும்பல் கும்பலாக மக்கள் போயும் வந்தும் கொண்டு இருந்தனர். அந்த குழந்தை தயங்கி, தயங்கி எதையோ சொன்னது.

“அம்ம்மா…” என்று வெட்கப்பட்டது. பட்டென அந்த அம்மா இரண்டு சாத்து வைத்தாள்.

“சனியனே… பேண்ட்லே போயிடாதே… சீக்கிரமா கழட்டுடீ..” என்று திட்டிக் கொண்டு இன்னும் இரண்டு அடிகள் போட்டாள்.

அதை கவனித்த எனது முகம் சுண்டி சுருங்கியது.

“என்ன தோழர்… ஏன் இப்படி முகத்தைச் சுளுக்கிறீங்கள்…” என்று கேட்டார் நண்பர்.

மத்திய சிறையின் திட்டி வாசல் வாயைப் பிளந்து விழுங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லாரும் இன்புற்று இருக்கும் சமூகத்தைக் கனவு கண்ட அந்த இளைஞனின் கைகளில் மாட்டி இருந்த இரும்பு விலங்குகளை போலிசார் கழட்டினர். கூவம் நதியிலிருந்து படை எழுந்த கொசுக் கும்பல்கள் சுழல் கூம்பு வளையங்களாய் அனைவரின் தலைகளுக்கு மேலே சுழன்று, சுழன்று விளையாடிக்கொண்டிருந்தன. திட்டி வாசலினுள் நுழைந்த என்னை சட்டென்று இழுத்துக் கொண்டது.

மெல்லிய இருளைக் கிழித்து அங்கு என்ன நடைபெறுகிறது என்று கவனிக்க முயன்றேன். அதற்குள் நான்கு அய்ந்து தர்மஅடிகள் இலவயமாய் என்மீது விழுந்தன. வலுவான கைகள் பிடித்துத் தள்ளின. சுவற்றில் மோதிக் கொண்டேன். தொத்துப் பல்லில் இருந்து இரத்தம் குபுக்கெனக் கொட்டியது.

“சர்ட்டு… பேண்டு.. எல்லாவற்றையும் கழட்டு… அம்மணக்கட்டையா உட்காரு” என்று தடித்த அதிகாரக் குரல் உறுமியது.

மேல் சட்டையை மட்டும் கழட்டி கையில் வைத்துக் கொண்டேன். நின்று கொண்டிருந்த எனது உடலில் நடுக்கம் உள்ளம்கால் முதல் உச்சிமுடி வரைப் பரவுவதை உணர்ந்தேன். தோழர்கள், இலக்கியங்கள் வலியுறுத்திய போராளியாய் என்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடினேன். நடுத்தர வர்க்க உளவியல் சிந்தனை, கவுரவத்திலிருந்து சீக்கிரம் வெளியே வர இயலவில்லை. தலையை லேசாகத் திருப்பினேன். நான்கு பேர் நிர்வாணமாய் குத்துக்காலிட்டு அமர்ந்து இருந்தனர். ஆறடி வளர்ந்து உயர்ந்த மனிதர்கள் தங்கள் குறிகளை மறைக்கத் திராணியற்று நடுநடுங்கிக் கொண்டிருந்த அந்தக் காட்சியை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அதிர்ச்சியில் உறைந்து சிதைந்தேன்.

அந்த சில நிமிடங்கள் எனது இருத்தல்… உயிர்ப்பிற்கான போராட்டங்கள்… அதில் வெற்றியா தோல்வியா என்று கணிக்க முயலவில்லை.

“அத்தோட இந்த ஐந்து உருப்படிகளை சேர்த்து கணக்கு வைச்சிக்க..” என்று சிறைக்காவல் ஏட்டு ஆணை இட்டார். என்னுடன் சேர்ந்து ஐந்து உருப்படிகளும் ஆடைகளை இயந்திரமாய் அணிந்து கொண்டன. எனது ஆடை கிழிந்து போயிருந்தது.

‘அது’ என்று அந்த காவலர் குத்தலாய் குறிப்பிட்ட இடத்தை கவனித்தேன். ஆடைகள் பலாத்காரமாய் கலைக்கப்பட்ட நிலையில் திருநங்கை சகோதரி ஒருத்தி தலைவிரி கோலமாய் கையது கொண்டு மெய்யது போர்த்தி குமுறி குமுறி குத்துக் காலிட்டவாறு கதறி அழது கொண்டிருந்தாள். நிர்மலமாய் வெறித்த என் கண்கள் என்னையும் அறியாமல் மூடி, பின் திறந்தன.

அதே இடத்தில் அந்தக் குழந்தை இன்னும் விடாப்பிடியாய்ப் போராடிக் கொண்டிருந்தாள்!

(*திட்டிவாசல்- சிறைவாயில் உள்ள பெரிய இரும்பு கதவில் பொருத்தப்பட்டுள்ள ஒரு ஆள் போகும் அளவில் உள்ள சிறிய கதவு)

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *